அநாமதேய சயனம்

17 நிமிட வாசிப்பு

“டேய், எந்தி. எம்புட்டு நேரமா எழுப்புதேன்.”

அம்மாவுக்குத் தினமும் இதே வேலைதான். தூக்கத்தின் உச்சத்திலிருந்து என்னைப் பாதியிலே எழுப்புவது. எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது…

ஆழ்ந்த தூக்கம் என்பது எல்லோருக்கும் வாய்க்காத வரம். அதைப் பிறவியிலே வாங்கிவர வேண்டுமா, இல்லை வாழும் நாட்களின் தொடர் தவத்தில் அடைய வேண்டுமா என்று கேட்டால் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அது ஒரு வரம். பணமோ மதுவோ கலவியோ தர முடியாத எல்லையற்ற போகம் தரும் அற்புத வரம்! அறிவியலால்கூட முற்றிலுமாய் மழுங்கடிக்கவோ மீட்டெடுக்கவோ முடியாத சக்தி வாய்ந்த வரம்.

அந்த வரம் வேண்டி நான் கண்மூடும் போதெல்லாம் அம்மா பாதியிலே எழுப்பிவிடுவாள். ஆனால் இன்று என்னை எவ்வளவுதான் மாறி மாறி விளித்தாலும் உடம்பைப் போட்டுக் குலுக்கினாலும் இறுகிய மனதோடு செவிடனைப் போல் படுத்தேயிருப்பது என்ற முடிவில் இருக்கிறேன். சிறிதுநேரத்தில் என்னை எழுப்புவதை நிறுத்திவிட்டிருந்தாள், பாவம் சோர்ந்துவிட்டாள் என்று நான் நினைத்திருந்த நொடியில் மீண்டும் அதே கூப்பிடும் குரல்… உடலைப் போட்டு உலுக்கும் உணர்வு… எங்கோ வழிதெரியாத காட்டில் யாரோ என்னைப் பள்ளத்தில் தள்ளும் நடுக்கம்!

இப்படி உறக்கத்தின் மடியில் கனவைப் போர்த்திக்கொண்டு என்னை மறந்து தலைசாயத் தொடங்கியது, நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து. அப்போது சேகர் வீட்டில் வெடிக்காத காற்றடைத்த பெரிய பலூன் போன்ற இருக்கை ஒன்றிருக்கும். அவன் வீட்டுக்கு விளையாட போகும்போதெல்லாம், என்னை முழுதாய் விழுங்கிவிடுமளவு பெரிதாயிருக்கும் அந்தக் கருப்புநிற இருக்கையில் முகம் புதைத்துக்கொள்வேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் உடலைக் குறுக்கியும் ஒடுக்கியும் அதற்குள்ளேயே ஒளிந்தும் போவேன். அதன் மெதுமெதுப்பில் என்னை மறக்கும் நொடியில் கண் அயர்ந்து தூங்கிவிடுவேன். இடையிடையே “சைக்கிள்ல ரவுண்டு அடிக்கப் போறேன் வரியா…” எனத் தட்டி எழுப்புவான். கண்திறக்க மனம் வராது.

அதே மாதிரியான ஓர் இருக்கை வேண்டும் என்று வீட்டில் நான் அடம்பிடித்து அம்மாவிடம் அடி வாங்கிக்கொண்ட சில தினங்களுக்குப் பின்னால், டவுனிலிருந்து அப்பா மெத்தை ஒன்றை வாங்கி வந்தார். அது ஒரு வெள்ளைநிற மெத்தை. நாங்கள் மூன்று பேரும் தாராளமாய்ப் படுத்துத் தூங்குமளவு அகலம். சூரியகாந்திப்பூக்கள் படம் போட்ட பளபளக்கும் விரிப்பு. மெத்தையின் மீதிருக்கும் பிரிக்கப்படாத கண்ணாடி நெகிழி உறை உடம்போடு உராயும்போது ஒரு மாதிரியாகக் கூசியது.

மெத்தையோடு சேர்த்து புதுத் தலையணை உறையில் அடைக்க, வெள்ளைப்பஞ்சுகள் நிறைந்த பெரிய சாக்குப்பை ஒன்றையும் அப்பா வாங்கி வந்தார்.

“இலவம்பஞ்சுடா…” என்றார்.

எனக்கென்று அவர் தந்த நீலநிறத் தலையணை உறையில் நானே எனக்கு வேண்டிய அளவு இலவம்பஞ்சு வைத்து அடைத்தேன். ‘புஸ்புஸ்’ எனத் தலையணை வீங்கியது.

“எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வைடா” அம்மா சிரித்தாள்.

“போம்மா எனக்கே பத்தல…”

அன்றைய இரவு புதுமெத்தையில் தலைசாய்ந்து படுத்தபோது காற்றில் மிதப்பதைப் போன்றிருந்தது. மெத்தையின் மென்மை என்னை இலகுவாக்கியது. கண்களை மூடியதும் இடம்பொருள் தெரியாத அண்டவெளியில் தூக்கி எறியப்பட்டேன்.

அப்போதெல்லாம் படுக்கையில் தானாகச் சிறுநீர் வெளியேறிவிடும். காலையில் அம்மா திட்டுவாள்.

“ஏல, உனக்கு இன்னும் கைகொழந்தன்னு நெனப்போ…எரும வயசு ஆவுது.. பாய்ல ஒண்ணுக்கு அடிச்சு வச்சுருக்க…”

“ஒண்ணுக்குப் போவல. தண்ணி கொட்டிருச்சு..”

“உன் அப்பன மாதிரி எதுக்கெடுத்தாலும் புளுவாத. ராத்திரி இங்குட்டுப் படுத்தா காலையில அங்குட்டு எந்திக்க. கெடிகாரம் மாதிரி பாய்ல ஒரே வட்டம்… இன்னும் துரைக்கு நேரா கூடப் படுக்க தெரியல. அதுக்குள்ள புளுவு. எந்திச்சுதொல, இருக்கற சோலில உன் ஈரவிரிப்ப வேற தினமும் அலசிப் போடணும்…”

படுக்கையில் மூத்திரம்போகும் என் பழக்கம் மாறும் வரை, எனக்காகவே மெத்தை மீது பாயும் அதன் மீது பழைய புடவையும் விரிக்கத் தொடங்கினாள்.

அவள் கொல்லைக்கு எடுத்துப்போகும் ஈரப்பாயை என் உறக்கம் கலையாத கண்கள் பார்த்தபடியிருக்கும். அதன் ஈரத்தில் என் தூக்கத்தின் மிச்சம் இருப்பதாய்ப் பல நேரங்களில் தோன்றியதுண்டு.

***

பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் முதல் வேலையாக மெத்தையிலேறிக் குதிப்பேன். அதன் மென்மையில் கால்கள் இன்னும் உயரமாய்த் துள்ளும். அப்படியே தலைசாய்ந்தால் விழிகள் கிறங்கும். மந்திரம் போட்ட கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.

“ஏல, எந்திச்சு தொல, பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆயிட்டுல, எம்புட்டு நேரம்தான் தூங்குவ?”

அம்மாவால்தான் என் உடம்பை இப்படிச் சல்லடையாய் உலுக்கித் துக்கத்திலிருந்து மீட்டுக்கொணர முடியும்.

சேகர், குரங்குபெடல் போட்டபடியே என் வீட்டுவாசலில் இரண்டு ப்ரேக்கையும் வேகமாய்ப் பிடித்தழுத்தி, தன் உயரத்துக்கு எட்டாத சைக்கிளை விட்டு அரைகுறையாய்க் கீழிறங்கிச் சப்தமாய் விளையாடக் கூப்பிடுவான். அவனது மிதிவண்டியின் பின்காரியரில் நீளமான கைப்பிடியுடன் கூடிய கிரிக்கெட் மட்டை ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

“நான் வரல, நீ போயிட்டுவா” நான் மறுத்துவிடுவேன்.

வெளியே வெயிலில் வியர்த்து விருவிருத்து விளையாடுவதில் என்ன இருக்கிறது? பஞ்சு மெத்தையில் மின்விசிறிக் காற்றில் கண் அயரக் கால்நீட்டிப் படுப்பதைவிடவா அது சுகமாய் இருக்கப் போகிறது?

“ஏன்டா பொட்டபுள்ளக் கணக்கா வூட்டுக்குள்ளேயே படுத்து கிடக்க? உன் வயசுப் பசங்க எல்லாவனும் வெளியவே தவமா கிடக்கானோ. நீயும் போய் அவனுகளோட விளயாடவேண்டியதுதான…”

“இல்ல ஆச்சி, வெளிய வெயிலா இருக்கு. நான் அப்படியே டிவி பாத்துட்டே தூங்கிருதேன்.”

“நல்லாதாண்டி புள்ளைய வளக்க. நல்லா சமஞ்ச புள்ளையாட்டம்.”, அம்மாவையும் ஆச்சி ஏசுவாள்.

ஆச்சி தூங்கி நான் பார்த்ததேயில்லை. இரவு நான் தூங்கும்வரைக்கும் அம்மாவோடு அடுக்களையில் ஏதவாது வேலை செய்துகொண்டிருப்பாள்; அப்பா டவுனிலிருந்து வேலைமுடித்து வரத் தாமதமானால் அதுவரை தூங்கமாட்டாள்; இருட்டியதும் வாசற்படியில் கால்நீட்டி உட்கார்ந்துகொண்டு யாரோடாவது எதையாவது பேசிக் கொண்டிருப்பாள். அப்போதே எனக்கு கண் அயர்ந்துவிடும்.

காலையில் நான் விழித்துப் பார்க்கும்போது, தன் காக்கிநிறச் சேலையை அலசி, கொடியில் காயப்போட்டுக் கொண்டிருப்பாள், இல்லை வீட்டின்பின்புறம் தோட்டத்தில் கீரை பறிக்கப் போயிருப்பாள், இல்லை வெள்ளனே குளித்து முடித்துக் கோயிலுக்குச் சென்றுவருவாள்.

அவளது கண்கள், சுருக்கம் விழுந்த இடுங்கிய முகத்துக்குள் ஒளிந்தே கிடக்கும். ஆச்சி தினமும் தூங்க மறந்துவிடுவாளோ என்று தோன்றும்.

அவளிடமே கேட்பேன் “ஏன் ஆச்சி தூங்கவே மாட்டேங்கற…”

“கோட்டிப்பயலே, அதுக்குன்னு உன்ன மாதிரி தூங்கிட்டேவாலே கெடப்பாங்க…” என்று சொல்லிவிட்டு மெத்தையில் கிடக்கும் என் தோளில் மெல்லத் தட்டியபடி கதை சொல்லுவாள். சீரான இடைவெளியில் அவள் தட்டிக்கொடுக்கும் ஓசையில் என் மேல் இமைகள் அதன்போக்கில் மெல்ல மூடிக்கொள்ளும். கனவு என்னைக் கொஞ்சம்கொஞ்சமாய் விழுங்கத் தொடங்கிய சுகமான இரவுகள்…

***

“ராசா, தூங்குனது போதும். எம்புட்டு நேரம் தூங்குவ… ஆச்சி மேகத்துல ஏறிப் போறேன். வருதியா?”

“கொஞ்சம் பொறாச்சி, தூக்கமா வருது…”

“ஆச்சி கூட வந்தா, ராசாக்கு வானம் முழுசும் சுத்திக் காட்டுவேன்…”

“போ ஆச்சி, கண்ணு சொக்குது…”

“சரி மக்கா, அப்போ நான் மட்டும் தனியா போவுதேன். ஆச்சிய தேடாத…”

ஓட்டைக்கண் விட்டுப் பார்த்தேன். வெள்ளைப் புகை மூட்டத்தின் நடுவே, ஆச்சி ஒவ்வொரு மேகமாய் ஏறிக் கொண்டிருந்தாள். ஒரு மேகத்திலிருந்து அடுத்த மேகம் ஏறுகையில், தன் காக்கிநிறச் சேலையை முட்டிவரைத் தூக்கி அகலக் கால் வைத்து லாவகமாய் ஏறிக்கொண்டே போனாள்.

கண்களை அகல விரித்தேன். எனக்கும் மேகங்களின் மீதேறித் தாவிக் குதிக்க ஆசை. ஆனால் ஆச்சிக்கு என்மேல் கோபம், என்னைத் திரும்பிப் பார்த்துக் கூப்பிடாமல் மேலே போய்க்கொண்டே இருந்தாள்.

“ஆச்சி நில்லு..”

பதில் இல்லை..

“ஆச்சி நில்லு, நானும் வந்துட்டேன்…”

“ஏல என்னாச்சு எந்துரு!” அம்மாதான் என்னைத் தட்டி எழுப்பினாள். கண் திறந்து பார்த்தேன். பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அம்மாவின் மடியில் தலைசாய்ந்து தூங்கிப் போயிருந்தேன்.

என் முகத்தில் வழியும் எச்சில்நீரை சேலை முந்தானையால் துடைத்தபடி, பக்கத்து சீட்டு அக்காவிடம் “ஆச்சி போன வாரம் இறந்துட்டுல… அதான் பையன் இன்னும் அவ ஞாபகமாவே இருக்கான்..”

பேருந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். எண்கள் எழுதியிருக்கும் சாலையோர மரங்கள் பின்னுக்குப் போய்க்கொண்டிருந்தன.

“அம்மா படுத்துக்கிடவா…”

தலையசைத்தாள். நான் தலை வைத்துப் படுக்கத் தன் மடியை நடுவில் சிறு பள்ளம்போல் ஆக்கிக்கொண்டாள். மீண்டும் அவள் மடியில் கிடந்தேன். என் தலைமுடியை வருடிவிட்டுத் தன் புடவை முந்தானையால் வெயில் படாதவாறு என் முகத்தை மூடினாள்.

பழகிய அவள் சேலை வாசத்தில் கண்சொறுக ஜன்னலினூடே பார்த்தேன், வானில் வெள்ளை மேகங்கள் இலவம்பஞ்செனச் சிதறி இருந்தன.

***

“எந்திக்கியா இல்லயா…? இப்பதான் வலுவான நேரம். வார்டண்பய அவன் ரூம்ல புள்ளா இழுத்துட்டு சரிஞ்சுட்டான்…”

கண்களைக் கசக்கியபடி எழுந்தேன். முகம்வரை இழுத்துப் போர்த்தியிருந்த கருப்புநிறக் கம்பளி, நெஞ்சுப்பக்கம் சரிந்து விழுந்தது. கல்லூரி விடுதியின் பத்துக்குப் பத்து அறையின் மங்கிய மின்விளக்கு வெளிச்சத்தில், எதிர்புறக் கட்டிலில் சேகர் உட்காந்திருப்பது, உறக்கம் விலகாத என் கண்களுக்கு மங்கலாகவே தெரிந்தது. துளிர்விடத் தொடங்கிய மீசையைத் தடவியபடி அவனை முறைத்துப் பார்த்தேன். ஓநாயின் சிவந்த கண்களோடு அருகில் வந்து “எம்புட்டு நேரமாதான் ஒன்ன எழுப்புறது…” என்று கேட்டபோது அவனது வார்த்தைகளில் கெட்டுப்போன பழரசவாடை வீசியது.

ஜன்னலருகே இருக்கும் என் கட்டிலில் சரிந்து உட்கார்ந்தபடி யாருமற்ற மைதானத்தின் இரவுவிளக்கு வெளிச்சத்தில் வானத்தைப் பார்த்தேன். வானமும் என்னைப் போல் நீண்டதொரு கறுப்புப் போர்வையைப் போர்த்திச் சலனமற்று உறங்கிக் கொண்டிருந்தது.

அந்தச் சின்ன அறைச்சுவற்றில் மாட்டியிருக்கும் பெரிய வட்டச் சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்பது என்று காட்டியது. கடிகாரத்தின் பின்னால் தன் நீண்ட வாலை மறைத்தபடியே பெரிய மரப்பல்லி ஒன்று தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது.

“என்ன திருதிருன்னு முழிக்க, இன்னும் தூக்கம் போவலியோ. ரெண்டு ரவுண்டு போட்டுட்டுத் தூங்கு…” தோளில் தொங்கும் பையை அவன் தரையில் இறக்கி வைத்தபோது ‘க்ளிங்’ என்ற சப்தம் கேட்டது. அடர் கருப்பு நிறத் திரவம் நிறைந்த கண்ணாடிக் குப்பியையும் இரண்டு காலிப் பிளாஸ்டிக் கப்களையும் அரைகிலோ சேவு பாக்கெட்டையும் எடுத்து வெளியே வைத்தான்

“சீக்கிரம்… அந்த வார்டன் முழிச்சுத் தொலைக்கப்போறான்…”

அறையின் மின்விளக்கை அணைத்தான். மைதானத்தின் உயரிய விளக்குக்கம்பத்தின் வெளிச்சம் அறைக்குப் போதுமானதாய் இருந்தது.

என் கால்பக்கம் சுருண்டுகிடக்கும் கம்பளியைக் கழுத்துவரை இழுத்துவிட்டு இன்னும் முழுதாய்த் திறக்க மறுக்கும் கண்களால் சேகரைப் பார்த்தேன்.

“என்னலே பாத்துட்டே இருக்க, இதப் போட்டுட்டுத் தூங்கிப்பாரு. எப்படி தூக்கம் வருதுன்னு..”

“எனக்கு இப்போ வேணாம்…” போர்வையைத் தலைக்கு மேல் இழுத்துவிட்டு மெத்தையில் சரிந்தேன். ஜன்னல் வழியே நிலா வெளிச்சம் தள்ளாடியபடியே உள்ளே இறங்கியது. அந்தநேரம் எனக்கு மதுபோதையைக் காட்டிலும் சயன போதையே மேலானதாய்த் தோன்றியது.

***

“அடுத்த மாசத்துலேந்து உங்களுக்கு நைட்-ட்யூட்டி. நைட் ஒன்பது மணிக்கு கரெக்டா ஆபிஸ் வந்துரணும்…” என்று சொல்லிவிட்டு என் தோளில் தட்டியதும், எதிரே கணினியில் புதையுண்டு கிடந்த நான் திரும்பிப் பார்த்தேன்.

என் மேலாளர், தன் முன்வழுக்கையில் நீட்டிவிட்டிருக்கும் ஐந்தாறு முடிகளைச் சீராய் நீவியபடி, தன் நெஞ்சில் விழுந்து கிடக்கும் ‘சேகர்’ என்ற அலுவலக அடையாள அட்டையை எடுத்துச் சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டார்.

“ஓகேதான” என்று சிரித்தபடிக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திருக்காமல் என்னைக் கடந்து போனார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘நைட்-ட்யூட்டி’ என்றால் என் உறக்கம்? தாம்பரத்தில் புதிதாய் இடம்பெயர்ந்திருக்கும் வீட்டின் குளிர்சாதன அறையில், பருத்த தடித்த போர்வைக்குள் புதைந்து கால்நீட்டிப் படுத்துத் தூங்கும் என் பத்து மணிநேரத் தூக்கம்? யாருக்காகவும் எதற்காகவும் இதுவரை நான் விட்டுக்கொடுக்காத இரவு நித்திரையை முதல்முறை இழக்கப்போகும் பதட்டம்! இரவின் இருட்டில் உறக்கத்தின் துணையின்றித் தனியாய் விடப்பட்ட அச்சம்!

தலை இப்போதே வெடித்துவிடுமளவு ‘கிண்கிண்’ என்று வலித்தது. “அதெல்லாம் முடியாதுன்னு எழுந்து கத்து” ஆழ்மனதுக்குள் ஓர் அனாதைக் குரல். ஊரிலிருந்து வந்து சென்னையில் வேலைக்குச் சேர்ந்து இன்னும் ஆறுமாதங்கள்கூட முழுதாய்க் கழியாத நிலையில் ‘முடியாது’ என்பது எத்தனை பெரிய வார்த்தை.

“ஜி, சென்னைல நைட்-ட்யூட்டினா ஜாலிஜி. ரோடுல ஈ காக்கா இருக்காது. ஹாரன் சத்தம் கெடையாது. நம்ம பாட்டுக்கு ராஜா மாதிரி ஆபிஸ் வந்தோமா, நிம்மதியா வேல பாத்தோமா, நைட் ஒரு குட்டித் தூக்கத்த போட்டு காலையில ப்ரெஷா கிளம்பிப் போனோமான்னு இருக்கலாம்…” பக்கத்தில் கணினியை இறுக்கமாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், சுழல் நாற்காலியைத் தள்ளியபடியே மெலிதான குரலில் என் காதில் கிசுகிசுத்தான். திருப்தியில்லாத கண்களோடு அவனை விழுங்கிவிடும்படிப் பார்த்தேன்.

கண்கள் மிரண்டு பிடித்தன. ராத்திரி உறக்கத்தை விட்டுக்கொடுக்க அவை தயாராகயில்லை. இரவு வேளையில், கணினியில் ஓடும் எண்களை உற்றுப் பார்க்க முயலும்போதெல்லாம், இழுத்துவிடப்பட்ட திரைச்சீலையாய்த் தானாக இமைகள் மூடிக்கொண்டன. புருவத்தினடியில் ஆள்காட்டி விரலையும், கண்களுக்குக் கீழே கட்டை விரலையும் அழுத்தமாய் வைத்து அடம்பிடிக்கும் இமைகளைப் பலவந்தமாய் விரித்துத் திறந்து மீண்டும் முயற்சித்தேன்.

குளிர்ந்த நீரால் மூன்றாவது முறை முகத்தைக் கழுவினேன். எதிரே இருக்கும் அகலமான முகக்கண்ணாடியில் பார்த்தேன். தூக்கம் வறண்ட கண்கள் செக்கச்செவேலெனச் சிவந்திருந்தன. சூடான தேநீர்க் கோப்பையோடு அலுவலகத்தின் வாசல்பக்கம் போய் நின்றேன். நள்ளிரவின் அமைதியில் தன்னை மறந்து ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. கறுப்பு, சாம்பல், வெள்ளைநிற மாடுகள் சாலையின் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தன.

“என்ன சார், பர்ஸ்ட் டைம் நைட்-ட்யூட்டியா…? முதநாளு தான, போவப் போவ பழகிரும். நானும் முததபா நைட்-ட்யூட்டி பாத்தப்போ உன்னாட்டம்தான், காண்டாயுட்டேன். இப்போ சோக்கா பழகிட்டு! நைட்-ட்யூட்டியே ஒரு தனி மஜா, சார்” தன் கையிலிருக்கும் நீளக்குச்சியைக் கதவோரமாய்ச் சாய்த்து வைத்துவிட்டுத் தன் மேல்சட்டைப் பையில் கையைவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து என்னிடம் நீட்டிய ஆபிஸ் நைட்செக்யூரிட்டி “இந்தா இத்த இழு… இதுவும் டீயும் போதும்சார் தூக்கத்த விரட்ட, அப்பாலப் பாரு!” என்று சிகரெட் புகையின் நடுவே கறைபடிந்த பற்கள் தெரியச் சிரித்தான்.

***

வெள்ளைப்புகை மண்டலமாய், வலதுகை தேநீர் ஆவியும் இடதுகை சிகரெட் புகையும் ஒன்றாய் என்னைச் சூழ, வழி தவறிய என்னை “என்னங்க, எந்திங்க. நைட் ஆபிஸ் இருக்குல. தூங்குனது போதும். மணி ஆயிருச்சு பாருங்க…” லேசாய்ப் புன்முறுவலோடு மனைவி எழுப்பினாள்…

அறை முழுதும் சாம்பிராணிப் புகை. துவட்டிய துண்டால் ஈரக்கூந்தலைக் கொண்டை போட்டுக்கட்டியிருந்தாள். குளித்து முடித்த ஈரம் அவளது பின்னங்கழுத்துப் பக்கமும் முதுகுப் பக்கமும் ஆடையோடு ஒட்டியிருந்தது.

நெற்றியில் பொறிப் பொறியாய் மலர்ந்து நிற்கும் வியர்வைத் துளிகளோடு கழுத்தில் தொங்கும் மஞ்சள் சரடைச் சரிசெய்தபடி, “என்ன அப்படி பாக்குறீய… இன்னிக்கு ஆபிஸ் இல்லையாக்கும்” அவளது கொஞ்சல் குரலோடு கால் கொலுசுசப்தமும் கண்ணாடி வளையல்களின் கிண்டல் சிரிப்பும் ஒன்றாய்ச் சேர்ந்து இசைக்க, மெத்தையில் லேசாய் வேண்டுமென்றே புரண்டுபடுத்தேன்.

“இன்னும் அரைமணிநேரத்துல கெளம்பனும், எந்தீங்க…” சுருண்டு கிடக்கும் போர்வையை என் பக்கம் வந்து விலக்கி இழுத்தபோது குளித்து முடித்த சோப்பு வாசனையோடு ஈரம் காயாத அவளின் உடல்வாசம் சேர்ந்து என்னுள் இறங்கி, அடிவயிற்றில் ரீங்காரமிட மருதாணி அப்பியிருக்கும் அவளது கையைப் பற்றி மெத்தையில் கிடத்தியபோது, முதல்முறை நித்திரா என் இமைகளை உதறித்தள்ளிவிட்டுப் போயிருந்தாள்.

***

நெற்றியில் பூத்திருக்கும் கண்ணாடி வியர்வைத்துளிகளை, நான்காய் மடித்த கைக்குட்டையால் மெல்லத் தொட்டு எடுத்தபடி சிவப்புப்பூச்சு பூசிய உதடுகள் நேர்த்தியாய் அசைய “என்ன சார், நைட்ஷிப்ட் முடிஞ்சு டேஷிப்ட் ஆட்களே வந்துட்டோம், நீங்க இன்னும் வீட்டுக்கு கிளம்பலியா…” என்று புன்முறுவலோடு அலுவலக ரிசப்ஷனிஸ்ட் கேட்டபோது, நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

“நைட் ஆபிஸ்லியே நல்ல தூங்கிட்டீங்களோ, கண்ல தூக்கத்த காணுமே” அவள் சொன்னதும், கைபேசியில் என் முகத்தைப் பார்த்தேன், முன்னிரவு உறக்கமில்லாத கண்கள் சிவந்திருக்கவில்லை, கழுவிவைத்த பாத்திரங்களாய்ப் பளபளத்தன.

சிலநிமிடம் அங்கேயே, அவளது வாசனைத் திரவத்தின் நறுமணத்தை அவளறியாமல் ஆழநுகர்ந்தபடிப் பதிலின்றி நின்றேன். அந்த வாடை எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாய் என்னுள் இறங்கிக்கொண்டிருந்தது.

“வீட்ல புதுப் பொண்டாட்டி ஆசையா காத்துட்டு இருக்கப் போறாங்க..” கண்ணாடி வளையல்கள் ஓசையெழுப்பக் கைத்தட்டிச் சிரித்தாள். பின் கொண்டைப் போட்டிருந்த கூந்தலை இருகைகளால் இழுத்துவிட்டு, கைப்பையிலிருந்து எடுத்த தலைமுடிநாடாவால், கூந்தலைக் குதிரைவால் போல் மாற்றினாள். பெட்டிப்பாம்பாய்ச் சுருண்டுக் கிடந்த கூந்தல் படம்பிடித்து விரிந்தது.

“சார், நைட் தூங்கலியேன்னு வீட்ல போய்த் தூங்கிற போறீங்க” செறித்த அழகின் வனப்பதிர, மருதாணியிட்ட உள்ளங்கையால் செவ்விதழ்களை மூடிக்கொண்டு சிரித்தாள்.

லேசான புன்முறுவலோடு “கெளம்பறேன்…” என்று நடக்கத் தொடங்கினேன்.

“என்னஜி இன்னும் வீட்டுக்குப் போகல, மணி ஒன்பது ஆவப்போகுது” ஒரு பக்கமாய்த் தொங்கும் மடிக்கணினி பையோடு என்னைக் கடந்து அலுவலத்தினுள்ளே நுழையும் முகந்தெரியா நபர் கேட்டார். தன் சட்டைப்பையில் சுருட்டி வைத்திருக்கும் அலுவலக அடையாள அட்டையை வெளியே எடுத்து அணிந்துகொண்டார். ‘சேகர்’ என்ற பெயரோடு அது அவரது நெஞ்சுப்பக்கம் வந்து விழுந்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அவர் சொன்னதை ஆமோதித்தது. வண்டி நிறுத்தத்திலிருந்து என் இருசக்கர வாகனத்தை வேகமாய் எடுத்து வாசலில் போய் நின்றேன். அடுத்த வண்டியிலிருந்து ஒரு குரல்…

“பாஸ், சீக்கிரம்போங்க, இல்ல வழிய விடுங்க”

பின் அதே வார்த்தைகள் வெவ்வேறு குரல்களில்… வெவ்வேறு தொனியில்… எல்லா மூலையிலிருந்தும்… உலகமே என்னை விரட்டுவதைப் போன்ற உணர்வு. உருவமற்ற குரல் என் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்தபடிக் காதில் முணுமுணுத்தது “ம்ம்.. போ சீக்கிரம்…”

வீட்டு வாசல்கதவு வழக்கத்துக்கு மாற்றாய்த் திறந்தே இருந்தது. காலணிகளைக்கூடக் கழட்ட மறந்திருந்தேன். வீட்டின் எல்லா அறைகளிலும் மனைவியைத் தேடினேன். காணவில்லை… சப்தமாய்க் கூப்பிட்டேன். பதில் இல்லை. உரக்கக் கத்தினேன்..

***

“என்னங்க, கத்தாதீங்க. பாப்பா தூங்கறால! நைட்பூரா கொட்டகொட்ட முழிச்சிருந்துட்டு இப்பதான் தூங்குதா. ராத்திரி முழுசும் பாப்பா என்ன தூங்கவிட மாட்டேங்கறா. பகல்ல நீங்க இந்த மாதிரி கத்திச்சத்தம் போடுறீங்க…” உச்சுகொட்டியபடியே மறுபக்கம் தலையைத் திருப்பி மனைவி படுத்துக்கொண்டாள்.

தூளி லேசாய் அசைந்தது. அரைத்தூக்கத்தில் இருக்கும் மனைவியின் வலதுகை, மெத்தையை ஒட்டியிருக்கும் தூளிக்கயிற்றை மெதுவாய் ஆட்டியது.

தூளியாடும் ‘கிரீச் கிரீச்’ சப்தம், மின்விசிறியோடும் சப்தத்தோடு ஒன்றிக்கொண்டது. தூளிக்குள் கைகால்கள் அசைவது வெளியே நெளிவுகளாய்த் தெரிந்தன.

“பாப்பா முழிச்சுட்டா போல” அவிழ்ந்த தலைமுடியைச் சுருட்டிக்கொண்டு மனைவி எழுந்து உட்கார்ந்தாள். போர்வையை விலக்கி, உதட்டின் மீது ஆட்காட்டிவிரலை வைத்து உஷ் என்ற சமிக்ஞையோடு ஒரு பூனையைப் போல் ஓசையெழுப்பாமல் மெல்ல எழுந்து போனேன்.

கண்ணுக்கு எட்டாத விட்டத்தின் கொக்கியில் தூளி அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்தது… உள்ளே சிணுங்கல் சப்தம்… தூளி ஈரமாகியிருந்தது. மெதுவாய்த் தூளியை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தேன். முகத்தை மறைத்தபடி அழத்தொடங்கிய குழந்தையின் ரோஜாநிற உள்ளங்கை வெளிச்சம் மட்டும் இருண்டவெளியில் பிரகாசித்தது.

***

என் எதிரே கானல்நீராய்த் தெரிந்த முகத்தை உற்றுப் பார்த்தேன்.

“டேய் சேகர்டா..” இரண்டாம் தளத்தின் மூன்றாவது வீட்டுவாசலில் தோள்பையைச் சரிசெய்தபடி நின்றுகொண்டிருக்கும் பச்சைச் சட்டை போட்டவன் சொன்னான்.

நம்பிக்கையற்றவனாய்ப் பதிலுக்கு அவனது முகத்தை அலசினேன். குழிகுழியாய் இருக்கும் பரிச்சயமற்ற முகம். முன்பகுதியில் அரைவட்ட அளவு முடியில்லை. தடித்த நாசியின் கீழ் அடர்த்தியான மீசை.

முகம் பிடிபடவில்லை இருந்தும் வீட்டு உட்கதவைத் திறந்தேன். என்னைப் பின்தொடர்ந்தபடி வந்தவன் மோவாயைச் சொரிந்தபடியே “டேய் என்னடா ஆளு இப்படி ஒடிஞ்சு போயிட்ட” சோர்ந்திருக்கும் என் முகத்தைத் தன் ஓநாய்க் கண்களால் உற்று நோக்கினான்.

“சரியா தூங்கறது இல்லயோ…” அவனது வார்த்தைகளில் பழகிய மதுவாடை…

“நைட்-ட்யூட்டி முடிச்சு இப்பதான் தூங்கப்போனேன்…”

“என்னத்த வேல பாக்குறியோ, எப்ப தூங்கறியோ, ஆளு காத்துக்குச் சட்டை போட்ட மாதிரி ஆயிட்ட…”

என் படுக்கையறையின் கட்டிலின் ஓரம் சுருண்டு கிடக்கும் தடிமனான கறுப்புநிறப் போர்வையை இடுப்புவரை இழுத்துவிட்டுக்கொண்டேன். முதுகுக்குத் தலையணையை வைத்துச் சாய்ந்தபடி ஜன்னலின் திரைச் சீலையை விலக்கினேன். மின்விளக்கு அணைந்து இருண்டிருந்த அறையில் வெளிச்சம் மடை திறந்த ஆறாய் உள்ளே நுழைந்தது.

சேகர், தன் தோள்பையை மெதுவாய்க் கீழே வைத்து, என் எதிரே காற்றடைத்த பெரிய பலூன் போன்ற இருக்கையில் உட்கார்ந்து என்னைப் பார்த்தான். அவன் பையிலிருந்து கண்ணாடிக்குடுவை ஒன்றை எடுத்து வெளியே வைத்தபோது ‘கிளிங்க்’ என்ற சப்தம்…

கொசுவலை அடித்த ஜன்னல் வழியே பக்கத்து மைதானத்தைப் பார்த்தேன். வாரநாட்களின் பகல் பொழுது என்பதால் ஆள்அரவமற்று கிடந்தது. என் வீட்டை நன்கு அறிந்தவனாய் சேகர் சமையலறைக்குள் சென்று இரண்டு கண்ணாடிக்கோப்பைகளை எடுத்து வந்தான்.

“டேய் இந்தா இத போடு” கருப்புநிறத் திரவம் நிறைந்த கண்ணாடிக் கோப்பையை நீட்டினான். பாதி மூடியிருக்கும் கண் இமைகளைக் கசக்கியபடி அவனைப் பார்த்தேன்.

“என்ன பாக்குற, நல்லா தூங்கி நாள் ஆச்சுல. இத நாலு ரவண்டு அடிச்சுட்டுத் தூங்கு, பூகம்பமே வந்தாலும் எந்திக்க மாட்ட..”

கண்ணாடிக்கோப்பை கை மாறியது. வெளியே பார்த்தேன், வானமும் இருண்டிருந்தது, என் கையிலிருக்கும் மதுக் கோப்பையின் நிறத்தில்.

கண்களை மூடி மூன்றே மடக்கில் கோப்பையைக் காலி செய்தேன். கறுப்புத் திரவம் என் நாடிநரம்புகளில் ஓடி இரத்தத்தில் கலந்து உடல் சிலிர்த்தபோது சொன்னேன் “அடுத்த ரவுண்டு ஊத்து…”

நான்காவது முறை காலிக்கோப்பையைக் கீழே வைத்தபோது கை நடுங்கியது. நான் அமர்ந்திருக்கும் வெள்ளை மெத்தை காற்றில் மிதக்கத் தொடங்கியதும், தலை கிறுகிறுத்தது.

இன்னும் மேலே இன்னும் மேலே…. என நான் மிதந்து மேகங்களில் மோதி கண்களிலும் நாசியிலும் நீராய்ப் பெருக்கெடுத்தது.

“மக்கா இன்னும் மேல ஏறி வரியா?”

“இல்ல ஆச்சி தூங்கப்போறேன்..”

மேல் இமைகள் மூடிக்கொண்டே வந்தன, பக்கவாட்டின் ஜன்னலும் மூடத் தொடங்கியது. காட்சிகள் கரைந்து கொண்டிருக்க சுவற்றைப் பார்த்தேன், மணி ஒன்பது என்று காட்டும் வட்டச் சுவர்க்கடிகாரத்தின் பின்னால் வாலை மறைத்தபடி மரப்பல்லி ஒன்று தலையை மட்டும் நீட்டிப் பார்த்தது.

***

“அப்பா…. அப்பா” என் உடம்பைப் போட்டு உலுக்கினாள். நான் திறந்த வாயோடு பெரிய தலையணையில் முகம் புதைத்து எச்சில் வடியப் படுத்திருந்தேன்.

“அப்பா எழுந்துருப்பா, ஸ்கூலுக்கு லேட் ஆகுது…” படுத்தபடியே என் முதுகில் உப்புமூட்டை ஏறிக்கொண்டு, தன் சின்னஞ்சிறு கைகளால் என் கழுத்தை இறுகக் கட்டிப்பிடித்து இடதும் வலதும் ஆட்டினாள். நான் தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட திரிசங்கு நிலையில் லேசாய்த் திரும்பிப் பார்த்தேன். மகளின் முகம் அலையலையாய்த் தெரிந்தது.

என் வலது காதைத் திருகி விரித்துக் காது மடலுக்குள் உரக்கக் கத்தினாள் “அப்பாபாபா…………”

இப்போது நான் எழுந்துகொள்ளத்தான் வேண்டும். காதுக்குள் அப்பா……. என்ற எதிரொலி நிற்கவில்லை.

விழிகளைக் கசிக்கியபடி “அடிகழுத….” என்று என் முதுகிலிருந்தவளைக் கீழே தள்ளிக் கழுத்துப்பக்கம் கிச்சம் காட்டவும், உடைந்த பற்கள் வெளியே தெரியச் சிரித்தாள். தன் வெள்ளைநிற பிராக்கை சரிசெய்தபடி “அப்பா நீ தான சொன்ன வியாழக்கெழம பைக்ல ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடுவேன்னு. ஆட்டோ ரொம்ப போர்ப்பா..”

“பாப்பாவ பைக்ல கூட்டிப்போனா போச்சு” அள்ளி அணைத்து முத்தமிட்டேன். “அப்பா தாடி குத்துது…” தன் கன்னத்தை வருடியபடியே பாவமாய்ச் சொன்னாள்.

பல்துலக்கி முகத்தைக் கழுவிக்கொண்டு ஆள்உயரக் கண்ணாடியில் பார்த்தேன். என் உருவம் எனக்கே பரிச்சயமற்ற ஒன்றாய்த் தெரிந்தது. முகம் முழுதும் கரும்புற்கள் முளைத்திருப்பதைப் போன்று முள்ளுமுள்ளாய்த் தாடி. அந்தப் புதருக்குள் ஒளிந்திருக்கும் என்னை நான் தேடினேன். கண்ணாடியின் பாதரசம் மழுங்கிக்கொண்டே போனது. நான் தேடும் நானும் பார்வைக்கு அகப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டே போனான், மங்கலான உருவாய்… அரூப ஓவியமாய்… ஒழுங்கற்ற புள்ளிகளாய்… முடிவில் ஏதுமற்ற கருந்துளையாய்…

“அப்பா மணி ஒன்பது ஆயிட்டு…” புருவத்தை உயர்த்தி, உதட்டைக் குழைத்து, கண்களை உருட்டி என்னை முறைத்துப் பார்த்தாள்.

என் இருசக்கரவண்டியின் முன்பக்கம் ஏற்றிக்கொண்டேன். பழகிய பாதையில் பைக் விரைந்தது. இருமருங்கிலும் அதே கடைகள்… சாலையில் வழமையான வாகனங்கள். திறந்திருக்கும் பள்ளிக்கூட வாசல் கம்பிக்கதவு பக்கம் வண்டியை நிறுத்தினேன்.

“எதுக்குயா நின்னுட்டேயிருக்க, வண்டிய எடுக்கறியா இல்லயா…”

பின்னாலிருந்து குரல் வந்ததும் திரும்பிப் பார்த்தேன். யாரென்று தெரியவில்லை. பின் அதே வார்த்தைகள் வெவ்வேறு குரல்களில்… வெவ்வேறு தொனியில்… எல்லா மூலையிலிருந்தும்… உலகமே என்னை விரட்டுவதைப் போன்ற உணர்வு. மாறிமாறி ஹாரன் சப்தம். தலை கிறுகிறுத்தது. முகம் தெரியாக் குரல்கள் பன்மடங்காய்க் காதுக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.

பழைய மோட்டார் ஓடும் சப்தத்தோடு கொசுமருந்து வண்டி என்னைக் கடந்துபோக, எங்கும் புகைமூட்டம். என் வண்டியின் முன்பக்கம் அவளில்லை. கையில் சாப்பாட்டுக் கூடையுடன் இரட்டைச் சடை சிறுமி ஒருத்தி பள்ளிக்கூடத்திற்குள் ஓடுவது வெள்ளைப் புகையினூடாய் தெரிந்தது, அவளாகத்தான் இருக்க வேண்டும்…

***

சிகரெட்புகை என் மீது படாதவாறு, முகத்தை எதிர்புறம் திருப்பிப் புகைத்தபடியே, தொப்பியைச் சரிசெய்துகொண்டு கையிலிருக்கும் நீளக்குச்சியை மரத்தில் சாய்த்து வைத்தபடி என் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி என்னிடம் கேட்டான்

“என்னா சார், இப்பலாம் ஆளப் பாக்கவே முடியல…இந்த சேகர மறந்துட்டியே சார்”

பதில் ஏதும் சொல்லவில்லை. மேலே அண்ணாந்து பார்த்தேன். பகல் வெளிச்சம் கண்ணைக் கூசியது.

“இப்படி ஓரமா வா, ஆளு நல்லா சோக்கா இருப்பியே சார்… இப்போ பாதியா ஒடுங்கிட்ட…”

“ராத்திரி வேலைக்குப் போயிட்டுப் பகல்ல வந்து அப்பாடான்னு படுத்தா, எங்க நல்லா தூங்க முடியுது. எதாவது வேல வந்துருது இல்ல யாராவது எழுப்புறாங்க. இடையில பசி வேற… எங்க நிம்மதியா தூங்க? தலை கின்னுன்னே இருக்கு..”

“சரி இந்தா, இத்தபுடி முதல்ல….” சுற்றும்முற்றும் பார்த்துத் தன் கீழாடைப் பையிலிருந்து ஒரு சிகரெட்பெட்டியை எடுத்து வேகமாய் என் உள்ளங்கைக்குள் திணித்தான்.

“உள்ள நீ கேட்டது இருக்கு. நல்லா சுருட்டி வச்சுருக்கேன்.” நானும் அதே வேகத்தில் என் கையில் புதைத்து வைத்திருந்த ரூபாய்த்தாளை அவன் கைக்குள் திணித்தேன்.

“நானும் உன்னாட்டம்தான். கொஞ்ச நாளு நைட்லோடு அடிக்குற சோலிக்கு போயிருந்தேன். காலையில தல கல்லுகணக்கா இருக்கும். அப்பத்துலேந்து இதுதான். ஊட்டுக்குப் போய் ஒரே இழுப்பா வலிச்சு இழு. அப்புறம் தூக்கமாவது பசியாவது. தூங்கி என்னா சார் பண்ணப் போற! செத்ததுக்கு அப்புறம் எல்லாரும் நிம்மதியா தூங்கத்தான போறோம்…” கரை படிந்த பற்கள் தெரியச் சிரித்தான். அந்த ஓயாத சிரிப்பும் நிற்காத சிகரெட் புகையும் என்னைச் சுற்றிப்படர, வெட்டப்பட்ட ஆட்டைப்போல் உடம்பில் நடுக்கம். பதறிய கண்களோடு ஓட்டமும் நடையுமாய் வீட்டுக்குள் நுழைந்து உள்தாழிட்டுக்கொண்டேன். சட்டைப்பையிலிருக்கும் அந்த சிகரெட்பெட்டியிலிருந்து ஒன்றை எடுத்துக் கண்களை இறுகமூடி இழுத்தேன். உமிழ்நீர் கசந்தது.

நான்காவது இழுப்பில் என் உடல் மட்டும் மெத்தையில் கிடக்க நான் அந்தரத்தில் மிதந்தபடியே புகைத்துக் கொண்டிருந்தேன். அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என்னுள் ஓங்கி அடங்கின. “செத்ததுக்கு அப்புறம் நிம்மதியா தூங்கத்தானே போறோம்”.

மரக்கட்டில் கருங்கல் கல்லறையாய் உருமாறிப் பக்கவாட்டிலும் செங்குத்திலும் சிறுத்துக்கொண்டே வந்து என் உடலை இறுக்கியது. எலும்புகள் உடைபடும் சப்தம். வலியின் உச்சத்தில் உரக்கக் கத்த எத்தனித்தபோது, கட்டிலின் விளிம்பிலிருந்து கருகிய இலையின் வாடையோடு கரிய உறக்கம் என்மேல் ஊர்ந்து ஊர்ந்து முகத்தை அடைந்ததும், சப்தம் அடங்கிப் போனது. பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

***

“கண்ண நல்லா திறங்கோ” சோர்ந்திருந்த என் கண்களில் டார்ச் அடித்தபடியே டாக்டர் “என்ன சார், ரொம்ப நாளா சரியா தூங்கறதில்ல போலியே…”

வெளியே வானம் விசும்பும் சப்தம். வட்டச் சுவர்க்கடிகாரத்தில் ஒன்பதாம் எண்ணில் ஒன்றோடொன்று கைகோர்த்திருந்த பெரிய முள்ளை உதறித் தள்ளிவிட்டுச் சிறியமுள் விலகி ஓடியது. மௌனமாய் டாக்டரைப் பார்த்தபடி “ஆமா டாக்டர் சரியா தூங்கறது இல்ல…”

“அதான் உங்க கண்ண பார்த்தாலே தெரியறதே. நம்ம மட்டும் கண்ண மூடிப் படுத்திருந்தா பத்தாது ஓய், நம்ம மூளையும் செத்தநேரம் தூங்கனும்… இந்த மூளை இருக்கே யார் பேச்சையும் கேட்காம எங்கேயாவது சஞ்சாரிச்சிண்டே இருக்கும், ஒரு பட்டாம்பூச்சி மாதிரி வச்சுக்கோங்கோ…”

கௌளி சத்தம் கேட்டதும் அண்ணாந்து பார்த்துவிட்டு “சொன்னேனே பார்த்தேளா, கௌளியும் ஆமாங்கறது… நீங்க உங்க மூளையச் சரியா தூங்கப் பண்ணலே, எத்தனை நாளா இப்படி….?”

பின்னால் திரும்பிப் பார்த்தேன். சுவர்க்கடிகாரத்தின் பின்னாலிருந்து ஊர்ந்தபடியே வெளிப்பட்டது மரப்பல்லி ஒன்று, சிறிய தலைபாகமும் நீண்ட வாலுமாய்… நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வால் நீண்டு கொண்டேபோய் அதன் உடலும் தடித்துப் பெரிதானது. அடுத்த சில நொடிகளில் உருமாறி மஞ்சளும் பச்சை நிறமும் கலந்த ஓணானாகியது. அதைப் பார்வையால் சப்தமின்றிப் பின்தொடர்ந்தேன். தான் கவனிக்கப்பட்டது தெரிந்ததும் சுவற்றின் பக்கவாட்டில் வேகமாக ஓடியது. அந்த நீளமான சுவற்றில் பாதி தூரம் கடந்திருக்கும், அதன் உருவம் பெருத்துப் பெருத்துத் தடித்த பெரிய சாம்பல் நிற உடும்பாய் மாறியது… சுவற்றின் மறுமுனை வரைக்கும் தன் வெட்டப்பட்ட நாக்கை நீட்டித் தலையைத் தூக்கி என்னைப் பார்த்ததும் அருவறுப்பில் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

“சொல்லுங்கோ… என்ன பதிலையே காணுமே, எத்தன நாளா இந்தப் பிரெச்சன…”

“நைட்-ட்யூட்டி போக ஆரம்பிச்சதுலேந்தே இப்படித்தான் டாக்டர். சரியா தூக்கம் இல்ல. வேலைக்குப்போற வரைக்கும் எப்பவும் நல்லா தூங்கிட்டு இருந்தேன். ஆனா இப்போ முடியறதில்ல…”

“இப்போவுள்ள ஜெனரேஷன்க்காரா எல்லாரும் இதேதான் சொல்றா… நாங்களும்தான் வேலை பார்த்தோம், இப்பவும் பார்த்துண்டுதான் இருக்கோம், எங்களுக்கெல்லாம் எந்தப் பிரெச்சனயும் வர்றது இல்ல. ம்ம்..என்ன சொல்றது… யூ பீபில் ஆர் கோயிங் இன் ராங்க டாரக்க்ஷன்.

பேசும்போது அவரின் கறுப்புநிற நாக்கு வெளியே எட்டிப்பார்க்கிறது. முனையில் வெட்டப்பட்ட நாக்கு… ஒரு பல்லியின் நாக்கு…இல்லை ஓணானின் நாக்கு.. இல்லவே இல்லை பெரிய உடும்பின் நாக்கு… முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன்.

“பேசாம மூஞ்சியத் தூக்கி வச்சுண்டேள்னா தூக்கத்த இக்நோர் பண்ணது சரின்னு ஆயிருமா. எங்க மெடிக்கல் சயின்ஸ் பாஷைல சொல்லணும்னா இனி ஸ்ட்ரஸ், டைலமா, மெமரி லாஸ், இம்பல்சிவ் டிப்ரஷன், ஹாலுசினேஷன், பாரனோயான்னு வரிசயா வரும்… கிட்டத்தட்ட இன்சோமேனியா ஸ்டேட்ட நோக்கிப் போயிண்டு இருக்கேளோன்னு தோன்றது…

ஒவ்வொரு வார்த்தையாய் அவர் அழுத்தமாய் உச்சரிக்கும்போதும் அவரின் வெட்டப்பட்ட நாக்கு என் மூக்கின் நுனிவரை பாய்கிறது பின் மீண்டும் பதுங்கிக்கொள்கிறது. அது பாய பதுங்க… பாய பதுங்க… பாய…

பயத்தில் நான் நாற்காலியில் அமர்ந்தபடி என் முகத்தைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டேன்.

“சிம்பிள் சொலியூஷன் ஸ்லீப்தான். தூக்கத்துக்குச் சில டாப்லெட்ஸ் எழுதித்தரேன். நான் கொடுக்குற அளவுக்கு மேல போடக்கூடாது. வயசு ஆகஆக மனுஷா மாத்தரய பாத்துபாத்துதான் சாப்புடணும்.”

அவர் நீட்டிய வெள்ளைச் சீட்டை சட்டைப்பையில் மடித்து வைத்துக்கொண்டேன். என்னைப்போல் அவரும் தன் நாக்கை உள்ளே மடித்து வைத்திருக்க வேண்டும். வெளியே எட்டிப் பார்க்கவில்லை…

“சரி டாக்டர் மாத்திர சாப்புடறேன்…” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்து அழுத்தமாய்ச் சொன்னார்

“என்ன கேட்டேள்ன்னா தூக்கங்கறது ஒரு வரம். பகவானா பாத்து தரது, உங்க கேஸ்ல மெடிகல் சயின்ஸ்தான் அந்த வரத்தைத் தரனும்… நம்பி இந்த மாத்திரையைச் சாப்பிடுங்கோ, யூ வில் பி ஆல்ரைட். மெயின் ரோடுல கெட்வெல் மெடிக்கல்ஸ்ல கெடைக்கும், அங்க ‘டாக்டர் சேகர்’ அனுப்பினார்ன்னு சொல்லிக் கேளுங்கோ.”

சிக்கனமான சிரிப்போடு விடைகொடுத்தார் டாக்டர் சேகர். இழந்த தூக்கத்தை மீட்டெடுக்க, கையிலிருக்கும் சாக்லேட் நிற மாத்திரைகள் இரண்டை விழுங்கினேன். கண்கள் தூக்கத்தை மெல்லக் கட்டி அணைத்தது…

என் உடலில் இலவம்பஞ்சை வைத்து அடைக்கத் தொடங்கினேன். ‘புஸ்புஸ்’ என வீங்கிக்கொண்டே போனேன். மூச்சுவிடச் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் என் உடம்புக்குள் இலவம்பஞ்சு அடைப்பதை நிறுத்தவில்லை.

“எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம்வைடா” அம்மா சிரித்தாள்.

“போம்மா எனக்கே பத்தல…”

உடல் இலகுவாகியது. தலையும் கால்களும் நேர்க்கோட்டில் வந்துநின்று ஓர் இறகைப் போல் நான் மேலே பறக்கத் தொடங்கினேன். காற்றின் விசையில் மிதந்தேன். மின்விசிறி முன்பைவிட வேகமாய்ச் சுற்றியது. நானும் அதே வேகத்தில் முன்னும்பின்னும் சுழல, என் உடம்பிலிருந்து வெளிப்பட்ட இலவம்பஞ்சுகள் கொத்துக்கொத்தாய்ப் பறக்கத் தொடங்கின. என் உடல் மீண்டும் சுருங்கத் தொடங்கியது. நான் ஒடுங்கிக்கொண்டே போய், பொத்தென்று மெத்தையில் விழுந்தபோது என்மேல் இலவம்பஞ்சு மழை பெய்துகொண்டிருந்தது… என் கண்கள் ஆழ்ந்த துயிலில் மூடியிருந்தன. பின் எதையோ தேடத் தொடங்கின…

***

சிரித்தபடியே, “என்னப்பா தேடுற. எல்லாமே உனக்கு பிடிச்ச டார்க் சாக்லேட் தான். மெடிக்கல் சீட் கடச்சுருக்குல, பிரண்ட்ஸுக்கு கொடுக்க அம்மா வாங்கிக் கொடுத்தா. நீயும் கொஞ்சம் எடுத்துக்கோ.”

“அத்தனையும் எனக்கா…?”

“அம்மா பாக்கப்போறா, சீக்கிரம், உனக்கு வேணுங்கறத எடு, பாத்தா திட்டுவா” மைப்பூசிய கண்களை அகலத் திறந்து சிமிட்டியபடி தன் சிவப்புநிற சுடிதாரை அரைவட்ட விட்டத்தில் சுற்றினாள்.

“என்னப்பா பாக்குற, எடுத்துக்கோ பிரண்ட்ஸுக்குலாம் அப்புறம் தான்.”

பின்னங்கழுத்து லேசாய் வலித்தது. வலதுகையை பின்னுக்கு மடக்கி தலையை பற்றிக்கொண்டு கழுத்தை இடதும்வலதும் லேசாய் அசைத்தேன்.

“நான்தான் சொல்றேன்ல… இனி அந்த பெரிய தலவாணி வேணாம்ன்னு. அதனாலதான் உனக்கு கழுத்து வலிக்குது. நானே இலவம்பஞ்சு வாங்கி சின்ன தலவாணியா தச்சுத்தரேன். முதல்ல இத சாப்புடு”

ஐம்பது வயதிலும் என்னால் ஆசையை அடக்க முடியவில்லை. இனிப்புகளை கையளவு அள்ளியெடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். ஆனால் அவை தொண்டையைக் கடக்கவும் மாத்திரையாய் கசந்தன!

என் கையில் இனிப்புப் பெட்டிக்கு பதிலாக தூக்கமாத்திரைக் குடுவை! மகள் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டுவிட்டாள். கருமணிகள் கிறுகிறுத்தன. தலை சுற்றியது. அப்படியே விழுந்தேன், மெத்தென்ற மேகத்தில்…

“ஏல விளயாட வரியா…” இரண்டு ப்ரேக்கையும் வேகமாய் பிடித்தழுத்தி, தன் உயரத்துக்கு எட்டாத சைக்கிளை விட்டு அரைகுறையாய் கீழிறங்கி என் வீட்டு வாசலில் கையில் கிரிகெட் மட்டையோடு நின்றுகொண்டிருக்கும் சேகர், மேகத்தில் படுத்திருக்கும் என்னை அண்ணாந்து பார்த்து சப்தமாய் விளையாடக் கூப்பிட்டான்.

“நான் வரல, நீ போயிட்டுவா”

பலவருட தூக்கமின்மையின் வெறுமை உடலைவிட்டு காற்றாய் வெளியேற, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆழ்ந்த நெடிய உறக்கம்! சலனமற்ற வானில் காற்றின் மௌனதாலாட்டில் தூங்கிப்போனேன்…

“ஏலமக்கா, ஆச்சி கூட வரியா, ராசாக்கு வானம் முழுசும் சுத்திக் காட்டுதேன்”

“இல்ல ஆச்சி நான் தூங்குதேன்” ஆழ்ந்த சயனத்தில் தொலைந்திருந்த என்னில், வாய்மட்டும் முணுமுணுத்து ஓய்ந்தது.

***

“டேய், எந்தி. எம்புட்டு நேரமா எழுப்புதேன்.”

அம்மாவுக்கு தினமும் இதே வேலைதான். தூக்கத்தின் உச்சத்திலிருந்து என்னை பாதியிலே எழுப்புவது. எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது…

இன்று என்னை எவ்வளவுதான் மாறிமாறி விளித்தாலும் உடமைப்பைப் போட்டுக் குலுக்கினாலும் இறுகிய மனதோடு செவிடனைப் போல் படுத்தேயிருப்பது என்ற முடிவில் இருக்கிறேன். சிறிதுநேரத்தில் என்னை எழுப்புவதை நிறுத்திவிட்டிருந்தாள், பாவம் சோர்ந்துவிட்டாள் என்று நான் நினைத்த நொடியில் மீண்டும் அதே கூப்பிடும் குரல்… உடலைபோட்டு உலுக்கும் உணர்வு… எங்கோ வழிதெரியாத காட்டில் யாரோ என்னை பள்ளத்தில் தள்ளும் நடுக்கம்!

ஒய்யாரமாய் வெளிர் வானத்தை பார்த்தபடியே படுத்திருக்கும் என்னைப் பார்த்து அம்மா சொன்னாள் “என் ராசா, இப்போ தான் கடிகாரம் மாதிரி வட்டம் அடிக்காம நேரா தூங்குத…”

“இனி நீ நிம்மதியா தூங்குசார்” சேகரின் கரகரத்த பேச்சுசப்தம்…

மேகங்களிலிருந்து வேகமாய் இறங்கிவந்த ஆச்சி என்னைத்தட்டிக் கதைச் சொல்லத் தொடங்கினாள். குழிக்குள் நான் நேராக படுத்திருக்கும் சவப்பெட்டியை யாரோ வேகமாய் மூடினார்கள்…

***

“ஏல எந்திச்சுதொல, உனக்கு இன்னும் கைகொழந்தன்னு நெனைப்போ… எரும வயசு ஆவுது. பாய்ல ஒண்ணுக்கு அடிச்சு வச்சுருக்க… இருக்கற சோலில உன் ஈரவிரிப்ப வேற தினமும் அலசி போடணும்…”

அவள் கொல்லைக்கு எடுத்துபோகும் ஈரப்பாயில் என் தூக்கத்தின் மிச்சம் இருக்கிறது…

***

2 thoughts on “அநாமதேய சயனம்”

  1. vera level….oru thookam sinavaysula irunthu thatha augravarikum yepdi poguthu nu life valiya sonna vidham arumai….konja kooda sorvu illama padika vacha antha kathai amaipu alll super … innum ungalta irunthu nerya padipugali varaverikrom…extremely wonderful…👏👏👏

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்