அறிவிலுமேறி அறிதல் – 4: நெகிழும் காலம்

2 நிமிட வாசிப்பு

“ஒன்று தெளிவாக புலப்படுகிறது. படைப்பாளியின் முயற்சி இல்லாமலேயே படைப்பில் காலம் விலகி நிற்கிறது. காரணம் வேகம். ஒன்று மற்றொன்றாவது தெரியாதடிக்கும் வேகம். படைத்தல் இயக்கத்துக்கு காலச்செலவு (duration) இல்லை போல” -அபி

*

பரயுடெ பாலு நுகர்ண்ண பாக்யவான்மார்க்கு
ஒரு பதினாயிரமாண்டு ஒரு அல்ப நேரம்
அரிவ் அபர ப்ரகிருதிக்கு அதீனமாயால்
அர நொடி ஆயிரமாண்டு போலெ தோணும்

To the blessed ones who have sucked the milk of para
Ten thousand years is but a moment;
But if knowledge succumbs to apara prakrti
Half a second seems like a thousand years

*

அதிகவிசால மரு ப்ரதேசம் ஒண்ணாய்
நதி பெருகுண்ணது போலெ வண்ணு நாதம்
ஸ்ருதிகளில் வீணு துரக்கும் அக்ஷி எண்ணும்
யதமியலும் யதிவரியன் ஆயிடேனம்

A very vast wasteland suddenly
Flooded by a river in spate- thus comes the sound that fills the ears and opens the eyes of the one who is never distracted;
Such should be the experience the seer par excellence

— ஆத்ம உபதேச சதகம்

*

கவிதை என்பது சக்தி. சிருஷ்டி முழுவதிலும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை. அது வார்த்தையினுள் – பாஷையினுள் – அடைக்கப்படுமுன்பே படைப்பினுள் கவிதையாகவே கலந்து நிற்கிறது.

கவிஞனுடைய வேலை இந்தச் சக்திக்குத் தன்னை ஊற்றுக் கண்ணாகத் திறந்து கொள்வதுதான் என்று ‘பாரதி கலை’ கட்டுரையில் பிரமிள் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு கவி, ஆன்மீக அநுபவ கணத்தில், காலம் விலகி நிற்கிறது அல்லது பரிமாண வேறுபாடு கொள்கிறது எனலாம், அதே சமயத்தில் ‘அதிக விசால மறு பிரதேச மொண்ணாய் நதி பெருகுண்ணது போல’ அநுபவ வேகம் ஆட்கொள்ளும் கணங்களில் நம் அகம் அதிபிரக்ஞையில் தன்னைத் தான் நோக்கி நிற்கிறது. அக்கணங்களில் ஐம்புலன்களில் அடங்கா பெருக்கு தன்னை மீறிச் செல்கிறது.

இக்கணங்களில் தன்னை மீறிய அனுபவம் புதிய சொல்லிணைவுகளால் கவிதையென ஆகிறது.

‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட – வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் – பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் – களித்
தாடுங் காளீ, சாமுண்டி, கங்காளீ!

அன்னை அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

ஐந்துறு பூதம் சிந்திப்போ யொன்றாகப் – பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக – அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத் – தோடே
முடியா நடனம் புரிவாய், அடு தீ சொரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை’

— பாரதி, ஊழிக்கூத்து கவிதையிலிருந்து.

இந்தத் தான் தானேயாகி நிற்கும் வெளியில் கவித்தரிசனத்தை, ஆன்மீக தரிசனத்தை அடைகிறோம்.

சில சமயங்களில் அந்த அநுபவப் பெருக்கு நம்மைக் கடந்து சென்ற பின்னரே நாம் காலப் பிரக்ஞையை மீண்டும் அடைகிறோம்.

அது சொல்லாக, கவிதையாக நிகழ்கிறது.

சில சமயங்களில் தனக்கே சொல்லிக்கொள்ளமுடியாத, விளக்கிக்கொள்ளமுடியாத அநுபவமாகவும் அது நிகழ்கிறது.


வேணு வேட்ராயன் எழுதும் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்