மோபியஸ் (Mobius)

< 1 நிமிட வாசிப்பு

செழித்துப் பெருத்திருந்த
அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த
முதல் கடியின் முடிவில்
என் வயிறு குபுக்கென
உப்பத் தொடங்கியது!
சிதைந்திருந்த பகுதிக்குப் பக்கவாட்டில்
பாந்தமாகப் பற்களைப் பதிக்கப் போக
இடுப்புப் பெருத்து
சட்டைப் பொத்தான்கள் சிதறித் தெறித்தன.
ஆப்பிளின் கீழ்ப் பகுதி காணாமல் போனதும்,
வயிறு கால்களை உள்ளிழுத்துக் கொண்டதும்
ஒரே நேரத்தில்தான் நிகழ்ந்தது.
வாய்க்குள் சிக்கிய விதையொன்றைத்
துப்பியபோது
என் பல்லொன்று பறந்து போனது.
கடிக்க முடியாத அளவுக்குக்
கனிவாகிப் போயிருந்த இப்பற்களைக்கொண்டு
எஞ்சியிருக்கும் காம்பை
என்ன செய்வதெனக்
குழம்பிக் கொண்டிருக்கும்போதுதான்
கவனித்தேன்
சிவப்பு நிறத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிற
என் உடலை!

அதே தருணத்தில்தான்,
எனக்கெதிரே
நின்றுகொண்டிருந்த
காம்பு வைத்திருந்த நான்,
ஓர் ஆப்பிள் வெட்டும் கத்தியை
அதீத நிதானத்துடன்
என் வயிற்றுக்குள் செருகினேன்!


புகைப்படம்: sharas clickz – https://www.instagram.com/sharasclickz/

1 thought on “மோபியஸ் (Mobius)”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்