பல்கலனும் யாம் அணிவோம்

17 நிமிட வாசிப்பு

அக்கா, அக்கா?

ம்..சொல்லு

புது வருடத்தீர்மானம் ஏதாவது எடுத்திருக்கியா?

ஆமாம்

என்னது?

என் கண்மணியை விட்டுப்பிரியமாட்டேன்னு!

*

என் இமைக்குள் கண் உருள்வதை உணர்ந்தபோது தூங்கி எழுந்ததை அறிந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் கண்ணுக்குள் செலுத்திய சிறிய நுண்ணிகள் பாப்பாவை விரியச்செய்திருந்தன. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் கண்ணைத் திறந்துவிடலாம் எனச் சொல்லியிருந்த டாக்டர் ரே இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பச் சொல்லிவிடுவார். இதுக்குச் சந்தோஷப்படுவதா எனத் தெரியவில்லை. வீட்டில் விநாஸ் காத்துக்கொண்டிருப்பான் எனும் நினைப்பே பொங்கி எழச்செய்தது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் என்னை மீறி வழிந்தது. தானாகக் கண்ணைத் துடைக்கச் சென்ற கையை ஆல்ஃபா பிடித்திழுத்துக் கண்ணிலிருந்து நீரை இழுத்துக்கொண்டது. மிகக்கச்சிதமான இழுவை. கண் சிமிட்டுவது போல வேகமாக நீர் காய்ந்துவிட்டது. நான் எழுந்து ஓட முற்படும் எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். விநாஸை நினைத்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“அவளைப் பாருங்கள். முகத்தில் தசை துடிக்கிறது”, அம்மா என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள். கண்ணீர் கரைந்து சென்ற தடம் அவளது கன்னத்தைப் பளபளப்பாகக் காட்டியது.

“சரோ..”, அம்மாவைச் சமாதானப்படுத்திய அப்பாவின் மிருதுவான குரலைக் கேட்டபின்னும் எழ இயலாத என் மீது மிகுந்த ஆத்திரம் வந்தது.

என் கண்கள் இதுவரை மனிதர்கள் கண்டிராத வண்ணங்களையும் பரிமாணங்களையும் காட்டும். இதுவரை மனிதர்கள் கண்டது வெறும் பொம்மலாட்டப் படங்கள் மட்டுமே. முப்பரிமாணங்கள். மரத்தைக் காணும்போது பச்சையின் பல ஆழங்களையும் மரப்பட்டைகளின் ரேகைக்கோடுகளையும் பப்பாளிப்பழம் போல என்னால் துல்லியமாக உணர முடியும். இவையனைத்தும் டாக்டர் ரே என்னிடம் சொன்னவை.

“டாக்டர், வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடியுமா?”, அப்போது அறைக்குள் நுழைந்த டாக்டர் ரேயிடம் அம்மா கேட்டாள்.

கண்கள் மெல்லத் துடிப்பை அதிகரிக்க முயன்றபோது நான் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் எழுந்ததை அவர்கள் அறியக்கூடாது. உடனடியாக அந்த எண்ணம் எத்தனை முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தேன். ஆயிரமாயிரம் மைல்கள் கடந்து, கிட்டத்தட்ட காலத்தை முன்னோக்கிக் காணும் கண்களை அடைந்திருக்கும் இயந்திரமான ஆல்ஃபாவுக்கு நான் எழுவதற்கு முன்னரே என்னை எழச்செய்யும் மின் தகவல் போய்ச்சேர்ந்திருக்கும்.

முன் ஒரு நாள் அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.

“இன்னும் சில நாட்கள் இவள் இங்கே இருக்க வேண்டும். ஜனனிக்கும் எங்களுக்கும் தேவையான சில பரிவர்த்தனைகள் செய்ய வேண்டியுள்ளது”, என்றார்.

ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தபோதும் என் முகத்தில் சந்தோஷம் பரவியது. விட்டால் கட்டிலிலிருந்து குதித்துப் பத்து முறை மருத்துவமனையைச் சுற்றி குட்டிக்கரணம் அடித்திருப்பேன்.

“உங்க மகளுக்கு..மன்னிக்கவும் மகனின் தகவல் இணைப்புகள் எங்க வோர்டக்ஸோடு சேரவில்லை. வோர்டெக்ஸ் தயாராக உள்ளது. முதல் முறை அதனுடன் இணையும் கான்சியஸ்னஸ் முழுமையாகச் சேர்ந்த பின்னரே தகவல் பரிமாற்றத்தைத் தொடங்க முடியும். இன்னும் ரெண்டு நாட்கள் ஆகும் என நினைக்கிறேன்”, ரே யோசித்துப் பேசுவது போல ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாகப் பேசினார்.

“இங்குக் கொண்டுவருவதற்கு முன்னர் இணைப்பைச் சரி பார்த்திருக்க முடியாதா?”, அம்மாவின் குரல் கோபத்தைக் காட்டியது.

“பொதுவாக வீட்டிலிருக்கும்போதே சோர்ஸின் மூளையிலிருக்கும் தகவல்களை வோர்டெக்ஸ் பகுக்கத் தொடங்கிவிடும்”, மன்னிப்பு கேட்கும் தொனியில் ரே பேசினார். “இப்போதெல்லாம் ஆல்ஃபாக்கள் மனிதர்களுடன் ஜோடியாக வேலை செய்கின்றன. அதனால் தாமதம் இருக்கலாம்”.

தூரத்திலிருந்து சிம்பன்சிகளின் சிரிப்பொலி பலமாகக் கேட்டது. என் இடது கண் துடித்தது.

டாக்டர் ரே ஆல்ஃபா தகவல் மையத்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். எல்லா நிகழ்வுகளையும் போல ஆல்ஃபாக்கள் தாமதமாகவே தீவுக்கு வந்து சேர்ந்திருந்தன. இயந்திரங்களுக்கென நகரங்கள் உருவான பின்னர், தேவை ஏற்பட்டாலொழிய மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அவை வருவதில்லை.

கடல்கொண்ட நிலம் வரித்துச்சென்றதை கிழக்காசியத் தீவுகளில் கொட்டித்தீர்த்தபின் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த மற்றொரு பெரிய கடற்கோள் இந்நிலத்தைத் தாய் நிலத்திலிருந்து பிரித்திருந்தது. பருவப்பெண்ணின் முகக்கொப்புளம் போல இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மேலெழுந்தது இந்தப் புது மதுரை எனும் தீவு. அசுர உணவுக்குப் பின் இயற்கை கை உதறிய பல மண்மேடுகள் ஆழங்களிலிருந்து மேலெழுந்து புதுத் தீவுக்கொத்துக்களாக உருவாயிருந்தன. அத்துடன் ஆழத்திலிருந்து வந்த புது உயிரினங்களும். இங்கிலாந்தின் டார்வின் ஆராய்ச்சி மையத்திலிருந்து வந்த ஆய்வாளர்களுடன் ஆல்ஃபா இயந்திரங்களின் புது உலக நிறுவனமும் இணைந்து இத்தீவுகளில் தோன்றிய புது கனிமங்களையும், ஆழ் கடல் பிராணிகளையும் ஆய்வு செய்தனர்.

விக்டோரியா ஆய்வு மையமும் ஆஸ்திரேலியா அரசும் இணைந்து உருவாக்கிய முதல் ஆல்ஃபாக்கள் கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது இருபத்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பியோர்டோ ரீக்கா திட்டக்குழுவின் மேற்பார்வையில் விளைந்தவை. ஆல்ஃபாக்கள் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை இயந்திரங்கள். அதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான நம்பிக்கை இயந்திரங்கள் (அ) உதவி இயந்திரங்களின் அடுத்த தலைமுறை.

கிட்டத்தட்ட உலகின் அனைத்து அறிவுஜீவிகளும் ஒன்று கூடி எடுத்த இயந்திரப்பிரகடனம் ஐசக் அசிமோவின் மூன்று விதிகளுக்குப் பின்னர் அடுத்த தலைமுறை உயிர் பற்றிய மனிதச் சிந்தனையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

1. மனிதர்கள் உருவாக்கும் இயந்திரங்கள் இப்பிரபஞ்சத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றும் விதிக்குக் கட்டுப்பட்டவை.

2. இயந்திரங்கள் மனிதனின் அடுத்தகட்டம். ஜடப்பொருளான உடலின் எல்லைகளைக் கடப்பதற்காக மட்டுமே மனிதனால் உருவாக்கப்படுபவை. மனிதனுக்கு மாற்றாக அல்ல.

3. இயந்திரமும் மனிதனும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எப்போதும் அவை மற்றொன்றை அழிக்க முடியாது.

டாக்டர் ரே கிளம்பியதும் நான் தூங்கவேண்டும் என்பதற்காக அம்மாவும் அப்பாவும் கிளம்பிவிட்டனர். அம்மா வாசலை அடையும்வரை என் அறை இருந்த திசையைத் திரும்பிப்பார்த்தபடி நடந்திருப்பாள். எனக்காவது அறிவியல் இருக்கிறது, அவளுக்கு உங்க ரெண்டு பேர் மட்டுமே உலகம் என அப்பா அடிக்கடி சொல்லுவார். நானும் அப்பாவைப்போலத்தான் அறிவியலில் மட்டும் ஆர்வம் உள்ளவள் என நினைத்துக்கொண்டிருந்தேன் – தம்பி விநாஸ் வரும்வரை.

விநாஸ். என் தம்பியானாலும் வயது வித்தியாசத்தினால் நான் அவனுக்கு இன்னொரு அம்மா என அம்மா சொல்லுவாள். ஆனால், எனக்கென்னவோ பத்து வயது வித்தியாசம் என்பது ஒரு வயதாகக் குறைந்திருந்தாலும் விநாஸ் என் கண்மணிதான் என நினைப்பேன். அவன் பிறந்த பின்னர் நான் தனியாக இருந்த நினைவே இல்லை. கடந்த ஒரு நாளாக இப்படிச் சிறைக்கூடம் போலிருக்கும் மருத்துவமனையில் கிடப்பதுதான் நான் இந்தப் பத்து வருடத்தில அவனை முதல் முறை பிரிந்திருப்பது.

என்னால் தூக்கத்தில்கூட மூன்று விதிகளையும் சொல்ல முடியும். அப்பாவுடன் அடிக்கடி இதைப்பற்றி விவாதித்திருக்கிறேன்.

“அது எப்படி நம்மைவிட அதிகமாகச் சிந்திக்கும் இயந்திரங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்?”

“நம் நனவிலியைப் பகுத்து ஆராய்வதை நாம்தான் ஆல்ஃபாக்களுக்குக் கற்றுக்கொடுத்தோம். இப்படி யோசித்துப்பார், நம் கண்கள் ஒவ்வொருமுறை சிமிட்டும்போது லட்சக்கணக்கான தகவல்களை உள்வாங்குகின்றன. அவற்றில் ஒரு சதவிகிதம்கூட நாம் பயன்படுத்துவதில்லை. நண்பன் வருகிறானா என ஜன்னலிலிருந்து எட்டிப்பார்க்கிறோம். அவனது உருவத்தோடு வெளி உலகம் முழுவதும் நம் பார்வைக்குக்கிட்டுகிறது. அத்தகவல்களை நாம் உள்வாங்கும்போது ஏற்படும் அனுபவம் பெரும்பான்மையில் வீணான அனுபவமே. சிலருக்கு அவை எங்காவது சென்று அமர்ந்துகொண்டு பிறகு வேறொரு வடிவில் வெளிப்படும். இவற்றை ஏதாவது இயந்திரம் அலசும்போது நமது ஆழ் மனதின் பிரக்ஞை மற்றும் நனவிலி எப்படி அமைந்திருக்கு எனப் புரிந்துகொள்ளும். ஆனால் நமது ஆல்ஃபாக்களால் இன்னும் நம் மனம் இயங்குவதைப் பிரதி செய்ய முடியவில்லை”

அவர் சொல்வதை வேண்டுமென்றே எதிர்ப்பது போல, “மனிதனுக்கே தேவையில்லாத அந்த தகவல்களை இயந்திரம் எடுத்து என்ன செய்யப்போகுது? அதான் வேஸ்டா இருக்கு ஆல்ஃபாக்கள்”, எனச் சீண்டினேன்.

“நாம் தூங்கும்போது மூச்சு, உடம்பின் பாகங்கள், கனவு நிலை எல்லாமே நனவிலி கண்காணிச்சுகிட்டே இருக்கு. சொல்லப்போனா, வெளிப்படையா நமக்கு இருக்கும் உள்ளீட்டுப் பாகங்களைவிட, நம் உடம்புக்கு உள்ளே ஆயிரம் மடங்கு பிரபஞ்சமா சிஸ்டம் விரிஞ்சு கிடக்கு. கிட்டத்தட்ட அண்டமே நம் உள்ளே இயங்கறா மாதிரி. இதை நமது பழைய பாடல்கள் அண்டமும் பிண்டமும் என ஆகப்பெரியதையும் ஆகச்சிறியதான அணுவையும் ஒப்பிட்டுப்பேசியிருக்கு. நம் ஆழ்மனம் செயல்படும் விதம் அது. நமது ஒவ்வொரு அணுக்களும் தகவல்களைச் சேகரிச்சுகிட்டே இருக்கும். சொல்லப்போனா, காந்தம் போலத் தகவல்கள் சேகரிக்கும் கிடங்குதான் நமது உடல். அதனாலதான் மூளை இறந்தபின்னாடிகூடப் பல சமயங்களில் நமது ஒவ்வொரு பாகமும் செழிப்பா செயல்படுது. நம்மால் ஆல்ஃபாக்களுக்கு இந்தத் தன்னுணர்வை முழுமையா கொடுக்க முடியலை”

“துரதிர்ஷ்டம்தான்”

“நம்ம அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். மனிதனும் இயந்திரங்களும் சுமுகமாக உலவும் எதிர்காலத்தை நம் ஆய்வாளர்கள் கனவு கண்டாங்க. ஆனால் நன்மை இயந்திரங்கள் மட்டுமே உருவாக்கணும் என பியோர்ட்டோ ரீக்கோ மாநாட்டில் முடிவெடுத்த பின்னர், பல அரசுகள் ரகசியமாக அவற்றை மீறத்தொடங்கின. எல்லாம் அதிகாரப் போதைதான் காரணம். எத்தனை முயன்றும் அவற்றால் மனிதனின் தன்னுணர்வை உருவாக்க முடியலை. ஆல்ஃபாக்களின் வோர்டெக்ஸ் மையம் போல இதுக்கு முன்னால் இருந்த செண்டேரியன் மையத்தில் மனித மூளை இருந்த புரதச்சத்துக்களையும், அமிலங்களையும் கொண்டு மூளையின் பிரதியைக் கச்சிதமாக உருவாக்கினர். மூளையில் இருக்கும் உடலின் வரைபடம், ரசாயன மின்னணு இயக்கிகள், நீயூரான்கள் எனும் தகவல் பரிமாறும் இணைப்புகள் எனச் செயற்கை மூளை கச்சிதமாகத் தயார். ஆனால் தன்னுணர்வு அதையும் மீறியது. அது இல்லாது மூளை மண் போல உட்கார்ந்திருந்தது. தன்னுணர்வு என்பதே ஒரு வடிவமற்ற வடிவம் என்பதைக் கண்டுபிடித்தனர். நீருக்கும், ஆவிக்கும், பனிக்கும் உள்ளே H2O இருப்பதைப் போல். . பிரக்ஞைபூர்வமான இருப்பு. ஒரே கனிமம் வெவேறு சக்திகள். அதில் ஓர் இருப்புதான் நனவிலி ”

“கச்சிதமான மூளையை அமிலங்கள் கொண்டு செஞ்சுட்டாங்கன்னா வெற்றிதானே”

“அதான் இல்லைன்றனே. சரிவிகிதத்தில் உருவாக்கிய மூளையாலும், நரம்பு மண்டலங்களாலும் தகவல்களைச் சேகரிக்க முடிந்ததே தவிர சரியான முடிவுகளை எடுக்கத் தெரியவில்லை. நானே அந்தக் கலவையைக் கையில் எடுத்துப்பார்த்திருக்கிறேன். வெதுவெதுப்பான கூழ். அப்போதுதான், நமது பிரக்ஞை என்பதே தகவலுக்கும் முடிவுக்கும் இடையே நமது மூளை இணைப்புகள் எடுக்கும் புது வடிவம் என்பதைக் கண்டுகொண்டார்கள். தனித்தனியாக மூளை, நரம்பு என முடிவு எடுக்கும் பகுதிகளை உண்டாக்கினாலும், கூட்டாக அவை இயங்கவில்லை..இதுக்கு மேல் உனக்குப் புரிய வைக்க நீ இன்னும் வளரணும். போய்த்தூங்கு”, எனச் செல்லமாகத் தலையில் குட்டினார்.

நான் விநாஸைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டேன். எட்டு வயதானாலும் இன்னும் சரிவரப் பேச்சு வரவில்லை. தனது தேவையை ஒழுங்காகச் சொல்லத் தெரியாத கண்மணி.

எத்தனை விந்தையான ஆய்வுகள். மூளையின் தனித்தன்மையால் மட்டுமே நாம் தப்பிப்பிழைத்திருக்கிறோம் எனும் நினைப்பே உதறல் தந்தது. ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது. என் உடல் சில்லிட்டது. கால்கள் நடுங்கத்தொடங்கின. தேவையற்ற அச்சம் கொள்கிறோமோ என ஒரு கணமும் அதீத பய உணர்ச்சியும் என்னை அலைக்கழித்தன. எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கும் விநாஸின் உடலை நெருக்கமாக அணைத்தபடி தூங்கிப்போனேன்.

ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.

கனவில் கொழகொழவென்ற தசைக்கட்டி ஒன்று என் மூக்கருகே வந்தது. கெட்டுப்போன தேங்காய்ப்பழத்தின் வாசனை. தற்செயலாக நானும் விநாஸும் அதனுள்ளே விழுந்தோம். ஆழத்தில் தரைதட்டியபின்னே எழுந்து நிற்க முயன்று வழுக்கியபடி இருந்தோம். எனக்கு வியர்க்கத் தொடங்கியது. விநாஸ் என்னை விட்டுப்போகாதே எனக் கத்தியபடி அவனை இறுகப் பிடித்துக்கொண்டேன்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அருகே உருவான மற்றொரு குழியை நோக்கி விநாஸ் வழுக்கிச்சென்றான். நான் அலறியபடி அவனைத் தொடர்ந்தேன். தொட்டுவிடும் தூரம் இருந்தாலும் அவன் என் கைக்கு அகப்படவில்லை. ஆ எனக் கத்தியபடி எழுந்து அழுதான். துர்கனவு அவன் கையை அழுந்தச்செய்திருந்தது. விடாமல் அரைமணி நேரம் அழுதான். நான் அவன் வாயில் வழிந்த கோழையைத் துடைத்தபடி அவனைத் தேற்றினேன். மெல்ல விசும்பியபடி அவன் தூங்கத்தொடங்கினான். முகமெல்லாம் கண்ணீரும் எச்சிலுமாக இருந்த அவனை அணைத்து அள்ளி முத்தமிட்டேன்.

அடுத்த நாள், எதையோ தேடும்போது அப்பா ஒளித்துவைத்திருந்த ரகசியத்தைக் கண்டுபிடித்தேன். இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த உறவைத் தக்கவைக்கவும், பொது மனிதர்களுக்கு அவற்றின் பயன்பாடு பற்றிப்பேசவும் அப்பா உருவாக்கிய பயிற்சிக் காணொளிகள் இயந்திரங்களின் வருடாந்திர தூர்வாரும் பிரொக்ராமில் கண்டுபிடித்தேன். இதையெல்லாம் நிரந்தரமாக நீக்க வேண்டுமா என அந்தத் தூர்வாரும் பிரொக்ராம் கேட்டபோது எதுவோ அவற்றைப் பார்க்கும்படி என்னை உந்தியது. உடனடியாக சிறு குவாண்டம் பிட்டுகளாகச் சுருக்கப்பட்டிருந்த காணொளிகளைத் தரவிறக்கிப்பார்த்தேன்.

அப்பாவின் வியர்வைச் சுரப்பியைக்கொண்டு மறையாக்கம் செய்யப்பட்ட தகவல்களை என் தனிப்பட்ட மரபணு சுரப்பித் தொகுப்பைக் கொண்டு மறைவிலக்கம் செய்தேன். அப்பா போட்டிருந்த மென்பொருள் பூட்டை முதல் முறையாக உடைத்தேன். அவர் ஒளித்துவைத்திருந்த காணொளி என் முன்னே பிரசன்னமானது. பார்க்கப்பார்க்க அப்பாவின் மற்றொரு பக்கம் என்முன்னே புதிதாக உருவானது. என் இயந்திர எதிர்ப்புக்கேள்விகளை உதாசீனப்படுத்தியவர் மனிதர்களுடனான உறவைப் பற்றிய அடிப்படைச் சந்தேகங்களைப் பதிவு செய்திருந்தார்.

“இயந்திரங்களை உருவாக்கிய முதல் ஆய்வு மையமான அப்பல்லோ மையம் பியோர்ட்டொ ரீக்கா ஒப்பந்தத்தில் முதல் ஆளாகக் கையெழுத்து இட்டதோடு, அந்த பிராஜெக்டுக்கு நிதியும் அளித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நூறாவது ஆண்டு விழாக்கொண்டாட்டத்தில் இந்தப் பிராஜெக்டுக்கான முதல்கட்ட நிதி சேகரிப்புத் தொடங்கியது. அதனால் இந்தப் பிராஜெக்டுக்கு எலான் மஸ்க் டிரீம்ஸ் எனும் முதல் வடிவமைப்பும், மஸ்க் 11 எனும் பதினோறு இயங்கு விதிகளும் இயற்றப்பட்டன”

அப்பாவின் குரல் இனிமையாக இருக்கிறது. அவரும் மிக இளமையாக இருக்கிறார். அதையும் மீறி அவரது முன்வழுக்கைக்கான தொடக்கத்தை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவரது கண்களில் நான் மட்டுமே அடையாளம் காணக்கூடிய தவிப்பு தெரிகிறது.

“இயந்திரங்களும் மனிதர்களும் ஒன்றாக வாழும் கனவு இயங்குவிதிகளில் ஒன்று. இயந்திரங்களுக்குத் தேவையான அறிவை மட்டும் தந்தால் போதுமென்று தொடங்கப்பட்ட பிராஜெக்டுகள் தோல்வியைக் கண்டன. நமக்கு முழுமையாக உபயோகப்பட வேண்டும் என்றால், இயந்திரங்கள் தாமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டியது அவசியமாக இருந்தது. அப்படி முடிவெடுக்கும் இயந்திரங்கள் விரைவிலேயே தங்கள் தனித்தன்மையைச் சுயப்பாதுகாப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கின. அழிப்பது விதிகளுக்குப் புறம்பானது என்பதால் மனிதர்களை வெஜிட்டபிள் போல ஆக்கத்தொடங்கின. deactivate human thinking. அதற்குப் பிறகு நம் சிந்தனைக்குத் தேவையில்லாத தகவல்களை அதி முக்கியமானவை போலக்கொடுத்து நமது மூளைத்திறனை விரயமாக்கின. நல்லவேளையாக, இதை ஆரம்பத்திலேயே உணர்ந்த ஆல்பெர்ட் கெய்டோ எனும் ஆய்வாளர், தன்னுணர்வு எனும் செயலியைக் கட்டுப்படுத்தத்தொடங்கினார். ஆனால் அதற்கு அவசியமில்லாததுபோல, இயந்திரங்களின் செயலிகள் மனிதனைப்போல பிரக்ஞாபூர்வமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவித்தன. இதனால் நாம் இன்று பார்க்கும் ஆல்ஃபாக்களின் தொடக்கம் உருவாயின. இயந்திரம் போன்ற செயல்பாடு மற்றும் மனித பிரக்ஞையின் அளவிலா சாத்தியங்களையும் சேர்த்து செயல்படும் அடுத்தகட்ட ஹைப்ரிட் வகைகள். இந்த இயந்திரங்களுக்கு நமது நினைவிலி ஓர் உள்ளீடு மட்டுமே. நமது தீவில் இந்த அறிதலை அடைந்த ஆல்பெர்ட் கெய்டோ இதனை முதலில் கருத்தாக முன்வைத்த தளையசிங்கத்தின் பெயரில் ஆய்வகத்தை உருவாக்கினார். அடுத்த கட்ட இயந்திரமும் மனிதனும் சேர்ந்த ரெட்டை ஜோடி புது உயிராக இங்கே பரிணாமத் துவக்கம் கண்டது”

அப்பா பேசுவதைக் கேட்கும்போது என்னை அறியாமல் சந்தேகமும் பயமும் உண்டானது. விநாஸ் என்னை வெளியே விளையாட வரும்படி சைகை காட்டினான். அவனுக்கான உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? இரட்டை உயிரியக்கத்தில் மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதுமே குழந்தை போல இருந்தால் அவனது வாழ்வுக்கு உத்தரவாதம் உண்டா? பலவிதமான கேள்விகள் என்னை அரித்தன. என் கண்மணி, என் குழந்தையைக் கைவிடும் எதையும் மனம் ஏற்றுக்கொள்ளாது. அது மனிதனின் ஆற்றலை ஆயிரம் மடங்கு பெருக்கினாலும், அவனைக் கடவுள் போல மாற்றினாலும் சரி என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விநாஸ் தந்த மண் உருண்டைகளில் சிறு விலங்குகளைப் பிடித்து உருவாக்கிக்காட்டினேன். அவனுக்குப் பிடித்த குரங்கின் வாலை முதல் அழுத்தி உருவாக்கியதும், வாயை மூடிக் கண்கொள்ளாமல் சிரித்தான். குரங்கின் வால் போதும். அதுதான் அவனுக்குக் குரங்கு.

“புலன்களின் உச்சகட்ட எல்லைகளை இந்த இயந்திரங்கள் அடைந்தன. பல நூறு மைல்கள் தாண்டியும் தெரியும் மிகத் துல்லியமான பார்வை, நரம்பு மண்டலத்தின் மின் அதிர்வை உணர்ந்து அதற்கேற்றார்போலத் தகவல்களைத் திரட்டுதல், இதயத்துடிப்பைக் குறைப்பது மற்றும் ஏற்றுவது, மரபணுவின் தகவல்களைப் படிப்பது என மனிதனைத் தகவல்களாக மிக எளிதில் இயந்திரங்கள் படிக்கத்தொடங்கின. மனித மூளை மற்றும் நரம்புமண்டலத்திலிருந்து தகவல்கள் இயந்திரங்களை உடனடியாக அடையும்படி செயலிகள் உருவாயின. தினமும் உட்கொள்ளும் மாத்திரைகளின் மூலம் இடையறாத செய்திப் பரிமாற்றத்தை இயந்திரங்களுடன் மனிதன் உருவாக்கினான். மனிதர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் இல்லை. அதே சமயம், இயந்திரங்களின் மூலமாகப் பால்வீதியின் பல இடங்களையும், பூமியின் மத்தியிலிருக்கும் தீ உருவாக்கியிருக்கும் புதுவிதக் கனிமங்களையும், அதீத சூட்டில் ஜீவித்திருக்கும் ஜெல்லிக்கிருமிகளையும் மனிதன் ஆராயத்தொடங்கியிருந்தான். பூமியின் மத்தியில் வாழும் நுண்கிருமிகள், அளப்பரிய சூட்டில் உருகிவழிந்து ஓடும்போதே குளிர்ந்து இறுகி ஆவியாக மீண்டும் உருகும் தன்மையைப் பெற்றிருந்தன. உயிர் இம்மாற்றங்களில் தங்குகிறது. நொடிக்கு நொடி உருமாறுவதே அங்கே உயிர் எனப்படுகிறது. மனித மூளை நொடிக்கு நொடி எடுக்கும் முடிவுகளின்போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மாறும் புரதத்தன்மையில் ஏன் நமது பிரக்ஞையும், நனவிலியும் குடிகொண்டிருக்கக்கூடாது என ஆராயத்தொடங்கினார்கள். பிரக்ஞைக்கு ஒரு புரத வடிவம்; நனவிலிக்கு அதே புரதத்தின் வேறொரு தன்மை – முன்னர் பார்த்த நீர், பனி, ஆவி உதாரணம் போல. மனித மூளையின் ஜெல்லித்தன்மைக்குத் தேவையான கனிமத்தை இயந்திரங்கள் இங்கிருந்து எடுத்து வந்தன. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி மனித உடல் எட்டாத பல இடங்களுக்கு நம் சிந்தனையை எடுத்துச் செல்லும் மீடியாவாக இயந்திரங்கள் மாறின.”

“மனிதனின் அறிதல் எல்லை உட்கார்ந்த இடத்திலிருந்தே விரியத்தொடங்கியது. அவன் வாயுமண்டலத்தைத் தாண்டிச்சென்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.”

மெல்ல மறையத்தொடங்கிய அப்பாவின் முகத்தில் சொல்லமுடியாத தவிப்பு மட்டும் மிச்சம் இருந்தது. மனிதனும் இயந்திரமும் தங்கள் அமைப்பிலிருந்து விலகாது ஒன்றாக வேலை செய்வதை நம்பமுடியாத இயக்கமாக அவர் உணர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

**

நான் அலறியபடி எழுந்தேன். என் குரல்வளை நிசப்தமாக்கப்பட்டிருந்தது. இதயத்துடிப்பு தலையில் கேட்டது. என் போர்வையை விலக்கிக் கட்டிலில் உட்கார்ந்தேன். விநாஸனை ஏதோ செய்யப்போகிறார்கள். என் செல்லத் தம்பி. சொல்லக்கூட முடியாமல் கண்கள் விரிய பயத்தோடு சுவரில் ஒண்டியிருப்பான். மாத்திரைகளை விழுங்கச்சொல்லித் துன்புறுத்துவார்கள். ஆல்ஃபாக்களின் அடுத்த கட்ட சோதனை.

மனிதனும் இயந்திரமும் தங்கள் அமைப்பிலிருந்து விலகாது ஒன்றாக வேலை செய்வதை நம்பமுடியாத இயக்கமாக அவர் உணர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

என் கைகள் நடுங்குகின்றன. அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். அவர் ஆய்வகத்தின் வேலையைத் துறந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனாலும், ஆய்வின் அடுத்தகட்ட முன்னேற்றங்களை நண்பர்கள் அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தனர். மனிதனும் இயந்திரமும் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கி பல வெற்றிகரமான செயல்களைச் செய்துவிட்டனர். தனித்தனியாக ஆழ்மனதை அறியத்தொடங்கிய இயந்திரங்கள் அடுத்தக்கட்டச் சோதனையாகக் கூட்டுநினைவிலியை உருவாக்கத்தொடங்கியிருந்தன. இங்குதான் மனிதனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் உறவின் சிக்கல்களை அவை அடுத்தகட்ட ஆய்வாக எடுத்துக்கொண்டன. மனிதனின் சமூக உறவு பலவிதமானச் சிக்கல்களைக் கொண்டது. மனிதனுக்கு மிகப்பெரிய அரண் அது. அதே சமயம் அவனை வளர விடாமல் செய்வதும் அதுதான். அந்த அமைப்பை உடைப்பது மூலம் இயந்திரங்கள் தங்களுக்குப் பிரத்யேகமான கூட்டு நினைவிலியைக் கட்டமைக்கத் தொடங்கும் பயிற்சியில் ஈடுபடத்தொடங்கின.

அதற்கு முதல் எதிரி, மனிதனின் உறவுகள். முடிவுகளை எடுக்கத்தயங்குவதில் உறவுகளுக்கு இடையேயான சிடுக்குகள் முக்கிய காரணம் என இயந்திரங்களின் மென்பொருள் கணித்துச் சொன்னது. உறவுகளையும், சமூகத்தின் பிரக்ஞாபூர்வமானத் தொடர்பையும் அவன் நீக்கும்போதே விடுதலை பெறுகிறான். அதுவரை சிந்தனையின் எல்லை விரிவதில்லை என்பதை ஆல்ஃபாக்கள் புரிந்துகொண்டன. மனிதன் முழுமையாக விடுதலை பெற்றால் மட்டுமே இயந்திரங்களுக்கு அடுத்தகட்ட அறிவு சாத்தியமாகும்.

“எந்த பிரக்ஞை இயந்திரங்களின் வளர்ச்சிக்கு உதவியதோ அதுவே இப்போது பெரிய தடையாகிப்போனது”

விநாஸ் சிறு வார்த்தைகளைச் சேர்த்துப் பேசத்தொடங்கியபோது அவனுக்கு வயது பதினொன்று.

“க்கா வரை படம்..”, என அவன் சொல்லி முடித்தபோது நான் கேவிக்கேவி அழத்தொடங்கியிருந்தேன். அதைப் பாதகமான விளைவாக எடுத்துக்கொண்டவன் நான் அழக்கூடாது என்பதற்காகப் பேசத்தயங்கினான். மெல்ல அவனது பயத்தைப் போக்குவதற்காக நான் படிப்பை வீட்டிலிருந்து தொடர்ந்திருந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதில் சந்தோஷமே.

விநாஸின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் முடித்த இரவு, எங்கள் வீட்டு வாசலில் அனைவரும் உட்கார்ந்திருந்த ஒரு தருணம். விநாஸ் என் மடியிலேயே தூங்கியிருந்தான். அவன் பேசத்தொடங்கியது காலை முதல் நெகிழ்ச்சியான உணர்வுகளை எல்லாருக்கும் அளித்திருந்தது.

“நம் புராணத்தில ஒரு கதை இருக்கு ஜனனி”

“செத்ததின் வயிற்றில் சிறு குட்டிப் பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் – அப்படின்னும் நம்மாழ்வாரைப் பார்த்து கேட்டாராம் மதுரகவினு இன்னொரு ஆழ்வார். அப்போது அவருக்கு வயது பதினொன்னு. அதுவரை அவர் பேசியதே இல்லை. கண்ணைத் திறந்ததுகூட இல்லை. உயிர் இருக்கா இல்லையான்னுகூடத் தெரியாது. புளியமரத்தின் பொந்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ”

“பேசத்தெரியாதவரிடம் கேள்வியா?”

“ஆம். கேளு. அதுக்கு அவர் ‘அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்னு’ ஒரு பதில் சொன்னார்”

“அப்படின்னா?”

“பிரக்ஞை உருவாவதற்கு வெளியே இருந்து எந்த ஓர் உள்ளீடு தேவையில்லை. செத்ததின் வயிறில்கூட உருவாகிவிடும். அந்தப் பிரக்ஞை வளர்வதுக்கும் எந்த உள்ளீடும் உடலிலிருந்து தேவையில்லை. தூரத்து இயக்கி போல இது பேரியக்கத்தின் சிறு உதாரணம். தான் எனும் அகங்காரம் வளர்வதற்கு வேண்டுமானால் உள்ளீடு தேவை. ஆனால் அது தொடங்குவதற்கு எதுவும் தேவையில்லை. சொல்லப்போனால் உயிரின் ரகசியமே அதுதான். நம்ம ஆல்ஃபாக்களிடம்கூட அதுக்கான பதில் இல்லை. உயிர் தொடங்கியது எப்படி? ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது? எதுக்கும் காரணம் கிடையாது ”

“இவ்வளவு அறிவியல் வளர்ச்சி இருந்தும் இதுக்கெல்லாம் காரணம் இல்லியா? கொஞ்ச நாளில் தெரிஞ்சிடும்பாரு”

“அறிவியல் ஒரு பகுதி மட்டுமே நிரூபணம். நிரூபணமான எல்லாப் பகுதிகளையும் சேர்த்துப்பார்த்தாகூட முழு உண்மை கிடைக்காது. இடைவெளி இருக்கும். ”

**

உயிர் தொடங்கியது எப்படி? ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது? எதுக்கும் காரணம் கிடையாது.

சில வருடங்களாகத் தீவிலிருந்து வந்த செய்திகள் அப்பாவின் பயத்தை உண்மையாக்கின. முடிவெடுக்கும் இயந்திரமாக முழுமையாக இயங்குவதற்குத் தடையாக இருக்கும் பலவற்றை நீக்குவதற்கு இயந்திரங்கள் ரகசியமாக முயல்வதாகச் செய்தி பரவியது. இது பியோர்ட்டோ ரீக்கா விதிகளுக்குப் புறம்பானது என்று ஒரு சாராரும், தொடக்கத்தில் அப்படித் தெரிந்தாலும் இந்த ஆய்வின் முடிவு மனிதனை ஆல்ஃபாக்களோடு மேலும் நெருக்கமாக இயங்க வைக்கும் என்று பிறரும் சாதகபாதக விவாதங்களைத் தொடங்கினர்.

சமூக அமைப்பைக் கலைத்து விளையாடுவதன் மூலம் மனிதனின் இருப்புக்கே அர்த்தம் இல்லாமல் ஆகும் எனும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியதில் ஆல்ஃபாக்களின் இயந்திர மையம் தங்கள் அடுத்த கட்ட ஆய்வை ஒத்தி வைக்க முடிவு செய்தன.

நான் அந்த ஆய்வின் முடிவை நினைத்துப் பல நாட்கள் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன். ஆய்வின் அடுத்தகட்ட வளர்ச்சிகள் பற்றிய செய்தி புரளிகளாகக் கசியத்தொடங்கியது. அன்று மழை இரவு என ஆல்ஃபாக்கள் அறிவித்ததில் புதிய மதுரை தொடங்கி தளையசிங்கம் ஆய்வு நிலம் வரை வானம் மறையும்படியான நீர் சேகரிப்புக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள் வீடு இருந்த தீவில் இளமழை பொழிந்து விட்டிருந்தது. விநாஸுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் பயப்படுபவன் மழை வரப்போவதை அறிந்ததும் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிடுவான்.

நான் அவனது அறைக்குச் சென்றேன். தூக்கத்தில் சொற்களை உருவாக்கியபடி படுத்திருந்தான். பெரும்பாலும் உளறல்கள். அன்றைக்கு அவனைச் சுற்றி நடந்ததை வார்த்தைகளாக்க முயல்வான். வெளியே கேட்பவை உமிழ்நீரில் கரைந்த வார்த்தைகளை மீறி வெளிப்படுபவை. அருகே செல்லும்போது, “க்கா, கா” என வார்த்தைகளுக்கு இடையே சொல்வது கேட்டதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனை அப்படியே அணைத்துக்கொண்டேன்.

அருகே யாரையும் அண்டவிடாத அவனது பிஞ்சு விரல்கள் உறக்கத்திலேயே என்னை இறுகப்பற்றியது. அக்கா, அக்கா என அவனது வாய் உளறிக்கொண்டிருந்தது. என் மூச்சு மேலும் கீழும் சீரற்று இருந்தது. இல்லை, இவனை என்னால் கைவிட முடியாது. நெஞ்சுக்குள் கனம் அழுத்தியது.

“விநாஸ், நீ என்னோட உயிர்”, என இறுக அணைத்துக்கொண்டேன். இவனைப் போன்ற குழந்தைகளைத் திரட்டி ஆல்ஃபாக்கள் தங்கள் உறவு நீக்கி எனும் அடுத்தகட்ட ஆய்வைத் தொடங்கியிருந்தன. எப்படிக் காப்பாற்றப்போகிறேன் என நான் திடமாகச் சிந்திக்கத்தொடங்கினேன்.

**

“மனதை இயற்கையான வகையில் பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்துவது, புற உடலின் எல்லைகளை மீறுவதற்கு ஆல்ஃபாக்களின் இயந்திரங்களைப் பயன்படுத்துவது என ஒன்றுக்கு ஒன்று உதவியாக இரட்டை சிஸ்டம் எத்தனை வீரியமானது தெரியுதா? இதைச் சிந்தித்தவன் மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சியை மிகக்கச்சிதமாக உருவாக்கியவன். அவன் இதை Benevolant Dictator என்றான். இரட்டை நியூட்ரான் நட்சத்திரங்கள் போல ஒன்றைவிட்டு ஒன்று பிரிய முடியாத அடுத்தகட்ட உயிரினம் நாமும் ஆல்ஃபாவும். அத்தனை இரக்கம் நம்மை என்ன செய்யும்?”

நான் பதில் சொல்லவில்லை. டிக்டேட்டர் எனும் சொல்லிலேயே என் மனம் அச்சம் கொண்டுவிட்டது. ரெட்டை சிஸ்டம் பியோர்ட்டோ ரீக்கா விதிமுறையை மீறாது என்றாலும், ஆல்ஃபாக்கள் செயற்கை அறிவை முழுமையாக அடைந்துவிட்டால் என்னவாவது எனும் கேள்வியை நான் கேட்காமல் செயலற்று நின்றிருந்தேன்.

“நம்மில் சிலர் தேவையில்லாது போகலாமே”, என மெல்ல என் சந்தேகத்தை முணுமுணுத்தேன்.

ஏனோ அப்பா முழுமையாக இத்திட்டத்துடன் இணைந்துவிட்டார். ஆரம்பத்தில் இருந்த சந்தேகங்கள் அவரிடம் கலைந்துவிட்டன. இதில் எங்கள் அனைவரின் விடுதலையைக் காண்கிறாரோ எனும் குழப்பம் எனக்குத் தொற்றிக்கொண்டது.

“சுயப்பிரக்ஞைக்கான தேவையை எந்திரங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டுள்ளன. பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்து வந்த நமது மனதின் படிநிலைகளை அவற்றால் நகல் செய்ய முடியாது. விலங்குகளுக்கு ஜாக்ரத் மட்டுமே மிக அதிகமாக உண்டு. பாதுகாப்பு உணர்வு – குட்டிகளுக்கும் தனக்குமான பாதுகாப்பு. நம் மனம் இயற்கை பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகும்வரை எந்திரங்களால் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எந்திரத்தின் வடிவமைப்பில் நாம் இதுபோன்ற உள்ளீட்டை அளிக்கவில்லை. நம் கல்லீரலுக்கு இதயத்துடிப்பின் உள்ளீடு தேவையில்லாதது போல”, எனச்சொல்லிப் பெருமையாகப் பார்த்தார் அப்பா.

அவரது முடிவு தவறு எனக் கூடிய சீக்கிரமே புரிந்துபோனது. கல்லீரலுக்கு இதயத்துடிப்பின் உள்ளீடு தேவையில்லாததாக இருக்கலாம், ஆனால் உடலில் இருந்த அனைத்து பாகங்களும் உடலியக்கக்கடிகாரத்தின் படி ஒருங்கிணைந்துள்ளதை அவர் மறந்துவிட்டார். காலம் பொதுவானதாக இருப்பது போல உடலின் பாகங்களும், மனதின் கணக்குகளும் உடலியக்கக் கடிகாரத்தின் அடிமைகள்.

மனிதன் மற்றும் எந்திரங்களின் கூட்டு இயக்கம் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டுமானால் கூட்டு நனவிலியின் தனிப்பட்ட அமைப்பான ஜாக்ரத்தை உடைக்கவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் புரிந்துகொண்டனர். அதைச் செய்தால் மட்டுமே மனிதன் முழுமையாக விடுதலை அடைந்து கூட்டாகச் சிந்தித்து செயல்பட முடியும். பல்லாயிரக்கணக்கான முடிவுகளை உடனடியாக எடுக்கும் மனிதனின் ஆழ்மனம் கூட்டாக இயங்கும்போது எந்திரங்களால் உருவாக்க முடியாத பெரிய கருத்தாக்கங்கள் சாத்தியப்படும். இது ஆல்ஃபாக்களை உருவாக்கிய ஆய்வாளர்களின் ரகசியத் திட்டம். மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவது எனச்சொன்னால் விதிமீறல். ஆல்ஃபாக்களே அதை அனுமதிக்காது. ஆனால், மனிதனின் தளைகளை அறுக்கப்போகிறோம் என்பது விடுதலை. அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கான முன் ஏற்பாடு. ஆல்ஃபாக்களின் வேகத்தை எட்டக்கூடிய பிரதி உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப்பார்க்கும் திட்டமும் அதில் அடக்கம். அதில் சேரும்படி நகர் எங்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தாயகத்தின் அரசு ஆய்வுக்கழகம் ஆல்ஃபாக்களின் திட்டத்துக்குச் சான்றிதழ் வழங்கியது – “போர்ச் சமூகத்தின் உச்சகட்ட தியாகம் நவகண்டம். சுயபலி. உயிரைத் துச்சமாக மதிக்கும் நிகழ்வு ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவது. நவகண்டம் போல இதுவும் உச்சகட்ட துறக்கம். மனிதனின் அடுத்த கட்டத்துக்காக மனித உறவுகளை நீக்கம் செய்த உடல்களுக்கான ஏற்பாடு”.

முதல் முறை மனிதன் முழுமையாக விடுதலை அடையப்போகிறான். மதம், தத்துவம், உறவுகள், கடவுள் நம்பிக்கை எனும் அனைத்தையும் ஆட்டிப்படைத்த உணர்ச்சிகளை உடைக்கும் முதல் பிராஜெக்ட்.

சுயபலி. உயிரைத் துச்சமாக மதிக்கும் நிகழ்வு ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவது.

அந்த அழைப்பு கொடுத்த நடுக்கத்தை நான் உதாசீனப்படுத்தியபடி இருந்தேன். கண்ணில் படும் விளம்பரங்களையும், நண்பர்களிடையே நடந்த உரையாடல்களையும் முழுவதுமாகத் தவிர்த்தேன். எங்கள் குடும்ப நண்பர்களில் ஒருசிலர் கை, கால்கள் எனச் சில உறுப்புகளைப் பொருத்திக்கொண்டு வந்தனர். நான் கூடியவரையில் அம்மா அப்பாவிடம் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தேன்.

வழக்கம்போலத் தோட்டத்தில் விளையாடி முடித்த மாலை நேரம். விநாஸை முந்திக்கொண்டு நான் வீட்டுக்குள் செல்ல நேர்ந்தது. மேலும் கீழுமாக அலைந்ததில் அரைமணி நேரம் கழித்து அவனைக் காணாமல் பகீரென்றது. விநாஸ் அத்தனை எளிதாகக் காணாமல் போகக்கூடியவன் அல்ல. தோட்டத்தின் அனைத்து மூலைகளிலும் அலைந்தேன். கால்கள் கொண்டு சென்ற வழி அனைத்தும் விநாஸின் பெயரைக் கத்தியபடி அலைந்தேன். இருள் சூழத்தொடங்கிவிட்டது. நிதானத்தை இழந்து பிதற்றியபடியே வீட்டின் உள்ளும் வெளியேயும் சுற்றினேன். ஒரு கட்டத்தில் பயம் கவ்விக்கொண்டது. ஆய்வகத்தின் விளம்பரங்களை அவனும் ஆர்வத்துடன் பார்த்தது நினைவுக்கு வந்து தலைசுற்றியது. அவனுக்கு எந்தளவு புரியும் என்பதைப் பற்றி நான் அந்நிமிடம் யோசிக்கவில்லை. அவன் எப்படி வீட்டை விட்டுச் சென்றிருப்பான் எனும் தர்க்கம் சார்ந்த சிந்தனை இருக்கவில்லை. மனம் ஒன்றை முடிவு செய்து என்னை நம்பச்செய்தது போல ஒரு வேகத்துடன் பின் கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்ல எத்தனித்தபோது சோலார் அறையின் கதவு காற்றில் மோதி எனக்கு மட்டுமே கேட்கும்படி சத்தம் வந்தது. இத்தனை ஓட்டங்களிலும் என் மனம் சிறு சத்தத்தைக்கூட அறிந்துகொள்ளும் நிதானத்தோடு இருப்பதை எண்ணி ஆச்சர்யமானது. அவசரமாகச் சென்று கதவைத் திறந்தேன். அங்கிருந்த குரோட்டன்ஸ் செடிகளின் இலைகளைத் தடவியபடி விநாஸ் நின்றுகொண்டிருந்தான்.

கோபத்திலும் ஆற்றாமையிலும் முழு வேகத்தோடு தோளைப்பிடித்து என் பக்கமாகத் திருப்பினேன். அதை எதிர்பாராத அவன் நிதானம் தவறிக் கீழே விழுந்தான். அப்படியே தூக்கி அவனை அள்ளி அணைத்துக்கொண்டேன்.

*

டாக்டர் ரே கண்கட்டை அவிழ்த்தார். முதலில் மங்கலாகத் தெரிந்த உலகத்துக்குக் கண் கொஞ்ச நேரத்தில் பழகிவிட்டது. இதுவரை வண்ணங்களையே பார்த்திராதவளை மலர்வனத்துக்குள் அனுப்பியது போல, நான் பார்ப்பது கனவு உலகம் போல இருந்தது.

“வெல்கம். எந்திரங்களின் முதல் ஆய்வில் உருவான தீர்க்கப்பார்வை கொண்ட கண்பாப்பாக்கள் பொருத்தப்பட்ட ஆயிரம் சிறுமிகளில் ஒருத்தி நீ”, எனக் கைகொடுத்தார்.

பளிச்சென கழுவிய கண்ணாடி போல என்னைச்சுற்றி புது வடிவங்களும், வண்ணங்களும் துலங்கி வந்தன. பரிமாணங்கள் ஒன்றோடு ஒன்று முயங்கியதில் தூல வடிவங்கள் தங்கள் சிறு எடைப் பள்ளங்களில் சற்றே அழுந்தியிருந்தன. ஒன்றை ஒன்று ஈர்த்தும் விலகியும் அமைந்த புறச்சூழல் இறுகிய வடிவாக இல்லை. மாறாக ஒவ்வொரு நொடியும் மாறியபடி இருக்கும் நெகிழ்வானப் புறப்பொருள் தொகுப்பாக உலகம் தெரிந்தது. சீரான வண்ணங்களாக இல்லாமல் சுற்றியிருந்தவை வண்ணங்களின் சாத்தியத்தொகுப்பாகக் குழைவாகக் காட்சியளித்தது.

என் கை விரல்களை உற்று நோக்கினேன். இருட்டுக்குப் பழகிய கண்கள் போல மெல்ல என் பழைய உலகம் என்னை விட்டு விலகியது.

அடுத்தடுத்த நாட்களில் என் உடல் உறுப்புகளுக்குப் பதிலாக மீக்கடத்துத்திறன் கொண்ட பாகங்கள் பொருத்தப்பட்டன. பூமியின் மத்தியில் ஓடும் ஊன்பசைக் கனிமத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட உராய்வுகள் ஏற்படாத மூட்டுகள் வேகத்தை அதிகப்படுத்தின. உடலியக்கக் கடிகாரத்தைக் கண்காணிக்கும் மின்கடத்திகள் நரம்பு மண்டலத்தின் பாதையில் பொருத்தப்பட்டன. மெல்ல நான் ஒரு ஆல்ஃபாவாக மாறிக்கொண்டிருந்தேன்.

என் உடலைவிட்டு எடுக்கப்பட்ட உறுப்புகள் தந்த போலி உணர்ச்சிகளும், புதிதாகப் பொருத்தப்பட்ட எந்திரக் கைகளும் சேர்ந்து நான்கு கைக்கொண்ட பண்டையத் தமிழ்க் கடவுளின் ஆற்றலைப் பெற்றது போல உணர்ந்தேன். எடுக்கப்பட்ட பழைய உறுப்புகள் என் பழைய உறவுகளை அரவணைத்த தினங்களை மீண்டும் பெறக் காத்திருந்தன. பொருத்தப்பட்ட புது உறுப்புகள் புற எல்லைகளை மீறி என்னை உந்திச்செல்ல துடித்துக்கொண்டிருந்தன.

என் நினைவுகள் விநாஸைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. அவனுக்கு இந்நேரம் ஆல்ஃபாக்களுடன் உறவாடும் மருந்துகளை அளித்துவிட்டிருப்பார்கள். நாற்பத்து எட்டு மணி நேரங்கள் என டாக்டர் ரே சொல்லியிருக்கிறார். அவனது நனவிலி பாகம்பாகமாகக் கோக்கப்பட்டு வோர்டெக்ஸுக்குச் செல்லவேண்டிய பிரத்யேகத் தகவல் உயர் அழுத்தக்கம்பிகளில் பயணத்தின் முடிவை அடைந்திருக்கும்.

நான் ஆல்ஃபாக்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கியிருந்தேன். எனது நரம்புமண்டலத்தின் தகவல் மையத்தையும், வெளி நிகழ்வுகளுக்கான எதிர்வினையைத் தொகுத்து வழங்கும் சிறு தகடும் மெல்லப் பிரியத்தொடங்கின.

நான் புது அனுபவத்துக்குத் தயாராவதை ஆய்வாளர்கள் ஆர்வத்தோடு கண்காணித்தார்கள். தகவல்கள் வோர்டெக்ஸுக்கு ஏறிப்போகும் அதே வேளையில், என் விநாஸின் சுய அடையாளங்கள் என்னுள்ளே தரவிறங்கியிருக்கும். அனுபவமாக என்னுள்ளே வந்த விநாஸும் நானும் வேறல்ல. நான் அவனது உறுப்பாகவும், அவன் என் பிரக்ஞையாகவும் சேர்ந்த ரெட்டை ஜோடி. ஆல்ஃபாவாக நான் இருக்கும்வரை என் கண்மணி என்னுடனேயே பிரக்ஞைபூர்வமாக இருப்பான். இந்தப் புது உணர்வைப் பகுக்க முடியாமல் வோர்டெக்ஸ் தகவல் மையம் தடுமாறும்.

*

அக்கா, அக்கா

ம்ம். சொல்லு

இள மழை பெய்யத்தொடங்குது ஒரு நடை போவோமா?

வா. என் விரலைப் பிடிச்சிக்கோ.

6 thoughts on “பல்கலனும் யாம் அணிவோம்”

  1. நல்ல முயற்சி. ஆனால், இதைப் புரிந்து கொண்டு கதையை ருசிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அத்தனை விளக்கங்கள் வாசிப்பைக் கொஞ்சம் மெதுவாக்குகிறது. இருப்பினும் கதை முடிவு பற்பல கேள்விகளை ஏற்படுத்துகிறது. All the Best

  2. Excellent. Very thought provoking. I somewhat second the remarks of Ms. Maria. But I hope to read this few more times to get answers for some of the questions rising at the end.
    சில சினிமாக்கள் நன்றாக இருக்கும். ஆனாலும், மக்களுக்கு சரியாகப் புரியாததனால், ஆனால் நன்றாக இருப்பதனால் அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். பலப்பல விவாதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதை அந்த வகையை சேர்ந்ததாக இருக்கும்.

  3. பல முறை படித்த பின்பே சிறிது விலங்கிற்று. ஒவ்வொரு பத்தியிலும் அர்த்தம் விளங்க வலை தளத்தை நாட வேண்டியதாயிற்று. சிறந்த முயறிச்சி .
    வாழ்த்துகள்.

  4. இது அறிவியல் அகராதி. யூகிக்க முடியாத அறிவியல் தர்க்கம் கொண்ட கதை. ஆனாலும், புனைவு என்கிறபோது ஏதோ சறுக்கல் உள்ளதைப் போலவும் முதல் வாசிப்பில் தோன்றியது. பின்னர் ஒருமுறை வாசிக்கும்போது அத்தகைய மனநிலை இல்லாமல் போய்விட்டது. கதையை உள்வாங்கிக் கொள்ளவும் முடிந்தது. நல்ல முயற்சி வாழ்த்துகள்.

  5. நல்ல சோதனை முயற்சி. வாழ்த்தி மகிழ்கிறேன்

  6. பெரும்பாண்மையான அறிவியல் கதைகளை, வாசகன் உள்வாங்கவும் புரிந்துக்கொள்ளவும் மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. புனையும் கர்த்தாவோடு இணந்து கொள்ள பிரயாசையும் அவஸ்தையும் தேவையாகுகிறது. ஒர் ஆங்கில கார்டூன் கதையில் வரும் கதாநாயகன், அரும்சக்தி கொண்ட டிராகனை அடிமைக்கொள்ள, அதன் உள்ளுணர்வோடு ஒன்றி, இணைந்து பயணப்பட்டாலோழிய, அதனோடு சேர்ந்து இயங்கமுடியாதத. அது போலதான் அறிவியல் கதைகளும். கதையின் நடையைப் புரிந்து, அது கொஞ்ச கொஞ்சமாக பிதுக்கி தரும் சங்கேதக் குறிப்புக்களைச் சேகரித்து, எங்கோ ஒர் இடத்தில், மின்னல்கீற்று போன்று, கதையின் உயிர்சுருள் கணம் விரிந்து மீள்கிறது. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களின் அங்கென்றுமாய் இங்கொன்றுமாய் விரவியிருக்கும் தத்துவ உண்மைகளை இக்கதையில் கண்டுக்கொள்ளவும் முடிகிறது. மனித உறவுகளிடமிருந்து விடுதலையடையும் நிலையே, மேல்நோக்கிய வழியில் மனிதனைத் தெய்வமாக்குகிறது, கீழ்நோக்கிய வகையில் இயந்திரமாக்குகிறது. ஓர் இயந்திரம், மனிதனோடு சங்கமித்து இணைவதற்கு இந்த உறவு எனும் தளையிலிருந்து விடுதலை தேவையாகுகிறது. இரங்கனின் மீதியிருந்து பெரும்மையலினால், சுயத்தை இழந்து அவனோடு ஐக்கியமான கோதையைபோல், மீளவியலாத சகோதரப்பாசப்பிணைப்பால், தன்னை ஆல்ஃபாவாக மாற்றிகொண்ட ஜனனியின் அதிஅன்பில் வெளிப்பாடு, மானுடத்தின் உச்சம். முழுக்கதையையும் படித்த பின்னரேதான் தலைப்பின் பொருள் புரிகிறது. பல அவயங்களையும் பூட்டிகொண்டு (பல்கலனும் யாம் அணிவோம்), அன்புவெளியில் தன்னைக் கரைத்துகொள்ளும் மகோன்னதம், மனிதத்தால் மட்டுமே சாத்தியம்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்