நிழற்கடவுள்கள்

7 நிமிட வாசிப்பு

மனிதனின் கற்பனை வெளியில் உதித்த ஏதோவொரு முட்டாள்தனமான கற்பிதங்கள்தான் மெல்ல மெல்ல நிஜத்தில் கேள்விகளாக முரண்களாகப் பல தலைமுறைகளைக் கடந்து சிந்திக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு இன்று அறிவியல் தளத்திலோ அல்லது தத்துவத் தளத்திலோ வைத்துப் புரிந்து கொள்ளப்படுகிறது. அதிலிருந்தே மானுடம் போற்றிக்கொள்ளும் அத்தனை கண்டுபிடிப்புகள் சிந்தனைகள் என நிகழ்ந்தேறி இருக்கின்றன.

கடவுள்தன்மை பற்றிய கற்பனைகளுள் அடிப்படையானது ‘எங்குமிருப்பவன்’ என்பது! இதிலிருந்துதான் மற்ற பண்புகள் சுட்டப்படுகின்றன. மானுடன் கடவுளின் குணங்களாக வைக்கும் அனைத்தும் தன் திகழ்குணத்தின் எதிர்முனையில் வைக்கப்படுவனவே. அதாவது மனிதன் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவன் என்பது அவனது பொருண்மைப் பண்பு. அதை மீற அவனால் இயலாது. அதைக் கடக்க விழையும் அவன் ஆழ்மனம் கடவுளைக் கற்பிதம் செய்து அதை எங்கெங்கும் வைத்து விரித்துப் பார்க்கிறது. சர்வ வல்லமை என்பதும் இதே அடிப்படையில்தான் கடவுள் தன்மையாக முன்வைக்கப்படுகிறது. அதன் மூலம் அவன் மனம் தற்காலிக இலகு அடைகிறது. இது ஆன்மீகத் தரப்பு.

படிப்படியாக மேம்பட்ட அவனது தொழில் நுட்ப ஆற்றலால் இங்கிருந்து கொண்டே வேறோர் இடத்தில் இருக்கும் சாத்தியங்களையும் ஒரளவிற்கு ஏற்படுத்திவிட்டிருக்கிறான். தொலைபேசி, நேரடி வீடியோ அரட்டை தொடங்கிப் பலவற்றையும் சொல்லலாம். இதுவும்கூட அவனது அக விடுதலையைச் சற்றே ஊர்ஜிதம் செய்கிறது. இது அறிவியல்தனம்.

நிஜத்திற்கு அப்படியே எதிரான இன்னோர் உச்சத்தைக் கற்பனை செய்யும் ஆழ்மனக் கூறு முக்கியமானது.

கடவுள் பற்றிய இன்னொரு பண்பு சாகாவரம் என்பது. இது தனது மறுக்கவியலாத மரணத்தின் பயத்திலிருந்து உருவானது. இதையும் ஆன்மீக அறிவியல் தளங்களில் அவன் மெல்லக் கடந்து வருகிறான்.

இன்னொரு முக்கிய வேறுபாடு மானுடனுக்கு இருக்கும் பற்று கடவுளிடம் இல்லாதிருப்பது. எங்குக் கொண்டு விடினும் அவன் தனக்கு வேண்டியவரை அடையவே அலைவுறுவான். கடவுள் தன்மைப் பட்டியலில் பற்று என்பது இல்லை.

இந்தப் புள்ளியில் உளவியல் அடிப்படையில் இன்னுமொரு கருத்து முகிழ்கிறது. அவன் பற்று கொண்டு நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதாலேயே அவன் பிறரை இழப்பதும், தான் மரணிப்பதும் நிகழ்கிறது என்பது அது. மாறாக, கடவுள் குறிப்பாக எவர் மீதும் பற்று வைத்தால் அக்கணத்திலிருந்து கடவுள் மரணத்தை நோக்கிய திசையில் பயணிக்கக் கூடும். மரணத்தைத் துச்சமெனக் கொண்ட வீரர்கள் பலரையும் வழிபடுவதும் இப்படித்தான்.

இணைப் பிரபஞ்சம் என்ற ஓர் அனுமானம் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நிகழ்விற்குமான பிரதிபலிப்பு உலகு. அங்கு நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளுக்குமான விளைவு எதிரொலிப்பது இப்பிரபஞ்சத்தில். இங்கிருக்கும் ஆற்றல் அங்கிருந்து செலவு செய்யப்படும் ஆற்றலிலிருந்து உருவாகிறது. இங்கிருக்கும் வரலாறு அவர்களுக்கு ஓர் எதிர் வரலாறு. இங்கிருக்கும் தீரா அடிப்படைக் கேள்விகளுக்கு அங்குப் பதில் எளிமையானவை.

இன்று இந்த அனுமானத்தின் அடிப்படையில் மேற்கத்திய ஊகப் புனைவுக்களத்தில் பல படைப்புகள் எழுதியும் படமாக்கப்பட்டும் குவிந்து கிடக்கின்றன. அதனாலேயே இது போன்ற கலைச்சொற்களையும் அதன் வரையறைகளையும் பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு இருக்கிறது. அந்தக் கதைகளைக் கவனிக்கையில் கதையின் முதன்மைப் பாத்திரம் தனது நிழற் பாத்திரத்துடன் தொடர்புகொள்ளும் தருணம் மிக முக்கியமானது, சிலிர்ப்பேற்ப்படுத்துவது.

ஜோசப் கேம்ப்பெல்லின் ’நாயகனின் பயணம்’ என்ற கருத்து மிக முக்கியமான உளவியல் கண்டறிதல்களுள் ஒன்று. Hero with thousand faces என்ற நூலில் இதன் அமைப்பும் கூறுகளும் ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சாதாரண நிகழ்விலிருந்து அசாதாரண உலகில் கால்வைக்கும் தருணமே மிக முக்கியமானது.

கால விசும்பு ஆற்றலின் தடைகளைக் கடந்து சத்தியத்தின் நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளும் ஐக்கியமாதலை அது கற்பனை செய்துணர வாய்ப்பளிக்கிறது. ஒரு படியேற்றம், ஒரு தாவல்! ஆனால் கதாசிரியருக்கு அதைச் சரியாகச் சொல்வதில் ஒரு மேதைமையும் இயல்பாற்றலும் தேவைப்படுமன்றோ. அசிமோவ் அத்தகையவர்களுள் முதன்மையான கதைசொல்லி.

அசிமோவின் The Gods Themselves- ஐ வாசிக்கத் துவங்கும்போது, நான் The Leftovers (2014-2017) என்ற தொலைத் தொடரினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதை அறிவியல் புனைவு அல்லது மீபுனைவு வகைமைகளின் கீழ் வைக்கலாம். எத்தனையோ தளங்களில் பறந்து சென்று கனவுகளைப் பேசும்போதும், தடம் மாறிப் பறந்து விடக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அதைச் செய்யாமல், மானுட உணர்ச்சிகளையே அதன் பல்லாயிரமாண்டு வரலாற்று மர்மங்கள், களங்கங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை பெட்ரி டிஷில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தது.

பெரு வியப்பாக The Gods Themselves ஐ வாசிக்கையில் மறைமுகமாக அதன் தாக்கம் The Leftovers இல் விரவிக் கிடப்பதாக உணர்ந்தேன். இணைப் பிரபஞ்சத்திலிருந்து கேள்விகளையோ அல்லது விடைகளையோ அளித்தும் பெற்றுக்கொண்டும் தன் பிரபஞ்சத்தை இன்னும் சிறந்த இடமாக மாற்ற முனையும் காட்சிகள் என் மனக்கண்ணில் விரிந்தன. உண்மையில் அசிமோவ் வேறோர் இணைப் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு தன் சங்கேத எழுத்தின் வழியே The Leftovers முழுக்கத் தீண்டல்கள் செய்கிறார் என்று தோன்றியது. அவர் மட்டுமின்றி ஜீசஸ், யங், ஃப்ராய்ட் எனப் பலரும் இருந்தாலும் இத்தொடரின் மையக் கற்பனையே 28 எபிசோட்களில் மானுட வரலாற்றை முழுதாய்த் தீண்டத் துணிவதாய்த் தோன்றியது. அதற்கு அசிமோவின் கற்பனை பாதையும் பார்வையும் வகுத்தளித்திருக்கிறது.

ஐசக் அசிமோவின் தனித்துவமான நாவல் ‘The Gods Themselves’ என்று சொல்லலாம். நாவல் எழுதப்பட்ட அன்றைய தினத்தில் அவரது கற்பனைகள் அது வரைப் பயணிக்காத இடங்களுக்குச் செல்லும் வீச்சு கொண்டிருந்தது மட்டுமின்றி ஊகப்புனைவு வகைகளில் ஒரு முன்னோடி என ஐயமின்றிச் சொல்ல இடமளிப்பது. புதிய அறிவியல் தளங்களைப் புனைவில் செய்து காட்டுவது அறிவியல் பின்புலமற்ற வாசகருக்கு ஓர் இடரைத் தரும். அதைக் கடந்து செல்ல உதவியாக ஏறக்குறைய படைப்பின் ஒரு செம்பாகம் அந்தப் புனைவிற்கான தன் விளக்கங்களில் ஈடுபடும். இத்தகு விளக்கங்கள் புனைவம்சத்திற்கே எதிரானது எனினும், வாசகர்களுக்கு ஏற்படும் சரளத்தடையைக் கடக்க வைக்கத் துணை புரிவது முக்கியமானது. அசிமோவ் தான் சொல்ல விரும்பும் சிக்கலான புனைவம்சத்தினைத் தன் அடுக்கு முறை மற்றும் சிறிய சிறிய மனித இயல்புகளின் மீதான அவதானிப்புகள் மூலமாக எளிதாகக் கடந்துவிடுகிறார்.

இதன் உள்ளடக்கம் தனித்துவமானது என்பதாலேயே அதன் விசைகள் சென்று அடையும் புள்ளியைச் சொல்லும் முன் அதன் பாதைகள் கோடிட்டுக் காட்டப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இந்நாவல் மூன்று பகுதிகளை உடையது.

Against Stupidity என்ற முதற்பகுதி நாவலின் நுழைவு வாசல். பல பாத்திரங்கள் சம்பிரதாயமாக வருகின்றன. எனினும் புனைவின் கேள்விகளை வலுவாக நிறுவிட இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்கிறார் ஆசிரியர். ஹாலம் என்ற கதிரியக்க வேதியியலாளர், எதேச்சையாகத் தான் கண்டறிந்த அறிவியல் ரகசியத்தைக் கொண்டு உலகின் ஆற்றலைப் பன்மடங்கு உயர்த்திவிடுகிறார். அது அவருக்கான பெயரையும் புகழையும் மட்டுமின்றி மனிதத் தொகைக்கான மரியாதையையும் ஒட்டுமொத்தமாய் வாரித் தந்துவிடுகிறது. தன்னளவைக் கடந்த புகழை அனுபவித்த ஒருவன் தன்னையே ஆழத்தில் வெறுத்துத் தன்னை அரக்கனாக்கிக்கொள்வான் அல்லது தன்னைச் சுட்டிக் காட்டித் தோல்வியாளன் எனக் குறிப்பிடக் கூடிய எளிய உண்மைகளைக்கூடக் கிள்ளி எறிய எத்தனிப்பான். அவனுக்கு அப்படியொரு வாய்ப்பை அவனது வளங்களும் மனத்தின் வெற்றுப் பெறுமையும் வழங்கும்.

இத்தகைய அறிவியலாளரின் வாழ்வியலை நூலாக வடிக்க முனைகின்ற லாமாண்ட் என்பவருக்கு இணைப்பிரபஞ்சத்திலிருந்து வந்து சேர்ந்த சமிஞ்கை இந்தப் பிரபஞ்சம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேதிப் பொருள் தீராவிஷம் என்று புரியாத லிபியில் குறிப்பிடுகிறது. உலகின் துயரை முன்கூட்டியே கணக்கிடுபவர்கள் முட்டாள்களாகத்தான் கருதப்படுவர். அந்த முட்டாள்தனத்தின் சுவற்றில் மோதி மோதியே மண்டை பிளந்து இறந்தவர்களின் ஓலங்கள் வரலாற்றின் குகை நெடுகிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய புலம்பலை நாயகன் வெளிப்படுத்துவதோடு முடிகிறது முதல் பாகம்.

இங்கே வரிசையற்ற அத்தியாயங்களை முன்வைப்பதன் மூலம் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை, அவர்களது மர்மங்கள், கதை நிகழும் கால இடங்கள் பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களின் மனதில் நிலைநாட்டுகிறார். அங்கிருந்து ஒரு சரளம் உருவாகிறது. அது சிக்கலான புனைவுக் கருத்துகளை வெகு எளிதாகத் தனக்கானதாக்கிக்கொள்கிறது. இன்றைய வாசிப்பு வெளியில் இந்த அம்சம் தேய்வழக்காகிவிட்டிருக்கிறது. வணிகத் திரைப்படங்களில்கூட நேர்கோட்டின்மையுடன் சொல்லப்படும் படங்கள் அதிகரித்திருக்கின்றன. அதனாலேயே இன்றைய வாசிப்பில் இது சுவாரஸ்யம் குறைவாகப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்நாவலின் தவிர்க்க முடியாத குறைபாடு இந்தக் காலம் கடந்த தன்மை இன்மைதான். மேலும் இந்நாவல் எடுத்துக் கொண்டிருக்கும் வடிவமும் இன்றளவில் தேய்வழக்காகிவிட்ட ஒன்றே.

ஆனால், இந்நாவலின் இரண்டாவது பகுதியில் (Part II : The Gods Themselves) உருவாக்கி அளிக்கப்பட்டிருக்கின்ற கற்பனை புனைவுலகிற்கு ஓர் அளப்பரிய பங்கு என்று சொல்லலாம். இணைப் பிரபஞ்சத்தில் இருக்கின்ற பாலியல் பாகுபாடுகளும் அங்கு உருகி வழிந்துவிடுகின்ற நிலையாகக் குறிப்பிடப்படும் பாலிணைவு காட்சிகளும் நமது பிரபஞ்சத்தின் ஆன்மீக உருவகங்கள்.

ஆண் பெண் என்ற பாலியல் கற்பனைகளைச் செய்து பார்ப்பதென்பது கலை கற்பனை தொடங்கிய காலந்தொட்டே இலக்கியத்திலும் அறிவியலிலும் ஆர்வத்தினை மூட்டுகின்ற தொழிலாக இருக்கிறது. அதைக் குறியீடுகளில் குறிப்பிடுவதிலும் மனிதனின் ஆர்வம் இருந்திருக்கிறது. இன்றைய உயிரியல் குறியியலில் ஆணுக்கு ♂ என்ற குறியீடும் பெண்ணிற்கு ♀ என்ற குறியீடும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆணின் குறியீடு உருதியான இரும்பினால் (Steel) செய்யப்பட்ட ஈட்டி மற்றும் கேடயத்தினையும், பெண்ணிற்கான குறியீடு செம்பினால் செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய கண்ணாடியையும் உருவகப்படுத்துகிறது. அதிகப்படியான எளிமையாக்கம்தான் இது எனினும், இதன் மீள் சிந்தனையும் இத்தகைய எண்ணங்கள் உலகின் எல்லாப் புராணக் கலை சேகரிப்புகளிலும் ஒன்றாகவே இருப்பது கவனிக்கத் தகுந்தது.

ஆண்தன்மை வன்மைக்கும் பெண்தன்மை பொறுமைக்கும் குறிப்பிடப்படுவது தமிழிலும் நிகழ்ந்து வந்தே இருக்கிறது. இந்நாவலின் இரண்டாவது பகுதியில் இணைப் பிரபஞ்சத்தினைக் காட்சிப்படுத்தும் அசிமோவ், அங்கு வாழும் உயிர்களை ‘வன்மையாளர்கள்’ மற்றும் ‘மென்மையாளர்கள்’ என இரண்டாகப் பகுக்கிறார். மென்மையாளர்களுள் ’இடங்கள்’, ‘வலங்கள்’ மற்றும் ‘மையங்கள்’ என்ற மூன்று பாலினங்கள் இருக்கின்றனர். இப்படிப் பிரிப்பதன் மூலம் வெகு குறைவான பக்கங்களிலேயே இணைப் பிரபஞ்சத்தின் வேற்றுயிரிகளின் பாலினம், உணர்வுகள், பழக்கவழக்கங்கள், பகுத்தறியும் தன்மை, அரசியல் நிலைப்பாடுகள் என அநேகத் தரவுகளை நிலைநாட்டிவிடுகிறார் ஆசிரியர். அங்கிருந்து கதை இன்னும் வேகமெடுக்கிறது.

இந்த முப்பாலினமும் இணைந்து ட்ரையட் என்ற இணைவு முறையில் கலவி நிகழ்த்துகின்றனர். அச்செயலிற்கு ‘உருகுதல்’ என்று பெயர். இதில் துவா என்ற நாயகி ஒரு சந்தர்ப்பத்தில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதைக் கணித்து அதிலிருந்து உலகின் அறிவியல் தளத்தில் ஏற்பட்டிருக்கும் தவறைப் புரிந்துகொள்வது வெகு சுவாரஸ்யம். அவர்தான் நமது பிரபஞ்சத்தில் லாமாண்டிற்குத் தொலைத்தொடர்பு கொண்டு சமிஞ்கைகள் தருபவள் எனத் தெரிகிறது.

இயற்பியல் என்பது ஆற்றல், விசும்பு மற்றும் காலம் என்ற அடிப்படை அலகுகளைக் கீறும் கீற்றரிவாள். அது மெல்ல அதிலிருந்து கதிர்கள் உதிராவண்ணம் கீறும் வரை அது உணவிற்கும் ஆக்கத்திற்கும் பயன்படும். ஆனால், அவசரத்தில் கதிர்மணிகளையும் அறுத்துச் சிதறவிடும் கோரமுகமும் அறிவியலுக்குண்டு. பயன்படுத்துபவனின் கைகள் அதைத் தீர்மானிக்கிறது. கைகள்தான் மூளையைத் திருகும் ஆயுதம்.

மனிதன் கைகளைக் கொண்டு அதன் தீண்டல்களைக் கொண்டே மூளையின் தூண்டுதல்களை ஏற்படுத்தி இருக்கிறான். கைகளின் வழியே அவன் பாடல்களை ரசிப்பதும் கைகளின் தீண்டல்கள் வழியே அவன் குரங்கின் குகையிலிருந்து மனிதனின் வெளிக்கு வந்ததும் நாம் அறிந்ததே.

பகுதி மூன்றில் நிலவில் நிகழும் வாழ்வினைப் படைக்கும் அசிமோவ், அழகாக முதற்பகுதியில் விடுபட்டிருந்த கேள்விகளைத் தீர்க்கிறார். ஹாலாம் பெற்றிருந்த புகழுக்கும் செல்வத்திற்கும் அடிப்படையான காரணம் டெனிசன் என்ற இன்னோர் அறிவியலாளர். அவர் ஹலாமின் எல்லையற்ற அதிகாரத்தைக் கண்டு நொந்தும் விலகியும் தொழிலதிபராகி நிலவுக் குடிமகனாகிவிடுகிறார். ஆனால் அங்கும் அவரது அறிவியல் கேள்விகள் மேலெழுகின்றன. தொடர்ந்த முயற்சியால் செலின் என்ற மரபணு பொறிப் பெண்ணுடன் இணைந்துகொண்டு சில முக்கிய கேள்விகளுக்கு விடை காண எத்தனிக்கிறார். மூன்றாவது இணைப் பிரபஞ்சம் பற்றிய அறிதல்களுக்குச் செல்கிறது அந்த மனப்பயணம்.

இண்டர் கேலக்டிக் பயணங்களை எளிதாகச் சாதிக்கவும், லூனார் வாசிகளுக்கும் புவிவாசிகளுக்கும் இடையிலான பாலிணைவுச் சாத்தியங்களை எளிமைப்படுத்திடவும் அவரது தேடல்கள் வித்திடுகின்றன.

இந்தப் பகுதியில் லூனார் வாசிகளின் வாழ்க்கை முறை அழகிய கற்பனைகள் நிறைந்தது. அவர்களது உடலமைப்பும் வாழ்க்கை முறையும் ஈர்ப்பு விசையின் குறைவினால் எப்படியெல்லாம் மாறிவிட்டிருக்கின்றன என்ற சித்திரத்தினை முன்வைக்கிறார். நிகழ்காலம் என்பது இடம் சார்ந்தது இடம் மாறிச் செல்லச் செல்லக் காலம் மாறும் என்பதையும், ஆற்றலை வழிபடும் காலகட்டத்திலிருந்து தேவைகளைத் தோண்டுவதற்கான காலத்தை விரைவில் மானுடம் அடையும் அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அதன் மீதான நம்பிக்கையையும் விதைக்கும் ஒரு கனவாகவும் இந்தப் பகுதி நாவலுக்கான அழகிய முற்றுப் புள்ளியாகிறது.

பரந்து விரிந்த விளைநிலம். அதில் தோன்றி இருக்கும் கதிர்கள். அவற்றை முழுதாய்த் தீண்டிவிட ஓர் ஆயுள் போதாது. இருப்பினும், மனக்கட்டுக்களை அவிழ்த்துவிட்ட பின்னும் பித்துகொள்ளாமல் மனித ரசனையைத் தக்க வைத்துக்கொள்ளத் திராணியுள்ள மனமுடையவன் எவனோ ஒருவன் உருகியவாறே மண்டியிட்டு இரு கைகளையும் அலசி அக்கதிர்களைத் தன் மகவைத் தாயெனத் தழுவி நிற்பானேயாயின் அது உலகையே தழுவியதற்கு இணையானதேயாகும்.


மேலும் படிக்க

The Gods Themselves நாவல் விவாதம் – https://io9.gizmodo.com/isaac-asimov-s-the-gods-themselves-in-which-scientists-5589704

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்