எஸ் ராமகிருஷ்ணன்

தமிழின் பெருமை எஸ்.ரா.

3 நிமிட வாசிப்பு

90-களின் தொடக்கத்தில் ‘தாவரங்களின் உரையாடல்’ என்ற நூல் மூலம் எனக்கு அறிமுகமான எஸ்.ரா. அவர்கள் 2000இல் எனக்கு நேரடியாக அறிமுகமாகிவிட்டார்.

அப்போது ‘ உபபாண்டவம்’ படித்த பிரமிப்பில் இருந்தேன். (என்ன ஒரு கவித்துவமான நடை!) ‘அட்சரம்’ என்ற உலக இலக்கியம் சார்ந்து அவர் நடத்திய சிறு பத்திரிகையையும் படித்திருந்தேன்.

சென்னைக் கலைஞர் நகரில் அடுத்தடுத்த தெருக்களில் எங்கள் வீடுகள் இருந்தன. நாள்தோறும் சந்தித்தோம். ஆனந்த விகடனில் அவரது ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’ முதலிய தொடர்களைப் படித்துவிட்டு நேரடியாக விவாதிக்கிற வாய்ப்பு கிடைத்தது. துணையெழுத்தில் பதிவான எளிய மனிதர்களின் மூலம் அவர் காட்டிய எதிர்பாராத மானுட உயரங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

அதையொட்டி எங்கள் உரையாடல் தொடங்கும். பல உலக இலக்கியங்களை, உலக திரைப்படங்களைப் பேச்சுவாக்கில் அடுக்கிக்கொண்டே போவார். ஏராளமான எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினோம்… மொழி எல்லை, நாடுகளின் எல்லை எல்லாம் கடந்து.

அவரது விரிந்த வாசிப்பும் நினைவுத் திறனும் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவை.

இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்திற்கான கதை உருவாக்கினோம். அண்மையில் வெளிவந்த இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘சண்டைக்கோழி 2’ இல் அவருடன் இணைந்து வசனம் எழுதியிருக்கிறேன்.

நீரைப் போல் அணுகுவதற்கு எளிதானவர் எஸ்.ரா. அவர் வீட்டுக்கு எப்போது போனாலும் யாராவது ஒரு இளம் எழுத்தாளரோ உதவி இயக்குநரோ அவரைத் தேடி வந்திருப்பார்கள். சில சமயங்களில் துணையெழுத்தில் அவர் எழுதிய பாத்திரம் போல் அவரது வாசகர் ஒருவர் வந்திருப்பார். ஏழை பணக்காரன் வித்தியாசமின்றிப் பலரும் வருவார்கள்.

வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சிறுதீனி, தின்பண்டம், காபி என்று ஏதாவது கொடுப்பார் அவரது மனைவி சந்திரபிரபா. இரண்டு மகன்களும் விளையாடிக்கொண்டோ படித்துக்கொண்டோ இருப்பார்கள். எதுவும் அவரது அறையில் நடக்கும் விவாதத்திற்குத் தடையில்லை. சுவாரஸ்யமான நாட்கள்.

ஜுனியர் விகடனில் வெளிவந்த ‘எனது இந்தியா’ அவரது இன்னொரு பரிமாணம். ‘எனது இந்தியா’ இந்திய வரலாறு, பலவித மக்களின் பண்பாடு, வெவ்வேறு நிலப்பரப்பு, சுதந்திரப் போராட்டம், தொல்லியல் எனப் பல துறை அறிவையும் கொண்ட சுருக்கமான அறிமுகம். நம் அறிவின் கதவுகளை அகலமாகத் திறந்துவிடும் ஒரு சாவி.

சிறு பத்திரிகை, பெரும் பத்திரிகை என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரே நேரத்தில் எழுதுகிறார். சிறுகதை, இலக்கியக் கட்டுரை, வரலாறு, திரைப்படம், ஓவியம், சிற்பம், சூழலியல் என்று எல்லா வகைகளிலும் எழுதுகிறார். ஆண்டின் இறுதியில் எதிர்பாராதவிதமாக நாவல் ஒன்றை வெளியிடுகிறார். இவற்றுக்கிடையில் திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதுகிறார். அவ்வப்போது மேடைகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். எல்லாம் உலக இலக்கியப் பேருரைகள். உலகை மாற்றிய ஆளுமைகள் பற்றியவை. இதை மீறிப் பயணங்கள் வேறு.

எப்போது தூங்குகிறார், எப்போது சாப்பிடுகிறார், எப்போது படிக்கிறார், எப்போது எழுதுகிறார், எல்லாவற்றுக்கும் நேரம் எங்கிருந்து வருகிறது? அவர் எழுதும் பின் நவீனக் கதைகளில் நிகழ்வதைப் போல் மாய யதார்த்தமாக அவருக்கு மட்டும் ரகசிய நேரங்கள் கிடைக்கிறதா? மலைப்பாகத்தான் இருக்கிறது.

நெடுங்குருதி, துயில், பதின், பால்ய நதி, வெயிலைக் கொண்டு வாருங்கள், நடந்து செல்லும் நீரூற்று, விழித்திருப்பவனின் இரவு, என்றார் போர்ஹே, செகாவின் மீது பனி பொழிகிறது, அயல் சினிமா, கூழாங்கற்கள் பாடுகின்றன… என்று அவரது நூல்களின் பெயரை அடுக்கினால் அதற்குப் பல வாக்கியங்கள் எழுத வேண்டும். அந்த வாக்கியங்களின் சாலை மிக நீண்டது.

2018 புத்தாண்டுத் தொடக்கத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் அவரது ‘கடவுளின் நாக்கு’ என்ற நூலை அறிமுகம் செய்து பேசினேன். அது உலகெங்கும் வாழ்கிற பழங்குடி மக்களின் வாய்மொழிக் கதைகளின் தொகுதி. கதை சொல்பவர்களின் நாக்கு கடவுளின் நாக்கு என்று எஸ். ரா. எழுதியிருந்தார். அப்படிப் பார்த்தால் எஸ். ரா. என்ற மனிதரே கடவுளின் ஒரு நாக்குதான்.

‘தேசாந்திரி’ என்ற நூலை எழுதியவர் அந்தப் பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி அது வெற்றிகரமாக நடந்து வருகிறது. எழுத்தாளன் என்றால் ஏழை, தோல்வியடைந்தவன், உதவி கோருபவன் என்ற அவச்சொற்களை அழித்தவர்களில் எஸ்.ரா.வும் ஒருவர்.

ஓர் எழுத்தாளன் என்பவன் ரகசியமாக நம் இதயங்களில் ஊடுருவுகிறான். நுட்பமாக நமக்குள் மாறுதல்களை உருவாக்குகிறான். மண்ணில் இருக்கும் நீர் கனியில் சாறாவது போலக் காகிதத்தில் இருக்கும் அவன் எழுத்து நமக்குள் சாரமாகிறது. அப்படி எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் ஊடுருவி அவர்களது உந்து சக்தியாக இருப்பவர் எஸ். ரா.

அதேபோல் மொழியின் அட்சரங்களைக் கருவியாக்கித் தன் படைப்புகளை உருவாக்கத் தொடங்குகிற ஓர் எழுத்தாளன் தன் அயராத சாதகத்தால் பிறகு அம்மொழியின் அட்சரங்களில் ஒன்றாகிவிடுகிறான். அதுதான் அவனது ஆரம்பக் காலக் கனவு. லட்சியம். அதைத் தொட்டு விட்டார் எஸ்.ரா. என்றே நினைக்கிறேன்.

“முழு நேர எழுத்தாளராக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வீட்டிலிருந்து இப்படி வேலை செய்வது சாதாரண விஷயமல்ல… அது ஓர் ஒழுக்கம்,” என்று சமஸ் ஒரு மேடையில் கூறினார். அந்த ஒழுக்கம் விழுப்பம் தந்திருக்கிறது. அந்த உயரம்தான் அவர் இப்போது அடைந்திருப்பது.

அவரது உயரத்திற்கு சாகித்திய அகாதமி விருதெல்லாம் போதாது. அதைவிடப் பெரிய விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் தகுதியானவர்.

அவர் என் நண்பர் என்பது எனக்குப் பெருமை. அவருக்கு அரூ ஒரு சிறப்பிதழ் வெளியிடுவது உண்மையில் ஓர் எழுத்தாளரைக் கொண்டாடும் மிகச் சிறந்த நிகழ்வாகும். அரூவுக்கும், நண்பர் எஸ். ரா. அவர்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள்.

ஆயிரக்கணக்கான அவரது வாசகர்களோடு சேர்ந்து நானும் மகிழ்கிறேன்.


மேலும் படிக்க

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்