கவிதை

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

நதி

எப்படி
நிரம்புகிறதெனத் தெரியவில்லை
அவ் வெளி

நீள் ஆற்றின் நெடுந்தொலைவின் பாலையில்
அப்படி மிதந்தலைகிறது
கானல் நீர்

வியர்வை வழிய
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன்
இப்போதைக்கு
அதாவது தென்படுகிறதேயென்ற
ஆறுதலுடன்.


கலைஞன்

கோவில்களும் திறக்காமல்
உலகியக்கம் ஸ்தம்பித்து
சப்தமொடுங்கிய
நேரத்தில்
சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து
நாதஸ்வரக் கலைஞன்
நாத ஆலாபனையில் உருக்குகிறான்

பச்சைக்கிளிகளும்
புறாக்களும்
ராகவழி திரிந்தலைந்து கோபுரங்களுக்கு
பறக்கின்றன

தீர்த்தக்குளத்தின் சொற்ப நீரில்
மீன்கள் சிலிர்த்து
வான் நோக்கி இதழ் குவிக்கின்றன

கோசாலைப் பசுக்கள்
மேயாது வெறிக்க
நாக மண்டபத்து உயிரினங்கள்
சுருண்டுகிடக்க
கடவுளும் மெல்ல நடந்து
திட்டி வாசலை
நெருங்கிவிட்டார்

வளி மண்டலத்தையே
சுநாதத்தால் நிரப்பிக்கொண்டிருந்த கலைஞன்
வாசிப்பை நிறுத்த வேண்டியிருந்தது
இலவசமாய்ப் பெறுவதற்கான வரிசையில் இடம் பிடித்து
வயிற்றையும் நிரப்ப வேண்டி.

ரவிசுப்பிரமணியன்

கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், இசைக்கலைஞர் எனப் பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார். இவரின் கவிதைகளில் சில ஒன்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன. இவரது தேர்தெடுத்த கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், டி. என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இவர் இயக்கி உள்ளார். விஜய், ஜெயா போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிய இவர் அந்த நிறுவனங்களுக்காகப் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் 'ஏ' கிரேட் நாடகக் கலைஞராகப் பங்காற்றி வருகிறார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட டப்பிங் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராக உள்ள இவர் சமீபத்தில் வெளியான 'டு லெட்' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். சாகித்திய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக (2003 முதல் 2007 வரை) பணியாற்றி உள்ள இவர், நவீனக் கவிஞர்கள் பலரது கவிதைகளை மெட்டமைத்து இலக்கிய மேடைகளில் பாடி வருகிறார். சில இலக்கிய விருதுகள் வழங்கும் அமைப்புகளில் நடுவராகவும் உள்ளார். தமிழக அரசு பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, நீயூஜெர்சி தமிழ்சங்க விருது, சிற்பி இலக்கிய விருது, தி.க.சி. இயற்றமிழ் விருது, மா. அரங்கநாதன் வாழ்நாள் இலக்கிய விருது, தஞ்சைப் பிரகாஷ் கவிதை விருது, ஆனந்தாஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் கலை இலக்கியவிருது போன்ற விருதுகளைத் தனது இலக்கியப் பணிகளுக்காக இதுவரை பெற்றுள்ளார். விக்கி பீடியா லிங்க்: https://ta.wikipedia.org/s/436u

View Comments

  • மரபுக் கவிதைகளின் உயிர்ப்புடன் இயங்குபவை ரவிசுப்ரமணியனின் கவிதைகள். நவீன கால பிரதி பிம்பமாக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது

  • உள் நுழைந்து வந்தேன். சுகம். கானலும், கானமும் அடிவயிற்றில் புளிச்சென தட்டிக் கிளம்பியது. அழகு

Share
Published by
ரவிசுப்பிரமணியன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago