மானுட உடலின் மறைந்தொழிந்த புலன்களின் ஞாபகப் பாதையே பிதிரா

13 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் கோணங்கியின் நேர்காணலுடன் அவரது படைப்புகள் பற்றிய சில கட்டுரைகளையும் வெளியிடுவதன் மூலம் அவரது படைப்புலகம் குறித்தான ஒரு நிறைவான சித்திரத்தை அளிக்க முடியும் என்கிற முனைப்புடன் இவற்றைப் பிரசுரிக்கிறோம்.


எந்த அற்புதமும் கொண்டாட்டமும் இல்லாத நிலத்தில் அதிகாரத்தின் முன்பு கட்டுக்கடங்கி விழைவுறுதி விருப்ப வேட்கை மறந்து உயிர் வாழ்தலே குற்ற உணர்ச்சியாய் மீந்துபோய் மரணத்தில் அல்லது நிலையாமையில் தத்துவம் தேடியலையும் ஒரு நிலப்பரப்பில் பெருமிதங்கள் இழந்து மதிப்பீட்டுச் சரிவுகளையும் சந்தித்துவரும் உடல்கள், புராதன இனக்குழு அடையாளங்கள் மற்றும் தொன்மச் சடங்கியல் வழிபாடுகளில் தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொள்ளத் துடிப்பது ஒரு வகையில் மூன்றாம் உலகின் அடையாள அரசியலாகவும் ஒற்றை ஆதிக்கத்தின் கலாச்சார அழித்தொழிப்புகளுக்கு எதிரான நல்வினைக் கூறுகளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

அதிகமும் மொழி பெயர்ப்புகள் பெருகிவரும் இக்கால அவகாசத்தில் வாசகனுடைய இடம் பல சிற்றிதழ்களுக்கும் தீவிர இலக்கியத்திற்கும் அப்பால் அலைவுறுவதை இனங்காணுகிறோம். சலிப்புறும் வாழ்வை, அதன் கதியிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள் மீறிய படைப்பு கோரப்படுகிறது. சரி X தவறு என்ற பார்வைக்கு அப்பால் இயங்கும் ஓர் உலகம் தன் இலக்கியப் படைப்புகளில் வினோதம் கொள்ளும் கணமே ஒரு மொழியில் புதிய அலைகளை உருவாக்கிச் செல்லும் வாய்ப்பாகிறது. உலகமெங்கும் பல மாற்றங்களைச் சந்தித்து வரும் இலக்கியம் இன்னும் வறுமையின் தாயாகவே துடித்தியங்குகிறது எனலாம். சூழும் பொருட்களில் இருந்து மனித உடல்களைச் சதா பிரித்துப் போட்டு ஆவலைத் தூண்டியபடியே இருக்கும் சமகால வளர்நிலை பொருளாதாரத்தின் எதிர்த்திசையில் வறுமை தன் செயல்பாட்டைச் சுய உடல் அழிவையும் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் தொடர்கிறது. வறுமையின் குற்றச்சாட்டு தாளாமல் அல்லது சகிக்க ஒட்டாமல், தன் உபகரணங்களுடன் பொருளாதாரம் மனித மையத்தைத் தவிர்த்து நபர்களைத் தாண்டிப்போய்விட்ட ஒரு மாயச் சூழலில்தான், அலைவுறும் உடல்களாய்க் கொஞ்சம்பேர் இலக்கியம் முதலான கலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இவ்வகையில் தடம்புரண்டு கேள்விக்குள்ளாகும் மனித உறவுகளை அதன் நம்பி வந்த யதார்த்த தளத்திலிருந்தும் மேலேடுத்துப் போய் எழுத வேண்டிய அவசியத்தில் ஒரு படைப்பாளி இணை முரணாகப் புதிர்களின் வழியே மொழிச்சாகசம் கொள்கிறான். ஆனால் உண்மையில் நாம் பேச வேண்டியிருப்பது பொருளுக்கும் தேவைகளுக்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பை ஆராய்வதுதான். பொருட்கள் கலாச்சாரத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. அல்லது புதிய கலாச்சாரத்தை வன்முறைப்படுத்துகின்றன. மனம் உடலுக்கு எதிராகிவிட்டதைப் போலவே உடலும் தகவமைப்பிற்கு எதிராக நிலை நிறுத்தப்படுகிறது. உடலைக் கொண்டாடாத நிலையில் பொருளும் கருத்து வடிவமாய்ப் பரிணாமம் கொள்ளும் எனில் உடலைப் புனைவிற்குள் மாயமாக்கி எதற்கும் அகப்படாமல் தப்பித்துக்கொள்ளும் தந்திரத்தை அதற்குக் கற்றுத் தர வேண்டியதிருக்கிறது. பழக்கத்திற்கு மனம் அடிமையாய் இருக்க இன்னும் அனிச்சையின், கனவுகளின் புதிர்நிறைந்த புலன்களைக் கொண்டிருக்கும் உடலை நாம் நினைவு மீட்கத்தான் வேண்டும்.

இப்போது மொழி வடிவமைக்கும் உடல், மொழிக்கு அகப்படாத உடல் என பிரித்தோமானால் தாய்மை உள்ளிட்ட பல்வேறு உறவுநிலைக் கருத்துருவங்கள்கூடப் பொருள்களின் மறுபிம்பமாய் உடலைக் கட்டமைத்திருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். உற்பத்தி சார்ந்து உடலை வைத்துவிட்ட பின்பு உடலையே மறுஉற்பத்தி செய்யும் இயற்கை விளைவுங்கூட இங்குப் பொருளாதாரச் செயல்பாடாய் மாறிவிடுகிறது. பயன்மதிப்பீட்டில் இருந்து உடலை விடுவிக்க எதிர்நிலையில் பொருட்களின் குவிப்பு எந்திரமயமாகிவிட்ட தொழில் நுட்பத்தில் பொருட்களின் மதிப்பீட்டு உரிமைகளுக்கு அதன் தர்க்கங்களுக்கு மனதை தயார்படுத்திவிட்டுச் சக்கையாய் உடலை அதற்குப் பலியிடுவது பிரக்ஞைப்பூர்வமான சந்தையறிவின் பயங்கரவாதமாகிறது. இவ்விடத்தில்தான் நாம் கலாச்சார உடலை ஆதாரப்படுத்துகிறோம். பழங்குடிச் சமூகங்கள், நாடோடிகள், பைத்தியங்கள், ஒடுக்கப்பட்டு இடம்பெயரும் சிறுபான்மையினர் அரசாங்க வருமானத்திற்கு உதவாதவர்கள் எனத் திரியும் உதிரிகளுக்கு எந்த ஒரு உற்பத்தி நிறுவனமும் வர்த்தக இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிலையற்று தொடர்ந்து கொண்டிருக்கும் மேற்சொன்னவைகளுக்கு இடையே உருவாகும் வாழ்வியல் அவதானங்கள் வழியாக அதிகாரதிற்கும் நிறுவன லாபத்திற்கும் அதன் பெருக்கத்திற்கும் எதிரான ஒரு கலாச்சாரத்தைத் தங்களிடையே பிரக்ஞையற்ற இயல்பூக்கத்தோடே அவைகள் மேற்கொள்வதால் அவற்றின் குற்றம் மிகுந்த இருப்பு எவ்வித அதிகாரத்தையும் அச்சமடைய வைக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு எந்திரமயமான பொருளாதார உடலிலிருந்து புதிர்கள் நிறைந்த தொன்மக் கலாச்சார உடல்களை மீட்டெடுக்கும் பணியாகக் கலை மாறுபாடடைகிறது.

உற்பத்திக்கும், பசிக்கும் இடையேயான போராட்டம் வர்க்கப் பகைமையாய் இருக்க உற்பத்திக்கும், கலாச்சாரத் தேவைக்கும் இடையேயான போராட்டம் உயிர்களை ஒடுக்குவதாகவும், அடையாளமிழப்பதாகவும் வன்முறை கொள்வது நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தாராளமயமாக்கத்தின் அதிகாரமாக இருக்கிறது. பசித்தவன் சந்தைக்கு முன் உடல்பணியும் விசுவாசியாக இருக்கும்போது பாலிலிகள் எனும் அலிகள் சந்தையின் நடுவே உடல்களைத் தொட்டு நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நவதானியங்கள் பயிரிட்டு வளர்ப்புப் பிராணிகளுடன் வயலில் தொழிலில் உழைத்த களைப்பு மாற கள்ளருந்தி நாட்டுப்புறப் பாடல்கள் இசைத்து கிராமத் தெய்வங்களை வழிபட்டு கலவிபுரிந்து களங்கமில்லாமல் வாழ்ந்து வந்த பன்மைச் சமூகங்களின் கலாச்சாரப் பண்பாட்டு வாழ்வியலை இயந்திரங்களின் உற்பத்தி வழியேயான சந்தையின் போலி மதிப்பீட்டுச் சட்டங்களுக்குத் திருப்பிவிட்டு, மார்க்கெட் மனிதர்களாக்கி அதன் பயன்மதிப்பைக் கொள்ளையடித்துப் பெருக்கும் ஓர் ஏகாதிபத்திய மையம் இன்றைய தகவல் தொழில் நுட்பத்தோடு செழித்திருக்கும் தனது வளர்ச்சியில் மனித உடல்களைத் தின்னும் மிருகமாகி நிமிர்ந்திருக்கிறது. இன்றைக்கு உற்பத்தியாகி குவியும் எந்திரமயமான பலபொருட்களின் உதவியின்றியே இயற்கையோடு மனிதன் தன்னளவில் உயிர்வாழ முடியும் என்ற நம்பிக்கை ஒருபுறமிருக்க, இப்பொருட்களை அறிந்து பயன்படுத்துவதற்கும், வாங்குவதற்காகவும் மட்டுமே நாம் தொடர்ந்து உயிரோடு இருந்து கொண்டிருக்கிறோமேயன்றி வாழ்நாளுக்குள் நமது சுதந்திரமான தனியான இருப்பு அனைத்து மதிப்பீடுகளையும் கொண்டாட்டத்தையும் இழந்து அச்சமடைவதாகவும் குற்றஉணர்ச்சி கொள்வதாகவும் அவமானமடைகிறது. தொடர்ந்து தற்கொலையும் செய்துகொள்ள முயல்கிறது. இதைத்தான் விழைவுறுதியையும் விருப்ப வேட்கையும் இழந்துவிட்ட உடல் என்று நாம் வர்ணிக்கிறோம்.

தனது கெமிலிய நாவலான பிதிராவில் சாரமற்ற இவ்வுடலை எடுத்துக்கொண்டுதான் அதனுள் கலாச்சார வேட்கையையும், தொன்மப் பலிச்சடங்குகளின் வீரியத்தையும், நிலத்தின் தாவர வாசனை கசியும் தாபங்களையும் வலிமையாய்ப் பொதித்து இடுகுறிப் பெயர்கள் தொலைந்த கிளிமுகப் பயணியாகவும் உப்பு நூல் யாத்திரிகனாகவும், உலவவிட்டு வரலாற்றின் வழியே தமிழ் மரபின் ஞாபகப் பாதையை ஓர் அகதையாளனின் குரலில் விரித்துக்கொண்டு போகிறார் கோணங்கி.

பேசவும் தொடர்புகொள்ளவும் ஆன மொழியின் பாதையில் குறுக்கிடும் பிதிராவின் புராதனக் களஞ்சியங்கள் நவீன இருத்தலின் முன்பு அதன் குறைபட்டுப் போன சொற்புழக்கங்களைக் கேலி செய்தபடி நகர்கிறது. கலையின் ஆதார உணர்வுகளை இயற்கையின் வசீகரங்களில் இருந்து உடலுக்கு மாற்றும் பழங்குடி சமூகத்தின் இச்சையை மீட்டுருவாக்கம் செய்ய முயலும் இம்மொழி கட்டமைக்கப்பட்ட வினைத்தொகை, எழுவாய், பயனிலைகளைத் தாண்டி இயற்கையைப் போலவே அரிதாக எங்கும் வினோதமான சங்கேதங்களையும் தூண்டல்களையும் கொண்டிருப்பது சம்பிரதாயமான அறிதல்களையும் தகவல்களையும் வாசகனுக்குக் கொடுக்காத அவனைத் திருப்திப்படுத்தும் போக்கையும் மீறித் துடித்துச் செல்கிறது. நத்தையின் உணர் கொம்புகளைப் பெற்று நீளும் புலன் வாசனை கூடிய வாசகனுக்கு அவனது உடலின் ஈர நகர்வையும் அறிதலின் புதிர்ப் பாதையையும் பச்சையத்தோடு புகட்டுவதாகவும், நாவல் தோன்றி குறுகி விரிகிறது.

கோணங்கியின் மொழி உடல் ஸ்பரிசமாகும் இடங்களே பிதிராவில் மனவெளி சூசகமாகும் அடர் கண்ணிகளாய்த் தடம் மாறுவதாகச் சொல்லலாம். இரண்டு சம்பந்தமில்லாவார்த்தைகளை இணையாக வைத்துவிட்டால் அர்த்தங்கொள்ளப் பதறும் உலகில் அதற்கிடையே நழுவிப் போயிருக்கும் இடைவெளியில் பிதிரா தனது சிலந்தி வலைகளைப் பின்னியபடியே இருப்பதை நாம் அந்நியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நத்தையின் உணர் கொம்புகளைப் பெற்று நீளும் புலன் வாசனை கூடிய வாசகனுக்கு அவனது உடலின் ஈர நகர்வையும் அறிதலின் புதிர்ப் பாதையையும் பச்சையத்தோடு புகட்டுவதாகவும், நாவல் தோன்றி குறுகி விரிகிறது.

கோரல்களுக்கும் விசாரணைக்கும் அப்பால் வாசகன் நிலைபெயர்ந்து அடித்துச் செல்லப்படும் கட்டங்கள் நாவலின் பல இடங்களில் வெற்றிகரமாய்ப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. இன்னதைத்தான் வாசிக்கிறோம் என்பதறியாமல் வாசகன் தன் சுயநினைவைக் காப்பாற்றிக்கொள்ள எச்சரிக்கை அடைவது தவிர்க்க முடியாததுதான். மற்றபடி இந்த நாவலை எப்போது வேண்டுமானாலும் மூடி வைத்துக் கொள்ளலாமேயன்றி கற்பிக்கப்பட்ட அர்த்தத்தின் வழி நாவலைக் கடந்து போகும் அறிவுச் செருக்கை கைவிடாமல் இதன் ஒரு பக்கத்தையும் வாசிக்கச் சாத்தியமில்லை என்பதுதான் நாவல் வாசகன் மீது காட்டும் வன்முறையாகயும் அதுவே தான் முன்வைக்கும் நவீன வறுமையின் ஆங்காரமாகவும் நிறம் மாறுகிறது. கவிந்துவிட்ட சாயல்களின் நிகழ்காலப் போலிமையை அதன் பக்கச்சார்பான வரம்பற்ற கேளிக்கையை ஊடுருவி மேலும் அதன் நினைவுகளை அவிழ்த்துப் போட்ட படியே நகரும் நாவல் மீண்டும் மீண்டும் உடலை நிர்வாணமாக்கி வாசிப்பு மனதை அதன் எதார்த்ததிலேயே கொடூரமாய் விட்டுவிட்டுச் செல்கிறது. நிலவும் எதார்த்தத்தைத் தன் எழுத்தின் முன் பகைமுரணாய் நிறுத்தி வரலாற்றை உழைப்பு மற்றும் தற்கொலைகளுக்கான தொடர் நிகழ்வாய் எழுதிச் செல்லும்போது காபிரிகள், வேசிகள், பழங்குடிகள், சிறுபான்மையினர், வறுமையில் ஒடுக்கப்பட்டுக் கலாச்சார மனமழிந்த உடல்கள், பைத்தியங்கள் என உலகின் விளிம்புகளில் அலையும் நிறுவனமயமாகாத உதிரிகளை ஆதிக்க மரபும், அதிகார வெறியும் காலத்தின் தொடர் ஓட்டமாய் நசுக்கி சாறு பிழிந்து வருவதையே நாம் வாசிக்கத் துவங்கி இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அத்தனை சனநாயகப் பண்புகளும் தூய குடியாட்சியைக் கொண்டு வரும் வளர்நிலைப் பொருளாதாரப் பீறிடலாக ஒலித்து ஏமாற்றி வரும் வேளையில், இவ்வுலகம் முழுவதையும் தனது தமிழ் மரபின் ஐவகை நிலத்திணைகளாய்ப் புனைவில் விரித்து சரித்திரத்தை மறு பிரதி செய்யும் கட்டுரை கலந்த கதையாகப் பிதிராவை ஒரு மூன்றாம் உலகின் சாட்சியாகவும், கோரிக்கையாகவும் முன்வைக்கிறார் கோணங்கி.

தன்னிலைப் பெயர்களால் சுட்டப்பெறும் கிளிமுகப் பயணி, உப்புநூல் யாத்திரிகன் என்ற இரண்டு புனைப் பாத்திரங்கள் கதை சொல்லலை ஒரு கிராமியக் கூத்து போலவும் படிமத்தில் செவ்வியல் கூறுகளையும் நினைவு கிளறி நிலம், இருப்பு, காலம், கருத்து என்கிற வகைகளைத் தாண்டிப் பிரதி முழுவதும் பயணித்து ஆதாரங்களைச் சேகரிப்பது தொல்லியல் மற்றும் அதன் அரசியல் தேடலாய் சமகால நவீனத்தில் விரிவு கொள்வதுடன் மனித உடலை அதன் இன்றைய இருப்பை நுட்பமாய் நம்முன் பிடித்தும் காட்டுகின்றன. இதன் தன் நிலத்தின் தொன்மப் புனைகதைகளையும், வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றையும் கலைப்பண்பின் வழியே உரசிச்செல்லும் பிதிரா இசை, ஆன்மீகம், கைத்தொழில்கள், நடனம், காப்பிய மரபு, விவசாயம், நதிநீர், வரலாறு ஆகிவிட்ட கலைஞர்கள், தத்துவ மரபு கள், சமய மார்க்கங்கள், புத்தனின் நிலமென வரைந்து காட்டும் ஓவியங்கள், கும்பினிகளோடு கூடிய காலனியச் சலனங்கள், முகலாயர்களின் ஆளுகைகள் இவற்றிற்கிடையே எளிய குடிகளின் மனித நிலைகளில் நம்பிக்கைகளில் ஏற்பட்ட விளைவுகளையும், மாற்றங்களையும் ஓர் அசரீரிக் குரல் விரையும் எழுத்தாய்ப் பெருக்கி இருப்பது நாவலுக்கு ஒருவித ஆவணத் தன்மையை அளித்தாலும் அதுவே கலையில் ரச சஞ்சாரமாய் சில இடங்களில் சுருதி கூட்டுவது கோணங்கியின் கவித்துவத் தன்மைக்கு கிடைத்த வெற்றி.

புனைவில் நாவலுக்கும் வாசகனுக்கும் இடையே உருவாக்கும் உரையாடல் உத்திகள் சில பக்கங்களை நவீன தளத்திற்கும், ஐரோப்பிய வாசனைக்கும் இழுத்துச் செல்கிறது. குறிப்பாக நெய்தல் பகுதியில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் கடலும் கடல்சார்ந்த வரலாறும் கப்பல்களும் வணிகமும் அதன் கேளிக்கைகளும் கடல் வாழ் உயிரிகளுமாய் பல கிளர்ச்சியான உணர்வுகளை நமக்கு வழங்கி நிற்கின்றன.

இரண்டு சம்பந்தமில்லாவார்த்தைகளை இணையாக வைத்துவிட்டால் அர்த்தங்கொள்ளப் பதறும் உலகில் அதற்கிடையே நழுவிப் போயிருக்கும் இடைவெளியில் பிதிரா தனது சிலந்தி வலைகளைப் பின்னியபடியே இருப்பதை நாம் அந்நியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

குறிஞ்சி நிலத்திற்கான பார்வைகளும் மிக விரிவாக சமகாலத்தினுடையதாய்ப் பேசப்படுகின்றன. அனேகமும் வரலாற்றின் சம்பவங்களால் முன்னெடுத்துப் பின்னப்படுவதால் கோணங்கி காட்டும் மாய உலகமும், மூதாதைகளின் இயங்கியல் வரலாறும் அற்புதக் கலவையாய் பின்னிப் பிணைந்து நவீனத்துவத்தில் காலமும் இடமும் அற்ற புதிர்பாதைகளுக்குள் நம்மைக் கொண்டு செலுத்துகின்றன.

நவீனத்துவ ஐரோப்பியக் கதை சொல்லிகள் உலகம் முழுவதும் உள்ள பழங்குடிச் சமூகத்தினரின் செவிவழிக் கதைகளையும், அதன் மாயம் நிறைந்த சடங்கியல் புதிர் நம்பிக்கைகளையும் வாசிப்பவர் வியக்கும் வண்ணம் தம்புதினங்களின் இணைத்தபோது உருவான மொழிநடை மேஜிக்கல் ரியலிசமாக நிலைக்க, அவ்வகை எழுத்திற்கு முற்றிலும் தகுதியுள்ள கீழைத்தேய நாட்டார் வழக்குகளின் கதைக்களஞ்சியமாக அதன் அத்தனை பெருமிதத்தையும் இந்நாவல் தனக்குள் கொண்டிருப்பது ஒரு பழைய இடதுசாரி கதைசொல்லியின் புதிய பாய்ச்சல் எனவும், உலக இலக்கியத்தின் தடத்தில் நுழைய தனது தகுதியை முன்வைக்கும் ஒரு மூன்றாம் உலக யத்தனம் என்றும் நாம் முன்மொழிவது மிகையானது அல்ல.

பெரும்பாலும் கோணங்கியின் பழைய எழுத்துக்களில் குறிப்பாகப் பாழிவரை எடுத்துக்கொண்டால் மறை புதிர்களின் மாயமான கவித்துவ வீச்சு துலக்கமின்றியே தனக்குள் மூடுண்டு கிடக்கும் மொழிப் பத்தாயமாய் செறிந்து கிடக்கும். ஆனால் பிதிராவில் மாயங்களும் புதிர்களும் அதனதன் பக்கங்களிலேயே விடுபட்டுப் போவதற்காக வழக்கத்திற்கு மாறான இடைச்செருகல்களை வடிவம் கருதியும் எளிமை கருதியும் இணைத்திருக்கிறார் என்பது இந்நாவலைப் பிரக்ஞைப்பூர்வமாக வாசகனோடு தொடர்புறுத்துவதற்கான ஒரு முயற்சியாகச் சொல்லலாம். போக இன்னும் நவீனத்துவ விமர்சகர்கள் தங்களின் சரி X தவறு புலம்பல்களில் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கும்போது, கலையில் சமரசமற்ற விமர்சனம் என்பது முற்றிலும் அருகிப்போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றங்களை வரவேற்பவர்கள் என்ற பெயரில் விமர்சனத்துறையில் குறிப்பிட்ட நிறுவன ஊழியர்கள் போல தங்கள் மையத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே சில அடிப்படைகளை முன் வைக்கின்றனர் என்றால் மாற்றுகளை நிறுவன மயப்படாத உதிரி நிலைக்கு எடுத்துச் செல்லும் கலைபற்றி பகிரங்கமான மனத்தடையற்ற விமர்சனம் என்பது தமிழில் குதிரைக்கொம்பு. தேசிய எழுத்தாளர்கள் மலிந்திருக்கும் இந்தியச் சூழலில் அதன் விமர்சனமும் ஒருவித நியதியின் கட்டுக்குள் அடங்கித்தான் இருக்குமென்றாலும் கலையின் மீறல்கள் பாய்ச்சல்கள் விடுகுரல்கள் இல்லாமல் எந்த மொழியும் சமகால உலக இலக்கியத்தில் ஒரு கவன ஈர்ப்பையும் நிகழ்த்த முடியாது என்பது தமிழின் கடந்தகால படைப் பிலக்கிய வரலாற்றைக் கவனித்து வருபவர்களின் ஏக்கமாக இருக்கிறது. அதனாலேயே மொழிபெயர்ப்புகளைத் தேடிப்போவதும் நிகழ்கிறது. அவ்வகை மொழிபெயர்ப்புகளும்கூட ஒரு ஐம்பது ஆண்டுகால நவீனத்துவத்தில் பின் தங்கியிருக்கும்போது, சமகால எழுத்து என்பது தமிழுக்கு அரிதாகவே அறிமுகமாகி இருக்கிறது என்றும் அதன் நெருக்கடியில் உச்சமாக எழும் ஒரு மொழியின் பன்முகப்பட்ட பாய்ச்சல் எந்த ஒரு துணிச்சலும் இன்றி பிழைப்பு வாதமாகவே இழிந்து கிடக்கிறது என்றும் நாம் வன்மையாக குற்றம் சாட்டலாம். தமிழ்மொழி பெயர்ப்பில் உலக இலக்கியம் என்ற தனது ஆய்வு நூலில் முருகேசப் பாண்டியன் கூறுவதுபோல “மொழிபெயர்ப்பினை அண்மைக்காலத்தியதாக ஆக்கவேண்டுமெனில் ஒவ்வோர் ஆண்டும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் பிறநாட்டு இலக்கியப் படைப்புகளின் தரவுகள் உடனுக் குடன் நமக்கு கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்” என்ற கருத்து அவசியமானது.

மேற்சொன்ன நவீனத்துவச் சலனங்கள் எப்போது அடங்கி முடியும் என்பது ஒருபுறமிருக்க தமிழ் இலக்கிய மரபில் மாற்றுப் பார்வைகளை முன்வைக்கும் ஒரு படைப்பாளி விளிம்புகளின் வறுமைச் சவாலை எழுத்தாக்கும்போது எல்லாத் தளங்களையும் குலைக்கும் கலகப்பண்பினை இலக்கியமாக்க சுய வாழ்வினை மீறிச் செல்வானா என்பதுதான் கேள்வி.

கோணங்கி பிதிராவின் மூலம் இந்திய நிலவுடமைச் சமூகங்களில் இருந்த அடித்தட்டு மக்களின் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களையும் அவர்களின் சூழல் வறுமையையும் மீறி பாட்டாளி வர்க்கப் பார்வைகளையும் நகரமயமாதலையும் ஒரு சேரப் பார்வையிட்டுத் தாண்டி உலகமெங்கும் அலையும் உதிரிகள் எனப்படும் நிறுவனமயமாகாத உடல்களுக்குத் தீவிரமாக வந்து சேர்ந்துள்ளார். அவர் முன்வைக்கும் வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களிலிருந்து அவரின் ரசனை சார்ந்த பிரமிப்புகளை எடுத்துவிட்டால் மிஞ்சுவது தற்கொலைப் படலங்களும், உதிரிகளின் வரலாற்றுப் பார்வையும்தான். மையத்தை குலைக்கும் அல்லது அச்சமூட்டும் அவர்களின் நடமாட்டத்துடன், விலகி வரும் புதிய கலாச்சார வாழ்நிலைகள், கூடவே மாற்றம் பெற்றுள்ள, நவீனப் பண்பாட்டு வடிவங்களில் இருந்து புதிய அடையாளங்களைப் பேசுதல், நவீனத்துவத்தில் இருந்து அறுத்துக்கொண்டு போகும் அதன் புலன்சார் யதார்த்தங்கள், இயல்பூக்கங்கள் யாவற்றையும் அங்கிகரிக்கும் சித்தரிப்புகள் எனப் பார்க்கும்போது அவைகள் எவ்வித மாயமுமற்று நாவலில் நேரடியாகவே கலைத்தன்மை கூடிய கட்டுரைகளாக, குறிப்புகளாக இடம்பெறுகின்றன.

இந்நாவலில் பின் நவீனத்துவக்கூறுகள் ஒருவித ஆவணத்தன்மையுடனும், தொன் மச் சடங்கியல் கூறுகள் செவ்வியல் எதார்த்தத்தின் மாயப்புனை கதையாகவும், அழகியலோடு சித்தரிக்கப்பட்டிருப்பதாய் ஒரு மெல்லிய பிளவை நாம் அறிமுகப்படுத்தலாம், இந்த இடத்தில் பிதிராவின் வடிவம் பற்றிப் பேச வேண்டும். கவித்துவத்தின் ஆதாரச் செறிவுகளில் இருந்து தன் உரைநடையைத் துவக்கும் கோணங்கி “நிலம்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது மனப்பித்து இல்லை. கசப்பான உண்மைகளில் தெருவின் வெறுமைகள் என்னைக் குடித்து தீர்ப்பதிலிருந்து எஞ்சியிருக்கிறேன் பயணியாய்” எனத் தன் பீடிகையை முன் வைத்துவிட்டு இலைகளின்றி மிதக்கும் விருட்சமென கம்பளப்பெண் கதைபோடும் குச்சிகொண்டு, “தட்டி னால் திறக்கும் முல்லை நிலம்” என தன் பயணத்தை ஒரு மேடை வடிவத்திற்கான பழங்காட்சியரங்கம் போல் திறந்து வைக்கிறார். முல்லை நிலம் பேசத் துவங்குகிறது. இம்மாதிரியான ஆரம்பங்களை வேதாளக் கதைகள் மற்றும் அரேபிய இரவுகள் போன்ற வற்றின் சாயல்களில் மருவி வந்த நவீன வடிவமாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து ஐவகை நிலங்களும் பனிமருதம் என்ற ஆறாவது வகையில் ஐரோப்பிய நிலங்களையும் சமகாலப் புனைவாகக்கொண்டு நீளும் இந்நாவல் உப்புநூல் யாத்திரிகனின் இறுதிக் குறிப்புகளோடு, தொட்டால் பக்கங்கள் உதிர்ந்துவிடுமோ எனும் ஒரு பழங்காலப் பனுவல் போல ஒருகணம் நமது கைகளில் சில விசித்திரங்களை ஒப்படைத்துச் செல்கிறது. அத்தியாயங்களுக்கு இடையில் கத்திரிக்கப்பட்ட செய்திகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் கொத்துகள், எடுத்தாளப்பட்ட பிறரின் படைப்புகள் எனச் சிலதைப் புரிதலின் அவசியம் கருதி ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பது நாவலின் நவீன வடிவத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறது. நம் தொடர்ந்து தரப்பட்டிருக்கும் விஷயமாக உலகெங்கும் உள்ள எளிய மக்களின் வறுமை, கலை வடிவங்கள், நம்பிக்கைகள், இடம்பெயருதல் யாவும் ஏகாதிபத்தியத்திய அதிகாரத்தின் ஒற்றைக் கரத்தில் அகப்பட்டு நாசமடைந்து போனதாகவும், அதன் வலிநிறைந்த வரலாற்றையே பதிவு செய்வதாகவும் இந்நாவலை அதன் ஒட்டுமொத்த கட்டுமானத்தோடு நாம் எடுத்துக்கொள்ள முடியும். இவ்வகையில் தமிழின் முதல் நவீன நாடக வடிவ நாவல் என்று பிதிராவைச் சொல்லுவது செவ்வனே பொருந்துகிறது.

போக நீண்ட காலமாக வைதீகமும், சனாதன மும் நவீனத்துவத்தை உள்வாங்கிச் செரித்திருப்பதை விலக்கி பௌத்த சமண மரபுகளின் வழியாக, தன் புராணிகத் தொன்மங்களைப் புதுக்கி, கிராமிய நாட்டார் வழக்குகளுக்கும், உலகெங்கும் உள்ள பழங்குடிமக்களின் மாந்தீரிக வாழ்வியலுக்கும் இடையே ஒடுக்கப்பட்டோரின் சாட்சியாகத் தனது மொழியைக் கடத்திக்கொண்டு போகும் கோணங்கி பல இடங்களில் சோசலிசவாதக் கதைப்பொழிவை மானுட இயல் பூக்கங்களாய் மாற்றிக் காட்டும்போது தன் கிராமிய விழுமியங்களை மதினிமார்கள் கதையிலிருந்து தூக்கித் துடைத்தெடுத்து பிதிராவில் பல பரிமாணங்கள் பற்றிச் சுழலும் செவ்வியல் வீச்சாக மாயப்புனைவின் மந்திர உச்சாடனங்களாக மொழியைத் துடிக்க வைக்கிறார்.

மற்றபடி நவீன நெருக்கடிகளைப் பேச வரும்போது தொழிற்புரட்சியின் பாதூரமான விளைவுகளை மட்டுமே குறிப்பிடும் அவர் சமகாலப் பெரு நகரங்களுக்கான புனைவுகளைக் கதாச்சுருளில் வைக்கும்போது அநேகம் செய்திகளாகவும், தகவல்களாகவும் மட்டுமே வெளிப்பட நிற்பது மாற்றுகளின்மீது கவனமற்று இயங்குவதையே குறிக்கிறது. நகரமயமாதலின் மீது ஒற்றை பார்வையைச் சுமத்தும் போக்காகவும், கிராமப்புற மனிதர்களின் மீதான ஒரு பக்கக் கரிசனமாகவும் மேற்செல்ல முடியாமல் தனக்குள் சில நவீனத் தடைகளைக் கொண்டிருக்க நாம் காண்கிறோம். ஆனால் தகர்ந்துபோன மார்க்சியத்தின் மீதான ஏக்கத்தையும் தனது நிலத்தின் மீதான அதன் அவசியத்தையும் மூன்றாம் உலகில் உணரும் வலி நிறைந்த கலைஞன்தான் கோணங்கி என்பதை நாம் மறந்துவிட முடியாது.

வரலாற்று இழப்புகளை அபரிமிதமாகப் பெருக்கிச் செல்லும் பிதிரா தன் நவீனத்தில் எதார்த்தமரபான செவ்வியல் தன்மைகளைக் கடந்துவிட்டதாக அறிவித்துக் கொள்ளும் இடமே பின் நவீனத்துவத்தின் துவக்கமாகவும், சந்கேதமாகவும் தென்படுகிறது. சில பக்கங்களில் மொழியின் குறிப்பீட்டு அர்த்தங்களில் மட்டுமே இயங்கும் பிரதியாக பிதிராவை இனம்காண நேருவது துரதிர்ஷ்டவசமான வாசிப்பு என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.

எல்லா நிலங்களும் உடல்களை அதன் ஆதிக்கக் கட்டமைப்பிற்குள் அதன் நவீன வடிவத்திற்குள் உள்வாங்கும் காலனியத் தன்மை கொண்டதாய் இருக்கும்போது இயல்பூக்கத்தின் இச்சையை அழித்து கொடுக்கப்பட்டவற்றின் அறிவைப் பொருளை, வாழ்வோடு இணைப்பதற்கான தேடுதலிலேயே உடலின் வாழ்நாள் முடக்கப்பட்டிருக்கிறது என்பதோடு அறியாமையும், அப்புராணித்தனமும் கேலி செய்யப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம்.

வாழும்போதே எதார்த்தத்தில் நகர்ந்து கற்றுக்கொள்ள முயல்வதன் கட்டுகளைந்த விடுதலையை இந்நாவல் தன் தொன்மத்திலிருந்து சமகாலத்திற்கு எவ்வாறு வழங்கியிருக்கிறது என்பதுதான் அதன் இருப்பையும், கேள் நிகழ்வாக்கும் என்றளவில் நமக்கு லேசான ஆறுதலும் கிடைக்கிறது. கோணங்கி நிகழ்கால வாழ்வின் நவீன நெருக்கடிகளுக்கு முன்பு எந்தத் தகவமைப்பையும், மாற்றுகளையும் பேச வேண்டிய இடத்தில் தன் கதை சொல்லலுக்கு அவசியம் இல்லையென்று உலகெங்கும் உள்ள பழங்குடி சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்டோருக்குமாகவே தனது மொழியை முன் வைத்துச் செல்கிறார். குறிப்பான அத்தன்மை இந்நாவலின் வலிமையை எந்தவிதத்திலும் குறைத்து விடாது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

உப்புநூல் எனும் அத்தியாயத்தில் உப்பும் இலந்திராவும், யாத்திரிகனும், உப்பு நகர அலியும், தாசியும், தகா புணர்வாளர்களும், ஆடல் மகளிர் பெருத்த தமா நகரமும், பேசப்படும் கட்டத்தில் காமத் தை ஒரு வரைபடமென விவரித்துச் செல்லும் கோணங்கி “உப்புநகர் அலி உடலில் கசியும் வேர்வை வாசனையில் காமமுற்ற ஆண்களும், பெண்களும் அவளை உறைபனிப் பெட்டிக்குள் அடைத்து வைத்து பனிமணலுடன் தழுவுகிற வேளை சாவு சில்லிடுகிறது” என எழுதிச் செல்கிறார். தமா நகரம் சோபடாமா வரைபடம் போன்றவை அழிந்து போன நகர சந்தைகளை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

அறிவின் புதைச் சேற்றிலிருந்து காமத்தைப் பிரித்தெடுக்கும் எளிய வடிவங்களைக்கூட முற்றிலும் மொழிநடைக்குள் புலனின்றிக் கரைத்துவிடும் கோணங்கி சில இடங்களில் புலன்களைத் தொடும்போது உண்டாவது போலவே வார்த்தைகளைத் தொடும்போதும் பரவசங்கள் நிகழும்படி தனது மொழியை உயிர்ப்பிக்கிறார்.

அறிவின் புதைச் சேற்றிலிருந்து காமத்தைப் பிரித்தெடுக்கும் எளிய வடிவங்களைக்கூட முற்றிலும் மொழிநடைக்குள் புலனின்றிக் கரைத்துவிடும் கோணங்கி சில இடங்களில் புலன்களைத் தொடும்போது உண்டாவது போலவே வார்த்தைகளைத் தொடும்போதும் பரவசங்கள் நிகழும்படி தனது மொழியை உயிப்ர்பிக்கிறார். புலனின்பத்தை மறுத்துரைக்கும் சனாதன நிலத்தில் புலனின்பத்தை எதிர் கலாச்சாரமாக வைக்கும் இன்றைய நவீன சமகால இலக்கியப் பாய்ச்சல்களை இந்நாவல் தவிர்த்திருக்கிறது. அதற்கு மாறாக புலனுடல் மொழியானது கற்பிதமான கருத்துகளுக்கும், தத்துவங்களுக்கும் அப்பால் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதைக் காமத்திற்கு அப்பால் வேறு சில வகைகளில் புரிந்துகொள்கிறோம்.

ஒரு பிரதியின் வாசிப்பு இன்பத்தை மறுதலிப்பது ஒரு சமூகத்தின் கலாச்சாரத் தேவையைத் திருப்திப்படுத்த மறுப்பது என்றளவில் பிதிராவைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி அதன் ஏமாற்றாத வஞ்சகத் தன்மையில்லாத நேர்மையான பதிவிற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக ஆகிறோம். மூன்றாம் உலக வறுமைகள் மற்றும் தற்கொலைகளின் பாலத்தின் மீது நீளும் சரித்திரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிதிராவைத் தன் வினோத மொழியின் பக்கங்களில் ஒளித்து வைத்து வாசகன் தோண்டத் தோண்டத் துலங்கத் தரும் பிரத்தியேகமான கலைச் சொற்கள் பாவிய உரைநடையில் கோணங்கியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பதுதான் இன்னுமான வியப்பாகிறது.

– இப்படியாக நான் பிதிராவின் வாசிப்பிற்குள் இயங்கியபோது ஆறுவகை நிலத்தின் மணல் சித்திரங்கள் எழுந்தசைந்து என்னை உள்வாங்கிக்கொண்டு புராதனத் தெருக்களிலும், ஐரோப்பியச் சாலைகளிலும், உப்பு வயல்களிலும், கடல் பாலை களிலும் அலைய வைத்தது. மேலும் நாடோடிகளுடன் உடன் சென்றதும், காபிரிகள் அமைத்த இருண்ட தண்டவாளக் குகைகளுக்குள் இறக்கிவிடப்பட்டதும், சாம்பல் நிற திமிங்கலங்களை வேட்டையாடியதும், கிரேக்கச் சிற்பங்கள் நிற்கும் வெளியில், கம்பளப் பெண்ணுடன் தராதர இலைவிரித்து தழுவியதும், கும்பினிக் கப்பல்களை உடைத்தெறியக் கோபம் கொண்டதும், பூம்மை துனக்காரர்களோடு உலவியதும், பசிக்கு மார்க்ஸ்க்கு அளித்த பென்சில் பிரட்டு களை தின்று தீர்த்ததும், உப்புநூல் யாத்திரிகனோடு பனங்காட்டுப் பேய்களை அடையாளம் கண்டதும், தனம்மாளின் வீணையை விளையாட்டாய் ஒருமுறை சுண்டியதும், ரொனால்டாவின் பந்தை வானுயர உதைத்ததும் ஆக நான் கால எந்திரத்தின் வழியே மியூசியத்தில் அலைவுறும் ஒரு ஞாபக உடலாய் மாறிப் போயிருந்தேன். ரமேஷ் பிரேமின் தொலை தூரப் பயணி என்ற கவிதைக்குப் பிறகு ஒரு நவீன உடலுக்குள் மறைந்து கிடக்கும் தொன்ம அடுக்குகளைப் பிதிராவில் நான் மீட்டெடுத்துக்கொள்ள முடிந்தது. அது மீண்டும் மீண்டும் கோணங்கியை ஓர் அசாதாரண படைப்பாளியாய் எனக்குள் நிமிர வைக்கிறது. பலகாலமாய்க் கதையுடலாகவே அலையும் கோணங்கி மனித உடல்களைத் தின்னும் இன்றைய ஏகாதிபத்திய மிருகத்திற்கு முன்பு எதிர்த்து நிற்கும் ஒரு பனங்காட்டுத் தொன்ம மிருகமெனவே தன் மொழி உறுமலை முறுக்குகிறார்.

மற்றபடி இதை எழுதியவனின் ஒற்றைப் பார்வையில் மட்டுமே சிக்கியிருக்கும் பிதிராவை விடுவித்து புதிதான வாசகர்கள் அணுகும்போது உண்டாகும் இடைவெளிக்கு இந்நாவல் மிகுந்த பரப்பினையும், செறிவையும், மொழியுச்சத்தையும் கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு பல நூற்றாண்டு மரபுகளும், சடங்குகளும் கொண்ட ஒரு நிலத்தில் வந்தேறிகள் தொடங்கி இன்று வர்த்தகக் காலனி மயமாகிவிட்ட ஒரு மூன்றாம் உலகத்தினை இடதுசாரிதன்மையின் ஆரம்பத்தில் விமர்சித்துப்போய் விழுமியங்களும் வேர்களுமற்ற மேற்கு உலகங்களை மிக விரைவாக கட்டமைப்பதற்காகவே வாழ்விழந்துபோன அடிமைகளின் துயரத்தையும், விமர்சனத்திற்குட்பட்ட சரித்திர சான்றுகளையும் ஒன்றிணைத்து ஐவகை நிலத்தின் மேல் நடந்த நாடகமாய் நிறுவும் பிதிராவை கோணங்கியின் எழுத்திலிருந்து இறுதியாக எடுத்துப் பார்க்கும்போது கவித்துவத்தின் மீது அவர் கொண்ட காதலை உரைநடையில் அதிகபட்சமாய் சாத்தியமாக்கியிருப்பதையும் சமரசமற்ற கலைஞனாகவே தன்னை மீட்டுருவாக்கம் செய்யும் உழைப்பு செயல்பாட்டையும் நாம் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது.

தொன்மவியலில் பின் நவீனத்துவச் சாயல் கொண்ட பிதிராவை இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த ஒரு மிக முக்கியமான நாவல் என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.


எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் நடத்திய பன்முகம் இதழில் வெளியான கட்டுரையின் மறுபிரசுரம் இது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்