ஒரு கனவு

< 1 நிமிட வாசிப்பு

நிறைந்து விட்ட
மூத்திரப் பையுடன்
அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி
வந்தடைகிறேன் நிலம் கீறி
அடர்ந்து நிற்கும்
விதையிலைகள் நிறைந்த வயல்வெளி
என்றைக்கு நினைவு மனதில்
விழுந்து புதைந்த விதைகளோ
இவையெல்லம் என்றெண்ணியபடி
ஒன்றுக்கிருக்க முயற்சிக்கிறேன்
யாரோ வேகமாய் வந்து
கனவுக்கே தர்க்கம் போலும்
சத்தமிட்டுக் கல்லெறிந்து விரட்டுகிறான்
ஒன்றுக்கிருப்பதை நிறுத்தவும் முடியாமல்
ஓடவும் முடியாமல் தவிக்கையில்
அருகேயே நெருங்கி விட்டான்
தப்பி ஓடுகிறேன்
அத்தனை வன்மத்தோடு கனவுக்குள்
விரட்டுமவன் தொடும் முன்
முழிப்பு வந்தது

விரட்டியவன் மூளைக்குள்ளிருக்கிறானா
விழித்து நிஜத்தில் காலியாகும்
மூத்திரப் பைக்குள்ளிருந்து
நீராகி வெளியேறுகிறானா

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்