காலத்தில் முன்னும் பின்னும் பயணிக்க முடியாது  

5 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பம் குறித்த சிந்தனைகள் பெரிதும் வளர்ச்சி அடையாத சங்க காலத்திலும் காலம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்த தமிழ்ச் சான்றோர்கள், காலத்தின் உட்பிரிவாகிய பெரும்பொழுதுகள் மற்றும் அதன் உட்பிரிவாகிய சிறுபொழுதுகள் ஆகியவற்றை பகுத்திருக்கின்றனர். உதாரணமாக, அந்திப் பொழுதில் மலர்வது அந்தி மந்தாரை என்று முதலில் பூவின் மலர்ச்சியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டனர். நாழிகை என்பதே பண்டையத்  தமிழரின் கால நேர அளவாகும். 1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்பதும், 2.5 நாழிகைகள் என்பது 1 ஓரை அல்லது 1 மணித்தியாலம் அல்லது 60 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 7.5 நாழிகைகள் என்பது 1 சாமம் என்றும், 60 நாழிகைகள் என்பது (8 சாமம் உள்ளது) 2 பொழுதுகள் அல்லது 1 நாள் (24 மணி நேரம்) என்றும் நேரத்தைப் பல்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து/பகுத்து வாழக்கூடிய திறன்பெற்றிருந்தனர் நம் தமிழ்ச் சான்றோர்கள். 

சுவாரசியமாக, சூரியனின் இயக்கம் மற்றும் அதனால் உருவாகும் நிழல் இவற்றை அறிந்து அதன் அடிப்படையில் பல்வேறு முறைகள் மூலமாக நேரத்தைக் கணக்கிடும் சாதுர்யமும் தமிழரிடம் காணப்பட்டதற்குச் சங்கப் பாடல்கள் சான்றாக விளங்குகின்றன. உதாரணமாக, புல்லைச் சூரிய ஒளிபடும்படி நிறுத்தி அதனடிப்படையில் நேரத்தைக் கணக்கிடும் வழிமுறை ஒன்றைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதைப் பின்வரும் பாடல் சுட்டுகிறது.  

காட்டுத் துரும்பு எடுத்துக் கண்டம் பதினாறு ஆக்கி
நீட்டுக் கடந்தது போக நின்றது நாழிகை. 

அடுத்து, கை விரலின் நிழலைக்கொண்டு நேரத்தைக் கணக்கிடும் மற்றொரு வழிமுறையும் தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளது என்பதைப் பின்வரும் பாடல் குறிப்பிடுகிறது. 

சுட்டால் விரல் மடக்கிச் சூரியனை வலமாக்கி
எட்டாம் விரல் இரட்டிக்க – முட்டாய் கேள்
அடியளந்து பார்த்து அலையநீ வேண்டாம்
நொடி அளவில் சொல்லும் இது.

பகற்பொழுதில் நேரத்தைக் கணக்கிட மேற்கூறிய முறைகள் பயனில் இருந்தன சரி. இரவில் நேரத்தைத் தமிழர்கள் எப்படிக் கணக்கிட்டனர்? 

ஆச்சரியப்படும் விதமாக, சூரியன் இல்லாத பொழுதும் நேரத்தைக் கண்டறிய சில வழிமுறைகள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ‘விண்மீன் தொகுதி உருவம்’ எனும் விண்மீன்களின் உருவத்தின் அடிப்படையில் அவற்றை இனம்பிரிக்கும் ஓர் உத்தியின் மூலமாகத் தமிழர்கள், விண்மீன்களை 12 ஓரைகளாகவும் (பண்டைய வானியலில் ஓரை என்பது பல விண்மீன் தொகுதிகள் அடங்கிய விண்மீன் குடும்பத்தைக் குறிக்கும்), நாளைக் குறிக்கும் 27 விண்மீன்களாகவும் கண்டு கணித்துவந்தனர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உதாரணமாக, ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி மறையும் மீன்குடும்பமான ஓரையைக் கொண்டு ஓர் ஆண்டின் கால அளவையை 12 கூறுகளாகப் பகுத்து ஒவ்வொன்றையும் ஒரு மாதம் என்றனர். அதுபோல, மாதத்தில் உள்ள நாட்களைக் குறிக்க பல விண்மீன்களைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் சுவாரசியமாக, இயற்கையின் அங்கங்களான சூரியன் மற்றும் விண்மீன்களைக் கொண்டு பகலிலும் இரவிலும் நேரத்தைக் கணக்கிட்ட தமிழர்கள், நேரத்தை மேலும் துல்லியமாகக் கணக்கிடும் செயற்கைக் கருவிகள் சிலவற்றையும் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர் என்று சில சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, பொழுதை அளந்தறிவதற்கும், நேரத்தைச் சொல்வதற்கும் ‘நாழிகைக் கணக்கர்’ என்போர் அக்காலத்தில் செயல்பட்டு வந்துள்ளனர் என்றும், அந்த நாழிகைக் கணக்கர்கள், குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வைப் பின்வரும் ‘முல்லைப்பாட்டு’தனில் விளக்கமாகக் காணலாம்.

பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது கான்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப

(முல்லைப்பாட்டு : 55-58)

நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்பேசாத நாழிகைக் கணக்கர்கள், மன்னனைக் கையால் தொழுதபடியே கண்டு வாழ்த்திக் ‘கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே, உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை காண்’ என அறிவுறுத்தினர் என்பதே இப்பாடலின் விளக்கம். முக்கியமாக, நீர் நிறைந்த ஒரு கலத்தின் அடியில் துளையிட்டு, அதன் வழியே ஒரே சீராகக் கசிந்து இறங்கும் நீரின் அளவைக் கணக்கிட்டு, பின்னர் அந்த அளவு நீர் கீழே இறங்க எடுத்துக்கொண்ட நேரத்தைக்கொண்டு, நாழிகைகளைக் கணக்கிட உதவிய கருவியானது குறுநீர்க் கன்னல் என்று அழைக்கப்பட்டது. மேலும், சிறுசிறு துளியாக நீர் ஒழுகி வந்த காரணத்தினால் இந்தக் காலம் காட்டும் கருவியைக் குறுநீர்க் கன்னல் என்று வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கருவி குறித்த பதிவு பின்வரும் அகநானூற்றுப் பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறுநீர்க் கன்னல் எண்ணுதல் அல்லது 
கதிர்மருங்கு அறியா அஞ்சுவரப் பாஅய்

(அகநானூறு: 43:6-7)

இந்த அகநானூற்றுப் பாடலை எழுதிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என்னும் சங்கப்புலவர், கதிரவனின் கதிரைக் கொண்டு காலத்தை அறிய முடியாதபடி, முகில் சூழ்ந்து, அச்சம் தரக்கூடிய வெள்ளம் பாய்ந்தோடும் மழைக்காலத்திலும் குறுநீர்க்கன்னல் மூலமாக நேரத்தைத் தமிழர்கள் கண்டறிந்ததைக் குறிப்பிடுகிறார்.

மிகவும் சுவாரசியமாக, சிறிய அளவிலான மணிக்காட்டியைக் கண்டுபிடித்து அதனை மாலைபோல் கழுத்தில் அணிந்து கொண்டதாகவும், அதனால் அதற்கு ‘கடிகை ஆரம்’ (பின்னர் அதுவே கடிகாரம் என்றானது) என்று பெயரிட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. 

முக்கியமாக, கி.மு 300 முதல் கி.மு 2500 உட்பட்ட காலக்கட்டத்தில் பாபிலோன், எகிப்து, பெர்சியா, சீனா, கிரேக்கம் ஆகிய உலகின் பல்வேறு பகுதிகளிலும் நீர் அடிப்படையில் இயங்கும் water clock எனும் காலம் காட்டிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதற்கான பல குறிப்புகள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நீர் காலம் காட்டிகள் inflow மற்றும் outflow water clock எனும் இருவகையான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. குறுநீர்க்கன்னல் என்பது outflow water clock வகையின்கீழ் அடங்கும்.

https://lh6.googleusercontent.com/FSXbJs78T4PqRLfyq_eymmQlu617oDTKbEB-xnM1ynJcYdqZqV9hpAto9lQaWmvhXk-YJR8v5c4bhBHJwFSnPhVj7Ml3WsLBn_xkThj_0K9jq-vTZonqBOMQeUWbeQ
(படம்: குறுநீர்க்கன்னல் மாதிரி, காப்புரிமை: Sharayanan – Self-made, inspired by Image:Shéma d’une Clepsydre.jpg)

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்த நேரம் தொடர்பான மனிதர்களின் புரிதல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது, இன்று கால எந்திரத்தில் (Time Machine) ஏறிக் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் சென்று வரலாமா என்று ஆய்வு செய்யும் அளவுக்கு அதீத வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அப்படியெல்லாம் கால எந்திரத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்கிறது ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் மார்க்கஸ் ஷெக் (Marcus Scheck) உள்ளிட்ட ஆய்வுக்குழுவினரின் சமீபத்திய ஆய்வு! 

கூடிய விரைவில் கால எந்திரம் கண்டுபிடிக்கப்படும். பின்பு அதில் ஏறி 24 திரைப்படத்தில் வரும் சூர்யா போல வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று ஆவலாய் இருந்தோமே, இப்படிச் சப்பென்றாகிவிட்டதே என்று எண்ணுகிறீர்களா? உண்மைதான். பேரிக்காய் வடிவிலான மற்றும் சமச்சீரற்ற, முற்றிலும் புதியதொரு அணு உட்கரு (atomic nuclei) இருப்பது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது மார்க்கஸ் அவர்களின் ஆய்வுக்குழு. அதன் அடிப்படையிலேயே காலப் பயணம் (time travel) என்பது சாத்தியமில்லை என்னும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

சமீப காலம்வரை, உருண்டை, வட்டம் மற்றும் அஞ்சல் பந்து (rugby ball) ஆகிய மூன்று வடிவங்களிலான அணு உட்கருக்களே கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக, ஓர் அணு உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் ஒரு குறிப்பிட்ட இணைவுப் பொருத்தம் காரணமாகவே அதன் வடிவம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், அணு உட்கருவின் இந்த மூன்று வடிவங்களும் CP-symmetry எனப்படும் கோட்பாட்டுக்கு இணங்க symmetric அல்லது சமச்சீரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகவும் வினோதமாக, கடந்த 2013ஆம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள CERN பரிசோதனைக் கூடத்தில், Radium-224 மற்றும் Barium-144 சமதானிகளில் (isotope-சம அணுவெண் கொண்டவை) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள பேரிக்காய் வடிவிலான புதிய அணு உட்கருவானது சமச்சீரற்றது என்பது மிகவும் முக்கியமான ஓர் இயற்பியல் உண்மையாகும்! 

அதாவது, இந்தப் பேரிக்காய் வடிவ அணு உட்கருவானது பேரிக்காய் போலவே, ஒரு புறம் அதிக பொருண்மை அல்லது எடையுடனும் மற்றொரு புறம் குறைவான எடையுடனும் இருப்பது CP-symmetry கோட்பாட்டுக்கு எதிராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய, இயல்புக்கு மாறான தன்மையானது, நம் பிரபஞ்சத்தில் உள்ள பொருள் (matter) மற்றும் எதிர்பொருள் (antimatter) ஆகியவற்றின் சமநிலை இல்லாத தன்மையுடன் ஒத்துப்போகின்றன என்கின்றனர் இயற்பியலாளர்கள். முக்கியமாக, நம் பிரபஞ்சத்தில் பொருள் அதிகமான அளவிலும், எதிர்பொருள் குறைவான அளவிலும் இருப்பதற்கு CP-symmetry கோட்பாட்டுக்கு எதிரான பண்புகள் கொண்ட, பேரிக்காய் வடிவ அணுக்கரு போன்ற மேலும் பல வினோதமான அணுக்கருக்கள் இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார் வானியல் இயற்பியலாளர் பிரையன் கோபர்லீன்.

மிகவும் சுவாரசியமாக, “பேரிக்காய் அணுக்கரு போன்ற வினோதமான அணுக்கருக்களில் உள்ள, பொருண்மை (mass) மற்றும் மின்னூட்டம் (charge) ஆகியவற்றின் சமநிலையற்ற தன்மையானது, அதன் சமதானியை (Isotope) வெளி-நேரத்தில் (time-space), ஒரு குறிப்பிட்ட திசையில் பயணிக்கச் செய்கிறது. இதன் காரணமாகவே நேரமானது முன்னே மட்டுமே செல்கிறது. எப்போதும் பின்னே செல்வது கிடையாது,” என்கிறார்கள் மார்க்கஸ் உள்ளிட்ட உலக இயற்பியலாளர்கள். 

ஆக மொத்தத்தில், பொருண்மை மற்றும் மின்னூட்டத்தில் சமநிலை இல்லாத பேரிக்காய் அணுக்கரு போன்ற அணுக்கருக்கள் காரணமாகக் காலம் முன்னே மட்டுமே பயணிப்பதால், கால எந்திரம் மூலம் காலத்தில் முன்னும் பின்னுமாக பயணங்கள் மேற்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்றே கருதுகிறார்கள் உலக இயற்பியலாளர்கள். எது எப்படி இருந்தாலும், இந்தப் புதிய கண்டுபிடிப்பு மூலமாகப் பிரபஞ்சம் குறித்த மிக முக்கியமான புரிதல்கள் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்லலாம்!

அது சரி, தொழில்நுட்பக் குழந்தையானது தவழும் வயதில் இருந்த சங்க காலத்தில் நேரம் குறித்த அத்துணை புரிதலும், நேரத்தைக் கணக்கிடும் குறுநீர்க்கன்னல் போன்ற செயற்கைக் கருவிகளையும் உருவாக்கிய நம் தமிழ்ச் சான்றோர்கள் காலப் பயணம் (time travel) குறித்த சிந்தனைகளைக் கொண்டிருந்தனரா இல்லையா? அப்படியான சிந்தனைகள் அவர்கட்கு இருந்திருந்தால் அவை தொடர்பான பாடற் பதிவுகள் ஏதேனும் உள்ளனவா? இவை குறித்தும், காலம் தொடர்பான மற்றொரு பதிவில் காண்போம்.


அட்டைப்படம்: பிரஷாந்த்

மேலும் பார்க்க

  1. https://www.bbc.com/news/uk-scotland-36597142
  2. http://futurism.com/new-form-of-atomic-nuclei-just-confirmed-and-it-suggests-time-travel-is-impossible/

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்