உற்ற தேகம்

7 நிமிட வாசிப்பு

விழித்தபோது அப்பாவைத் தேடின கண்கள். அவர் இல்லை. தலையை மெல்லத் திருப்பியபோது (அப்பா! இது தலையா பாறாங்கல்லா?) “அப்பா…” என்று கூப்பிட நினைத்தாள். குரல் எழவில்லை. ஒரு நர்ஸ் அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி அவள் தலையணையைச் சரி செய்தாள். உடலில் இணைத்திருந்த பல குழாய்களைச் சரி பார்த்தாள். டாக்டர் ஒருவர் உள்ளே வந்து, “ஹவ் ஆர் யு ஃபீலிங்?” என்று உடல்நலம் விசாரித்துவிட்டு நர்ஸிடம் தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னார். 

“தலை கனக்கிறது” என்றாள். அவளுக்கே அது கேட்கவில்லை. குரல் வெறும் காற்றாய்க் கிளம்பியது. 

***

அருகில் வந்து, “அனஸ்தீஷியாவிலிருந்து வெளியே வந்தவுடன் அப்படித்தான் இருக்கும்” என்று டாக்டர் ஹிந்தியில் சொல்லி முடிக்கும்முன் குமட்டிக்கொண்டு வந்தது. நர்ஸ் வாந்தியெடுக்க பீங்கான் வட்டிலைப் பிடித்துக்கொண்டாள் அவள் முன். சற்று முன்னால் சாய்ந்தபோது தலைதான் கனத்ததே ஒழிய உடல் திடீரென்று லேசானதுபோல் தோன்றியது. இரண்டு முழங்கைகளுக்குக் கீழே எதுவுமே இல்லாத உணர்ச்சி ஏற்பட்டது. ஆனால் திடீரென்று குறுகுறுத்தது. அரித்தது. வலித்தது. வாயில் புளித்த நீரைத் துப்பியதும் அவளை மீண்டும் சரியாகச் சாய்த்துப் படுக்கவைத்தாள் நர்ஸ்.

***

விரைந்து வந்து ரயில் மேடை அருகே வேகத்தைக் குறைத்து நின்றது மின்வண்டி. இவள் படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டிருந்தாள். அன்றைய வகுப்பு மிக முக்கியமானது. இவள் வேகமாக இறங்கிப் பெண்கள் பெட்டியை எட்டி ஏறும்முன் வண்டி கிளம்பியது மெல்ல. இவள் பெண்கள் பெட்டியின் வாயிலை எட்டியாகிவிட்டது. அதன்பின் யாரோ தள்ளியதில் கால்கள் தடுமாற, தலைகுப்புற வண்டிக்கும் ரயில்மேடைக்கும் இடையே இருந்த பள்ளத்தில் விழப்போய்ப் பள்ளத்தில் கைகள். எதைப் பிடித்துக்கொள்வது என்று தெரியாமல்… இயந்திர மிருகமாய்ப் புகைபோல் விரையும் வண்டி. கூச்சல்… ஓலம்… வலி… வலி… வலி…

***

துண்டு துண்டாய் நினைவுக்கு வந்தது. படிகளில் இறங்கும்போது கையில் மின்னிய குருதிச் சிவப்புப் பட்டையிட்ட கண்ணாடி வளையல். புதிய குதிகால் உயர்ந்த செருப்பின் பளபள சிவப்பு. முன்னால் பறந்த துப்பட்டாவின் மென் சிவப்பு வீச்சு. பெண்கள் பெட்டியின் பச்சை மஞ்சள் பட்டைக் கோடுகள். சறுக்கல். உருளும் சக்கரங்கள். வேகம். வலி.

***

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது இரு கரங்களில்லை.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உள்ளுறுப்பு மட்டுமல்லாமல் வெளியுறுப்பான கை மாற்று செய்யும் அறுவை சிகிச்சை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கேள்விப்பட்டதும் மும்பாயின் மிகப் பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கோரி அவள் விண்ணப்பித்தபோது மனத்தில் ஓடிய நான்காண்டுகளுக்குமுன் இழந்த கரங்களின் கதையும் கதையை ஒட்டிய காட்சிகளும்.

தனக்குப் பொருத்தப்பட்ட செயற்கைக் கைகளைப் பார்த்தாள். அவை செயல்பட்டன ஓரளவு. ஆனால் அவளுக்கு ரத்தமும் சதையும் உள்ள, நரம்புகளும் ரத்த நாளங்களும் ஓடும் உணர்வுள்ள கைகள் தேவை. பற்றிக்கொள்ள. அழுத்த. கிள்ள. பூவைத் தொட. புறாவைத் தடவ. பூனையை அணைத்துக்கொள்ள. தளர்வாக விட. உணவின் தன்மையை உணர. கடற்கரை மணலை அள்ள. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பும்போது பக்க முனைகளைத் தொடுவதற்கு வளைய. யோசனை செய்தபடி கை வளையல்களை ஏற்றி ஏற்றி இறக்க. கூந்தலைக் கோதிவிட. மராட்டிக்காரியான ஆயியின் நவ்வாரிப் புடவையைக் குடி பாட்வா அன்று யார் உதவியுமில்லாமல் தானே உடுத்திக்கொள்ள. ஆயி குளிக்கும்போது முன்பெல்லாம் செய்ததுபோல் பசுநரம்போடும் அவள் பின்னங்கழுத்தையும் முதுகையும் தேய்த்துவிட. 

இன்னும் ஒரு காரணமுமிருந்தது. இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. கோவிந்தின் தாடிக்குள் விரல்களை விட்டுத் துழாவ.

மாற்று அறுவை குறித்த புராணக் கதைகள் அவ்வப்போது திடீரென்று நினைவுக்கு வந்தன. கணபதிக்கு யானைத் தலை வந்த கதை, ஜமதக்னியின் மனைவி ரேணுகாவின் தலையை வெட்டியபின் அவள் எல்லம்மாவாக மாறிய கதை, இழந்த அங்கங்களை மீண்டும் பெறும் கதை, ததிசி முனிவரின் எலும்புகள் வஜ்ராயுதமான கதை, இறந்தவர்கள் உயிர் பெறும் கதை, எலும்புக்கூடாய் மாறிய பின்னும் உணர்ச்சிகளை இழக்காத சிவ பக்தை காரைக்காலம்மையாரின் கதை இப்படிப் பல கதைகள். எல்லாக் கதைகளிலும் ஆக்கை அழிந்து அழிந்தபின் மீண்டும் உருப்பெறும் தன்மைகளைத் தேடினாள். 

ஷல்ய தந்திரம், பழைய மருத்துவ சம்ஹிதைகள், சுஸ்ருதர் செய்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் இவைகளைக் குறித்த கட்டுரைகள் என்று ஒரு பக்கம் படிப்பு ஓடியது. அரசன் கேலனின் மனைவி பிஸ்பலா போரில் காலை இழந்தபோது அவளுக்கு இரும்புக் கால் பொருத்தப்பட்டது, மூக்கின் குழைம அறுவை, செவிமடல் ஒட்டுறுப்பு அறுவை என்று தினம் ஒன்றைப் படித்துவிட்டுச் சாப்பாட்டு மேசையில் விவாதங்கள் ஓடும். “அக்கா, ப்ளீஸ், யானைத் தலை பூனைத் தலைன்னு கதை சொல்ல ஆரம்பிக்காதே…” என்று கேலி செய்வான் தம்பி. 

பாலூட்டி மிருகங்கள் இயல்புகளிலும் உடல் தன்மைகளிலும் மனிதர்களுக்கு மிகவும் அருகில் உள்ளவை என்பார் அப்பா. மனிதக்குரங்கின் சிறுநீரகங்களை மனிதர்களுக்கு வைத்துப் பார்த்திருக்கிறார்கள் அமெரிக்காவில். பன்றிகளின் இதய அடைப்பிதழ்கள், கணையம், ஏன், தோல்கூட உபயோகப்பட்டிருக்கிறது. மரபணுத் திருத்தம், மரபணு நகலாக்கம் மூலம் பன்றிகளின் சிறுநீரகங்கள் மனிதர்களுக்குப் பொருத்தப்படலாம் என்ற கட்டத்துக்கு நாம் வந்தாகிவிட்டது என்று விளக்கினார். அறிவியலில் எதுவும் சாத்தியம்தான், பிரபஞ்சத்தின் தன்மைதான் அறிவியலையும் சாத்தியமாக்குகிறது என்பது அப்பாவின் தாரக மந்திரம்.          

நவீன மருத்துவத்தில் நடந்த உள்ளுறுப்பு மாற்று சிகிச்சைகளைத் தேடி தேடிப் படித்தாள். அத்துடன் ரத்த தானம் முதல் இதய மாற்று வரையிலான கதைகளையும் படங்களையும் உள்ளுறுப்புகளைத் திருடும் கும்பல்களைப் பற்றிய படங்களையும் சளைக்காமல் பார்த்தாள். உடலுறுப்பு தானம் செய்யக் கோரும் பல தொண்டு நிறுவனங்களின் அறிவிப்புகள், உறுப்பு தானம் எவ்வகையிலும் எந்த மதத்துக்கும் புறம்பானது அல்ல என்ற விளக்கங்கள் ஊடகங்களில் வந்தபடி இருந்தன. அவள் எப்போதாவது மறந்தால்கூட சக்லி எப்படிச் செய்வது என்ற செய்முறை, “அப்ஸரா ஆலி” லாவணி பாட்டு இவற்றுக்கு இடையே கண் தானம், சிறுநீரக தானம், கல்லீரல் தானம் பற்றி யாராவது பேசினார்கள். தங்கள் உடலை மருத்துவக் கற்கைக்காகத் தானம் செய்த பல பிரபலங்கள் பற்றிய விவரங்களுக்குப் பத்திரிகைகள் முக்கியத்துவம் தந்தன. வெளியுறுப்புகளில் கை தானம் செய்யப்பட்டுள்ளதா, கை மாற்று அறுவை செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்பது அன்றாடம் அவள் முதல் வேலையாக இருந்தது. 2015இலிருந்து தென்னிந்தியாவில் நடந்திருந்த கை மாற்று அறுவை சிகிச்சைகள் பற்றிய விவரங்களைப் படித்ததும் ஓடி வந்து அப்பாவிடம் சொன்னாள். அப்பாவும் அது குறித்த தகவல்களைச் சேகரித்தவண்ணம் இருந்தார். அப்பாவின் உறவினர்கள் இருந்த சென்னைக்கோ கொச்சிக்கோ செல்வதா இல்லை மும்பாயிலேயே முயற்சிப்பதா என்பதை யோசித்தபின்தான் மும்பாயிலேயே கை மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்திருந்தாள்.

***

அந்த அற்புதமும் நேர்ந்தது. விபத்து நடந்த ஏழாண்டுகளுக்குப் பின் கை மாற்று அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கும் அற்புதம். இளைஞன் ஒருவனின் இரு கைகள். கை மாற்று அறுவை சிகிச்சைக்கான பல லட்சங்களைத் திரட்டும் பொறுப்பை டாக்டர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் வெற்றி தோல்வி இரண்டையும் அவள் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும், அசாத்தியப் பொறுமையுடன் விளைவுகளை நோக்கவேண்டும், எழுந்து, நின்று பின் குழந்தை நடை பயில்வதைப் போல் மிகவும் மெள்ள நடக்கப் போகும் ஒன்று இது, அவசரம் காட்டக்கூடாது, அவள் உடல் பொருத்திய கைகளை ஏற்கவும் மறுக்கலாம் என்றெல்லாம் கூறி அவளைத் தயார்ப்படுத்தினார்கள்.       

கை மாற்று அறுவை என்பது மிகவும் சிக்கலான ஒன்று. எலும்புகளைப் பொருத்துதல், முக்கிய தமனிகள், ரத்த நாளங்கள், நரம்புகள், தசை நாண்கள், சருமம் இவற்றைச் சீர்ப்படுத்துதல் இப்படிப் பல்வகைப்பட்ட விஷயங்களை ஒன்றிணைக்கவேண்டும். ரத்த நாளங்களைப் பலமுனைகளில் இணைக்கவேண்டும். முதலில் எலும்பு முனைகளை இணைக்கவேண்டும். முக்கியமான மூன்று நரம்புகளாவது இணைக்கப்படவேண்டும். தவிர எத்தனையோ தசைகளைச் சேர்க்கவேண்டும் என்று படங்களுடன் விளக்கினார்கள். 

அறுவை சிகிச்சையறைக்குப் போகும்முன் ஆயியையும் தம்பியையும் ஒரு முறை பார்த்தாள். விரலை உயர்த்திக் காட்டினான் தம்பி. முத்தத்தைப் பறக்கவிட்டாள் ஆயி. கோவிந்த் கைபேசியில் தோன்றி அணைப்பையும் அன்பையும் தந்திருந்தான். “உனக்குக் கைகள் கிடைத்தால் என்னை இறுக்கி அணைத்துக்கொள்வாய்தானே?” என்று கேட்டிருந்தான் ஒரு முறை. “இல்லை, முதலில் உன்னைக் குத்திப் பார்ப்பேன்” என்றுவிட்டுச் சிரித்ததும் “நன்றாகக் குத்து ப்ளீஸ்” என்றான். கண்களில் ஈரம்.

அப்பா வரவில்லை. வரமுடியாத இடத்தில் இருந்தார்.

***

பதினாறு மணி நேரக் கை மாற்று அறுவை. தொற்று ஏற்படாமல் இருக்க மருந்துகள். அவள் கையைவிடப் பருத்திருந்த ஆண் கைகள். முதலில் கல்போல் கனம். பிறகு மூன்று நாட்களில் உதவியுடன் நடத்தல். கையை அசைக்கும் பயிற்சிகள். தொற்று ஏற்படாத வண்ணம் வீட்டை முற்றிலும் தயார் செய்தபின் ஒரு மாதத்துக்குப்பின் வீட்டுக்கு வருகை. தொடர்ந்த பயிற்சிகள், மருந்துகள். ஆறு மாதங்களுக்குப்பின், மழை ஓய்ந்த ஒரு நாள் காலையில் நீள்வால் கிளி ஒன்று திடீரென்று பறந்து வந்து சன்னலிலிருந்து நீண்ட கம்பி ஒன்றில் அமர்ந்து கிக்கீ என்றபோது எறும்பு ஊர்வதைப்போல் உணர்வு ஏற்பட்டது விரல்களில். அது உண்மையா அல்லது ஏதோ பழைய நினைவின் மீட்சியா என்று நினைக்கும்முன் மீண்டும் எறும்பு ஊர்ந்தது. ஆள்காட்டி விரல் அதை ஏற்பதைப்போல் மெல்ல அசைந்தது. 

“ஆயீ…” என்று கத்தினாள். 

வந்து பார்த்த ஆயி, “கையோட தோல் நிறம் உன் கை நிறத்துக்கு மாறி வரபோதே எனக்கு நம்பிக்கை வந்தது” என்றுவிட்டு கையைப் பற்றிக்கொண்டாள். 

டாக்டரிடம் சொன்னபோது மேலே கையைக் காட்டிவிட்டுச் சிரித்தார். போன மாதம் செய்த வழக்கமான காந்த அதிர்வு அலை வரைவு மூளையில் அதிக அளவு இயக்கத்தைக் காட்டியது என்றார். பல ஆண்டுகள் கைகளில்லாமல் இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப்பின் உடனடியாகச் செய்த வரைவில் இந்த உடல் பகுதிக்கான மூளை இயக்கம் மிகவும் பலகீனமானதாக இருந்தது. போன மாதமே அவருக்கு மிகுந்த நம்பிக்கை வந்திருந்தது என்றார். அவள் கை அளவுக்கே இந்தக் கை மாறி ஒரு பெண்ணின் கையாக முற்றிலும் மாற வாய்ப்புண்டு என்றார்.

நாளாக நாளாக விரலசைவுகளுடன் ஒரு லயமும் இணைந்துவருவதுபோல் தோன்றியது. ஏதோ தாளத்தில் விரல்கள் அசைந்தன. மேசையை விரல்கள் வளைந்து தட்டின. சாப்பாட்டுத் தட்டு முதல் மர முக்காலி, கதவு எல்லாவற்றிலும் தட்ட வேண்டும்போல் தோன்றியது. 

மிகவும் தயக்கத்துடன் டாக்டரிடம் கை தானம் செய்த குடும்பத்தினரின் விவரங்களைக் கேட்டாள். அவர் அவர்கள் தொடர்பு எண்ணைத் தந்தார்.

ஆயியிடம் கூறிவிட்டு எண்ணைத் தொடர்புகொண்டாள். எதிர்ப்பக்கம் “ஹலோ” என்றதும் ஆங்கிலத்தில், “ஆன்ட்டி, நீங்கள் தேவகி தினகரன்தானே?” என்றாள்.

“எஸ்” என்று பதில் வந்தது.

“உங்களுக்கு என்னைத் தெரியாது. உங்கள் மகன்…”

“அனகனா?”

“ஆமாம். அவர் கை…”

“ஹா…” என்றோர் அலறல் வந்தது எதிர்ப்புறத்திலிருந்து.

“ஆன்ட்டீ…”

“சொல்லும்மா…” என்றார் தமிழில்.

“ஆன்ட்டி, திடீர்னு கூப்பிட்டுட்டேன். தப்பா நினைக்காதீங்க” என்றாள் தமிழில். 

“தமிழ் பேசத் தெரியுமா? எப்படியிருக்கேம்மா?”

“இப்போ நல்லா தேறிட்டு வரேன், ஆன்ட்டி. அவர்… அனகன்… என்ன வேலை செய்திட்டிருந்தார்?”

அனகன் சிறு வயதிலிருந்தே மிருதங்கம் பயின்றான். மேடையில் வாசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தபோதுதான் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மூளைச்சாவு நேர்ந்தது. உள்ளுறுப்புகளையும் கைகளையும் தானம் செய்யத் தீர்மானித்தனர். வெளியுறுப்பான கைகளைத் தானம் செய்வது உறவினர்கள் யாருக்கும் ஏற்பாக இருக்கவில்லை. தேவகிதான் வற்புறுத்தினார் அந்தக் கைகள் எங்காவது யாருக்காவது உதவட்டும் என்று. 

விளக்கிவிட்டு, அவள் ஏன் இதைக் கேட்கிறாள் என்று கேட்டாள். தன் கை விரல்கள் ஏதோ விதமான லயத்துடன் அசைவதைக் கூறியதும் மீண்டும் “ஹா!” என்ற அலறல் கிளம்பியது தேவகியிடமிருந்து.   

கைபேசியை வைத்துவிட்டு அப்பாவின் அறைக்குச் சென்றாள். அவர் மேசை மீது தலை வைத்து அமர்ந்தால் அவர் மடிமீது சாய்வதுபோல் இருக்கும். ஆயி அவர் மேசையை அப்படியே வைத்திருந்தாள். காகிதக் கவ்வியில் வைத்திருந்த ஒரு கற்றைக் காகிதங்களைக்கூட அப்படியே வைத்திருந்தாள்.     

மேலாக இருந்த பக்கத்தில் ’சராசரம் நிறை மனத்துவம்/Panpsychism’ என்று தலைப்பிட்டு அது குறித்த ஏதோ புத்தகத்திலிருந்து ஆங்கிலத்தில் குறிப்பெடுத்து அதைத் தமிழிலும் எழுதியிருந்தார். தமிழிலும் எழுதியது அவளுக்கும் தம்பிக்காகவும் இருக்கும். ஆயியிடம் மராட்டியும் அப்பாவிடம் தமிழும் கற்றுக்கொண்டிருந்தனர் இருவரும்.    

“பிரக்ஞையின் தன்மை என்ன? அது புறநிலையில் காணக்கூடிய, அதன் அடிப்படை அணுநிலை வரை உயிருள்ள ஒன்றா? அல்லது இதுதான் மெய்ம்மை, எதார்த்தம் என்று கூறக்கூடிய ஒன்று இருக்கிறதா?”

“இன்னொன்றுடன் தொடர்புகொள்ளும் செயலின் வரம்புகளைப் புற யதார்த்தம் குறித்த நம் ஆழ்ந்த பார்வையாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். ஒன்றை நோக்குவதிலும் நினைவுகொள்வதிலும் நமக்கு வரையறுக்கப்பட்ட திறமைகள்தாம் உள்ளன. ஆனால் நாம் இருப்பதோ வரையறுக்கப்படாத பிரக்ஞை இயற்றிகள் செயல்படும் பிணையத்தில். அவற்றின் சிக்கலான தன்மை நம் வரையறுக்கப்பட்ட திறமைகளையும் மீறியது.” 

குறிப்பின் கீழே தத்வம் அஸி என்று எழுதியிருந்தார். அதன் கீழே:

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்சோதி

என்று வள்ளலார் பாடலை அடிக்கோடிட்டு எழுதியிருந்தார்.

ஆயி பஹினாபாயியின் அபங்க் ஒன்றை முணுமுணுத்தபடி சமைத்துக்கொண்டிருந்தாள்.

கட் பங்கலியாவரி நப் நபாசே பீதரி
தைஸா தேஹ் கேலியானே ஜீவ் ஷிவ் மித்யா பாணே
ஜல் ஆட்டலியாவரி ப்ரதிபிம்பா கைஸி உரி
பஹிணி மணே பாஸே த்வைத் ஜாணா உபாதீனே யேத்

(குடம் உடைந்தால் அதன் உள்ளிருக்கும் வெளி
உள்ளது வெளியுடன்
அதுபோல் உடல் மறைந்தால் ஜீவனும்
சிவனுடன் விள்ளாததாகிறது
நீர் ஆவியானால் அதன் பிம்பம்
எப்படியிருக்க முடியும்?
பஹினி சொல்கிறாள் இரண்டாகத் தெரிவது
தோற்றமயக்கம் என்று)

***

டாக்டர் கூப்பிட்டார் சில நாட்களுக்குப்பின். அவர் அறையில் ஒரு தம்பதி இருந்தனர். அவள் வந்ததும் அவளருகே ஓடி வந்து அவள் இரு கரங்களைப் பற்றி, கண்ணில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்மணி. 

“தேவகி ஆன்ட்டியா?” என்றாள்.

தலையை ஆட்டினார் கண்ணீர் வழிய. 

சற்றுத் தூரத்தே நின்ற அவள் கணவர் தினகரன் அருகே இருந்த மேசை மேல் வைத்திருந்த அரக்கு நிறப் பட்டுத் துணியால் சுற்றப்பட்ட மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு முன்னால் வந்து அவள் முன் நீட்டினார். 

இரு கை ஏந்தி அதை வாங்கிக்கொண்டாள்.


புகைப்படம்: பானு

இதழ் 12 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்