தானோஸ் (எ) தானடோசேஷ்வரன்

5 நிமிட வாசிப்பு

மார்வல் காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களுக்கும் நமது மாரி 2-க்கும் ஓர் ஒன்றுவிட்ட சித்தப்பா மகனுடைய பங்காளி சம்பந்தம் இருக்கிறது.

பரவலாக ஸ்யூஸ், பொசைடன், ஹெரா, ஹேடீஸ் (Zeus, Poseidon, Hera, Hades) என்ற கிரேக்கக் கடவுள்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்களின் அப்பா-ஆத்தாள் என அறியப்படும் டைட்டன்ஸில் ஒருவர்தான் தானடோஸ். நிக்ஸ் (இருட்டு அல்லது இரவு) என்னும் கடவுளுக்கும் எரிபஸ் (வெற்றிடம்) என்னும் கடவுளுக்கும் பிறந்தவர். இவரை மரணத்தின் அதிபதி என்று கருதுவர். இந்தத் தானடோசேஷ்வரனாலேதான் மாரி 2 வையும் மார்வல் காமிக்ஸையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் மாபாதகம் செய்தேன்.

1970. மார்வல் காமிக்ஸ் இரயிலில் வேர்க்கடலை விற்பது போல் காமிக் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த சமயம். கல்லூரியில் ஓர் உளவியல் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்த ஜிம் ஸ்டார்லினுக்கு மார்வலோடு சேர்ந்து கடலை விற்க ஆசை வந்து தானோஸ் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொடுத்தார். தானடோஸ் என்ற மரணத்தின் கடவுள் மற்றும் சில கிரேக்க வீரர்களின் பெயர், குண மற்றும் உருவத் திரிபாகத்தான் இந்த தானோஸ் கதாபாத்திரம் எனக்குத் தோன்றுகிறது.

தானோஸ் உருவாக்கிய ஜிம் ஸ்டார்லின்

அவன்ஜர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) திரைப்படத்தின் முன்னோட்டத்தில், “Dread it. Run from it. Destiny still arrives.” என்று தானோஸாய் நடிக்கும் ஜாஷ் ப்ராலின் குரல்வளையிலிருந்து சொல்லும் வசனத்தைக் கேட்டு என் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமிலா ஓர் உருண்டை உருண்டது. அதுவரை வெளி வந்திருந்த அனைத்து மார்வல் திரைப்படங்களிலும் தானோஸ்ஸைப் பற்றிச் சரியான அளவிற்கு பில்ட் அப் கொடுத்து வைத்திருந்தனர். அந்த ஈர்ப்பின் காரணமாகவே, இன்பினிட்டி காண்ட்லெட், இன்பினிட்டி க்ருசேட்ஸ், வார்லாக் க்ராணிகில்ஸ் (Infinity Gauntlet, Infinity Crusades, Warlock Chronicles) என்று தானோஸ் இடம்பெற்ற பல காமிக் புத்தக வரிசைகளைப் படித்துவிட்டு அதன் பின் படம் பார்க்கச் சென்றேன். சமந்தாவிற்காக சீமராஜா பார்க்கச் சென்ற கதைதான் எனக்கு ஆனது. தயாரிப்பாளர்களின் கட்டாயத்தின் பேரில் தானோஸின் கதாபாத்திர வளர்ச்சியை மார்வல் திரைப்படங்களில் முழுவதுமாக விவரிக்காமல் விட்டனர் போலும். இதே கட்டாயத்தின் பேரில்தான் மாரி 2 படத்தின் வில்லனுக்கு தானடோஸ் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். மாரி 2 கதைக்கும் தானடோஸுக்கும் சுத்தமாக சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தானோஸ் பாத்திரத்தின் ஆழத்தையும் திடத்தையும் உலகிற்குப் பறைசாற்றும் ஒரு சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.

மார்வல் காமிக் கதைப்படி சனிக்கிரகத்தின் நிலவான டைட்டனில் வாழ்ந்து வரும் இடர்னல்ஸ் (Eternals) என்ற இனத்தில் பிறந்தவன் தானோஸ். அங்கே டீவியண்ட் (Deviant) இன மரபணுவைப் பெற்றுத் தோற்றத்தில் இடர்ன்ல்ஸ் போல் இல்லாமல் பிறந்தவன். ஆனால் அந்த இனத்திற்கும் மீறிய அறிவாற்றலையும் சக்தியையும் பெற்றிருந்தான். மேற்கண்ட காரணங்களால் தனிமைப்படுத்தப்பட்ட தானோஸ் சூனியவாதக் கோட்பாடுகளை (Nihilism) அரவணைத்துக்கொண்டு மரணத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தித் தன் துணையாக்கிக்கொள்ள முயல ஆரம்பித்தான். பின்னர் வெளிவந்த மார்வல் திரைப்படங்களிலும் ஜிம் ஸ்டார்லின் உருவாக்கிய காமிக்ஸ் வரிசைகளிலும் இந்த மரணத்தை ஓர் உருபொருளாக்கினர்.

தானோஸும் மரண நங்கையும்

தானோஸ் செய்யும் அதி பயங்கர சாகசங்களுக்கும் கருணையேயில்லாமல் செய்யும் இனப்படுகொலைகளுக்கும் காரணம், இந்த மரணம் என்னும் நங்கையைத் தன் துணைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணமே. பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான். காமிக்கில் இடம்பெறும் இந்தப் பின்கதை திரைப்படத்தில் இடம்பெறவேயில்லை. காமிக்கில் இந்த மரணத்துடன் தானோஸ் உரையாடும் காட்சிகள் அனைத்தும் உண்மையா அல்லது அவை அவனது மனவுலகில் நடக்கின்றனவா எனப் பிரித்தறிவது கடினம். மரணம், தானோஸை மதியாதவளாய், தனது பணியாளாக இருக்கும் ஒரு கீழ்த்தர உயிரினம் வழியாகத்தான் தானோஸுடன் உரையாடுவாள்.

மேற்கத்தியப் படைப்பாளர்களுக்குக் கிரேக்கத் தொன்மவியலில் அப்படி என்னதான் மோகம் இருக்கிறதோ! தெரியவில்லை. தானோஸ் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், செய்து முடித்துவிட்டும் முடிக்காமலும் படும் துயரங்களிலும் சிஸிபஸ் மற்றும் ஹெர்குலீஸ் (Sisyphus & Hercules) என்ற இரண்டு கிரேக்க வீரர்களின் கதையைக் காணலாம்.

ஸ்யூஸுக்குக் கள்ளத்தனமாகப் பிறந்த ஒரே தவறைச் செய்த ஹெர்குலீஸை சிறு வயதிலேயே கொல்ல, ஸ்யூஸின் மனைவி ஹெரா விஷப்பாம்புகளை அனுப்பினாள். அவற்றை ஹெர்குலீஸ் கையால் பிடித்து விளையாடி அனைவரையும் பயத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தினான். ஆனால் பின்னாளில் ஹெராவால் பைத்தியமாக்கப்பட்டு, தன் மனைவி குழந்தைகளை கொன்றான் ஹெர்குலீஸ். அந்தப் பைத்தியம் தெளிந்த பின், ஹெரா செய்த சதியால் அரசப்பதவியை இழந்தான். பதவி இழந்தவனிடமே அடிமையாகப் பணி புரிந்தான். அவனை அடிமைப்படுத்திய யுரிஸ்தியஸ் என்னும் அரசன் ஹெர்குலீஸுக்கு பன்னிரெண்டு சாகசங்களைச் செய்து முடிக்க ஆணையிட்டான். சராசரி மனிதனால் செய்து முடிக்க முடியாத அந்தப் பன்னிரெண்டு சாகசங்களை ஹெர்குலீஸ் எளிதில் முடித்துவிட்டு, யுரிஸ்தியஸை வீழ்த்தினான். பின் செய்வதறியாது எந்தவித நோக்கமும், குறிக்கோளும் இல்லாது உலகையே சுற்றி வந்தான். அப்படிச் சுற்றி வரும்போது, பல அரசர்களை வீழ்த்தியும், பல கொலைகளைச் செய்தும், பலப் பெண்களை மணந்தும் ஒரு நாடோடியாய் வாழ்ந்திறந்தான்.

ஹெர்குலீஸைப் போலவே தானோஸும் தன் தாயாலேயே விரும்பப்படாத குழந்தை. சிறுவயதிலேயே தன் இனத்தினரால் ஒடுக்கப்பட்ட தானோஸ், சூனியவாதக் கோட்பாடுகளாலும் அவன்மீது அவன் இனத்தினர் செய்த பல்வேறு சோதனைகளாலும் மரணம் எனும் அந்தப் பெண்ணாலும் பித்து நிலையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு இனப்படுகொலைகளை தன் இனத்திலிருந்தே துவங்கினான். அப்போதிலிருந்து அவனை ‘மேட் டைட்டன்’ (Mad Titan) என்றுதான் பேரண்டத்தில் அழைப்பர். ஹெர்குலீஸ் போலவே பித்துப் பிடித்துப்போய், பேரண்டத்தில் பல கிரகங்களுக்கும் விண்மீன் மண்டலத்திற்கும் சென்று, பெண்களை மணந்து, பிள்ளைகள் பெற்று, பின் அவர்களைக் கொன்றான். அப்படி ஒவ்வொரு கிரகமாய்க் கொன்று வீழ்த்தி ஒரு குறிக்கோளே இல்லாமல் வாழ்ந்தவனுக்குக் குறிக்கோளாக மரண நங்கை மீண்டும் அவனது வாழ்வில் வந்தாள்.

ஹெர்குலீஸைப் போலவே தானோஸ் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஒரு சராசரி மனிதன் எப்படி நடந்துகொள்வான் என்று அவ்வளவு எளிதில் நிர்ணயித்துவிட முடியாது. அவனுக்கே உரிய பாணியில் யாரும் எதிர்பாராத விதமாக ஒவ்வொரு முறையும் நடந்துகொள்வான்.

ஒரு மலை மேல் பாறையை உருட்டிச் செல்ல, சிகரம் அடைவதற்கு முன் பாறை கீழே உருண்டுவிடும். மறுபடியும் அதைச் சிகரத்திற்கு உருட்டிச் செல்ல வேண்டும். இது சிஸிபஸிற்குக் கொடுக்கப்பட்ட சாபம். அதே போல தானோஸுக்கு மன அமைதியும், நிம்மதியும் எட்டாக் கனியாய் ஒவ்வொரு கதையிலும் அமைந்துவிடும். மரண நங்கையைத் தன் துணைவியாக்கிக்கொள்ளும் தானோஸின் முயற்சி இத்தகையதுதான். இன்பினிட்டி காண்ட்லெட் கதை வரிசையின் முடிவில் தானோஸ் மொத்த பேரண்டத்தை ஆட்டிப்படைத்தழிக்கும் சக்தியைப் பெற்றிருந்தாலும் ஒரு க்ஷண நேரத்தில் தன்னிச்சையாகவே அதை விட்டுக் கொடுத்துவிடுவான். அதுவரை பேரண்டத்தின் முதல் எதிரியாகத் தோன்றிய தானோஸின் உண்மையான எண்ணம் அப்போது புலப்படும். அத்தகைய மாபெரும் சக்தி ஒருவரிடம் மட்டும் இருந்தால் ஆபத்து என்று தானோஸ் உணர்வான்.

ஆடம் வார்லாக்

அப்போதிலிருந்து ஆடம் வார்லாக் (இந்தக் கதாபாத்திரம் பற்றி எழுத அரூ குழுவினர் எனக்கு மற்றொரு வாய்ப்பு தர வேண்டும்) மற்றும் இன்பினிட்டி வாட்ச் (Infinity Watch) குழுவினருடன் சேர்ந்து பல முறை பேரண்டத்தை மிகப் பெரிய ஆபத்திலிருந்து மீட்கும் பணியை தானோஸ் செய்வான். ஆடம் வார்லாக்கின் அழைப்பிற்கு இணங்கி சில சமயம் ஆடமின் ஆல்டர் ஈகோக்களுக்கு எதிராகவே தானோஸ் பேரண்டத்தைப் பல முறை காப்பாற்றியிருக்கிறான். இதற்கு அவன் செய்யும் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செயல்களும் அறநெறி/நெறியற்றவை என்ற இரண்டிற்கும் நடுவில் எழுப்பப்பட்ட மிக மெல்லிய மதிற்சுவர் மேல் நடப்பது போலிருக்கும்.

பேரண்டத்தைக் காப்பாற்றத் தகாத செயல்கள் செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் முதல் அழைப்பு தானோஸுக்குத்தான் செல்லும். அந்தச் சமயங்களில் பல முறை பேரண்டத்தின் முழுமுதற் கடவுளாக மாறிவிட்ட போதும், அந்த பதவியை யோசிக்காமல் உதறிவிடுவான். காரணம், மரண நங்கை மீதிருந்த அடங்காத ஆசை.

2003இல் ‘மார்வல் யுனிவர்ஸ்: தி எண்ட்’ (Marvel Universe: The End) என்ற காமிக் தொடரில் ஜிம் ஸ்டார்லின் தானோஸுக்கு ஒரு முடிவு கட்டுவார். இதற்கு பின்னரும், இந்த ‘மேட் டைட்டனை’ ஜேசன் ஆரன் (Jason Aaron), ஜானதன் ஹிக்மான் (Jonathan Hickman) மற்றும் பல எழுத்தாளர்கள் தங்களின் கதைகளில் மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர். இவர்களின் ஒவ்வொரு காமிக் வரிசையின் முடிவிலும் தானோஸ் மரணத்தின் எல்லைக்கே போவான் அல்லது பேரண்டத்தில் யாருமே செய்ய முடியாத காரியத்தைச் செய்துவிட்டு எவராலும் அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவான். எதாவதொரு அந்தர பரிமாணத்திலோ, மீளவே முடியாத இடத்திலோ, நிலையிலோ இருப்பான். அந்த மீளா இடத்திலிருந்து அவனை மீட்டுத் தங்கள் பேரண்டத்து சாகசக் கதைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டனர் பிற எழுத்தாளர்கள். ஆனால் என் மனதில் பதிந்தது ஜிம் ஸ்டார்லினின் காமிக் புத்தக தானோஸ்தான் மற்றும் அவனின் முடிவு.

‘மார்வல் யுனிவர்ஸ்: தி எண்ட்’ தொடரில், தானோஸ் இந்தப் பேரண்டத்தைத் தனக்குள் அடக்கிக்கொள்வான். அப்போது அவனுடைய அன்புத் துணைவியான மரணத்திற்குத் தன்னையே தியாகம் செய்து பேரண்டத்தை உயிர்ப்பிக்க செல்வான். இதற்கு முன்னால், மரண நங்கை அவனிடம் முதல் முறை நேரடியாகப் பேசுவாள். முத்தமிடுவாள். அவன் தியாகத்திற்கு அங்கீகாரம் தந்துவிடுவாள். என் கருத்தில் தானோஸுக்குத் தக்க முடிவு இதுவே.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்