கலையாகும் கைப்பின் சித்திரம்

6 நிமிட வாசிப்பு

நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து

நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் குதிரைகள்’ எனத் தோன்றும். மிதவையின் நீட்சி சதுரங்கக் குதிரைகள் எனும் பொழுது 70களில் மும்பைக்கு வந்து சேரும் சண்முகத்தின் சாயல் சதுரங்கக் குதிரையின் நாயகனான நாராயணனிடம் நிறைய உண்டு. சண்முகத்திடமிருக்கும் கைப்பு இன்னும் பக்குவப்பட்டதாய் நாராயணனிடம் படிந்திருப்பதாய்த் தோன்றும். 70களின் சண்முகம் சற்று தடித்த கண்ணாடி அணிந்த நாராயணனாய் மும்பை நகரில் அலைகிறான் எனப் பிரத்தியேக வாசிப்பில் கருதிக்கொள்வேன். சண்முகத்தின் வளர்ந்த வடிவம் நாராயணன். துப்பறிவாளன் போலச் சொன்னால் இருவரும் ஒரே நிறுவனத்தில்தான் பணி புரிகிறார்கள்.

1968-69 வருடங்களின் வாழ்வை 1986இல் எழுதுகிறார். நாவல் வெளிவந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. நூற்றி நாற்பத்தியொன்று பக்கங்கள்தான். இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாவல் இன்னும் நிறம் மாறாமல் அடர்த்தி குறையாமல் சூடு தணியாமல் இருக்கிறது. அதுவே கலையின் வெற்றி. மிதவையை நான் கலையாகும் கைப்பின் சித்திரம் என்று சொல்வேன்.

70 வாக்கில் நாஞ்சில்நாட்டு இளைஞனொருவன் வாழ்வு துரத்த அன்றைய பம்பாய் இன்றைய மும்பைக்குப் போய்ச் சேருகிறான். கேரளத்தின் குணாம்சமான, திரைகடல் ஓடித் திரவியம் தேடுவது மலையாளிகளின் இயல்பெனில் அது பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாகிய நாஞ்சில் நாட்டின் மீதும் படிந்து இருக்கிறது.

நாஞ்சில்நாடன் நாவல் ஒன்றில் பின்னட்டையில் இப்படி ஒரு குறிப்பு இருக்கும். “எண்ணிக்கை மிகுந்த தமிழ்நாட்டில் சுப்பிரமணியன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள நாஞ்சில்நாடன். பொருளாதாரம் பிடித்து உந்தித்தள்ள மும்பை வாழ்வு.”

நாவலின் மையப் பாத்திரமான சண்முகம் சிறுவயதில், தான் பிரியமாய் வளர்க்க எடுத்துவந்த நாய்க்குட்டியை அண்டை வீட்டுக்காரனின் தகராறு காரணமாகத் தூக்கிலிட்டுக் கொல்லும் சம்பவம் நாவலில் உண்டு. ஏறக்குறைய இந்த நாவலில் வரும் பெரும்பான்மையினரின் வாழ்வு அப்படித்தான் இருக்கிறது. நாய்க்கும் அவர்களுக்குமான ஒரே வித்தியாசம் – அவர்கள் கொல்லப்படவில்லை; குற்றுயிரும் குலை உயிருமாக அலைகிறார்கள்.

உலகத்தின் ஏழாவது பெரிய நகரமான (அன்றைக்கு) மும்பைக்கு இடம்பெயரும் நாஞ்சில்நாட்டு இளைஞனின் அலைச்சல்கள், அடங்கிப் போதல்கள், ஆவேசங்கள்தான் ‘மிதவை’. நாஞ்சில்நாட்டு இளைஞன் என்பதைச் சற்று அழுத்தியே சொல்ல விரும்புகிறேன். 70களில் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்பொழுது தண்ணீர்ப் பஞ்சம், கடும் வெயில், குப்பை, அசுத்தம், என்பதை அனுபவித்தறியாத நாஞ்சில் நாட்டின் சிறு கிராமத்தின் இளைஞன் ஒருவன் மத்திய அரசின் பணிக்காகத் தேர்வு எழுத சென்னைக்குப் போகும்போதே அவனுக்கு மிரட்சியாக இருக்கிறது. வேகம், குப்பை, அவசரம், சாக்கடை, பிரம்மாண்டம், ஏற்றத்தாழ்வு, கொண்ட மும்பைக்கு வாழ்வு அவனைத் தூக்கி அடிக்கிறது.

ஒரு மதுரை இளைஞன் எழுபதுகளில் மும்பைக்குப் போனானெனில் அவனுக்குப் பிரம்மாண்டம், வேகம் தவிர மற்றதெல்லாம் ஏற்கனவே சற்றே குறைவான அளவில் ஊரில் பார்த்தவையே.

மிதவையைத் தமிழில் மிக முக்கியமான நாவலாக மாற்றுவது இந்தக் கைப்பின் சித்திரத்தைத் தேர்ந்த மொழியில் நுணுக்கமான சித்தரிப்பின் வழி ஒரு கோட்டோவியமாகத் தீட்டிச் சொல்வதிலேயே அடங்கியிருக்கிறது.

நாவலின் பெரும்பாலான விவரணைகள் சொல்லியதற்கு நிகராக, சொல்லாமல் விடுவதில்தான் இந்த நாவலின் வசீகரமே அடங்கியிருக்கிறது.

புலம்பல் இல்லாமல், அழுகையை உதட்டில் அடக்கிக்கொண்டு, ஆர்ப்பாட்டமில்லாமல், சமூகக் கோபத்தைத் தனிமனிதக் கோபமாக முன்வைப்பதினால்தான் இந்த நாவல் இன்றும் புதியதாய் இருக்கிறது. அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, சாபமிட, சங்கற்பம் செய்ய, எத்தனையோ தருணங்கள் உண்டு சண்முகம் மற்றும் இந்த நாவலில் வரும் ஏனையரின் வாழ்வில், அவர்கள் அப்படியெதும் செய்வதில்லை. அவர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். மிதவை நாவலின் சாரமே மனிதர்கள் வாழ்வதற்கும் உயிர் வாழ்வதற்கும் இடையே உள்ள ஒளி வருட இடைவெளியை முன்வைப்பதே.

உயிர் வாழ ஓடும் இந்த மனிதர்கள் பற்றிய ஒரு படைப்பு எப்பொழுது செவ்வியல் தன்மை கொண்டதாக மாறுகிறது? அதைக் காலம் ஒன்றும் செய்யமுடியாமல் ஆகும்பொழுது, காலத்தின் தூசி அதன்மீது படியாமல் இருக்கும்பொழுது அது எக்காலத்திற்குமானதாய் மாறும்பொழுது ஒரு கலை செவ்வியலாக உயர்கிறது. மிதவை தமிழின் செவ்வியல் நாவல்களில் ஒன்று.

இந்த 25 ஆண்டுகளில் மறுபடி மறுபடி மிதவையை வாசிப்பவனாகவே இருக்கிறேன். எப்பொழுதும் ஏதேனும் ஒன்றைப் புதிதாய்த் தருகின்ற பிரதியாகவே அது இருக்கிறது. 90இல் முதல் முறையாக மிதவை வாசிக்கும் பொழுது வறுமையின் சித்திரம் என்று தோன்றியது. இன்று அந்த வாசிப்பு முதிரா வாசிப்பென்றே தோன்றுகிறது. மறுபடி மறுபடி வாசிக்கும் பொழுது வேறு பலவும் திரள்கிறது. எந்தப் பொருளாதாரச் சூழல் சண்முகன்களை இப்படி வேற்று நிலங்களுக்குத் தூக்கியடிக்கிறது. “எந்த வளம் இல்லை இந்தத் திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?” என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்த காலம். அக்காலத்தில் என்னவாக இருந்தது தமிழக எல்லையோரப் பிரதேசத்தின் வாழ்வியல்? “நெல்லை எங்கள் எல்லை” என்ற கழகத்தின் கோஷத்தையும் சேர்த்து வாசித்தால் வேறு ஒரு பொருள் கிட்டும். வெறும் வறுமைசார் சித்திரம் அல்ல மிதவை. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம் மாத்திரம் அல்ல, காமமும் தான். மிதவை பாவப்பட்டவனின் காமத்தையும் போகிற போக்கில் ஆனால் மிக அழுத்தமாய்ச் சொல்கிறது. ஒரு சிறந்த நாவல் அதன் அளவில் அல்ல அதன் அடர்த்தியிலிருந்து உருவாகிறது. மிதவையில் வரி வரியாக அந்த அடர்த்தியை இந்த 25 வருடத் தொடர் வாசிப்பில் உணர்கிறேன். நகரம் × கிராமம் என்பதை வாய்ப்பாடாக இல்லாமல் பூச்சுகளின்றி, கிராமத்தைப் பொற்காலத்தின் பிரதிநிதியாக்காமல், அதன் உள்ளிருக்கும் அரசியல் காழ்ப்புணர்வுகள், நடுத்தர வர்க்கமாகத் துடிக்கும் மோகம் எனக் கிராமத்தை எந்த வகையிலும் விதந்தோதாமல் நகர் எனும் பிரமாண்டச் சித்திரம் முன் வைக்கிறது மிதவை. நகரம் ஒருவனை அடையாளமற்றவனாக்குகிறது. ஆனால் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என அன்றைய தனி மனித வாழ்வு, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதை உரத்துப் பேசாமல் மிக நுணுக்கமான குரலில் ஒவ்வொரு வாசிப்பிலும் மிதவை எனக்கு உணர்த்துகிறது.

நாவலின் முதல் வரியிலேயே தொடங்கிவிடுகிறது மொழியும் நுட்பமும் கூடும் அலகிலா விளையாட்டு — “பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியது போல்தான் சண்முகம் பெரியப்பா மீது வைத்திருந்த நம்பிக்கையும்.”

“சென்னையில் மனிதர்கள் வேறு தினுசாக இருந்தார்கள். எல்லோரும் சட்டை போட்டிருந்தனர். செருப்பு போட்டிருந்தனர், நறுக்கு மீசை சுருள் கிராப் வைத்திருந்தனர். ஏதோ அந்நிய தேசத்துக்கு வந்தது போலிருந்தது. அவர்கள் பேசிய மொழி, தகர டப்பாவில் பால் கறவை, காய்கறிக்காரியின் நீளமான வாய், கரிய பளபளப்பில் மஞ்சள் அப்பி பெரிதாய் வைத்த குங்குமப்பொட்டு, பெரிய கொண்டைகள் கதம்ப சூடல்கள், குலைகளுக்கு பதிலாக வாழைப்பழம் சீப்பு சிப்பாய் கயிற்றில் தொங்கியது. விசில் இல்லாமல் கண்டக்டர்கள் ‘ரீரீய்’ என்றார்கள். வசவுக்கு ஒன்றும் பொருள் புரியவில்லை. கஸ்மாலம், பேஜாரு, சோமாரி, சாவுகிராக்கி எந்த மொழி என்று தெரியவில்லை. எல்லோரும் ‘மார்க்கெட்டுக்கு’ போனார்கள் ‘டிபன்’ சாப்பிட்டார்கள் ‘நாஸ்டா’ செய்தார்கள். திட்டுக்கள் உச்சஸ்தாயில் வந்தன. கொடூரமான வசவுகளை யாரும் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. 20 வயசுக்காரன் 60 வயசுக்காரனை ‘போப்பா வாப்பா’ என்றார்கள்.”

இது நாடன் எழுபதுகளின் சென்னையைப் பற்றி நமக்குத் தரும் சித்திரம். இதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவது, “எல்லோரும் சட்டை போட்டு இருந்தனர் செருப்பு போட்டு இருந்தனர்.” 20 வயசுக்காரன் 60 வயசுக்காரனைப் போப்பா வாப்பா என்கிறான். ஒரு கிராமத்தின் நேரெதிரான நகரத்தின் சித்திரம் இது.

நாவலில் ஒரு பெரியப்பா பாத்திரம் உண்டு. மிகக் குறைவான பக்கங்களிலேயே வரக்கூடிய ஒரு பாத்திரமே ஆனாலும் நம் மனதில் ஆழப் படிபவராகவே அந்தப் பெரியப்பா இருக்கிறார். அந்தப் பெரியப்பா தனது பால்யத்தைப் பற்றிப் பேசும் பொழுது…

“ஒருக்க திருவந்திரத்தில கம்பனி ஆடிவிட்டிருந்தது. ஒரு நாள் லீவு கிடைச்சு கரிக்கேசு வண்டி புடிச்சு நாகர்கோயில் வந்து புத்தேரி குளத்தங்கரையோடு நடந்து குறுங்குளம் விலக்கு வரச்சிலே விளக்கு வச்சாச்சு. கையில திரும்பி போகத்தான் காசு இருந்தது. காசொண்ணும் கொண்டாராம வீட்டுக்குப் போனா சித்தி என்ன சொல்வாளோன்னு பயம். ரொம்ப நேரம் பாலக்கலுக்கிலே படுத்துக்கிடந்தேன். நல்ல நிலா உயந்திட்டு… கூட்டமா சந்தவண்டி போகச்சிலே அதிலே ஏறித் திரும்பீட்டேன்.”

இந்தப் பத்து வரிக்குள் செறிவாக ஒரு வாழ்வும், நிராதரவும், ஒரு அனாதைத்தனமும் நமக்குக் கடத்தப்படுகிறது.

“வாழ்க்கையை எல்லா கோணங்களிலும் பெரியப்பா வாழ்ந்திருப்பதாகத் தெரிந்தது. அவர் மீது மரியாதை அதிகரித்தது. பெருமிதம் தோன்றியது. பொறாமையாகக்கூட இருந்தது.”

“யூனியன் பிரசிடெண்டும் மாடசாமியும் அண்ணனும் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள். கையில் கிடந்த மோதிரத்தை விற்று மாடசாமி அண்ணன் பெரியார் கூட்டம் போட்டபோது அதே திடலில் ஒரு மூலையில் தற்காலிகமாக சுடலைமாடன் பீடம் போட்டுக் கொடை கழித்தவர் யூனியன் பிரசிடெண்ட்.”

அன்றைய அரசியல் மிக அழகாக இந்த ஒரு பத்திக்குள் வந்துவிடுகிறது. நாம் இதை எப்படி வேண்டுமென்றாலும் விரித்துப் புரிந்துகொள்ளலாம்.

“போஸ்ட் ஆபீஸ் வராந்தா குளிருக்கு அடக்கமாக இருக்கும். போய் உட்காரலாமா என்று நினைத்தான். நேவி நகர் போஸ்ட்டாபீஸ் ஒரு கிராமத்து வீடு போல முன்பக்கம் வராந்தாவை அடக்கி கைப்பிடிச்சுவர். உள்ளே போனால் முதலில் முதுகைத் தரையில் சாய்த்துக் கால்நீட்டி உட்காரலாம். உட்கார்ந்தபடியே ஒரு மணிநேரம் உறங்கவும் செய்யலாம்.

உள்ளே நுழைந்தபோது உலகின் நெருக்கடிகள் புரிந்தது. வாசலை நீக்கி மீதி இடத்தில் வலது இடது புறங்களில் சுருணைச் சுருணையாக மனிதர்கள் உறங்கினார்கள். விளக்கொளியில், சிலர் தலைமாட்டில் மூடியற்ற தகர டப்பாக்கள், கைத்தடிகள், தெரிந்தன. தலையில் துணி மூட்டைகள்.

உள்வாசல் கதவில் சாய்ந்து கால்களை நீட்டினான் சண்முகம். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

நேரம் போகப் போகக் குளிர் உறைக்க ஆரம்பித்தது. பேண்ட் துணிக்கு வெளியே நீட்டிக் கிடந்த பாதங்கள் குளிரை அஞ்சல் செய்தன. கைகளை வசமாக அக்குளுக்கிடையில் குடுத்துக்கொண்டாலும் காதுமடல்கள், முகம், உதடுகள், விரைத்தன. மூக்கு நேரடியாக குளிரை உறிஞ்சியது. ரொம்ப நேரம் இப்படியே இருக்க முடியாது. பன்றியின் வாலாய் மனதில் சுழிகள். குளிர் குறையவில்லை. படுத்திருந்த ஒருவன் எழுந்து தலைமாட்டில் தடவிப் பீடி பற்ற வைத்தான். தீக்குச்சி ஒளியில் குறைபட்ட விரல்களின் மழுங்கல் பளபளத்தது. அருவருப்பாய் இருந்தது சண்முகத்துக்கு. உடம்பெங்கும் அரிப்பது போல் ஓர் உணர்ச்சி. எழுந்து இலக்கின்றி நடக்க ஆரம்பித்தான்.”

நாவலின் உச்சத் தருணம் இது.

அன்றைக்கும் இன்றைக்கும் சாதாரண மக்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது. இன்னும் துல்லியமாகச் சொன்னால் பாவப்பட்டவர்களின் வாழ்வு இந்த 50 வருடத்தில் இன்னும் அதலபாதாளத்திற்குப் போயிருக்கிறது. இந்த அதல பாதாளத்தைதான் மிதவை பேசுகிறது.

மிதவைகளுக்கு லட்சியங்கள் இருக்க முடியுமா..? இலக்குகள் இருக்கமுடியுமா..? நீர்வழிப் போவது அதன் விதி. நீரோட்டமே அதன் தலைவிதியைத் தீர்மானிக்கும். மிதவைகள் என்றைக்கும் மிதவைகள்தான்.

இதை இந்த வாழ்வின் அடிவண்டலிலிருந்து ரத்தமும் சதையுமாய் முன்வைப்பதின் வழி மிதவை தமிழில் சிறந்த நாவல்களில் ஒன்றாக எப்பொழுதும் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்