வெற்றுக் கணங்கள்

9 நிமிட வாசிப்பு

சிரில் வாங் (Cyril Wong) எழுதிய Zero Hour சிறுகதையின் மொழிபெயர்ப்பு.
மொழியாக்கம்: மஹேஷ்குமார்


ஆயிஷாவால் அதற்கு மேலும் படுக்கையில் கிடக்க முடியவில்லை. அவசரக் குளியலாக இருந்தாலும் கேசத்திற்கு வேண்டிய உபசாரங்கள் எதையும் தவறவிடவில்லை. ஒவ்வொரு குளியலுக்குப் பின்னரும் பட்டு போலாகி மணம் வீசும் தன் கூந்தலின் மீது அவளுக்குத் தனிப் பிரியம். அவள் உபயோகித்தக் கூந்தல் தைலம் குளியலறை முழுதும் புத்தம் புதிய பூக்களின் மணத்தால் நிறைத்தது. குளியலறையை விட்டு வெளியே வந்ததும், தனது அலமாரியில் இருந்து ஒரு வெள்ளை மேல்சட்டையை எடுத்து, அதற்குத் தோதாகக் கருப்பு ஜீன்ஸ் அணிந்துகொள்ள முடிவெடுத்தாள். நீளமாய் வளர்ந்து கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த தனது கூந்தலை முடி உலர்த்தியால் காயவைத்து, மொத்தமாக இறுக்கிக் கட்டி, தனக்கு மிகவும் பிடித்த வெளிர் நீல டுடுங்கை நேர்த்தியாக அணிந்துகொண்டாள். அன்று சனிக்கிழமையாதலால், நண்பர்களுடன் புகிஸ் ஜங்ஷனில் காலை உணவுக்குச் சந்திக்கத் திட்டம். மதியம் வரை கடைகளில் வேட்டையாடிவிட்டு, பிறகு கைருல் உடன் ஏதாவது ஒரு சினிமா. இது அவர்களின் நான்காவது களவளாவுதல் (date). புதிய பாலிவுட் காதல் படமா அல்லது கிரேக்கக் கடவுள்களும் தடித்த சாகச வீரர்களும் போர்புரியும் ஹாலிவுட் படமா என்று இன்னும் முடிவாகவில்லை. அநேகமாகச் சிறிதுநேர விவாதத்திற்குப் பின், வழக்கம் போல ஆயிஷாவுக்குப் பிடித்த ஏதாவது ஒரு அமெரிக்கப் படத்திற்குச் செல்ல ஒப்புக்கொண்டு டிக்கெட்டும் அவனே வாங்கிவிடுவான். அவ்வளவு இனிமையானவன் கைருல்.

அவள் அவனைப் பல்கலை இரண்டாவது ஆண்டு படிக்கும்போதுதான் சந்தித்தாள். அரசியல் பாடத்தில் சிலவற்றை இருவரும் சேர்ந்து படித்தனர். அவனுக்கு அவள்மேல் ஓர் ஈர்ப்பு இருப்பதை ஆயிஷா அறிந்தே இருந்தாள். வகுப்புகளில் வாதாடும் இயல்பைக் கொண்டவளாகவும் பள்ளிக்கு வெளியே தெய்வ பக்தியுடன் மத வழிபாட்டில் ஈடுபடுபவளாகவும் இருக்கும் அவளுடைய முரண்பட்ட இயல்புகளை அவன் ரசித்தான். கைருல் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பதாக ஆயிஷாவிற்கும் தோன்றியது. அவனது அன்பான, கனிவான பேச்சுகளும் கண்ணியமான நடத்தையும் மேலும் ஈர்ப்பை அதிகரித்தன.

வீட்டை விட்டு வெளியே வந்து மின்தூக்கியை நோக்கி நடக்கையில், ஜீன்ஸ் தன் இடுப்பையும் பின்புறத்தையும் கொஞ்சம் அசௌகரியமாகக் கவ்விப் பிடித்திருக்கிறதோ என்றெல்லாம் தோன்றியது. கைருல் முன்பு தான் எடுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் தன் உடல் எடைக் கட்டுப்பாட்டில் தீவிரம் காட்ட வேண்டியிருந்தது. மின்தூக்கிக் கதவுகள் திறந்து உள்ளே நுழையும்போது ஏதோ ஓர் எச்சரிக்கை முன்னுணர்வு தோன்றி முதுகுத்தண்டில் திடீர்க் குளிர் பரவியது. அது பிடோக் மேற்கின் பிரகாசமான காலை. வழக்கமான ஈரப்பதம் கொண்ட காற்று. அவள் உடல் அத்தகைய குளிர்ச்சியை உணரக் காரணமே இல்லை. யாருமற்ற மின்தூக்கி திறந்தபடியே, காத்திருந்தது. ஏன்? என்ன ஆயிற்று? தன்னைச் சுற்றிப் படரும் ஏதோ ஓர் அமைதியின்மை உணர்வைத் தோளசைப்பில் சிதறடித்தபடி மின் தூக்கியில் கீழ்த் தளத்திற்கு வந்து சேர்ந்தாள். மின்தூக்கியிலிருந்து வெளியே வந்ததும் மறுபடியும் அந்த அச்ச உணர்வு ஒட்டிக்கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்தாள். எந்த நடமாட்டமும் இல்லை. எல்லோரும் எங்கே போனார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. நாலாபுறமும் உயர்ந்த கட்டிடங்கள். எதிலுமே ஆள் நடமாட்டம் தென்படவில்லை. தெருக்களில்கூட வெறிச்சோடிப் போய் எந்த வாகனமும் போவதாகத் தெரியவில்லை. மேகங்களற்ற தெளிவான வானின் கீழ் அவள் மட்டுமே தனியாக இருந்தாள். இதில் கவலைப்பட ஏதுமில்லை. வார இறுதியாதலால் இன்னமும் மக்கள் உறங்கியபடி இருக்கலாம்.

பிடோக் ரயில் நிலையம் நோக்கி நடக்கையில் அந்த அசௌகரிய உணர்வு அடக்க முடியாதபடி அதிகமாகிக்கொண்டே போனது. இந்த நேரத்தில் ஒருவர்கூடத் தென்படாமல் போக வாய்ப்பே இல்லை! தாத்தா, பாட்டி அல்லது பணிப்பெண்களின் கண்காணிப்பில் குழந்தைகள் கூச்சலிட்டபடிக் காணப்படும் அந்த விளையாட்டு மைதானம்கூட வெறுமையாக இருந்தது. மிதமான காற்று இருந்தாலும் கூட, அவளுக்குப் பழக்கமான இரண்டு ஊஞ்சல்களும் கொஞ்சம்கூட அசையவில்லை. அருகில் இருந்த கட்டிடங்களின் சன்னல்களில் யாரும் துணி காயப்போட்டபடியோ அல்லது வெறுமனே வானத்தை வெறித்தபடியோ… எவருமே கண்ணில் படவில்லை. எங்கோ ஒரு வீட்டில் சன்னமாக அழும் ஒரு குழந்தையின் அழுகையோ, சிரிப்போ, பெற்றோரின் அதட்டலோகூடக் கேட்கவில்லை. எங்கும் அசைவுகளற்ற அமைதி. மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன? ஏதும் அவசரம் இல்லையென்றாலும் உள்ளே இருந்த பயத்தின் உந்தலில் கொஞ்சம் வேகமாகவே நடந்தாள்.

ரயில் நிலையம் பார்வையில் படும் வரை நடந்துகொண்டே இருந்தாள். வெருண்ட மிருகம் ஒன்று எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரு சாலைகளுக்குள் பதுங்கியிருப்பது போல் இருந்தது அது; அதனருகில் ஒரு வணிக வளாகம் அசைக்க முடியாத வீறமைதியுடன் சம்மணம்போட்டு அமர்ந்தபடி. நிலையத்தை நெருங்க நெருங்க எதுவோ சரியில்லை என்பது அவளுக்குத் தெளிவாகப் புலப்பட்டது. சாதாரண நாட்களில், அவள் இப்போது நிற்கும் இடத்திலிருந்து பார்த்தாலே மேலே நடைமேடையில் மக்கள் நடமாட்டம் தெளிவாகத் தெரியும். ஆனால் இப்போது ஒருவரும் இல்லை. சட்டென ஓர் உதறலுடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். தனக்குத்தான் ஏதேனும் பிரமையா? தெருவின் மறுபக்கம் இருந்த பேருந்து நிலையமும் ஆளரவமற்று வெறிச்சோடி இருந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட வரிசையில் அமைதியிழந்து நிற்கும் மக்களிடையே சிறு சலசலப்பை உண்டாக்கும் பேருந்துகளின் என்ஜின் சத்தமும், பேருந்துகள் வருவதும் போவதுமான சத்தமும் அவள் காதுகளைத் துளைக்காமல் இருந்ததற்கான காரணம் இப்போது புரிந்தது. உள்ளே இருந்த பேருந்துகள் அனைத்தும் நகர்வதற்கான எந்த அறிகுறிகளும் இன்றி வரிசைக்கிரமமாக நிறுத்தப்பட்டிருந்தன. எங்கும் அசாத்தியமான பேரமைதி. அமானுஷ்யம்! இந்த வார்த்தை மனதில் தோன்றிய அந்தக் கணமே அதை வெறுக்கவும் செய்தாள்.

ஆனால் இது எப்படி சாத்தியம்? ரயில் நிலையத்தில் யாரும் இருக்கப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும் தொடர்ந்து நடந்தாள். தயக்கத்துடன் நிலையத்திற்குள் நுழைந்து மின்படிகளில் ஏறி மேலே போனாள். ஒருவரும் இல்லையென்றாலும் அவை வழக்கம் போலவே இயங்கிக்கொண்டிருந்தன. பயண அட்டை தட்டும் கதவுகள் திறந்தே இருந்தன. யாருமே இல்லாத வெறிச்சோடிய நடைமேடையில் அவள் ஒருத்தி மட்டும்தான். ரயில் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கண்களைச் சுருக்கி இருப்புப்பாதையைக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தாள். கூர்ந்து பார்த்தால் ஒருவேளை வண்டி வந்துவிடலாம் என்று நம்பினாள். சட்டென அவளின் சிறுவயது வினோத ஆசைகள் மனதில் ஓடின. தண்டவாளத்தில் குதித்தால் என்ன? தாவி விளையாடுவது போலவும், தண்டவாளத்தில் பாயும் மின்சாரம் தன் உடம்பிலும் ஏறுவது போலவும் கற்பனை ஓடியது. ஒருவருமே பார்க்காத இந்தத் தருணம்தான் அதற்குச் சரியானது. அவளது ஐந்து வயதில் உண்டான, ஓர் அரை வேக்காட்டுத் தற்கொலை எண்ணமா அல்லது பலரின் உள்ளத்திலும் இருக்கும் ஒருவிதமான திருட்டுத்தனமா… எல்லோருக்கும் இருக்கும் ஆனால் ஒத்துக்கொள்ள மறுக்கும்… என்ன விதமான எண்ணம் இது? ஆயிஷா அனிச்சையாகக் கைகளைக் கட்டிக்கொண்டாள். அந்த வெற்றிடத்தினைக் கிழிக்கும் கத்தியைப் போல நடைமேடையில் மேலும் கீழும் நடந்தாள்.

ஓவியம்: குரியன்

நோராவைக் கூப்பிட்டுப் பேசு! மனதின் மூலையில் ஒரு சிறுகுரல். நின்றாள். தன்னிடம் ஒரு செல்பேசி இருப்பதையே மறந்திருந்தாள். தனது தோழி நோராவைத்தான் இன்று காலை சந்திப்பதாக இருந்தது. இறுக்கமான தனது ஜீன்ஸின் முன்பக்க பாக்கெட்டில் இருந்து சிரமப்பட்டுத் தன் ஐபோனை வெளியே எடுத்தாள். திரையில் சில எண்களைத் தொட்டுவிட்டு, செல்பேசியைக் காதில் வைத்தாள். அழைப்பு மணி கேட்கும் என்று பார்த்தால் அடர்ந்த அமைதி. செல்பேசியைப் பார்த்தாள். தொடர்பு இருப்பதாகவே தெரியவில்லை. ஏதாவது அதிசயத் தொடர்பு கிடைக்குமா என்று காற்றில் மேலும் கீழும் அசைத்துப் பார்த்தாள். ம்ஹூம்! ஒன்றும் இல்லை. நான்கெழுத்து வார்த்தையைச் சத்தமாகவே சொன்னாள். பொதுவாக அவள் அது போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துபவள் அல்ல. அதுவும் நான்கு பேர் இருக்கக்கூடிய இடத்தில் அப்படிக் கத்துபவள் அல்ல. “இங்கேதான் யாருமே இல்லையே!” என கத்தினாள். உரத்த கரகரப்புடன் அவள் குரல் ஒலித்தது. ஏன் கத்தக் கூடாது? கத்தினாலும்தான் யார் காதில் விழப்போகிறது?

இருந்தாலும் ஒருமுறை யாரும் இல்லையென உறுதி செய்துகொள்ளச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள். எங்காவது ஒரு மூலையிலோ அல்லது பெஞ்சின் அடியிலோ, யாராவது அவளைக் கண்காணித்துக்கொண்டிருந்தால்… என்ற அச்சமும் உண்டானது. அவள் அந்த வார்த்தையைச் சத்தமாகச் சொன்னதை யாரும் கேட்டுவிட்டார்களோ என்ற அச்சமா? அல்லது வேறு எதுவோ ஒன்று அவளை பயமுறுத்துகிறதா? எப்போதோ ஒரு திரைப்படத்தில் பார்த்தபடி, திடுமென ஒருவன் (அல்லது ஒன்று) முகத்தில் ஒரு பெரிய கண்ணாடியோடு கூடிய முகமூடியுடன், அதற்குப் பின்னால் பச்சை வண்ணத்தில் பாதி அழுகிய முகத்துடன், அல்லது முகமே இல்லாமல், கீழிருந்து எழுந்து வருவதுபோலத் தோன்றியது. அட சே! என்ன இது முட்டாள்தனம்! இது ஏதாவது ஒரு திட்டமிடப்பட்ட பெரும் குறும்பாக இருக்குமோ? அல்லது பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு, அவளிடம் மட்டும் சொல்லாமல், இந்த நாட்டிலிருந்து எல்லோரும் அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்களா? ஆனால் ஏன்? எப்படி? நேற்றிரவு ஏதேனும் நடந்துவிட்டதா? எப்படி அவளுக்கு மட்டும் தெரியாமல் போயிற்று? மாலைச் செய்திகளில் ஏதேனும் அறிவிப்பு வெளிவந்ததா? அவள் பெற்றோருக்கு என்னவாயிற்று? அலுவலகத்தில் இருக்கிறார்களா அல்லது அவர்களும் தங்களின் ஒரே செல்ல மகளை விட்டு விட்டுப் போய்விட்டார்களா? செல்பேசியில் யாருடனும் பேச முடியாது என்பது உறுதி. பொதுத் தொலைபேசி இருக்குமே? இங்கே ஒன்றாவது இருக்கவேண்டுமே? பங்களாதேசி கட்டுமானப் பணியாளர்களோ, பிலிபினோ அல்லது பர்மியப் பணிப்பெண்களோ வார இறுதிகளில் பழியாக நின்று பொதுத் தொலைபேசிகளில் பேசிக்கொண்டிருப்பதை அவளே எத்தனையோ முறை பார்த்திருக்கிறாள்.

இதயம் கொஞ்சம் வேகமாகவே துடிப்பதை ஆயிஷா உணர்ந்தாள். கால்சராயிலும் பையிலும் ஏதாவது சில்லறைக்காசு இருக்குமா என்று துழாவினாள். கசக்கிய திசுத்தாள், திரைப்படச் சீட்டு இப்படி ஏதாவது குப்பைகள் அவள் பையில் எப்போதும் இருக்கும். தேடியதில் ஒரு பத்துக்காசு கிடைத்ததும் நடைமேடையின் அந்தக் கோடிக்கு ஓடி, அநியாயத்திற்கு நிதானமாய் நகர்கிற மின்படிகளில் ஓடி இறங்கினாள். மின்படிகளின் அடிப்பகுதியில் வலது புறம் ஒரே வரிசையில் இருந்த பொதுத் தொலைபேசிகளை விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டாள். ஓரக் கண்களால் நோட்டம் விட்டாள். இன்னமும் நிலைமை மாறவேயில்லை; யாருமே நிலையத்துக்கு உள்ளேயோ வெளியேயோ இல்லை. காலை முடிந்து மதியமும் மெல்ல வந்துவிட்டது. இன்னமும் இவளுக்காக நோராவும் மற்றவர்களும் புகிஸ் கடைத்தொகுதியில் காத்திருப்பார்களா? இந்த நிமிடம் இவளைப் போலவே அவர்களும் எங்காவது இதே நிலைமையில் தவித்துக்கொண்டிருப்பார்களா? அல்லது அவர்களும் காணாமல் போய்விட்டார்களா? ஆயிஷா ஒருத்திதான் இப்போது இந்தப் பாழாய்ப்போன நாட்டில் இருக்கிறாளா?

அதெல்லாம் இருக்கட்டும். முதலில் வந்த வேலையைப் பார்ப்போம். இருபது வருடங்களாக அம்மா பணி புரியும் பயண நிறுவனத்தின் எண்ணை அழைத்தாள். முதலில் ஏதோ மணிச்சத்தம் போலக் கேட்டாலும் சட்டென அதுவும் நின்று போனது. “அடங்…” என்று கட்டுப்படுத்த முடியாமல் கூவினாள். மற்ற தொலைபேசிகளிலும் இதே கதைதான். இடது புறம் இருந்த தொலைபேசியில் மலாய் ஆசிரியராகப் பணிபுரியும் தனது அப்பாவின் பள்ளிக்கு அழைத்தாள். பிறகு வலது புறம் இருந்த தொலைபேசியில் நோராவின் எண்ணை அழைத்தாள். எதுவுமே வேலை செய்யவில்லை. பொறுக்க முடியாமல் ஒலிவாங்கியைக் கையில் பிடித்தபடியே, “கபோதிகளா… என்னதான் நடக்கிறது இங்கே?” என்று காட்டுக்கூச்சல் போட்டாள்.

அவளின் சீற்றம் அவளையே திடுக்கிட வைத்தது. யாரைத்தான் திட்டுகிறாள்? கத்தியதில் ஏதோ ஒரு சமாதானம் கிடைத்தது போல சிறிது அமைதியான அதே வேளையில், அந்த வெற்று நிலையத்தின் பல்வேறு பக்கங்களிலும் அவளது குரல் எதிரொலிப்பதையும் கவனித்தாள். ஒலிவாங்கியை அப்படியே நழுவவிட்டாள். உபயோகமற்று அது ஊசலாடியது. இரண்டு மூன்று முறை மூச்சை இழுத்துவிட்டாள். என்ன செய்வது என்று தெரியாமல் மேல்கூரையைப் பார்த்தாள். பிரார்த்தனை செய்தாள். மனதுக்குள் வார்த்தைகளை அடுக்கினாள், “தயவுசெய்து என் பெற்றோரைக் காண உதவி செய்! செல்ல மகள் நான் காணாமல் போனது தெரிந்தால் அவர்கள் ரொம்பவும் கவலைப்படுவார்கள். என் நண்பர்களோடு என்னைச் சேரவிடு. அப்புறம் கைருல்… என்னை இப்படிப் படுத்த வேண்டாம். நான் என் கைருலுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவள்!”

ஒரு பதிலும் எங்கிருந்தும் கிடைக்காததில் ஆச்சரியமொன்றும் இல்லை. முன்பெல்லாம், அம்மா திட்டியதற்காகவோ பள்ளிப் பிரச்சனைகளுக்காகவோ, வீட்டிலோ மசூதியிலோ பிரார்த்தனை செய்யும்போது, ஏதோ ஓர் ஆழமான, கருணை வழியும் குரலில் அவளுக்கு ஆறுதல் செய்தி கிடைப்பதாகக் கற்பனை செய்துகொள்வாள். ஆனால் இப்போது? இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த — இப்போது இந்தப் பைத்தியக்காரத்தனத்திலும் அவளை இழுத்துவிட்டிருக்கிற — அந்தப் பெயரில்லாத சக்தி மேல் அவளுக்குக் கோபம் என்பதாலோ என்னவோ அந்தக் குரலும் இப்போது கேட்கவில்லை. கூரையிலிருந்து பார்வையைக் கீழிறக்கித் தரையைப் பார்த்தாள். அப்போதுதான் கவனித்தாள். கருப்பு வண்ணச் செருப்புகள் அணியாமல், டுடுங்கிற்கும் உடைக்கும் பொருத்தமேயில்லாத ஆரஞ்சு வண்ணச் செருப்புகள் அணிந்திருந்தாள். இப்படிப் பொருத்தமில்லாமல் இருந்தால் கைருல் என்ன நினைப்பான்? கண்ணை முடிந்த வரை இறுக்கி மூடித் திறந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்… அதேதான்… ஒருவரும் இல்லை. பெருமூச்சு விட்டாள். இப்போது இதயம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. என்ன செய்யலாம்? நிலையத்தின் வாசல் வழியே உள்ளே படிந்திருந்த வெயிலைப் பார்த்தாள். வெளியே செல்ல முடிவு செய்து கீழே இறங்கினாள். வெளியே சூடான நடைபாதையில் கால்களை வைத்ததும் நின்றாள். “இது என் வாழ்வின் மிக மோசமான நாள்!” என்று மெல்லிய குரலில் நொந்துகொண்டாள்.

ஒருவேளை அருவருப்பான பச்சை வண்ன வேற்றுக்கிரகவாசிகள் நாட்டிலுள்ள மொத்த மக்களையும் கடத்திக்கொண்டு போயிருக்கலாம். அல்லது இன்னும் வினோதமாக: ஒருவேளை அவள் செத்துவிட்டாளா? அவள் ஒரு பேயாக அலைவதால்தான் யாரும் அவள் கண்களுக்குத் தெரியவில்லையா? உயிரோடிருப்பவர்களிடம் தொடர்பு அறுபட்டுவிட்டதால் இறந்தவர்கள் தனித்தலைவார்களோ? அவர்களுக்கு இனி அன்றாட வாழ்வு என்று ஏதுமில்லாமல் போய்விட்டதோ? ஒருவேளை உயிருடன் இருக்கும் மக்கள் தன்னைச் சுற்றி இருந்தும்கூட இவள் மட்டும் இப்படி அலைவதால் யாருமே தெரியவில்லையா? அப்படியென்றால் மற்ற பேய்கள் எங்கே? அப்படி எதையும் பார்க்க முடியவில்லையே? அல்லது தங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளும் பொருட்டு ஆன்மாக்கள் தனியாக அலைய விடப்படுகின்றனவா? இப்படி ஓர் அமானுஷ்யமான அனுபவத்தால் அவளுக்கு ஏதேனும் பாடம் புகட்டும் திட்டமா? அப்படியென்றால் இந்தத் தற்காலிக (தற்காலிகம்தானே?) நரகத்திற்குப் பின்…? சொர்க்கமா? மறு பிறப்பா? அல்லது ஒரு கவலை சூழ்ந்த வெறுமையா? எந்தவொரு கடவுளோ, சிறு தெய்வமோகூடத் தங்களின் அன்புக்கரங்களை நீட்டவில்லையே! ஏதோ ஒரு கருணையில்லாத இருளுக்குள், முடிவற்ற சூனியத்திற்குள் தள்ளப்பட்டு…

இப்படி ஏதேதோ என்ணங்கள் மனதிற்குள் அலைமோத, வேறொரு கோபமூட்டும் அவசர எண்ணம் கிளைத்தது. அப்படி அவள் இறந்திருந்தால், இன்னும் ஏன் வியர்க்கிறது? நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள். வியர்வையை விரல்கள் உணர்ந்தன. கட்டுப்பாடற்ற கோபத்துடன் தலையில் இருந்து தன் டுடுங்கைப் பிடித்து இழுத்தாள். ஒரு கணம் வைத்திருந்துவிட்டு எரிச்சலுடன் தரையில் எறிந்தாள். பொருத்தமில்லாமல் அணிந்திருந்த செருப்புகளை வேண்டுமென்றே தரையில் அழுத்தி டுடுங்கை நசுக்கியபடி, கட்டிய தலைமுடியையும் அவிழ்த்துவிட்டு இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தாள். சட்டென அழ ஆரம்பித்தாள். அணை உடைந்தது போலக் கண்ணீர் வழிந்தது. முகத்தின் மீது கேசம் விழ, கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடி நடந்துகொண்டே இருந்தாள். அவள் மெதுவாக இப்போது பிடோக்கிலிருந்து வெளியேறி மற்றொரு பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்… அவள் குடியிருப்புக்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. சுற்றியிருந்த அடுக்ககங்கள் அவள் கடந்து வந்த அடுக்ககங்களைப் போலவேதான் இருந்தன; மங்கலான நிறங்களில் அரை மனதுடன் வரையப்பட்ட ஏதோ ஒரு தேசிய மலரின் உயிரில்லா ஓவியத்துடன். எல்லா இரயில் நிலையங்களையும் ஒத்த மற்றொரு நிலையம் தூரத்தில் கண்ணில் பட்டது. வழக்கம் போலவே, யாரும் அவளை நடைமேடையிலிருந்து பார்க்கவில்லை. அமைதியைக் குலைக்கும்படி எந்த இரயிலும் வந்து போகவில்லை. ஆனால் ஆயிஷா இவற்றையெல்லாம் கவனிக்கவே இல்லை. நிறுத்தமுடியாத அழுதகையுடன் அவள் தன் பாட்டுக்கு நடந்தாள்.

மதிய வெயில் அசரடித்தது. கொஞ்சம் நின்று மூச்சு விட்டுக்கொண்டாள். ஏதோ ஒரு மெல்லிய ரீங்காரம் கேட்டது. கண்ணீர் வழிவது கொஞ்சம் மட்டுப்பட்டது. குறுகுறுப்புடன் வானத்தை பார்த்தாள். என்ன சத்தம்? எங்கிருந்து? அந்த ஓசை மெலிதாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி உரத்த சத்தமானது. இன்னமும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மிகச் சரியாக அவள் நிற்கும் தரைக்குக் கீழே இருந்து வருவதுபோலத் தோன்றியது. தனது மார்பிற்குள் ஓர் அதிர்வையும் உணர்ந்தாள். விசித்திரமான சத்தம், ஆனால் பதட்டம் எழுப்பும்படியாக இல்லை. அந்த வெற்றுக் குடியிருப்பின் நாலாபுறமும் சுற்றிப் பார்த்தாள். ஓசை எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை. அந்தச் சத்தம் இப்போது இன்னமும் அதிகமாகிக் காதே செவிடாகிவிடும் போல உரத்தது. மறுபடியும் மேலே பார்த்தாள். மெல்லிய காற்று கேசத்தைக் கலைத்தது. ஏதோ எதிர்பார்ப்புடன் அவள் பார்த்தாலும் — ஒரு விமானமோ, ஹெலிகாப்டரோ, அல்லது பறக்கும் தட்டு போன்ற ஏதோ ஒரு கருமமோ — ஒன்றும் இல்லை வானில்.

மாறாக, மேகங்களற்ற வானம் பளீரென்றிருந்தது. வானம் முழுதும் நீலத்திலிருந்து வெள்ளைக்கு மாறிக்கொண்டிருந்தது. ஆனாலும் முகத்தில் அடிக்கும் வெப்பத்தின் தாக்கம் மட்டும் குறையவில்லை. ஒருவேளை மற்ற எல்லோரையும் கவர்ந்து சென்ற ஏதோ ஒன்று, தனது பிரம்மாண்ட கணக்கில் ஒரு சிறு தவறு நிகழ்ந்து ஆயிஷா மட்டும் விட்டுப்போனதால், இப்போது அவளையும் எடுத்துச் செல்ல வருகிறதா? தன் அப்பாவைப் போலவே ஒரு மலாய் ஆசிரியராக வேண்டிய, அழகான அன்பான ஓர் ஆடவனைத் திருமணம் செய்து நான்கு பிள்ளைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டிய, தெம்பினிஸில் புதிய நான்கறை வீட்டில் வாழ வேண்டிய, 55 வயதில் ஓய்வு பெற்றுப் பிள்ளைகள் வழக்கறிஞர்களாகவோ, வங்கி மேலாளார்களாகவோ, அரசியல்வாதியாகவோ ஆவதைக் கண்டு மகிழ வேண்டிய அவளை மறந்துவிட்டார்களோ? வேறு என்னதான் செய்ய முடியும் இந்த நாட்டில்? வேறு எப்படித்தான் தங்களையும், வயதான பெற்றோர்களையும் காப்பாற்றுவது? ஒவ்வொரு விநாடியும் செல்லச் செல்ல ஒரு பேரொளி ஆகாயத்தை எரித்தபடி, அவளைச் சுற்றி இருந்தவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருந்தது. கண்கள் கூசும்படி இருந்தாலும் ஆயிஷா கண்களைத் திறந்தே வைத்திருந்தாள். இன்னமும் அகலமாகத் திறந்து வைக்கவே விரும்பினாள். தன்னை எடுத்துக்கொள்ள வரும் எதுவானாலும் அதை நேர் கொண்டு பார்க்கத் தயாரானாள். இப்போது அந்தச் சத்தமும் காதைப் பிளக்கும்படி உரத்திருந்தது. தலையைப் பின்னே சாய்த்து, கரங்களை விரித்தபடி எந்த ஒரு நம்பிக்கையோ பயமோ இல்லாமல் அண்ணாந்து பார்த்தாள். தான் மறுபடியும் அழுவதுகூட அவளுக்குத் தெரியவில்லை. இது போல — இவ்வளவு உயிர்ப்புடன் இத்தனை லேசாக, இத்தனை சுதந்திரமாக — முன்னெப்போதும் அவள் உணர்ந்ததேயில்லை.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்