நேர்காணல்: எழுத்தாளர் ஜெயமோகன்

14 நிமிட வாசிப்பு

பொதுவாக வாசிப்பு என்பது சிறு வயதில் புத்தகங்கள் அறிமுகமான காலங்களில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது எனினும், எழுத்தாளர் ஜெயமோகனைக் கண்டடைந்தபின்தான் உண்மையில் அவற்றின் வித்தியாசங்கள், வகைமைகள் புரிய ஆரம்பித்தது. ஆறாவது ஏழாவது படிக்கும்போது நூலகம் சென்று சிறுவர்களுக்கான உபதேச நீதிநெறிப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து பின் அப்படியே சுஜாதா, லெக்ஷ்மி, பாலகுமாரன், ஜெயகாந்தன், இந்துமதி, அசோகமித்திரன், அனுராதாரமணன், கி.ரா, சுபா, ராஜேஷ்குமார், சு.ரா …… ஆரம்பத்தில் இந்த வரிசை இப்படித்தான் இருந்தது. நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் படிப்பது, ‘படிப்படியான’ என்றெல்லாம் இல்லை, எல்லாமே “கதைப்புத்தகங்கள்”தான். சில நேரங்களில் சில மனிதர்கள் “நல்ல கதை”, ஆனால் ஏன் அந்த அளவு பாதித்தது, இலக்கிய எழுத்துக்கும் அல்லாததற்குமான வித்தியாசம் என்பதையெல்லாம் புறவயமாகச் சொல்லத் தெரியாது. இவர்கள் எல்லாம் பிடிக்கும்/பிடிக்காது, அவ்வளவுதான். ஜெயமோகனைப் படிக்க ஆரம்பித்தபின்தான், ஒரு வாசகனாக வாசிப்பு சார்ந்த தரம்பிரித்தல் மனதில் நிகழ்ந்தது. ஒன்றை ஏன் ஏற்கிறேன், மறுக்கிறேன் என்று உணர முடிந்தது. இலக்கியவாதிக்கும் எழுத்தாளனுக்கும் வித்தியாசம் தெரிந்தது. ஜெயமோகன்தான் உண்மையில் பின்நவீனத்துவம் என்றால் எது என்று எனக்கு முதலில் சொன்னார், அதற்கு முன் அது சார்ந்து படித்து இருந்தாலும்.

அறிவியல் புனைகதைகளுக்கும் அதேதான். அறிவியல் புனைகதைகள் என்று பெயரிடப்பட்ட புத்தகங்களைப் படித்து, அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசுவது அல்லது அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கதை செய்வதுதான் அறிவியல் புனைகதை என்று புரிந்திருந்தேன், ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளைப் படிக்கும் வரைக்கும். திண்ணையில் வெளியான அவரின் அறிவியல் கதைகள்தான் எது அறிவியல் புனைகதை என்பதற்கான நடைமுறை எடுத்துக்காட்டுகளாக இருந்தன.

அரூ இதழுக்காக அறிவியல் மற்றும் அறிவியல் புனைவுகள் சார்ந்த எனது கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இதோ.

அறிவியல் புனைவை ஒரு சீரியஸ் இலக்கியமாகக் கருதுகிறீர்களா? அல்லது அதனினும் குறைந்த ஒரு வகைமையாகவா? இலக்கியம் என்பது படிமத்தளத்தில் நிகழும் மன நுட்பங்களை அல்லது ஆழ்மன ஆடல்களை மொழியால் பிரதிசெய்வது என்று கொண்டால், அறி-புனைவுக்கும் அதுவேதான் இலக்கணமா? அதுவே சாத்தியமா?

அறிவியல்புனைவு மட்டும் அல்ல, புனைவின் எல்லா வகையுமே இலக்கியம்தான். அவை மானுட வாழ்க்கையையும் இப்பிரபஞ்சஞ்சத்தின் இயல்புகளையும் அறியும்பொருட்டு எழுதப்படும் என்றால்.

இலக்கியம் தன்னை நிகழ்த்திக்கொள்ளப் பல தளங்களில் இருந்து படிமங்களையும், தொன்மங்களையும், தகவல்களையும் சொற்களையும் எடுத்துக்கொள்கிறது. மதம், வரலாறு, தத்துவம் என அது அவ்வாறு நம்பியிருக்கும் பிற தளங்கள் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவை. அறிவியல் புதிய தளம். ஆகவேதான் இந்த வினா எழுகிறது.

அறிவியலில் இருந்து இலக்கியம் தனக்கான கருவிகளைக் கண்டடைந்தால் அதுவே அறிவியல்புனைவு. அறிவியல்புனைவு அறிவியல் அல்ல. அறிவியல் இலக்கியத்தில் உருமாற்றம் அடைந்துள்ளது. இலக்கியத்தில் வரும் ஒவ்வொன்றும் பிறிதொன்றைக் குறிப்பதே.

ஓர் அறிவியல்கதையில் எதிர்காலத்தில் மிகக் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை உருவாவதைப் பற்றிச் சித்தரிக்கப்படுகிறது என்று கொள்வோம். அது ஆக்ஸிஜன் மட்டுமல்ல, வேறு சிலவற்றுக்கும் குறியீடுதான். அந்நிலையிலேயே அது இலக்கியம் ஆகிறது

பிற துறைகளைச் சேர்ந்த கருவிகளைக்கொண்டு இலக்கியம் தான் தேடிக் கண்டடைந்தவற்றையே முன்வைக்கிறது. இலக்கியம் மானுட ஆழ்மனதிற்குள் மொழி வழியாகவும், படிமங்கள் வழியாகவும் செல்லும் ஒரு முயற்சிதான். அதற்குத்தான் அது அறிவியலையும் பயன்படுத்தும்.

அடிப்படையான அறிவியல் விதிகளைப் புரிந்துகொள்வது, பின் இவ்விதிகளைத் தர்க்கத்தின் மூலம் பகுத்தறிவது, பின் அதை வாழ்க்கையுடன் பொருத்தி அதன் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் தேடுவது, பின் கற்பனை மூலம் புதிய அறிவியல் விதிகளை நாமே உருவாக்குவது என்பதுதான் அறிவியல் புனைவை உருவாக்கும் வழிமுறையா?

ஆம், ஏறத்தாழ இதே வரிசையில் இதை நான் சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். ஓர் அறிவியல் கற்பனை அறிவியலின் ஆய்வுநெறிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது அறிவியல். ஆனால் அது அறிவியலின் ஊகநெறிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இஷ்டத்திற்கு ஊகம் செய்தால் அது அறிவியல் கற்பனை அல்ல.

உதாரணமாக இப்படி ஒரு கதையைக் கற்பனை செய்வோம். எதிர்காலத்தில் சூரியன் அணைந்துவிடுகிறது. ஆற்றலுக்குப் பூமியின் மையத்தில் உள்ள வெப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மானுட இனம் வாழ்கிறது. இது உண்மையாகவே சாத்தியமா என்று கேட்டால் இன்றைய அறிவியல் இல்லை என்றுதான் சொல்லும். அது அறிவியல் கதைக்குப் பொருட்டு அல்ல. ஆனால் அப்படி ஊகம் செய்ய ஒரு முகாந்திரம் வேண்டும். பசிபிக் பகுதியில் கடலுக்குள் ஆறு கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு பாக்டீரியா வகை எரிமலையின் வெப்பத்தையே ஆற்றலாகக்கொண்டு காளான்போல ஆகி வளர்ந்திருப்பதை அறிவியலாளர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அந்தத் தாவரத்தை உண்டு வாழும் மீன்கள் உருவாகியிருக்கின்றன அங்கு.

அதை முன்னுதாரணமாகக் கொண்டு மேலே கற்பனை செய்யலாம். பூமிக்குமேல் அத்தனை தாவரங்களும் அழிந்துபோக, அந்தக் கடலடித்தாவரம் மேலே எழுந்து வளர்ந்து மூடிவிடுகிறது. அதை விலங்குகள் உண்கின்றன. அவ்விலங்குகளை மனிதர்கள் உண்கிறார்கள். கடலடி இருளில் வாழும் உயிர்களுக்கு விழிகள் இல்லை. ஆகவே சூரியன் அணைந்தபின் உருவாகி வந்த உயிர்கள் அனைத்துக்கும் விழிகள் இல்லை. இப்படியே கதையை வளர்க்க முடியும். ஏனென்றால் ஊகிக்க முகாந்திரம் உள்ளது.

அன்று ஒளியும் இல்லை, விழிகளும் இல்லை. ஆனால் மொழி இருக்கிறது. அதில் ஒளி என்னும் கருதுகோள் மட்டுமே உள்ளது என்று கொள்வோம். அது எப்படிப் பொருள்கொள்ளப்படும்? ஒளி என்பது வேறுபொருளில் கையாளப்படுமா? குறியீடாக ஆகுமா? இதுதான் அறிவியல் புனைவின் கேள்வியாக இருக்கும்.

அறிவியல் கதைகளைப் பற்றிச் சொல்லும்போது வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளுக்கு “அறிவியலின் படிமங்களைப் பயன்படுத்தி பதில் தேட முயல்வது” என்று ஒரு வகைமையைச் சொல்கிறீர்கள், இதை விளக்க முடியுமா?

காலம், தன்னிலை, நன்மை-தீமைகள் போன்ற பலவற்றைப் பேசுவதற்கு அறிவியலின் படிமங்கள் உதவும். உதாரணமாக ஒன்றைச் சொல்லிப்பார்க்கிறேன். 7 வயதில் ஒருவன் கோமாவில் விழுந்துவிடுகிறான். 97 வயதில் கோமாவில் இருந்து விழித்துக்கொள்கிறான். அவனுடைய 90 ஆண்டுகள் இல்லாமலாகிவிடுகின்றன. அந்தக் காலமே நிகழவில்லை. அவன்வரையில் காலம் என்பதற்கு என்ன பொருள்? அந்த வினாவை எழுப்பிக்கொள்ள அந்தத் தருணத்தை எத்தனை ஆற்றலுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? அறிவியல் புனைகதையின் வாய்ப்பு அதுதான்.

தமிழில் இப்போதைய அறிவியல் புனைவு எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? அதன் போதாமைகளாக எதை நினைக்கிறீர்கள்?

தமிழில் இப்போது பெரிய அளவில் அறிவியல் புனைகதைகள் இல்லை. அறிவியல் வேறு, தொழில்நுட்பம் வேறு. ஒரு கதையில் நவீனத் தொழில்நுட்பம் அல்லது எதிர்காலத் தொழில்நுட்பம் சார்ந்து சில செய்திகளைப் பயன்படுத்திக்கொண்டால் அது அறிவியல்புனைவு அல்ல. அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகள், கோட்பாடுகள்தான்.

அறிவியல் கருதுகோள்களைக் கையாண்டு வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தைக் கற்பனை மூலம் அறிய முயல்வதே அறிவியல்புனைவு. அப்படிப்பட்ட எழுத்துகள் இன்னும் குறிப்பிடும்படி உருவாகவில்லை. இங்குள்ள அறிவியல்புனைவுகள் மிக மிகக் குறைவு. எழுதப்படுபவையும் பெரும்பாலும் மேற்கே பொழுதுபோக்குக்காக எழுதப்படும் அறிவியல்கதைகளை அல்லது சினிமாக்களை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்படுவை.

தமிழில் அறிவியல் புனைவுகளின் தொடர்ச்சி பற்றிச் சொல்ல முடியுமா? நம்பிக்கை தரும் அறிவியல் புனைவாளர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?

தமிழில் அறிவியல் புனைகதையில் சுஜாதா மிக மோசமான ஒரு தொடக்கம். இன்றும் தமிழில் அறிவியல் புனைகதை என எண்ணும் இளைஞர்கள் நடுவே உடனடியாக அவர் நினைவுக்கு வருகிறார். அந்த ‘டெம்ப்ளேட்டை’ மீறாமல் நம்மால் அறிவியல் புனைகதைகளை வாசிக்கவோ, எழுதவோ முடியாத நிலை உள்ளது.

சுஜாதா அறிவியலை எழுதவில்லை, அவருடைய ஆர்வம் தொழில்நுட்பத்திலேயே இருந்தது. அவர் அறிவியலாளர் அல்ல, பொறியாளர். ஆகவே தொழில்நுட்ப விந்தைகளையே அவர் அறிவியலாக எழுதினார். இன்றும் நம்மவர் அதையே எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவதாக, சுஜாதா அவருடைய அந்த ‘அறிவியல்கதைகளை’ வெறுமே வாசகனை மகிழ வைக்கும் கதைவித்தையாகவே பயன்படுத்தினார். வாழ்க்கையை, புடவிமெய்மையை எழுத அவர் அறிவியலைக் கையாளவில்லை.

அதற்கான விளையாட்டுநடை ஒன்றை உருவாக்கினார். அதற்கு அவருக்கு டக்ளஸ் ஆடம்ஸ் (Douglas Adams) போன்ற அறிவியல் பகடியாளர்களே முன்னுதாரணமாக இருந்தார்கள். இன்று அறிவியலை எழுதவரும் அனைவரிடமும் ஒரு வைரஸ்தொற்று போல அந்த நடை உள்ளது. அதைக் கடந்தாலொழிய இலக்கியத்தரமான அறிவியல் புனைவை இங்கே எழுத முடியாது. அத்தகையோர் புனைவு உருவாகி வர இன்னும் காலமாகும். அவர்கள் மேலைநாட்டுத் தீவிரமான அறிவியல் புனைவுகளில் இருந்தே தங்கள் தொடக்கத்தைப் பெற வேண்டும்.

தமிழில் அப்படி அறிவியல் புனைகதைக்கு ஒரு தொடர்ச்சி இல்லை. நான் சில கதைகளை எழுதியிருக்கிறேன். அடுத்த தலைமுறையில் நான் வாசித்தவரை சுதாகர் கஸ்தூரி 7.83 ஹெர்ட்ஸ் போன்ற நாவல்களில் அறிவியல் புனைகதைக்கான பயணத்திலிருக்கிறார் என்று சொல்லலாம், அவரிடமும் இந்த மேம்போக்கான விளையாட்டுநடை என்னும் சிக்கல் உள்ளது.

இந்தியாவில் மற்ற மொழிகளில் அறி-புனைவு பற்றி உங்கள் கருத்து என்ன? நமது அறி-புனைவுகளை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுவதே சரியானதாக இருக்குமா? ஏனெனில் மேற்கத்திய அறிவியலும் கிழக்கத்திய அறிவியல் மரபும் வேறு வேறானது இல்லையா? நம்மோடு ஒப்பிடும் அளவுக்கு கிழக்கத்திய நாடுகளின் இலக்கியம் அல்லது அறி-புனைவு வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

நான் இந்தி, வங்க, மலையாள மொழி அறிவியல் புனைவுகளை வாசித்தவரை இந்திய மொழிகளில் பொதுவாகவே அறிவியல் புனைவுகள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் ஒருவர் பெயரைக்கூடச் சொல்லத் தோன்றவில்லை.

அறிவியல் புனைகதையை எவரும் இந்திய மொழிகளில் வாசிப்பதில்லை. அவற்றை ஆங்கிலத்திலேயே வாசிக்கலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் தமிழிலோ, மலையாளத்திலோ வாசிக்க விரும்புவது ஆங்கிலம் வழியாகக் கிடைக்காத சிலவற்றைத்தான். அது வட்டாரத்தன்மைகொண்ட வாழ்க்கை, பண்பாட்டின் உள்ளுறைகள் சார்ந்த தரிசனங்கள் ஆகியவற்றையே.

ஆசிய நாடுகளின் அறிவியல் புனைகதைகளை நான் பொதுவாக வாசித்ததில்லை. ஆனால் ஜப்பானிய அறிவியல் புனைவுகள் – குறிப்பாக மாங்கா வரைகலை நாவல்களில் – குறிப்பிடும்படி உள்ளன என்று தோன்றுகிறது. நாம் அவற்றுடன் ஒப்பிடுகையில் மிக மிகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம்.

கலைச் சொல்லாக்கம் நமது மொழியில் தேவையான அளவு நிகழாததால்தான் அல்லது அதன் அடிப்படை அறிந்து முறையாக நிகழாததால்தான் அறிவியல் புனைவு நமது மொழியில் அவ்வளவாக நிகழவில்லையா? (அதாவது இப்போது இருக்கும் “நேரடி மொழிபெயர்ப்பான”அறிவியல் சொற்கள் நமக்குள் ஒரு படிமமாக முடியாததால், அதைக் கலை இலக்கியங்களுக்குப் பயன்படுத்த முடியவில்லை அல்லது அந்தக் கலை இலக்கிய மனதுக்குள் அதனால் ஊடுருவ முடியவில்லை என்று சொல்லலாமா?)

கலைச் சொல்லாக்கம் உண்மையில் போதிய அளவு உள்ளது. இதற்குமேல் தேவை என்றால் நாமே கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ள முடியும். உலக அளவில் பல அறிவியல் கலைச்சொற்கள் அறிவியல் புனைகதையாளர்களால் உருவாக்கப்பட்டவையே.

நாம் அறிவியலைத் தமிழில் படிப்பதில்லை. நம் கல்விமுறை அறிவியலைச் செய்திகளாகவே கற்றுக்கொடுக்கிறது – கொள்கைகளாக, கோட்பாடுகளாக, கருதுகோள்களாக அல்ல. ஆகவே அவற்றைக் கற்பனை வழியாக வளர்த்தெடுத்து, புதிய வினாக்களை எழுப்புவது சராசரி இந்தியர்களுக்கு இயல்வதாக இல்லை. இங்கே அறிவியல் என்றாலே நவீனத் தொழில்நுட்பம் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அறிவியல் முறையாக நமக்குக் கற்பிக்கப்படவில்லை, அது ஒரு தகவல் கல்வியாகவே கற்பிக்கப்படுகிறது என்கிறீர்கள். எல்லாம் உலகமயமாக்கப்படட அனைவருக்கும் பொதுவாக்கிய இந்தக் காலத்திற்கு பின்பும், அந்த “முறையான அறிவியல் கல்வி” இந்தியர்களான நமக்கு இன்னும் வழங்கப்படாததற்கான தடையாக எதைக் கருதுக்கிறீர்கள்? இதே நிலைதான் எல்லா ஆசிய நாடுகளுக்குமா? இது ஒரு கற்பித்தல் போதாமை மட்டுமா இல்லை நமது கிழக்கத்தியச் சிந்தனை முறை என்ற நமது மரபுக்கும் பங்கு இருக்கிறதா? Prof. Prasanta Mahalanobis போன்ற ஐரோப்பிய வழிபாட்டு மனநிலை கொண்டவர்கள் உருவாக்கியதுதான் இந்தியக் கல்விக் கொள்கை என்ற போதும் இந்த நிலையை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

நமது கல்விமுறை அறிதலின் அடிப்படையில் அமையவில்லை. போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளது. அறிவியலைப் புரிந்துகொண்ட மாணவனைவிட அதை ஒப்பிக்கும் மாணவன் மேலே செல்ல முடியும். ஐஐடியிலேயே அந்த ஒப்பிக்கும் இயந்திரத்திற்குத்தான் இடம் கிடைக்கும். இங்கே பிரிட்டிஷார் உருவாக்கியது மனப்பாடக் கல்வி. அது அன்றைய ஜிம்னேஷியம் என்னும் கல்விக்கூட முறையிலிருந்து உருவாகி வந்தது. நாம் ஒரு நூற்றாண்டுகாலம் அதில் பழகிவிட்டோம்.

நமக்கு மக்கள்தொகை மிகுதி. இங்கே எல்லாமே கடுமையான போட்டியின் விளைவாகவே பெறப்படுகின்றன. ஆகவே வேறு வழியும் இல்லை. அறிவியலைக் கொள்கைகளாக, கருதுகோள்களாகப் புரிந்துகொள்வதற்கான மனநிலை ஆரம்பப் பள்ளி முதலே உருவாக்கப்பட வேண்டும். விவாதித்து அறிவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதற்கு நேர் எதிரானது மனப்பாடக் கல்வி. புரிந்துகொண்டு சொந்தமாகச் சொல்லும் திறன் கொண்ட குழந்தைக்குத்தான் அறிவியல்பிடி கிடைக்கிறது என்று பொருள். அந்தக் குழந்தைக்கு வாய்ப்புகள் கிடைக்கும்படி நம் கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிகள் சென்ற கால்நூற்றாண்டாக நடக்கின்றன. ஆனால் மிகப்பெரிய தேசம். பொருளியல் நெருக்கடி வேறு. ஆகவே வண்டி மிக மிக மெல்லத்தான் திரும்பிக்கொண்டிருக்கிறது.

இந்த நேரடி மொழிபெயர்ப்பு, அதாவது ஆங்கிலத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே (மெய்புல அறைகூவலர்) தமிழின் ஒலியழகும், குறியீட்டுத்தன்மையும் இல்லாத இந்த மொழிபெயர்ப்பு மாதிரிதான் இந்திய மொழிப் பாடத்திட்டங்களில் எல்லாம் நடக்கிறதா? இதை நம் தமிழுக்கான பிரச்சனை என்று இல்லாமல் இந்திய மொழிகள் அனைத்துக்குமான பிரச்சனை என்று கொள்ள முடியுமா?

தமிழில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் தொடக்கத்தில் தமிழறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆகவே அது படைப்பூக்கம் கொண்டதாக இருந்தது. நாம் இன்று அறிவியலைத் தமிழில் சிந்திப்பதற்கு அவர்களே காரணம். ஒளிச்சேர்க்கை (photosynthesis) எவ்வளவு அரிய கலைச்சொல். சூழியல் சார்ந்து தியொடோர் பாஸ்கரன் (Theodore Baskaran) உருவாக்கும் கலைச்சொற்களும் மிகச் சிறப்பானவை.

அரசுத்துறைகள் சார்ந்து இயந்திரத்தனமான கலைச் சொல்லாக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவற்றை நாம் தவிர்த்துவிடலாம். அவ்வாறு தவிர்ப்பதற்கான நுண்ணுணர்வு நமக்குத் தேவை. செவிக்கு உகக்காத கலைச்சொற்கள் வழக்கொழிவது இயல்பானது.

நாம் எழுதும் அறிவியல் புனைகதைகள் நமது மரபில் இருந்து வந்துள்ள நம் அறிவியல் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் அல்லது அதிலிருந்துதான் வர முடியும் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் நமது அறிவியல் புனைவுகள் மருத்துவம் மற்றும் ஆழ்மனம் இந்த இரண்டு அறிவியல் துறைகளுக்குள் மட்டுமே இயங்க முடியும் என்று சொல்லலாமா? ஏனெனில் இவை இரண்டே நமது சொந்த மரபு சார்ந்த அறிவியல் இல்லையா?

இல்லை நான் அப்படிச் சொல்லவில்லை. நாமும் ஐரோப்பியர்களைப்போல, அமெரிக்கர்களைப்போல அனைத்தைப் பற்றியும் எழுதலாம். அறிவியலின் எல்லா இடங்களும் நமக்கும் உரியனவே. அறிவியலில் தேச – இன அடையாளம் இல்லை. அது மானுடம் தழுவியது.

ஆனால் நாம் அந்தத் துறைகளில் அவர்கள் எண்ணாத ஒரு கோணத்தில் அவர்கள் எழுதாத கருக்களை எழுதினாலொழிய அது நம்முடையது அல்ல என்றேன். இங்கே எழுதுபவர்கள் அவர்கள் எழுதியதன் நகல்களைத்தானே எழுதுகிறார்கள். அவ்வாறு பின்னால் செல்வது பெரிய குறை என்கிறேன்.

நமக்கான கருக்கள் அறிவியலில் பல உள்ளன. அவற்றைக் கருத்தில்கொண்டால் நாம் நமக்கான அறிவியலை மட்டுமல்ல அறிவியல் புனைகதைகளையும் உருவாக்கலாமே என்றேன். மேலும் நம்மைச் சூழ்ந்துள்ள பல பண்பாட்டு வினாக்களை நமது மரபின் அறிவியலில் இருந்து எடுக்கும் படிமங்களைக்கொண்டு மேலும் கூர்மையாகப் பேச முடியும் அல்லவா என்றேன். ஏனென்றால் அவை இரண்டும் ஒரே நிலம்கொண்டவை. அவ்வளவுதான் நான் சொன்னது.

அறி-புனைவு நாவல்கள், சிறுகதைகள் என்பதுபோல் அறிபுனைவு கவிதைகளாகவும் விரிவுகொள்ள இயலுமா? எது ஒரு கவிதையை அறி-புனைவு கவிதையாக்கும்?

அறிவியல் புனைவு சிறுகதை ஆகும் என்றால் கவிதையும் ஆகும். ஆனால் கவிதையில் புனைவின் அம்சம் மிகக்குறைவு. ஆகவே புனைவாக அறிவியலை எழுத கவிதைக்குள் பெரிய இடம் இல்லை.

ஆனால் அறிவியலில் இருந்து படிமங்களை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, பை என்பது [π] ஒரு குறியீடு. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை வட்டங்களையும் அடையாளமாகச் சுருக்கலாம் என்பது எவ்வளவு பெரிய படிமம். இங்குள்ள அனைத்தும், வட்டங்களும் கோளங்களும்தானே? இயற்கையின் ஒரே ஜியோமிதி அமைப்பு வட்டம் மட்டும்தானே? எத்தனை பிரமிப்பூட்டுவது அது. அதை ஒரு கவிஞன் கையாளக்கூடுமென்றால் அது கவிதையாகக்கூடும்.

கார்ல் சகன் (Carl Sagan) அவருடைய காண்டாக்ட் (Contact) நாவலில் பை என்பது பிரபஞ்சத்தில் அதற்கு மையநெறி என நின்றிருக்கும் சிலவற்றின் கையொப்பம் என்றே சொல்கிறார்.

அறிவியல் வளர்ச்சி வருங்காலத்தில் இலக்கியத்தில் என்ன விதமான மாற்றங்களை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? அறிவியல் என்ன விதமான மாற்றங்களை இலக்கியத்திற்குப் பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? விசும்பு தொகுப்பில் இலக்கியம் எதிர்காலத்தில் எப்படி உருமாறும் என்பதாக ஒரு கதை வரும். அது உண்மையில் சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்களா?

வருங்காலவியல் சார்ந்து புனைவுகளை மதிப்பிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வருங்காலத்தைச் சொல்வதனால் ஒரு அறிவியல்புனைவு முக்கியமோ முக்கியமல்லாததோ ஆவதில்லை. எதிர்காலக் கணிப்பு உண்மையில் அறிவியலின் இடம் அல்ல. இன்று அது புள்ளிவிவரவியல் சார்ந்த ஒரு பயிற்சியாகவே கருதப்படுகிறது. இன்றுள்ள தரவுகளைக்கொண்டு நாளையைக் கணிப்பது அது.

அப்படியென்றால் வருங்காலவியலை ஏன் அறிவியல் புனைகதை கையாள்கிறது? அறிவியல் இன்று கொண்டிருக்கும் ஒரு கொள்கையை அறிவியல் புனைவு கொஞ்சம் கற்பனையால் நீட்டி, மேம்படுத்திக்கொள்கிறது. அப்போதுதான் அது குறியீடாக ஆகும். உதாரணமாக இன்று செல்பேசி உள்ளது. தலையுடன் ஒட்டி வைத்துக்கொண்டாலே எண்ணங்களை அதன் மூலம் அனுப்ப முடியுமென்றால் எப்படி இருக்கும் என ஓர் அறிவியல் புனைகதையாளர் கற்பனை செய்யலாம். அப்படியென்றால் கதை எதிர்காலத்தில் மட்டும்தானே நிகழ முடியும்? அறிவியல் புனைகதையில் வருங்காலவியலுக்கு அவ்வளவுதான் இடம். வருங்காலத்தை அது ஒரு வசதியான புனைவுவெளியாகவே கருதுகிறது.

ஏன்? எல்லா இலக்கியப்பிரதிகளும் இன்றை, இப்போதுள்ள வாழ்க்கையைத்தான் பேசுகின்றன. இதைப் பேசவே அவை அறிவியலில் கருவிகளைத் தேடுகின்றன. ஆகவே அவை எதிர்காலத்தை ஊகிப்பதைத் தங்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் கேள்விகள் மிகப் பெரியவை. மானுட வாழ்க்கையின் அர்த்தம், மானுட உள்ளம் செயல்படும் விதம், பிரபஞ்சத்துடன் அதற்குள்ள உறவு ஆகியவையே அதன் சவால்கள். எதிர்காலத்தைச் சொல்வது எல்லாம் அதன் நோக்கில் சிறுகுழந்தை விளையாட்டு.

அறிபுனைவுக்கு சீக்கிரம் காலாவதி ஆகிவிடும் அபாயம் உண்டு இல்லையா? அல்லது காலத்தைக் கடந்து நிற்குமா?

அறிவியல் புனைவு தொழில்நுட்பத்தின் விந்தைத்தன்மையை நம்பி இருக்குமென்றால் காலாவதியாகும். ஏனென்றால் எல்லா கண்டுபிடிப்புகளும் விந்தையை இழக்கும். பழையன ஆகும். ஆனால் அறிவியலின் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் படைப்புகள், அவற்றை மானுட வாழ்க்கைக்கும் பிரபஞ்ச இயக்கத்திற்கும் குறியீடுகளாக ஆக்குபவை காலாவதியாவதில்லை.

உதாரணமாக, ஜூல்ஸ் வெர்ன் (Jules Verne) காலாவதியாகிவிட்டார். நிலவுக்குப் போவது எல்லாம் விந்தையை இழந்துவிட்டன. ஆனால் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் Brave New World எழுதப்பட்டு நூறாண்டு ஆகப்போகிறது. இன்றுதான் இன்னும் பொருத்தமான நாவலாக உள்ளது. இன்றுதான் After Ford நிலைமை உலகில் உருவாகியிருக்கிறது. After Ford? Google! என்று சொல்லலாம் இல்லையா?

இனிமேலும் புதிதாகக் கண்டுபிடிக்க அறிவியல் அடிப்படைகள் எவையும் மீதமில்லை. இனிவரும் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நாம் அறிந்தவைகளின் மீது படியும் மூன்றாம் நிலைசேகரமாக மட்டுமே இருக்குமே தவிர, இதுவரை நாம் அறிந்தவற்றைத் தலைகீழாக மாற்றும்படியான அடிப்படையான கண்டிபிடிப்புகள் என்று இனிமேலும் ஏதும் இல்லை என்று சிந்தனையாளர்களில் ஒருசாரார் கருதுவது பற்றி உங்கள் கருத்து என்ன? அறிவியல் இன்னும் என்னென்ன பாய்ச்சல்களை நிகழ்த்தும் என்பது பற்றி உங்களின் கணிப்பு என்ன?

அறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.

இது அறிவியல் தரப்பு என்றால் நான் அதனுடன் வாதிட முற்பட மாட்டேன். நான் அறிவியலாளன் அல்ல. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகியவற்றைச் சார்ந்து அக்கருத்து மிக மேம்போக்கானது என்றே சொல்வேன். அறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.

உங்களுடைய வாசிப்பில் அறிவியல் புனைவுகள் இதுவரை முயலாத தலைப்புகள் என்று எவற்றைச் சொல்வீர்கள்? அறிவியல் புனைவின் எல்லை அல்லது போதாமை என்று எதைச் சொல்வீர்கள்?

ஒரு விவாதத்திற்காக இரு நூல்களைச் சுட்டிக்காட்டுவேன். கார்ல் சகனின் காண்டாக்ட் என்னும் நாவல். ரிச்சர்ட் டாக்கின்ஸின் The God Delusion என்னும் நாத்திகப் பிரச்சார நூல். இரண்டுமே மிகப் பெரிய குறைபாடு ஒன்றைக்கொண்டுள்ளன. கீழைமெய்யியல் சார்ந்து அதன் ஆசிரியர்களுக்கு மிக மேம்போக்கான அறிதலே உள்ளது. இவர்கள் சென்றடைந்துள்ள பல கேள்விகளை வேதாந்தமும் பௌத்தமும் பல நூறாண்டுகளுக்கு முன்னரே சென்றடைந்துள்ளன. பலவாறாகப் பேசியிருக்கின்றன. மேலைநாட்டு அறிவியலாளர்களில் சி.ஜி.யுங்க்குக்குப் பின் அந்த அளவுக்கு நுண்ணாற்றலுடன் கீழைமெய்யியலை எவரும் அணுகவில்லை. இன்றைய அறிவியல் எழுத்தாளர்கள் நவீன அறிவியலுக்கும் ஆசிய மதங்களின் அருவமான தத்துவ உருவகங்களுக்கும் இடையே உள்ள ஊடாட்டத்தை மிக விரிவாக எழுத முடியும். மிக மிகப் பெரிய வினாக்களை எழுப்பிக்கொள்ள முடியும்.

Classical அறிவியல் மற்றும் மிகை புனைவுகளுக்கும் இப்பொழுது எழுதப்படக்கூடிய அறிவியல் புனைவுகளுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாதிரியான பரிசோதனை முயற்சிகள் எல்லாம் நடந்துள்ளன?

கிளாசிக்கல் அறிவியல் புனைவுகள் மானுடப் பிரச்சினைகளைப் பேச அறிவியலைக் கையாண்டன. அவற்றையே நான் அறிவியல் புனைகதைகள் என்கிறேன். அன்று ஓரளவு அறிவியல் அறிந்த தேர்ந்த வாசகர்களுக்குரியவையாக அவை இருந்தன.

இன்று அறிவியல் கல்வி மிகுந்துள்ளதனால் அறிவியல் புனைவுக்கு வெகுஜன வரவேற்பு மிகுந்துள்ளது. மதம், மரபுசார்ந்த தொன்மங்கள், புராணங்கள் முதல் உலகத்து மக்களிடையே செல்வாக்கிழந்திருக்கின்றன. அந்த இடத்தை அறிவியல்புனைவுகள் நிரப்புகின்றன. ஆகவே அவை அறிவியலைக் கைவிட்டு அறிவியலைப் பாவனை செய்யும் நவீன புராணங்களாகவே ஆகிவிட்டிருக்கின்றன. அறிவியல் வழியாக வாழ்க்கையை, பிரபஞ்சத்தைப் பேசுவதை விடுத்து நன்மை தீமை போன்ற எளிய கருக்களை அவை பேசுகின்றன. சாதாரணமான சாகசங்களை முன்வைக்கின்றன.

ஆகவே செவ்வியல் அறிவியல் புனைகதைகளுக்கும் இன்றைய வெகுஜன அறிவியல் மிகைபுனைவுகளுக்கும் நடுவே மிகப் பெரிய வேறுபாடு உருவாகிவிட்டிருக்கிறது.

அறிவியல் மற்றும் மிகை புனைவுகளின் பாப்புலர் தன்மையைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உண்மையில் இது குழந்தைகளின் அறிவியல் புரிந்துணர்வுக்கு உதவுகிறது என்று நினைக்கிறீர்களா?

அறிவியல் கதைகளிருந்து மிகைபுனைவை தவிர்க்கமுடியாது. ஏனென்றால் அறிவியலே நடப்பு சார்ந்தது அல்ல. அறிவியல் என்னும் வரையறுக்கப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தது. அதிலிருந்து ஒரு கருதுகோளை எடுத்து கற்பனை மூலம் விரிவாக்கம் செய்யும்போதே மிகுபுனைவாக ஆகிவிடுகிறது. ஆகவே அறிவியல் புனைவு என்பது மிகுபுனைவின் ஒரு பகுதியே.

ஆனால் அறிவியல் புனைவு வேறு. அறிவியல் மிகுபுனைவு வேறு. நான் ஏற்கனவே சொன்னதுபோல அறிவியல் புனைவுக்கு அறிவியல் சார்ந்த ஊகத்திற்குரிய தர்க்கம் இருக்க வேண்டும். அந்த ஊகம் அறிவியலின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது. அறிவியல் மிகுபுனைவுக்கு அந்த எல்லை கிடையாது. அது எதை வேண்டுமென்றாலும் கற்பனை செய்யலாம். அது ஒருவகை நவீன புராணம்தான். ஒரு நம்பகத்தன்மைக்காக அது அறிவியல் என்று சொல்லிக்கொள்கிறது

குழந்தைகளுக்கு அறிவியலை அறிவியல் புனைகதைகள் அளிக்கும். அறிவியல்மிகைபுனைவுகள் அறிவியலை அளிப்பதில்லை. ஆனால் கற்பனையில் கட்டற்று விரிய குழந்தைகள் விரும்புகின்றன. அவை இயற்கையின் எல்லைகளைக் கடந்துசெல்ல விழைகின்றன. அந்தக் கற்பனையை அறிவியல் மிகைபுனைவுகள் அளிக்கின்றன. அவை ஒருவகைப் புராணங்கள்தான். புராணங்கள் தேவையானவையே.

மெய்யான அறிவியல் கதையைக் குழந்தை படிக்க முடியாது. ஏனென்றால் அது அறிவியல் கருத்தைப் புரிந்துகொள்ளும் அறிவை அடைந்திருக்காது. அறிவியலைக் கொஞ்சம் கற்றுக்கொண்டவர்களுக்குரியது அறிவியல் புனைவு. அறிவியலில் இருந்து அந்த அறிவியல் புனைவு எந்த அளவுக்கு மேலே சென்றுள்ளது என்று அறியும் அளவுக்குத் தெரிந்தவர்களே அறிவியல் புனைவின் வாசகர்கள்.

அறி-புனைவு இன்னும் நிரூபிக்கப்படாத Pseudoscience ஆக இருப்பதைத் தாண்டி Antiscience ஆக செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதையும் புனைவு சுதந்திரமாகக் கொள்ள வேண்டுமா?

அறிவியல்புனைவை அறிவியலின் கோணத்தில் பார்த்தால் அது முதிரா அறிவியலேதான். இயந்திர மனிதவியலில் எழுதிக்குவித்த முன்னோடி ஐசக் அஸிமோவ் (Isaac Asimov). அதிலுள்ள பல கொள்கைகளையே அவர்தான் உருவாக்கினார். பல கலைச்சொற்கள் அவருடையவை. ஆனால் அவருடைய எந்திரமனிதன் ஒரு முதிராக்கற்பனைதான் இன்னமும்.

பை என்பது [π] ஒரு குறியீடு. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை வட்டங்களையும் அடையாளமாகச் சுருக்கலாம் என்பது எவ்வளவு பெரிய படிமம்.

அறிவியல் புனைகதை ஓர் எல்லையில் எதிரறிவியலாகவும் செல்லும். அந்த உரிமை அதற்குண்டு. நான் ஏற்கனவே சொன்னதுபோல அது அறிவியலின் பகுதி அல்ல, இலக்கியத்தின் பகுதி. இலக்கியம் தர்க்கத்தை நிராகரிக்கும் தன்மை கொண்டது. அறிவியல் முழுக்க முழுக்க தர்க்கப்பூர்வமானது. ஆகவே அறிவியல்புனைவு ஏதோ ஓர் எல்லையில் அறிவியலை நிராகரிக்கும். எதிரறிவியலாக ஆகும்.

இந்திய அறிவியல் இனி என்றாவது அதனுடைய தளத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இன்றைய நவீன கருதுகோள்களுக்கு இயைந்ததாக ஆக்கப்படும் என்று நினைக்கிறீர்களா? அது சாத்தியமா? அது சாத்தியம் இல்லை என்பதால்தான் “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை”, “நம்மிடம் இல்லாததென்று எதுவுமே இல்லை” போன்ற இந்தியப் புராண அறிவியல் கண்டுபிடிப்பு சொறிதல்கள் மூலம் சமாதானம் அடைகிறோமா?

இந்திய அறிவியல் கல்விக்கு பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் இந்த ஐந்தாண்டுகளும் சோதனை மிக்கது என்றே நினைக்கிறேன். மனப்பாடக்கல்வியை விட்டு மேலெழுவதற்கான முயற்சி தொடங்கப்பட்டு மிகச்சிறிய விளைவுகளும் தெரிய ஆரம்பித்தபோது இன்றைய ஆட்சி வந்தது. அறிவியலில் எந்த நம்பிக்கையும் அற்றவர்கள் இவர்கள்.

இந்தியக் கல்விமுறையில் ஏற்கனவே ஒரு போதாமை இருந்தது. இந்தியக் கல்விமுறை ஐரோப்பிய அறிவுத்தொகை மேல் பெருமயக்கம் கொண்ட, அதையே மானுட அறிவுத்தொகை என நம்பிய, ஒரு சிறு அறிஞர் குழுவால் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்திய மாணவன் சாக்ரடீசைக் கற்பான். கபிலனையோ சங்கரனையோ கேள்வியே பட்டிருக்கமாட்டான். ஸ்கெப்டிஸிசம் தெரியும். க்ஷணபங்கவாதம் தெரியாது. இந்திய மரபின் மெய்யியல், தத்துவம், அறிவியல் மூன்றுமே இங்கே முற்றாக ஒதுக்கப்பட்டன.

இதை இங்கே அறிஞர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த இந்துத்துவத் தரப்புக்கும் அந்த விடுபட்ட தரப்பின்மேல் அக்கறையும் இல்லை, அறிதலும் இல்லை. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும்தான் மரபு என நினைக்கிறார்கள். அவற்றைக் கொண்டுவந்து கல்விமேல் திணிக்கிறார்கள். ஏற்கனவே இருந்தது ஊட்டச்சத்துக் குறைபாடு. இது நோய்.

அறிவியல் புனைக்கதைகள் நவீன கால விழுமியங்களைக் கட்டமைப்பதற்கான ஒரு வழியாகக் கொள்ளலாமா? நமது அறங்களை இவை மீள்வரையறை செய்யுமா?

அறங்கள் மானுட வாழ்க்கை இங்கே நிலைக்கொள்வதற்காக கண்டடையப்பட்டவை, உருவாக்கப்பட்டவை. அவை வாழ்க்கையின் நூற்றுக்கணக்கான தளங்களில் பல கோணங்களில் பரிசீலனைக்கு உள்ளாகின்றன. அறங்களே நடைமுறைக்களத்தில் ஒழுக்கநெறிகளாகின்றன. நீதிகள் ஆகின்றன. சட்டங்களாக வரையறை செய்யப்படுகின்றன.

இலக்கியம் பேசுவது அறத்தின் அந்த உருமாற்றங்களைப் பற்றித்தான். அறிவியல் அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தளங்களில் அறம் கொள்ளும் உருமாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது.

உதாரணமாக ஒரு கதைக்கரு. பெரும்பாலான விலங்குகள் பிரசவத்திற்குப்பின் தங்கள் கொடியை, கருப்பையைத் தின்றுவிடுகின்றன. அந்த உயர்தர புரோட்டீன் அவற்றுக்கு மிகச் சிறந்த உணவு. அவற்றில் அவற்றுக்குரிய நோய் எதிர்ப்புசக்தியும் உண்டு. அக்குழவிக்கு மிக நல்லது. அதை மனிதர்களும் உண்டிருக்கலாம். இப்போது உண்பதில்லை. ஏனென்றால் அது தன்னைத்தானே தின்பதுபோல. குழந்தையைத் தின்பதுபோல.

பிரசவம் ஆனதுமே கொடியை உருமாற்றி ஜெல்லிபுரோட்டீன் ஆக அன்னைக்கு ஊட்டும் ஒரு மருத்துவமுறை வருகிறது என்று கொள்வோம். எவ்வளவு பெரிய அறச்சிக்கல் அது. அதை எப்படி மானுடம் கடந்துபோகும்? அந்தக் குழந்தைக்கும் அன்னைக்குமான உறவே மாறிவிடும் அல்லவா? அதை அறிவியல் புனைகதை எழுதிக்காட்ட முடியும். அவ்வாறுதான் அறிவியல் புனைகதை அறவியலை எதிர்கொள்கிறது.

தொன்மத்திற்கும் அறிவியல் புனைவிற்குமான உறவு என்ன?

தொன்மம் என்பது ஒரு சமூகக் கருத்து படிமமாக சமூகப் பொதுவில் புழங்குவது, வழிவழியாக அச்சமூகத்தில் நீடிப்பது. நம்பிக்கையாக, சடங்குகளாக நீடிப்பது. சமூகமே பலவகையான தொன்மங்களால்தான் பண்பாட்டுரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக மனிதனின் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாமே குருதியில் உள்ளன என்பது ஒரு தொன்மம். ஆகவேதான் தெய்வங்களுக்குக் குருதிபலி கொடுக்கிறோம்.

இலக்கியம் தொன்மங்களை எடுத்து மீண்டும் படிமங்களாக மாற்றிக் கையாள்கிறது. அதாவது தொன்மங்களுக்கு மேலும் அர்த்தங்களை அளிக்கிறது அது. அதேபோல அது அறிவியல் கருதுகோள்களையும் எடுத்துப் படிமங்களாக ஆக்கிப் பயன்படுத்துகிறது.

Henrietta Lacks ன் ரத்ததில் உள்ள புற்றுநோய் செல்கள் மிகமிக விரைவாக பரவக்கூடியவை என நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த ரத்தத்தை ஒருவன் பெருக்கி மானுட இனத்துக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறான் என ஒரு கதை உருவாக்குவோம். இறந்தாலும் ஹென்ரிட்டா உலகமெங்கும் பரவுகிறார். அவர் ஓர் அச்சமூட்டும் தெய்வம்போல ஆகிவிடுகிறார். அவருடைய அந்த ரத்தம் ஒரு நவீனத்தொன்மம் ஆக மாறிவிடுகிறது அல்லவா?

இதை அறிவியல் தொன்மம் என்று சொல்லலாம். அறிவியல் புனைகதை அறிவியல் தொன்மங்களை உருவாக்குகிறது. அதன் வழியாக அது சிலவற்றைக் குறியீட்டுரீதியாகப் பேசுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் மனித இனம் என்ற உயிரினத்தின் இருப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய உங்களின் எண்ணம் என்ன?

நாம் மனிதர்கள் என்பதனால் மனித இனத்தின் உயிரினத்தின் இருப்பு நமக்கு முக்கியமாகிறது என்று மட்டுமே சொல்ல முடியும். மற்றபடி கோடானுகோடி உயிர்களால் ஆன இப்புவியின் மாபெரும் கட்டமைப்பில் நமக்கென என்ன இடம் என்பதை நம் அறிவைக்கொண்டு நம்மால் வகுத்துவிட முடியாது.


நன்றி – வே.நி.சூர்யா

2 thoughts on “நேர்காணல்: எழுத்தாளர் ஜெயமோகன்”

  1. //Henrietta Lacks ன் ரத்ததில் உள்ள புற்றுநோய் செல்கள் மிகமிக விரைவாக பரவக்கூடியவை என நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த ரத்தத்தை ஒருவன் பெருக்கி மானுட இனத்துக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறான் என ஒரு கதை உருவாக்குவோம்.// terrible line. waiting to read this story.

  2. kovid 19 ஒரு கதைக்கரு இதை நவீனத்தொன்மம்ஆக கருதலாம்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்