ச.துரை கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

வீடு பெருக்கிக்கொண்டிருந்தவள்
மூச்சு வாங்குகிறதென்று
மின்விசிறி இயக்கினால்
அது பிரபஞ்ச றெக்கை அந்தி காணாது
நேரடி இருள் உணர்ந்த தருணம்
அப்படியே உறைந்து அமர்ந்தவளின்
கால்களை ஈக்கள் மொய்க்கத்தொடங்கின
யாராவது கேட்டால் மாரடைப்பு என
கூறிவிடலாமென்று சுவர்கள் தங்களுக்குள்ளே
பேசி முடிவெடுத்துக்கொண்டன.

***

மிதப்பது கோடுகள் அல்ல புள்ளிகள்
புள்ளிகளின் காலம் தொடங்கியபோது நான் பொடியன்
எனக்கு ஒரு மீனின் பெயரை வைக்கவே தந்தை விரும்பினார்
அவரொரு சோமான் சக்கரவர்த்தியின் கணக்காளர்
ஒரு கணக்காளர் மகனுக்கு மீன் பெயராயென விளம்ப
அவர் எனது கைகளையாவது துடுப்புகளாக்க விரும்பினார்
அதற்காகவே அவரது கைகளை
பற்றும் போதெல்லாம் தவிர்த்துவிட்டு
தனித்து நீந்தச் சொன்னார்
பிறகு எனது உடலை கட்லாக்களுக்கு
இணையாக்க வாலை மீன்களை உணவளித்தார்
என்னை எந்தப் படகு கவர வேண்டுமென்றும்
அவரே தீர்மானிக்க இருந்தார்
அவரது எந்தச் சொல்லையும் பற்றாது
சமயங்களில் கட்லாவாக சமிக்ஞையிடும்
ஒங்கியாக நான் வளர்வதைப் பொறுக்காது
எனக்கான எண் 7ம் நம்பர் தூண்டிலை அவரே வீசினார்
நான் சிக்கினேன்
வேகவேகமாக மேலேற்றி உதைத்தார்
பொல பொலவென இரத்தம்
வார்த்தை சமுத்திரம் நிலா தாண்டி பீறிட்டது
கரையில் எல்லோரும் வண்ணமயமான காற்று
இனி நல்ல பாடு வருமெனக் களித்தார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்