கயிற்றரவு

22 நிமிட வாசிப்பு

1

நிரஞ்சனா மேத்யூஸ், 37, விஸியோ டிவி நிருபர், ஆர்கோஸ் தொழில்நுட்பக் குழுமத்தின் தலைமை அலுவலக வளாகம், பிராட்டிஸ்லாவா, ஸ்லோவாக் குடியரசு, 20 அக்டோபர் 2027, புதன்கிழமை

கணேசலிங்கம், என் மேல வெளிச்சம் சரியா படுற மாதிரி பார்த்துக்குங்க. இந்தப் பக்கம் நிறுத்தி வச்சிருக்குற மின்னிலக்கக் குற்றப் புலனாய்வு வேன்களையும் பின்னால தெரியுற ஆர்கோஸ் கட்டடத்தையும் ஃபிரேமுக்குள்ள கொண்டு வாங்க.

“…………………………………………………………………………………………………”

இப்ப அதுக்கெல்லாம் நேரமில்ல. இருக்குற வெளிச்சத்தை வச்சு எடுத்தா போதும். கைதுகள் ஆரம்பிச்சா இந்த இடம் ரணகளமாகப் போகுது. தூண்டிலைப் போட்டுக் குளத்துல மீன் பிடிக்குறதப் பார்த்திருப்பீங்க. ஆனா இது திமிங்கல வேட்டை. தூண்டில்ல மாட்டின புழுவுக்கெல்லாம் திமிங்கலம் சிக்காது. திமிங்கலத்தப் பிடிக்குற வழிமுறையே வேற. ரொம்ப நாசூக்காத்தான் அதைப் பிடிக்கணும். உங்ககிட்ட லைட்டர் இருக்கா? கொடுங்க. காலங்காத்தால இங்க வந்தது. இப்பவே மணி பன்னிரண்டாகுது.

“…………………………………………………………………………………………………”

யாருக்குத் தெரியும்? விசாரணைய முடிச்சிட்டு அவங்க வெளிவரதுக்குள்ள சாயந்திரம்கூட ஆகலாம். அதுக்குள்ள நமக்கு இந்த நட்டநடு ரோட்டுல டாய்லட் வராம இருக்கணும். உங்களுக்காச்சும் பரவாயில்ல. கட்டடத்தைச் சுத்தி ரெண்டு பக்கமும் கண்ணுக்கு எட்டுனவரைக்கும் விஸ்தாரமான சுவர் இருக்கு. நேரம் ஆகும்னுதான் தோணுது. அதான் சொன்னேனே. இது திமிங்கல வேட்டை. திமிங்கலங்களைப் பாரம்பரியமா எப்படி வேட்டையாடுவாங்க தெரியுமா கணேசலிங்கம்? சில வருஷத்துக்கு முன்னால டென்மார்க்குக்கு ஒரு ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டுக்குப் போனப்ப ஃபேரோஸ் தீவுகளுக்குப் போய் அங்க இருக்குற ஒரு கடற்கரையில ஒரு பாறைக்குப் பின்னால மத்த நிருபர்களோட ஒளிஞ்சிருந்து திமிங்கல வேட்டையப் பார்த்தேன். மாநாட்டுக்கு வந்திருந்த டிவிகாரங்க கண்ணுல படுற மாதிரி ஆர்ப்பாட்டம் செய்ய வந்திருந்த சில பசுமை இயக்கத்துக்காரங்கதான் எங்கள அங்க ரகசியமாப் படகுல கூட்டிட்டுப் போனாங்க. வெறும் ஆர்வக் கோளாறு. ஐ.நா. மாநாட்டுல கலந்துக்க வந்திருக்குற உலகத் தலைவர்களோட கண்ணுல படுற மாதிரி கோஷம் போட்டா உலகத்தை அழிவுல இருந்து காப்பாத்திடலாங்கிற நப்பாசை. திமிங்கலங்கள எப்படிக் கொடூரமாச் சாகடிக்கறாங்கனு நிருபர்கள்கிட்ட காட்டுனா உலகம் பொங்கி எழுந்து திமிங்கல வேட்டைக்கு எதிராப் போர்க்கொடி தூக்கிடும்ங்கிற நம்பிக்கை.

“…………………………………………………………………………………………………”

அவங்களையும் இந்த மாநாடு நடக்குற இடங்களுக்கு அனுப்பி வைக்க ஆள் இல்லாமலா அவங்க அங்க விமானம் ஏறி வந்திருப்பாங்க? ஆனா சும்மா சொல்லக்கூடாது. ஐஸ்லாண்டுக்கும் நோர்வேக்கும் இடையில சினிமா செட்டு போட்ட மாதிரி நீல நிறக் கடலும், வெள்ளை வெளேர்னு கடற்கரையுமா பதினெட்டுத் தீவுங்க. தலைவர்கள் எழுதி வச்சுகிட்டு வாசிக்கிறத எவ்வளவு நேரம்தான் கேட்டுகிட்டு இருக்குறதுனு மாநாட்டைப் பத்தி எழுத வந்திருந்த நிருபர்கள்ல ஒரு அஞ்சு பேரு கிளம்பி வந்தோம். நான், ஒரு மெக்ஸிகோகாரன், ஒரு ஸ்வீடன்காரி, இந்தி யூடியூப் சேனல் நடத்துற பொடியன், சிகரெட்டும் வாயுமாவே பொழுதன்னைக்கும் இருக்குற ஒரு கிழட்டு அமெரிக்கன். நம்ம சேனல்ல தவிர மத்த எல்லாமும் சின்னப் பத்திரிகை அல்லது சமூக ஊடகம். ரெண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னாடி நமக்கு முன்னாடி இருந்த கடலையே மத்தால கடையுற மாதிரி இரைச்சல். என்னனு பார்த்தா தூரத்துல இருந்து ஓரமா நீல நிறப் பட்டை போட்டு வெள்ளை நிறத்துல மீன்பிடிப் படகுங்க அரைவட்டமா கரையைப் பார்த்து முன்னேறிகிட்டு இருக்கு. படகுகள்ல கையில ஈட்டியைத் தூக்கி வச்சுகிட்டு வாலிபர்களும் கிழவனும்களுமா ஏராளமான பேரு படகுகளுக்கு நடுவுல இருக்குற கடலைப் பார்த்துக் கூச்சல் போட்டுகிட்டே எங்களைப் பார்த்து முன்னேறி வராங்க. முதல்ல அவங்க எதைப் பார்த்துக் கத்துறாங்கனு நம்ம யாருக்கும் புரியல. கடல்முழுக்க நுரை பொங்குது. சத்தியமாச் சொல்றேன். படகுல இருந்தவங்க கையில பளபளக்குற ஈட்டிய வச்சுகிட்டு ஆடிகிட்டும் கூச்சல் போட்டுகிட்டும் இருந்ததையும் பார்த்தப்ப முதல்ல ஏதோ கொண்டாட்டம் நடக்குதோனுதான் எனக்குத் தோணுச்சு. மீனவங்க எல்லாம் பொண்டாட்டிக்குத் தெரியாம கடலுக்குப் போய்க் குடிச்சுக் கும்மாளம் போட்டுத் திரும்புறாங்கனுகூட நினைச்சேன். நம்ம எல்லாரையும் அங்கக் கூட்டிகிட்டு வந்திருந்த பிரெஞ்சுக்காரி “கேமிராவத் தயாரா வச்சிருங்க, தயாரா வச்சிருங்கனு” அவசரப்படுத்துறா. ஒரு வழியா கொஞ்ச நேரம் கடல் கொந்தளிப்பு கொஞ்சம் அடங்குனதும் தண்ணிக்கு மேல ஒரு கறுப்பு நிற வால் தூக்கி அடிச்சதப் பார்க்க முடிஞ்சது. அப்பத்தான் நமக்கு உண்மை புரிஞ்சது. இந்தி சேனல்காரன் சன்னதம் வந்த மாதிரி ‘அதோ பார்! திமிங்கலம், திமிங்கலம்’னு தனக்குத் தானே கூவ ஆரம்பிச்சான்.

“…………………………………………………………………………………………………”

இல்லை, வேண்டாம். ஒரு நாளைக்கு ஆறு சிகரெட்டுக்கு மேல பிடிச்சா சீக்கிரம் வயசாகிடும். ஆறுதான் சரியான நம்பர். சிகரெட்டால சாவு வரது நிச்சயம். ஆனா சாகும்போதும் மூஞ்சி நல்ல இளமையா இருந்தா தேவல. கூட்டு வன்புணர்வை எப்பவாவது உங்கக் கண்ணுக்கு முன்னால எப்பவாவது பார்த்திருக்கிங்களா கணேசலிங்கம்? அன்னைக்கு அந்தக் கடற்கரையில நடந்ததும் கிட்டத்தட்ட அது மாதிரியான கொடூரமான விஷயம்தான். படகுகள் ஏறி கடலுக்குள்ள போய் ஒரு திமிங்கலத்தைச் சுத்தி வளைச்சு அதைக் கடற்கரை வரைக்கும் விரட்டிகிட்டு வந்திருக்காங்க. வன்முறைக்கும் காமத்துக்கும் அதிக வித்தியாசமில்லனு எனக்குத் தோணுது கணேசலிங்கம். ரெண்டும் ஒரு வகையில ஒரே விஷயம்தான். அன்னைக்கு ஃபேரோஸ் தீவுகள்ல ஒண்ணான சுடோரோ தீவுக் கடற்கரையில சட்டையைக் கழட்டித் திறந்த மேனியோட உடம்பெல்லாம் வேர்வை பளபளக்க ஈட்டியத் தூக்கிப் பிடிச்சு முறுக்கி நிக்குற கையோடயும், அகலமான மார்போடயும், ஆசையிலயும் வெறியிலயும் பிதுங்கி நிக்குற கண்கள்ல கடல்ல பட்டு ஜொலிக்குற வெயில் தெறிக்க நின்ன அந்தப் படகுக்காரங்களப் பார்த்தப்ப எனக்கு இதுதான் தோணுச்சு. படகுக்காரங்க துரத்தி வந்ததால ஏற்பட்ட மரண பீதியில திமிங்கலம் தானாவே கரைமேல ஏறி வந்திருச்சு. இதுக்காகக் காத்திருந்த மாதிரியே படகுல இருந்தவங்க கரைக்குக் குதிச்சு இடுப்புல சொருகியிருந்த பெரிய இரும்பு கொக்கிகளத் திமிங்கலத்தோட உடம்புல சொருகி அதைக் கரைக்கு இழுத்தாங்க. நாலு நாலரை மீட்டர் நீளத் திமிங்கலம். திமிங்கலத்தோட நீளத்தை வச்சு அது அப்பத்தான் இனவிருத்திக்குத் தயாராகி இருக்குற ஒரு இளம் பெண் திமிங்கலம்னு சில்வியா – அந்தப் பிரஞ்சுக்காரி – பின்னால எங்ககிட்ட சொன்னா. திமிங்கலத்தைக் கரைக்கு இழுத்துகிட்டு வந்த பிறகு அந்தப் படகுக்காரங்களுக்குத் தலைவனாட்டம் இருந்த கிழவன் ஒருத்தன் பல்வச்ச நீளமான கத்தியால திமிங்கலத்தோட தலையையும் உடம்பையும் இணைக்குற முதுகுத்தண்டையும் முக்கிய ரத்தக் குழாயையும் சரசரனு அறுத்துப் போட்டான். திமிங்கலங்களோட குரலை எப்பவாவது கேட்டிருக்கிங்களா கணேசலிங்கம்? இண்டர்நெட்டுல கிடைக்கும். கேட்டுப் பாருங்க. ஒரு பொம்பளை குரலெடுத்துப் பாடுற மாதிரியே இருக்கும், – கடலோட அத்தனை காதலையும் சோகத்தையும் தன்னோட குரலுக்குள்ளாற தேக்குன மாதிரி ஒரு சத்தம். பழைய கிரேக்க மாலுமிங்க திமிங்கலத்தோட குரலைக் கேட்டு அது அழகான இளம்பெண்ணோட குரல்னு நினைச்சு நினைவு சீரழிஞ்சுப் போயிருக்காங்க. கிழவன் திமிங்கலத்த அறுத்தப்பவும் அதே மாதிரி ஒரு ஓலம் அந்தக் கடற்கரை முழுக்கக் கேட்டது. வெள்ளை நிறக் கடற்கரை மொத்தமும் திமிங்கலத்தோட கழுத்துல இருந்து பீச்சியடிச்ச ரத்தம் பவளத் துண்டுகளாக் கிடக்குது. திமிங்கலங்க அதுங்க குட்டிகளுக்குப் பாலூட்டும் தெரியுமா கணேசலிங்கம்? ஏதோ சொல்லத் தோணுச்சு. இப்ப இந்த ஆர்கோஸ் நிறுவனத்துக்குள்ள நடக்குறதும் திமிங்கல வேட்டைதான். விசாரணைங்கிற பேருல இதை மெல்ல மெல்லக் கரைக்கு ஓட்டிக்கிட்டு வந்து அறுத்துப் போடுவாங்க பாருங்க.

“…………………………………………………………………………………………………”

நான் சுடோரோ தீவுல பார்த்த திமிங்கலத்தவிட இது ரொம்பப் பெரிய திமிங்கலம் கணேசலிங்கம். அவ்வளவு சுலபமா சாகாது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுளுக்கு அப்புறம் பங்குச் சந்தை மதிப்புல லட்சம் கோடி டாலர் மதிப்பைத் தொட்ட நாலாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. ஆனா இப்ப அந்த மூணு நிறுவனத்தைவிட ரொம்ப முன்னேறி இப்ப மதிப்புல முப்பது லட்சம் கோடியைத் தாண்டி நிக்குது. தினமும் உலகம் முழுக்க – குறிப்பா வளர்ந்து வர நாடுகள்ல – லட்சத்துல இருந்து ரெண்டு லட்சம் பேர் வரைக்கும் இந்த நிறுவனம் நடத்துற தகவல் பரிமாற்றத் தளத்துல உறுப்பினரா சேர்ந்துகிட்டு இருக்காங்க. அதுலயும் இந்த அஞ்சு வருஷமா அது வழங்குற மெமரி எடிட்டர் சேவை சக்கை போடு போடுது. இந்த நிறுவனத்தோட உறுப்பினர்களா இருக்குற ஐநூறு கோடி பேருக்கும் சாப்பாடு மாதிரி, குடிக்கிற தண்ணி மாதிரி உடுத்திக்குற உடுப்பு மாதிரி இது வழங்குற சேவைகளும் ஒரு அன்றாட அத்தியாவசியம். தலையைச் சரசரனு பல்வச்ச கத்தியால அறுக்கலாம்தான். ஆனா உலகம் முழுக்கப் பரவியிருக்குற ஐநூறு கோடி பேரு பலமுள்ள இதோட உடம்பு நிச்சயம் தூக்கிப் போட்டுத் துடிக்கும். அதுவே பல அரசாங்கங்களுக்குத் தலைவலியா இருக்கும். அதனாலதான் ஸ்லோவாக்கியக் காவல்துறையோட அமெரிக்கா, ஜப்பான், சீனா, இஸ்ரேல், ரஷ்யா, பிரிட்டன்னு சாதாரணமா எந்த ஒரு விஷயத்துலயும் லேசுல ஒத்துப்போகாத நாற்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளோட போலீஸ்காரங்களும் உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணைக்காக இப்ப இந்த நிறுவனத்துக்குள்ள சேர்ந்தே போயிருக்காங்க.

“…………………………………………………………………………………………………”

இதுல நாம யாரு பக்கம்னு கேக்குரிங்களா? நாம யாரு பக்கமும் இல்ல, கணேசலிங்கம். சேனல்ங்கிறது வெறும் பொழுதுபோக்குப் பக்கம்தான் எப்பவும் நிக்கணும். திமிங்கலத்தோட கழுத்தைச் சரசரனு அறுத்துப் போட்டாங்கனு சொன்னேனே. நம்ம வியூவர்ஸோட கண்கள்தான் அந்தக் கழுத்தை அறுக்குற பல்வச்ச பளபளப்பான கத்தி. நீங்களும் நானும் நொடிச்சுப் போனா சேதியா? தினமும் மார்க்கெட்டுல எத்தனையோ மீன் அறுபடுது. ஆனா உலகத்துலேயே மிகப் பெரிய திமிங்கலங்கள்ல ஒண்ணு அறுபட்டா அது சேதி. காலங்காலமா பெரிய இடத்துல இருக்குறவங்களோட வீழ்ச்சிதான் நம்ம எல்லாருக்கும் ரொம்பப் பெரிய பொழுதுபோக்கு அம்சம். மறுபடியும் மறுபடியும் பார்த்து ரசித்து அரட்டை அடிக்கக் கூடிய சலிப்பில்லாத கேளிக்கை. அதைச் சுவாரசியம் குறையாம நம்ம நேயர்களுக்கு வழங்குறதுதான் நம்ம வேலை. மெமரி எடிட்டரை உலகத்துக்குக் கொடுத்த நிறுவனம் இழுத்து மூடினா அதுதான் நினைவுல நிக்குற விஷயம்.

“…………………………………………………………………………………………………”

இல்லை, மழை வராதுனு தோணுது. டாய்லட் அப்புறம் பார்த்துக்கலாம். ஏய், அங்கப் பாருங்க. உள்ள போன விசாரணை அதிகாரிகள்ல சில பேரு கை நிறைய அட்டைப் பெட்டிகளோட வாசலைத் தாண்டி வராங்க. மத்த ஊடகங்க இங்க வந்து சேர்றதுக்குள்ள அவங்கள கேட்டுல மடக்கலாமானு பாருங்க. ஹஃபீஸ், என் குரல் ஒழுங்கா பதிவாகுதா? கணேசலிங்கம், அங்க எங்க பார்க்குறிங்க. கேமிராவுல நிறுவனத்தோட பேரும், வெளிய வர விசாரணை அதிகாரிகளோட முகமும் துல்லியமாப் பதிவாகுறது முக்கியம். ஃபோகஸ் பண்ணுங்க! ஃபோகஸ் பண்ணுங்க!

2

10 ஜூலை 2027 என்று தேதியிட்ட எக்கானமிஸ்ட் சஞ்சிகையில் வெளியான ஆர்கோஸ் தொழில்நுட்பக் குழுமத்தின் விளம்பரப் பகுதி

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதி சமீபத்திய சாத்தியங்களை உள்ளடக்கிய ஆர்கோஸ் தொழில்நுட்பம் இன்று பல நூறு கோடிப் பேர்களின் அன்றாட வாழ்க்கையை இனிமையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றிக்கொண்டு வருகிறது. கடந்து ஐந்து வருடங்களாக வெற்றிகரமாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் எங்கள் மெமரி எடிட்டர்© செயலியின் வழியாக ஆர்கோஸ் உறுப்பினர்கள் நானூறு கோடி பேர்களுக்கு மேல் (ஜூன் 2027 எண்ணிக்கைத் தரவுகளின்படி) எங்கள் பானோப்டெஸ்© தளங்களில் பதிவேற்றும் அவர்களது புகைப்படங்களையும் காணொளிகளையும் எங்கள் சக்திவாய்ந்த அல்கொரிதங்கள் எனப்படும் படிமுறைத் தீர்வுகளின் வழியாக அழகுபடுத்துவது மட்டுமின்றி நடந்து முடிந்த சம்பவங்களில் பங்கெடுத்தவர்களின் தோற்றம், முகபாவனை செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் தங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்துக்கொண்டு வருகிறார்கள்.

இதைச் சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் ஆர்கோஸ் தொழில்நுட்பத்தின் 45,000 சர்வர்கள் என்னும் மூலக் கணினிகள் இருக்கின்றன. இவை இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி புகைப்படங்களையும் காணொளிகளையும் நொடிகளில் தேடிக் கண்டுபிடித்து அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றலையும் நொடிக்கு 10 லட்சம் புகைப்படங்களையும் காணொளிகளையும் எங்கள் பயனீட்டாளர்களுக்கு விரல் சொடுக்கில் தேடி எடுத்து வழங்கும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றன.

அது மட்டுமல்லாது எங்கள் அல்கொரிதங்கள் மிகச் சக்திவாய்ந்த செயற்கை மின்னியல் நரம்புப் பின்னல்களாகச் செயல்பட்டு இத்தனை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் வழியாக உங்கள் மிகச் சிறிய முகபாவனை மற்றும் தோற்ற மாற்றங்களையும் துல்லியமாகத் தொடர்ந்து கற்று அவற்றைப் பயன்படுத்தி உங்களுக்குப் புதிய முகத் தோற்றங்களையும் செயல்பாடுகளையும் உருவாக்கித் தருகின்றன. நொடிக்கு நொடி நமது பானோப்டெஸ்© தளங்களில் பதிவேற்றப்படும் காட்சிகளை உன்னிப்பாகக் கிரகித்துக்கொள்ளும் எங்கள் மூலக் கணினிகள் அதே வேகத்தில் மேலும் மேலும் துல்லியமாகிக்கொண்டே வருகின்றன. இதன் முடிவு? உங்கள் கடந்த காலம் இனிமேல் சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கையில் இல்லாமல் இப்போது உங்கள் கையில். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட முடிவுகளையும் உரையாடல்களையும் உடையதாக நீங்கள் உங்கள் கடந்த காலங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ளலாம்.

இந்தத் தொழில்நுட்பம் பணக்காரர்களின் விளையாட்டுப் பொருளாக மட்டும் முடங்கிப் போய்விடாமல் இருக்க ஆர்கோஸ் தொழில்நுட்பம் தெற்காசியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா போன்ற பகுதிகளிலுள்ள வளரும் நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான ஏழைகளுக்கும் பயன்படும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 2035ம் ஆண்டுக்குள் இவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் பானோப்டெஸ்© செயலி பதிவேற்றப்பட்ட ஓர் இலவசத் திறன்பேசி இருக்கும். அவர்களும் இந்தத் தொலைபேசிகளின் வழியாக ஐந்தாண்டுகளுக்கு இலவசமாகவே பானோப்டெஸ்© தளத்தில் தங்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றிட முடியும். வெறும் சாகசத்துக்காக அல்ல. நாம் செய்த செயல்கள் என்றாலும்கூட நமது கடந்த காலத்துக்குமேகூட நாம் அடிமைகளாகிவிடக் கூடாது என்று ஆர்கோஸ் தொழில்நுட்பம் திடமாக நம்புகிறது.

இப்படி மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களையும் காணொளிகளையுமே அதிகாரப்பூர்வமானவையாக அங்கீகரிக்க வேண்டி ஆர்கோஸ் தொழில்நுட்பம் கருத்துரிமை ஆர்வலர்களோடு கைகோத்துச் செயல்படும். ஒரு காட்சியில் பங்கெடுத்தவர்கள் அனைவரின் சம்மதமும் இருந்தால் திருத்தப்பட்ட காணொளிகளைச் சட்டப்பூர்வமானவையாக அங்கீகரிக்க அரசாங்கங்கள் முன்வர வேண்டும் என்று ஆர்கோஸ் தொழில்நுட்பம் 2028லிருந்து வலியுறுத்தும்.

நாம் சொன்னதையும் செய்ததையும் திருத்திக்கொள்ளும் உரிமைதான் உண்மையான கருத்துச் சுதந்திரம். எங்கள் மெமரி எடிட்டர்© செயலி சாத்தியப்படுத்தி இருக்கும் நமது நினைவுகளைத் திருத்திக்கொண்டு அழகாக்கும் இந்த உரிமைதான் உண்மையான தகவல் தொழில்நுட்பப் புரட்சி. இந்தப் புரட்சியை உங்களுடன் சேர்ந்து சாத்தியமாக்க ஆர்கோஸ் நிறுவனம் விரும்புகிறது. ஏனென்றால் உங்கள் நினைவுகளை அழகாக்குவதுதானே எங்கள் வியாபாரத்தின் நோக்கம்.

ஆர்கோஸ் தொழில்நுட்பம். மேலும் வண்ணமயமான உலகுக்காக.

3

பாவெல் துருகோவ்ஸ்கி, 49, சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர், உண்மைக் கூட்டணி, நியூ யார்க், 19 அக்டோபர் 2027, செவ்வாய்க்கிழமை

“…………………………………………………………………………………………………”

நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் பன்னாட்டு அரசாங்கங்கள் ஆர்கோஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை உண்மைக் கூட்டணி முழுமனதாக வரவேற்கிறது. ஆர்கோஸ் தொழில்நுட்பம் கடந்த ஐந்து வருடங்களாக நடத்திவரும் இந்த மெமரி எடிட்டர் செயலியை உண்மைக்கு எதிராக உயர்த்தப்பட்டிருக்கும் போர்க்கொடியாகவே நாங்கள் கருதுகிறோம். கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் நம் விருப்பத்துக்கு மாற்றுவது பொய் சொல்வதற்குச் சமம். இப்படித் திருத்தப்பட்ட பிரதிகளுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைத் தேடிக்கொள்ள முயல்வது பொய்யைச் சட்டப்பூர்வமாக்க முயல்வது நமது தேசத்தின் அடிப்படையாக இருந்து வரும் அரசியலமைப்பிலிருந்தும் சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளிலிருந்தும் உண்மையை அகற்றிவிட்டுப் பொய்யைப் பீடத்தில் ஏற்றி வைக்கச் செய்யப்படும் ஒரு முயற்சியேயாகும். ஒன்று மட்டும் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நமது சட்டக் கோட்பாடுகளில் இப்போது சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைக்குத் தரப்படும் ஒரே முக்கியத்துவம் சிதறுமானால் அது நமது சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கும் தனிமனிதச் சொத்துரிமைக்கு மட்டுமல்ல, நமது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் உயிர் வாழ்தலுக்கும்கூட மிகப் பெரிய அச்சுறுத்தலாகப் போய் முடியும்.

“…………………………………………………………………………………………………”

சம்பவத்தில் பங்கெடுத்தவர்கள் எல்லோரும் சம்மதம் தெரிவித்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? அப்படி நடந்தால் ஒரு ஒற்றைப் பொய் கூட்டுப் பொய் ஆகிவிட்டது என்று மட்டுமே அர்த்தம். கடந்த காலம் என்பது கடந்த காலம்தான். அந்தக் கணத்தில் நாம் செய்த செயலாலும் சொன்ன சொல்லாலும் ஏற்பட்ட விளைவு என்பது ஏற்பட்டதுதான். அதைப் பதிவில் மாற்ற நினைப்பது சுத்த அயோக்கியத்தனம். ஒருவர் மற்றொருவனைக் கொலை செய்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். சம்பவத்தில் அவனோடு இருந்த மற்ற இருவர் சம்மதித்துக் காட்சியில் செத்துப் போனவன் எழுந்து நடப்பதைப்போல் மாற்றி அந்தப் பதிவுக்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வாங்கித் தந்துவிட்டால் போதுமா? செத்தவன் செத்தவன்தானே? பதிவை மாற்றினால் மட்டும் அவன் உயிரோடு எழுந்து வந்துவிடப் போகிறானா? மேலும் எல்லோரும் சம்மதித்தார்கள் என்கிறீர்களே. செத்துப் போனவனின் சம்மதிக்கும் உரிமை இதில் என்னவாயிற்று? மேலும் சம்மதித்தவர்கள்கூடப் பணத்துக்கோ அச்சுறுத்தலுக்கோ அடிபணிந்து சம்மதித்திருக்க மாட்டார்கள் என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?

“…………………………………………………………………………………………………”

அது மிகச் சுத்தமான பிதற்றல். செத்தவனின் வாரிசுகள் தக்க நஷ்ட ஈட்டை வாங்கிக்கொண்டு பதிவைத் திருத்த சம்மதம் தெரிவித்தாலும்கூடப் பொய் என்பது உண்மையாகிவிடாது. கலப்படமற்ற அப்பழுக்கில்லாத உண்மையை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்பதுதான் ஒரு நாகரிகமான சமுதாயத்தின் கடமையாக இருக்க முடியும். ஒரு லட்சம் பேர் – ஏன் கோடி பேர் – சம்மதித்தாலும் பொய் எப்போதும் உண்மையாகிவிடாது.

“…………………………………………………………………………………………………”

இது விதண்டாவாதம். நூற்றாண்டுகளாக மனிதர்கள் வானத்தில் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்பதையும், சூரியனைப் பாம்பு விழுங்குகிறது என்பதையும், மனித உடம்பில் ரத்தம் ஓடாமல் உறைந்தே இருக்கிறது என்பதையும், பூமி தட்டை என்பதையும் நம்பினாலும்கூட ஒரு காலத்தில் உண்மை வெளியில் வந்ததா இல்லையா?

“…………………………………………………………………………………………………”

இந்த உண்மை வெளிவரும் வரைக்கும் அந்தப் பொய்தான் நூற்றாண்டுகளாக உண்மை என்று கருதப்பட்டது என்பது என்னவோ உண்மைதான். ஆனால்…

“…………………………………………………………………………………………………”

சில நூற்றாண்டுகளில் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் உண்மைகளும் பொய்யாகிவிடலாம் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்காகப் பல பேர்களின் சம்மதத்தின் அடிப்படையில்தான் உண்மை தீர்மானிக்கப்படுகிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இதோ பாருங்கள் நீங்கள் என்னைக் குழப்புகிறீர்கள்.

“…………………………………………………………………………………………………”

இல்லை, இல்லை. மனிதர்களின் ஒப்புதலைத் தாண்டியும் மிகத் தெளிவான, அசைக்க முடியாத, தானே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் உண்மை ஒன்று உண்டு என்பதை நான் திடமாக நம்புகிறேன். அத்தகைய அப்பழுக்கில்லாத உண்மையின் அடிப்படையில்தான் இந்தத் தேசத்தை இதன் முன்னோர்கள் உருவாக்கினார்கள். ஆர்கோஸ் தொழில்நுட்பம் இந்த உண்மையின் வேரையே அசைத்துப் பார்க்க முயல்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் அதுவே இந்தத் தேசத்தின் அழிவுக்கு மட்டுமல்ல, இந்த மனித நாகரிகத்தின் அழிவுக்கும் வழிவகுத்துவிடும். ஆர்கோஸ் தொழில்நுட்பம் இவ்வளவு பெருமையாக விளம்பரம் செய்யும் பானோப்டெஸ் செயலியின் பெயரின் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? பானோப்டெஸ் என்றால் ‘எல்லாவற்றையும் பார்ப்பவன்’ என்று அர்த்தம். ஆர்கோஸ் பானோப்டெஸ் என்பவன் பழைய கிரேக்கத் தொன்மக் கதைகளில் வரும் நூறு கண்களுடைய ஒருவகையான பூதம். ஹீரா என்ற தேவதைக்காக அவளுடைய வெள்ளைப் பசுவான இயோவை ஹீராவின் கணவன் சீயுஸ் களவாடிப் போய்விடாமல் இந்த நூறு கண்களையுடைய ஆர்கோஸ் பானோப்டெஸ் காவல் காத்தானாம். எல்லாத் திசைகளையும் வெறித்துப் பார்க்கும் அவனுடைய நூறு கண்கள் அவனுக்கு இந்தக் காவல் பணியில் உதவியாக இருந்தன. அவன் தூங்கும்போதுகூட அவனுடைய நூறு கண்களில் சில கண்கள் மூடிக்கொள்ள மற்ற கண்கள் யாராவது வருகிறார்களா என்று வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்குமாம்.

“…………………………………………………………………………………………………”

அதைத்தானே நான் சொல்ல வருகிறேன். நீங்கள் அனுமதித்தால் மிகச் சுருக்கமாக என் கருத்தைச் சொல்லிவிடுகிறேன். இப்போது உலகம் முழுவதும் ஐநூறு கோடி உறுப்பினர்களுடைய ஆர்கோஸ் தொழில்நுட்ப நிறுவனம்தான் நவீன ஆர்கோஸ் பானோப்டெஸ். நாம் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் வழியாக அது இருபத்து நான்கு மணி நேரமும் நம் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான காரியங்களைத் தூங்காமல் நூறு கண்களோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் அதன் தளங்களுக்குள் மேலும் மேலும் காட்சிகளைப் பதிவேற்ற அதன் கண்களின் தீட்சண்யம் வளர்கிறது. இப்போது அந்த பூதம் மெமரி எடிட்டர் என்ற செயலியின் மூலம் நம் விரல்களாலேயே நம் கண்களைக் குத்தச் சொல்கிறது. இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஆர்கோஸ் தொழில்நுட்பத்தின் இந்தச் சாத்தானியச் சதிக்கு நானோ, உண்மைக் கூட்டணியில் இருக்கும் வேறெந்த சமூக ஆர்வலர்களோ எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். மிலான் குண்டேராவின் நாவல் ஒன்றில் 1950களில் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பற்றிய குறிப்பு வரும். கதையின் ஆரம்பத்தில் ஒரு புகைப்படத்தில் காட்சி தரும் அரசியல் தலைவர் கொஞ்ச நாளுக்குப் பின்னால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அந்தப் புகைப்படத்திலிருந்தே தூக்கப்பட்டிருப்பார். இதைத்தான் ஆர்கோஸ் நிறுவனமும் செய்ய முயல்கிறது. தனிமனித உரிமைகளைப் பறித்து மனிதர்கள் அத்தனை பேரையும் சர்வாதிகாரத்துக்குள் கொண்டு போக நினைக்கும் சாத்தானியச் சதியின் ஒரு பகுதிதான் இந்த மெமரி எடிட்டர் செயலி. அதை அரசாங்கம் தடை செய்தே தீர வேண்டும் என்பது எங்களின் உறுதியான கோரிக்கை.

“…………………………………………………………………………………………………”

நன்றி.

4

நிரஞ்சனா மேத்யூஸ், 37, விஸியோ டிவி நிருபர், ஆர்கோஸ் தொழில்நுட்பக் குழுமத்தின் தலைமை அலுவலக வளாகம், பிராடிஸ்லாவா, ஸ்லோவாக் குடியரசு, 20 அக்டோபர் 2027, புதன்கிழமை

முதல் கட்ட விசாரணையின் முடிவில் விஸியோ டிவியுடன் பேசிய தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஸ்லோவாக் குடியரசு மின்னிலக்கக் குற்றப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் ஆர்கோஸ் நிறுவனம் தனது செயலி மற்றும் தளங்களின் மூலம் சேகரித்து வைத்திருக்கும் காணொளி மற்றும் புகைப்படத் தரவுகளின் எண்ணிக்கையும் வீச்சும் அவற்றைக் கண்டெடுத்த விசாரணை அதிகாரிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். பல வளரும் நாடுகளைவிட அதிகக் கணினி ஆற்றலை ஆர்கோஸ் தொழிநுட்பம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டவர், பொது நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளையும் புகைப்படங்களையும் தாண்டிக் குழந்தைகள், பதின்ம வயதினர் உட்பட பல கோடி உறுப்பினர்களின் மிக அந்தரங்கமான புகைப்படங்களும் காணொளிகளும் சேகரிக்கப்பட்டு மிகத் துல்லியமாக வகைப்படுத்தப்பட்டு ஆர்கோஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகத்தில் இருக்கும் கணினிகளில் தொகுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். எண்ணிக்கையில் பல நூறு கோடியைத் தாண்டும் இந்தப் பதிவுகள் அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெற்றும் பல நேரங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் அனுப்பப்பட்ட அனுமதிகளின் பேரிலும் மெமரி எடிட்டர் செயலியால் திருத்தப்பட்டு இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மெமரி எடிட்டர் செயலின் உதவியோடு இப்படி மாற்றப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடுமா என்ற கோணத்தில் பன்னாட்டுக் காவல் துறையினரின் குழு புலன் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் மிகப் புதியது என்பதாலும் பதிவர்கள் உலகம் முழுவதும் இருப்பதாலும், ஒவ்வொரு நாட்டின் சட்ட விதிமுறைகளும் வேறுபடுவதாலும் ஆர்கோஸ் தொழிநுட்பத்தின்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதில் சிக்கலும் தாமதமும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். எனினும் ஆர்கோஸ் நிறுவனம் ஏதேனும் சட்ட விரோதச் செயல்களின் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில் அதன்மீதும் அதன் நிறுவன இயக்குநரான திரு ஸ்டெஃபான் பார்த்தோஷ்-இன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

5

ஜுனோ இச்சிதா, 22, வாசேதா பல்கலைக் கழகத்தில் கணினிப் பொறியியல் துறை மாணவர், ஜப்பான் Ganbare இணைய விளையாட்டுகள் ஆர்வலர்கள் சங்கம், தோக்கியோ, 21 அக்டோபர் 2027, வியாழக்கிழமை

“…………………………………………………………………………………………………”

இப்ப உங்களுக்கு என்னோட குரல் கேட்குதா? நீங்க பயன்படுத்துற இணையத் தொடர்பு கொஞ்சம் மந்தமா இருக்கு. இல்ல. நானே இணைப்பச் சரி செய்துகிட்டேன். இப்ப பரவால்ல. கேளுங்க.

“…………………………………………………………………………………………………”

இல்ல, இந்தக் கேள்வியே எனக்கு விசித்திரமா இருக்கு. ஒரு வேளை எனக்கு ஆங்கிலம் சரியாப் புரியாததும் இதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். ஆங்கிலம் என்னோட தாய்மொழி இல்ல. உண்மையைச் சொல்லப் போனா பன்னெண்டு வயசுல நான் PUBG விளையாட ஆரம்பிச்சப்பதான் ஆங்கிலத்தையே ஒழுங்காக் கத்துகிட்டேன்னு என் அம்மா அடிக்கடிச் சொல்வாங்க. அவங்க ரொம்ப நல்லா ஆங்கிலம் பேசுவாங்க. அவங்க ஒரு வழக்கறிஞர். அப்படியே ரஷ்ய மொழியில கொஞ்சமும் அதோட கொஞ்சம் பிரெஞ்சும் இணைய விளையாட்டுகள் மூலமாவே கத்துகிட்டேன். யார்? அம்மாவா? அவங்க இப்ப சிங்கப்பூருல இருக்காங்க. காப்புரிமை தொடர்பான வழக்கறிஞர். நானும் அப்பாவும் மிசிகோவும் மட்டும் தோக்கியோவுல இருக்கோம். அப்பாவுக்குக் கப்பல் நிறுவனத்துல வேலை. அவரால தோக்கியோவ விட்டு வர முடியாது. தவிர மிசிகோவுக்குப் பள்ளிக்கூடமும் எனக்குப் பல்கலைக்கழகப் படிப்பும் இருக்கு. மூணு மாசத்துக்கு ஒரு முறை நாங்க வாரக் கடைசிகள்ல சிங்கப்பூருக்குப் போய் சில நாள் தங்கிட்டு அம்மாவப் பார்த்துட்டு வருவோம். இல்லைனா அம்மா இங்க வருவாங்க.

“…………………………………………………………………………………………………”

அப்படி எதுவும் இல்லை. நீங்க என்ன கேட்க வறீங்கனு புரியுது. ஆனா அம்மாவும் அப்பாவும் வேலையில இவ்வளவு மூழ்கிப் போய் இருக்குறதால அவங்களோட எனக்கோ என் தங்கைக்கோ இருக்குற உறவுல எந்தவிதமான விளம்பரமும் – ம், அது தப்பான வார்த்தை இல்லையா? நான் என்ன சொல்ல வரேன்னா அவங்களோட எங்களுக்கு இருக்குற உறவுல எந்தவிதமான விரிசலும் இல்ல. என் அப்பாவையும் அம்மாவையும் நான் ரொம்ப நேசிக்கிறேன். என் அப்பாவும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப நேசிக்கிறதாத்தான் சின்ன வயசுல இருந்து நானும் உணர்ந்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் என்னையோ என் தங்கையையோ எப்பவும் துன்புறுத்துனது இல்ல. கழுத்துல நாய்ச் சங்கிலி மாட்டி நாய்க்குச் சாப்பாடு வைக்குற தட்டுல தண்ணி நிரப்பி என்னையோ என் தங்கையையோ தரையில் மண்டி போட்டு உக்கார்ந்து நக்கிக் குடிக்க வச்சதில்ல. இருட்டான அலமாரில எங்கள வச்சு எங்க ரெண்டு பேரையும் நாள்கணக்காச் சிறை வச்சதில்ல. அதுவும் இல்லாம என் அம்மா மேல எனக்கு எந்தவிதமான பாலினக் கவர்ச்சியும் ஏற்பட்டு அதனால சிக்கல் ஏற்படலைனுதான் இதுவரைக்கும் நம்புறேன். இணைய விளையாட்டுல மூழ்கிப் போனவங்க அத்தனை பேரும் ஏதோ ஒரு போதாமையிலதான் அப்படி ஆனாங்கங்கிற உங்க கற்பனை ரொம்பப் பரிசோதனைக்கு – ம். பரிதாபத்துக்கு – உரியது மிஸ் – ம் – நீர், நீராஞ்சான் மேத்யூஸ். வாழ்க்கையில் சந்தோஷமா இருக்குறவங்ககூட இணைய விளையாட்டுகள்ல மூழ்கி இருக்குற வாய்ப்பு நிறையவே இருக்கு. நான் ஒரு வேளை உங்க செய்தி ஊடக மனோதத்துவச் சட்டகத்துக்குள்ளாற பொருந்தாம போயிருந்தா அதுக்காக வர்-ருந்துறேன். நான் பல்கலைக்கழகத்துல கணினிப் பொறியியலோட துணைப்பாடமா மனோதத்துவமும் பாடமா எடுத்துப் படிக்கிறேன்.

“…………………………………………………………………………………………………”

மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியதில்லை, மிஸ் நீர்… ம் மிஸ். உங்க திரையில எம் எஸ்ஸுனு எழுதியிருக்கு. அதை மிஸ்ஸுன்னுதான உச்சரிக்கணும்? என் நண்பர்களிடையே இப்படி மிஸ் மிஸஸ்ங்கிற பட்டத்தை எல்லாம் இப்ப யாரும் உபயோகிக்கிறது இல்ல. பல்கலைக்கழகத்துலகூடப் பேராசிரியர்களோட பேரோட சேர்த்து ஒரு ‘சான்’னு சேர்த்துக்கிட்டா போதும். ஆங்கிலத்தைவிட சில நேரங்கள்ல ஜப்பான் மொழி கொஞ்சம் சுலபமான மொழி. நான் சொல்லிகிட்டு இருந்ததுபோல வாழ்க்கையில துன்பப்பட்டவங்க மட்டும்தான் இணையத்துல நிறைய நேரத்தைச் செலவழிக்கிறாங்கனு நினைக்கிறது ஒரு வகையான – மாயை? மாயை. கணினிகள் கண்டுபிடிச்சுப் புதுசா புழக்கத்துக்கு வந்திருந்த நேரத்துல இந்தக் கணிப்பு உண்மையா இருந்திருக்கலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் தொழில்நுட்பம்கிறது நாம விரும்புன மாதிரி இருக்க நமக்குக் கிடைச்சிருக்கிற ஒரு மாபெரும் வாய்ப்பு. நானும் என் நண்பர்களும் பிறந்த சில வருஷங்களிலேயே இந்த இணைய வெளிக்குள்ள குடிபெயர்ந்துட்டோம். இதற்குக் காரணம் நம்மைச் சுற்றி இருக்குற பௌதிக உலகத்தோட ஒப்பிடும்போது இந்த வெளியில நமக்குக் கிடைக்குற வாய்ப்புகளோட எண்ணிக்கையும் செறிவும். (சொல்ல வந்ததச் சரியாத்தான் சொல்றேனானு எனக்குத் தெரியல.) என்னைச் சுத்தி இருக்குற உலகத்தைவிட இந்த இணைய உலகம் எனக்கு வாய்ப்புகள் நிறைஞ்சதா இருக்கு. எனக்கு உண்மையானவங்கனு நான் நினைக்குற நண்பர்கள் இங்கதான் இருக்காங்க. எனக்குத் தேவையான பாசம், அன்பு, நட்பு, காமம், கோபம், வீரம், வன்முறை, சிரிப்பு, நாட்டு நடப்பு, இசை, சினிமா, கேளிக்கை, தகவல்னு எல்லாம் இங்கிருந்து எனக்கு ரொம்ப ரொம்ப எளிமையா, அதே சமயம் தாராளமா கிடைக்குது. இதுக்கு மூலக் காரணம் நான் ஒரு குறிப்பிட்ட கணத்துல எப்படி உணர்றேன்னோ அதுபோலவே இணையத்துல என்னால இருக்க முடியுதும்கிறதுதான். என் நிஜமான முகத்தை விடவும், என் உண்மையான உடம்பை விடவும் இணைய விளையாட்டுல நான் தேர்ந்தெடுக்குற அவதார் உருவத்தோட முகமும் உருவமும் அந்தக் கணத்துல என்னோட சுயத்துக்கு அதிக உண்மையா இருக்கு. அதே சமயம் நான் அதே உருவத்துக்குள்ளயும் கட்டுப்பட்டிருக்கத் தேவையில்ல. நான் என் உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடிக் கோரமான மான்ஸ்டரா இருக்க நினைக்கிறேனா. நான் அப்படியே மாறலாம். ஒரு பெண்ணா இருக்க ஆசைப்படுறேனா. அப்படியும் மாறலாம். அரேபிய இளவரசனா, இத்தாலியன் மாஃபியா சண்டைக்காரனா, எழுபது வயசு கிழவனா? எல்லாம் சாத்தியம்தான். ஒரே விரல் சொடுக்குல. இது தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தந்த சாத்தியம். இதை ஏன் வேண்டாம்னு சொல்லணும்?

“…………………………………………………………………………………………………”

ஆமாம். ஆர்கோஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துன இந்த மெமரி எடிட்டர் செயலிய நான் இந்தச் சாத்தியத்தோட ஒரு நீட்சியாதான் பார்க்குறேன். நானும் என் நண்பர்களும் புழங்குற இந்த இணைய வெளியில நாம தேர்ந்தெடுக்குற உருவத்தையும் உலவுற உலகத்தையும்போல உண்மைங்கிறதும் நொடிக்கு நொடி மாறக்கூடியதா இருக்கறப்ப நாம உண்மைனு நம்புற நினைவுகள் மட்டும் ஏன் மாறாம இருக்கணும்? நானே மெமரி எடிட்டர் செயலியப் பயன்படுத்தி என் பழைய நினைவுகளைப் பல முறை மாத்தியிருக்கேன். ஒரு நாவலை எழுதுறவனுக்கும், ஒரு பாட்டை இசையமைக்கிறவனுக்கும் அதை மாத்த எவ்வளவு உரிமை இருக்கோ அதுபோலத்தான் நினைவுகள உருவாக்குறவங்களுக்கும் அந்த நினைவுகளை மாத்த எல்லா உரிமையும் இருக்குனு நம்புறேன். இந்த உரிமையைத்தான் ஆக்ரோஸ் நிறுவனத்தோட தொழில்நுட்பம் நமக்குச் சாத்தியமாக்கித் தருது. இதுதான் உண்மையான கருத்துச் சுதந்திரமா இருக்க முடியும். இந்த உரிமையை முடக்குற எதுவும் வெறும் சர்வாதிகாரம்தான். அதை என்னால ஒத்துக்க முடியாது.

“…………………………………………………………………………………………………”

இந்த இணைய வெளியே எல்லாரும் ஒத்துக்கிட்ட பல மாயாஜால விளையாட்டுகள உண்மைனு ஒத்துகிட்டு இருக்குற ஒரு இடம்தானே? நாம ஒரு விஷயம் இப்படித்தான் நடந்ததுனு திருத்திச் சொல்லும்போது அதை எல்லாரும் ஒத்துக்குறாங்கனா அதுவே உண்மையாப் பதிவாகுறதுல என்ன தப்பு? ஏன், இப்பக்கூட நாம சமூக ஊடகங்கள்ல முதல்ல ஒரு விஷயத்தைச் சொல்லிப் பின்னால அதைத் திருத்துறது இல்லையா? அப்படிச் சொல்றதை மத்தவங்க ஏத்துக்கத்தான செய்றாங்க. இதுக்கும் மெமரி எடிட்டர் பண்றதுக்கும் என்ன வித்தியாசம்?

“…………………………………………………………………………………………………”

இப்படி நிஜ உலகம்னும் இணைய உலகம்னும் பிரிச்சுப் பார்க்குறதே முட்டாள்தனமா உங்களுக்குத் தோணலையா மிஸ் நீர்-அஞ்சான்? இதோ இந்தப் புள்ளி வரைக்கும்தான் நிஜ உலகம். இதுக்கு அப்புறம் பொய்யான இணைய உலகம்னு சொல்ற மாதிரி இருக்கு உங்க பேச்சு. இணைய உலகம் இல்லாத இடம் எங்க இருக்கு? அந்த உலகம் நிஜ உலகத்துல உங்களோட மடிக்கணினியாவும், கைத்தொலைபேசியாவும் வேறு பலவிதமான தொழில்நுட்பமாவும் உங்களோட பிரிக்க முடியாம வந்துகிட்டே இருக்கு. இங்க கேள்வி நிஜ உலகமா பொய் உலகமா எங்கிறது இல்ல மிஸ் நீராஞ்சான். ஒரே நேரத்துல உங்களச் சுத்தி நிஜ உலகத்தையும் சேர்த்து நூறு உலகங்க கொட்டக் கொட்ட விழிச்சுப் பார்த்துகிட்டு இருக்கு. இந்தப் பலதரப்பட்ட உலகங்கள் மேலதான் நாம தினமும் சவாரி செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க மட்டும் ஏன் ஒத்தை ஆளா, ஒத்தைச் சத்தியத்தோட உங்களையே முடக்கிக்கிட்டு இருக்கிங்க?

6

ஸ்டெஃபான் பார்த்தோஷ், 72, நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆர்கோஸ் தொழில்நுட்பக் குழுமம், பிராடிஸ்லாவா, ஸ்லோவாக் குடியரசு, 30 நவம்பர் 2027, திங்கட்கிழமை

வாருங்கள், மிஸ் நிரஞ்சனா மாத்யூஸ். உள்ளே வந்து இங்கே – இதோ இந்த நாற்காலியில் – அமருங்கள். அலுவலகத்தின் கதவுவரை வந்து உங்களை வரவேற்காததற்கு இந்தக் கிழவனை நீங்கள் மன்னித்தே ஆகவேண்டும். என் மனைவி எலிசவெத்தா உயிரோடு இருந்திருந்தால் ஒரு விருந்தினருக்குச் செய்யும் இந்த அவமரியாதைக்கு அவள் என்னை மன்னித்திருக்கவே மாட்டாள். அவள் இன்றைய செக் நாட்டில் பிறந்தவள். அதிலும் அவள் சொந்த ஊர் பிராக் நகரம். ஃபிரான்ஸ் காஃப்கா பிறந்த ஊர். பழைய ஆஸ்திரிய ஹங்கேரியப் பேரரசின் பிரசித்தி பெற்ற நகரங்களுக்குள் ஒரு முக்கியமான நகரம். தலைநகரான வியன்னாவுக்கு ஈடாகக் கலைகளும் இலக்கியமும் வளர்ந்த இடம். பிராக் நகரத்தில் அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதக் குடும்பங்களில் காஃப்காவின் குடும்பத்தைவிட என் மனைவியின் குடும்பம் பழைமையும் பெருமையும் வாய்ந்தது என்று எலிசவெத்தாவின் தந்தை – என் மாமனார் மெனகெம் – அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். நான் எலிசவெத்தாவை சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது செக் குடியரசும் ஸ்லோவாக்கியாவும் ஒரே நாடாக இருந்தன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது இரண்டு நாடுகளாக ஆகிவிட்டன. எங்களுக்கு இடையே பகையும் வளர்ந்துவிட்டது. என் மாமனாரும் காஃப்காவின் அப்பாவைப் போலவே யூத சாஸ்திரங்களையும் நீதி நூல்களையும் கற்றுப் பேரறிஞர் என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர். அவர் தலைமுறையில் வாழ்ந்திருந்த பத்து முக்கிய செக் நாட்டு யூத மத அறிஞர்களின் என் மாமனாரும் ஒருவர்.

மார்ச்சு 1939ல் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்த ஜெர்மானியர்களைத் துரத்திவிட்டு மக்களாட்சி மலர்ந்த பிறகு எனது மாமனார் மக்களின் எதிரியாக அறிவிக்கப்பட்டுத் தனது எழுபதாவது வயதில் சாகிற வரைக்கும் பிராக் நகரத்தின் நோவே மெஷ்டோ பகுதி நகரச்சபையின் துப்புரவுத் துறை ஊழியராக அரசாங்க அடுக்குமாடி வீடுகளின் கழிவறைகளில் ஏற்படும் அடைப்புகளை அகற்றிக் கொண்டிருந்தார்.

அது போகட்டும். நீங்கள் கொஞ்சம் திராட்சை மதுவை அருந்திப் பார்க்கத்தான் வேண்டும். ஒரு கிழவனின் உளறல்களைப் பொறுத்துக்கொள்வது வேண்டுமானால் உங்கள் தொழிலாக இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் தாகத்தையும் வறண்ட தொண்டையையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பது உங்களுக்குக் கட்டாயமல்ல. இது ஸ்லோவாக்கியாவின் ஃபிராங்கோவ்கா மது. ஆழமான நீல நிறத்தையும் லேசான காரத்தையும் உடைய ப்ளாவ்ஃபிரேங்கிஷ் திராட்சைகளால் தயாரிக்கப்பட்டது. அருந்திப் பாருங்கள்.

தயவு செய்து, மிஸ் நிரஞ்சனா. கேள்விகள் வேண்டாமே. உங்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். போன வாரம் அதிகாரிகள் எனது அலுவலக வளாகத்தைச் சோதனை போட வந்தபோதே நீங்கள் எங்கள் கட்டட வளாகத்தின் சுவருக்கு வெளியே உங்கள் கேமிரா ஆட்களோடு அதிகாலையிலிருந்து நின்று கொண்டிருந்ததை என் ஊழியர்கள் கவனித்து எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அன்றே உங்களை உள்ளே வந்து அமர அழைத்திருப்பேன். ஆனால் நான் உங்களிடம் காட்டும் கரிசனம் நாற்பத்து மூன்று நாடுகளின் காவல் துறையினர் மற்றும் உளவு நிறுவனங்களின் கவனத்தை உங்களுக்குப் பெற்றுத் தந்துவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் அப்படிச் செய்யவில்லை. மது எப்படி இருக்கிறது? ஒரு திராட்சை மது ரசத்தின் சுவையில் திராட்சைகளின் சுவையைப் போலவே அந்தந்த ஊர்களின் தண்ணீர்ச் சுவையும் சமபங்கு வகிக்கும் என்பது என் எண்ணம். எங்கள் பிராடிஸ்லாவா நகரத்தின் ஊடாக ஓடும் தானுப் நதித் தண்ணீரின் மகத்துவம் அப்படி.

இல்லை, ஒரு வயது முதிர்ந்தவனின் முட்டாள்தனங்களை நீங்கள் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் என் நினைவின் சங்கிலித் தொடர் அறுந்துபோய்விடும். தனது நினைவுகளின் சங்கிலித் தொடர் அறுந்துபோன ஒரு கிழவன் உளறும் கதைகளால் யாருக்கு என்ன லாபம் சொல்லுங்கள்? ‘உன் தேவன் உனக்குச் செய்த மகிமைமிக்க காரியங்களை நினைவு கூர்ந்து அவற்றை எப்போதும் உனக்குள்ளேயே தியானித்து, அவற்றை எப்போதும் உன் உதடுகளிலும் உன் கண்களுக்கு முன்னாலும் வைத்திருப்பாய்’ என்ற உபாகம வரிக்கு விளக்கவுரை எழுதிய ரபி அகிவாவின் சமகாலத்தவரான ரபி எலியேசர் பென் யாகோபு (அவர் நினைவு நித்தியமாய் இருப்பதாக) இவ்வகையில் நினைவின் சங்கிலித் தொடரே மனிதனைத் தன் கர்த்தாவின் பக்கத்தில் கொண்டு வருவதால் தேவனானவர் நினைவையே மனிதனின் மீட்புக்குக் கருவியாக்கி வைத்திருக்கிறார் என்று தன் விளக்கவுரையில் எழுதியிருப்பதாக என் மாமனார் எனக்குச் சொல்லியிருக்கிறார். அவர் கக்கூஸு அடைப்புக்களையே வாழ்நாள் முழுவதும் அகற்றுபவராக இருந்தாலும் அவர் உண்மையில் அறிஞர். என்னைப் போன்ற முட்டாளுக்கு என்ன தெரியும்?

மேலும், என் நிறுவனம் உருவாக்கிய மெமரி எடிட்டர் செயலிக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் உங்களைவிட எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதில் அடிப்படையான விமர்சனம் நான் உண்மையை நிராகரித்துவிட்டுப் பொய்களை வளர்க்கிறேன் என்பது. நினைவுகளின் வழியாகவே மீட்பு என்று நம்பும் ஒருவன் அந்த நினைவுகளின் உண்மைத்தன்மையையே அசைக்கும் வகையில் இப்படியொரு மோசமான கண்டுபிடிப்பைக் கொண்டு வரலாமா என்பது உங்கள் கேள்விகளில் ஒன்றாக இருக்கும்.

என் கேள்வி ஒன்றுக்கு முதலில் பதில் சொல்லுங்கள், மிஸ் நிரஞ்சனா. ஒரு நாள் வெளியே கடைத் தெருவுக்குப் போயிருக்கும் வேளையில் உங்களிடம் டாக்ஸிகாரன் ஒருத்தன் மிகத் திமிராகப் பேசிவிடுகிறான். ஒரு வேளை உங்களைக் கெட்ட வார்த்தைகளாலும் திட்டிவிடுகிறான். உங்களுக்கு அந்தக் கணத்தில் அவமான உணர்வும், கோபமும், கண்ணீரும் ஒரே நேரத்தில் தோன்றினாலும் அவனைப்போல் பொது இடத்தில் குரல் உயர்த்திப் பேசிப் பழக்கமில்லாததால் எதுவும் சொல்லாமல் வந்துவிடுகிறீர்கள். அப்படி வந்த பிறகு பல முறை உங்கள் மனத்தில் அந்தச் சம்பவத்தை ஓட்டிப் பார்த்து அந்த டாக்ஸிகாரனை ஆசை தீர ஏசித் தீர்ப்பதுபோலவும், அவன் உங்கள் வார்த்தைகளின் முன்னால் கூனிக் குறுகிப் பேச முடியாமல் தவிப்பது போலவும் கற்பனை செய்திருக்க மாட்டீர்கள்?

அல்லது வேறொரு சந்தர்ப்பத்தில் உங்களைப் பெற்ற தாயாரையோ வயதான உங்கள் பாட்டியையோ இரக்கமில்லாமல் நீங்கள் கடுமையான வார்த்தைகளால் தூற்றிப் பேசிவிடுகிறீர்கள். ஒரு வேகத்தில் அவர்களது மனநலத்தைப் பற்றிக்கூடக் கேவலமாக ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லிவிடுகிறீர்கள். அப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பும்போது உங்களது வார்த்தைகளால் மிகுந்த காயம்பட்ட அவர்களுடைய பார்வை உங்கள் மனத்தில் ஒட்டிக்கொள்கிறது. அந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை உங்கள் மனத்தில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்து நீங்கள் பேசிய வார்த்தைகளையும் உங்கள் முக பாவனைகளையும் கற்பனையில் நிச்சயம் மாற்ற முயன்றிருப்பீர்கள். அப்படி மாற்றுவது மட்டுமில்லாமல் உங்கள் தாயாரின் உங்கள் பாட்டியின் முகபாவனைகளையும் சேர்த்து மாற்றியும் அந்தச் சம்பவத்தின் உக்கிரத்தை உங்கள் மனதளவிலாவது குறைத்திருப்பீர்கள்.

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட எல்லா நபர்களும் சரியாகப் பேசுவதை உங்கள் மனத்தில் ஒரு முறையாவது செய்து பார்த்துக்கொள்ள முயன்றிருக்க மாட்டீர்களா? அப்படி அந்த நிகழ்ச்சியை மனதிற்குள் மீண்டும் நடத்திப் பார்ப்பதால் உங்கள் மனத்தில் ஏற்படும் அமைதியை நீங்கள் ஒரு முறையாவது அனுபவித்தது இல்லையா?

இப்படி மனத்தளவில் நிகழ்வது உண்மையில் சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மனிதர்கள் மிக இயல்பாகத் தங்கள் மனதிற்குள் தினமும் செய்துகொள்ளும் ஒரு காரியத்தைத்தான் எங்கள் மெமரி எடிட்டர் செயலி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வழியாகச் சாத்தியமாக்கிக் கொடுக்கிறது. தொழில்நுட்பம் என்பது எல்லையில்லாத சாத்தியங்கள் மிஸ் நிரஞ்சனா. இதை நீங்கள் மறக்காதீர்கள். இப்போதுகூட அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிகளையும் மட்டுமே எங்கள் தளத்தில் பதிவேற்றி மெமரி எடிட்டரால் திருத்தும் சாத்தியம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் தன் உடம்பில் போலீஸ்காரர்களைப்போல் கேமிராக்களை அணிந்துகொள்ளும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் மனித வாழ்க்கையின் மிகப் பெரும் பகுதி இந்தத் திருத்தத்திற்கு உள்ளாகும் சாத்தியமும் உண்டாகிவிடும். அப்போது கோடிக்கணக்கான பேர்களுக்கு அவர்கள் கடந்தகால நினைவுகளைத் திருத்திப் பார்ப்பதன் மூலம் கிடைக்கப் போகும் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நினைத்துப் பாருங்கள்.

இது பொய்யில்லையா என்று கேட்பீர்கள்? நடந்த காரியம் நடந்ததுதானே. ஏற்பட்ட காயம் ஏற்பட்டதுதானே என்று நீங்கள் கேட்கலாம். அதனால்தான் ஒரு சம்பவத்தின் பதிவை எங்கள் மெமரி எடிட்டரினால் திருத்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரின் சம்மதமும் வேண்டும் என்று நாங்கள் கட்டாயமாக்கி இருக்கிறோம். இதை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இதன் அடிப்படை சரியாகவே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு புகைப்படத்திலோ காணொளியிலோ தோன்றும் மனிதர்களின் முகத்தை வைத்துக்கொண்டே தொழில்நுட்பத்தின் உதவியோடு அவரைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் 2010களிலேயே பரவலாகிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இதனால் ஒரு சம்பவத்தில் கலந்துகொண்டவர்கள் யார் யார் என்று துல்லியமாக உறுதி செய்யும் ஆற்றலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் அனுமதியும் உண்மையானவைதானா என்று உறுதி செய்யும் ஆற்றலும் எங்களிடம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. எங்கள் நிறுவனத்தின் செயலியை ஏமாற்றுவது கடினம்.

இதைவிட முக்கியமான விஷயம். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்து அந்த நிகழ்ச்சியில் தொடர்புடைய மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும்போதே அங்கே அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட பிழைகளையும் காயங்களையும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பு உருவாகிவிடுகிறது. அதே சமயம் மன்னிக்க முடியாது என்று அடுத்தவரோ, அவர் இல்லை என்றால் அவருடைய சட்டப்பூர்வமான வாரிசுகளோ சொல்லிவிட்டால் அதோடு அந்த உரையாடலும் முடிந்தது. உங்களால் ஒருபோதும் அந்தப் பழைய நினைவை மாற்ற முடியாது.

எங்கள் மெமரி எடிட்டர் தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் சொல்லும் மற்றொரு காரணம் இது வரலாறைத் திரித்து மாற்றுகிறது என்பதுதான். பின்னால் வருபவர்களுக்கு உண்மையான வரலாறு என்ன என்பது தெரியாமல் போய்விடும் என்று இவர்கள் வாதாடுகிறார்கள். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மிஸ் நிரஞ்சனா. இப்போது நீங்கள் படிக்கும் வரலாறுகள் எல்லாமும் பிழையே இல்லாதவையா? வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்கள் எழுதியதுதான் என்ற சொல்வழக்கே இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

உண்மையில் வரலாறு என்பது அதனோடு தொடர்புடையவர்களுக்கு மட்டுமே சுவாரசியமான காரியம் மிஸ் நிரஞ்சனா. அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாத எதிர்காலச் சந்ததியினருக்கு அது பெரும் சலிப்பூட்டும் விஷயம் மட்டுமே. வரலாற்றைப் படிக்கிறோம் என்று நாம் யாரோ சில பேர் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் எழுதி வைத்த வார்த்தைகளை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

கைத்தொலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்த பிறகு அதை ஃபில்டர்களின் மூலம் திருத்தி மேலும் அழகாக்குவதைப் போலத்தான் எங்கள் மெமரி எடிட்டரின் வேலையும். ஒரு புகைப்படத்தைத் திருத்தி வெளியிடுவது தப்பில்லை என்றால், இதுவும்கூடத் தப்பான காரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், இன்றைக்கு இது போதும் மிஸ் நிரஞ்சனா. உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. எனக்கும் ஒரு அலுவலகச் சந்திப்புக்குப் போக வேண்டும். ஓர் இளம் பெண்ணை இவ்வளவு நேரமாய் எனது உளறல்களைக் கேட்க வைத்ததை எலிசவெத்தா அறிந்திருந்தால் என்னை இரவு முழுவதும் ஓயாமல் ஏசியிருப்பாள். அந்தப் பெண்ணின் குரல் இருக்கிறதே. அதிகாலை நேரத்தில் பண்ணையில் ஓயாமல் கத்திக் கொண்டிருக்கும் ஸ்பாபிய வாத்துகளைப்போல.

ஆனால் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்வேன் மிஸ் நிரஞ்சனா. தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் கையில் முதன்முதலாய்க் கிடைத்த தீப்பந்தத்தைப்போலச் சக்தி வாய்ந்தது. கையில் தீப்பந்தம் கிடைக்கும்வரை இருட்டுக்கும் அதில் உலவும் கொடூரமான மிருகங்களுக்கும் பயந்து குகைகளுக்குள்ளே முடங்கிப்போய்க் கிடந்த மனிதக் கூட்டத்தின் எல்லைகளை அந்த முதல் தீப்பந்தம் விரிவாக்கித் தந்தது. அதன் பிறகு மனிதனை மீண்டும் ஒரு குறுகிய எல்லைக்குள் அடைத்து வைக்க எந்தச் சக்தியாலும் முடியவில்லை.

எங்கள் மெமரி எடிட்டர் தொழில்நுட்பமும் அந்த முதல் தீப்பந்தம் போலத்தான். இதை எங்கள் கைகளிலிருந்து பிடுங்கி மனிதர்களை மீண்டும் ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்து வைக்க எத்தனை அரசாங்கங்கள் முயன்றாலும் இந்தச் சாத்தியங்களை அனுபவித்துப் பார்த்த மனிதர்கள் இதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். உண்மையைச் சொல்லப் போனால் மெமரி எடிட்டர் என்பது நினைவுகளை மாற்றி அமைக்கக் கூடிய வெறும் கருவிதான். அதை இயங்க வைப்பது கோடிக்கணக்கானவர்கள் தினம் தினம் எங்கள் தளங்களில் பதிவேற்றும் புகைப்படங்களும் காணொளிகளும் தங்கள் வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் மனங்களில் கொழுந்துவிட்டு எரியும் ஆசையும்தான்.

தனது வாழ்நாள் பூராவும் கழிவறைகளைக் கழுவப் பணிக்கப்பட்ட யூத சாஸ்திரப் பேரறிஞரான எனது மாமனார் மெனகெம் நாற்றம் பிடித்த கக்கூஸுகளைக் கழுவிக் கொண்டிருந்த ஓவ்வொரு நாளும் தன் மனதுக்குள் தன் நினைவுகளை அழித்து அழித்து மாற்றிக் கொண்டிருக்காமல் இருந்திருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

சமாதானத்தோடு போய் வாருங்கள், மிஸ் நிரஞ்சனா. உங்கள் கழுத்தில் திமிங்கலத்தின் எலும்புத் துண்டுகளைக் கோத்துக் கட்டியிருக்கும் சங்கிலி உங்கள் கழுத்துக்கும் நிறத்துக்கும் மிக எடுப்பாக இருக்கிறது என்று நான் சொல்லியே ஆகவேண்டும். ஃபேரோஸ் தீவுகளில் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டதை நீங்கள் பார்வையிட்ட அந்த அனுபவத்தை நீங்கள் எங்கள் பானோப்டெஸ் தளத்தில்தான் முதன்முதலாகப் பதிவேற்றி இருந்தீர்கள். அது உங்களுக்கு மறந்திருக்கலாம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையோ காணொளிகளையோ அப்போது பதிவேற்றவில்லை. அப்படி நீங்கள் பதிவேற்றி இருந்தால் அவற்றைக்கொண்டு எங்கள் மெமரி எடிட்டரின் அந்த நினைவை உங்கள் விருப்பப்படி திருத்திக் காட்டியிருக்கலாம்.

உங்கள் நினைவுகளை அழகாக்குவதுதான் எங்கள் வியாபாரத்தின் நோக்கம் இல்லையா?


புகைப்படம்: பிரஷாந்த்

இதழ் 12 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்