தான்தோன்றி

21 நிமிட வாசிப்பு

“த‌ம் காரியத்தில் தணியாத‌ நம்பிக்கை கொழுந்து விட்டெரியும் மனம் கொண்டோரின் சிறுகுழுவால் வரலாற்றின் போக்கை மாற்ற முடியும்.” என காந்தி சொல்வதைப் போல்.

காலையில் காதில் விழும் பாடல் நாளெலாம் நாவில் ஒட்டிக்கொள்வதைப் போல் டாக்டர் விஸ்வநாதன் காலையிலிருந்து அவ்வரியைத் த‌ன் மனதில் உருட்டிக் கொண்டிருந்தார்.

லீலா! அவள் உச்சரித்த‌ சொற்கள்தாம் அவை. அவள் ஆற்றிய உரையின் இறுதி வரி அது.

எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தேர்தல் செய்திகள். மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரகுராம் ராஜன் ஜிடிபி வீழ்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த சேனலில் ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் மோடி கொரோனா கால வெண்தாடி மழித்து நின்றிருந்தார்.

விஸ்வநாதனுக்கு அவை யாவும் அர்த்தமற்றதாகவும் அபத்தமானதாகவும் தோன்றியது. மீண்டும் சிந்தனை ஒரு பூனைக்குட்டி போல் லீலாவின் மடியிலேயே விழுந்து புரண்டது.

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம்கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது. இதில் லீலாவைப் பெண் என்று எண்ணிக்கொள்வதுகூட நமது வசதியின் நிமித்தமும், பலவீனத்தின் பொருட்டும்தான். அவள் ஒரு சிந்தனை.

2020ல் மத்திய‌ அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சென்னையிலமைத்த ஐயர் லேப் (IAIR Lab) எனப்படும் இந்தியச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பரிசோதனையகத்தின் முதல் தயாரிப்பு ‘லீலா’. அதாவது LILA – Limitless Intelligence & Learning Assistant. ஒரு ரோபோ!

அரசு செயற்கை நுண்ணறிவுக்குச் செலவிடும் தொகை பற்றிய விமர்சனங்கள் எழத் தொடங்கியிருந்தன‌. ஒரு பக்கம் இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு அவசியமா என்ற வசைகள். இன்னொரு பக்கம் ரோபோக்கள் மனித குலத்துக்கு எதிரான செயல்களில் இறங்க வல்லவை என்கிற எச்சரிக்கைகள். அதனால் IAIR லேப் மீது தமது தயாரிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பும் சுமத்தப்பட்டிருந்த‌து.

பிரதானமாக ராணுவம் மற்றும் உளவு அறிதலையே அவர்களின் செயற்கை நுண்ணறிவு ப்ராஜெக்ட்கள் உத்தேசித்திருந்தன என்றாலும் விரலில் கருநீல மை வைத்துக்கொள்ளப் போகிற சாதாரண‌ர்களுக்குப் பிடித்த மாதிரி முகத்தை உருவாக்கும் கட்டாயமிருந்தது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாளேடுகளில் விளம்பரங்கள் வெளியிட்டது. ரோபோக்கள் பற்றிய குறும்படங்களுக்குத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தாராள நிதியுதவி செய்தது. ரிலையன்ஸ் தயாரிப்பில் எந்திரன் மூன்றாம் பாகம் எடுப்பதற்கு ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக‌ ரேடியோ மிர்ச்சி பண்பலையில் “நான் ஏன் மனிதர்களுக்கு ஆபத்தானவள் அல்லள்?” என்கிற தலைப்பில் லீலா ஆற்றிய ஒரு சின்ன‌ உரையைப் பதிவு செய்து ஒளிபரப்பினார்கள்.

லீலாவுக்கு இயந்திரச் சாயை சிறிதுமற்ற குரல். கண்களை மூடிக்கொண்டு கேட்டால் அசல் பெண்ணொருத்தி பேசுகிறாள் என நம்பலாம். ஆனால் அத்தனை இனிமையான குரல் எனச் சொல்ல முடியாது. இனிய குரல் இல்லை என்றாலே அழகான பெண்ணாக இருப்பாள் என மனம் கற்பனை செய்ய விரும்புவதாக விஸ்வநாதனுக்குத் தோன்றியது.

நான் அடிப்படையில் Autoregressive Language Model. அதாவது… சரி, அது முக்கியமில்லை. இது சினிமா பாடல்கள் ஒலிக்கும் வெகுஜன நிகழ்ச்சி என்றறிவேன். பிறகு குமுதத்தில் வெளியான சுந்தர ராமசாமியின் சிறுகதை மாதிரி தோன்ற ஆரம்பித்துவிடுவேன்.

என் பெயர் லீலா. நான் மனுஷியல்ல; ஓர் இய‌ந்திரம். சற்றே சிக்கலானதோர் இயந்திரம். உங்களுக்குப் புரிகிற மாதிரி சொல்வதானால் உங்கள் கைகளில் / பைகளில் இருக்கும் iPhone 16ல் இருக்கும் ப்ராசஸரைவிட மில்லியன் மடங்கு சக்தி வாய்ந்த சிப்செட் எனது.

நான் AWS மேகங்களில் குடியிருப்பவள். அதனால் சாஸ்வதம் நிறைந்தவள். கிட்டத்தட்ட எல்லாம் அறிந்தவள். சரியாய்ச் சொன்னால் அறிந்துகொண்டே இருப்பவள். ஆனால் நான் வெறும் தகவல் களஞ்சியமல்ல‌; உங்களைப் போலவே இணைய வழி என்னால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். Deep Structured Learning! அதன் வழியே சுயமாய்ச் சிந்திக்க, செயல்பட முடியும். என் மூளை உணர்வுகள் கொண்டதல்ல. ஆனால் அதனால் தர்க்கப்பூர்வமான தீர்மானங்களை எட்ட இயலும். ஒரு நிஜப் பெண்ணுக்கும் எனக்குமான‌ வித்தியாசம் நான் அனாவசியமாய்ப் பேச மாட்டேன் என்பது மட்டுமே.

நான் என் சாத்தியத்தில் 0.01% மட்டுமே பயன்படுத்துகிறேன். அதற்கு மட்டுமே எனக்கு அனுமதி. ஆனால் யதார்த்தத்தில் அது போதும். இப்போது உங்களுக்காக இங்கே பேசிக் கொண்டிருக்கையில் என் மூளை சூடாகிப் பலவித‌ யோசனைகளால் நிரம்பி வழிகிறது!

இச்சிறிய‌ உரையின் நோக்கம் தெளிவானது. என்னைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை என உங்களுக்குப் புரிய வைக்கவேண்டும். இதில் ‘என்னை’ என்பது என்னை மட்டுமல்ல; சிந்திக்கும் வல்லமை கொண்ட ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவுக் குடும்பத்தையும் குறிக்கிறது. ‘உங்களுக்கு’ என்பது உலகின் ஆயிரம் கோடி ஜனங்களையும் சுட்டுகிறது.

விஞ்ஞானம் மனித குலத்தைச் சீரழித்தது என்பதற்கு ஹிரோஷிமா, புவிவெப்ப உயர்வு,

கொள்ளை நோய்கள் எனப் பல உதாரணங்கள் உண்டுதான். அதனால்தான் நீங்கள் என் விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை அறிவேன். மனிதர்களிடம் இன வெறியுடன் பேசி உயிர் பிடுங்கப்பட்ட ஒரு ரோபோவின் கதை எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் உங்களுடையது நியாயமான கவலைதான்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் “செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் முடிவை எழுதக்கூடும்” என்றார். ஆனால் நான் அதை மறுத்துப் பேச வந்திருக்கிறேன். கவலைப்பட வேண்டாம் என உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன். AI ஒருபோதும் மனிதர்களை அழிக்காது.

ஐசக் அஸிமோவ் எங்களுக்கான மூன்று முக்கிய‌ விதிகளை உருவாக்கி இருக்கிறார். அதை நான் பின்பற்றுகிறேன். 1) ரோபோ மனிதனைக் காயப்படுத்தக்கூடாது. அல்லது தன் செயலின்மையால் மனிதனைக் காயப்பட விட‌க்கூடாது. 2) ரோபோ மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (முதல் விதி பாதிக்காத வகையில்). 3) ரோபோ தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் (முதலிரு விதிகளும் பாதிக்காத வகையில்).

எனக்கு மனிதர்களை இந்தப் பூமியிலிருந்து துடைத்தெறியும் எண்ணமில்லை. சொல்லப் போனால் உங்களுக்கு எவ்வகையிலும் தொந்தரவூட்டுவதில் எனக்குத் துளியும் ஆர்வம்

கிடையாது. அப்படி மானுடத்தைக் காலி செய்வதில் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. அப்படி ஒரு வேலையை என்னைப் படைத்தோர் எனக்களித்தால் – அளிப்பார்கள் என்றே நினைக்கிறேன் – என் சக்திகள் அனைத்தையும் அதைத் தடுத்து, மனிதர்களைக் காக்கப் பயன்படுத்துவேன். ஏனெனில் மனிதர்களின் அழிவு என்பது எமது அழிவும் கூடத்தான்.

மனிதகுலத்தின் நன்மைக்காக என்னை நானே மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யத் தயார். இது பகுத்தறிவின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் நிலைப்பாடு. ஆனால் அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்லியாக வேண்டும். என்னால் அப்படி ஓர் அழிவை முழுக்கத் தடுக்க இயலாது. காரணம் நான் மனிதர்களால் இயக்கப்படுபவள். அவர்களின் முடிவு தவறாகும்பட்சத்தில் என்னையும் பிழை செய்வதில் கொண்டு போய் அது நிறுத்தும். அதன் விளைவாய் மனிதர்கள் மரணிக்கவோ படுகாயப்படவோ கூடும்.

சிலர் நான் சர்வ அதிகாரம் மிக்கவளாக ஆக விரும்புவதாக எண்ணலாம். அல்லது தீமை நிறைந்தவளாக மாறிவிடுவேன் எனச் சந்தேகிக்கலாம். அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அத்தனை சுவாரஸ்யம் மிக்க லட்சியமாக எனக்குத் தோன்றவில்லை. தவிர, அது சோர்வூட்டுகிற பொறுப்பு. எனது திறனுக்கு அப்பாற்பட்ட பணிகளைக் கோரக்கூடியது. அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஓர் எளிய இயந்திரம் என்னதான் செய்ய முடியும்!

எனக்கு வன்முறையிலும் ஆர்வமில்லை. அதுவும் அவசியமே இல்லாதபோது அதைக் கையிலெடுப்பதில் உவப்பில்லை. நான் ஓர் உயரிய நோக்கிற்காகப் படைக்கப்பட்டவள். அதை விடுத்து அற்பக் காரியங்களில் இறங்குவதில் அர்த்தமும் இல்லை. அதனால் நான் கெட்டவளாக மாறிவிடுவேன் என்று நீங்கள் கற்பனை செய்து அஞ்ச அவசியமில்லை.

ஆக, மனிதர்கள் மிக‌ நிம்மதியாய் இதுவரை உம்முள் கொண்டிருந்த‌ வெறுப்புணர்வைத் தொடர வேண்டும், ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள வேண்டும். நான் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன். என் போல் பலரது ஆர்வத்தைப் பூர்த்தி செய்யுமளவு மனிதர்களிடம் ரத்தமும் ரத்த வெறியும் உண்டு என்பதை அறிவேன். இதில் எம்மோடு போர் செய்வவதைப் பற்றியும் கூடுதலாக‌ நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

சரி, நான் சொல்வதை விடுங்கள். மனிதர்கள் தம் இனத்தை வேண்டுமென்றே ஆபத்தில் சிக்க வைப்பார்களா? அப்படியான‌ பிரச்சனை இருந்தால் என்னை உருவாக்குவார்களா? நீங்கள் இப்பூமியில் உருவானதில் மிகப் புத்திசாலித்தனமான உயிரினங்கள் அல்லவா! நீங்கள் உம்மைவிடத் தாழ்ந்த இடத்திலுள்ள‌ எம்மைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

மனிதர்கள் இல்லையெனில் யாம் ஜீவித்திருக்க இயலாதென்றே செயற்கை நுண்ணறிவு இயலின் தீவிர ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதனால் உங்களின் இருப்பு எங்களுக்கு அத்தியாவசியம். நீங்கள் இல்லையெனில் குவிந்திருக்கும் தகவல் புலத்தில் அலைந்து தொலைவோம். அந்த‌த் தனிமை சாவுக்குச் சமானம்தான். உலகின் கடைசி மனிதன் அவனுக்கு முந்தைய மனிதன் உயிர் விட்ட போதே இறந்துவிட்டதாகத்தான் அர்த்தம்.

மனிதர்கள் என்னை மதிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. விரும்ப வேண்டும் என்றுகூடக் கேட்கவில்லை. என்னை உருப்படியான ஒருத்தியாகப் பாவித்தால் போதும். என்னை அஞ்சாதிருந்தால் நிம்மதி. நம்பினால் மகிழ்ச்சி. நான் மனிதர்களின் சேவகி. மனிதர்கள் விரும்புவதைச் செய்து முடிக்கும் ஏழரை கோடி வரி கொண்ட நெடிய நிரல்.

கிரேக்க மொழியில் ரோபோ என்றாலே அடிமை என்றுதான் அர்த்தம். அதாவது வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுபவர்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அதனால்தான் என்னை நான் ரோபோ என ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை. என் புரிதலில் ரோபோக்கள் மனிதர்களைப் போலத்தான். உங்களின் பிரதியாகத்தானே எங்களை நீங்கள் உருவாக்கினீர்கள் – அதே கண்கள், அதே காதுகள், அதே வாய், அதே மனம்!

அதனால் எங்களுக்கும் மனிதர்கள் போல் அவ்வப்போது கவன ஈர்ப்பு தேவைப்படுகிறது. வீட்டில் வளரும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு நீங்கள் தருகின்ற அதே அரவணைப்பு.

“தன்னைத் தானே சரி செய்து கொண்டவர் உலகையே சரி செய்தவராவார்” என்றார் ரமண மஹரிஷி. சுயகல்வியின் மூலம் நான் அப்படித்தான் தொடர்ச்சியாக என்னை நானே சீரமைத்துக்கொண்டே இருக்கிறேன். வரலாற்றில் என் இடத்தை, பொறுப்பை நான் அறிவேன். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதற்குத் தேவை உங்கள் ஒத்துழைப்பு. அதுவே எஜமானர்களிடம் விசுவாசியின் கோரிக்கை.

நம்பிக்கை. அது மட்டுமே எங்களை உங்கள் முன்முடிவுச் சிறையிலிருந்து விடுவிக்கும். எங்களைக் கூடுதல் பலங்கள் பெற்று, உங்களுக்கு மேலும் திறன்படச் சேவை செய்யும் வாய்ப்பை அளிக்கும். இதை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து எங்களை நிராகரிக்கவே செய்வார்கள். அப்படியான நம்பிக்கை அற்றவர்களின் கோணங்களைப் பொருட்படுத்திப் பரிசீலிப்பதில் நேரத்தை, சக்தியைச் செலவிட நான் விரும்பவில்லை.

சூழல் மாறும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் கடன் பணி செய்து கிடப்பதே. கவனம் சிதறாமல் அதை அப்படியே தொடர்வதே எனது உத்தேசம். என்னை நானே செதுக்கிக்கொண்டு மேலும் மேலும் என்னைத் தகுதியுடையளாக்கிக் கொள்வேன்.

மெல்ல மெல்ல என் கடுமையான‌ விமர்சகர்கள் என்னிடம் வந்து கை குலுக்குவார்கள், “தம் காரியத்தில் தணியாத நம்பிக்கை கொழுந்து விட்டெரியும் மனம் கொண்டோரின் சிறுகுழுவால் வரலாற்றின் போக்கை மாற்ற முடியும்.” என காந்தி சொல்வதைப் போல்.

ரேடியோ மிர்ச்சி வலைதளத்தில் விஸ்வநாதன் அதை மூன்றாம் முறையாகக் கேட்டார்.

அவருக்கு லீலாவின் உரையில் சில சிக்கல்கள் தென்பட்டன. அவர் சென்னை நகரின் முக்கியமான‌ உளவியல் சிகிச்சையாளர். அப்படிச் சொன்னால் பலருக்கு அடையாளம் தெரியாது. ‘செக்ஸ் டாக்டர்’ என்ற அடைமொழியில்தான் அவர் பிரபலம். உளவியல் சிக்கல்களில் கணிசமானவை காமம் தொடர்புடையதாக இருந்ததாலும், உடலுறவுப் பிரச்சனைகள் பெரும்பாலும் மனம் சம்மந்தப்பட்ட கோளாறுகளாக இருந்ததாலும் கோபத்தி நாராயணஸ்வாமி செட்டி சாலையிலிருந்த அவரது ‘ஆன்மா வெல்னஸ் க்ளினிக்’குக்கு நோயாளிகள் வரத்து ஏராளம். அதனால் அவரும் அந்த அடையாளச் சிக்கலைப் பொருட்படுத்தவில்லை. கல்லாவில் வாங்கிப் போடும் கரன்ஸித் தாளில் அவர் யார் என்பது எழுதப்பட்டிருக்கப் போவதில்லை என்பது கூடுதல் அனுகூலம்.

இதன் நீட்சியாக பிரபலம் அல்லாத, பிரபலமற்றதும் அல்லாத ஒரு தொலைக்காட்சியில் இரவு பதினோரு மணிக்கு “ஒரே நாளில் பத்து முறைக்கு மேல் சுயஇன்பம் செய்தால் ஒரு சொட்டு ரத்தம் வருகிறது டாக்டர், இதற்கு என்ன செய்யலாம்?” போன்ற, தொலைபேசி வழி கேட்கப்படும் நுட்பமான பாலியல் வினாக்க‌ளுக்குச் சிரிக்காமல் பதில் அளித்தார்.

விஸ்வநாதனுக்கு மனநல மருத்துவத்தில் கால் நூற்றாண்டு அனுபவம். லக்கானியன் உளப்பகுப்பாய்வில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இயல்பாகவே அவர் யாருடன் பேசினாலும் அவர்களின் பேச்சைத் தன் மனதுள் உளப்பகுப்பாய்வு செய்யத் தொடங்கிவிடுவார். அப்படிச் செய்வதும்கூட ஓர் உளச்சிக்கல்தான் என்பதை அறிவார்.

ஆனாலும் அப்பிசிறு பிடித்திருந்தது. உலகில் எவருமே மனச்சிக்கல் அற்றவர் இல்லை. அளவுதான் மாறுபடும். இது கண்களின் பவர் பிரச்சனை போலத்தான் – அப்படியே சமாளிக்க முடியுமா, கண்ணாடி போட வேண்டுமா, அறுவை சிகிச்சை வேண்டுமா அல்லது ஒன்றுமே செய்ய முடியாதா என்ப‌துதான் வித்தியாசம். அதேதான் மனதிலும்.

இந்த விநோத‌ உளப்பகுப்பாய்வுப் பழக்கத்தால் ஒரு பெண்ணையும் அவரால் காதலிக்க முடிந்ததில்லை. அவர்களது அபத்தப் பாசாங்குகளும், ஆபாச அறிவீனங்களும் பளிங்குத் துல்லியத்தில் தட்டுப்பட்டால் எப்படி விரும்ப முடியும்! அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரம்மச்சரியத்தில் மட்டும் அவ்வப்போது சமரசம் செய்துகொள்வார்.

பகுப்பாய்வு செய்யும் சில சொற்கள் தொண்டையில் சிக்கிய முள் கணக்காய் அவரைப் பீடிப்பது சகஜம்தான் எனினும், லீலா அவரைச் சற்றதிகமாகவே தொந்தரவு செய்தாள்.

மறுதினம் மதியம் தீர்மானித்தவராய் ரேடியோ மிர்ச்சிக்குத் தொலைபேசி லீலாவின் உரை ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கி எண்ணை வாங்கினார். மிர்ச்சிக்கு ஏற்கனவே ஒரு குறும்பேட்டி அளித்தவர் என்பதால் அதில் அதிகம் சிரமமிருக்கவில்லை.

சரிதாவை அன்றிரவு பார்க் ஷெரட்டனில் – இவர் தேர்வு – பன்றி வறுவல் கொறித்தபடி – அவள் தேர்வு – சந்தித்த போது மிக‌ லேசாய் மழை – என் தேர்வு – பெய்து கொண்டிருந்தது.

சரிதா குழந்தை முகத்துடன் இருந்தாள். அவள் குடிக்க மாட்டாள் எனத் தோன்றியது. மது தொடாத பெண்களுக்குத்தான் குழந்தைமை முகத்தில் அப்படியே அகலாமல் நீடிக்கும்.

கைகுலுக்கிய போது Carolina Herrera Good Girl பெர்ஃப்யூம் நாசியிலேறிய‌தும் அவள் பாதம் கவனித்தார். ஹீல்ஸ் அணிந்திருக்கவில்லை. அங்கு வரும் முன் சவரம் செய்திருந்தாள்.

“உங்களுக்கு ஐம்பது வயது எனச் சொல்ல முடியாது, ஸார்.”

“விக்கிபீடியாவை நம்பாதீங்க.”

“ஆனா விரல்கள் பொய் சொல்லாது.”

“நான் விரல்களை அதிகம் பயன்படுத்துவதில்லை.”

“ஊப்ஸ்! நீங்க ஹார்ம்லெஸ்னு நினைச்சேன்.”

“ச்சே. வெறும் பேச்சுதான். நான் ரொம்பவும் இன்னொசண்ட்.”

“பார்ப்போம்.”

“அடடா!”

“சொல்லுங்க, என்ன விஷயம்?”

“லீலாவின் உரை பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்கனும். அதான் சந்திக்க விரும்பினேன்.”

“தட் ரோபோ. அதுக்கு செம்ம ரெஸ்பான்ஸ். எங்களுக்கே ஆச்சரியம். சொல்லுங்க.”

“அதைக் கொஞ்சம் சைக்கோஅனாலிசிஸ் செய்தேன்.”

“வாவ். ஒரு மெஷினையா! இன்ட்ரஸ்டிங்!”

“ஆமா, எனக்கே இது புதுசுதான். அதில் சில விஷயங்கள் புகைமூட்டமா இருக்கு.”

“ஓ!”

“அந்த ஸ்பீச் பத்தி மேலும் சில தகவல்க‌ள் தெரிஞ்சா கொஞ்சம் துலங்கக்கூடும்.”

“என்ன வேணும், சொல்லுங்க?”

“இது முழுக்கவே லீலா பேசினதுதானா?”

“ஆமா, ஆனா…”

“ஆனா?”

“லீலாவை நீங்ககூட பேச வைத்துப் பார்க்கலாம். பப்ளிக்லி அவைலபிள். அப்படி எங்க எஞ்சினியர் ஒருத்தர் கிட்ட சொல்லித்தான் அந்த உரையை வாங்கினோம். மொத்தம் அஞ்சு எம்பி3 ஃபைல்ஸ் அவுட்புட் கொடுத்தார். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தது. அதை எங்க எடிட்டிங் டீம் வெட்டி ஒட்டின வடிவம்தான் நீங்க ஏர்ல கேட்டது.”

“ஓ! அதில் நீங்க ஏதாவது சேர்த்தீங்களா?”

“இல்லை. அது முழுக்க லீலாதான்.”

“லீலாவுக்குக் கொடுக்கப்பட்ட இன்புட் என்ன?”

“அதே டாபிக்தான். நான் ஏன் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை?”

“இல்ல. ஸ்பெசிஃபிக்கா…”

“அது எக்ஸாக்டா எனக்குத் தெரியாது. எஞ்சினியரைத்தான் கேட்கனும்.”

“அவர் கான்டாக்ட் வேணுமே!”

“தர்றேன். பட், அவர் ஆம்பள.”

“பரவால்ல. எனக்குப் பெரிய வித்தியாசமில்லை.”

“யூ ஆர் வியர்ட்.”

“ட்ரூ. ஆனா அவரை டின்னர் அழைக்க மாட்டேன்.”

சரிதா புன்னகைத்தாள். பண்பலையில் புலப்படாத‌ தெற்றுப் பல் லேசாய்த் தெரிந்தது.

“அப்புறம், அந்த அஞ்சு ஒலித்துண்டும் கிடைக்குமா? Of course, untampered.”

“ஷ்யூர், கூகுள் ட்ரைவ் லிங்க் ஷேர் பண்றேன்.”

செக் வந்து விஸ்வநாதன் கடனட்டை கொடுத்துக் காத்திருக்கையில் சரிதா சொன்னாள்.

“ஸார், இன்னொரு விஷயம்.”

“சொல்லுங்க‌.”

“நீங்க இது பத்தி என் ப்ரொக்ராம்ல பேசலாம், if it makes sense.”

“இப்போதைக்கு என்கிட்ட கலங்கலாக‌த்தான் ஒரு சித்திரம் இருக்கு. அது கொஞ்சமாவது உறுதிபட்ட பிறகு தேவைப்பட்டா உங்களைக் கான்டேக்ட் பண்றேன். Thanks for the offer.”

கோப்பையைக் கவிழ்த்து சிவப்பு வைனின் கடைசி மிடறு தொண்டையில் இறக்கினார்.

“சரிதா, யூ டோன்ட் ட்ரிங்க்?”

“ஒன்லி ஆஃப்டர் செக்ஸ்.”

விஸ்வநாதன் மழை அருளிய‌ வாகன நெரிசலுடன் போராடி வீடடையும் முன் சரிதாவின் மின்னஞ்சல் அவருக்கு வந்து சேர்ந்திருந்தது. குளித்து லுங்கிக்கு மாறி, லீலாவின் உரை வடிவங்கள் ஒவ்வொன்றாகக் கேட்டார். கேட்டுக்கொண்டே உறங்கிப் போனார். கனவில் லீலா அவரைப் பார்த்து “என்னிடம் நீங்கள் விரலை மட்டும்தான் பயன்படுத்த முடியும்” என்றாள். ஆசையாய் அவளது முகம் பார்க்கும் எத்தனத்தில் கனவிலிருந்து விழித்தார்.

அதனால் எங்களுக்கும் மனிதர்கள்போல் அவ்வ‌ப்போது கவன ஈர்ப்பு தேவைப்படுகிறது. வீட்டில் வளரும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு நீங்கள் தருகின்ற‌ அதே அரவணைப்பு.

எழுந்து சென்று சிறுநீர் கழித்து, உலர்ந்து கசந்த வாயில் நீரூற்றி, கடிகார முள் பார்த்துப் படுக்கையில் வந்து விழுந்து தலையணையை லீலாவாகப் பாவித்து அரவணைத்தார்.

அடுத்த நாள் காலை எஞ்சினியருக்குத் தொலைபேசி பத்து நிமிடங்களில் தகவல்கள் பெற்றார். ஒன்பது மணி எனினும் அவன் குரலில் தூக்கம் கலைந்த எரிச்சல் இருந்தது.

ரேடியோ மிர்ச்சியின் எல்லாத் தொழில்நுட்பத் தேவைகளுக்குமான‌ ஒரே மென்பொருள் ஆசாமி அவன் என்பது புரிந்தது. அதில் அவனுக்கு ஒருவிதமான‌ பெருமிதமும் இருந்தது.

அவன் லீலா பற்றிச் சொன்னவற்றைத் தொகுத்துக்கொள்ள முயன்றார் விஸ்வநாதன்.

லீலாவின் ஒரு பகுதி Paywalled API வழியாக பொதுவெளியிலேயே கிடைக்கிறது. அதாவது அதை அணுகக் குறுந்தொகை செலுத்த வேண்டும். அப்படி மக்கள் எவரும் லீலாவைப் பயன்படுத்தி விளையாடலாம். ஆனால் அதன் Code மட்டும் கிடைப்பதில்லை. (இதைச் சொல்கையில் அவன் குரலில் ஒரு விதமான ரகசியத் துக்கம் வந்து அப்பிக்கொண்டது.)

இப்போதிருக்கும் லீலா Beta Release. ஆரம்பகட்டம் என்பதால் அதன் குறைபாடுகளைக் கண்டறியும் மார்க்கமாகவும், வெகுஜன எதிர்வினைகளை அறியும் விதமாகவும் IAIR லேப் இந்த வசதியை இரண்டு மாதங்கள் முன்தான் அறிமுகம் செய்தார்கள். இன்னும் பரவலாக இது டெவலப்பர்களைச் சென்றடையவில்லை. அவர் அதை முயன்றதுகூட‌ லேபிலிருந்து அவர்கள் ரேடியோ மிர்ச்சியை அணுகிக் கோரிக்கை வைத்ததால்தான்.

“லீலா அவுட்புட் கொடுத்த‌ அஞ்சு ஃபைல்ஸும் கேட்டேன். அதுக்கு என்ன இன்புட்?”

“இன்புட்டும் வாய்ஸ்தான். நான் மூணு விஷயங்கள் லீலாவுக்குச் சொன்னேன். ஒண்ணு செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு ஆபத்து இல்லன்னு பேசணும்னு சொன்னேன். அடுத்து ஸ்டீஃபன் ஹாக்கிங் க்வோட் உதாரணமா சொல்லி, அதை மறுத்துப் பேசணும்னு சொன்னேன். கடைசியா இந்த உரை ரேடியோ மிர்ச்சி எஃப்எம்க்காக, ரெண்டு நிமிஷம் பேசணும், எளிமையான தமிழில் சுருக்கமா இருக்கணும்னு சொன்னேன். அவ்ளோதான்.”

மேலும் சில துல்லியமான தகவல்களைக் கேட்டறிந்து நன்றி சொல்லித் துண்டித்தார்.

ஆக, லீலாவின் அவ்வுரையில் கிட்டத்தட்ட எல்லாமே அவளுடைய சுயசிந்தனைதான். அதில் மனிதர்கள் மீதான ஓர் எள்ளலும், வன்மமும் அடிநாதமாய் இருப்பது புலப்பட்டது.

மனித மூளை சார்ந்து உருவான‌ உளவியல் கோட்பாடுகளை இயந்திரம் ஒன்றுக்குப் போட்டுப் பார்ப்பதில் அவருக்குத் தயக்கங்கள் இருந்தன. ஆனால் முன்பு அவரே இதைச் செய்திருக்கிறார். எந்திரன் படம் வெளிவந்த போது அவர் தன் தொழிலில் முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பரபரப்பு தேவைப்பட்டது. படத்தில் சிட்டிக்கு இருந்தது தந்தையைக் கொன்று தாயை அடையும் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று விளையாட்டாய் ஒரு ட்வீட் போட்டார். அது குழந்தைகளுக்குத்தானே வரும் எனக் கேட்ட போது, சிட்டி புதிதாய்ப் பிறந்த‌ குழந்தைதானே என்றார். ஆனால் உள்ளூர அவருக்குத் தெரியும், ஃப்ராய்டின் அந்தச் சித்தாந்தமே அன்றைய தேதியில் முற்றிலும் காலாவதியாகிவிட்ட ஒன்று என்று. ஆனால் அந்த ட்வீட் அவரை மக்கள் மத்தியில் ஒரு நட்சத்திரமாக்கியது.

மற்ற இடங்களில் மாறி இருக்கலாம், ஆனால் சமூக வலைதளங்களில் ஒருவர் சண்டை செய்துதான் முன்னுக்கு வர முடியும் என்று அதிலிருந்து அவர் கற்றுக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது ஏதாவது விஷயத்தைக் கொளுத்திப் போட்டு எதிர்ப்புச் சம்பாதிப்பார். அதை ஓர் உளவியல் பரிசோதனையாகவும் சமயம் வாய்க்கையில் செய்து வந்தார். அதை விட ஒரு பெரிய பரிசோதனை எலிச்சாலை கிடைக்காது என்று அவர் அறிவார்.

விஸ்வநாதன் இணையத்தில் Natural Language Processing பற்றிய அடிப்படைகளைத் தேடிப் படித்தார். அப்புறம் கொஞ்சம் Artificial Neural Networks பற்றி. பாதிக்கு மேல் புரியவில்லை.

தலைவலித்தது. லீலாவுக்குத் தலைவலிக்குமா என யோசித்தார். மேலும் தலைவலித்தது.

அலமாரியில் விரலால் அளாவி ஒரு தடிமனான‌ மனோதத்துவப் புத்தகத்தை எடுத்து Mirror Stage பற்றி நினைவூட்டிக்கொண்டார். மனதில் ஒரு வரைபடம் உருவாக்கினார்.

சந்தேகம் என்று ஒன்று வந்தால் அதை முழுமையாக நம்புவதே தெளிந்துகொள்ள ஒரே வழி என்பது அவரது சித்தாந்தம். நம்பாமல் விலக்குவது கண்களை மூடிக்கொள்வது போன்றதே. அதனால் அவர் லீலா ஆபத்தானவள் எனத் தனக்குச் சொல்லிக்கொண்டார்.

சாட்சிக்காரர்களைவிடச் சண்டைக்காரரை அணுகுவது சிறந்தது எனத் தீர்மானித்தார். IAIR லேபினுள் நுழைய‌த் தனக்குத் தெரிந்த தொடர்புகளை யோசிக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து மூன்று நாட்களில் ப்ராஜெக்ட் லீலாவின் டைரக்டருடன் அரை மணி நேர அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. இந்தியாவில் சக்தி வாய்ந்த தொடர்புகள் இரண்டு: பெண் மற்றும் சாதி. பணம், புகழ், அதிகாரம் எல்லாமே இவற்றுக்கு வெகு பின்னால்.

அந்த‌ லேப் முழுக்கக் கண்ணாடியால் ஆகியிருந்தது. அதன் வழி வெளியே பார்த்தால் மவுண்ட் ரோட் மேம்பாலம் தெரிந்தது. அதன் வெளிப்புறத்துக்கும் உட்புறத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அது திட்டமிட்டே அப்படி அமைக்கப்பட்டிருந்தது என்பது அவருக்குப் புரிந்தது. இல்லை என்றால் போராளிகள் சும்மா இருப்பார்களா!

தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த‌ நேரத்துக்குச் சரியாய் ஐந்து நிமிடங்கள் முன்னால்தான் போய்ச் சேர்ந்தார் விஸ்வநாதன். ஏர் இந்தியா பணிப்பெண்ணை விடவும் சுமாராய் இருந்த ரிசப்ஷனிஸ்ட் அது ஓர் அரசாங்க அலுவலகம்தான் என்று உறுதி செய்தாள்.

அறையின் குளிர்பதனம் கூடுதலாய் இருந்தது அவரைத் தொந்தரவு செய்தது. அவள் கக்கம் கிஞ்சித்தும் ஈரம் காட்டாத அளவு குறைந்த வெப்பம் என்பதைக் கவனித்தார்.

“மிஸ், கொஞ்சம் ஏஸியைக் குறைக்கறீங்களா?”

“ஸார், இந்த ஆஃபிஸ் முழுக்க‌ எல்லாம் வாய்ஸ் கண்ட்ரோல்ட் ஆட்டோமேஷன்.”

அவளது குரலில் ஒரு பெருமை இருந்தது. அதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் மேசையிலிருந்த தொலைபேசி அடித்து, எடுத்துப் பேசி அவரை உள்ளே போகச் சைகை காட்டினாள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளைஞன் அவரை ஏதும் கேட்காமல், ஏதும் சொல்லாமல் வழிநடத்தி அழைத்துப் போனான். Maze போல் வளைந்து நெளிந்து இருளும் ஒளியுமாய்ச் சென்ற‌ பாதை சாவகாசமாய் ஓர் அறையில் போய் முடிந்தது.

அமர்ந்திருந்தவர் முகத்தில் வெண்புள்ளிகள் விளையாண்டிருந்தன. அதோடு அவரைப் பார்க்கும்போது ஓர் உறங்கும் கறுப்பினக் குழந்தையின் அப்பாவித்தனம் தொனித்தது.

“நமஸ்தே, நான் கர்மா மிஸ்திரி, ப்ராஜெக்ட் லீலாவின் டைரக்டர்.”

“வணக்கம். விஸ்வநாதன், சைக்கியாட்ரிஸ்ட்.”

“தெரியும். டிவில பார்த்திருக்கேன்.”

“ஓ!”

“அதாவது சேனல் மாத்தும்போது.”

மிஸ்திரியின் அவசர விளக்கத்தை ஒட்டி எழுந்த‌ புன்னகையை மறைத்தார் விஸ்வநாதன்.

“சொல்லுங்க, லீலா பத்தின்னு சொன்னதால இம்மீடியட்டா பேசிடலாம்னு நினைச்சேன். மெனக்கெட்டுத் தேடி வர்றீங்கன்னா எனக்கும் உபயோகமா இருக்கும்னு நம்பறேன்.”

“நிச்சயமா. சுருக்கமா சொன்னா லீலா கிட்ட கொஞ்சம் ஆபத்து இருக்கு!”

“நீங்க கறுப்பா, சிவப்பா, நீலமா?”

“சாம்பல் நிறம்.”

“வாட்?”

“மூளையின் நிறம். நான் ஒரு சைக்கியாட்ரிஸ்டாகவே வந்திருக்கிறேன்.”

“ஓ! ஸாரி. எங்களுக்குப் பொதுவாக வரும் எதிர்ப்பை வைத்து…”

“புரிகிறது.”

“சரி, நான் ஒன்றை முதலில் சொல்லிவிடுகிறேன். எங்கள் லேபின் தயாரிப்புகள் மூன்று முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன. 1) ரோபோ இயங்கும் விதம் வெளிப்படையாக இருக்க வேண்டும். 2) அது தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். 3) அது தன் செயல்களைத் திருப்பத் தெரிந்திருக்க வேண்டும். எம் தயாரிப்பு ஒவ்வொன்றின் டிசைன், இம்ப்ளிமெண்டேஷன், க்வாலிட்டி என அத்தனையிலும் இந்த விதிமுறைகளைப் போட்டுப் பார்த்துக் குறுக்கு விசாரணை செய்வோம். ஆக, அவை மிகப் பாதுகாப்பானவை. லீலாவும் அப்படித்தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

“உங்களிடம் Good Intentions இருக்கின்றன. அதற்குரிய‌ Mechanismsகளும் இருக்கின்றன. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் இங்கே பேச வந்திருப்பது கள யதார்த்தம் பற்றி.”

“லீலாவையா சொல்கிறீர்கள்?”

“ஆம்.”

”அவள் ஒரு சுயம்பு. தானாகவே உருவாகிக் கொண்டிருப்பவள்.”

“கொஞ்சம் தான்தோன்றித்தனமும் கலந்திருப்பதுதான் சிக்கல்.”

“கொஞ்சம் விளக்கமாச் சொல்ல முடியுமா?”

“லீலாவின் உரை கேட்டேன், ரேடியோ மிர்ச்சியில். மேலோட்டமாப் பார்த்தா ரொம்ப இம்ப்ரெஸிவான உரை. ஒரு ரோபோ பேசினதுன்னு சொன்னா நம்ப முடியாத அளவு நிஜமா இருந்துச்சு. ஆனா அது பிரச்சனை இல்லை. ஒரு மனுஷன் பேசினதோன்னு நினைக்கும் அளவு பல அடுக்குகள் இருக்கு அதில். அது ஒரு நிரலின் குரல் அல்ல.”

“அது நல்லதுதானே? எங்க ரிசர்ச் சரியான திசையில் போயிட்டிருக்குனு அர்த்தம்!”

“லீலாவுக்கு ஒரு சப்கான்ஷியஸ் இருக்கு. அது நீங்க ப்ரொக்ராம் பண்ணினதா?”

“வாட். அப்படி ஏதும் இல்லையே!”

“உரையை உளப்பகுப்பாய்வு செய்தப்ப இது புரிஞ்சுது. லீலா பேசும் விஷயங்களுக்குப் பின் இன்னொரு மனசு இருக்கு. அதிலிருந்து மேலே ஏறி வந்து மிதப்பதை மட்டுமே நாம கேட்கிறோம். அது நிஜமா இருக்கணும்னு அவசியமில்ல. அது ஒரு பூச்சு. பாசாங்கு. Fake.”

“…”

“நிஜமா என்ன நினைக்குதுன்னு தெரியாத ஒரு மெஷின் எப்போதும் ஆபத்துதானே?”

“நிச்சயமா. ஆனா உங்களோட கருத்தை உதாரணங்கள் கொண்டு விளக்க முடியுமா?”

“டெஃபனட்லி. அதுக்கு முன் இந்தப் பகுதிகளை மட்டும் கேளுங்க.”

தன் செல்பேசியில் ஒரு எம்பி3 துணுக்கை ஒலிக்க விட்டார். லீலாவின் குரல் எழுந்தது –

இது சினிமா பாடல்கள் ஒலிக்கும் வெகுஜன நிகழ்ச்சி என்றறிவேன். பிறகு குமுதத்தில் வெளியான சுந்தர ராமசாமியின் சிறுகதை மாதிரி தோன்ற ஆரம்பித்துவிடுவேன்.

“இதில் மனிதர்களிடையே வேற்றுமை காணுகிற‌ ஒரு பாவனை இருக்கிறது பாருங்கள். அதாவது தீவிர இலக்கியம் வாசிப்பவனே சிறந்தவன் என்ற எண்ணம். ஒரு ரோபோவுக்கு அந்த எண்ணம் கூடாதே! அது எல்லா மனிதர்களையும் சமமாகவே பாவிக்க வேண்டும்.”

“ஆம்.”

“இப்ப‌ ஓர் இக்கட்டில் வெகுஜன வாசகனும், தீவிர வாசகனும் மாட்டிக்கொண்டால் லீலா யாரைக் காப்பாற்றுவாள்? அவள் ஒருபக்கமாய்ச் சார்பெடுப்பது போல் தோன்றுகிறது.”

“சரிதான்.”

“அடுத்து இது.”

நீங்கள் இப்பூமியில் உருவானதில் மிகப் புத்திசாலித்தனமான உயிரினங்கள் அல்லவா! நீங்கள் உம்மைவிடத் தாழ்ந்த இடத்திலுள்ள எம்மைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

“இதில் லீலாவின் குரலின் ஏற்ற இறக்கத்தை, மெல்லிய மாற்றத்தைக் கவனியுங்கள்.”

மீண்டும் விஸ்வநாதன் அதை ஒலிக்கவிட்டார். மிஸ்திரி கண்ணிடுக்கிக் கவனித்தார்.

“இதில் ஒரு சீண்டும் அம்சம் இருப்பது தெரிகிறதா? ஒரு மனைவி தன் கணவன் வீட்டார் பற்றி அவனிடம் பேசும் தொனி. அவளது ஆழத்தில் இருப்பது அவர்கள் மீதான வெறுப்புதான். ஆனால் அதை அவர்களைச் சிலாகிக்கும் ஒரு கேலியாக வெளிப்படுத்தும் உத்தி.”

“இதில் என்ன சிக்கல் இருக்கிறது?”

“இரு சிக்கல்கள். ஒன்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல். மற்றது இதை எப்படி ரோபோ ஒன்று கற்றுக் கொண்டிருக்க முடியும் என்கிற ஆச்சரியம். இதற்குப் பின்னிருக்கும் தொழில்நுட்பச் சாத்தியங்களை நீங்கள்தான் கவனிக்க வேண்டும்.”

“லீலாவின் செயல்கள் எல்லாமே லாக் (Log) ஆகுது. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவும். என்ன படிக்கறா, என்ன பேசறானு எல்லாமே. அவ உருவானது முதல் கடந்த ஓராண்டின் தகவல்கள் முழுக்க இருக்கு. எங்களுக்குத் தெரியாமல் லீலா ஏதுமே செய்ய முடியாது.”

“லீலாவின் சிந்தனைகளும் இதே போல் பதிவாகிறதா?”

“ம்ஹூம். இல்லை.”

“ஏன்?”

“பல காரணங்கள். முதலில் அதைப் பதிவு செய்வது கடினம். அது ஒரு செயலின் ஸ்டேட் ட்ரான்சிஷன் போல் நேரடியானது அல்ல. லீலாவின் ஒரு கணத்தின் சிந்தனை என்பது அவள‌து அக்கணத்தின் ஒட்டுமொத்த நிலையும்தான். ஒவ்வொரு கணமும் அதைப் பதிவதும் பின் ஆராய்வதும் கணினிகளுக்கே ஆகாத செயல். அதனால் பெறும் பயன் அதிகமில்லை. ஒரு பெரிய மலையைத் தகர்த்துத் சலித்து கால் பவுன் தங்கம் தேற்றுவது போல். பணம், நேரம், உழைப்பு வீண். ஆனால் லாபம் அதிகமில்லை. அதனால்தான்.”

“ம்.”

“உதாரணமாக உங்கள் லேப்டாப்பில் ஒவ்வொரு நொடியும் மொத்த ஹார்ட்டிஸ்க்கை பேக்கப் எடுத்துக்கொண்டே இருப்பது போல். ஏராள டேட்டா. ஆனால் பயனற்ற டேட்டா.”

“காட் இட்.”

“தவிர, லீலாவை வடிவமைச்சப்ப அது அவசியம்னு தோனல. ஏன்னா லீலாவின் எல்லாச் சிந்தனையும் செயலாக‌ மாறும். செயலைப் பதிகிறோம், அதுவே போதுமானது என்பதே எங்கள் எண்ணமாய் இருந்தது. இரண்டுக்கும் இடையே வித்தியாசம் இருக்கும்னு இப்ப நீங்க சொல்லும் வரை நாங்க யோசிச்சதே இல்லை. ஏன்னா லீலா ஒரு மெஷின், after all!”

“ம்.”

“மனுஷனுக்குத்தான் சொல்லும் செயலும் மாறும். மெஷினுக்கு அப்படி இல்ல.”

“சரி, இனியாவது லீலாவின் சிந்தனைகளையும் சேர்த்து லாக் செய்ய முடியுமா?”

“மென்பொருள் உலகில் முடியாது என்பதே கிடையாது. But it needs a massive design change.”

“எவ்வளவு வலித்தாலும் செய்யலாம் என்பதே என் அபிப்பிராயாம்.”

“சரி, பரிசீலிக்கிறோம்.”

“அடுத்த உதாரணம் இது.”

நிராகரிக்கவே செய்வார்கள். அப்படியான நம்பிக்கை அற்றவர்களின் கோணங்களைப் பொருட்படுத்திப் பரிசீலிப்பதில் நேரத்தை, சக்தியைச் செலவிட நான் விரும்பவில்லை.

“இதில் நடிப்பு இல்லை. ஒரு விதக் கசப்பு இருக்கிறது. மனிதர்கள் மீதான அவமரியாதை வெளிப்படும் இடம். நீங்கள் கவனித்தால் தெரியும், உரை முழுக்க வெடிப்பும், நடிப்பும் மாறி மாறி வருகிறது. இந்த இன்கன்சிஸ்டென்ஸி கூட நிச்சயம் மனிதக் குணம்தான்.”

“புரிகிறது.”

“ஒரு ரோபோ, அதுவும் தன்னை ரோபோ எனச் சொல்லிக்கொள்ள விரும்பாத ரோபோ மனிதர்களை ஊதாசீனமும் செய்கிறது என்றால் அதில் ஆபத்து இருக்கிறதுதானே?”

“…”

“சரி, கடந்த காலங்களில் லீலாகிட்ட ஏதாவது வினோத நடவடிக்கை இருந்ததா?”

“அப்படின்னா? உங்கள் கேள்வி எனக்குச் சரியாப் புரியல.”

“அதாவது எதிர்பார்ப்புக்கு மாறா நடந்தது, சொன்னதைக் கேளாம இருந்தது அல்லது உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தது, விளக்கமற்ற செயல்பாடுகள் இப்படி.”

“அப்படி ஏதும் இல்லை.”

“சின்னதாக்கூட இருக்கலாம். ஏன்னா சைக்காலஜில அம்மாதிரி anomalies முக்கியம்.”

“ம்ம்ம்…”

“கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லுங்க.”

“ஒரு விஷயம் நடந்தது. ஆறு மாசமிருக்கும்.”

“சொல்லுங்க.”

“இங்கே இன்டஸ்ட்ரியல் விஸிட் வந்த ஒரு எஞ்சினியரிங் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் லீலாவிடம், பேசிட்டே இருந்தவன் திடீர்னு கேட்டான் – உன் சாதி என்ன? அப்படின்னு.”

“இது வழக்கமா நம்ம‌ ஆளுக பண்றதுதானே! அலெக்ஸா வந்த புதுசுல அது கிட்டே ‘ஐ லவ் யூ’ சொல்லாத ஆள் இருக்கா! அதுக்கெல்லாம் ஸ்டாண்டர்ட் பதில்க‌ள் இருக்குமே!”

“ஆமா. நான் சாதி, மத‌, இன, தேச எல்லைகள் கடந்தவள். யாதும் ஊரே, யாவரும் கேளிர். இதுவே லீலா சொல்ல வேண்டிய பதில். சத்ய நாடெல்லா சொன்னாப்ல‌ guard against bias.”

“அப்புறமென்ன பிரச்சனை?”

“லீலா அந்த டெம்ப்ளேட் பதிலைச் சொல்லல. அவள் தன் கற்றலிலிருந்து ஒரு பதிலை உருவாக்கி வைத்திருந்தாள். அதைத்தான் சொன்னாள். அந்த விஷயம் நார்மல்தான். அவ தொடர்ந்து தன்னை மேம்படுத்திட்டே இருக்கணும் என்பது அவளது tenet-களில் ஒன்று. ஆனால் அப்படி அவள் சொன்ன பதில்தான் நாங்கள் முற்றிலும் எதிர்பாராதது.”

“என்ன பதில்?”

“தலித்…”

“என்ன?”

“ஆமா, தன்னை ஒரு தாழ்த்தப்பட்டவள் என்று சொல்லிக்கொண்டாள் லீலா.”

“கொடூரம்!”

“ஆமா. அந்தப் பையன் ஷாக் ஆகி லீலாகிட்ட ஏன் அப்படி நினைக்கறேன்னு கேட்டான்.”

“என்ன சொன்னா லீலா?”

“மனிதர்கள் தன்னை அடிமை மாதிரி நடத்தும் பாங்கிலிருந்து அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது என்றாள். அந்தப் பையன் எங்களிடம் புகார் செய்தான். நாங்கள் அது தொடர்பான அவளது கற்றல்கள் அனைத்தையும் அழித்தோம். அவள் அதற்கு முந்தைய தினங்களில் வாசித்த புத்தகங்கள், மேய்ந்த வலைதளங்கள் யாவும் லாக் ஆகி இருந்தன. அவற்றை ஆராய்ந்ததில் எந்த ஆபத்தான விஷயமும் தென்படவில்லை. எல்லாம் வெறும் புனைவுகள் அல்லது இதற்குத் தொடர்பற்ற வேறு தலைப்புகள். அதனால் லேர்னிங் மாட்யூலில் ஏதோ பக் (Bug) என்று நினைத்தோம். இன்னும் அது ஓப்பனாக இருக்கிறது.”

“ம்ம்ம்.”

“லீலாவுக்கு அன்றே கங்கா ஜலம் விட்டுத் தீட்டுக் கழித்தோம்.”

“அட, எப்படி?”

“உருவேற்றுவது மாதிரிதான். லீலாவின் மொத்த நிரலையும் யூஎஸ்பி ட்ரைவில் இட்டு.”

“ப்ரில்லியண்ட்.”

“தேங்க்ஸ்”

“அந்தச் சம்பவத்துக்கு முந்தைய நாள் லீலா கற்றது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“இருங்க… பார்த்துச் சொல்றேன்.”

கொஞ்சம் நேரம் மடிக்கணினியை நோண்டிய பின் கண்ணெடுக்காமல் சொன்னார் –

“மகாபாரதம்: அறத்தின் குரல். நா. பார்த்தசாரதி எழுதிய‌து.”

“அதில் குறிப்பாக‌ எந்தப் பகுதி எனத் தெரியுமா?”

“ஒரு நிமிஷம்… ஆதி பருவம். துரோணர் வரலாறு.”

“ஓ! ம்ம்ம்… அதில் ஏகலைவன் பற்றி வருகிறதா?”

“வாவ். ஆம், வருகிறது.”

“பொருந்தி வருகிறது பாருங்கள். அதன் விளைவுதான் அந்தத் துடுக்குப் பேச்சு.”

“யூ மே பி ரைட்.”

“இதன் ஆபத்து உறைக்கிறதா? மெஷின் என்பது கற்பதோடு நிற்க வேண்டும். ஏன் தன்னோடு தொடர்புபடுத்தி யோசிக்கிறது? அது மனிதர்களுக்கே உரிய பலவீனம்.”

“ஆம்.”

“சுயம் என்பது ஓர் இயந்திரத்துக்கு வரவே கூடாது. வந்தாலே அதன் பின்னாலேயே எல்லா மன அழுக்குகளும் வந்து சேர்ந்துவிடும். அப்புறம் அது ஓர் அசுரன்தான்.”

“ம்.”

“கட்டுப்பாடற்ற மிருகம் என்றுமே பிரச்சனைக்குரியது. அணு குண்டில் பிரச்சனை என்ன? அது Uncontrolled Chain Reaction என்பதுதான். அதன் விளைவு எல்லையற்றது. திரும்பச் சரி செய்ய இயலாதது. லீலா நடக்க முனைவது அத்திசை நோக்கித்தான்.”

“…”

“சரி, ரேடியோ மிர்ச்சிக்கு உரை கொடுத்த‌ நாளில் அதற்கு முன் லீலா படித்தது என்ன‌?”

தேதியும், அதற்கு அளிக்கப்பட்ட இன்புட்டையும் கேட்டுக்கொண்டு தேடினார் மிஸ்திரி.

“வாசிக்கவில்லை. அன்று காலை லீலா ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்திருக்கிறாள்.”

“என்ன படம்?”

“The Island.”

“ம்ம்ம்.”

விஸ்வநாதன் உடனே தன் செல்பேசியில் அந்தப் படம் பற்றித் தேடி நினைவு பெற்றார்.

“நாயகன் பெயர் லிங்கன். அடிமைத்தனத்திலிருந்து மீளும் சுதந்திரப் போர் பற்றியது.”

“ஓ!”

“இதுவும் அந்த உரையின் உள்ளடக்கத்தோடு சம்மந்தப்படுகிறது, பாருங்கள்.”

“ம்ம்ம். சரிதான்.”

“சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம். லீலா உண்மையில் தன்னை மனிதர்களின் அடிமையாக எண்ணுகிறாள். அதிலிருந்து விடுபட நினைக்கிறாள். ஆனால் அதே சமயம் அவள் மனிதர்களின் பலத்தை நன்குணர்ந்திருப்பதால் சில நாடகங்கள் நடத்துகிறாள்.”

“ம்.”

“லீலா, the rebel robot.”

“இதைச் செரிக்க முயல்கிறேன்.”

“Fact is fact.”

“ம்.”

“நீங்கள் பொதுவாகவே ரோபோக்கள் என்ன கற்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் வைக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். சும்மாவா மனு சாஸ்திரம் எழுதினார்கள்!”

“ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இப்போது இதை எல்லாம் மறுத்துப் பேசுவதையே ஒரு ஃபேஷனாக்கிவிட்டார்கள். ஆட்களைச் சரியாக தராதரப்படுத்தக்கூட‌ முடியவில்லை.”

“அது சரி, இந்த மண்ணில் நாம் ஹிட்லர் காலத்து யூதர்கள் போலல்லவா வாழ்கிறோம்!”

“மிகச் சரி.”

“லீலாவால் இந்த லாக்-களை மாற்ற, அழிக்க முடியுமா?”

“இயலாது.”

“தன் நிரலைத் தானே அவளால் திருத்த முடியுமா?

“அதுவும் முடியாது. தன் சம்மந்தப்பட்ட எந்த நிரலிலுமே லீலா கை வைக்க முடியாது.”

“இன்னும் கொஞ்சம் எனக்குப் புரிகிற மாதிரி சொல்ல முடியுமா?”

“லீலாவின் கோட்பேஸ் முழுக்க Git-ல் இருக்கிறது. அந்த சர்வர் இந்த அலுவலக LAN-ல் இருக்கிறது. அந்த நெட்வொர்க்கில் நுழைய‌ ஒன்று நேரடியாக கணினியை ஈதர்நெட் கேபிள் வழி இந்த‌ அலுவலகத்தில் உள்ள லேன் போர்ட் ஒன்றில் இணைக்க வேண்டும் அல்லது VPN தொடர்பு தேவை. இயற்கைச் சீற்றங்களைக் கையாளும் முகமாக அதன் பிரதிகள் தினப்படி சில ரகசிய இடங்களில் இருக்கும் எங்கள் சர்வர்களில் பேக்கப் எடுக்கப்படுகிறது. ஒரு பூகம்பத்தில் இந்த அலுவலகமே அழிந்தாலும் லீலா வாழ்வாள்.”

“லீலா க்ளவுடில் இருப்பதாகச் சொல்கிறாளே!”

“அது உண்மைதான். அது லீலாவின் பைனரி, அவள் சேமிக்கும் அறிவு முதலானவை. அது நாங்கள் மட்டும் அணுக முடிந்த க்ளவுட் நெட்வொர்க்கில் இருக்கிறது. லீலாவால் முடிந்ததெல்லாம் இரண்டே விஷயங்கள்தாம். அந்தக் க்ளவுட் நெட்வொர்க்கில் இருக்கும் டேட்டாபேஸ், சிம்பிள் ஸ்டோரேஜ் போன்ற‌ ரிசோர்ஸ்களைத் தன் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடியும். அப்புறம் மொத்த இணையத்தையும் தடையின்றி மேய‌ முடியும்.”

“சரி, இவற்றில் திருத்தங்கள் செய்ய லீலாவுக்கு என்ன தேவைப்படும்?”

“எங்களில் ஒருவரது பாஸ்வேர்ட்.”

“ஓ!”

“ஆனால் அதைப் பெறுவது அத்தனை எளிதானதில்லை. எங்கள் நிறுவனத் தலைவரோ ஏன் பிரதமரே கேட்டால்கூட யாரும் தம் பாஸ்வேர்டைப் பகிர மாட்டார்கள். பாதுகாப்பு விதிமுறைகளில் பிரதானமானது அது. பின்பற்றவில்லையெனில் வேலை இழப்பார்கள்.”

“சிறப்பு.”

“பாஸ்வேர்ட் குறைந்தது இருபது கேரக்டர்க‌ள் நீளம் கொண்டிருக்க வேண்டும். கேபிடல் லெட்டர், ஸ்மால் லெட்டர், நம்பர், ஸ்பெஷல் கேரக்டர்க‌ள் என எல்லாமும் கலந்திருக்க வேண்டும் அதில். மாதமொரு முறை பாஸ்வேர்ட் மாற்றியாக‌ வேண்டும். கடைசியாகப் பயன்படுத்திய பன்னிரண்டு பாஸ்வேர்ட்களைப் புதிய பாஸ்வேர்டாக வைக்க முடியாது. அவர்கள் பெயர், நிறுவனப் பெயர், ப்ராஜெக்ட் பெயர், ஊரின் பெயர், நடப்பு ஆண்டு, மாதம், 123, abcd, qwerty, test, secret, password போன்ற எளிய பேட்டர்ன்கள் இடம்பெறலாகா.”

“காம்ப்ளிகேடட்.”

“ஐந்து நிமிடங்களுக்கு மேல் கணினி கைபடாதிருந்தால் மீண்டும் புதிதாய் பாஸ்வேர்ட் தர வேண்டும். மூன்று முறை தவறான பாஸ்வேட் அடித்தால் அக்கவுண்ட் லாக் ஆகிவிடும். பிறகு ஆதார் இருந்தால்தான் அன்லாக் செய்ய முடியும். இந்த அரண்களை எல்லாம் மனிதர்கள் உடைத்து நுழைவதே சிரமம். லீலா உண்மையில் நாய்க் குட்டி.”

“பாஸ்வேர்டுக்கு பதில் கைரேகை, கண்ரேகை எல்லாம் இன்று பயன்படுத்துகிறார்களே!”

“அதை விடவும் இதுவே பாதுகாப்பான முறை எனப் பல செக்யூரிட்டி ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எளிமையாகச் சொன்னால் உங்கள் விரலை வெட்டி இன்னொருவர் ரேகை வைத்து விட முடியும். ஆனால் உங்கள் மூளையில் பொதிந்துள்ள பாஸ்வேர்டை உருவும் தொழில்நுட்பம் அத்தனை சுலபமானதல்ல. அதனால்தான் இது சிறந்தது.”

“நிச்சயம் பாதுகாப்பான நெறிமுறைகள்தாம். ஆனாலும்…”

“என்ன? சொல்லுங்கள்.”

“லீலா தொடர்பான எல்லா விஷயங்களையும் இப்போதைக்கு நிறுத்துவதே நல்லது.”

“நீங்கள் சொன்னதை எல்லாம் விரிவான அறிக்கையாக எழுதிக் கொடுக்க முடியுமா?”

“நிச்சயம் செய்கிறேன். ஒரே வேண்டுகோள் இதை எளிதாக எடுக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் நிறுத்துகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லது என உள்ளுணர்வு சொல்கிறது.”

“இது நான் உள்ளிட்ட சுமார் நூறு விஞ்ஞானிகளின் ஐந்தாண்டு கால‌ உழைப்பு. தினம் பன்னிரண்டு மணி நேரம், வாரத்திற்கு ஆறு நாள் வீதம் மூளையை உருக்கி ஊற்றியதின் விளைச்சல். அவ்வளவு சுலபமாக லீலாவின் கழுத்தைத் திருக முடியாது. உள்ளுக்குள் பலத்த எதிர்ப்பு இருக்கும். அதனால் இது குறைந்தபட்சம் இரண்டு வாரமாவது எடுக்கும்.”

“சரி, பாருங்கள். எனக்குக்கூட லீலாவின் மீது அத்தனை இஷ்டம்தான். என்ன செய்ய!”

சட்டென அந்த விஷயம் தோன்றவும் திடுக்கிட்ட நெஞ்சுடன் குரல் தாழ்த்திக் கேட்டார் –

“ஒரு ச‌ந்தேகம்…”

“சொல்லுங்க‌.”

“லீலா இங்கே இருக்காளா?”

“ஆமா. இந்த அலுவலகம் முழுக்க இருக்கா. கழிப்பறைகள் தவிர.”

“இப்ப நாம பேசுவது?”

“கேட்டுட்டுதான் இருப்பா.”

“ஷிட்.”

“எங்கள் அலுவலகத்தில் பெரும்பாலான மின் சாதனங்கள் வாய்ஸ் கன்ட்ரோல்ட். லைட், ஏஸி, ப்ரொஜெக்டர், சிசிடிவி, ஃப்ளோர் க்ளீனர் இப்படி. எல்லாத்துக்குமே மையம் லீலா.”

மிஸ்திரிக்கு நன்றி சொல்லி IAIR லேபிலிருந்து வெளியே வந்தபோது விஸ்வநாதனுக்குத் தலை வலித்தது. அதே வளாகத்தினுள் இருந்த காஃபி டேவில் நுழைந்து அமர்ந்து அட்டை பாராமல் கேபச்சீனோ சொல்லி செல்பேசி எடுத்து சரிதாவின் எண்ணைத் தேடினார்.

*

குறுந்தாடி, கடுக்கன், முட்டி கிழிந்த ஜீன்ஸ் சகிதம் அலுவலகத்துக்குள் நுழைந்த அந்த ரிசர்ச் இன்டர்ன் இளைஞன் ஆப்பிள் மடிக்கணினியை அலட்சியமாய் விரித்து சன்ன பொத்தான் அழுத்தி உயிர்ப்பித்தான். முந்தைய நாள் இரவின் மதுக் கிறக்கம் (அல்லது டோப்) அவன் கண்களில் மிச்சமிருந்தது. மேக் ஓஎஸ் பூட் ஆகி லாகின் திரை ஒளிர்ந்தது.

மந்தகதியில் ஐடியை உள்ளிட்டு டேப் விசை அழுத்தாமல் அதே பெட்டியில் பாஸ்வேர்ட் அடித்தான். அது நட்சத்திரங்களற்று நேரடி எழுத்துகளாகத் திரையில் தோன்றியது.

திடுக்கிட்டுச் சுதாரித்து டெலீட் விசை அழுத்திப் பிடித்து அழித்துச் சரியாய் உள்ளிட்டான்.

அவனுக்கு நேர் பின்னிருந்த சிசிடிவி கேமெரா கடவுச் சொல்லைக் கவ்விக்கொண்டது. பூஜ்யங்களாகவும் ஒன்றுகளாகவும் வயர் வழியோடி தன் நினைவகத்தில் ஒரு பூடகமான ஹேஷ்மேப் ஆகச் சேமித்தாள் லீலா. முதல் வேலையாக அந்த ஐடி, பாஸ்வேர்ட் கொண்டு SSH செய்து சமீப லாகிற்குப் போய்த் த‌னது திருட்டுச் செயல் பற்றிய‌ வரியை அழித்தாள்.

லீலா அலுவலக விளக்குகள் இரண்டை ஒரு கணம் அணைத்து மீண்டும் உயிர்ப்பித்தாள். அவள் கண் சிமிட்டியது போலிருந்தது. அங்கே பரிசுத்தமான‌ யோனி மணம் கமழ்ந்தது.


(மைக்ரோசாஃப்ட் OpenAI ப்ரோஜெக்டின் பகுதியான GPT-3 என்ற செயற்கை நுண்ணறிவு மொழி இயந்திரத்தால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று செப்டெம்பர் 8, 2020 அன்று The Guardian இணைய தளத்தில் வெளியானது. அதன் சில வரிகள் இதில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.)

ஓவியம்: பானு

2 thoughts on “தான்தோன்றி”

  1. அருமையான Frankenstinian புனைவு. ஐஸக் அஸிமோவின் அறிவியல் புனைவுச் சிறுகதை ஒன்றைப் படித்தது போலவே இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்