நிழலும் நிஜமும்

5 நிமிட வாசிப்பு
Feather Duster Worm | புகைப்படம்: Daniela Moses

கனவுருப்புனைவு குறித்து வெவ்வேறு துறைகளில் இயங்கும் ஆராய்ச்சியாளர்களிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

  1. நீங்கள் கனவுருப் புனைவை வாசிக்கவோ, பார்க்கவோ செய்கிறீர்களா?
  2. கனவுருப்புனைவு அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் எவ்வகையிலாவது உதவுகிறது என நினைக்கிறீர்களா?
  3. உங்களுக்கு மிகப் பிடித்த கனவுருப்புனைவுப் படைப்புகள் எவை? ஏன்?
  4. உங்களுக்குள் உதித்த வினோதமான அறிவியல் புனைவு எண்ணம் எது? வருங்காலத்தின் எத்தனையோ சாத்தியங்களில் மிக வினோதமான ஒன்றாக உங்களுக்குத் தோன்றுவது எது?

ரதி சரவணன் – உயிர்மருத்துவவியல்

தேர்ந்தெடுத்து நண்பர்கள் பரிந்துரைக்கும் அறிவியல் யூகப் புனைவுகளைப் பார்க்கிறேன், எல்லா அறிவியல் புனைவுப் படங்களையும் அல்ல. கனவுருப்புனைவு அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் எவ்வகையிலாவது உதவுகிறதா என்ற கேள்விக்கு நேரடியான ஒரு பதிலைச் சொல்லிவிட முடியாது. எந்த அடிப்படையில் ஓர் யூகப் புனைவு எழுதப்பட்டிருக்கிறது அல்லது படமாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதைச் சொல்ல முடியும். குறிப்பாக, படங்கள் மிகப் பெரும்பொருட் செலவில் எடுக்கப்படுவதால், அது பலதரப்படட மக்களையும் கவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் போலி அறிவியலையும் முன் வைத்து மக்களை ஆச்சரியப்படுத்தும் ஒரே நோக்கத்தில் எடுக்கப்படுகிறது. இதில் படங்களைவிட அறிவியல் புனைவுப் புத்தகங்கள் கொஞ்சம் சீரிய நோக்கத்தில் எழுதப்படுகின்றன என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால், கலை என்பதே ஓர் உணர்வின் உச்சத்தை வாசகனுக்குத் தொட்டுக்காட்டி, வாழ்வு சார்ந்த சில கேள்விகளுக்குப் பூடகமாகப் பதில் சொல்வதே. அந்தக் கலை அறிவியலோடு இணைகிறது எனில் அது அறிவியலின் உச்சபட்ச சாத்தியத்தைச் சொல்கிறது என்றே கொள்ள வேண்டும், உண்மையான அறிவியலை அதில் தேடக் கூடாது. ஆனால் வாழ்வின் சில இருத்தலியல் சார்ந்த கேள்விகளுக்கு இதே வாழ்க்கைச் சூழலில் ஒரு வாழ்வைக் கட்டமைத்து அதற்கான பதிலைத் தேட முடியாது; அதற்கு இப்போது நடைமுறையில் இல்லாத ஒரு வாழ்வை நம்பிக்கைத்தன்மையோடு கட்டமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் இலக்கியத்துக்கு இருக்கிறது, அது அறிவியல் யூகப் புனைவாலேயே சாத்தியமாகிறது. அதேபோல் ஒரு சிந்தனையை எந்த அளவு உச்சத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற கற்பனையை அல்லது அதைப் பற்றிக் குழந்தைகளுக்கு மறக்க இயலா வகையில் ஒரு அறிமுகத்தைச் செய்கிறது என்ற அளவிலும் ஓர் அறிவியல் புனைவை ஏற்கலாம். உண்மையான அறிவியலுக்கு ஆவணப்படங்கள்தான் எனது பரிந்துரை. முக்கியமாக, குழந்தைகளுக்கு இந்த வித்தியாசத்தைச் சொல்லியே அறிவியல் யூகப் புனைவுகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். எனக்குப் பிடித்த கனவுருப்புனைவுப் படைப்புகள் – Inception, Minority Report, The Matrix, Contact, 2001: A Space Odyssey.

அந்தக் கலை அறிவியலோடு இணைகிறது எனில் அது அறிவியலின் உச்சபட்ச சாத்தியத்தைச் சொல்கிறது என்றே கொள்ள வேண்டும்.

மனிதன், நம்மோடு இருந்த நம்மைவிடப் பலம் பொருந்திய ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் போன்றவர்களை எல்லாம் வென்று தப்பிப் பிழைத்து இன்று மனித உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருப்பதற்கு ஒரே காரணம் நமது மூளைபலம், அளவு, அதன் செயல்பாட்டுக்காக நாம் எரிக்கும் சக்தி ஆகியவைதான். இன்று மனிதர்களை வேறுபடுத்துவதும் அவர்களின் வெற்றி தோல்விகளுக்குக் காரணமாக இருப்பதும் அதுவேதான். எதிர்காலத்தில் சின்னச் சின்ன சிப்புகள் (chipset) மூலம் டன்கணக்கான தகவல்களை நமது மூளையில் பொருத்திக்கொள்ள முடியும், அதை ஒரு செயலியுடன் (Processor) இணைத்து எந்த ஒரு ஐடியாவையும் பகுத்து ஆராய வைக்க எதிர்காலத்தில் முடியும் எனும்போது, மூளை பலத்தால் இப்போது இருக்கும் இந்த வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லா மனிதர்களும் ஒரே போல் ஆகிவிடுவார்கள் எனில் அப்போது ஒரு தனிமனிதனின் இருத்தல் சார்ந்த முக்கியத்துவங்கள் என்று எதுவும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் எனக்கு இருப்பதிலேயே கிரேசியஸ்ட் ஐடியாவாகத் தோன்றுகிறது. ஒரு சிப்பைப் பொருத்துவதன் மூலம் எவனொருவனையும் எந்த வேலையையும் செய்ய வைக்க முடியுமெனில், தனிமனித முக்கியத்துவங்கள் போய், மனித உடலில் உள்ள ரோபோக்கள் என்ற அளவிலான மதிப்புதான் நமக்கு இருக்குமா? ஒருவருக்குப் பதிலாக அவரைப் போன்றே மற்றொருவர் இருக்க முடியுமா? Designer babies கான்செப்ட்டும் ஒரு கிரேசி ஐடியாதான். நமது கையில் ஒரு செக்லிஸ்ட் கொடுக்கப்பட்டு பிறக்கப்போகும் குழந்தையின் தோல், கண் மற்றும் முடியின் நிறம், உயரம், என்று எல்லா உருவ அமைப்பின் விவரங்கள் கொடுக்கப்பட்டு Design&Build போல் ஜீன் எடிட்டிங் மூலம் குழந்தை பிறக்கவைக்க முடியும் என்பதும் ஒரு கிரேசி ஐடியாவாகத்தான் இருக்கிறது.

கணபதி – இயந்திரவியல்

நான் அறிவியல் புனைவுத் திரைப்படங்களை மிகவும் விரும்பி ரசித்துப் பார்ப்பேன். கனவுருப்புனைவு அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் கண்டிப்பாக உதவுகிறது. எனக்குப் பிடித்த கனவுருப்புனைவுப் படைப்பு Interstellar. இத்திரைப்படத்தில், காலங்களுக்கு இடையேயான பயணம், சார்புக்கோட்பாடு, நான்காவது நேரப்பரிமாணம், ஈர்ப்புவிசையின் ஊடான தகவல் பரிமாற்றம், மாயத்துளை (wormhole) போன்ற கற்பனைக்கு எட்டாத , எளிதில் புரிந்துகொள்ள முடியாத கோட்பாடுகள் மிக அழகாகவும், நேர்த்தியாகவும், ஓரளவு அறிவியல் அறிவு உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையிலும் படமாக்கப்பட்டிருக்கும். இந்தத் திரைப்படம், மாயத்துளையின் வடிவம், ஆற்றல், ஆயுள்காலம் போன்ற கற்பனைகளுக்கு உயிரூட்டியது. இது ஒருவேளை சாத்தியமானால், நம் எதிர்கால சந்ததியினர் ஒரு பால்வழித்திரளில் இருந்து மற்றோரு பால்வழித்திரளுக்கு பயணம் செய்யவும், குடியேறவும் செய்யலாம், யார் கண்டது? வேற்று கிரகம், வேற்றுகிரகவாசி, மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள், காலங்களுக்கு இடையேயான பயணம் போன்ற பல அறியாப் புதிர்களுக்கு விடை காணலாம். My quote is, “Everything is theory until it has its dimension”.

எனக்கு உதித்த வினோதமான அறிவியல் புனைவு எண்ணம் என்னவென்றால் மனவலைப்பயணம் (கனவு அல்ல). நம் மனதுக்கு விருந்தளிக்கவும், சிறந்த அனுபவத்தினை வழங்கவும் நாம் ஒவ்வொருவரும் பல வித்தியாசமான பயணங்கள் மேற்கொள்ளுகிறோம். நாம் ஏன் ஓர் இடத்தில் இருந்தவாறே நம் மனவலைகளை மட்டும் பயணப்பட வைக்கக்கூடாது? நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படத்தலாமே?

கார்த்திக் – திறன்மின்னணுவியல்

நான் அறிவியல் புனைவை வாசிப்பதில்லை, ஆனால், Interstellar, Martian முதற்கொண்டு Marvel மற்றும் DC-ன் அத்தனை சூப்பர்ஹீரோ படங்களையும் பார்த்திருக்கிறேன். அறிவியல் புனைவு அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் உதவுவதாக நினைக்கிறேன், குறைந்தபட்சம் தூண்டுதலுக்காகவாவது. ஒலிமிகைப் பயணங்கள் மற்றும் கட்டம் மாறும் பொருட்கள் போன்ற அறிவியல் வளர்ச்சிகளுக்கு, புனைவின் கற்பனைவாதமே தூண்டுதலாக இருந்ததாக நம்புகிறேன்.

காலம் மற்றும் வெளியின் பரிமாணங்களுக்கிடையேயான தொடர்பைக் காட்டியவிதத்தில், Interstellar எனக்கு மிக விருப்பமானது. என்னைப் பொறுத்தவரை, டெலிபோர்டிங்தான் (தொலைப்பெயர்ச்சி) விநோதமான அறிவியல் புனைவு. அது, இயற்பியல் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுல மரபு மற்றும் உயிரியல் மீதான நம் அறிதல்களை நிராகரிக்கிறது.

எஸ்.கிருத்திகா – உயிர்மருத்துவப் பயன்பாடு

புனைவைக் காட்டிலும், நான் பெரும்பாலும் அபுனைவையே விரும்புகிறேன். ஓரளவிற்கு அறிவியல் புனைவு, அறிவியலின் எல்லைகளை விரிவாக்க உதவுகிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது நடைமுறையில் சாத்தியமற்ற அல்லது நிஜத்தில் இல்லாத கோட்பாடுகளிலேயே தேங்கி விடுகிறது. எனக்குப் பிடித்த கனவுருப்புனைவுப் படைப்புகளாக இரண்டு திரைப்படங்களைச் சொல்லலாம். ஒன்று, Artificial Intelligence. இப்படம், ரோபோட்கள் உணர்வுகளால் ஆட்படுவதையும் அதன் விளைவுகளையும் பிரதிபலிக்கிறது. அது சார்பான ஆராய்ச்சிகளின் எல்லைகளை விரிவாக்கத் தூண்டுகிறது. இரண்டாவது திரைப்படம், In Time. அதில், காலம் பணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் கடிகாரம் இயங்கிக்கொண்டிருக்கும். ஒவ்வொருவரின் ஆயுளையும் அவரவர்களின் வசதி/பணம் தீர்மானித்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை இப்படம் பேசுகிறது. உண்மையில் இரண்டு படங்களுமே சிந்திக்க வைப்பவை. முதல் படம் காட்டுவது, இக்காலகட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டாவதோ, நிஜத்தில் இல்லாத, கற்பனைத் தளத்தில் நிகழும் கரு.

எனக்கு உதித்த வினோதமான அறிவியல் புனைவு எண்ணம் என்னவென்றால் பூமியின் வெவ்வேறு இடங்களுக்குள்ளோ அல்லது வேறு கோள்களுக்கோ மனித இனத்தை டெலிபோர்டிங் (தொலைப்பெயர்ச்சி) செய்வது. இது இப்போது வேண்டுமானால் புனைவாக இருக்கலாம். ஆனால், அறிவியல் துறையில் இதைச் சாத்தியப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில், சீன ஆய்வாளர்களால், ஒளி நுண் துகள்கள் (photon) ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தொலைப்பெயர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

ஜனனி சுந்தரராஜன் – நரம்பியல்

ஆய்வகத்தில் வேலை கடினமாக இருக்கும் சில நாட்களில், ஒருவேளை எலிகள்தான் நம்மைக் கட்டுப்படுத்துகின்றனவோ எனத் தோன்றுவதுண்டு.

நான் விரும்புவது போல அதிகமாக இல்லாவிட்டாலும், அறிவியல் புனைவை வாசிக்கிறேன். தொழில்நுட்பத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான கற்பனையையும் லட்சியத்தையும் அறிவியல் புனைவு வளர்ப்பதாக நினைக்கிறேன். பல நேரங்களில், நாம் எவையெல்லாம் சாத்தியமெனக் கருதுகிறோம் என்பது நம் வளர்ச்சியைத் தடுக்கிறது. வருங்காலத்தில் அறிவியல் எங்குச் சென்றடையும் என்பதைக் காட்டும் எழுத்தாளரின் கண்ணாடியாக அறிவியல் புனைவு திகழ்கிறது. அது கண்டிப்பாக இன்றைய அறிவியலுக்கு ஊக்கமளிக்கிறது.

எனக்குப் பிடித்த அறிவியல் புனைவுப் படைப்பு, சமீபத்தில் வாசித்த Hitchhiker’s Guide to the Galaxy. குறிப்பாக, நான் எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்வதால், என்னை இந்தப் புத்தகம் ஆச்சரியப்படுத்தியது. ஆய்வகத்தில் வேலை கடினமாக இருக்கும் சில நாட்களில், ஒருவேளை எலிகள்தான் நம்மைக் கட்டுப்படுத்துகின்றனவோ எனத் (டக்ளஸ் ஆடம்ஸ் இப்புத்தகத்தில் குறிப்பிடுவது போல்) தோன்றுவதுண்டு. நான் ஒரு சோம்பேறி. எந்தப் பெரிய அறிவியல் புனைவுக் கற்பனைகளும் எனக்கு இருந்ததாகத் தெரியவில்லை. என்னுடைய கற்பனையுலகம் பெரும்பாலும் ஹாரி பாட்டர் மற்றும் மாய உலகம் தொடர்பானவையே 😛 நான் செல்ல விரும்பும் மாய உலகில், ஒரு மந்திரக் கோலின் அசைப்பால் நினைத்தது அனைத்தையும் நிகழ்த்தலாம், இரு நெருங்கிய நண்பர்களுடன் கும்மாளம் போடலாம். சுருக்குமாக, ஹாரி பாட்டரின் இடத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்!

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்