காதுகள்

சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்

5 நிமிட வாசிப்பு

காதுகள் நாவல் ஒரு வாசிப்பனுபவம்

‘ஹாலுசினேஷன்’ எனப்படும் மாயத்தோற்றம். மனப்பிரமை, மனத்தோற்றம், ஒரு மனிதருக்கு ஐந்து வகையில் வரும் என்கிறது நவீன உளவியல்.

புற உலகின் தூண்டுதல்கள் இன்றித் தன்னியல்பில் உள்ளிருந்து ஏதேனும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருத்தல் – AUDITORY

கண்கள் திறந்திருக்கும் நிலையிலும் சுற்றியிருக்கும் காட்சிகளை மீறிய உருவங்கள், தோற்றங்கள், அசைவுகள், வடிவங்கள் தென்படுதல் – VISUAL

அருகாமையில் இல்லாத ஒன்று தன்னைத் ‘தொட்டுக்கொண்டு’ இருத்தல் போலத் தோன்றும் மாயத் தொடு உணர்ச்சி – TACTILE

நாசித்துவாரம் வழியாக உள்ளே சென்ற சுகந்தம், துர்நாற்றம் அல்லது பொதுவாக உள்ளே சுழன்றுகொண்டே இருக்கக்கூடிய, பெரும்பாலும் துர்நாற்றம் – OLFACTORY

நாவில் சுவையுணர்வென நிகழும் ‘மாய-சுவையறிதல்’, உட்கொள்ளாத ஒன்றைச் சுவையாக வாயில், நாவில், உதடுகளில் என அனுபவித்த வண்ணம் இருப்பது – GUSTATORY

இவை ஐந்தும் நம் அனைவரின் வாழ்விலும் அடிக்கடியோ, எப்போதேனும் ஒருமுறையோ, இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோ வந்து செல்கின்றன.

இவை ஐந்தும் ஒருவருக்கு மத்திம வயதில் வந்து வாழ்க்கையைச் சுழற்றி அடித்தால் எப்படி இருக்கும் என்கிற இடத்தில்தான் ‘காதுகள்’ நாவல் துவங்குகிறது. இந்த நாவலில் பிரதானமாக முன்வைக்கப்படுவது, ‘காதில்’ ஏற்படும் மாய அனுபவமும், அதில் ஒரு மனிதனின் இருபது வருடகால அல்லாடல் மற்றும் தப்பிப்பிழைக்க அவனுடைய நம்பிக்கைகள் எனப் பல தளங்களைத் தொட்டு முடிகிறது.

‘நாதபிரம்மம்’ என்றும், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ‘வாக்’கிலிருந்து (சப்தத்திலிருந்து) தோன்றியது என்கிறது வேதமரபு. இந்த சப்தத்தை மனிதன் நான்கு நிலைகளில் அறியவும் உணரவும் உபயோகிக்கவும் செய்கிறான்.

நாவிலிருந்து சப்தமென வெளிப்படும் சொல்லை ‘வைக்கரி’ என்றும், மனதில் தோன்றி வெளிப்படுத்த இயலாது, அகத்தில் தங்கிவிட்ட சொல்லின் நிலையை ‘மத்யமா’ என்றும், இன்னும் ஆழத்தில் பிரக்ஞை எனத் திரண்டு தங்கிவிட்ட சொல்லை ‘பஷ்யந்தி’ (உள்ளே பார்க்கக்கூடியது) என்றும்,

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பதும் அனைத்துக்கும் காரணமானதுமான நாதத்தை ‘பரா’ என்றும் நான்காகப் பகுக்கிறது.

‘ஒரு யோகியின் சுயசரிதம்’ எழுதிய யோகானந்தர், மனித உடலின் யோகச்சக்கரங்கள் மற்றும் ஒவ்வொரு சக்கரத்தின் ஒலிகளை வேறுபடுத்திக் காட்டுகிறார். முதல் சக்கரத்தில் வண்டின் ரீங்காரமென, இரண்டாவது சக்கரத்தில் புல்லாங்குழல் என, மூன்றில் வீணையின் நாதமென, நான்கில் துல்லியமான மணியோசையென, ஐந்தில் காற்றின் ஓசையென, மேலும் இரண்டு சக்கரங்களில் ‘ஓங்காரம்’ என்றும், தியானத்தில் நம்முள்ளே ஒலிப்பது இந்த சப்தங்களே என்றும் பட்டியலிடுகிறார்.

இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து இறுதிவரை வருகிறது.

வேத நாராயணப் பெருமாள் கோயில் படிகளில் ஏறிக்கொண்டிருந்த மாலிக்குத் தான் அசுத்தம் அடைந்துவிட்டோம், தொடர்ந்து ஆபாசங்கள் தன்னுள் நிகழ்கிறது, இப்படிப்பட்டவன் புனிதமான கோயிலுக்குள் நுழையலாமா? என்கிற தீவிர தவிப்புடன் நாவல் தொடங்கும் இடத்திலேயே நாவலும் முடிகிறது.

மாலி கோயிலுக்குள் சென்று தீர்க்கமான முடிவுடன் வெளியே வருகையில் நாவல் நம்மை, அபத்த அங்கதம், இருள்சூழ் வாழ்வு, நம்பிக்கையின்மையின் பலம், அங்கத நாடகம், வறுமைக்கோலம், அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை, பக்தி, நம்பிக்கை, காமம், என ஒரு பெரிய ரங்கராட்டினத்தில் ஏற்றிவிட்டு இறக்குகிறது.

செல்லமாகவும், பக்தி சிரத்தையாகவும் தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டவன் மாலி. பக்தி என்பது அவனுக்குப் பரம்பரைச் சொத்து. பெற்றோர் படிக்காததால் பக்தியை முதல் நம்பிக்கையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். தொழிலும் சிறப்பாகவே சென்றது. அவன் வளர்ந்தபின் தானாகவே பக்தி, துண்டித்துவிட முடியாத ஓர் உடலுறுப்பு போல ஆகிவிட்டது. அவனை அலைக்கழித்து, ஆசுவாசப்படுத்தி, ஆறுதல் சொல்லி, எள்ளி நகையாடி, இளைப்பாற்றி, கசக்கிப்பிழிந்து, என அவன் வாழ்க்கைப் பாதை முழுவதும் பக்தியின் தார் ரோட்டிலேயே அமைந்துவிட்டது.

எனினும் மத்திம வயதுவரை அவன் தொட்டதெல்லாம் துலங்கியது. தொழில் மேன்மை கண்டது. வெற்றி வீடு முழுவதும் இறைந்து கிடக்கும் கைக்கெட்டும் பொம்மைகள் எனக் கிடைத்தது. மாலிக்கு அவனுடைய மத்திம வயதில் காதுக்குள் தொடர்ந்து ஓம்காரம் ஒலிக்கத் தொடங்குகிறது. ‘காதுகள்’ அவனுக்கு, மொத்த வாழ்க்கையையும் இடித்துச் சரித்துக் கீழே தள்ளும் கருவிகள் என்று ஆயின. அத்தனை சரிவுகளையும், காமத்தாலும், புத்திசாலித்தனத்தாலும், வெல்வேன் எனும் தருக்காலும் வெல்லத் தொடர்ந்து மேலெழுகிறான். மிஞ்சியதோ, தொழில் நசிவு, உடல் நசிவு, வறுமை, மேலும் மேலுமென ஐந்து பிள்ளைகள் (இரண்டு இறந்தது போக).

இப்படி ஒரு ‘வளர் சிதை மாற்றத்தைக்’ கதைக்களமாக அமைக்கையில், வாசிக்கும் பொழுதே பெரும்பாலும் விரக்தியும், சலிப்பும் ஏற்பட்டுவிடும். ஆனால் எம்.விவ்.வி போன்ற ஒருவராலேயே இதை ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ என ஆக்க முடிகிறது.

காதில் ஒலிகள் கேட்கத் தொடங்கி அது சம்பாஷணைகள் என மாறி, தொடர் உரையாடல்கள், ஆபாச வார்த்தைகள், வஞ்சினங்கள், காம இச்சைக்கு இட்டுச்செல்லும் மலின வார்த்தைகள், என உருவெடுத்து உள்ளே எப்போதும் ஓயாத போர்க்களமென, மாலியைச் சுழற்றி அடிக்கிறது. இவை அனைத்தயும் ஒரு சாட்சியாய், பிரக்ஞையுடன் கவனிக்க முடிகிறது என்பதே நாவலின் உச்சமும், மாலியின் நல்லூழும்.

மொத்தமும் சரிந்தபின் மாலிக்கு என்ன நிகழ்கிறது என்று நாவல் முடிகிறது.

HAPPY ENDING – என்கிற சுபம் என்று முடிக்காமல் எம்.வி.வி இந்த நாவலை உச்சத்தில் பறந்துகொண்டு இருக்கும் ஒரு பட்டத்தை நூலை அறுத்துவிடுவது போல விட்டுவிடுகிறார். இனி மாலிக்கு எல்லாம் சுபமங்களமாக நடக்கும் என்றும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது இனி இவன் ஒருபோதும் எழமுடியாது என்றும் அவன் கதை முடிந்தது என்றும் வகுத்துக்கொள்ளலாம்.

இந்த நாவலின் அடிநாதத்தில் ஒரு ‘குழந்தைமை’ இருக்கிறது. குழந்தையின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாபெரும் ‘துன்பியல் நாடகம்’ என்பது, ‘தான் இன்னும் வளரவில்லை’ என்பதுதான். அது வளர்ந்தவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

சமீபத்தில் குடும்பத்துடன் கேங்டாக் பயணம் சென்றோம். அது புத்தாண்டு இரவு என்பதால், பெரியவர்கள் அனைவரும் வரும் வருடத்தில் செய்ய வேண்டிய காரியங்களை, செயல் திட்டங்களை, உறுதிமொழி போலச் சொல்லிக்கொண்டு இருந்தோம். நான்கு வயதே நிரம்பிய என் மகன் இடையில் புகுந்து, இந்த வருடம் நான் “பெரியவனாக” மாறி விட வேண்டும், மீசை முளைக்க வேண்டும், அப்பா பரண்மேல் வைத்திருக்கும் பம்பரத்தைக் “கை நீட்டி நானே” எடுத்துவிட வேண்டும் எனத் தன் ஆசைகளைப் பட்டியலிட்டான்.

ஒவ்வொரு குழந்தையும் தூங்கி எழுந்தவுடன் நான் ‘பெரியவன்’ ஆகிவிடுவேன் என்கிற மிகப்பெரிய கற்பனையுடனும், மறுநாள் காலையில் அது நிகழாத மாபெரும் சோகத்துடனும் நாளை தொடங்குகிறது. மாலி எனும் இந்த நாயகன் அந்தக் ‘குழந்தைமை’ கொண்டவன். “என் குருநாதன் முருகன்” அனைத்தையும், சரியாகச் செய்துவிடுவான் என்கிற கனவுடனும், கற்பனையுடனும், உறங்கச் சென்று, மறுநாள் எந்த மாற்றமும் இல்லாத ‘விடியலில்’ எழுகிறான்.

இந்தக் குழந்தைமைக்காகவே உள்ளிருந்து ஒலிக்கும் குரல்களும், நாசகாளி எனும் தீய சக்தியும், மாயா சக்தியும் கனிந்து மாலியை உயிர்ப்புடன் இருக்க வழி விடுகின்றன. ஒருவேளை மாலி அந்தத் தீய சக்திகளுக்கு எதிராக ‘தன் அகங்காரம்’ எனும் ஆயுதத்தைத் தூக்கி இருந்தால், அவனைப் ‘பைத்தியம்’, ‘பேய் பீடித்தவன்’, ‘தற்கொலை செய்துகொண்டவன்’ என வாழ்க்கையிலிருந்து வீசி எறிந்திருக்கும்.

ஒருவகையில் இந்த நாவலின் நாடகப் பகுதி முழுவதும் இருத்தலியல் சிக்கலைப் பேசும் சார்தரின் நாடகமான ‘மீள முடியுமா?’ என்கிற துன்பியல் நாடக வகைமைக்கு அருகே வருகிறது எனினும், பேசுபொருள் மரபைத் தழுவிக்கொண்டு இன்னும் ஆழமாகவும், வாசகனுக்கு நெருக்கமாகவும் நிற்கிறது.

கந்தரநுபூதி இலக்கணப் பிழைகள் மலிந்த படைப்பு என்கிற பகடியும், அதற்கு இணையாகவே, முருகன் மற்றும் மரபின் மீதான நம்பிக்கையும் சேர்த்தே எழுதப்பட்டிருப்பது எம்.வி.வியின் சிறப்பு.

ஓர் யோக ஆசிரியனாக எனக்கு இந்த நாவல் மிகவும் நெருக்கமான ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி எங்களுடைய வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர். மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஒருநாள் தன்னுடைய பிரத்தியேகமான பிரச்சனையைச் சொன்னார், அதாவது, இந்த நாவலில் வரும் மாலியின் ‘காதுகள்’ போல, இந்தப் பெண்மணிக்கு ‘மூக்கும் நுகர்வும்’ தான் பிரச்சினை. ஓர் அறையில் 10 பேர் இருந்தால் ஒவ்வொருவரின் வியர்வை நெடியும் இந்தப் பெண்மணிக்குத் தனித்தனியாக, துல்லியமாக, தாங்கிக்கொள்ள இயலாதபடி, மூக்கால் உணர முடியும். அதனாலேயே, மூன்று நான்கு பேர் இருந்தால்கூட அந்த இடங்களுக்குப் போகத் தயங்கினார். ஒரு கட்டத்தில், பெரிய வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள் போன்ற இடங்களில், எங்கோ இருக்கும் கழிவறையிலிருந்து சிறுநீர் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. பின்னர் பொது இடங்களுக்குப் போவதை முற்றிலுமாகக் கைவிட்டார்.

நவீன மருத்துவம், மரபு வைத்தியம் என மூன்று வருடங்கள் அவதிப்பட்டிருக்கிறார். ஒரு மருத்துவர் யோகமுறைகளை முயற்சி செய்து பார்க்கப் பரிந்துரை செய்துள்ளார். அப்படித்தான் எங்களிடம் வந்து சேர்ந்தார். அவர் சொல்லி முடித்த மறுகணம் எந்தவிதத் தயக்கமும் இன்றி என் மனதில் அவருக்கான பயிற்சிகள் ‘அட்டவணை’ எனத் துலங்கியது. எந்தவிதத் தர்க்கப்பூர்வ அணுகுமுறையும் இன்றி, ஓர் உள்ளுணர்வால் சில பயிற்சிகளைச் செய்ய வைத்தோம்.

மூன்று மாதத்தில் அவருக்கு நுகர்வு உணர்ச்சியில் ஒரு சமநிலை தோன்றத் தொடங்கியது. சில ஆயுர்வேத மருந்துகள் அவரை மேலும் நிகர் செய்தது. இன்று கிட்டத்தட்ட முற்றிலுமாகக் குணமாகிவிட்டார் எனலாம்.

தர்க்கப்பூர்வ முடிவு எடுக்கவில்லையே தவிர, ‘மரபார்ந்த முடிவே’ எடுத்து இருக்கிறேன் எனப் பின்னர் அறிந்துகொண்டேன். அதாவது யோகமரபு ‘வாசனை நுகர்வு’ என்பதை மூலாதாரம் என்கிற சக்கரத்துடன் தொடர்புப்படுத்துகிறது. ஆகவே அவருக்கு மூலாதாரத்தில் ஏதோ ஒரு சிறு சிக்கல் இருக்கலாம் என உள்ளுணர்வு சொல்ல, அந்தப் பெண்மணிக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளை இன்று யோசித்துப்பார்த்தால், மூலாதாரத்தைச் ‘சமநிலை’ செய்யும் பயிற்சிகளையே கொடுத்து இருக்கிறோம் எனத் தெரிகிறது.

ஒருவேளை நவீன உளவியல் இதை முற்றிலுமாக நிராகரிக்கலாம். அல்லது இந்தப் பயிற்சி வேறு ஒரு நபருக்கு இதே முறையில் செயல்படாமல் போகலாம். ஆனால் மரபார்ந்த பயிற்சிகள் அப்படித்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இந்த நாவல் எம்.வி.வியின் இருபது வருட கால சுய சரிதை எனச் சொல்லப்படுகிறது. இந்த நாவல் நம்மைப் ‘பாடாய் படுத்தி’ எடுக்கும் அதி தீவிரமான ‘உடல்-மன-புத்தி’ என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

‘காதுகள்’ என்கிற இடத்திலெல்லாம் ‘மனம்’, ‘புத்தி’, ‘உடல்’, ‘லட்சியம்’, ‘கனவு’, கொள்கைகள்’ என மாற்றிப்போட்டு வாசித்துப்பார்க்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்