நிறங்களாக மாறுதல்

< 1 நிமிட வாசிப்பு

என்னை மென்மையான நிறங்களாக
மாற்றும் கணங்களிடை
அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்
அவை வசித்துக்கொள்ளவென
கோடுகளை அவாவி நிற்கின்றன
எனது ஆடையில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தினுள்
அத்துமீறி புகுர எத்தனிக்கிறது
அதற்கு உகந்த கோடுகளை
உடன் வரைந்து கொடுக்க
நான் கைதேர்ந்த ஓவியனில்லை
ஹயாவின் சித்திரக் கொப்பியைத்
திறந்து பார்க்கிறேன்
எல்லாச் சித்திரங்களுமே
நிறங்களை அணிந்திருந்தன
சிதறிக் கிடக்கும் நிறங்கள் ஓய்வெடுக்க
தோதான கோடுகளின்றி அவதியுற்றன
இறுதியில் அறைச் சுவரில்
ஹயா எப்போதோ கிறுக்கி வைத்திருந்த
சிக்கலான கோடுகளினுள்
இடம் பிடித்துக்கொண்டன
அது தொலைந்துபோன
ஹயாவின் கரடி பொம்மையின்
சாயலை ஒத்திருந்தது
இப்போது மகவின் கோடுகளைப் பூரத்தி செய்த
எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்
நிறங்களாக வசிப்பதென்பது
அத்துணை கொடுப்பினை மிகுந்தது
அது எல்லோர்க்கும் வாய்ப்பதுமில்லை

1 thought on “நிறங்களாக மாறுதல்”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்