உயிர்பெறுதல்

< 1 நிமிட வாசிப்பு

திடீரென
கல்லறைகளிலிருந்து
வெறும்கூடுகளாக
துரைசாமி
கல்லு மணி
பெரியாத்தா
சுப்பிரமணி மகள்
அஞ்சலை பாட்டி
பாஞ்சாங் மனைவி
உடும்புக்காரத் தாத்தா
அத்தனை பேரும்
எழுகிறார்கள்.

பல்லாண்டு காலங்கள் கரைந்தபின்
மீண்டும் உயிர்த்தல்
வரமென்றே கொண்டார்கள்.

மண் தின்ற வெற்றுச் சதைகளாய்
புழு கசியும் ஊளைப் பிண்டங்களாய்
வெந்தொழிந்த கிழட்டு மேனிகளாய்
நகருக்குள் நுழைகிறார்கள்.

பாஞ்சாங் மனைவியின்
முதுகெலும்புகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
உடும்புக்காரத் தாத்தாவின் மீது
பாய்ந்த கற்கள் கண் காது மூக்கெலும்புகளைத்
துளையிட்டுச் சென்றுள்ளன.
சுப்பிரமணி மகளின் மிச்ச சதையில்
வெட்டுக் காயங்கள்.
அஞ்சலை பாட்டியின்
மண்டையோட்டில் கத்திகள்
செருகிக் கிடக்கின்றன.

மீண்டும்
கல்லறைகள்
திறக்கப்படுகின்றன.
செத்தொழிந்து
மண்ணோடு மக்கி
நினைவுகள் தொலைந்து
காலமறுத்து
கல்லறைக்குள் வாழ்ந்த
அற்புதத் தருணங்களை
நோக்கிப் பாய்கின்றன
பிணங்கள்.

1 thought on “உயிர்பெறுதல்”

  1. கே.பாலமுருகன் கவிதை சிறப்பு…

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்