அழிபசி

8 நிமிட வாசிப்பு

ஒரு வாரமாகத் தண்ணீரில் தவமிருந்து வினோதமாய் வளர்ந்து நின்ற -வயது முதிர்ந்த கேரட் ஒன்றின்- குழந்தையை மிகக் கவனமாகச் சிரச்சேதம் செய்து அதன் தலையைப் பதப்படுத்திவிட்டு உடலை சூப் வைக்கத் துவங்கியபோது

“ஆச்சி! ஏதாவது புதுசா நியூஸ் கேட்டீக?”

என்று அன்றைய தினத்தின் முதல் சொற்களைக் காற்றிலனுப்பினாள் பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் மெகருன்னிஸா. கறி கழுவிய வாசனையைக் கார்டன் சேலையில் துடைத்தபடி முக்காட்டைச் சரி செய்துகொண்டு சிரிக்கும் அவளது முகம் மங்கலாகி இருந்தது நினைவில்.

அவளுடைய வாப்பாக்கடையின் கடைசி ஆடு வெட்டப்பட்டபோது எனக்குப் பிடிக்குமென்று கழுத்துக்கறியைக் கொண்டு வந்து தந்தபோது பார்த்ததுதான். அதற்குப் பிறகு குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. அதுவும் எத்தனை நாளைக்கென்று தெரியவில்லை. மெகருன்னிஸா அவளுக்கடுத்த ஃப்ளாட் ஆச்சியோடு பேசிக்கொண்டிருந்தாள். ஆச்சி இருக்கிறாளா கேட்கிறாளா என்பது பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையில்லை. ஆச்சியின் குரல் எனக்குக் கேட்பதில்லை. என் குரல் மெகருன்னிஸாவுக்குக் கேட்காமல் போனதிலிருந்து அவள் என்னுடன் பேசுவதும் இல்லை.

இப்போதெல்லாம் அவளது பேச்சும் மூளையற்ற முண்டங்களுக்குத் தலைகால் ஒட்ட வைக்கும் வாட்ஸப் செய்திகளைப்போல உயிரிழந்து போயிருந்தன. எப்போதும் அவள் பேச்சோடு இணைந்து ஒலிக்கும் பாத்திரம் கழுவும் ஓசையோ, குக்கர் விசிலோ அதனோடு போட்டி போட்டுக்கொண்டு வரும் குடல்குழம்பின் மணமோ இல்லாமல் அனாதையாகியிருந்தது அவள் குரல்.

ஆயிரமாவது முறையாக இன்றாவது அவளது வரிவடிவம் தெரிகிறதா என்று பார்க்க எண்ணி அடுக்களையில் இருந்து சர்வீஸ் ஏரியாவுக்கு வந்து பக்கவாட்டு ஜன்னலின் கம்பிக் கிராதியில் முகத்தை அழுத்தி எட்டிப் பார்த்தேன்.

ம்ஹ்ம். இன்றும் ஏமாற்றம்தான். வியர்வை வழியும் அந்த மரப்பாச்சிக் கரங்கள் பார்வை வட்டத்துள் விழவில்லை.

ஆச்சி எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது மகள் அமெரிக்கா போன நினைவு. அவர்கள் சவுக்கியம் என்ன என்பது பற்றி ஆச்சி பேசியிருப்பாளா என்று தெரியவில்லை. பார்த்திருந்த ஆயிரம் பொழுதுகளில் ஒன்றைக்கூட அவர்களது வாட்ஸப் எண் வாங்க நான் பயன்படுத்தியிருக்கவில்லை. வாங்கியிருந்தாலும்தான் என்ன? வெறும் ஒலியில் அடங்கிவிடும் பசியல்லவே இது.

நீர்த்துப்போன சூப் கொதித்துக்கொண்டிருந்தது.

வருடம் பழைய மேகி டேஸ்ட்மேக்கரின் கடைசித்துண்டை சூப்பில் போட்டுச் சுவை கூட்ட முயன்று தோற்று, குவளையில் அந்த நீர்த்த திரவத்தை நிரப்பிக்கொண்டு வெளி ஜன்னலுக்கு வந்தேன். டேஸ்ட்மேக்கர் சிக்கன் பிரியாணியை நினைவுபடுத்தும், அதை நினைத்துக்கொண்டே குடித்துவிடலாம்.

எதிர் ப்ளாக்கின் அடைக்கப்பட்ட பால்கனிகளுக்கு முன்னே சிறிதானாலும் திறக்கப்பட்ட என் ஜன்னல் ஒரு படி மேல்தான் என்ற தினப்படி நிம்மதியோடு வழக்கமான பார்வை மேய்ச்சல் தொடங்கியது.

முன்பொரு காலத்தில் எந்நேரமும் பிள்ளைகளாலும் வாக்கிங் போகும் பெரியவர்களாலும் நிறைந்திருக்கும் எங்கள் குடியிருப்பு வளாகத்தின் தரையெல்லாம் செடி கொடி வளர்ந்து காடாகி இருந்தது. கீழ்வீட்டு பத்மா அக்காகூட அவள் ஜன்னல் தாண்டி வளர்ந்து நின்ற கீரையைப் பறித்திருக்கவில்லை.

பத்மா அக்கா இருக்கிறாரா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை. சென்ற வாரத்தில் ஐந்து முறை ஆம்புலன்சும் நான்கு முறை அமரர் ஊர்தியும் மனநலக் காப்பகத்தின் ஊர்தியும் காவல்துறை ஊர்தியும் தலா மூன்று முறையும் வந்து போயிருந்தன. இவற்றுள் எதிலாவது அவள் போயிருந்தால் எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வானம் அம்மணமாய்க் கிடந்தது.

தண்ணீரும் அரிசியும் வைக்கும் நல்லிதயங்களும் வடையோடு படையல் வைக்கும் மாமிகளும் வழக்கொழிந்து போனபின் காக்கைகளும் இதர பறவைகளும் பாரம்பரிய உணவு முறைக்குத் தாவியிருந்தன. எச்ச சொச்சமாய்ப் பறப்பவற்றை உணவுப்புரட்சியாளர்கள் வலைபோட்டுப் பிடித்து வறுத்துத் தின்பதாக வரும் வதந்தி உண்மையாகவும் இருக்கக்கூடும். எங்கள் வீட்டுக்கதவுகளோடு மொட்டைமாடிக் கதவுகளையும் அரசாங்கம் அடைத்துப் பூட்டுப்போட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன.

வாசலில் நிற்கும் அல்ஃபோன்ஸ் அண்ணனின் இஸ்திரிவண்டி இப்போது தெருநாய்களின் குடும்பச் சொத்தாகியிருந்தது. அல்ஃபோன்ஸ் அண்ணன் போன்றோர் நிலைமையைப் பற்றியெல்லாம் நினைக்கும் நிலையில் நானில்லை என்பதால் பார்வையை மீண்டும் தெருவில் பாய்ச்சினேன்.

பசுமாடுகளும் கன்றுகளும் புதிதாய் வந்து சேர்ந்திருந்த வைகையாற்றுக் குதிரைகளும் தெருவின் பசுமையை மேய்ந்து கொண்டிருந்தன. மாடுகளையும் குதிரைகளையும் நாய்கள் வினோதமான பார்வையோடு பின்தொடர்ந்தபடி இருந்தன.

அவைகளைப் பார்க்கும் பொழுது முன்பொருநாள் எதிர்சாரிப் பலசரக்குக் கடைகளின் இண்டுகளிலிருந்து உடல் சிறுத்து வெளியேறிய எலிகளைப் பிடிக்க வயிறு செத்த பூனைகள் சில நாய்களின் உருட்டல்களையும் மீறி ஊர்ந்து திரிந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

நாய்களும் முன்பு போலன்றி வேட்டையுணவுக்கு வெகுவாகப் பழகத் தொடங்கி இருந்தன. மாடுகளின் கொழுத்த பிட்டத்தைப் பார்க்கும் அவற்றின் சிவந்த கண்களுக்குப் பின்னிருக்கும் உணர்ச்சியை என்னால் இப்போது முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. வெளித்தள்ளிய நாவில் ஊறிய எச்சிலும் நேற்று தின்ற மாமிசத்தின் எச்சமான சிவப்பும் எனக்குப் பசியை அதிகப்படுத்தின.

வழக்கம் போல நகத்தைக் கடிக்கத் தொடங்கினேன். நகத்தைக் கடிக்கும் சாக்கில் கொஞ்சம் சதையைக் கடிக்கவும் தொடங்கிச் சில காலமாகியிருந்தது. கிரேக்க தேவதை டெமெட்டரின் சாபம் பெற்றவளாகிவிட்டேனோ என்று எண்ணிய நொடியில் கடிப்பதை நிறுத்திக்கொள்வேன். அந்த டெமட்டரை எதிர்சாரி நாயோடு சேர்ந்து எப்போது புசிக்கப்போகிறேனோ என்ற பயமும் ஆசையுமாய் நான் நின்றிருந்த வேளையில் அலைபேசி அழைத்தது.

குடும்ப ஜூம் நேரம்.

தோள்களில் நில்லாமல் சரிந்த சட்டையை முதுகுப்பக்கம் சேர்த்துப் பிடித்து பின்குத்திக்கொண்டு வெற்றுக் கோப்பையிலிருந்து சூப்பைச் சத்தமாக உறிஞ்சியபடி அழைப்புப் பொத்தானைச் சொடுக்கினேன்.

சென்னையில் அண்ணன் வீட்டிலிருந்து அம்மாவும் சிங்கப்பூரிலிருந்து அக்காவும் கண்களில் இல்லாத ஒளியைத் தேடிப் பிடித்துத் தேக்கிவைத்தபடிக் காத்திருந்தனர்.

“நல்லாருக்கியாடி?”

தலையசைத்தேன். பயனற்ற சொற்களுக்காகச் செலவிடுமளவுக்கான சக்தி என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவள் போல அம்மா கண்களில் நீர் தேக்கிக்கொண்டாள். அவளிடமும் அழுவதற்கான சக்தியில்லை என்று அக்கா அதட்டினாள்.

“சிங்கப்பூர்ல எப்டி?”

“இங்க ஓகேதான். நிலாவுக்குப் பள்ளிக்கூடம், அவருக்கு வேல எல்லாம் அது பாட்டுல ஆன்லைன்ல போயிட்ருக்கு. கதிருக்கும் என்யுஎஸில் சீட் கன்ஃபார்ம் ஆனதிலிருந்து அவனும் வகுப்புகளில் பிஸி. இங்க முந்தா நாள்லருந்து காய்கறிக்குப் பதிலா சமைத்த உணவாவே கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இன்னிக்கு மீஹூன். பாப்பு பட்டினி. நீ என்ன சாப்ட்ற?”

“ஹோம் க்ரோன் கேரட் சூப்”

“வாவ் சூப்பர்டி மூளைக்காரி. சத்தான ஆகாரம்” கண்களுக்கு முரணாய்ப் பதில் தந்த அசட்டு அக்காவைப் பார்த்துச் சிரித்து வைத்தேன்.

“நீ சாப்டியாம்மா?”

அம்மா வேகமாகத் தலையாட்டினாள்.

அங்கே கேரட் சூப்போ தக்காளி சூப்போ? பீட்சாவும் பர்கருமாய் வாழ்ந்த அண்ணன் பிள்ளைகள் எப்படித் தாங்கும்?

“அங்கிட்டு கறிகிறி கெடக்கிதாடி?”

இல்லை என்பதாய்த் தலையசைத்தேன்.

“இங்கே சென்னைல ஆன்லைன்ல ஒரு ஆளு தனியா விக்கிறாரு”

“சட்டப்படி தப்பாச்சேமா?” அக்கா வியந்தாள்.

“தப்புதாண்டி. ஆனா இப்படிக் கவுச்சியே திங்காமப் போனா வளர்ற புள்ளைக எலும்புக்கு வலுவு வேண்டாமா? அதான் உங்கண்ணங்கிட்ட சொல்லி வாங்கச்சொல்லிட்டேன். இன்னிக்கு வரும்” பிறவிச் சைவமான அம்மாவின் கண்களிலே முதல்முறையாக எதிர்சாரித் தெருநாயின் கண்களின் சாயல்.

இங்கே ஆன்லைனில் ஆடம்பர வஸ்துகள் எதுவும் கிடைப்பதில்லை. அங்கே மாமிசம் கிடைக்கிறதாமே? கொடுத்து வைத்தவர்கள். கொடுத்து வைத்த நாய்.

“சித்தப்பா பேசினாரு. கவுருமெண்டு நேத்திலிருந்து போலீஸ் காவல் கொடுத்திருக்காங்களாம். மினிஸ்டர் கணக்காத் தோரணையா இருக்காப்டி. இந்த முறை விளைச்சல் நல்லா இருக்காம். மெசினுக அம்சமா அறுவடை செய்யுதுவளாம்.”

“கூலியாளுங்க?”

“அப்படியெல்லாம் இப்ப யாரிருக்கா? கொள்ளைக்காரவங்க தான் அதிகமாயிட்டுனு போலீஸ் காவலாம்.”

“பாலைத்திணைக் காலம்.”

“என்னடி சொன்ன?”

“ஒண்ணுமில்ல, மேல சொல்லு.”

“நேத்து அறுவடை முடிஞ்சு போலீஸ்காரவங்களுக்கும் கெடா வெட்டி விருந்தாக்கிப் போட்டிருக்கறதா சொன்னாரு.”

மூவருமே பேசவில்லை. மனதுக்குள் ஆட்டுக்கறிக் குழம்பும் நல்லி ரோஸ்டும் பாயாவும் இன்னும் ஓர் ஆட்டின் எல்லா பாகங்களிலிருந்து செய்யப்படும் உணவுவகைகள் அத்தனையும் ஊர்வலம் வரத்தொடங்கின.

நான் வேகமாக நகம் கடிக்கத் தொடங்கியிருந்தேன்.

தடை செய்யப்பட்ட சொல்லை மிகச்சாதாரணமாகச் செயலாக்க அரசின் அணுக்கம் வேண்டும் விவசாயி சித்தப்பா போல.

“உனக்குக் காய்கறிப் பை அடுத்த வாரமா வரும்?”

ஆமென்பதாய்த் தலையசைத்தேன். நாட்கள் செல்லச் செல்லத் தனியளான எனக்கு அரசாங்கம் அளிக்கும் உணவுப்பையின் கனம் குறைந்து வருவதை இவர்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? அதிகமாய்ச் சம்பாதிக்கும் அண்ணன் வீட்டிலும் அந்தக் கதிதானே?

ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். பேசவும் சொல்லவும் அவர்களிடம் செய்திகள் நிறைய இருந்தன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இப்போது யாரும் எந்தத் தொலைக்காட்சிகளையும் பார்ப்பதில்லை. சமூக ஊடகங்கள் எல்லாம் தனியார்த் தொலைக்காட்சி சீரியல்கள் போல சீரழிந்த நிலையில் என்னைப் போலப் பெரும்பான்மைப் பேர் சோலோ நெட்டுக்குத் தாவியிருந்தோம்.

இணையத்திலும் தனிமையாக இருத்தல் நிஜத்தில் மனப்பிறழ்வுகளைத் தவிர்க்கும் என்ற தத்துவத்தைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றத் தொடங்கி இருந்தது உலகம்.

செய்திகளில்லாத அடைப்புக்குறிக்குள்ளான வாழ்க்கையில் அலைபேசி வழி உரையாடல்கள் மட்டுமே மனிதப் பசிகளில் சிலவற்றுக்காவது உணவிட்டு உறவுச்சங்கிலியை உடைபடாமல் வைத்திருக்கிறது.

அம்மாவும் அக்காவும் அன்றாட அரசியலில் துவங்கி, சிறந்த பொழுதுபோக்குக்கான இணைய விருது பெற்ற தமிழகக் காவல் துறையினரின் ட்ரோன் கேமரா திரைப்படம், விர்ச்சுவல் ரியாலிடியில் வெளிவந்த திருப்பதி பிரம்மோத்சவ ஒளிபரப்பு, அமெரிக்க நாடுகளின் ஆன்லைன் தேர்தல் என்று அந்த வாரத்தின் கதைகளத்தனையும் பேசிக்கொண்டிருந்தனர். முன்பு அதிகமாகப் பேசிய சமையல் குறிப்புகளை மட்டும் சர்வ ஜாக்கிரதையாகத் தவிர்த்தனர்.

“அண்ணே எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கான். அவனும் உன்னப்போல கம்பியூட்டர்லயே வேலையப் பாக்கான். மிச்ச நேரம் அடைபட்ட புலி கணக்கா சுத்திகிட்டுத்திரியறான். பயமாத்தேண்டி கெடக்கு. எதிர் வீட்டுல சந்திரனும் அவம்பெண்டாட்டியும், நேத்திக்கு வெட்டிக்கிட்டு செத்துப்போச்சுங்க தெரியுமா? அந்த சந்திரன் பெண்டாட்டி மேல அம்புட்டு ஆசையா இருப்பாப்டில்ல? அவன் நேத்து அரக்கன் மாதிரி அருவாளோட துள்ளிக்கிட்டு ஓடுனத வீடியோல காட்றான் அண்ணன். பயமாத்தேண்டி கெடக்கு”

அப்படி அடிக்கவும் வெட்டவும்கூட ஆளில்லையென்றால் எப்படி இருக்கும்? அம்மாவை மேலும் பயமுறுத்த விரும்பவில்லை நான்.

“உங்கண்ணன் அண்ணிக்கும் சண்டை வரத்தான் செய்யிது நடுவாப்ல நா இருக்கத்தண்டி கோவத்த எம்மேல காட்டிப்புட்டு போவுதுங்க. கெரகத்த வெட்டிக்கிட்டு சாவுறதுக்கு இது மேலில்ல? அந்தமட்டுக்கு நா அழுது அடம்பிடிச்சு அவன எங்கூடயே உக்காரவெச்சதும் நல்லதுக்குத்தேன். அவம்ப்ரெண்ட்ஸ் எல்லாம் எம்புட்டுச் செரமப்படுறாகளாம் தெரியுமா? ரெம்பப் பேருக்கு வேலை இல்லையாம். இருக்கற எடம்கூடத் தெரியலியாம். நல்லவேள எம்மவன அந்த குண்டிதொடைக்கிற ஊருக்கு அனுப்பல. பேண்டத தொடக்கிற பேப்பருக்கே சுட்டுகிட்டுச் சாவுறாகளாமேடி! நெசமா?”

“அம்மா” அக்கா அதட்டினாள்.

“வாஸ்தவத்தச் சொன்னேண்டி.”

“இங்க மட்டும் என்ன வாழுதாம்?”

“அதுவுஞ்சரிதான். பாவம் மக்கசனம் படுற பாடெல்லாம் கொஞ்சமா நஞ்சமா? என்னமோ இந்த மாசம் முடியறதுக்குள்ள எல்லாம் சீராயிடுமின்னு அண்ணஞ் சொல்றான்” எத்தனையாவது முறையாக இதை அம்மா சொல்கிறாள் என்று எண்ணுவதைப் பற்பல மாதங்களுக்கு முன்பே நிறுத்தியிருந்த நாங்களிருவரும் பதிலைத் தவிர்த்தோம்.

நீண்ட பெருமூச்சின் பின்னணியில் அம்மா எப்போதும் போல வேண்டிக்கொள்ளலானாள்.

“அந்த மீனாட்சி கருண வச்சா, இந்த வருசமாவது சித்திரைத் திருவிழாவுக்கு ஊருக்கு வரணும்டி”

சித்திரைத் திருவிழா.

என்னைப் பைத்தியமாக்கும் இந்தப் பேச்சை பேசாமல் அம்மா உரையாடலை முடிக்க மாட்டாள்.

அழைப்பைத் துண்டித்தேன்.

சென்ற முறை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே விஆரில் வெளிவந்தது சித்திரைத் திருவிழாத் தொகுப்பு. கொண்டாட்டங்களைப் பெரிதும் விரும்புகிறவளாய் அதிலும் குறிப்பாகச் சிறுவயதிலிருந்து தீபாவளி, பொங்கலைவிடவும் குதூகலத்தைக் கொண்டு தரும் சித்திரைத் திருவிழாவின் நாயகனான கள்ளழகனைக் காணும் ஆவல் கொண்டவளாய்ப் பரபரப்போடு வீஆர் கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஆன்லைன் திருவிழா பார்த்த அன்று இரவே வேறு முடிவு நோக்கி நான் நகரத் தொடங்கியிருப்பதை உணர்ந்துவிட்டேன். உயிர் அழல் மேலெழெப்பும் என் பசியின் ஆழத்தை மிகத் துல்லியமாகக் காட்டிவிட்டுச்சென்றது அந்த இரவு.

சர்க்கரை நினைவுகளாய் மனநாவின் அடியில் படர்ந்து இனித்துக்கொண்டிருந்த திருவிழா நினைவுகளெல்லாம் அன்றோடு நெடுந்துயர்த் துகள்களாய்க் கசந்து குமட்டின.

அன்றும் அதைத் தொடர்ந்த சில வாரங்கள் வரையும் நான் ஜனக்கடலில் மூழ்கிச்சாகும் கனவு வந்துகொண்டே இருந்தது. இன்றும் கண்டிப்பாக வரும்.

தாகத்தால் நிறைந்த அந்தக் கடலிலிருந்து – பூக்காரப் பாட்டியின் கூடையில் அமர்ந்துகொண்டு தண்ணீர்ப் பீச்சுக்காரர்களின் தோல்பைத் தண்ணீரைக் குடித்து – உயிர்த்துக் கரையேற முயற்சிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பாட்டி பாதியில் கூடையைக் கவிழ்த்துவிட்டுக் காணாமல் போய்விடுவாள். வண்ணச்சாந்துக் கள்ளழகர்கள் தோல் பைகளைச் சுருட்டித் தூரமாய் வீசிவிட்டுச் சிரிப்பார்கள். கோயிந்தா கோஷம் கலைந்து கலைந்து ஒலிக்குன்றிக் காற்றாகி வீசும்.

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல். அந்தக் கனவுக்கடலில் கைகளுக்குச் சிக்காமல் உடன் மிதந்த சதைக்கோளங்களின் வடிவங்களை பிக்காஸோ ஓவியங்கள் போல என் சுவரெங்கும் வரைந்து வைத்திருப்பதைப் பார்க்க யாருமில்லாத துணிவில் அவைகளுக்கு வண்ணங்களூட்டத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொரு கனவு தீர்ந்த காலையிலும் ஒர் ஓவியமென்று என் வீட்டில் சுவரெங்கும் பிக்காஸோக்கள் சிரித்தன.

சுவர்களில் இடமின்றி சோபாவைத் திருப்பி நிறுத்தி மேலேறி நின்று விட்டத்தில் வரையத் தொடங்கியிருந்தேன். திருவிழா முகங்களில் உறைந்த புன்னகைகளை, வடியாமல் நின்ற வியர்வைத்துளிகளை, பண்டம் தின்றொழுகும் எச்சில் சிதறல்களை மையாகக்கொண்டு இந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட முயற்சிக்கும்போது காயாத அவ்வண்ணங்கள் என் விரல்களிலிருந்து மேலேறி இரவெலாம் மூளைக்குள் நாட்டியமாடும். சித்திரை வெயிலில் உலர்ந்து உப்பேறிய கருந்தோலின் சொரசொரப்பை ஓவியத்தில் கொண்டு வரமுடியாமல் பல இரவுகளைத் தொலைத்திருக்கிறேன்.

சில்லுக்கருப்பட்டி, புகை, பஞ்சுமிட்டாய், பட்டாசு, வியர்வையில் குழப்பிய பாண்ட்ஸ் பவுடர், தேங்காயெண்ணெய்த் தலைமயிர், கெட்டி மல்லிகை, மாவிளக்கு என்று நூற்றுக்கும் அதிகமான திருவிழா வாடைகளை ஏதுமற்ற வெளியிலிருந்து ஒரு நொடியில் உருவாக்கி நுகர்ந்துகொள்ள என்னையும் அறியாமல் பழகிக்கொண்டிருந்தேன். அந்த வாடைகளையும் ஓவியங்களின் மீது தெளித்துத் தெளித்துத் தினமும் மோப்பப் பசியாறிக்கொண்டிருந்தேன்.

தொடுகைகளின் கிளர்ச்சியற்று மரத்துப்போயிருந்த செல்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் செல்லரித்துப் போய்க்கொண்டிருப்பதை நினைவுபடுத்தத்தான் இப்போது மீண்டும் வருகிறது சித்திரைத் திருவிழா.

அம்மாவை வசைபாடியபடி அதை மறக்க வேலையில் இறங்கினேன். அரசுச் செய்தியகத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

மதுரை மாநகராட்சியின் சிறப்பு அறிவிப்பு. அடுத்தவாரம் மழை மற்றும் விநியோகஸ்தப் பணியாளர்களின் நீண்ட விடுப்பு காரணமாக உணவுப்பை ஐந்து நாட்கள் முன்னரே வழங்கப்படும்.

அதாவது இன்று. சரியாகச் சொல்வதானால் இன்னும் ஐந்து பத்து நிமிடங்களில் காய்கறிப்பை வரப்போகிறது.

அதை எடுத்துக்கொண்டு வலது தோளின் மேற்புறத்தில் நீண்ட கைத்தையல் போட்ட மஞ்சள் ப்ளாஸ்டிக் சீருடையில் பணியாளர் வருவார். ஒவ்வொரு முறையும் நான் கம்பிக் கிராதிக் கதவிலிருக்கும் உணவிடுக்கைத் திறக்குமுன்னர் காய்கறிப் பையை வாசலில் வைத்துவிட்டு மஞ்சள் நெகிழிப் பறவையாகப் படிகளில் பறந்தோடிவிடும் அந்த மனிதர், இன்னும் சில மணித்துளிகளில் என் அழைப்புமணியை அழுத்தப்போகிறார்.

மேளதாளம் முழங்க, குலவையோசை காற்றைக் கிழிக்க, அழகர் வாராறு பாடல் ஒலிப்பெருக்கியில் அதிர, சித்திரைத்திருவிழா இன்னும் சில நொடிகளில் தங்கக்குதிரையில் என் வீட்டுப் படியேறப்போகிறது.

கணநேரத்தில் அந்த இராட்சதக் கடலலைகளை ஒரே பாய்ச்சலில் தாவியேறும் வலு என்னுடலில் தோன்றுகிறது.

கடவுளைக் கண்ணுறும் பக்தனைப் போல மயிர்க் கூச்செறிதலும், மிகைக் கண்ணீரும், அழன்று அதிரும் உடலுமாய் நான் நின்றிருந்தது சில வினாடிகளுக்கும் குறைவாக இருக்கும்.

அத்தனையையும் அப்படி அப்படியே போட்டுவிட்டுக் கதவு நாடி எதிர்சாரித் தெருநாயைவிட அதிக வேகமாகவும் காரணத்தோடும் ஓடிய நான் கதவு திறந்த மிகச்சரியான நொடியில் மஞ்சள் வஸ்திரத்தில் தகதகத்தபடி வந்த கள்ளழகர் காய்கறிப்பையை என் வீட்டு வாசலில் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார்.

கள்ளழகரைக் கண்ட கிறுக்கு உச்சந்தலையில் சுர்ரென்று ஏற சட்டென உணவிடுக்கில் கைநுழைத்துக் காய்கறிப்பையை விட்டுவிட்டுக் கள்ளழகரின் கைகளைப் பிடித்து அவரது கையுறைக்கும் ப்ளாஸ்டிக் உடைக்கும் இடைப்பட்ட தோல்பரப்பைக் கண்டடைந்த என் விரல்களின் உச்சமும் பசியும் என் கண்களில் பளீரென ஒளிர்விட, கொரானோவின் கையில் சிக்கிக்கொண்ட பீதியில் உறைந்துபோய் நின்றார் கள்ளழகர்.


ஓவியம்: பானு

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்