இறவாமை

14 நிமிட வாசிப்பு

Immortality (Jorge Luis Borges, Selected Non-Fictions)
ஹோர்கே லூயிஸ் போர்ஹேஸ்
தமிழில்: கோ.கமலக்கண்ணன்

வில்லியம் ஜேம்ஸின் இன்ன பிற நல்ல நூல்களைப் போலவே, The Varieties of Religious Experience நூலிலும் தனிமனிதனின் இறவாமை குறித்துப் பேச ஒரேயொரு பக்கத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளார். அவர், தன்னைப் பொறுத்தவரை அதைச் சிறிய பிரச்சனையாகவே கருதியதோடு, உலகின் பெரும்பகுதிக்கும், பொதுமக்கட்புத்தியில், “கடவுளே இறவாமையை உற்பத்தி செய்பவர்” என்ற கருத்து நிலைபெற்று, மதச்சிடுக்குடன் இந்தத் தனிமனித இறவாமை என்பதும் இரண்டறக் கலந்துள்ளது என்கிறார்.

இதிலுள்ள பகடியைப் புரிந்துகொள்ளாமல், டான் மிகுவல் டி உனாமுனோ (Don Miguel de Unamuno) தனது The Tragic Sense of Life இல் அதை மீள முன்வைக்கிறார், ஆயினும், அடிக்கடி தான் தொடர்ந்து டான் மிகுவல் டி உனாமுனோவாகவே தொடர்ந்து இருப்பது குறித்த விருப்பத்தையும் தெரிவிக்கிறார். இவ்விசயத்தில் மிகுவல் டி உனாமுனோ அவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் ஹோர்கே லூயிஸ் போர்ஹேஸ் ஆக தொடர்ந்திருக்க விரும்பவில்லை; நான் வேறொரு ஆளாக இருக்கவே விரும்புகிறேன். எனது மரணம் முழுமையானதாக இருக்க வேண்டும்; சரீரமும் ஆத்மமும் என நான் இறந்திட வேண்டும்.

புவியில் நிகழ்ந்த வாழ்வின் நினைவுகளைச் சேகரித்தும் மறுமையில் புவிவாழ்வின் மரணத்தை அறிந்தும் வைத்திருக்கும் ஆத்மாவின் தனிப்பட்ட இறவாமை குறித்து நான் பேச முனைவது எத்தனை அர்த்தமுள்ளதாகவும் தன்னடக்கத்துடனும் இருக்கப் போகிறது அல்லது அப்பொருளுக்கு எத்தனை நியாயம் செய்யவிருக்கிறது என்பதை எல்லாம் நான் அறியேன். ஒரு தினம் எனது வீட்டில் இருந்தபடி எனது சகோதரி நோரா, “நான் ‘புவிக்கான நினைவேக்கம்’ என்ற தலைப்பில் ஒரு ஓவியத்தைத் தீட்டவிருக்கிறேன், சொர்க்கத்தில் இருக்கும் அதிருஷ்டகரமான மனிதன் ஞாலவாழ்வு குறித்துச் சிந்திக்கும்போது எவ்விதமாக உணர்வுகளை அடையக்கூடும் என்பதே அதன் மையப்பொருள். அதில் நான் சிறிய பெண்ணாக பூனஸ் ஏர்ஸில் இருந்த காலங்களைப் பற்றி வரும்” என்றாள். இதை ஒத்த கருத்துள்ள ஒரு கவிதையை நான் எழுதியிருப்பதை அவள் அறியாள். அதில், சுவனத்தில் இருந்தவாறே, யேசுநாதர் கலிலியில் பொழியும் மழையையும் தச்சுவேலையகத்தின் நறுமணத்தையும் அத்தோடு அவர் ஒருபோதும் சுவனத்தில் காணமுடியாத ஒன்றையும் – தாரகைகள் நீந்தும் கூரையான வானத்தையும், மீள்நினைவுபடுத்திக்கொண்டு ஏங்கியிருப்பார் என்று நான் கற்பனை செய்திருந்தேன்.

இப்படி சுவனத்தில் இருந்தவாறே புவிவாழ்வின் மீது நினைவேக்கம் கொள்ளும் பேசுபொருள் Dante Gabriel Rossetti- இன் ஒரு கவிதையிலும் வருகிறது. அது ஒரு பெண்ணைப் பற்றியது; அவள் சுவனத்தில் இருந்தபோதும் தன் காதலன் தன்னுடன் இல்லாததால் தன்னைத் துரதிருஷ்டசாலியாக கருதுகிறாள்; அவன் வந்து சேர்வது குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறாள் அவள்; ஆனால், அவன் ஒருபோதும் வரப்போவதில்லை, ஏனெனில் அவன் பாவம் புரிந்துவிட்டான். இவள் தொடர்ந்து நம்பிக்கையுடன் நித்தியமாகத் தன் நம்பிக்கையைக் கைக் கொண்டிருக்கிறாள்.

வில்லியம் ஜேம்ஸைப் பொறுத்தவரை இது ஒரு சிறிய பிரச்சனை என்கிறார்; அத்துடன், மெய்யியலில் காலம், புற உலகின் யதார்த்தம், புரிந்துணர்வு ஆகிய பகுதிகளே முதன்மையான பெரிய பகுதிகள் என்கிறார். இறவாமை, கவிதையைவிட, இறையியலைவிட – அனைத்து வகை இறையியலும் இதில் சேராது – மெய்யியலில் வெகு சிறிய இடத்தையே பெறுகிறது.

மீள் ஜென்மம், என்ற இன்னொரு தீர்வு இதற்கு இருக்கிறது, நிச்சயமாக ஒரு கவித்துவமான தீர்வுதான் இது, மற்றைய தீர்வுகளைவிடவும் சுவாரஸ்யமானதுதான், நாம் யாராக இருந்தோம் என்று நினைவு வைத்துக்கொண்டே நாம் யாராக இருக்கிறோமோ அதையே தொடர்ந்து கொண்டும் இருப்பது என்பது மிகவும் தரித்திரமான ஒன்று.

நான் எனது குழந்தைப் பருவத்திலிருந்து ஏறத்தாழ ஒரு டஜன் படிமங்களை நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றை மறக்கவும் முயன்று கொண்டிருக்கிறேன். என் வளரிளம்பருவத்தை நினைத்தாலோ, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; நான் வேறு யாராகவேனும் இருந்திருக்கலாம் என்றே கருதுவேன். அதே சமயம், இவையனைத்துமே கவிதைக்கான பாடுபொருளாக, அல்லது கவிதையால் பாடுபொருளாகக் குணமாற்றம் அடைந்துவிடுகின்றன.

மெய்யியலின் அனைத்துப் பிரதிகளிலும் எளிதாக நம்மை அசைத்துப் பார்க்கும் பிரதியில் முதன்மையானதாக நிற்பது பிளாட்டோவின் ஃபேடோ (Phedon). அந்த உரையாடல் (dialogue) சாக்ரடீஸின் இறுதி நாளைக் குறிப்பது, அன்றைய தினம், தெலோஸிலிருந்து படகு வந்து சேர்ந்துவிட்டதென்றும் சாக்ரடீஸ் ஹெம்லாக் (Hemlock) விடத்தை அருந்தவிருக்கிறார் என்றும் அவரது நண்பர்களுக்குத் தெரிந்திருந்தது. தனக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது என்பதை அறிந்தும் சாக்ரடீஸ் அவர்களைச் சிறையில் வரவேற்கிறார். ஒரேயொருவரைத் தவிர பிற அனைவரையும் அவர் அங்கு காண்கிறார். இங்கு மேக்ஸ் ப்ரோட் குறிப்பிட்டதைப் போல, பிளாட்டோ தனது வாழ்நாளின் மிகச் சிறந்த உணர்ச்சிகரமான வரிகளை எழுதினார். அவர் எழுதுகிறார்: “பிளாட்டோவிற்கு உடற்சுகமில்லை என்று நினைக்கிறேன்.” ப்ரோடின் கூற்றுப்படி தனது அத்தனை உரையாடல்களிலும் இங்கு மட்டுமே தன்னைப் பெயரிட்டு குறிப்பிட்டுக்கொள்கிறார். பிளாட்டோ உரையாடலை எழுதியிருந்தால், சந்தேகத்திற்கிடமின்றி அங்கு இருந்திருக்கிறார் – அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம், இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை – ஆனாலும் அவர் தன்னைப் படர்கையில் குறிப்பிடுகிறார். அதிலிருந்து அந்தப் பெருநிகழ்விற்குச் சாட்சியமாகத் தான் இருப்பது குறித்து அவர் உளைச்சல் கொள்வது புலனாகிறது.

தன்னை அங்கிருந்து விடுதலை செய்துகொள்ளும் பொருட்டு பிளாட்டோ அந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார் என்று ஊகிக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் சொல்கிறார்: ”சாக்ரடீஸ் தன் இறுதி தினத்தில் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது, எனினும் இப்படியெல்லாம் சொல்லி இருப்பார் என்று சிந்திக்க விழைகிறேன்.” அல்லது: “அவர் இப்படியெல்லாம் சொல்லி இருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய இயலும்.” “பிளாட்டோவிற்கு உடற்சுகமில்லை என்று நினைக்கிறேன்,” என்று சொல்லும்போது, யாராலும் அனுபவிக்க முடியாத ஓர் இலக்கிய அழகியல் தருணத்தைப் பிளாட்டோ உணர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன்.

அதன் பிறகு இன்னுமோர் அரிய தொடர் – அநேகமாக உரையாடல்களில் வருபவற்றிலேயே மிகவும் நேர்த்தியானது – வருகிறது. தோழர்கள் நுழைகின்றனர்; சாக்ரடீஸ் படுக்கையில் அமர்ந்திருக்கிறார்; அவருடைய விலங்குகள் கழற்றிவிடப்பட்டிருக்கின்றன. தனது சங்கிலிகளின் பாரத்தை அனுபவிக்கும் இனிமை இனி கிட்டாது என்பதை உணர்ந்தவராக, தனது கால்மூட்டினைத் தேய்த்துவிட்டபடியே சாக்ரடீஸ் சொல்கிறார்: “என்னே விசித்திரம்! என் மீது பாரம் தந்து கொண்டிருந்தன விலங்குகள், அவை வலியின் ஒரு வடிவம். இப்போது அவை எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதால் எனக்கு நிவாரணம் அடைந்தது போலத் தோன்றுகிறது. வலியும் சுகமும் ஒன்றோடொன்று இணைந்து பிறந்த இரட்டையர்கள்.”

எத்தனை மகத்தானது, தனது இறுதி நாளில், அத்தருணத்தில் தான் இறக்கப் போவது குறித்து எதுவும் பேசாமல், வலியும் சுகமும் பிரிக்கமுடியாதவை என்ற சத்தியத்தை முன்வைத்துப் பேசுவது. உடனடியாகத் தன் முன் கைவிரித்துக் காத்திருக்கும் மரணத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பது அம்மனிதனின் தைரியத்தைப் பறைசாற்றுகின்றன.

அதற்குப் பின்னர், தான் அன்றைய தினம் நஞ்சை உண்டாக வேண்டி இருப்பது பற்றிப் பேசிவிட்டு, குழப்பம் தருகின்ற உரையாடலுக்குள் செல்கிறார், அதாவது, இருமய இருத்தலைப் பற்றி சரீரம் – ஆன்மா என்ற இருமய பொருண்மையைப் பற்றிப் பேசுகிறார். உளப் பொருண்மையென்பது (ஆன்மா) சரீரம் இன்றியும் சிறப்பான முறையில் வாழ முடியும் என்றும் சரீரமென்பது ஒரு தடை என்றும் கூறுகிறார். பண்டைய மதக்கோட்பாடுகளில் சொல்லப்படும், நமது உடலே நமது சிறை என்பதை இக்கருத்து எதிரொலிக்கிறது.

இவ்விடத்தில் ரூபர்ட் ப்ரூக் (Rupert Brooke) என்ற மகத்தான ஆங்கிலக் கவிஞரின் சில வரிகளைக் கூற விரும்புகிறேன். அவர் நேர்த்தியான கவிதை வழியாகவும், குறைபாடுடைய மெய்யியலின் வழியாகவும் இறப்பிற்கு பின் நாம், “தட்டுத் தடுமாறும் நமது கைகளை பிரித்தெடுப்பவரை உணர்வோம் / நமது குருட்டு விழிகளின்றி தெளிவாக காண்போம்” என்கிறார். கஸ்டவ் ஸ்பில்லர் (Gustav Spiller) தனது சிறப்பான உளவியல் கட்டுரையில், அங்கச் சிதைவு, தலையில் அடிவிழுதல் போன்ற உடல் ரீதியான அசந்தர்ப்பங்கள் குறித்து யோசிக்கையில் அவை ஆன்மாவை பாதிக்காதவையாக இருக்கின்றன என்கிறார். இவற்றிற்கெல்லாம் மேலாக, இந்த இருவகை இருப்புகளை வாதிடுகின்ற சாக்ரடீஸும், உடலிலிருந்து விடுதலை கொள்ளும் ஆன்மாவானது தன்னை முற்றும் சிந்திப்பதில் ஈடுபடுத்திக்கொள்ள முடியும் என்கிறார்.

இது டெமோகிரிடஸின் (Democritus) தொன்மத்தை நினைவூட்டுகிறது. அவர் சோலையில் அமர்ந்து சிந்திக்கும்போது தனது கவனத்தைச் சிதறடிக்கும் புற உலகைத் தவிர்ப்பதற்காகத் தனது விழிகளைப் பிடுங்கிக்கொண்டார் என்று அந்தக் கதை சொல்கிறது. இது நிஜமில்லை எனினும், அழகாக இருக்கிறது. இதில், ஏழ்வண்ணங்களை இழந்துவிட்டு விழிபடும் உலகினைத் தடையாகக் கருதிக் கண்களைப் பிடுங்கிக்கொண்டு தவச்சிந்தனையைத் தொடர்கிறான் அம்மனிதன்.

நம்மைப் பொறுத்தவரை சரீரம் ஆன்மா என்ற சிந்தனை சந்தேகத்திற்குரியது. சற்றே நாம் மெய்யியலின் வரலாற்றை நினைவுகூரலாம். புலனுணர்வுகளும் உணர்ச்சிகளும் அவற்றுடன் அவ்வுணர்ச்சிகளின் நினைவுகளும் புலனுணர்வுகளும் மட்டுமே இருக்கின்ற என்று லாகி (Locke) தெரிவிக்கிறார்; அதாவது, பரு என்பது இருக்கிறது, பருவினைப் பற்றி ஐம்புலன்களும் நமக்குச் செய்திகள் அளிக்கின்றன. பருப்பொருள் என்பது புலனுணர்வின் தொடர்ச்சியே என்றும் அந்தப் புலனுணர்வினை அறிவதற்கான பிரக்ஞையின்றி அவை பொருளற்றவை என ஆகிவிடுகின்றன என்றும் பெர்க்லி கருத்திடுகிறார். சிவப்பு என்பதென்ன? சிவப்பு என்பது நமது விழிகளைப் பொறுத்திருக்கிறது, நமது விழியோ புலனுணர்விற்காக இயங்கும் அமைப்புத்தொடரின் ஒருபகுதி. அதற்குப் பிறகு ஹியூம் வருகிறார், அவர் இவ்விரண்டு கருதுகோள்களையும் மறுத்து ஆத்ம சரீரம் என்ற சிந்தனையை உடைத்தழிக்கிறார். புலனுணர்வு கொள்வதைத் தவிர வேறென்ன ஆன்மா, புலனுணரப்படுவதைத் தவிர வேறென்ன பருண்மை? இவ்வுலகில் பெயர்ச்சொற்களுக்குத் தடைவிதிக்கப்பட்டால், வெறும் வினைச்சொற்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். “நான் சிந்திக்கிறேன்” என்று நம்மால் சொல்ல முடியாது, ஏனெனில் “நான்” என்பது தன்மை பெயர்ச்சொல், பதிலாக, “மழை பொழிகிறது” என்று சொல்வதைப் போலவே, “இது ஒரு சிந்தனை” என்று மட்டுமே தெரிவிக்க முடியும். தெஸ்கார்டெஸ், “நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன் (Cogito, ergo Sum)” என்று சொன்னபோது, அதற்குப் பதிலாக, “ஏதோவொன்று சிந்திக்கிறது” என்றோ “இது ஒரு சிந்தனை” என்றோ சொல்லி இருக்க வேண்டும், ஏனெனில், “நான்” என்பது ஒன்றின் இருப்பை அனுமானிக்கிறது, அவ்வாறு ஒருவருக்குப் பிரகடனம் செய்ய உரிமை இல்லை என்பதால், அவர், “இது ஒரு சிந்தனை, எனவே ஏதோவொன்று இருக்கிறது” என்றே அவர் சொல்லியாக வேண்டும்.

தனிமனித இறவாமைக்கு ஆதரவாக இருக்கும் சில தருக்கங்களை நாம் பார்க்கலாம், நான் இரண்டைக் குறிப்பிடவிருக்கிறேன். மனிதப் பிரக்ஞை என்பதன் நீளம், மனித வாழ்வின் முன் பரிமாறப்பட்டிருக்கும் ஆசைகள், தாபங்கள், நம்பிக்கைகள், அச்சங்கள் ஆகியவற்றின் தொடர்நிகழ்வுகளின் நீளங்களுக்கு நேர்விகித ரீதியிலோ போதுமானதாகவோ இல்லை என்று ஃபெச்னர் தெரிவிக்கிறார். தாந்தே, “n’el mezzo del cammin de nostra vita,” என்று சொல்லும்போது அவர் வேதங்கள் நமக்கு எழுபதாண்டு வாழ்வைத் தந்திருப்பதையும் நினைவூட்டுகிறார். நமது எழுபதாண்டு நீண்ட வாழ்வின் மத்தியில் – துர்பாக்கியமாக நான் அளவைக் கடந்து போய்கொண்டிருக்கிறேன், இப்போது எனக்கு வயது எழுபத்தெட்டு – நமது வாழ்விற்கு ஏதும் பொருளில்லை என்று நினைக்கிறோம். ஃபெச்னர், தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்கு முன்பிருக்கும் சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார், கருவைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அவ்வுடலில் எதையும் செய்யாத கைகால்கள் இருக்கின்றன. அவை எதற்கும் பொருளில்லை. அதுவே நமக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் நம்பியாக வேண்டியிருக்கிறது, அதாவது, நாம் முழுக்க முழுக்க நம்பிக்கைகள், அச்சங்கள், அனுமானங்கள் ஆகியவற்றால் நிரம்பியிருக்கிற போதும் உயிரோடு வாழும் வாழ்விற்கு அவற்றின் பங்களிப்பின் முழுமை என்ன என்பது குறித்து நம்மால் சரிவர சொல்லிவிட முடியாது. மிருகங்களிடம் என்ன இருக்கிறது என்பதை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியும், அவையனைத்தையும் மறுத்து முழுமையாக மறுவாழ்வில்தான் அவை பயன்படக்கூடும் என்றும் பதிலளிக்க முடியும். இது இறவாமைக்குச் சாதகமாக நிற்கும் தர்க்கங்களுள் ஒன்று.

இந்தச் சொற்றொடரைச் சொன்ன தாமஸ் அக்வினாஸை இங்கு கவனிப்போம்: “Intellectus naturaliter desiderat esse semper,” மனம் இயல்பாகவே நித்தியமாய் நிலைத்திருக்க விரும்புகிறது. ஒருவேளை அதற்கு நாம் இப்படிப் பதிலளிப்போம்: “மனம் வேறுசில விசயங்களையும்கூடத்தான் விரும்புகிறது, அடிக்கடி இருப்பை முடித்துக்கொள்ளவும்கூட.” நம்மிடையே தற்கொலைச் சம்பவங்கள் பற்றிய கதைகள் நிறைய இருக்கின்றன, நிறைய பேர் உறக்கத் தேவைக்காக தவித்துக் கொண்டிருக்கின்றனர், அதுவும் இறப்பின் ஒரு வடிவமே. உதாரணமாக இந்தப் பிரபலமான ஸ்பானிய குறள்: “Ven, muerte tan escondida / que no te sienta venir / porque el placer de morir / no me torne a dar Ia vida” [ஆழமறைந்தபடி வா மரணமே / நீ வருவதை நானறியாதபடி / சுகமாய் இறந்து கொண்டிருக்க வேண்டி / வாழ்விற்கு நான் மீளவிழையாதபடி]. அது தவிர ஃப்ரெஞ்சுக் கவிஞர் Leconte de Lisle இடமிருந்து வந்த தொகையறாவில்,”அவனைக் காலத்திடமிருந்தும் எண்களிடமிருந்தும் விசும்பிடமிருந்தும் விடுதலை செய்து அவன் விட்டு வந்திருக்கும் இளைப்பாறுதலுக்கே மீள அனுப்புங்கள்” என்கிறார்.

நமக்கிருக்கும் ஏகப்பட்ட ஏக்கங்களில், வாழ்விற்காக ஏங்குதல், எப்போதைக்கும் இருந்து கொண்டிருப்பதற்காக ஏங்குதலும் உண்டு, மட்டுமின்றி இருப்பை நிறுத்திக்கொள்ள ஏங்குதலும் அத்தோடு அச்சமும் அதற்கு எதிர்மையான நம்பிக்கையும்கூட இருக்கிறது. இவை அனைத்துமே தனிமனித இறவாமை இன்றியேயும் இருக்கச் சாத்தியமானவை, இவற்றிற்குத் தனிமனித இறவாமை என்பது தேவையும் இல்லை. நானேகூட அதை விரும்புவதில்லை, அது குறித்து அச்சமே எனக்கு இருக்கிறது, ஒருவேளை நான் தொடர்ந்து போர்ஹேஸாகவே இருக்கப் போகிறேன் என்று தெரியவருமாயின், அதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. என் பெயர், என் புகழ் என என்னிடமே களைப்பு கொண்டிருக்கிறேன், அவை அனைத்திலிருந்தும் விடுதலை கொள்ள விரும்புகிறேன்.

டேசிடஸ் இடம் ஒரு விதமான சமரசக் கொள்கையாக இறவாமை இருப்பதைக் காண்கிறேன், அது மீண்டும் கதேவால் எடுத்தாளப்பட்டிருக்கிறது. டேசிடஸ் தனது Life of Agrippa – வில், “Non cum corpora periunt magnae animae,” என்கிறார், அதாவது, மகாத்மாக்கள் தங்களது சரீரத்துடன் சேர்ந்து மரிப்பதில்லை. தனிமனித இறவாமை என்பது சிலருக்காகப் பிரத்யேகமாக காத்திருக்கின்ற ஒரு வெகுமதி என்று டேசிடஸ் நம்பினார், அது பொதுமக்களுக்கானதல்ல, மாறாக, தங்களது செயல்களால் சான்றோனாகி நின்று நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கவர்களது ஆத்மாக்கள் மட்டுமே இறவாமைக்குத் தகுதியானவை. கதே இந்தச் சிந்தனையை ஓட்டிய கருத்தைத் தனது நண்பர் வெய்லாண்ட்டின் மரணத்தின்போது இப்படித் தெரிவிக்கிறார்: “தவிர்க்க முடியாமல் வெய்லாண்ட் இறந்துவிட்டார் என்பதை யோசிக்கவே கொடுமையானதாக இருக்கிறது.” வெய்லாண்ட் வேறெங்கோ சென்றுவிட்டார் என்பதை அவரால் சிந்திக்கக்கூட முடியவில்லை; அவர் வெய்லாண்டின் தனிமனித இறவாமையை நம்புகிறார், ஆனால் அனைவருக்குமான தனிமனித இறவாமைகளை அல்ல. நமக்கு இப்படி இறவாமை என்பது ஒருசிலருக்கே உரிய தகுதி என்று கருதும் பழக்கம் உண்டு. ஆனால், ஒவ்வொருவரும் தன்னை உன்னதமாக எடைபோடுகிறோம், ஒவ்வொருவரும் தத்தம் இறவாமையை அவசியமானதாக நம்ப முனைகிறோம். எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

இவை போக, நம்மிடையே சில வகை இறவாமைகள் உள்ளன, அவை முக்கியமானவை என்றும் கருதுகிறேன். முதலில், புனர்ஜென்மம் குறித்த எண்ணம். இது பிதாகோரஸிலும் பிளாட்டோவிலும் உண்டு. பிளாட்டோ புனர்ஜென்மத்தைச் சாத்தியமான ஒன்றாகவே கருதினார். மறுபிறப்பு என்பது நல்வினை அல்வினைகளை விளக்க உதவுகிறது. இவ்வாழ்வில் நாம் பாக்கியவானாகவோ துர்பாக்கியவானாகவோ இருப்பதற்கு முந்தைய வாழ்வின் கூறுகளுக்குத் தொடர்புண்டு; அதற்கேற்ப வெகுமதிகளையோ தண்டனைகளையோ நாம் பெற்று வருகிறோம். சிக்கலான ஒன்று அதில் இருக்கக்கூடும்: இந்து புத்தத் தர்மங்கள் சொல்வதைப் போல நமது தற்போதைய சுய வாழ்வு கடந்த வாழ்வைப் பொறுத்திருக்குமே ஆயின், அக்கடந்த வாழ்வு அதற்கு முந்தைய வாழ்வைப் பொறுத்து இருந்திருக்கும், இவ்விதமாக முடிவிலியில் இறந்தகாலத்தை நோக்கிப் பெருகிக் கொண்டிருக்கும் வாழ்வின் தொடர்த் தாக்கங்கள். காலம் வரையறைக்கு மீறியது எனில், வரையறையற்ற நீட்சிக்குப் பெருகிப் பின் செல்லும் இறந்தகால வாழ்வுகளின் எண்ணிக்கை ஒரு முரண்பாடாகிறது. எண்கள் எல்லையற்றவை எனில், எப்படி முடிவிலியின் செய்தி நிகழ்காலத்தை வந்து தொட்டிருக்க முடியும்? நாம் காலத்தை முடிவற்றது என்று நினைக்கிறோம், நானும் அப்படியே நம்புகிறேன், அதையொற்றிச் சிந்திப்போம். அந்த முடிவற்ற காலமானது நிச்சயம் அத்தனை நிகழ்காலங்களையும் தனக்குள் உள்ளடக்கியது எனும்போது, ஏன் இந்த ‘நிகழ்காலத்தையும்’ அது தனக்குள் கொண்டிருக்காது, இங்கு நீங்களும் நானும் பேசும் இவ்வுரையாடலும் சேர்த்து. காலம் முடிவிலி ஆயின், எந்த ஒரு தருணத்திலும் நாம் காலத்தின் மையத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

பிரபஞ்சம் முடிவற்றது எனில் அதன் சுற்றளவு எல்லா பாகத்திலும் இருந்து கொண்டும், மையம் எங்குமே இன்றியும் இருக்கிறது என்கிறார் பாஸ்கல். ஏன், இந்த நிகழ்தருணத்திற்குப் பின்னால் முடிவற்ற இறந்தகாலத்தைக் கொண்டிருக்காது, அதாவது முடிவற்று நீளும் நேற்று? மேலும் இந்த இறந்தகாலம், இந்த நிகழ்தருணத்தின் ஊடாகவும் பாயாமல் இருக்காது அன்றோ? எந்த ஒரு நிகழ்தருணத்திலும் நாம் ஒரு முடிவிலிக் கோட்டின் மையத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம், முடிவற்ற மையத்தின் எந்த ஓரிடத்திலும் நாம் விசும்பின் மையத்தில் இருக்கிறோம், ஏனெனில் காலமும் விசும்பும் முடிவிலிகள்.

புத்த சமயத்தவர் நாம் எண்ணிறந்த வாழ்வுகளை வாழ்ந்திருக்கிறோம் என்பதில் நம்பிக்கை உடையவர்கள், அதாவது அளவிடமுடியாத எண்ணிக்கை என்பது அச்சொல்லில் சரியான பொருள்: துவக்கமோ முடிவோ இல்லாத ஒரு எண், கேண்ட்டர் கணிதத்தில் வரும் வரைமீறு எண்கள் (transfinite number) – ஐப் போன்றது அது. அந்த முடிவிலிக் காலத்தில், நாம் இப்போது மையத்தில் – எல்லா தருணங்களுமே மையங்கள்தான் – இருந்து கொண்டிருக்கிறோம். நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம், நான் சொல்வது என்ன என்று நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள், அதை ஏற்கவோ மறுக்கவோ செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆன்மாவின் புனர்ஜென்மம் என்பது உடலிலிருந்து இன்னோர் உடலுக்கும் மானுட விலங்கு பிரிவுகளின்றிக் கூடுபாயும் சாத்தியத்தை அளிக்கிறது. பியத்ரோ டி அக்ரிஜெண்டோவின் (Pietro di Agrigento) கவிதை நம்மிடம் இருக்கிறது, அதில் அவர் ட்ரோஜன் யுத்தத்தில் அவருடைய காப்பாக இருந்த ஒன்றைத் தான் உணர்ந்துகொண்டது பற்றிப் பாடுகிறார். ஜான் டோன்னியின் (John Donne) கவிதை “The Progress of the Soul,” ஷேக்ஸ்பியருக்குக் கொஞ்சம் முற்பட்டது. அதில் டோன்னி இப்படிச் சொல்லித் துவங்குகிறார்: “நான் மரணமற்ற ஆத்மாவின் வளர்ச்சியைப் பாடுகிறேன்,” மேலும் ஆன்மா ஓருடலிலிருந்து மற்றொன்றிற்குப் பயணிப்பதாகவும் தெரிவிக்கிறார். அவர், தான் ஒரு நூலை எழுதவிருப்பதாகவும், அது புனித நூல்களைத் தவிர அனைத்து நூல்களையும்விட உயர்ந்ததாக இருக்குமென்றும் கூறினார். அவரது பணி கூரிய நோக்கமுடையதாக இருந்தது, அது முழுமை பெறாதபோதும் நிறைய கவின்மிகு வரிகளைக் கொண்டிருந்தன. அவர் ஆப்பிளில் – ஆதாமுடைய பாவ ஆப்பிளில் – குடியிருக்கும் ஓர் ஆன்மாவைப் பற்றி பேசித் துவங்குகிறார். பிறகு அது ஏவாளுடைய வயிற்றில் தங்கி கெயினைச் சிக்கலுக்குள்ளாக்குகிறது; பின், அது ஒவ்வொரு பத்தியிலும் உடல்களைக் கடந்து சென்றபடியே இருக்கிறது (அவற்றில் ஒன்று மகாராணி எலிசபெத்தினுடையது). கவிதை முற்றுபெறவில்லை. டோன்னி ஆன்மா ஜென்மங்கள் தாண்டிப் பயணிப்பதை நம்பினார், அவருடைய உரைகளில் ஒன்றில், இந்த எண்ணம் துவக்கத்தில் விவரிக்கப்பட்டதாக இரண்டு மூலங்களைச் சுட்டுகிறார்: பிதாகோரஸும் சாக்ரடீஸும்.

அன்று மதியம் தனது நண்பர்களுடன் உரையாடுகையில் நொய்மையுடன் பிரியாவிடை தர சாக்ரடீஸ் விரும்பவில்லை என்பது சுவாரஸ்யமானது. தனது மனைவி மக்களை வெளியேற்றிவிடுகிறார், அழுது கொண்டிருந்த ஒரு நண்பரையும் வெளியேற்றிவிடுகிறார், அவர் சாந்தமாகப் பேச விரும்புகிறார், தொடர்ந்து பேசிக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருக்க விரும்புகிறார். தன்னிறப்பு என்ற நிதர்சனம் அவரைத் தீண்டவே இல்லை. அவரது பாத்திரம், அவரது வழமை வேறொன்றாக இருக்கிறது: விவாதித்தல், ஒரு குறிப்பிட்ட விதத்தில் விவாதித்தல்.

அவர் ஏன் ஹெம்லாக்கை அருந்துகிறார்? எந்தக் காரணமுமில்லை.

அவர் சிந்தனையைத் தூண்டும் செய்திகளைச் சொல்கிறார்: “ஆர்ஃபியஸ் தான் நைட்டிங்கேல் பறவையாக உருமாற விரும்பினான்; அகமெம்னோன், எனும் மானுட மேய்ப்பர், கூகையாக; உலிஸிஸ், விசித்திரமாக, மனிதர்களிலேயே மிகவும் எளிமையான, அறியப்படாத ஒருவனாக மாற விரும்பினான். சாக்ரடீஸ் பேசிக்கொண்டிருக்கையில் மரணம் இடைப்படுகிறது. நீலமரணம் அவரது கால்களைப் பற்றி ஏறுவதைக் காண முடிகிறது. அவர் ஹெம்லாக்கை உட்கொண்டிருக்கிறார். அவர் ஒரு நண்பனிடம் தான் ஏஸ்குலாபியஸுக்கு ஒரு சேவலைத் தருவதாக வாக்கு கொடுத்திருந்தது தற்போது நினைவிற்கு வந்ததைச் சொல்கிறார். அதாவது ஏஸ்குலாபியஸ் என்ற மருத்துவக் கடவுள் அவரை அத்தனை அடிப்படை நோய்களிலிருந்தும், வாழ்வில் இருந்தே விடுதலை செய்திருப்பதாக அர்த்தம் பட பேசுகிறார். “என்னை வாழ்விடமிருந்து சுகமடையச் செய்துவிட்டார், நான் இறக்கப் போகிறேன், எனவே ஏஸ்குலாபியஸூக்கு ஒரு சேவலைப் பலி தந்தாக வேண்டிய கடன் எனக்குள்ளது.” அவர் இதற்கு முன்பு சொன்னது எவற்றையும் நம்பவில்லை: அவர் தான் முற்றிலுமாக இறக்கப்போவதாகவே நினைக்கிறார்.

நம்மிடம் மற்றுமொரு செவ்வியல் படைப்பு இருக்கிறது, லுக்ரிடியஸின் De rerum natura, அதில் தனிமனித இறவாமை மறுக்கப்படுகிறது. லுக்ரீடியஸ் முன்வைக்கும் வாதங்களிலேயே நன்கு நினைவில் பதிந்த ஒன்று இது: ஒரு மனிதன் தான் இறக்கப் போவதாகப் புகாரளிக்கிறான். வருங்காலம் அவனை மறந்துவிடும் என்றும் கருதுகிறான். விக்டர் ஹியூகோ சொன்னது போல: “பெருவிருந்தின் நடுவில் தனித்துச் செல்வான் அவன், மகிழ்வும் ஒளிர்வுமாக இருக்கும் உலகில் எதுவும் குறைபட்டுவிடப்போவதில்லை.” அந்த மகத்தான கவிதையில் டோன்னியைப் போலவே குறிக்கொள் கொண்டவராய், லுக்ரீடியஸ் பின்வரும் தருக்கத்தைப் பயன்படுத்துகிறார்: “நீ வருங்காலத்தால் இடமறுக்கப்படுவதற்காக வலியுணர்கிறாய். ஆயினும், உனக்கு முன் முடிவற்ற காலம் இருக்கிறது என்பதை நம்புகிறாய், நீ பிறந்த தருணத்தின்போது, ஏற்கனவே கார்தேஜும் ட்ராயும் உலகை ஆள சண்டையிட்ட காலமே கடந்து போய்விட்டது. அது உனக்கொரு பொருட்டேயல்ல. ஆக, பின்னாளில் நடப்பது ஏன் உன்னைப் பொருட்படுத்துவதாய் இருக்க வேண்டும்? நீ முடிவிலியென நீளும் இறந்தகாலத்தைத் தொலைத்துவிட்டாய், முடிவற்றிருக்கும் எதிர்காலத்தைக் கைவிடுவதால் உனக்கென்ன நட்டம் ஏற்பட்டுவிடப்போகிறது?” இதைத்தான் லுக்ரீடியஸ் சொல்கிறார். அவரது அழகான வரிகளை அப்படியே சொல்லும் அளவிற்கு எனக்கு லத்தீன் தெரியாதது சோகமே. அதை நான் கொஞ்ச காலமாகவே அகராதியின் துணையுடன் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஷோபன்ஹோவர் பதிலளிக்கிறார் – ஷோபன்ஹோவர் மகத்தான ஆளுமை என்றே நான் கருதுகிறேன் – கூடுவிட்டுக் கூடு பாய்வதன் அடிப்படைக் கோட்பாடு இன்னொரு பிரபலமான கோட்பாட்டின் வடிவமே என்கிறார், ஷா அண்ட் பெர்க்சனால் பின்னாட்களில் விவரிக்கப்படும் அது, வாழும் விழைவு என்னும் கோட்பாடே. ஏதோவொன்று வாழ விரும்புகிறது, அது பருவின் ஊடே ஒரு பாதையைத் திறக்கிறது, அல்லது பருவிருக்கும் போதும்கூட. அதைத்தான் ஷோபன்ஹோவர் ‘வில்லி’ என்றழைக்கிறார், அது புத்துயிர்ப்பின் விழைவு என்றும் வடிவமைக்கிறார்.

பின்னர் ஷா, “உயிர் விசை” பற்றிப் பேசுகிறார், இறுதியில் பெர்க்சன் ”elan vital” பற்றிப் பேசுவார், அதாவது முதன்மை உத்வேகப் பொருளென அனைத்திலும் இறையும் ஒன்று குறித்து, அதுவே பிரபஞ்சத்தை உருவாக்கியது, அதுவே நம் அனைவருள்ளும் இருக்கிறது. அது தாதுக்களில் இறந்தநிலையில் இருக்கிறது, தாவரங்களில் செயலற்றிருக்கிறது, விலங்குகளில் கனவெனத் திகழ்கிறது, ஆனால் நம்முள் அது தன்னையறியும் உணர்வுடன் இருக்கிறது. இங்கு அக்வினாஸின் வரிகள் சொல்லும் விவரிப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டி இருக்கிறது: “Intellectus naturaliter desiderat esse semper,” மனம் இயல்பாகவே நித்தியமாக இருக்க விரும்புகிறது. ஆனால், எந்தவிதத்தில் அது அப்படி விரும்புகிறது? அது தனிமனிதனின் முறைகளின்படி அப்படி விருப்பம் கொள்வதில்லை; உனாமுனோ சொல்வதைப் போல, தொடர்ந்து உனாமுனோ உனாமுனோவாகவே இருந்து கொண்டிருப்பதை அது விரும்புவதிலை; அது பொதுவான வழிகளில் விரும்புகிறது.

நமது, “நான்” என்பது நம்மைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் இல்லாதது. நம்மை “நான்” என்ற பதத்தி வைத்துப் புரிந்துகொள்வது நமக்கென்ன பொருளைத் தருகிறது? அது எவ்விதத்தில் நான் என்னை போர்ஹேஸ் என்று உணர்வதில் இருந்து நீங்கள் உங்களை அ, ஆ, இ, என புரிந்துகொள்வதிலிருந்து வேறுபடுகிறது? அந்த நான் என்பது ஒரு வடிவிலிருந்து இன்னொன்றாக இருந்தபடியே அனைத்து உயிர்களிலும் இருக்கும் ஒன்று. நம்மால் இறவாமை என்பது ஓர் அத்தியாவசியம் என்றும் சொல்ல முடியும் – தனிமனித இறவாமை அல்ல, மாறாக இன்னொரு இறவாமை. உதாரணமாக, ஒவ்வொரு முறையும் பகைவனை ஒருவனால் நேசிக்க முடியும்போது, அங்கு கிறித்துவின் இறவாமை தோற்றம் கொள்கிறது. அந்தத் தருணத்தில் அவனே கிறித்துவாக இருக்கிறான். ஒவ்வொரு முறையும் தாந்தேவையோ ஷேக்ஸ்பியரையோ நாம் மீளச் சொல்லும்போது, ஏதோ ஒருவிதத்தில் அவர்கள் அந்த வரியை உருவாக்கிய இடத்தில் நாமும் இருக்கிறோம் என்றாகிறது. இறவாமை என்பது பிறரது நினைவுகளாலும் நாம் விட்டுச் சென்ற பணியாலும் இருக்கிறது. அந்தப் பணி மறக்கப்பட்டுவிட்டால்கூட என்னவாகிவிடும்?

கடந்த இருபதாண்டுகளை நான் ஆங்கிலேய சாக்சானிய கவிதைக்கெனச் செலவிட்டிருக்கிறேன், பல ஆங்கிலேய சாக்சானியக் கவிதைகள் மனப்பாடமாக எனக்குத் தெரியும். எனக்குத் தெரியாத ஒன்று யாதெனில் கவிஞர்களின் பெயர்கள். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து வந்த கவிதைகளை என்னால் ஒப்புவிக்க முடிகிறது, அப்போது ஒருவர் உணர்ந்த ஒன்றை என்னாலும் உணர முடிகிறது என்பதைத் தாண்டி வேறென்ன தேவை? அவர் என்னுடன் அந்தத் தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், நான் அந்த இறந்த கவிஞராக மாறி இருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு விதத்தில், நமக்கு முன்பு இறந்துபோன அத்தனை பேருமாய் இருக்கிறோம். நமது இரத்த முன்னோர்கள் மட்டும் அதில் அடங்குவர் என்றில்லை.

நாம் இரத்தத் தொடர்பில் பலவற்றையும் ஏந்தி இருக்கிறோம் என்பதும் உண்மையே. நான் அறிவேன் – என் தாய் என்னிடம் சொன்னார் – ஒவ்வொரு முறை ஆங்கிலக் கவிதைகளைச் சொல்லும் போதும், அதை 1938 இல் இறந்துவிட்ட, என் தந்தையின் குரலிலேயே சொல்லி வந்திருக்கிறேன். நான் ஷேக்ஸ்பியரை ஓதுகையில் எனது தந்தை என்னுள் புகுந்து வாழ்கிறார். என்னைச் செவிகொள்ளும் மக்கள் எனது குரலில் வாழ்வர், போலவே என் குரல் பிரதிபலிக்கும் என் மூதாதையரின் குரல்களிலும் வாழ்வர். இதையே இசைக்கும் மொழிக்கும் பொருத்திச் சொல்லலாம். மொழி என்பது ஒரு படைப்பு, அது ஒருவிதமான இறவாமை நிலையை எய்தியிருப்பது எனலாம். நான் காஸ்திலிய மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். எத்தனை இறந்த காஸ்திலியர்கள் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரோ?

இவ்வுலகில் ஏதோவொரு வடிவத்தில் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து கொள்கிறோம். இந்த உலகம் இன்னும் சிறப்புற வேண்டி அனைவருமே விரும்புகிறோம், ஒருவேளை நிஜமாகவே இவ்வுலகு இன்னும் சிறப்பானதாக ஆனால், அந்த நித்திய நம்பிக்கையின் பேரில், உலகமே ஏன் தன்னைத் தானே உய்விக்கும் நிலையடையாது? அந்த இரட்சிப்பின்போது நாம் அனைவருமே இறவாதவர்களாகிடுவோம், அங்கு நம் பெயர்களை யாரும் அறிந்திருப்பார்களா இல்லையா என்ற கேள்வியே இல்லை. அது பொருட்படத்தக்கதே இல்லை; முக்கியமானது யாதெனில், அந்த இறவாமை செயல்பாடுகளில் வழி பெறப்படுவது, பிறரிடம் ஒருவர் தனது எப்படிப்பட்ட நினைவுகளை விட்டுச்செல்கிறார் என்பதில் உள்ளது.

எனது கருத்துகளும் தீர்ப்புகளும் எந்தவிதத்திலும் பொருட்படுத்தத்தக்கன அல்ல; நாம் வருங்கால உலகிற்காகத் தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கும் வரை, நம் இறவாமையை உறுதி செய்வதற்கு இறந்தகாலத்தின் பெயர்கள் பொருட்டல்ல. அது தனிமனிதனுடையதாக இருக்க வேண்டிய தேவையில்லை, அது பெயர்களால் உண்டாகும் குளறுபடிகள் இன்றியே திகழலாம், அது நமது நினைவுகளைத் தவிர்க்கவும் செய்யலாம். ஏன் இன்னொரு வாழ்வில் நமது நினைவுகளுடன் தொடர்ந்தபடி எனது பால்யத்தை நான் பயேர்மோ விலும் அட்ரொகிலும் அல்லது மாண்டிவிடியோவிலும் கழித்ததை எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் நான் மீண்டும் மீண்டும் அதை நோக்கியே திரும்பிக் கொண்டிருக்க வேண்டும்? அது ஓர் இலக்கியத் தஞ்சம் புகுதல்; அவை அனைத்தையும் மறந்துவிட்டுத் தொடர்ந்து முன்செல்ல என்னால் இயலும், நான் பெயரிடாமல் இருந்தாலும் அவையனைத்தும் என்னுள் வாழ்ந்தபடியே இருக்கும். ஒருவேளை மிக முக்கியமானவை எல்லாம் நம்மால் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நினைவுக்கூரப்படாதவையாக மட்டுமே இருக்க முடியும், அதாவது தன்னுணர்வின்றியே நம்மால் நினைவில் மீட்டெடுக்கத்தக்கவை.

முடிவாக, நான் இறவாமையை, அதன் தனிமனிதக் கோணத்தில் இன்றி பிரபஞ்சத் தன்மையில் நம்புவதாகச் சொல்ல முடியும். நாம் தொடர்ந்து சாகாவரம் பெற்றவர்களாகவே இருந்துகொண்டிருப்போம்; நம் சரீர மரணத்திற்குப் பின்னரும் நம் நினைவுகள் இருந்து கொண்டிருக்கும், அந்நினைவுகளைக் கடந்தும் நமது செயற்பாடுகள், நம் சூழ்நிலைகள், நம் மனோபாவங்கள் எல்லாம் அற்புதமான பிரபஞ்ச வரலாற்றின் அங்கமாக, நாம் அவற்றை அறியமாட்டோம் என்ற போதும், நிலைக்கும். அதன் சிறப்பு யாதெனின், நாம் அதை அறிந்திருக்க மாட்டோம் என்பதே.


அட்டைப்படம்: பிரஷாந்த்
நன்றி: வே.நி.சூர்யா

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்