வே.நி.சூர்யா கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

தியான மண்டபம்

மாலைவேளை.
மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தேன்
அடர்த்தியான இலைத் தொகுதிகளுக்குள் ஒரு சிட்டுக்குருவி மறைவதைப் பார்த்ததும்
யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது
அலைபேசியில் நண்பரை அழைத்தேன்
பதிலில்லை
மாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன்
நேரம் சரியாக 06:56

இப்போது
காற்று எல்லாவற்றையும்
தொட்டுக் கொண்டிருக்கிறது
ஆங்காங்கே மின்மினிகள் தலைகாட்டத் துவங்குகின்றன
ரத்தத்தில் மது மட்டம் கூடுவது போல ஆகாசம்
அடர்ந்து அடர்ந்து
சாம்பல் நீலம், இளஞ்சிவப்பு என
கருநீலத்திற்குள் விரைந்து கொண்டிருக்கிறது
இங்கு மட்டுமல்ல
பூமி முழுவதும்
தன்னந்தனியாக நீலப் பறவையொன்று
கண்களுக்கு வெளியே பதறிக் கொண்டிருக்கிறது
புதிர் நிறைந்த வானத்தை ஒரு படுக்கையென்றாக்கி
அயர்ந்திருக்கிறது நுரை நிலவு
பெயர் சொல்லாது சப்தங்களின் உதவியின்றி
காற்றில் ஒரு குரல்
திசைக்குத் திசை திரும்பிப்பார்க்கிறேன்
பூச்சிகள் ரீங்காரமிடுகின்றன
சட்டென ஒர் அமைதி சூழ்கிறது
மேல் படிக்கட்டுக்கும் கீழுள்ளதுக்கும்
பேதமற்று இருளில் ஒரே படிக்கட்டாக மாறுகிறது
நான் மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து
மெதுவாக வெளிவிடுகிறேன்
மரங்கள், தூரத்து மலைகள்,
பாறைகள், தாவரங்கள்,
மலர்கள், வண்டுகள்,
காலடிகள், நாய்கள்,
சருகுகள், தேரைகள்,
படிக்கட்டுகள், சுவர்கள்,
எல்லையற்ற நட்சத்திரங்கள், எட்டாத நிலவுகள்,
பால்கனிகள், கொடிகளில் ஆடும் ஈர உடைகள்,
வீடுகள், நாற்காலிகள் என
ஒன்றுவிடாமல் அத்தனையும்
மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன
இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது
அதனுள் நான் அமர்கிறேன்
என்னுடன் அங்கே அனைத்தும் அமர்கின்றன
தேவாலய மணிநாதமாகத் தொலைவிலிருந்து புறப்பட்டு
கீழறையில் ஒரு காகிதத்தில்
சொற்களாக அதனிடை வெற்றிடங்களாக
ஒரு கரத்தினால் எழுதப்படுகிறேன்
ஒர் அமைதி
நிறுத்தற்புள்ளி போல.


வாகனக் காப்பகம்

நள்ளிரவுக்குப் பிந்தைய வாகனக் காப்பகத்தில்
கண்டதுங்கடியதும் விழித்தெழுகின்றன, சாவியின்றி மனிதரின்றி.
உரிமையாளர் அதிர்ச்சியின் பல்லிடுக்கில் தன்னுணர்விழக்கிறார்.
ஒளிரும் முகப்புவிளக்குகளுடன் சட்டெனப் புறப்படுகின்றன சகலமும்:
இருசக்கர வாகனங்களின் கறுப்புப் படை
நெரிசல் வெளிக்குள் பெரும்புகைப்புயல்
அவ்வளவு உண்மையும் அடியோடு பிடுங்கப்படுமோ என்று
ஒருவரால் அலற மட்டுமே இயலும் இப்போது.
குளிர்பதனபெட்டியினுள் வைக்கப்பெற்ற தண்ணீர்ப் போத்தலென
கண்டவர்களெல்லாம் உறைய கூட்டம் மொத்தமாய் முன்னேறுகிறது
தன் மகனிடம் ஆளில்லாமல் வண்டி இயங்காதென்று வாதிட்டுகொண்டிருக்கும் தகப்பனை
நோக்கி.
ஈற்றில் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன அத்தனையும்.
அவரோ பேச்சை நிறுத்திவிட்டு
இவற்றைப் பார்க்கிறார் ஓர் உண்மை இன்னொரு உண்மையைக் காண்பது போல.
பல்லொளியாண்டுத் தொலைவு கண்டு வந்தவர்களென மெல்ல மெல்ல மீள்கிறார்கள்
உறைந்தவர்கள்.
பின் காற்றில் ஒரு ஹாரன் பேரலை:
அவருக்கு யாவும் சொல்லப்பட்டுவிட்டது.


புகைப்படம்: Karthick

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்