உடைமாற்றி இளவரசியாகத் திரும்பிய கண்ணாடி: பாழி

10 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் கோணங்கியின் நேர்காணலுடன் அவரது படைப்புகள் பற்றிய சில கட்டுரைகளையும் வெளியிடுவதன் மூலம் அவரது படைப்புலகம் குறித்தான ஒரு நிறைவான சித்திரத்தை அளிக்க முடியும் என்கிற முனைப்புடன் இவற்றைப் பிரசுரிக்கிறோம்.


I

நாவலில் சொல்லாமலே விடுபட்ட வீணை தனம்மாளின் பின்னாளைய அந்தகம்தான் நாவலாகியிருக்கிறது. கண் ஏட்டில் கண்களைப் பற்றிய வரலாறாக இல்லாமல் முத்தின் வரலாறாக எழுதப்பட்டிருக்கிறது. ‘பாழி’யின் முன்னுரையில் குறிப்பிடப்படும் ஹோமரே ஒருவரா பலரா என்று தெரியாத நிலையில் ஹோமரின் குருடு என்பது தனிப்பட்ட மனிதனின் அந்தகமா அல்லது ஒரு பெரும் குழுவின் குருடா, அது உண்மையா பொய்யா என்று பெருகிக்கொண்டு செல்லும் வினாக்களில் ததும்பும் நிலையின்மையும், பின்னாட்களில் glaucoma வந்து பார்வையுடன் போராடிய ஜாய்ஸின் எழுத்துக்களில் வாசகனுக்குக் குறுக்காக இறக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும் எண்ணற்ற கருந்திரைகளும்தான் உண்மையான, அனுபவிக்கத்தக்க அந்தகம். “பழங்களின் தோலால் தைக்கப்பட்டுப் பலநிறங்கொண்ட கனிகளுக்கான வகைவகையான பழத்தொலிகளாலான பலநிறங்கொண்ட கனிகளுக்கான ரகஸிய நூல் திறக்கிறது ரஸவாதியின் கனவில்” என்று கூறிக்கொள்ளும் பாழியின் வெளிப்புறப் பழத்தின் நிறமல்ல, உள்ளே ஒளிந்திருக்கும் மங்கலான இருளே நம்மை இன்னும் தூண்டுவது. நார்மண்டியிலிருந்து வந்த பழைய அகதி தன் நினைவில் செதுக்கிவந்த கண்ணாடிக் கோப்பைகளில் கனிகளின் வாசனையை அவனது கண் தெரியாத மூன்று பெண்கள் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதுவே வேறொரு வாசனைப் புத்தகமாக மாறுகிறது.

ஊடுருவும் பிரதியாக தனம்மாள், பாலசரஸ்வதி இவர்களின் வரலாறும், கரிசல் ஏடு ரோகமடைந்து பாலை இசையாகிறதும், முத்துசாமி தீட்சிதர் எட்டையாபுரம் வந்து சேர்வதும், குறுமலையில் என்றும் மறையாத பச்சை நிறத்தை ஏற்படுத்தும் அமிர்தவர்ஷிணி ராகத்தைத்தான் புலிக்குகை நாயனமாக சிறுகதையில் பார்க்கமுடிகிறது. இந்த மொத்தப்பாலையும் கரிசல் ஏடும் விளாத்திகுளம் சாமிகள்தான் இசையின் நான்காவது மூர்த்தியும்கூட. அவரது தேகம்தான் தானியப்பாழியின் அனைத்து சொல்கதைகளும். இந்தப் பித்தநிலையை, மௌனியின் சிறுகதைகளையும், நகுலனின் ‘நாய்கள்’இன் பைத்தியத்தையும் நாவலாக்க முயன்றதுதான் ரஸவாதியின் கனி ஏடு.

கி.ரா, பூமணியிடமிருந்து வந்ததுதான் கரிசல் ஏடு. கரிசல் ஏட்டின் மூலப்பிரதி விளாத்திகுளம் சாமிகள். மௌனி, நகுலன் வகை எழுத்து என்பதிலிருந்து இந்த நிலவகை எழுத்தின் இணைப்பு இசையாகியது சாமிகளிடம்தான். அதை யாரும் இன்னும் கண்டடைந்ததில்லை, கரிசல் ஏடு உட்பட. அதற்கான பைத்தியநிலையை எதிர்நோக்கியிருப்பதுதான் தீராத பாழி. அவர் உடலுக்குள்ளிருக்கும் இசைதான் அனைத்துத் தானியங்களும்; அதுவே பருவமாகவும் நிலமாகவும் பொழுதாகவும் பிரிகிறதென்பதை“நெடும்பனைகள் குத்திட்டு அரசாளும் கருப்பு மண் குழைத்து இயற்கையோடு இழைந்த விளாத்திகுளம் சாமிகளின் ராகங்களை பொடிச் சங்கதிகளை எந்த நூலும் விளக்காத அளவுக்கு விளக்கியது பெண்ணுக்கு” என்று காண்கிறது கரிசல் ஏடு.

போர்ஹேஸின் “சந்திப்பு” கதையில், இயக்கும் மனிதர்கள் மாறியும் தங்களது பிரத்யேக இயக்கத்தை எந்தவொரு கைவழியாகவும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் வாள்களின் இயக்கம்போல, ஏழு புத்தகங்களாலான பாழியைப் படித்து முடித்தபின் மிஞ்சியது மொழி பற்றிய வியப்பே. “பாசுபதா பரஞ்சுடர் பரம்பரம் என பரஞானரோகி அருணகிளி புட்குரலோடு மிழற்றும் பித்த வேகத்தில் ஓலை ஏட்டில் சித்திரரூபம் வரைகோடு நிற்களாய் பிரியும் ரோக உடல் திறந்த வேகமொழி கீறிய திரு ஊடல்தெரு அலகு சிவந்த ஏடுகள் புரட்டிய கிளியாக மறையும் தானிய நகரம்” என்ற வரி கூறுவது என்ன!

ஒரு கோட்டின் துல்லியமான நீளம் கோட்டிலிருந்து வித்தியாசப்படுத்திப் பார்க்கக்கூடியதல்ல. கோடு என்பதே ‘பாழ்’ எனப்படும் வெற்று வெளியை உடைக்கப் பயன்படுகிறது என்னும்போது, கோடுகள் வளைந்து உருவாகும் உயர் பரிமாணமான எழுத்துக்களின் கூட்டமைவில் உருவாகும் இன்னும் அதிக உயர்பரிமாணம் கொண்ட வார்த்தைகளின் மிகத்துல்லியமான தெளிவை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். கோடும் நீளமும் ‘கோடு’ என்று நாம் கருதுவதற்குள் அடங்கியிருப்பதில் உருவாகும் நிச்சயமின்மைதான் அனைத்துக்கும் திறவுகோல்.

வியாசவிப்ரவரின் அருவருப்பான தோற்றத்தைப் புணர்பாகத்தில் கண்டு உடல்வெளுத்த அம்பாலிகா கர்ப்பத்தில் பாண்டுவின் வெளுத்த ரோகம் மொழியாகப் பச்சைப் புத்தகத்தில் விரிகிறது. ரத்தாம்பரப்புத்தகத்தில் படிகவிருட்சிகள் அலைவுறும் பாலையில் ரேணுகாம்பாள் சரித்திரம், வண்ணாத்தி லோகா இருவரின் ரோகமும் பாலையாய் விரிகிறது. “நிலவின் பால் ஒளி தவத்திலிருக்கும் ரோகமோடிய பிக்குணி அவள்”. அது பாழியா? விழுகிறார்கள் ரோகிகள். “நடந்து நடந்து நடையிலுள்ள தூரங்களில் பாழ் படிகிறது வெண்மணலாய். அதன்மேல் முகம்வைத்து கீழே ஓடும் ரோகிகளின் உலகத்தின் வெளி அனைத்தும் கூழாங்கற்களின் இசை. லோகாவின் மார்புமேல் கூழாங்கல் முலைகள் சுரந்த பாழ் அதிர்வு மலைகளில் இடிந்து அலறுகிறது. சலனமற்றவளானாள் லோகா. ஆனால் அவள் உடலுக்குள் உறையாத எரிமலை புரண்டு கைகால்வழி கிளைத்து ரோகங்கொள்ளும் தொழுநோய் வனமானாள் லோகா. அவள் பூமியைப்போலவே இறவாத எரிமலை.”

ஊமைச் சிற்பியின் ரோகம் – நாகஉலா சிலைக்குக் கை உடைந்துவிட்டதால் அதை மண்ணில் புதைத்து நிம்மதியிழந்து அலைந்த ஊமைச்சிற்பி ரோக உடலானான். பிரசன்னம் வைத்து சோவி வைத்துப்பார்த்தான். ‘கை உடைந்த நாகஉலா அருகில் வேறு சிலை வெட்ட உன் பிள்ளையை அனுப்பு. அப்படி நாகஉலாவைப் படைத்தால் உன்னைப் பீடித்த குஷ்டரோகம் தீரும்’ என்றது பச்சை சர்ப்பம்.

வாசனைப் புத்தகத்தில் குஷ்டரோகம் கண்ட ராஜா கனிப்பெண் சொல்கதையில் கரம்பைமண்ணில் நாகவலி இலை பூசி நீலநாகவிஷத்தில் சிகிச்சைக்காக உவர்மண் பூசிக்கிடக்கும் வேளையும் வந்தது. கனிப்பெண் முலைகளின் வாசம்பட்டு ரோகம் சொஸ்தமாகிக்கொண்டே வந்தது.

‘யுலிஸஸ்’ நாவலின் Bloomல் l-ஐ உதிர்த்துவிட்டால் உருவாகும் Boom என்ற அழிவுச்சப்தம் அதனுள்ளேயே ரகசியமாக ஒளிந்திருப்பதுபோலப் ‘பாழி’யினுள் ஒளிந்திருக்கும் ‘பாழ்’ என்பதும் பிரயாணங்களையும், கடந்துசென்றபின் நிகழக்கூடிய அழிவுகளையும் வெறுமையையும் உணர்த்தும். பயணி காமாஸ்டாவோ அல்ல, பாழி எனும் தனிவார்த்தைதான் பயணத்தை நிகழ்த்துவது. துவக்கத்தில் தானியப்பாழியாகவும், பின்பு நகரமாகவும் போர்க்களமாகவும் இயற்கையாகவும் பெண்ணாகவும் சொல் உடைந்து பரவும் ரோகியாகவும் இரும்பாழி என்னும் நினைவுச்சின்னமாகவும் குகைகளாகவும் காமப்பாழியாகவும் “பாழாம் பயிராயடங்குமப் பாழிலே” எனத் திருமூலரில் முடிகிறது.

பாழி தன்னைத்தானே நோக்கிக்கொள்ளும் தருணங்களில் துல்லியமாக அமைந்திருக்கும் ‘நாகரம்’ தன்னை நிரந்தரமான சூன்யமென்றும், மெல்ல விளைந்து விண்முழுதும் உதிர்ந்து பரவும்ரஸச்சாறு கனியும் வெறுமைக்குள் பனிநடனம் என்கிறது.

“சூனியம் ஏவப் பயன்படுத்திய உலகின்மீது சூனியக்காரிகளுக்கான நாள் வருகின்ற வேளை நாகரத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும்/ இப்போது அதைப் பார்க்கும்போது உருவம் இரண்டாகிவிடும்/ அதன் வடிவத்தில் புதைந்துள்ள வார்த்தைப் பளிங்கில் கடந்துபோன வடிவம்” என்று கூறி, “அதன் விசித்திரமான கோடுகளையும் கட்டங்களையும் வரைந்து உயர்ந்த படிகத்திலிருக்கும் நாகரம்பற்றி நினைத்தவுடன் பிரவேசிக்கிறாள் சூனியக்காரி; நாகரம் கடல்காலத்தில் விளைந்த முத்தைவிடவும் தொன்மையான வடிவம், நாகரம் மிருதுவான ஜ்வாலையில் ஞாபகங்களை சிதறிவீசும் வார்த்தை; அதில் பிம்பங்கள் பெருகி விரிந்தும் ஒருவராலும் தொடரமுடியாத இருப்பை உணர்கிறார்கள் எல்லோரும். யாரிடமும் நாகரத்தைப்பற்றித் தெரிவிக்காமல் இருந்தார்கள். மறதியிலிருந்த உயிரினம் அது. வறண்ட நாட்களைப்போல முடிவடையாத பகல்வேளைகளைத் தேர்வுசெய்கிறது. அந்த நாகரத்திற்குள்ளிருந்த விருப்பு வெறுப்பற்ற பளிங்கு மிதக்கிற படிகமாக உருகிக்கொண்டிருக்கும். கல்வார்த்தையாக அசைவற்று அந்தரத்தில் நின்றிருந்தது. அதில் யாவர் இருப்பையும் அறியமுடியும். மிகச்சிறிய மின்னல்குளம் அது. படிக உடலுக்குள் இருப்பின்றிச் சுழன்று விண்ணில் கீறிப்படரும். வர்ஷிக்கப்பட்ட மழையில் கரைந்துபோன நாகரீகங்களின் சாம்பல்பூசிய மேல்தோடு கரும்புள்ளி, செம்புள்ளி தனியே சூனியத்தில் பதிந்து நடனமாடும். அதைத் தன் கைகளில் குலுக்கி மரணத்துக்கும் மீட்சிக்கும் இடையே உருட்டித் தாயமாடுகிறாள் சூனியக்காரி. குப்புற விழுந்த வார்த்தைகள் ரகசியமாகவும் அண்ணாந்தவை உடனடி விதியாகவும் நாக உலாவின் சூத்திரமாய் நாகரம் என்ற வரைபடம் விரிகிறது மாயச் சடங்குகளாய்” என்று ஆர்வத்துடன் இயங்குகிறது.

எந்த ஒன்றையும் ‘பாழி’ என்ற கண்ணியைக்கொண்டு இணைத்துப் பெருகும் இந்தப் புத்தகத்துள் காமோஸ் என்றும் டாவோ என்றும் பிரியும் பயணி மேற்கையும் கிழக்கையும் குறிக்க, காமோஸ்டாவோ & பாழி என்ற இரட்டை வேறுவிதமாகவும், வாசகன் & படைப்பு என்ற இரட்டை வேறுவிதமாகவும் இயங்குவதை உணர்ந்தாகவேண்டியது கட்டாயமே. மறலிப்பிச்சனின் தலையில் நெருஞ்சி முளைப்பது கிறிஸ்துவின் வலியுடனும், முத்துமாலைக்குள் உபாலி மறைந்திருப்பதும், பனிவரகு-அக்னிவரகு என்றும், ப்ரீகான் புனிதவாள், டமாஸ்கஸ் கத்தியாக கழைக்கூத்தாடிகளிடம் இருப்பதும், காமோஸ்டாவோவுக்குள் ஹிப்பலஸ் என்னும் பழைய மாலுமி என்றும் அருகர் சுபிதருக்கிடையில் சிற்பவயல், சித்திரவயல், கண்ணாடி வயல் எனப் புத்தகங்களாகப் பெருக்கமடைந்திருக்கிறது.

II

நேர்க்கோட்டில் பயணிக்காத, ‘சம்பவம்’ என்பதைக் கட்டாயமான ஒரு கோர்வையில் கொள்ளாத எந்தவொரு படைப்பை வாசிக்கும்போதும் தயக்கமும், வழக்கம்போலக் கேள்விகளும் எழுவது தவிர்க்கமுடியாததுதான். ஏழு புத்தகங்களாலான பாழியைப் படித்து முடித்தபின் ‘பாத்திரம், சம்பவம்’ அனைத்தும் ஒரு கட்டத்துக்குப்பின் உதிர்ந்து வீழ்கின்றன – பயனற்றவை என்று அவைகளைக் கூறிவிட முடியாவிட்டாலும், கதைசொல்லல் முறை அவற்றை மீறிக்கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு கட்டத்திலும். வாசக அனுபவம் என்பது, சில வாக்கியங்களைப் பற்றிக்கொண்டு, அடிக்கோடிட்டு, ‘இது இந்த வகையான பிரபஞ்சத்தைத் திறக்கிறது’ ‘இதன் அதிர்வுகள் இப்படியானவை’ ‘இதன் நீதி இது’ என்று அபத்தமாகக் குறுகிப்போய்ச் சீரழிவதைத் தவிர்த்து அதை மறுபடிச் சீர்ப்படுத்தும் எழுத்துக்கள் உள்ளனவென்றால் அவை பாழியின் மொழிவீச்சு வழியாகவோ அதை மீறியோதான் அமைய முடியும். ஏதோவொன்றை நிறுவுவதற்காக ஒரு படைப்பை உருவாக்கினேனென்று கூறும் ஒவ்வொரு படைப்பாளியும் ஒருவிதத்தில் வசீகரமற்று வீழ்வதாகத்தான் தோன்றுகிறது.

ஒவ்வொரு வாசகனும் வேறுபட்டவன் என்பதை ‘ஒவ்வொரு வரியும் வேறுபட்டது’ என்னும் வாக்கியம் மேலும் வலுவூட்டும். இஸ்ரேலிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்காகவும் தனித்தனியாகக் கடவுளால் வேத ஆகமம் இயற்றப்பட்டதாகவும், எத்தனை வாசகர்கள் பைபிளுக்கு உள்ளார்களோ அத்தனை பைபிள்கள் இயற்றப்பட்டிருக்கின்றன என்று ஒரு ஸ்பானிய கபாலிஸ்ட் கூறியதாக போர்ஹேஸின் உரை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது. இதன்வழி பார்க்கையில் ‘என் படைப்பின் முக்கிய இழைகளை நீ கையகப்படுத்தத் தவறிவிட்டாய்’ என்று எந்தவொரு படைப்பாளியும் எந்தவொரு வாசகனையும் குற்றம்சாட்டவே முடியாது. வாசிப்பின் மூலமாக ஏற்படும் பெருக்கம்தான் வசீகரமானது. வசீகரம்தான் புதுவிதமான முயற்சிகளுக்குப் பெரும் பலமும்கூட.

‘பாழி என்ன சொல்லவருகிறது’ என்பதைவிட அபத்தமாக, படைப்பை இழிவுபடுத்தும் கேள்வி எதுவும் இருக்க முடியாது. ‘எல்லாக் கதைகளிலும் முடிவில் நீதியை எதிர்பார்க்கி்றார்கள்’ என்று ‘நம்காலத்து நாயகன்’ புத்தகத்தின் தொடக்கத்தில் சலிப்புடன் கூறப்பட்ட நிலைமை இன்னும் இருக்குமேயானால் அது பரிதாபம்தான் – பீடிகைகளை அலங்காரங்கள் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். குஸ்தாவ் க்ளிம்ட்டின் ஓவியங்களிலுள்ள நுணுக்கமான அலங்கார, ஆபரண அலங்காரத்தன்மையை வியந்துகொண்டிருக்கும்போது, க்ளிம்ட் தன் ஓவியப் பெண்களை முதலில் நிர்வாணமாக வரைந்து பின் அதன்மேல் ஆடைகளை வரைந்தார் என்று தெரியவருகையில் நாம் என்ன அர்த்தங்கற்பித்துக்கொள்ளமுடியும்? இந்தக் கட்டத்துக்குப்பின் நாம் பார்க்கும் ஓவியங்களிலுள்ள ஆடை ஆபரணங்களின் நுண்ணிய வேலைப்பாடுகளனைத்தும் பெண்ணுடலின் ரோமச்சிக்கல்களின் நுண்மையைக்கூட நினைவுபடுத்தக்கூடும். நிர்வாணமென்பதை மறைக்கப் போர்த்தப்படும் ஆடை நிர்வாணத்தை அதிகரிக்கவே செய்கிறதென்ற – வினோதமாகத் தோன்றும் எளிய விஷயத்தை உணர்வதன்மூலமும் பாழிக்குள் நுழைய முடியும்.

நிர்வாணமென்பதை மறைக்கப் போர்த்தப்படும் ஆடை நிர்வாணத்தை அதிகரிக்கவே செய்கிறதென்ற – வினோதமாகத் தோன்றும் எளிய விஷயத்தை உணர்வதன்மூலமும் பாழிக்குள் நுழைய முடியும்.

“சில விளைவுகளை மட்டும் கத்திரித்துவிடுவதன்மூலம் வெவ்வேறு இடங்களில் உருவாகும் துளைவழிப் பாயும் வெவ்வேறு நீரோட்டங்கள் கலந்து கலந்து பெரும் கலக்கமொன்றை முன்பாக விசிறிச் செல்கின்றன” என்பதைப் போன்ற வாக்கியங்கள் மூலமாகவும் பாழியை விவரிக்க முடியும். அறியப்பட்டவை, அறியப்படாதவை, இருப்பவை, கற்பனை செய்யப்பட்டவை, இல்லாதிருப்பவை போன்று கணக்கற்ற நூலிழைகள் மூலமாகப் பின்னிப் பின்னி அவிழ்க்கப்படும் இந்தச் சால்வையில் அனைத்து இழைகளுடனும் வாசகன் பரிச்சயம்பெற்றிருப்பது சாத்தியமில்லை; தனக்குப் பரிச்சயமான சிலவற்றைப் பற்றிக்கொண்டு ஒரு பிரத்யேகமான வாசிப்புச் சங்கிலித்தொடரை உருவாக்கிக்கொள்கிறான் – மீதமிருப்பவற்றையும் பிற வாசிப்புக்கள் கவனித்துக்கொள்ளும். இதுபோன்ற encyclopedically swollen படைப்புக்களின் பிரத்யேகத்தன்மை அதுதான் என்று தோன்றுகிறது. வாசிப்பு தொடரத் தொடர, காமாஸ்டாவோ பயணியா, பாழி பயணியா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. பாழியின் காலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை, அல்லது சிதைக்கப்பட்ட காலங்களுக்குள் உலவுபவள் அவளா என்றும் நினைக்க வேண்டியுள்ளது. பாழியின் உள்ளே அலைவுறும் பாத்திரங்களில் பரிச்சயமானவை பரிச்சயமற்றவை உருமாற்றமடைந்தவை என்பவைகளைத் தவிர்த்து – முழுதாகத் தவிர்த்து, அனைத்தையும் பரிச்சயமற்றவைகளாகவே கொள்ள முயல்கிறேன். ஒவ்வொருவரையும் கடந்தபின்னரே அவரவர் முகம் உருப்பெறுகிறது, ஒரு கனவு போல். ஒவ்வொரு வரியும் தவிர்க்கவியலாத மறதியை என்னுள் விசிறிச்செல்கிறது. கடைசியில் பார்த்தால் காணாமல் போயிருப்பது ‘சம்பவம்’ என்பது மட்டுமே: எதையாவது ஸ்தாபிக்க விரும்பும் படைப்புகளைவிட, வாசிப்பை எவ்வகையில் மாற்றமடையச் செய்யலாமென்றும் யோசிக்க உதவும் படைப்புகளே தனித்துவம் பெறும். புத்தகத்தினுள் விரியும் தானியம் பற்றி, அந்தகம் பற்றி, தேவதாசிகள், கனிகள், மதங்கள், ஜனரஞ்சகம் மீதான சாடல்கள் பற்றித் தனித்தனியாக அலசுவதும் ஒருவகையில் தேவைதான் என்றாலும்கூட அவற்றைத் தாண்டியும் வாசிப்பு நீளமுடியுமென்றேதான் தோன்றுகிறது. உடனுக்குடன் வாசிப்பில் லாபத்தை எதிர்பார்க்கும் நுகர்வோர் மனப்பான்மைதான் இந்த வகைக்கான வாசிப்புக்குக் குறுக்காகக் கிடக்கும் மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கக்கூடும்.

பாழியின் வாசகங்களைவிடவும் வாசகன்மேல் அது பதிக்கும் தனது இயக்கம்தான் முக்கியமானதாகப் படுகிறது. மொத்தமான ஒரு கற்பனை, ‘இடமற்ற தனி வார்த்தையின் அலைவு’ என்று கூறிக்கொள்ளும் பாழி என்ற வாகனம் வழியாகத் தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் தன்னிஷ்டத்துக்கு உருமாற்றியும் இடம்பெயர்த்தும் விவரித்துக்கொண்டும் சாடிக்கொண்டும் செல்கிறது. இந்தக் கற்பனையின் எல்லைகளை வரையறுத்துக் கூறமுடியாததால் படைப்பும் எல்லைகளுக்குள் அடங்காமல், தீராததாக (inexhaustible) இருக்கிறது. எதையும் நேரடியாகக் கூறிவிடுவதில் விருப்பமற்ற ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனம், நேரடியாக அந்தப் புத்தகத்தைப் பற்றி இருக்க முடியாதோ என்று தோன்றும். பிடிபட்டுத் தேங்கி நின்றுவிடுவதில் இந்தப் புத்தகத்துக்கிருக்கும் வெறுப்பு, தவிர்க்க இயலாதபடிக்கு ஒரு கட்டத்தில் வாசக அனுபவத்துள்ளும் நுழையத்தான் செய்யும். படித்தவை படிக்காதவை என்பதற்கும் அறிந்தவை அறியாதவை என்பதற்குமிடையிலுள்ள நிச்சயமான வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. இதற்குள் ஒரு வாசகன் அறியாத, படிக்காத இழைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த வினாடி பார்க்கும் தண்ணீர் சென்ற வினாடி பார்த்த தண்ணீர் அல்ல என்ற ஹெராக்ளிட்டஸின் நதி போலத்தான் இந்த வாக்கியங்களும். இயக்கத்தை நினைவுபடுத்திக்கொண்டேயிருப்பவை. இதற்கு அர்த்தம் தேவையென்றால், யுலிஸஸ், ஃபின்னிகன்ஸ் வேக் போன்ற புத்தகங்களில் கூறப்படும் பிரம்மாண்டமான பட்டியல்களுக்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்? “Horseness is the whatness of allhorse” என்ற ஜாய்ஸின் வாக்கியமும், “The rose has no why, it flowers because it flowers” என்று போர்ஹேஸ் மேற்கோள் காட்டும் வாக்கியமுமே இவ்வகை எழுத்துக்களின் உள்ளே உறைந்திருக்கும் பிரம்மாண்டத்தை நம்முன் விரிக்கின்றன. “அது இதுவாயிருந்திருக்கக்கூடும், இது அதுவாயிருந்திருக்கக்கூடும்” என்று புத்தகத்தினுள் முழுதுமாகப் பரவியிருக்கும் தொனி சற்று ஆயாசமடையச்செய்தாலும், ஒற்றைத்தன்மையைச் சிதைக்கப் பயன்படும் முக்கிய ஆயுதமும் அதுவே. “இயற்கையிலிருந்த ஆழமான நீர் உரு வேசையாக இருக்கலாம்”, “நூறு வர்ணங்களுடைய விண்மனிதர்கள் ஏழுபங்காகப் பிரித்து எழுதிய இதிகாசம் ஒரே முத்தின் அர்த்தம்தான்” என்றும், இதுபோலும் புத்தகத்தினுள் விரவிக்கிடக்கும் எண்ணற்ற வாக்கியங்களில் முடிவுறும் ‘லாம்’ ‘தான்’ ‘கூடும்’ என்ற பகுதிகள், “எதையும் ஏன் அதுவாகவே பார்க்கிறீர்கள்” என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த வகை வரிகளை ஏராளமாகக் கொண்டுள்ள புத்தகத்தை நமது நினைவிலிருந்து கழற்றிவிட்டு, வேறு ஏதாவதொன்றைப்பற்றி ‘அறியவோ’ ‘படிக்கவோ’ முயல்கையில் அவை அனைத்தையும் இந்த எழுத்துக்களுக்குள் பொருத்திப் பார்க்கத் தூண்டப்படும் infectious விருப்பம் தூண்டப்படுவது அதியர்த்தக்கற்பிப்பா அல்லது இவ்வகை எழுத்தின்முன் வாசகன் அடையும் சரணாகதியா என்பது இன்னும் பிடிபடவில்லை. “இந்தப் புத்தகம்?” என்ற பணிவான கேள்விக்கு “அதுதான், ஒரு பழம்தான்” என்ற பதிலைக்கூட நாம் பெறமுடியும். “உயிர்கலந்த உப்பின் தொன்மைதான் இசை” (பக்கம் 337) என்னும் வாக்கியம் என்ன தொனியில் எழுதப்பட்டுள்ளதோ அதே தொனியில்தான் இந்தப் புத்தகம்பற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதில் பெறமுடியும். ஒருவகையில் பார்த்தால், இதன் அனைத்துப் பக்கங்களிலும் பதில்கள்தான் நிரம்பிக்கிடக்கின்றன. இடைவெளியற்று வரிசையாக நூற்றுக்கணக்கான பதில்களை எதிர்நோக்கும்போது நம்பிக்கையின்மையால் மனம் ஸ்தம்பித்துவிடும் செயல்தான் குறிப்பிட்ட அளவுக்குமேல் பாழியை மொத்தமாகப் படிக்கவிடாமல் தடுப்பது. “எரியும் பேழைக்குள் இயங்கும் கண்ணாடிச் சிற்பம் விதிஷா”, “உடைமாற்றி இளவரசியாகத் திரும்பியது கண்ணாடி” போன்ற வாக்கியங்கள், வாசிப்பு ஓட்டத்தைத் திடீரெனத் துண்டித்து பிரமிப்புக்குள் அழைத்துச்சென்றுவிடுவதும் ஒரு காரணம். “காட்டுமிராண்டிகளை கிரேக்கர்கள் அந்தப் பெயரால் அழைத்தது ஏனென்றால், மெத்தப் படித்த கிரேக்கக் காதுகளுக்கு அவர்களது மொழி குரைப்பு போலிருந்தது, எனவே அவர்களால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று கிரேக்கர்கள் யூகித்தார்கள்” என்று Foucault’s Pendulum நாவலில் ஒரு வரி வருகிறது. ‘இதுதான் இலக்கியம், இதுதான் கலை, இதுதான் படைப்பு’ என்று படைப்பாளி ஒன்றைக் கண்டுபிடிக்கும் தருணம் அவனுக்கு அபாரமான ஒன்றாயிருந்தாலும்கூட, வாசகனிடம் படைப்பாளி தோற்கும் தருணமும் மிகத் துல்லியமாக அதுதான். ‘இதுதான்’ என்ற கண்டுபிடிப்புத்தான் கொடூரமான முட்டுச் சந்து. ஒரு மொழி, குலைப்பு போலத் தோன்றுவதைவிட என்ன பெரிய அநியாயம் இருக்க முடியும்? ஜாய்ஸின் மொழியில் poulaphouca poulaphouca என்பதை நீர்வீழ்ச்சி என்று நாம் புரிந்துகொள்ளமுடிந்தால், meaow என்பது சாந்தமான பூனை, mrkgnao என்பது கோபம்கொண்ட பூனை என்று உணர்ந்துகொள்ளமுடிந்தால், “well, tolloll” என்பதை “well, tell all” என்று பிரித்துப் படிக்கப் பொறுமை இருந்தால், “பெண்ணின் கருவறையில் வார்த்தை தசையாகிறது, ஆனால் சிருஷ்டிகர்த்தாவின் மனத்தில் கடந்துசெல்லும் யாது தசையும் வார்த்தையாகி கடக்கமுடியாததாகிறது. இதுதான் பின்சிருஷ்டி” என்னும் ஜாய்ஸின் வாக்கியத்திலுள்ள “சிருஷ்டிகர்த்தா (maker)” என்பதைப் “படைப்பாளி” என்று வாசித்துப்பார்க்கத் தோன்றினால், “அவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று குழம்பும் காவலர்கள்” (பக்கம் 486) என்னும் வாக்கியத்தின்வழியாக பாழிக்குள் மறுபடி நுழைவதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும். நுழைய விருப்பம் மட்டும்தான் தேவை. விருப்பமின்றி நுழைவது பற்றியும், முன்முடிவுகளை வைத்துக்கொண்டு வெறுமனே மதிப்பிடுவதும் எப்படியென்றுதான் தெரியவில்லை. ஒரு கட்டத்துக்குமேல் படைப்புக்குள் இருக்கும் “நேர்த்தி” என்னும் விஷயம் சுவாரஸ்யமற்றதாகப் போய்விடுகிறது. ‘புஷ்பராகம்’ என்று நமக்கு அறிமுகமானதை ‘புஸ்பராகம்’ என்றும், ‘புரள்தல்’, ‘முரட்டு’ என்று நமக்கு அறிமுகமானவற்றைப் ‘புறழ்தல், முறட்டு’ என்று குறிப்பிடுவதும் வெறும் எழுத்துப்பிழைகள் மட்டும் என்று கூறிவிடமுடியவில்லை. குறிப்பிட்ட ஒரு தொனியில் இயங்கும் படைப்புகள் ‘தவறுகள்’ என்று கற்பிக்கப்பட்டவை அர்த்தமிழந்து சரி/தவறு என்னும் இருதுருவக் குறுக்கத்துக்குள் சிக்காமல் நழுவுகின்றன. ‘பாழியில் தேவதாசிகள்’ ‘பாழியில் பௌத்தம் பாழியில் சமணம்’ ‘பாழியில் இசை’ என்ற வகைப்பாடுகளில் ஆர்வமற்று நழுவும் வாசிப்பே பாழி என்ற இரு அட்டைகளுக்கு மத்தியிலான பக்கங்களைத் தாண்டி, அவை உருவாக்கும் இயக்கத்தைத் தாண்டி, இவை அனைத்தையும் தொடர்ந்து யூகித்துக்கொண்டேயிருக்கும் திறந்த பரப்புக்குள் எளிதில் நுழையும் என்பது என் அபிப்ராயம். அங்கே ‘கல் பல்லயம்’ என்பதற்கும், ட்ராய் யுத்தத்தில் ஏதெனா உருவாக்கிய ‘பல்லாஸ்’ அரணுக்கும் தொடர்புண்டு, மும்முலைப் பெண்ணுக்கும், ஷ்வார்ஸெனெகரின் “Total Recall”க்கும் பார்வதியின் உதிர்ந்து விழுந்த மூன்றாவது மார்புக்கும் இடமுண்டு. எந்தவொரு பிரதிமேலும் வைக்கும் இனம்புரியாத மரியாதை வெறும் சரணாகதிக்கே அழைத்துச்செல்லும். “சுடரைப் படத்தில் விழுங்கி நாகத்தின் திரி நாக்கில் நெளிந்த சுவர் உள் ஈரம் அணையாமல் சுழன்று குமிழ்விட அண்ணாந்து சீறும்சுழல் உடல் துள்ளிப் பறந்தது நீலநாகம்” (பக்கம் 197) என்பதற்கும், “அரவுவந்து படமெடுக்க தலைவிளக்கை சுடரோடு பொத்தி அணைக்க இருளானது கூடல்” (பக்கம் 280) என்பதற்கும் இடையிலுள்ள நிலையின்மையே புத்தகம் முழுவதும் ததும்புகிறது. சுடரே நாகமாகிறது, ஒரு கட்டத்தில் நாகம் சுடரை அணைக்கிறது. அப்படியானால் சுடர் நாகமா, நாகம் சுடரா, சுடர் சுடரை அணைக்கமுடியுமா, நாகம் நாகத்தை அணைத்ததென்று கூறமுடியுமா என்று தொடரும் கேள்விகள்தான் என்பதைப்பற்றியும் ‘ஒரு’ பதிலைப்பெறுவதைத் தங்களால் இயன்றளவு அழித்தொழிக்கின்றன.

“நூறு வர்ணங்களுடைய விண்மனிதர்கள் ஏழுபங்காகப் பிரித்து எழுதிய இதிகாசம் ஒரே முத்தின் அர்த்தம்தான்”

இருந்தாலும், “குருவே உன் கனிகளுக்காக நீதான் இன்னும் பழுக்கவில்லை” (பக்கம் 256), “புத்தரை நாடிய தேவதாசியோ சொர்க்கத்தையும் கடவுளையும் இசையில் படைத்துக்காட்டி” (பக்கம் 187), “குருடான இருட்டில் பல புதையல்களைக் கால்களின் கிளைகளில் ஸ்பரிசித்தான் குருடன், துறவி அவனைப் பின்தொடர்ந்தான் சீடனாய்” (பக்கம் 105) போன்ற வரிகள் குறிக்கும் terminal distortion ஒருவிதமான சங்கடத்தையும் ஏற்படுத்துகின்றன. ‘சொர்க்கம்’ என்பதற்குப்பதிலாக ‘இசை’ என்பதை நிறுவமுயல்வதும், அரேபிய இரவுகளின் மூலக்கதையொன்றில் பிடிபடும் விஷயமான “ஒரு கண்ணால் பார்க்கும் புதையலைவிட இரண்டு கண்களாலும் பார்க்கும் புதையல் அதிகப்படியாக அல்லவா இருக்க வேண்டும்” என்ற பிரமிப்புக் கூற்றைத் தவிர்த்து, “கால்களின் கிளைகளில் குருடான இருட்டில் பல புதையல்களை ஸ்பர்சிப்பதாகக்” கூறுவது ஒரு திசைதிரும்பல் மட்டுமே என்று தோன்றுகிறது. அரிஸ்டாட்டில் மீதான் சாடல்களும் ridicule of every virtue, praise of every vice என்ற அளவிலேயே உள்ளது. இவைகளனைத்தையும் கொண்டு, பிறவற்றையும் கொண்டு, ‘பாழி’ என்ற படைப்புபற்றித் தனியானதொரு பிம்பத்தை உருவாக்கமுயன்றால் அது சங்கடம்தான். Thebesன் பூசாரிகள்போல ஒரு மந்திர வார்த்தைதான் தேவை இதன் கதவுகளைத் திறக்க. அதன்பிறகு நாமும் பாழியை எழுதிக்கொண்டிருக்க முடியும், பாழி நம்மை விமர்சித்துக்கொண்டிருக்கவும் முடியும்.


தேனி ஆண்டிப்பட்டியில் இருந்து வெளியாகும் தொனி சிற்றிதழில் வெளியான கட்டுரையின் மறுபிரசுரம் இது.

இந்தக் கட்டுரையைத் தேடியெடுத்து மின்னஞ்சலில் அனுப்பிய எழுத்தாளர் ரவிஷங்கரின் நண்பர், MRC of CMFRI ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஜி. தமிழ்மணி அவர்களுக்கு நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்