நந்தாகுமாரன் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

ஃ எனும் கிரகத்தில் சுழல்பவன்

ஈர்ப்பின் ரீங்கார முனை
தனக்குள் கவர்ச்சியுற்ற நட்சத்திரத்தைச்
சுற்றி உலாவும் கிரகங்களின்
சேர்ந்திசைக் குறிப்பான பொழுதுகளின்
மௌன உரையாடல்களைத் தொகுத்து வழங்கும்
அன்பின் அடி துள்ளும் தூசு
காணாதிருக்கும் சொல்
தனிப்பாடலானது
அதன் காலுக்கும் மேலுக்கும்
மேலும் ஒரு சொல் தூரம்தான்
எனினும் அது விரிந்தது
ஜகம் புகும் அகம் வடித்த அதன்
கோள்களின் நூலகத்தில்
எனினும்
ஒளித்து வைக்கபட்ட புத்தகம்
இருந்தது என்னவோ
எங்கே எனத் தேடிக் களைந்த
கவலையின் துவலைக் கீற்றில்
வாரி அணைத்த
இக்கருந்துளையின் நினைவில் அல்ல
மாறாக அதன் சேமிப்பு
புரிந்தது புரியாதது எனும்
எதிர்வினை குறித்த கவலை அற்ற
அற்புதம் நிகழ்ந்தால் போதும்
யாவும் சரியெனும்
மந்திர உச்சாடனத்தின்
தொனிக்குள் சுழன்றபடித்
தன் திட்டமிட்ட பாதையைத் தினந்தோறும் மாற்றி
சோதிடத் தடத்தின் புதிர் நழுவும்
பிரபஞ்ச ரயிலின் கொலுசொலிக்கு மயங்கி
விஷ்வகர்மன் தன்
தொலைநோக்கிச் சாளரம் வழி கண்ட
மாற்றுத் திறன் கடவுள் சிருஷ்டித்த சிமிழின்
உள்ளிருந்து
ஒரு இனிப்பு அப்பம் தன் பங்கு கேட்பதைப் பார்த்தபடி
என் விருப்பக் குறிகள்
பதுங்கும் சதுக்கம் தனில்


மர்மகானம்

இருளின் பாதையில் குறுக்கிடுகிறது
ஒளியின் முட்டுச்சந்து
எனக்கும் உனக்கும் நிகழப் போகும்
தூரத்தைக் கணிக்க
இப்போது வேறு ஒரு அலகு தேவையாகிறது
உன் மீது நம்பிக்கை இழப்பதற்கு
ஆயிரம் காரணங்களை அள்ளி வழங்குகிறாய்
நம்பிக்கை கொள்ள ஒரு காரணம் தேர்ந்தெடுக்க
என் கற்பனைத் திறனைத்தான்
இப்போதும் பயன்படுத்த வேண்டி வருகிறது
காதலின் பாதைக்கு
கனவின் போதை
தேவையின் உணர்கொம்பில் வந்து
இடக்கு செய்கிறது
ஆனால் இந்த முறை
மிகுந்த தன்னுணர்வுடன்
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வண்ணத்திலும்
ஒரு பிறவி எடுத்துவிட நான் முடிவு செய்கிறேன்
இணை அண்டத்தின் இன்மைப் பெருவெளியில்
துணைக் கண்டமாக என் உடன் வருவது எனத்
தேர்வு செய்வதாக நீ தெரிவிக்கின்றாய்
ஆயிரம் ஜோடி நட்சத்திரங்களுக்கு இலவசத் திருமணம்
செய்து வைத்தால்தான் இது சாத்தியம் என்பதால்
முடிவிலி மாணிக்கக் கற்களைத் தேடி
நாம் பயணம் செல்லத் தயாராகிறோம்
அப்பொழுதின் கணத்தின் கனம் தாளாது
மேகத்தின் உள்ளங்கையில் இருந்து
மேலும் ஒரு பெருவெடிப்பு நிகழத் தொடங்குகிறது
தன் தோகை விரித்த அதிர்வின் லாவண்யம் கொண்டு
இந்தக் கவிதையின் மதுக் கிண்ணத்தில்
இன்னும் இரண்டு சொற்களை
ஆலங்கட்டிகள் என
இட்டுச்செல்கிறது
வாஞ்சையின் வலக்கரம்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்