புனைவின் நிழல் விளையாட்டுகள்

8 நிமிட வாசிப்பு

புனைவில் பேசப்படும் எதுவும் நிஜத்தில் நடந்தேறிய அனுபவங்கள் மட்டுமன்று. அவ்வாறான அனுபவங்கள் பற்றிய புனைவு எழுதப்பட்டிருப்பினும் அவை ஆவணத்தன்மையுடன் எழுதப்படுவதில்லை. புனைவெழுத்தாளரின் முதன்மையான நோக்கம் “வாய்மையை எழுதுதல்” என்று சொல்லாம். யாருடைய வாய்மையுமன்றி எழுத்தாளர் தன்னகத்தே நிறைவுகொள்ளும் வாய்மை. பல கோணங்களில் எண்ணங்கள் மோதிக்கொண்டு உடைந்து விளைந்த ஒரு வாய்மை. விந்தையாக, அவர் வலிந்து கவனம் கொள்ளும் அனுபவங்கள் உணர்ச்சிநிலைகள் எதுவுமே நினைத்தது போல நூலில் சென்று முடிவடைவதில்லை. எப்போதும் எழுத்தாளரது மனதில் இருப்பதும் அச்சில் வெளிவருவதும் இருவேறு புனைவுகளே!

உர்சுலா லே க்வின் என்ற அமெரிக்க நாவலாசிரியர் ஒரு தனித்துவமான எழுத்தின்பால் அறியப்பட்டவர். ஹாலிவுட் திரைப்படங்களில் சற்றே மானுடத்தையும் பேசும் அறிபுனைவு திரைப்படங்கள் இருக்குமாயின் அவற்றில் பலவற்றிற்கும் நேரடியான அல்லது மறைமுகமான தூண்டுதலை ஏற்படுத்திய கதைகள் லே க்வினால் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயினும் லே க்வின் தன்னை அறிபுனைவு எழுத்தாளர் என்ற பதத்தால் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாகத் தன்னை நாவலாசிரியர் என்றே குறிப்பிட்டுக்கொள்கிறார். அறிபுனைவினை இலக்கியத்தின் பக்கத்தில் வைத்துக் காண விழியின்றி அறிவியிலின் பக்கத்தில் வைத்துக் குழப்பிக் கொள்ளுபவர்களது பிழையினால் வரும் பதம் இது என்கிறார்.

உர்சுலாவின் சிறுகதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து அவற்றை மீள்சிந்தனைக்குள்ளாக்கும்போது அவை ஆபரணங்களைப் பார்வைக்கு வைத்திருக்கும் பொன்மாளிகை போலத் தென்படும். இரவின் மொழி (The Language of the Night) என்ற கட்டுரைத் தொகுப்பில் அவர் பல இடங்களில் பேசிய உரைகள், எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்களில் எழுதிய முன்னுரைகள் ஆகியவற்றை முழுமையாக வாசிக்கையில் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் நுழைந்து அதன் படிநிலைகளைக் கண்டது போல உணர்வேற்பட்டது. சங்கக் கவிதைகளில் இருக்கும் காட்சியின்பம் போன்ற ஒரு பொதுமையான அழகியல் செயல்பாடுகள் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள் கொண்ட உள்ளங்கைகள் போல மாறுபட்டும் இருக்கும், ஒரு மாயபட்டறையைச் சுற்றுலா செய்தது போல இருந்தது.

இந்நூல் பெரிதும் அமெரிக்க இலக்கிய வாசகப் பரப்பினை மனதிற்கொண்டு பேசப்பட்ட எழுதப்பட்ட கட்டுரைகளால் நிறைந்திருக்கிறது. அன்றைய அமெரிக்க வாசக உளம் இன்றைய தமிழ் வாசகப் பரப்பில் நிகழும் சந்தேகங்கள், சச்சரவுகள், மனத்தடைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக இருப்பது இந்நூலின் முக்கியத்துவத்தினை அதிகரிக்கிறது. அதைப் பற்றிய ஒரு சிற்றறிமுகப் பார்வை இது. பல கருத்துகள் வெவ்வேறு இடங்களில் பேசப்பட்டிருப்பதால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுவது போன்ற உணர்வு எழுகிறது. அதை இந்நூலின் குறைபாடாகவும் கருதலாம்.

தன்னைத் தானே அறிமுகம் செய்தல், மீபுனைவு மற்றும் அறிபுனைவுகளைப் பற்றிய அவதானிப்புகள், நிஜத்தை முன்வைக்கும் புனைவுகள், வாய்மையைப் பேசுதல் மற்றும் எல்லைகளைக் கடத்தல் ஆகிய நிலைப்படிகளில் இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வரிசைப்படுத்தல் இந்நூலினை வாசிக்கும் வாசகர்களது நேரத்தைச் சேமிப்பதுடன் புனைவின் வீச்சினை (மீபுனைவு / அறிபுனைவுகளின் தனித்தன்மைகளின் வழியே) ஒற்றைச் சன்னலின் வழியே வந்து போகும் நாடகக் காட்சிகள் போல ஒருசேரக் கவனிக்கவும் வாய்ப்பேற்படுத்தித் தருகிறது. அறைக்குள் செல்லும் ஒருவனின் நிழல் மட்டும் அறைக்குள்ளேயே தங்கிக் கொள்வதைப் பற்றிய ஒரு கதையை உதாரணமாய்க் கொண்ட அற்புதமாக கட்டுரை வருகிறது. அதைப் போலவே உள்ளத்தின் ஆழத்தில் பல நிழல்களின் உருவங்களை விட்டுச் செல்கின்றன இக்கட்டுரைகள்.

உர்சுலா லே க்வின்

2

வன் அறிபுனைவெழுத்து இயற்பியல், வேதியல் மற்றும் வானியல் போன்ற வெகு சில துறைகளை மட்டுமே அறிபுனைவிற்குள் ஏற்றுக்கொள்ளும் மனம் சாதி பெருமை பேசும் சுருங்கிய மனத்தின் வகை போன்றது. புனைவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் கற்பிதங்கள் ஆங்கே உண்டு. தப்பித் தவறியும் மானுடவியல், சமூகவியல், உளவியல் ஏன் உயிரியல் போன்ற அறிவியல் துறைகளுக்கேகூட அங்கு இடம் இருப்பதில்லை. ஆனால் அறிபுனைவு என்பது அறிவியலின் ஒரு துணைப்பாடம் அல்ல; மாறாக அது இலக்கியத்தின் ஓர் அங்கம்; ஒரு வகைமை! அதனால் அதற்கு எதைவிடவும் மானுட உணர்வுகளையும், தனித்தனியாக நடமாடும் மனிதக் கிரகங்களின் வரலாற்றை ஆய்வதன் மூலம் கண்டறியப்பட வேண்டிய ஒட்டுமொத்த மானுட உண்மைகளையும் பேச வேண்டியது இன்றியமையாத பண்பாகிறது. பரந்துபட்ட தழுவலைப் பிரதானப்படுத்த வேண்டிய உலகக் காலத்தில் வீண்பெருமை பேசும் வறட்டுத்தனத்தை அறிபுனைவெழுத்து என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

பொதுவாக, வித்தியாசமான முகமுடைய ஏலியனோ, விண்வெளிக் கப்பல்களோ, மானுடர்கள் மீதுவிழும் நெருப்பு மழையோ இருந்தால்தான் அவை அறிபுனைவு என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மாறாக நோயாளியின் மனப்பிளவைப் பற்றியோ, ஒரு கும்பல் மனப்பான்மையிலிருந்து கற்பனைப்படுத்தப்பட்ட ஒரு விளைவின் யதார்த்தத்தையோ எவரும் அறிபுனைவு என்று புரிந்து ஏற்கவோ குறைந்தபட்சம் விவாதிக்கவோ முற்படுவதில்லை.

புனைவு முதன்மையாகப் பொய்யான கற்பனைகளைக் கட்டமைக்கிறது. எதற்காக? உண்மையைப் புரிந்துகொள்வதற்காக! இல்லாத ஒன்றைக் கற்பனை செய்வதன் மூலம் புனைவு வாசகனுக்கு ஒளி கூசிக் கண்ணைக் குறுகச் செய்யாத ஓர் ஒளிமூலத்தை உருவாக்கி அத்திரையில் கதாபாத்திரங்களை நகரச் செய்கிறது. அத்தனையும் நிஜ உலகில் இல்லாத ஆனால் நிஜ உலகின் பிரதிகளாக இருக்கின்ற தகவமைப்புகளால் உருவாகி இருக்கின்றன.

புனைவினை நூறு சதவீதத் தர்க்கத்துடன் அணுகும்போது அது ஒரு பொய் என்ற பதிலே கிடைக்கும். அந்தப் பொய் கற்பனை என்னும் உறை என்பதும் அத்தோலடுக்கின் உள்ளே தெரிவது நம் சாயல், நம் வாழ்வின் ஊடுபாவுகள் என்பதைப் புரிந்துகொள்வதற்காகச் சற்றே தர்க்க மூளையின் மீது தடையிடல் வேண்டும். உளவியில் ரீதியாக புனைவினை அணுகுகையில் அதில் குறியீடுகள் கிடைக்கும். குறியீடுகள் ஒரு மலரைப் போன்றவை. அவற்றில் உலகின் அத்தனை மேன்மையின் காட்சியாக்கம் எளியவடிவில் நிறைக்கப்பட்டுள்ளது. அவை கவிதை வடிவத்திற்கு வெகு உகந்ததான வாசல் அல்லது உருப்பெருக்கி. நாவல்களின் புனைவு வடிவத்தை அணுகும்போது தர்க்கப் பார்வை மற்றும் உளவியல் பார்வைகளுடன் அவற்றையும் கடந்ததோர் அழகியல் பார்வை தேவையானதாகிறது. நாவலில் ஒரு மையப் படிமம் புனைவின் கற்பனைகள் எல்லாவற்றாலும் வலுவான சத்தியத்தை உருவாக்கி இருக்கும் மாயம் அதன் மூலம் புலப்படும்.

ட்ராகன்கள் கற்பனையின் விதையிலிருந்தே எழும் விருட்சமாகும். அது எழும் வரை எங்கும் இருந்திருக்காது. கற்பனையெனும் வாளின் கூர்மை அதற்கு அழகு சேர்க்கும்.

அறிபுனைவுகளும் மீபுனைவுகளும் பெரிதும் இணைத்தே பேசவும் ஆராயவும் படுகின்றன. எனினும், இரண்டுக்கும் இடையில் ஒரு தெளிவான பிரிவினைக் கோடு உள்ளது. முன்னது டைனோசார்களைப் பற்றியது; பின்னது ட்ராகன்களைப் பற்றியது. அறிபுனைவுகளில் அறிவியல் கோட்பாடுகளோ, கருத்துகளோ ஒரு சிறிய கதை முடிச்சில் வைத்துப் பேசப்படும். அது வாசகர்களுக்கு விளக்கப்படும். அதிலிருந்து எழும் வியப்பையும், சந்தேகங்களையும் மூலதனமாய்க் கொண்டு கதையோட்டம் நிகழும். ஆனால் ட்ராகன்கள் கற்பனையின் விதையிலிருந்தே எழும் விருட்சமாகும். அது எழும் வரை எங்கும் இருந்திருக்காது. கற்பனையெனும் வாளின் கூர்மை அதற்கு அழகு சேர்க்கும். அறிபுனைவில் இருக்கும் சிறிதளவு யதார்த்த மொழியும் அறவே இங்குத் தேவைப்படாது. அறிபுனைவு போல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையும் இருக்காது.

மதங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தன் சிறுவயதைக் கழித்திருக்கும் லே க்வின் மதங்கள் மீதான ஈடுபாட்டுடன் கதைகளை எழுதியவண்ணம் இருக்கிறார். மத ஏற்புக்கு உகந்த ஆள் தான் இல்லை என்றும் பொதுவாக தாவோயிஸமும் புத்தமும் தன்னுள் வெகுவாக நிலைபெற்றிருப்பதாகவும் தன் வாழ்வியல் பாதைக்குக் கேள்விகளாகவும் கலங்கரை விளக்கமாகவும் இடம்பெற்றிருப்பதாகவும் சொல்கிறார். புராண, மத, இதிகாச கதைகளின் மீதான ஆர்வம் அடிப்படையில் புனைவிற்குக் கூடுதல் வண்ணங்கள் தருகின்றன.

3

இன்றைய தமிழ் வாசிப்பின் போதாமை குறித்து தொடர்ந்து எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் குறிப்பிட்டு வரும் நிலையில், லே க்வின் அமெரிக்கர்களைப் பற்றியும் அவர்களது மீபுனைவுகள் பற்றிய பொதுப்புத்தியைப் பற்றியும் பேசும் ஒரு கட்டுரை மிக முக்கியமானதாகவும் பொருத்தமானதாகவும் படுகிறது. அவரது நண்பர் நூலகத்தில் தேடிச் சென்ற ஒரு மீபுனைவு நூலானது குழந்தைகளுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகப் பெரியவர்களுக்கான பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. காரணமாக நூலகர் சொன்னது: “குழந்தைகளுக்குத் தப்பித்தல் வாதம் சரியானதாக இருக்காது!”

புராணங்களிலும் மதக் கதைகளிலும் உள்ள கற்பனையின் வீச்சு அதிகமானது. இருப்பினும் மதங்கள் அரசதிகாரத்தினைத் தன் கையகப்படுத்திய பின் தன்னைப் பின் தொடர்பவர்களுக்குக் கற்பனையை மறுக்கிறது. கற்பனை மதத்தைத் தாண்டியும் வளரும் என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. அத்தகைய நிறுவனங்களின் பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்ட அமெரிக்கா போன்ற சமூகத்தில் இயல்பாகவே குழந்தைகளுக்கு இடப்பட்டிருக்கும் மனவேலிகளைக் களைந்துவிடும் மீபுனைவுக் கதைகளை வழங்குவதில் ஒரு தயக்கம் இருக்கிறது.

இன்று கற்பனைக் கதைகளாலும் புராணங்களாலும் ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்தியல்களாலும் உருவான இந்து மத அடையாளத்தில் ஓர் அதிகார நிறுவனம் உருவாகையில்கூட அதுவும் இலக்கியத்திற்கும் கற்பனைக்கும் எதிராக அல்லது அவற்றைப் புறக்கணிக்கக் கூடிய மனநிலையிலேயே தொடர்ந்து இருக்கின்றன. நல்லொழுக்கத்தைக் காரணமாய்ச் சொல்லி (உண்மையில் கையிலிருக்கும் அதிகாரமே காரணம்) மீபுனைவு மறுக்கப்படுவது எங்கும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

அதற்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார் லே க்வின்.

  1. நன்னெறிக் கொள்கைகள்: போரும் அமைதியும் நாவல் அல்லது ஹாரி பாட்டர் நாவல்கள் வாசிப்பதால் ஒரு பணி செய்த மனநிலை வருவதில்லை; வரக்கூடாது. அவை வாசிப்பின்பத்திற்காக மட்டுமே வாசிக்கப்படுகிறது. அப்படி இன்பத்தை மட்டும் யாசித்து ஒரு பணியைச் செய்வது நன்னெறிக் கொள்கைகளின் அடிப்படையில் மறுக்கப்படுகிறது மட்டுமின்றி பாவச்செயலாகவும் கருதப்படுகிறது.
  2. இலாபமீட்டும் மனம்: வணிக மனம் எப்போதும் கண்ணெதிரே ஈட்டும் உடனடி இலாபத்தைக் கணக்கிட வல்லது. அதன்படி மீபுனைவு நூல்களையும், ட்ராகன்களையும், மாயஜாலங்களையும் படிப்பது எவ்விதத்திலும் பயனற்றது. கவிதைகள் வீண்! வேண்டுமெனில் தொழிலதிபர்கள் “அதிகம் விற்பனையடைந்த நூல்கள்” கிடைத்தால் வாசிப்பர். ஏனெனில் அதிகம் விற்றவை, அதிகம் பொருளீட்டியவை; அதில் அதிக இலாபம் ஈட்டும் ஏதோவொரு பண்பு இருக்கிறது!
  3. பாலினம்: விந்தைக் கதைகளை வாசிப்பது “பெண்மைத்தனமாக” அல்லது “குழந்தைத்தனமாக”, அதாவது சற்றே மனத்திடமற்றவர்கள் வாசிப்பவை என்ற ஏளனத்துடன் பார்க்கப்படுபவை. பாலினப் பாகுபாட்டினால் ஆணினம் இழந்த முக்கியமான பரிசுகளுள் இவையும் ஒன்றெனப் பட்டியலிட்டுக்கொள்ளலாம். நம்மூரிலும் “பெண்பிள்ளை போல் வீட்டில் அமர்ந்து புத்தகம் படிக்கிறான், நல்லா ஓடியாடி விளையாடுவதுதானே” என்று அறிவுரைகள் வழங்கும் பலரையும் பார்க்க முடியும்.

“புலன்களுக்கு வழங்கப்படாத மனக்கருத்துகளை உருவாக்கிக்கொள்வதோ, காட்சிகளை ஏற்படுத்திக்கொள்வதோ கற்பனை எனப்படும்,” என்ற வரையறை ஆக்ஸ்போர்டு அகராதியில் தரப்பட்டுள்ளது. இல்லாதவற்றைக் கற்பனை செய்வதே முக்கியமான அத்தனை அறிவியல் இலக்கியப் பொருளாதார சாதனைகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட காரணங்களாலேயே கற்பனையின் பயன்பாடும் வீச்சும் தொடர்ந்து தடுக்கப்பட்டும் திசைமாற்றம் செய்யப்பட்டும் வந்தவண்ணம் இருக்கிறது.

இல்லாதவற்றைக் கற்பனை செய்வதே முக்கியமான அத்தனை அறிவியல் இலக்கியப் பொருளாதார சாதனைகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.

மனிதர்கள் கற்பனைக்கதைகளை வெறுக்கவோ தவிர்க்கவோ இல்லை, மாறாக அதைக் கண்டு பயப்படுகிறார்கள். உண்மையை நேர்கொண்டு நோக்க தேவைப்படும் குழந்தை விழிகளை அது ஏற்படுத்தித் தந்துவிடுகிறது. அறிபுனைவு, மீபுனைவு, தேவதைக் கதைகள், புராணங்கள் இன்னும் பல முட்டாள்தனங்களாக சராசரி பெரியவர்களிடையே கருதப்படும் அத்தனை வகை இலக்கியங்களும் உண்மைத் தகவல்கள் அல்லவெனினும் உண்மையின் ஆதார ஊற்றைப் பற்றிய தேடல்களையே செய்கின்றன. அதைத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தைப் பயப்படுகிறார்கள் அதனால் அவர்கள் ட்ராகன்களைப் பயப்படுகிறார்கள் என்கிறார் லே க்வின்.

குழந்தைகளுக்கு நிஜத்திற்கும் மீபுனைவிற்கும் இடையே எந்தவித குழப்பமும் ஏற்படுவதில்லை. இருப்பினும் அவை மீபுனைவுக் கதைகளை தேவதைக் கதைகளை விரும்பித் தொடர்கின்றன. நிர்வாண அரசனின் புதிய ஆடையைக் கண்டறிந்து சத்தமிடும் தன்மை குழந்தைகளிடமே இருக்கின்றன. ஆதலால் நிஜத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள மீபுனைவுக் கதைகள் பெரிதும் உதவலாம் என்பதோடு அவற்றின் முக்கியப் பயன் என்பது குழந்தைப் பருவத்தைக் கடந்து பெரியவர்களாகிவிடுபவர்களின் மத்தியில் குழந்தைப் பருவத்தைத் தன்னகத்தே உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் பெரியவர்களை உருவாக்குவது.

4

City of Illusions என்ற நூலிற்கு எழுதிய அறிமுகத்தில் பல முக்கியமான அவதானிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில்தான், “கற்பனையில் இருக்கும் நூலும் எழுதப்பட்ட பிறகு அச்சில் வந்த நூலும் எப்போதும் ஒன்றாக இருப்பதே இல்லை,” என்ற துணிபை முன்வைக்கிறார். அதற்கு உதாரணமாக தான் எழுதிய Two-minded Man என்ற கதையினை முன்வைக்கிறார். அதன் தலைப்பே அவர் சொல்லும் கருத்திற்கும் தலைப்பாக இருப்பதை உணர்ந்ததும் மலர்ந்தேன். இந்தக் கருத்தினை விவரித்தவாறே செல்லும் அவர் ஒரு புள்ளியில் “கவிதை வடிவத்தில் மட்டுமே கற்பனையும் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது; இருக்க முடியும்; இருக்க வேண்டும்” என்று முடிக்கிறார். எத்துணை எளிய மறுக்க முடியாத உண்மை!

அதே கட்டுரையில் வில்லன்களைப் பற்றிய அவதானிப்பை முன்வைக்கையில் ” நவீன இலக்கியத்தின் தேய்வழக்குகளில் முக்கியமானது; தீய கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமானவை; நல்ல கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமற்றவை” என்ற பதத்தைக் குறிப்பிடுகிறார். அதிலிருந்து நீண்டு கிடக்கும் ஹாலிவுட் தொடங்கி உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சினிமா வணிகத்தினை நோக்கினால் இது எத்தனை தேய்வழக்கென்பதும், அதைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றி வன்முறைகளின் ஆழிகளுக்குள் தலைமுறைகளைத் தள்ளிக்கொண்டே சம்பாதித்து வரும் கருவிகளையும் புரிந்துகொள்ள முடியும்.

கடைசியாக நாவல்களைப் பற்றி ஒரு முக்கியமான குணநலனைக் குறிப்பிடுகிறார். நாவல் எப்போதும் வேறெதிலும் கிடைக்காத ஒரு வாய்ப்பினைத் தரும் கருவி என்கிறார். அதாவது ஆதித்தாய் பற்றிய கற்பனையைக் கொற்றவை தந்தது போல, நித்திய கன்னியின் மனநிலையைப் பற்றிய நாவல் நிஜத்தைப் பேசியதைப் போல, தாய்மையின் வேறொரு முகத்தை அறிந்துகொள்ள அம்மா வந்தாள் புதிய மேடை ஏற்படுத்தித் தந்ததைப் போல நாவல்கள் அளிக்கும் வாய்ப்புகள் பரந்துபட்டவை. நாவல்கள் எப்போதும் புதிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் தருபவை.

நாவல்கள் கதாபாத்திரங்களால் ஆன ஒரு தளம். கதாபாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்படுவதன் மூலம் மட்டுமே நாவல்களின் பன்முகத்தன்மையும் மைய விலக்குப் பார்வையும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதும் மூலக்கூறியக்கமென கதை முன்னேறுகிறது. விர்ஜீனியா உல்ஃப் ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒரு ரயில் பயணத்தில் கண்ட உணர்ச்சிகரமான பெயரறியாத பெண்மணியினைப் பல இடங்களில் கதாபாத்திரங்களாகப் பயன்படுத்தியுள்ளார். சில நிமிடங்களே பார்க்கப்பட்டஓர் உயிர் பல நாவல்களிலும் முக்கியப் பாத்திரமாக வெளிப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தானும் அந்தப் பாத்திரப் படைப்புகளால் உந்தப்பட்டு மீபுனைவு நூல்களில் மானுடம் கடந்த அம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களிலும்கூட அந்த பெண்மணியின் தொடர்ச்சியினை வடிவமைத்து வந்துள்ளதாகவும் கூறுகிறார் உர்சுலா. மேலும் சூன்யக்காரியின் வளைந்த முக்கு, கரகரவென ஒலிக்கும் குரல், முட்டி பிதுங்கும் விழிகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பெண்மணியின் உருவம் துலங்கும் என்கிறார்.

எழுதுவதைப் பற்றிய விதிமுறைகளை எழுத்தாளர்களைவிட பிற அனைவரும் தெளிவுறப் புரிந்து வைத்திருக்கின்றனர். அவற்றில் பிரபலமான பல கருத்துகள் இருக்கின்றன என்று சொல்லும் உர்சுலா, “கதையின் தொடக்கத்தில் உரையாடல் வரக்கூடாது”, “முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் வெகு தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,” என்பன போன்ற எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்தவாறே, ஒரு நகைப்புடன் “இவை எவற்றையும் தல்ஸ்தோயோ டிக்கின்ஸோ பயன்படுத்தவில்லை” எனவும், “அதை நீங்கள் குறிப்பிட்டால் அவர்கள் ஆசான்கள் அவர்களுக்கு விதிகளை மீறும் திராணியுண்டு என்று உங்களுக்கு இந்த இலக்கண பற்றாளர்களிடமிருந்து பதில் வரும்” எனவும் உர்சுலா குறிப்பிடுகிறார்.

எழுதுவதற்கென்று ஒரு விதி உள்ளது. “எழுதுங்கள்” என்பதே அது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், “உங்களுக்கான வாய்மையை எழுதுங்கள்” என்பது அது!

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்