இசை கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

நான்

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.
நான் பதறியெழுந்து ஓடத்துவங்கினேன்.
நான் துரத்தினேன்.
நான் ஓடினேன்.
நான் விடாது துரத்தினேன்.
நான் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டு வாயைப் பொத்திக் கொண்டேன்.
நான் கண்டுபிடித்து கழுத்தில் ஒரு கிழிகிழித்தேன்.
நான் அலறி அரற்றி திரும்ப ஓடினேன்.
நான் ஓட்டத்திற்குள் காலை விட்டேன்.
நான் அந்தரத்தில் பறந்து நெஞ்சுடைய விழுந்தேன்.
நான் ஓங்கி உதைத்தேன்.
நான் மன்றாடிக் கும்பிட்டேன்.
நான் ஓங்கி ஓங்கி மிதித்தேன்
நான் சில்லு சில்லாய்ச் சிதறினேன்.
நான் கடித்து வைத்தேன்
நான் கண்ணீர் வடித்தேன்.


முதல் கழுகு

ஈயும் எறும்பும் மொய்க்க
நாற்றமெழுப்பிக் கிடக்கிறேன்.
அதிகாலையில் என்னைக் கண்ட முதல்மனிதன்
ஆண்டாண்டு காலமாய்
நான் தூக்கிச் சுமந்த பெயரை அழித்துப் போட்டான்.
சின்னஞ்சிறு கொலைகளிலிருந்து
என்னை விடுவித்துவிட்டமைக்காக
அவனுக்கு என் நன்றி.
நொடிக்கு நொடி
என்னை அறுத்துக் கொண்டிருந்த
அச்சத்தின் மீது ஏறிப் போயிருக்கிறது ரயில்.
எனில், இனி நான் ஏறப் போவது
இரண்டாவது சொர்க்கரதம்.
உச்சிவானில் முதல் கழுகு உதித்து விட்டது.
நாய்களின் மூளையில் திருவிழாக் கனவு
தவறி என் நெஞ்சத்தைக் கொத்தி
ஏக்கத்தை உண்டுவிட்ட காகமொன்று
கொஞ்ச தூரத்தில் எரிந்து விழுகிறது.


அற்புதம்

அம்மி பறக்கும் ஆடியில்
காற்றுக்கெதிரே
போய்க் கொண்டிருந்தேன்.
காற்று
என் ஹெல்மெட்டை அடித்துப் போய் விட்டது.
அம்மி
என் தலையை.

1 thought on “இசை கவிதைகள்”

  1. வழக்கமான இசை கவிதைகள் போல் அல்லாமல் ஏனோ ஏதோ தவறுகிறது. அத்தனை ஆழமாக இல்லையே. இசை ஓர் அசாதாரண கவிஞன். இப்படி வகை இலக்கிய வைகராக்களில் மாட்டும்போது தடுமாறுகிறான் போல. அவன் கவிதையை அவனை எழுதுவிடுங்கள். அது யதார்த்தக் கவிதை. மனத்தோடு பேசும் கவிதை.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்