ஒரு பெருந்திறப்பு

4 நிமிட வாசிப்பு

அறிவியல் சிறுகதைகளுக்கான போட்டிக்கு 66 கதைகள் வரும் என எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் ‘எதைவேண்டுமென்றாலும் எழுதியனுப்பு’ வகை போட்டி அல்ல. இவ்வகையான போட்டிகளுக்குப் பெரும்பாலும் முதிரா முதல்முயற்சிகளே வந்துகுவியும். முதல்கட்ட கதைகளை மிக எளிதாகப் பிரித்துவிடலாம். நான் வாசிக்க நேர்ந்த இறுதிப் பத்து கதைகளுமே தமிழில் இன்று எழுதப்படும் பொதுவான கதைகளிலிருந்து மிக உயரத்தில் நிற்பவை, தமிழின் அறிவியல்புனைகதை உலகுக்கு முற்றிலும் புதிய அருநிகழ்வுகள் என உறுதியாகச் சொல்வேன். சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம், அதை அடையாளம் காட்டும் வாய்ப்பு எனக்கும் நண்பர்களுக்கும் வாய்த்தது என்னும் பெருமிதம்.

இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் மீளமீளக் காமத்தையே பேசுபொருளாகக் கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். ஏனென்றால் எழுதுபவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கைப்புலம் உள்ளது. ஆகவே புறவுலக அனுபவம் குறைவு. வீடு, கல்விநிலையம் என வாழ்ந்தவர்கள். குறுங்குடும்பங்கள் உருவானபின் விரிவான உறவுச்சிக்கல்களை அவர்கள் காண வழியில்லை. ஆகவே விதவிதமான வாழ்க்கைச்சிக்கல்கள் மற்றும் கதைமாந்தர்களை அவர்கள் இளமையில் சந்திக்கவில்லை. விளைவாக ஆழமான வினாக்களை எழுப்பிக்கொள்ளவில்லை. அத்துடன் இன்று எழுதுபவர்களில் அனேகமாக அனைவருமே நடுத்தரவர்க்கத்தில் பிறந்தவர்கள். பொருளியல் இடர்பாடுகள் இல்லாத, போராட்டமில்லாத இளமைப்பருவம் கொண்டவர்கள். இறப்பு, துயர், அலைக்கழிதல் எதையும் அறிந்தவர்களல்ல. அவர்கள் அறியும் முதல் அலைக்கழிவும் கொந்தளிப்பும் காமமே. ஆகவே காமம் மையப் பேசுபொருளாகிறது. அது வாசகர்களால் விரும்பப்படுகிறது என்பதனால் ஒரே பேசுபொருளாகிறது. அத்துடன் இன்று காமக்களியாட்ட இணையதளங்களைப் பார்க்காதவர்களும் அரிது. அதுவும் ஆழுள்ளத்தைக் கட்டமைக்கிறது. இளம் எழுத்தாளர்களில் வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஆர்வமும் பயிற்சியும் அரிதாகவே உள்ளது. மரபுக்கலைகள் மதக்குறியீடுகளிலும் தொடர்ச்சி இல்லை. ஆகவே அன்றாடவாழ்க்கையின் தளத்தில் வைத்து அடிப்படை வினாக்களை எழுப்பிக்கொள்ள அவர்களால் இயலவில்லை. அடிப்படை வினாக்களே படைப்புகளை மெய்யான ஆழம்கொண்டவை ஆக்குகின்றன.

இத்தகைய சூழலில் இந்த அறிவியல்கதைகள் அனைத்திலும் உள்ள அழுத்தமான அடிப்படை உசாவல்கள் இனிய திகைப்பை ஊட்டுகின்றன. இந்த அறிவியல்கதைகள் அனைத்துமே அடிப்படையான மானுட இருப்பு, வாழ்வின்பொருள் சார்ந்த தத்துவார்த்தமான வினாக்களை எழுப்பிக்கொள்பவை. இந்த வட்டத்திற்கு வெளியே எழுதப்படும் அன்றாட வாழ்வுத்தளம் சார்ந்த காமப்பிரச்சினைக் கதைகளை மிக எளிமையானவையாக ஆக்கிக் கீழே கொண்டுசெல்கின்றன. இனிமேல் இந்தத்தளத்தில் மட்டும் ஆழமான கதைகளை எதிர்பார்க்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அவ்வாறு நிகழாது, என்றும் நேரடி அனுபவ வாழ்க்கை அதற்கான வீச்சுடன் வெளிப்படவே செய்யும் என்ற எண்ணம் பின்னர் எழுந்தது. இயல்பான அனுபவத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பிற படைப்பாளிகளுக்கு அவர்கள் எழுதிக்கொண்டிருப்பதன் எல்லை, அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய அறைகூவல் என்ன என்று இவை காட்டுமென நினைக்கிறேன். அதற்கு இந்த அறிவியல்புனைவுப் படைப்பாளிகள் தொடர்ச்சியாக வீச்சுடன் எழுதவேண்டுமென விரும்புகிறேன்.

இவ்வாறு சிறந்த கதைகளின் ஒரு வரிசை பரிசீலனைக்கு வரும்போது அளவுகோல்களும் குறுகலாகின்றன. ஒரு கதை சில சிறப்புத் தகுதிகளுக்காக சற்றே மேலே என எடுக்கப்படுகிறது. அந்த அளவுகோல்களை முன்வைப்பது இதை எழுதியவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உதவக்கூடும் என்பதோடு இக்கதைகளைப் பற்றிய விவாதத்திற்கான தொடக்கமாகவும் அமையக்கூடும்.

இக்கதைகள் அனைத்துக்கும் பொதுவானதாக இருந்தது இவற்றிலுள்ள எதிர்காலக் கற்பனை. அது அறிவியல்கற்பனையில் தவிர்க்க முடியாதது. அந்த எதிர்காலக் கற்பனையில் எதிர்பாராததாக, நம் வாழ்க்கையின் தத்துவார்த்தமான அடிப்படைகளை உலுக்கக் கூடியதாக எவை உள்ளன என்பதை ஓர் அளவுகோலாகக் கொண்டோம். விந்தையான, வெவ்வேறு கற்பனைகளைத் தூண்டக்கூடிய எதிர்காலக் கற்பனைகள்தான் இவை அனைத்துமே. மிகச்சிறிய வேறுபாடுதான் அவற்றின் தத்துவமதிப்பு என்ன என்பது. அவ்வகையில் கதைகளுக்கு மதிப்பெண் இடப்பட்டது. மின்எச்சம், கொதார்தின் குறிப்பேடு, பல்கலனும் நாம் அணிவோம் ஆகியவை அவ்வகையில் முதன்மையானவை

இரண்டாவதாக, கதை பேசும் கருவின் தத்துவ/தரிசன மதிப்பு கருத்தில்கொள்ளப்பட்டது. அதாவது அந்தத் தத்துவக்கேள்வி நாம் இன்று எதை நம்பி வாழ்கிறோமோ அதை எவ்வகையிலாவது புதியதாக விளக்குகிறதா என. பல்கலனும் நாம் அணிவோம், மின்எச்சம், யாமத்தும் நானே, ம் ஆகிய கதைகள் அவ்வகையில் முக்கியமானவை. அவை இறப்பு, இருப்பு ஆகியவற்றின் மெய்யான பொருள் என்ன என்னும் வினாவை எழுப்பி அறிவியல்வழியாக விடைதேடிச்செல்கின்றன. ம் என்னும் கதை கதைத்தன்மை குறைவானதென்றாலும் இந்திய மெய்மரபின் நாதபிந்துகலை என்னும் புடவிஉருவாக்கக் கொள்கையிலிருந்து எழுந்து மேலே செல்லும் ஓர் அரிய படைப்பு.

மூன்றாவதாக, கதையின் கதைத்தன்மை கருத்தில்கொள்ளப்பட்டது. இதுவே உண்மையில் இக்கதைகளுக்கு நடுவே ஓரளவேனும் தெளிவான வேறுபாட்டை உருவாக்கிக் காட்டியது. அடிப்படை வினாக்களை அறிவியல்சார்ந்து முன்வைக்கையிலேயே அவை எந்த அளவுக்குக் கதையோட்டம் கொண்டவையாக இருக்கின்றன, எந்த அளவுக்கு மெய்யான உணர்ச்சிகரம் கொண்டிருக்கின்றன என்பது முக்கியமானது. எத்தனை மேலெழுந்து சென்றாலும் இலக்கியம் மனிதகதை. மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அந்தக்கூறு தவிர்க்கப்பட முடியாதது. கதையின் ‘அந்தரங்கத்தன்மை’ ஒரு கதையை வாசகனுக்கு அருகே கொண்டுவருகிறது பல்கலனும் நாம் அணிவோம், யாமத்தும் நானே ஆகிய கதைகள் முன்னெழுந்து வந்தன. அறிவியல்கதைகளுக்குரிய வழக்கமான கதைவடிவமான வெவ்வேறுகோணங்களில் ஒரு நிகழ்வைச் சொல்லுதல், குறிப்பேடுகள், ஆய்வேடுகள் ஆகியவை சற்றே குறைவான உத்திகளாகக் கருதப்பட்டன.

நான்காவதாக, கதையின் சமூக விமர்சனத்தன்மை, கண்டறிதல்தன்மை ஓர் அளவுகோலாகக் கொள்ளப்பட்டபோது கடவுளும் கேண்டியும், மூக்குத்துறவு, அவன், நிறமாலைமானி ஆகிய கதைகள் முன்னெழுந்து வந்தன. கதைகள் தீவிரமான உளநிலையில் நிகழும்போதுகூட ஒரு வகையான கதைசொல்லித்தனம் அவற்றை வாசகனுக்கு அணுக்கமாக ஆக்கவேண்டும். அவை இன்றைய வாழ்க்கைமீதான விமர்சனமாக அமையவேண்டும். உறவின் நிறமாலையைச் சுட்டும் நிறமாலைமானி ஓர் அழகிய படிமம். மூக்குத்துறவு அறிவியலின் கூரறிவுத்தன்மை எப்போதுமே அதிகாரத்துடன் இணைவதைச் சுட்டும் ஒரு படைப்பு.

ஐந்தாவதாக அவற்றின் தமிழ்த்தன்மை. இக்கதைகளில் பெரும்பாலானவற்றுக்கு இருக்கும் தமிழ்ச்செவ்விலக்கிய ஊடாட்டம் வியப்புக்குரியது. இவற்றில் கடவுளும் கேண்டியும் ஆர்வமூட்டும் ஓர் ஊடுபிரதித்தன்மை கொண்டுள்ளது. எளிதாக ஒரு பகடியாக நின்றுவிடக்கூடியது இக்கதை. ஆனால் இறுதியில் முதன்மைக் கதையிலுள்ள படைப்புக்கொள்கையை அறிவியலால் கடந்துசென்று பிறிதொன்றில் முட்டிநின்றுவிடும் அதன் தீவிரத்தால் அடுத்தகட்டக் கதையாக ஆகிவிடுகிறது.

மிக அரிதாகவே இது நிகழ்கிறது. இக்கதைகளில் சிலவற்றுக்கு அறுதியாகப் பரிசு முடிவுசெய்துவிட்டு எஞ்சிய கதைகளை எண்ணி ஏக்கம் கொள்வது. அவை அனைத்துக்குமே எவராவது பரிசளித்தால் மகிழ்வேன். இக்கதைகள் உருவாக்கும் புத்தம்புதிய திறப்பு தொடரவேண்டும். இப்படைப்பாளிகள் தங்கள் வெளியைத் தமிழில் நிறுவவேண்டும். வாழ்த்துகள்.

1 thought on “ஒரு பெருந்திறப்பு”

  1. அருமையான விமர்சனப் பார்வை. இனி போட்டிகளுக்கு நீதிபதியாக பொறுப்பை ஏற்பவர்கள் வாசித்தே ஆக வேண்டிய நடுநிலை பார்வை. சபாஷ்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்