க்ளிக்

3 நிமிட வாசிப்பு

ராஜாவுக்குத் தன்னை யாரும் கவனிப்பது பிடிக்காது. ஆனால் அடிக்கடி யாராவது அவனைக் கவனிக்கும்படி நேர்ந்துவிடும். அவனுக்குக் காது சரியாகக் கேட்காது. அதற்குக் காரணமாக அவன் அம்மா இட்டுகட்டிச் சொல்லும் கதைகள் காவியங்களாக தோன்றும், சில சமயம் முட்டாள்தனமாகவும். அப்படிப்பட்ட கதை ஒன்றில், ராஜாவுக்குச் சிறு வயதில் விபத்தொன்று நேர்கிறது. “உங்கள் பையனைக் காப்பாற்றிவிட்டோம், மூளையின் இரத்தக் கசிவும் நின்றுவிட்டது, காதில்தான் கொஞ்சம் பிரச்சனை. போகப் போக தானாகவே சரியாகிவிடும்,” என்று அறுவை சிகிச்சை முடிந்த கையோடு மருத்துவர் சொன்னாராம். தனக்கு நடந்த எந்த விபத்துகளுமே நினைவில் தங்காமல் போனது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். அக்கதைகள் அத்தனையுமே பொய் என்று அறிந்தபோது, அவனுக்கு ஆறு வயது. ஒரு கோடை விடுமுறையின்போது பாட்டி வீட்டில், அத்தைகள் இரண்டு பேர் காது கேளாத சிறுவன் ஒருவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. பேச்சின் முடிவில் தெரிந்தது அவர்கள் பேசியது தன்னைப் பற்றித்தான் என்று. ஏன் தனக்குப் பள்ளியில் நண்பர்களே இருந்ததில்லை? ஏன் கூட்டமாக சேர்ந்து கேலிசெய்வதற்கு மட்டும் தன்னை இழுத்துக்கொண்டார்கள்? ஒவ்வொன்றுக்கும் அப்போது பதில் கிடைத்தது.

மன்னிப்பு கேட்பதிலேயே ராஜாவின் வாழ்க்கை கழிந்தது, குறிப்பாக, முழுச்செவிடனாக இல்லாமல் போனதற்கு. ஒரு வேளை, மற்றவர்கள் எதிரில் நின்று பேசாமல் இருந்திருந்தால் அதற்கான அவசியம் இருந்திருக்காது. அவன் கவனமற்றுத் திரிவதாகவே பலருக்கும் தோன்றியதால், பெரும்பாலும் தேவையற்ற தருணங்களில் மட்டுமே சொற்கள் அவன் காதுகளை வந்தடையும். யாரேனும் சொன்னதை திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்கும்போது மன்னிப்பு கேட்பான். ‘செவிடர் ஜோக்குகளுக்குச்’ சிரித்துவிடும் நண்பர்கள் குற்றவுணர்வுடன் அவனை பார்க்கும்போது மன்னிப்பு கேட்பான். சில நேரங்களில் அவன் உச்சரிப்பு தெளிவாக இருக்காது, அவ்வப்போது தடுமாறி விழப்போவான், இவை அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டுவிடுவான்.

ராஜா பொதுவாக வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து செல்வான். சரியாக நாற்பது நிமிடங்கள் எடுக்கும். வீடு அப்படி ஒன்றும் தூரத்தில் இல்லை, அவ்வழியில் சரியான நடைபாதை இல்லாததுதான் காரணம். இந்த நகரம் இப்படி ஆகிவிட்டது, முடிவற்ற கோடைக்குள் சிக்கி. அதையெல்லாம் அவன் பொருட்படுத்துவதில்லை. விதவிதமான வடிவங்களை எண்ணெயில் பொறித்தெடுக்கும் கிழவியை, காய்கறிகளும் இளநீர்களுமாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டிகளை, பூக்கடைகளை, எங்கும் வியாபித்திருப்பதை இறைவன் உணர்த்துவதைப் போல் அசுத்தங்களுக்குள் இருந்து எழும்பி நிற்கும் கோயிலைக் கடந்து சென்று கொண்டிருந்தான். வழக்கமான டீக்கடை அவனை நிறுத்தியது. அங்கிருக்கும் கடைப்பையனுக்கு அவனை தெரியும். சைகை காட்டியதும், ஒரு ஸ்பூன் சர்க்கரையுடன் ஆவி பறக்கும் சூடான டீயைக் கொண்டு வந்தான்.

“அண்ணா, நீங்க உங்க லைட்டர நேத்து மறந்து வச்சுட்டுப் போயிட்டீங்க.”

“இல்லியே நான்…” இடையில் நிறுத்தினான் ராஜா.

அந்த லைட்டரில் அவன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

தி.ராஜா

அதைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினான். இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள் வீட்டை அடைந்துவிடலாம். சமீபத்தில் பார்க்கத் தொடங்கிய தொலைக்காட்சித் தொடர் ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும். சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது அவன் கைகள் தன்னிச்சையாக லைட்டரை அசைத்து விளையாடிக் கொண்டிருந்தன. க்ளிக்! தீச்சுடரை எதிர்பார்த்த அவனுக்கு இரைச்சல் கேட்டது. சட்டென்று ஒரு நடுக்கம் கால்களைக் கவ்வியது. சுதாரித்துக்கொண்டு உற்று கவனித்தான். சன்னல்கள் மூடியிருக்கும் காரின் ரேடியோவிலிருந்து நகைக் கடை விளம்பரம், ஐம்பது மீட்டர் தொலைவில் கீரை விற்பவரின் கூக்குரல், தன் கையைப் பிடித்து நடக்கச் சொல்லும் தாயின் அதட்டல், தொலைபேசியில் பேசிக்கொண்டே அவனை நோக்கி வருபவனின் வார்த்தைகள், ஒவ்வொன்றும் ராஜாவுக்குத் தெளிவாகக் கேட்டன. அவனது பாதையில் தினமும் சிதறிக் கிடக்கும் சத்தங்கள்தான்! மனம் உணர்ச்சிப் பெருக்கில் தடுமாறியது. பதற்றத்துடன் லைட்டரை மறுபடியும் கிளிக்கினான். மீண்டும் அமைதி!

வேகமாக வீட்டிற்கு ஓடினான். குளியலறைக்குள் புகுந்து கதவை மூடினான். அவனுக்குத் தெரியும், அம்மா வந்து கதவைத் தட்டுவாள், அவன் கவனிக்க வேண்டும் என்பதற்காகக் கைப்பிடிக் குமிழை அப்படியும் இப்படியும் திருப்புவாள். உட்கார்ந்து லைட்டரை கிளிக்கினான். அம்மா நடக்கும்போது எழும் கொலுசொலியும், பக்கத்துவீட்டுக் குக்கரின் விசில் சத்தமும், தொலைக்காட்சித் தொடரின் பாடலும் அவனுக்குக் கேட்டன. இந்த லைட்டர் அபாயகரமானது என்று அவனுக்குத் தோன்றியது. முகத்தைக் கழுவிவிட்டு படுக்கையறைக்குப் போனான். துணிகளுக்கிடையில் அதை மறைத்து வைத்தான்.

அன்றாடங்களில் காலம் கழிந்தது. ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம், அதே நடைபாதை, அதே டீக்கடை. அந்த லைட்டர் ஒளித்துவைத்த இடத்திலேயே கிடந்தது. எல்லா நாளையும் போலிருந்த நவம்பர் மாதத்தின் ஒரு நாளில், மழை தாரை தாரையாகக் கொட்டித் தீர்த்தது. அவன் கண் விழித்தபோது கருமை விடாப்பிடியாக வானத்தைச் சூழ்ந்திருந்தது. ராஜா லைட்டரைத் துழாவி எடுத்தான். பால்கனிக்கு வந்து நின்று அதைக் கிளிக்கினான். மழையின் சத்தத்தை முதல் முறையாகக் கேட்டான். தேங்கிக்கிடக்கும் நீரின் சலசலப்புகள், காற்றின் ஆங்காரக் கூச்சல், மரங்களின் ஊசலாட்டம்!

அவன் கண்கள் ஈரமாகின, இதைப் பற்றி அவன் யாரிடமும் சொல்லப் போவதில்லை.


இது அனுஷா தனது வலைப்பூவில் எழுதிய Click குறுங்கதையின் மொழியாக்கம்.

மொழிபெயர்ப்பு – அரூ குழுவினர்

3 thoughts on “க்ளிக்”

  1. நல்ல கதை. விரைவாக படிக்கும்படி இருந்தது. ஆனாலும் அத்தனை ஆர்வம் அமையவில்லை. ஏனெனில் ஒரு காது கேளாதவனின் கதைதானே அதில் என்ன சொல்லிவிட முடியும் என்கிற முன்முடிவாக இருக்கலாம். ஆனால். அனால் தனது அல்லாத லைட்டரில் அவன் பெயர் இருப்பதை அவன் கண்டதும் , வாசிக்கையில் ஒருகணம் அப்படியே நிறுத்திவிட்டு மீண்டும் என்ன நடந்தது என வாசிக்கலானேன். அங்கிருந்து கதை வேறு திசைக்கு மாறுகிறது. மாயஎதார்த்தக்கதையாக் அது பரிணமிப்பது சிறப்பு. அதிலும் அந்த லைட்டர் ஒளிக்கும் தன் காதில் கேட்கும் ஒலிக்கும் சம்மந்தம் செய்திருப்பதைச் சொல்லலாம்.

  2. சத்தமும் அமைதியும் ஒரு விரல் அழுத்தத்திற்குள்! சுவாரஸ்யமான கதை.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்