ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

நதி

எப்படி
நிரம்புகிறதெனத் தெரியவில்லை
அவ் வெளி

நீள் ஆற்றின் நெடுந்தொலைவின் பாலையில்
அப்படி மிதந்தலைகிறது
கானல் நீர்

வியர்வை வழிய
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன்
இப்போதைக்கு
அதாவது தென்படுகிறதேயென்ற
ஆறுதலுடன்.


கலைஞன்

கோவில்களும் திறக்காமல்
உலகியக்கம் ஸ்தம்பித்து
சப்தமொடுங்கிய
நேரத்தில்
சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து
நாதஸ்வரக் கலைஞன்
நாத ஆலாபனையில் உருக்குகிறான்

பச்சைக்கிளிகளும்
புறாக்களும்
ராகவழி திரிந்தலைந்து கோபுரங்களுக்கு
பறக்கின்றன

தீர்த்தக்குளத்தின் சொற்ப நீரில்
மீன்கள் சிலிர்த்து
வான் நோக்கி இதழ் குவிக்கின்றன

கோசாலைப் பசுக்கள்
மேயாது வெறிக்க
நாக மண்டபத்து உயிரினங்கள்
சுருண்டுகிடக்க
கடவுளும் மெல்ல நடந்து
திட்டி வாசலை
நெருங்கிவிட்டார்

வளி மண்டலத்தையே
சுநாதத்தால் நிரப்பிக்கொண்டிருந்த கலைஞன்
வாசிப்பை நிறுத்த வேண்டியிருந்தது
இலவசமாய்ப் பெறுவதற்கான வரிசையில் இடம் பிடித்து
வயிற்றையும் நிரப்ப வேண்டி.

2 thoughts on “ரவிசுப்பிரமணியன் கவிதைகள்”

  1. மரபுக் கவிதைகளின் உயிர்ப்புடன் இயங்குபவை ரவிசுப்ரமணியனின் கவிதைகள். நவீன கால பிரதி பிம்பமாக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது

  2. உள் நுழைந்து வந்தேன். சுகம். கானலும், கானமும் அடிவயிற்றில் புளிச்சென தட்டிக் கிளம்பியது. அழகு

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்