ஒளிந்திருக்கும் வானம்

3 நிமிட வாசிப்பு

வானெங்கும் வெள்ளி நிறம். இரவுகள் கருமையைத் தொலைத்து நெடுநாட்களாகிவிட்டன. புகையும் தூசும் படிந்த பெருவெளியில் கவிஞனுக்கெல்லாம் அவசியம் இருப்பதில்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் இரவையும் பகலையும் வரித்துக்கொள்ளப் பழகிக்கொண்டது நகரம். அதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களின் நாட்களில் வந்த இரவு இன்னும் நகரவில்லை.

எதிரே இருந்தவள் எனக்கு முன்பே அறிமுகமாகி இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கணிசமாகவே இருந்தன. முதலில் பேச்சைத் தொடங்குவதற்கான சூழலை உருவாக்க மேசையின் மீது இருந்த அழைப்பு மணியைச் சொடுக்கினேன். நான்காவது நொடியில் மேசைக்கு வலப்புறம் நின்ற இயந்திரச் சிப்பந்தி மிகவும் பண்பட்ட மொழியில் நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம் என மொழிந்தது. கனவுகளில் சிக்குண்டவனாகத் தோற்றமளித்த என்னிடமிருந்து பதிலேதும் பெறாததால் மீண்டும் அதே கேள்வி ஒலித்தது.

“பாழாப்போன இந்த உலகத்தை மறந்து நான் பறக்கணும்”

“மன்னிக்கவும். உங்களுக்கு வேண்டியதை எங்களால் பரிமாற இயலாமல் போனதற்கு”

அவள் சிரித்தாள்.

மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருந்த வரவேற்பறை பசும்புல்வெளியின் மாதிரியைப் போலில்லாது அவளது சிரிப்பில் தரிசித்த இயற்கை வியக்கக் கூடியதாக இருந்தது. புராதனக் கதைகளில் வரும் காற்றுக்கு அசையும் மரங்களைப் போல.

“பறக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?”

உயிருள்ள பெண் குரல். நிரலில் வடிவமைக்கப்படாத கேள்விகளைத் தானாகவே உருவாக்கத் தெரிகிற குரல்.

“இப்போதைக்கு அதுதான் விருப்பமாக இருக்கிறது”

“பறப்பதற்குக் காற்று தேவைன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசி வரைக்கும் உங்க விருப்பம் நிறைவேறப் போறதில்லைன்னு நினைக்கிறேன்” இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் தன் முன்னிருந்த குவளையை நோக்கி உதட்டோரம் இயலாமையைப் பற்றிக்கொண்டு சிரித்தாள். நான் கவனித்தேனா என முகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது, பதிலுக்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கான அவசியமே இல்லாததுபோலத் தன் கையை என் முன் நீட்டி, “ஆதிரா” என அறிமுகம் செய்துகொண்டாள்.

“கணியன்”

அவள் கையினைப் பற்றினேன்.

“இதற்கு முன்பு நாம் சந்தித்திருக்கிறோமா”

“இருக்கலாம். இல்லாமலும்கூட”

2

ஆதிராவை மறு முறை சந்தித்தபோது நான் பணியிலிருந்தேன்.

“வேகமாக… வேகமாக”

கட்டளைக் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்க, தானியங்கள் நிரம்பிய பெட்டிகளைக் கை மாற்றிக் கொண்டிருந்தோம். பொதுவிநியோகத்துக்குச் செல்வதற்காகப் பண்டகச் சாலையிலிருந்து வாகனத்துக்குப் பெட்டிகளைக் கொண்டு சேர்த்தோம். உணவு ஒழுங்கு மற்றும் காவல் பிரிவின் ஊழியர்களான எங்களின் வழக்கமான பணி இது.

கை அசைத்ததும் தன் முகத்தின் முன் விழுகிற முடியினைக் காதோரம் செருகிக்கொண்டு (தொய் வழக்குக்கு மன்னிக்கவும்) தெரிந்தவன் என்பதை உறுதி செய்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டாள். பதில் புன்னகை பெறாததால் நினைவுகளின் மங்கிய நிலையைச் சபித்துக்கொண்டேன். கணக்கியல் பிரிவைச் சார்ந்தவளாக இருப்பாள் என்கிற யூகத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்ததற்கு அவளது வெளிர்ச்சாம்பல் நிற உடை காரணமாக இருக்கலாம். நெருங்கி வருகிறாள் என்பதை உணர்ந்தபோது என்றைக்குமில்லாத ஆர்வம் எழுந்தது. என்னை நோக்கி அல்ல. காற்சராயின் மத்தியில் படர்ந்திருந்த ஈரம் அசெளகரித்தை ஏற்படுத்தியது.

விதவிதமாக இணைவு நிலைகளை விளக்கும் மெய்நிகர் உருவகங்கள் மீது வெறுப்பு வந்தது.

கரியத்துகள்கள் சூழ்ந்திருக்கிற கண்ணாடிக் கூரை மீது சடசடவென மோதின.

3

தீர்ந்துபோன மின்கலன்களை உடலின் பாகத்திலிருந்து நீக்கிக் கொண்டிருந்தேன். உணவின் போதாமையைச் சரிக்கட்ட உயிருள்ள இயந்திரங்களாக மாறிக் கொண்டிருந்தோம். முன்கையில் எண்மத் திரை ஒளிர்ந்தது. புறப்பட நான்கு மணி நேரம் உள்ளது என்கிற அறிவிப்புச் செய்தியோடு. மக்கள் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பலின் மேல்தளத்தில் என் அறை. இறுதித் தளத்தில்தான் முதன்முதலில் ஆதிராவைச் சந்தித்தது. மதுவின் நெடியினை நாசியில் உணர்ந்தபோது மேலே செல்லும் எண்ணம் எழுந்தது. இன்றைக்கு ஒருவேளை சந்தித்தால் தெரியாதது போல அவள் சென்றுவிட்டால்? உடலில் என்ன நடக்கிறது எனப் புரியாமல் எண்மத் திரையில் உடலின் நிலையைச் சோதித்தபோது, “உறவு கொள்ளும் நாட்டம்” என்று மின்னியது. இல்லை என நம்புவதற்கான இடத்தில் நான் இருந்திருக்க வேண்டும். அல்லது அப்படித்தானா?

4

கனவுகளை வரித்துக்கொள்ளும் இயந்திரத்திற்கு உள்ளீடாக என் நினைவுகளில் தேங்கிய அவளது உருவத்தின் தரவுகளை அளித்திருந்தேன். வெகு சுவாரசியமான பயணத்திற்கு ஆயத்தமாக நீலநிறக் கண் வில்லைகளைப் பொருத்திக்கொண்டேன்.

நோர்வீஜியன் வுட் நாவலின் முதல் அத்தியாயத்தை ஒளிரச் செய்தேன். டோருவாக நானும் நவோகாவாக அவளும். நீளும் பாதையின் நடைப் பயணம் நூற்றாண்டுகளுக்கு முன்னதான உலகத்தின் மணத்தில் கரைந்தது. முடிவுகளற்ற வாக்கியங்களை அவள் உருவாக்கியபடியே இருந்தாள். காணாமல் போவதைக் குறித்து நான் மறந்திருந்தேன்.

5

சிதைந்த இடிபாடுகளிடையே உலங்கூர்தி தரை இறங்கியபோது எழுவர் கொண்ட குழு சோதனைக்காக அக்கட்டிடத்தினுள் நுழைந்தோம். சட்டத்திற்குப் புறம்பாகத் தானியங்கள் சேகரிக்கப்பட்டு வைத்திருப்பதாகக் கட்டுப்பாட்டகத்தின் அலைவரிசை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்த பணி எங்கள் குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. செந்நிறப் புழுதியினை விலக்கியவாறே நகரத்தின் உள்ளே பயணித்தோம்.

அரிக்கப்பட்ட கட்டிடங்கள். மரச்சட்டகங்கள். பழைய வாகனங்கள். மின் உதிரிப் பொருட்கள்.

வழிப்பாட்டுத் தலம். தூண்களின் மீது அமைந்த கற்தளம். அரிக்கப்படாதிருந்த தூண்களில் கோரமான பற்கள் விரிந்த சிதைந்த உருவம்.

தொடர்ந்து சென்ற கூடம் முடிவுற்ற இடத்தில் கருநிறம் சூழ்ந்திருந்தது. இருள். முழுமையான இருள். சாம்பலோ புகையோ இல்லாத இருள். ஒளி எங்களின் தலைப்பாகையிலிருந்து இருளைக் கிழித்துச் சென்றது.

சுவரின் சிறிய இடுக்கில் கொஞ்சமேனும் தானிய மணிகள்.

கருப்பினைக் கிழித்துக்கொண்டு ஒரு பறவை சிறகுகளை விரித்தது. அநேகமாக உலகின் இறுதி உயிரினம் இதுவாகத்தான் இருக்கும்.

6

ஆதிரா இறந்திருந்தாள். 168 மணி நேரங்களிற்கு ஒரு முறை வெளியாகும் இறந்தவர்கள் பட்டியலில் நான் அவளைப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனேன். அவள் கிராமத்தவளாக இருப்பாள் என்று அதே இருக்கையில் அமர்ந்திருந்த முகம் சிறுத்த அறிமுகமற்ற ஒருவன் சொன்னான். பழைய அகராதியின் கிழிந்த பக்கங்களிலிருந்து அவன் இந்த வார்த்தையைப் பெற்றிருக்கக் கூடும். முழுமையான மனிதர்கள் அருகி வருகின்றனர்.

இரவினைக் கிழித்த பறவையைக் கைகளில் ஏந்தியவாறு ஆதிரா தோன்றியபோது உறக்கத்திற்கான பெட்டியிலிருந்து விடுவித்து எழுந்தேன்.

தானிய மணிகளாக உடல் சிதறியது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்