நேர்காணல்: கணேஷ் பாபு – வெயிலின் கூட்டாளிகள்

14 நிமிட வாசிப்பு

சின்னமனூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் கணேஷ் பாபு கடந்த 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்துவருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வெயிலின் கூட்டாளிகள்’ யாவரும் பதிப்பகம் வெளியீடாகச் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இவரது கதைகள் நிதானமான கூர்மையான அவதானிப்புகளுடன் கவித்துவமும் யதார்த்தத்தின் மாயத்தன்மையும் நிரம்பியவை. தொடர்ந்து உலக இலக்கியம் குறித்தும் கட்டுரைகள் எழுதிவரும் இவர் பரந்த வாசிப்புடையவர். அவரது தொகுப்பையும் இலக்கிய அனுபவத்தையும் மையமாகக் கொண்டு ஓர் உரையாடல்.

ஏன் எழுதுகிறீர்கள்?

என் பொழுதை அர்த்தப்படுத்திக்கொள்வதற்காக. அதன் மூலம் என் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எழுதுவதன் மூலம் என் இருப்பை சாஸ்வதமாக்கிக் கொள்ளலாம் என நம்புகிறேன். அப்படித்தானே வள்ளுவர், இளங்கோ போன்றவர்கள் எல்லாம் நூற்றாண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதையில் நாமும் பயணித்து நம்முடைய வாழ்வையும் கால, பௌதிக எல்லைகளுக்கப்பால் கொண்டு செல்ல முடியாதா என்ற நப்பாசையில் எழுதுகிறேன். இது ஒரு முனை. மறுமுனையில் லௌகிகமாக யோசித்துப் பார்த்தால், என்னை எனக்கு நானே வெளிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் எழுதத் துவங்கினேன். இல்லையெனில், எத்தனையோ ஆண்டுக் காலம் தீவிர இலக்கியம் வாசித்தவன் அப்படியே வாசகனாய்த் தொடர்ந்திருக்கலாமே. எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன். இன்றும் நான் சொல்ல வருவதென்ன என்று எனக்குத் தெரியவில்லை. காலப்போக்கில் கண்டுபிடித்துவிடுவேன் என்று நம்புகிறேன்.

நம்முடைய புற வாழ்க்கைக்கும் இந்த உலகத்துக்கும் இடையேயான உறவென்பது நேர்நிலையானது. உதாரணமாக, சாலையில் சிவப்பு விளக்கு எரிந்தால் இந்த உலகம் என்னை நிற்கச் சொல்கிறது, நானும் நிற்கிறேன். பச்சை விளக்கெரிந்தால் நகர்ந்து போகச் சொல்கிறது, நானும் நகர்கிறேன். கொரோனா காலத்தில், முகக்கவசம் அணியச் சொல்கிறது, நானும் முகக்கவசம் அணிகிறேன். ஆனால், இந்த உலகத்துக்கும் என் அகத்துக்குமான உறவு என்பது நேர்நிலையான ஒன்றல்ல. அது கணந்தோறும் பல்வேறு வகைகளில் இந்த உலகிற்கு எதிர்வினையாற்றியபடியே இருக்கிறது. என் அகம் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறது, என் அகத்துக்கும் என்னைச் சூழந்திருக்கும் இந்த உலகத்துக்கும் அதன் மனிதர்களுக்குமான உறவு என்ன என்பதையும் எழுத்தின் மூலம் பார்க்க விழைகிறேன். அதற்காகவும் எழுதுகிறேன்.

உங்களின் கதைகளில் கவித்துவமான மொழியும் தருணங்களும் விரவியுள்ளன. உங்களுக்கும் கவிதைகளுக்குமான உறவு பற்றி…

கவிதைகள் வழியாகத்தான் நான் வாசிப்புலகினில் நுழைந்தேன். முறையாக யாப்பு பயின்றிருக்கிறேன். ஆதலால், கவிதைக்கென இருக்கும் இசைமை, சொல்லொழுங்கு போன்றவை மனதுக்கு மிக விருப்பமானவை. ஆண்டாளின் தீவிர வாசகன் நான். அவரது கவிதை வரிகளை நினைவு கூராமல் என்னால் ஒரு வாரத்தைக்கூடக் கடக்க இயலாது. மரபுக் கவிதைகள் புதுக் கவிதைகள் எல்லாம் எழுதிப் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து நவீன கவிதைகளையும் விரும்பி வாசிக்கத் துவங்கினேன். நவீன கவிதையில் மரபுக் கவிதைகளிலுள்ள இசையொழுங்கு இல்லாவிட்டாலும் அதிலுள்ள ஆழமான படிமங்கள் மனதை ஈர்த்தன. “அடிவாரத்தில் மரணத்தை உச்சரித்து நகரும் பாதரச நீர்க்கோடு” போன்ற சுகுமாரனின் படிமங்கள் எல்லாம் மனதில் கல்வெட்டாகப் பதிந்துபோயின. ஆனாலும், என்னால் கவிதையைக் காட்டிலும் சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. சிறுகதைகள் மற்றும் நாவல்களில் கவிதையும் பயின்று வர முடியும் என்பதை நவீன இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்ததன் மூலமாக அறிந்து கொண்டேன். மௌனியில் துவங்கி கோணங்கி வரை. எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், ஜெயமோகனின் காடு, கொற்றவை, நீலம் போன்ற நாவல்கள் எல்லாம் கவிதையிடையிட்ட உரைநடை என்பது என் கருத்து. எழுத்திலும், ஒரு விஷயத்தைத் தீவிரமாகச் சொல்லவரும்போது கவித்துவமும் உவமைகளும் என்னையறியாமல் கைகூடிவிடுகின்றன. ஆகையால், கவிதையைக் கதைகளில் நிகழ்த்திப் பார்த்துக்கொள்வதுதான் எனக்கு விருப்பமானதாக இருக்கிறது.

ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் பலரும் சந்திக்கக்கூடிய சவால் தனது ஆதர்ச எழுத்தாளர்களின் தாக்கத்திலிருந்து வெளியாகி எழுதுவது. இந்தச் சவாலை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

நான் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளை வாசித்து வளர்ந்தவன். அதற்கு இணையாகவே ஜெயமோகனையும் வாசித்திருக்கிறேன். இவர்கள் இருவரின் பாதிப்பு என் புனைகதைகளில் மட்டுமல்ல, என் கட்டுரைகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, “யாவரும், துவங்கிய, மாறாக, உண்மையில்” போன்ற சொற்களை எஸ். ரா அதிகம் பயன்படுத்துவார். அவை என்னிடமும் ஒட்டிக்கொண்டன. அதைப் போலவே ஒரு கருத்தை விரிவாக விளக்கும் முறையை ஜெயமோகனிடம் இருந்து கற்றுக்கொண்டேன். என் கட்டுரைகளில் இதைக் காணலாம். “தாக்கம்”, “சவால்”, போன்ற சொற்களால் இதை நான் அடையாளப்படுத்த விரும்பவில்லை. இது ஒரு சாயை. இதில் இருந்து பிரக்ஞைபூர்வமாக வலுக்கட்டாயமாக ஒரு படைப்பாளி தன்னைத் துண்டித்துக்கொள்ள நினைத்தால் தோல்விதான் ஏற்படும். எழுத்தும், அனுபவங்களும் முதிரும்போது காலப்போக்கில் இந்தச் சாயை நீங்கிவிடும். அதேசமயம் ஒரு சிறிய அளவில் அது இருந்துகொண்டுமிருக்கும். ஒன்றும் செய்ய இயலாது. பெற்றோரின் சாயை பிள்ளைகளைத் தொடர்வது போல.

வெயிலின் கூட்டாளிகள் - கணேஷ் பாபு

தொகுப்பிற்கு ‘வெயிலின் கூட்டாளிகள்’ என தலைப்பிட்டுள்ளீர்கள். இது பற்றிச் சொல்ல முடியுமா?

இதற்கு முந்தைய கேள்விக்கான பதிலுடன் சம்பந்தப்பட்டதுதான் இதுவும். எஸ்.ராவை வாசித்து வெயிலையும் அதன் பல்வேறு நிறமாறுதலையும் ரசிக்கக் கற்றுக்கொண்டேன். அவர் வெயிலைப் பற்றி ஒரு நாவல் முழுக்க எழுதமுடியுமானால், என் பங்குக்கு ஏன் அதை ஒரு சிறுகதையில் கொண்டு வரக்கூடாது என்று எண்ணினேன். கூடவே, பால்யக் காலத்தில் நான் வளர்ந்த வீட்டில், காலையில் மலரும் பொன்னிற வெயில் அடிக்கடி என் நினைவில் எழும். கூரையில் இருந்து சாய்வாக ஒரு வாளைப் போல வீட்டில் இறங்கக்கூடிய வெயில் இன்றும் என் கண்களில் நிற்கிறது. வெயிலில் மின்னும் தூசு, வெயில் பொடிகளாகத் தோற்றம் கொள்ளும். கையில் பற்பொடியை ஏந்தியபடியே இந்த வெயில் பொடிகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இவை எல்லாம் சேர்ந்துதான் “வெயிலின் கூட்டாளிகள்” கதையாக மாறியது.

2012ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த சிறுகதைப் பயிலரங்குதான் உங்கள் எழுத்துக்கு வித்திட்டதாக தொகுப்பின் முன்னுரையில் எழுதியுள்ளீர்கள். பயிலரங்கை நடத்திய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து நீங்கள் முக்கியமாகக் கற்றுகொண்டது என்ன?

அந்தப் பயிலரங்கில் எஸ்.ரா என்ற ஆளுமையை, அவரது கதை சொல்லும் முறையைக் கண்டு வியந்தேன். செகாவ்வின் “வான்கா” என்ற கதையை அவர் சொன்ன விதம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. ஒரு கதையை எப்படிச் சொல்ல வேண்டும், ஏன் சொல்ல வேண்டும், எந்தக் கோணத்தில் சொல்ல வேண்டும் என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்கினார். கதையில் இருக்கும் வெவ்வேறு பாத்திரங்களின் கோணத்தில் ஒரு கதையை எப்படிச் சொல்லலாம் என்பதையும் அன்று கற்றுக்கொண்டேன். கதை என்பது கற்கோபுரமல்ல. மணற்கோபுரத்தைப் போன்றது. அதை மாற்றி மாற்றிச் செதுக்கிக்கொண்டே இருக்கலாம், முற்றிலுமாகவே அழித்து மீண்டும் கட்டிப் பார்க்கலாம் என்ற விந்தையை அன்று அவர் மூலம் அறிந்தேன். ஆனால், ஒரு நல்ல கதை வாசகன் மனதிற்குள் சென்று அமர்ந்துவிட்டால் அது கற்கோபுரமாகவும் ஆகிவிடும் என்பதையும் அதன்பின் உணர்ந்தேன். அவரைப் போன்ற ஓர் ஆளுமையுடன் சில மணி நேரங்கள் செலவிட்டாலே சிறுகதைகளின் பல நுணுக்கங்களை அறிந்துகொள்ளலாம். அந்த இரண்டு தினங்களும் அவரிடம் பல கேள்விகள் கேட்டபடியிருந்தேன். அசட்டுத்தனமான கேள்விகளும். அவர் சிறுநீர் கழிக்கச் செல்கையிலும் பின்தொடர்ந்து சென்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த நிலையிலும் அவர் பொறுமையாகப் பதிலளித்ததை இன்று நினைக்கையில் அவர் மீதான அன்பும் மதிப்பும் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

எதைக் கதையாக்குவது, எங்கிருந்து தொடங்குவது, எப்படி முடிப்பது இதுதான் சிறுகதை எழுதத் துவங்குபவர்கள் சந்திக்கும் சவால். எதையும் கதையாக்கலாம், எங்கிருந்து துவங்கினால் சிறப்பாக இருக்கும், எங்கு முடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதையும் அன்று கற்றுக்கொண்டேன். மற்றபடி, சிறுகதைகளின் நுட்பங்கள் எஸ்.ராவே நடத்தினாலும் ஒரு பயிலரங்கில் கற்றுக்கொள்ள முடியாதவை. அவர் போட்டது ஒரு அடித்தளம்தான். நாம்தான் மேலும் மேலும் வாசித்தும், எழுதியும் பிற விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்றுவரை கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.

நீங்கள் எழுதத் துவங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டுவர ஏன் இவ்வளவு ஆண்டுகள்?

ஆரம்ப கட்ட எழுத்தாளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள், தங்களின் முதல் தொகுப்பை வெளியிடும்போது, தாங்கள் எழுதிய கதைகள் அனைத்தையும் அதில் சேர்த்துவிடுகிறார்கள். இது படைப்பாளி செய்யும் பிழை என்றே சொல்வேன். இதன் விளைவாக, தரமான கதைகளின் நடுவே தரமற்ற கதைகளும் மலிந்து தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்கும்.

புதிதாக எழுதத் துவங்கும்போது நிறைய கதைகள் எழுதவேண்டும் என்ற இயல்பான மனஉந்துதல் காரணமாக நிறைய எழுதிவிடுவோம். அவற்றில் சில பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும், சில கதைகள் ஏதாவது போட்டியில் பரிசும் பெற்றிருக்கும். ஆனாலும், தன்னுடைய படைப்பையே படைப்பாளி நன்கறிவதற்கு ஓர் கால இடைவெளி தேவைப்படுகிறது. நிறைய எழுதி, அதில் படைப்பாளியின் மனசாட்சிக்கு ஏற்புடைய கதைகளை மட்டுமே வடிகட்டி பிற கதைகளைத் தொகுப்பிலிருந்து வெளியேற்றிவிடவேண்டும். எழுதுவது அனைத்தையும் தொகுப்பாக்குவது என்பதைக் காட்டிலும், எழுதியதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து தொகுப்பாக்குவதே படைப்பாளியின் பணி. எண்ணிக்கை அல்ல, தரமே முக்கியம். இருபத்து நான்கு கதைகளே எழுதிய மௌனி இன்றும் வாசிக்கப்படுகிறார். ஆகையால், நான் என்னுடைய முதல் தொகுப்பைக் கொண்டுவருவதற்கு அவசரப்படவில்லை. இதைவிட இரு மடங்கு கதைகளை எழுதி அதில் சிறந்தவற்றைத் தொகுத்து வெளியிட இத்தனை காலம் ஆகிவிட்டது.

ஆனாலும், பத்து ஆண்டுகள் என்பது அதிகம்தான். தொழில் சார்ந்து வெளிநாடுகளில் சில ஆண்டுகள் தொடர்ந்து இருக்க நேர்ந்ததும் ஒரு காரணம். தொகுப்பு போடும் மனநிலை அப்போது வாய்க்கவில்லை.

உங்களுக்கு, ஒரு சிறுகதைக்கான கரு உருவாவதிலிருந்து அக்கதையை இதழொன்றுக்கு அனுப்புவது வரையான படிநிலைகளை விளக்க முடியுமா?

இதழ்களுக்கு அனுப்புவதற்காக நான் கதைகளை எழுதுவதில்லை. சில கதைகளை முன்னரே எழுதி வைத்திருப்பேன். இதழ்கள் கேட்கும்போது அளிப்பேன். இதுவரை இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது.

மற்றபடி கதை எழுதும் process-ஐ ஒரு எல்லைக்கு மேல் புறவயமாகச் சொல்ல இயலாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு விதம். சிலர் முழுக் கதையையும் மனதில் ஓட்டிப் பார்த்து அதன்பின் எழுதுவார்கள். சிலர் கதை தோன்றியவுடனே எழுதிச் சென்றபடியே இருப்பார்கள். எழுதும்போதுதான் கதை மெல்ல மெல்லத் தெளிவாகியபடியே வரும். நான் இதில் இரண்டாம் வகை. ஒரு மெல்லிய கோடு போல கதையின் மையம் தென்படும். அதைப் பின்தொடர்ந்து சென்றபடியே எழுதுவேன். கதை வளர வளர அதுவே என்னை இழுத்துச் செல்லும். விதிவிலக்காக, சில கதைகள் முழுக்க முழுக்க கனவில் தோன்றுவதுண்டு. முழுக் கதையும். இந்த தொகுப்பில் “தொலைவு” என்ற கதை அப்படி முழுக்க முழுக்க என் கனவில் தோன்றியதுதான். எழுந்து அப்படியே எழுதவேண்டியதுதான். சில நேரங்களில் சரஸ்வதியின் அருள் இப்படிக் கிடைப்பதுண்டு. அவையெல்லாம் சுபமுகூர்த்தங்கள்.

Dracula நாவலுக்கு உந்துதலாக அமைந்த Aberdeen நகரத்தின் அருகிலுள்ள New Slains Castle-க்கு நீங்கள் நேரில் சென்ற அனுபவத்திலிருந்து ‘கல்மோகினி’ கதை பிறந்துள்ளது. அங்கு பயணித்தபோது எந்த குறிப்பிட்ட தருணத்தில் இதை ஒரு கதை ஆக்கும் எண்ணம் உதித்தது?

திரும்பி வரும்போது. அவ்வளவு தூரம் சென்றும் கோட்டையை நெருங்கமுடியாமல் போனது வருத்தமாக இருந்தது. அதே சமயம் அந்தக் கோட்டைக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொண்டதில் இருந்து, கோட்டையை நோக்கிய நடைபயணம் முடிவுற்றது வரை ஒரு கதையாக எழுதலாமே என்று தோன்றியது. ஒருவகையில், பயணத்தடையினால் உண்டான விரக்தியுணர்வை இந்தக் கதையை எழுதியதன் மூலம் தீர்த்துக்கொண்டேன்.

மேலும், அந்த இடம் என் மனதில் பசுமையாகப் பதிந்துபோய்விட்டது. ஒருபுறம் பசுமை செறிந்த புல்வெளி, மறுபுறம் கடல், உடலை உறைய வைக்கும் குளிர், அனைத்திற்கும் மேலாக அங்கே கவிந்திருக்கும் அச்சமூட்டும் அமைதி. பகலிலேயே இப்படியென்றால் இரவில் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யவே முடியவில்லை. அந்த இடத்தில் தங்கிய ப்ராம் ஸ்டோக்கருக்கு டிராகுலா நாவல் எழுதும் எண்ணம் தோன்றாமல் இருந்தால்தான் ஆச்சர்யப்படவேண்டும். அந்த இடத்தைப் புனைவில் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினேன். இவையாவும் சேர்ந்துதான் கதைக்கான உந்துதலை அளித்தன.

‘பிடி கடுகு’ கதையில் புத்த தொன்மமான கோதமியும் ‘அந்தரத்தில் நிற்கும் வீடு’ கதையில் விக்ரமாதித்யன் வேதாளம் தொன்மமும் இடம்பெறுகின்றன. தொன்மங்களை வைத்து கதைகளை உருவாக்குவதில் உள்ள சவால் என்ன?

நவீன இலக்கியப் படைப்புகளுக்குத் தொன்மங்கள் இன்றியமையாத கச்சாப் பொருட்களாக விளங்குகின்றன. தொன்மங்களை நவீன வாழ்க்கை மூலமாகவும் நவீன இலக்கியக் கருவிகளின் மூலமாகவும் ஊடுருவிச் சென்றால் அதுவரைக் காணாத வெளிச்சங்களைக் காணலாம். புதுமைப்பித்தனின் அகலிகையில் துவங்கி ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகைப் படைப்புகள் எல்லாம் தொன்மங்களை ஆராய்ச்சி செய்து அதில் இல்லாத வெளிச்சத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் அல்ல. மாறாக, தொன்மங்களைப் பயன்படுத்தி நம்முடைய நவீன வாழ்வை ஆராயும் முயற்சிகள். பிடி கடுகு, அந்தரத்தில் நிற்கும் வீடு இவையிரண்டும் அப்படிப்பட்ட முயற்சிகள்தாம்.

தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெந்நிற இரவுகள்’ வாசித்த தாக்கம் ‘கனவுலகவாசிகள்’ கதை முழுதும் விரவிக்கிடக்கிறது. அந்த கதை உங்களுக்குள் நிகழ்த்திய அதிர்வை பற்றி சொல்லுங்கள்.

உண்மையில் வெந்நிற இரவுகள் குறுநாவலைக் காட்டிலும் தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”, “அசடன்” போன்ற பெரும் நாவல்கள்தான் எனக்குப் பிடித்தமானவை. ஆனாலும், சில கதாபாத்திரங்கள் நம்மையுமறியாமல் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுவார்கள். வெந்நிற இரவுகள் கதைநாயகனான “கனவுலகவாசி” அவ்வகையில் என் மனதில் படிந்துபோயிருப்பவன். ஒரு வகையில் எல்லா ஆண்களும் தங்கள் வாழ்வின் சில தருணங்களில் இந்தக் கனவுலகவாசியைப் போலத்தான் இருந்திருப்பார்கள். இந்தக் கனவுலகவாசியின் சாயையில்லாத ஆண்கள் இல்லை. நானும் அவனைப் போன்றவனே.

ஆனால், கதைக்குள் இந்தக் கனவுலகவாசியை வலியத் திணிக்கவில்லை. கதையை எழுதும்போது இயல்பாக உள்ளே வந்துவிட்டார் இந்த ஆசாமி. நாளையே வேறொரு கதையில் ஆண்டாள், ஒரு கதாபாத்திரமாகவும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. மனதில் உள்ளவர்கள் கதையில் வருவார்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ.

பால்சாக்கின் செந்நிற விடுதி என்ற கதையும் எழுதும்போது நினைவில் வந்ததுதான். “வெந்நிற இரவுகள்”, “செந்நிற விடுதி” இரண்டுமே கதையின் போக்கில் தோன்றி கதைக்குள் இடம்பெற்றுவிட்டன. கதை பேசும் சில விஷயங்களுக்கு இவை பொருந்தியும்விட்டன.

புனைவை வாசிக்கும், எழுதும் அனைவருமே கனவுலகவாசிகள்தாம். புனைவு என்பது நூல்களில் மட்டுமே உள்ளது என்று நம்பும் மூன்று நண்பர்கள், அவர்களுக்கு நிகழ்ந்த சில விநோத அனுபவங்களின் மூலம் புனைவின் ஊற்று வாழ்க்கையில்தான் இருக்கிறது, புனைவைக் காட்டிலும் உக்கிரமாக, என்று உணரும் தருணத்தைக் கதையாக்கியிருக்கிறேன்.

இத்தொகுப்பிலேயே எழுதுவதற்கு அதிக சவாலாக இருந்த கதை எது?

“விடுதலை” என்ற கதைதான். அது என் நண்பரின் அனுபவம். தத்துவமும் நிதர்சனமும் ஒன்றிணையும் புள்ளியைக் கண்டுகொண்டு அதை எழுத்தில் கொண்டு வருவது சற்று சவாலானதாக இருந்தது. அக்கதைக்குச் சரியான வாசிப்பும் கிடைத்தது. ஆனந்த் சுவாமி என்ற நண்பர் இக்கதையைக் குறித்து விரிவாகப் பேசினார். ஜெயமோகன் தளத்திலும் இந்தக் கதையைப் பற்றி அவர் எழுதிய கடிதம் பிரசுரமாகியிருந்தது. எஸ்.ராவும் இக்கதையைப் பற்றித் தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார்.

ஒன்றிரண்டைத் தவிர உங்கள் தொகுப்பிலுள்ள கதைகள் சிங்கப்பூரில் நிகழ்பவை. சிங்கப்பூரின் சூழலும் வாழ்க்கையும் வலிந்து திணிக்கப்படாமல் மிக இயல்பாக வருகின்றன. இது எப்படி சாத்தியமானது?

சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையைத்தான் என் கதைகளில் எழுதுகிறேன். அவர் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். பல்வேறு தேச மக்களும் பல்வேறு கலாச்சாரங்களும் புழங்கும் இடம் இது. இந்த ஊடாட்டங்களை எழுத்தில் கொண்டுவரவே மனம் விரும்புகிறது. கதை மாந்தர்களின் அகத்தைப் பின்தொடர்ந்து எழுதிச் செல்கிறேன், எந்த அளவிற்குப் புற வாழ்வைச் சொல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டுமே புற வாழ்வைச் சொல்கிறேன். எழுதுபவன் தன் எழுத்தில் தேவையற்ற பிழைகளையும் தவிர்க்க வேண்டும்.

சிங்கப்பூர் வாழ்க்கையைச் சொல்கிறேன் என்று தன் அனுபவ வட்டத்துக்குள் வராத இந்த ஊரின் உணவுப் பெயர்களையோ, இந்த ஊரின் பேச்சு வழக்கையோ கதைக்குள் கொண்டு வராமல் இருந்தாலே கதையின் இயல்பமைதியைக் காப்பாற்றிவிடலாம். நான் எழுதுவது என்னுடைய எழுத்து, சிங்கப்பூர் எழுத்தல்ல. அதற்குத் தேவையான சூழலை மட்டுமே நான் எடுத்துக்கொள்கிறேன்.

சிங்கப்பூர் இலக்கியச் சூழலில், விரும்பியே வெளிச்சத்தைத் தவிர்ப்பவர் நீங்கள். இது உங்களின் முதல் தொகுப்பாக இருந்தாலுமே அதற்குப் புத்தக வெளியீடுகூட நடத்தவில்லை. புத்தகம் தயார் ஆனதுமே “தபால் செலவு இவ்வளவு. உங்கள் முகவரி தாருங்கள்” என்று கேட்பவர்கள் இருக்கையில், இந்த மனநிலை உங்களுக்கு எப்படி வாய்த்தது?

என் புத்தகத்தை ஒரு “Product” ஆக நான் நினைக்கவில்லை. சேத்தன் பகத் தன்னுடைய ஒரு நூலின் முன்னுரையில் இந்த “Product” உருவாவதற்குக் காரணமாக இருந்த என் குடும்பத்துக்கு நன்றி என்று எழுதியிருப்பார். காரணம் என்னவாக இருந்தாலும், ஒரு புத்தகத்தை எப்படி ஒரு Product என்று சொல்ல முடிகிறது என்று எனக்கு இன்றளவும் விளங்கவில்லை. சிங்கப்பூரில் மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்த மனநிலை அதிகரித்துவருகிறது. ப. சிங்காரத்தின் காலம் போலல்லாது இன்று ஒரு நூலை எழுதி வெளியிடுவது என்பது மிக எளிதானதாகிவிட்டது. ஆகையால், புது வெள்ளத்தில் மிதந்து வரும் குப்பையைப் போல இந்த அச்சுப் பெருக்கத்தில் பல குப்பைகளும் வருகின்றன. சிங்கப்பூர் இலக்கியக் கூட்டங்களில் எவரைச் சந்தித்தாலும் விசிட்டிங் கார்ட் கொடுப்பதைப் போல, தான் எழுதிய ஒரு புத்தகத்தைத் தந்துவிடுகிறார்கள். கவிதைதான் பெருமளவு இந்த ஆபத்தைச் சந்திக்கிறது. விதிவிலக்காக ஓரிரு நல்ல நூல்களும் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். அந்த நூல்களை எழுதியவர்கள் நம் கைகளில் திணிக்காவிட்டாலும் நல்ல வாசகர்களை அது எப்படியேனும் சென்றடைந்துவிடும். என் புத்தகமும் அப்படியானதாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். சரக்கிருந்தால் அது நிலைக்கும், பிறரைச் சென்றடையும். இல்லையேல், நிற்காது. அவ்வளவுதான்.

தவிரவும், நான் ஒரு தீவிர இலக்கிய வாசகனாக, எழுத்தாளனாக வளர்ந்தமைக்குப் பிரதானமான காரணம் நூலகங்கள்தான். என் ஆளுமையை மாற்றிய பெரும்பாலான நூல்களை விலை கொடுக்காமல்தான் வாசித்திருக்கிறேன். வாசகர்கள் என் நூலையும் நூலகத்திலேயே இலவசமாக வாசிக்கட்டுமே என்ற எண்ணமும் காரணம். ஆகையால், என் பதிப்பாளரிடம் நான் கேட்ட முதல் கேள்வியே, சிங்கப்பூர் நூலகத்துக்கு என் நூல்கள் எப்போது வரும் என்பதுதான்.

மற்றபடி, இங்கே பிற படைப்பாளிகளைப் பற்றி எனக்கு எந்தப் புகாருமில்லை. அவரவருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்குத் தான் எழுதிய நூலை, கற்றோர் நிறைந்த அவையில் வெளியிட்டு, விற்பனை செய்வது ஒரு பெருமையாகக்கூடத் தோன்றலாம். அது அவரவர் விருப்பம்.

சிங்கப்பூரில் பலருக்கும் வாசிப்பு மற்றும் எழுத்து ஆலோசனை கொடுத்து வருகிறீர்கள். இலக்கியம் தொடர்பாக யார் என்ன சந்தேகம் கேட்டாலும் விரிவாக எடுத்துரைப்பது உங்கள் வழக்கம். இதற்கான மன உந்துதல் எது?

என் ஆசிரியர்களான எஸ்.ரா மற்றும் ஜெயமோகன், இவர்களிடமிருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன். “எதிர்முகம்” என்ற ஜெயமோகனின் நூல் ஒன்று என் வாசிப்பைப் பலவகையிலும் பாதித்த நூல். இலக்கிய வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விரிவான பதில்கள் சொல்லியிருப்பார். வாசிப்பவர்களுக்கு அந்நூல் ஒரு பொக்கிஷம். அதைத் தொடர்ந்து பல நூல்களை அதுபோல அவர் எழுதியிருந்தாலும் என்னை ஆழமாகப் பாதித்தது எதிர்முகம்தான். அதைப் போலவே எஸ்.ராவும் பல்வேறு கட்டுரைகளில் பல்வேறு உரைகளில் வாசிப்பு மற்றும் எழுத்து தொடர்பான கருத்துகளை, ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும், என்னுடைய பல வருட வாசிப்பும் அதன் மூலம் சுயமாக உணர்ந்துகொண்ட சில விஷயங்களும் மனதில் இருக்கின்றன. இந்தப் பின்புலம் இருப்பதால், பிற வாசக நண்பர்கள் கேட்கக்கூடிய வினாக்களுக்கு என்னால் என்னுடைய கருத்துகளைத் தெளிவாகவும் விரிவாகவும் சொல்ல இயல்கிறது. இதில் மேல் கீழ் என்பதெல்லாம் இல்லை. ஒன்றாகச் சேர்ந்து கற்றுக் கொண்டேயிருக்கிறோம்.

மாலை ஆறு மணி வரை இயந்திரங்களுடன் உலாவி விட்டு, எட்டு மணிக்கு (அல்லது 6.15 pm க்கு, ரயிலில்!) முற்றிலும் வேறொரு உலகில் எப்படி இலகுவாக இலக்கியத்துக்குள் நுழைய முடிகிறது (or, vice versa). இந்த இடையறா seamless தாவல் எப்படி சாத்தியம்?

என்னுடைய வேலை முழுக்க முழுக்க கணினி சார்ந்ததுதான். கருவியியல் “Instrumentation” படித்து முடித்து அந்தத் துறையிலேயேதான் வேலை செய்து வருகிறேன். ஆழ்கடலில் இருக்கும் எண்ணெய்க் கப்பல்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வடிவாக்கம் செய்வது என் பணி. வடிவாக்கம் (design) என்பதால் முழுக்க கணினியின் முன் அமர்ந்துதான் வேலை செய்ய இயலும். ஆண்டின் சில வாரங்கள் Shipyard சென்று கப்பல் கட்டுமானப் பணியில் சில உதவிகள் செய்ய வேண்டியிருக்கும். அப்போது மட்டும்தான் உடலுழைப்பு சற்று அதிகம் தேவைப்படும். ஆகையால், என் வேலை ஒன்றும் கடினமானதல்ல. எவ்வளவு வேலை இருந்தாலும், அலைச்சல் இருந்தாலும், ஒரு நாளின் ஒரு மணி நேரமாவது என்னால் வாசிப்புக்கும் எழுத்துக்கும் ஒதுக்க இயலும். அதுகூடச் செய்ய முடியாத ஒருவர் அறிவுலகத்தில் இருக்கவே லாயக்கில்லாதவர் என்பது என் கருத்து.

வேலைக்காக கணினியின் முன் அமர்வதும், படைப்புக்காக கணினி முன் அமர்வதும் ஒன்றல்ல. இந்தப் பதிலைக்கூட வேலை நாளின் இரவு பதினோரு மணிக்குத்தான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். படைப்புக்காக கணினிமுன் அமரும்போதெல்லாம், எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு சவால் இருக்கிறது. அது இனிமையானது. ஒரு கதை எழுதி முடிக்கும் பொழுது ஏற்படும் மனநிறைவு என்பது எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. அந்த மனநிறைவை நான் இழக்க விரும்பவில்லை.

ஒரு வாசகராக எம்மாதிரியான புத்தகங்கள் உங்களை ஈர்க்கின்றன?

புனைவு
வரலாறு
பண்பாடு
கவிதை

மேற்கண்ட பிரிவுகளில் உள்ளூரில் இருந்து உலக இலக்கியம் வரையில் அடங்கும். அதிலும் மாஸ்டர்ஸ் எனப்படும் இலக்கிய மேதைகளின் படைப்புகளை வாசிப்பதிலே விருப்பம் அதிகம்.

ஒவ்வொரு ஆண்டும் படிக்கவேண்டிய புத்தகங்களைத் திட்டமிட்டு ஒழுங்குடன் படிப்பவர் நீங்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு மாராத்தான் ஓடுபவர் நடுவில் சில இடங்களில் மெதுவாக ஓடுவது போல பெரும் இலக்கியங்கள் வாசிப்பதற்கிடையில் இலகுவான நடையுடைய நூல்களையும் வாசித்துவருகிறீர்கள். உங்களின் வாசிப்பு ஒழுங்கு உருவான விதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் எனக்கொரு வாசிப்புத் திட்டத்தை உருவாக்கிக்கொண்டு அதன்படி நூல்களை வாசிப்பேன். வாசித்து முடிக்க முடியாவிட்டால் அடுத்த ஆண்டும் அதையே தொடர்வேன். அடுத்தபடியாக அனைத்தையும் ஒரு வருடத்திற்குள் வாசிக்க வேண்டும் என்று வேகமாகவும் வாசிக்க வேண்டியதில்லை, இல்லையேல் அது ஒரு மனச்சுமையாகவும் மாறிவிடும். ஆகையால், நிதானமாகவே வாசிப்பேன். அப்படி வாசித்தாலே, பெருமளவு நூல்களை வாசித்துவிட இயலும். நான் முன்பு சொன்னது போல, ஒரு நாளின் ஒரு மணி நேரத்தை வாசிப்புக்குச் செலவிட்டாலே போதும், தொடர்ச்சியாக ஒரு வருடத்தில் நிறைய வாசித்துவிடலாம். மாறாக, வாசிப்பு என்பது ஒரு பெரும் பணி, அதற்குத் தனியான மனநிலையும் நேரமும் வேண்டும் என்று வார இறுதிக்காக காத்திருப்பவர்களால் நிறைய வாசிக்க இயலாது. எழுத்திற்கும் இது பொருந்தும். என்னைப் பொறுத்தவரை வார நாட்களிலேயே என்னால் தொடர்ச்சியாக வாசிக்கவும் எழுதவும் இயல்கிறது. வார இறுதியை அந்தப் பணியை மேலும் செப்பனிடுவதற்காகப் பயன்படுத்திக்கொள்வேன்.

இந்த ஆண்டில் என் வாசிப்புத் திட்டத்தில் எஸ்.ரா பரிந்துரைத்த நூறு நூல்களும், சிலப்பதிகாரமும் இருக்கின்றன.

தீவிர இலக்கிய நூல்கள் வாசிப்பதற்கு நடுவே ஜனரஞ்சகமான நூல்களையும் வாசிப்பதுண்டு. ஜெயமோகனின் கொற்றவை வாசித்து முடித்தவுடன் பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் சுசீலா நாவல்களை வாசித்தேன். மனதுக்குச் சிறியதொரு பிரேக் தேவைப்படும்போது இம்மாதிரி ஜனரஞ்சக நூல்களை வாசிக்கிறேன். அதன்பின் மீண்டும் வெண்முரசுக்குத் தாவிவிடுவேன். எழுத்தாளன் எல்லாவிதமான மொழிநடைகளையும் வாசித்துப் பழக வேண்டும். பட்டுக்கோட்டை பிரபாகரில் இருந்து கோணங்கி வரை. வாழ்க்கையில் மட்டுமல்ல, வாசிப்பிலும் தீண்டாமை என்பது குற்றமே என்பது என் கருத்து.

உங்களுக்கும் சிங்கப்பூர் நூலகங்களுக்குமான உறவு பற்றி?

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் நூலகம் பற்றிய அழகிய உவமை ஒன்றுண்டு. நூலகம் என்பது சமூகத்தின் நுரையீரல் போன்றது. ஒவ்வொரு முறையும் ஒரு வாசகன் ஒரு நூலை வாசித்துத் திரும்ப அளிக்கையில் நுரையீரல் ஒரு முறை சுருங்கி விரிந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது.

சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வாசகனுக்கும் நூலகம் நுரையீரல் போன்றதுதான். நானும் விதிவிலக்கல்ல. நான் சிங்கப்பூரில் தங்கிவிட்டதற்கு நூலகமே பிரதான காரணம். பல நல்ல வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளில் கிடைத்தாலும், பிடிவாதமாக சிங்கப்பூரில் இருப்பதற்கு, நூலகமே காரணம். கோயிலில் ஒரு பக்தனுக்குக் கிடைக்கும் மனநிம்மதியைக் காட்டிலும் ஒரு நல்ல வாசகனுக்கு நூலகத்தில் கிடைக்கும் மனநிம்மதியும் ஆறுதலும் அதிகம். அதற்குள் சென்றாலே மன சஞ்சலங்களும் லௌகிகமான பதற்றங்களும் அடங்கிவிடும். அங்கேயே இருந்துவிடமாட்டோமா என்றும் மனம் ஏங்கத் துவங்கிவிடும். எத்தனை எத்தனை மேதைகளை இந்த இடம் உருவாக்கிச் சமூகத்துக்கு அளித்திருக்கிறது என எண்ணிப்பார்த்தால் மலைப்பு ஏற்படும். இமயமலையின் உச்சிக்குச் செல்வதைவிடவும் அருகிலிருக்கும் ஒரு நூலகத்திற்குச் செல்வதில் உள்ள சாதனையுணர்வும் மனமலர்ச்சியும் அதிகம் என்று நான் நம்புகிறேன்.

நூலகத்திற்குள் சென்றவுடனேயே வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. “இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையானது, காற்று இனிமையானது, நிலம் இனிமையானது” என்று பாரதியின் வசன கவிதை ஒன்றுண்டு. நூலகத்திற்குள் இந்த வரிகளின் அர்த்தத்தை உணரலாம்.

தமிழகத்திலேயே கிடைக்காத அரிய நூல்கள் எல்லாம் சிங்கை நூலகங்களில் கிடைக்கும். புதிய நூல்களும் அச்சு வாசனை காய்வதற்குள் இங்கு வந்துவிடும். நூலக ஊழியர்களின் உழைப்பும் அக்கறையும் வியப்புக்குரியது. ஒரு சிறிய தவறைச் சுட்டிக்காட்டினாலும் அதற்கு உடனே எதிர்வினை ஆற்றுவார்கள். நான் இங்குள்ள நூலகங்களுக்குப் பல மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறேன். நம்மையும் ஒரு ஆளாக மதித்து உடனே அவர்கள் பதில் மின்னஞ்சல் அனுப்பி நாம் சுட்டிக்காட்டும் குறைகளைச் சரிசெய்துவிடுவார்கள். இல்லையெனில் அதற்கான காரணங்களைத் தெரியப்படுத்துவார்கள். தற்போது, நூல்களை முன்பதிவு செய்து நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பெற்றுக்கொள்ளும் வசதியை அளித்திருக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. சிங்கை நூலகங்களைப் பற்றி விரிவாகக் கட்டுரைகளே எழுதுமளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன.

எழுத்தாளர்களுக்குக் கடிதங்கள் எழுதுவது குறித்துச் சொல்ல முடியுமா?

ஆம். அது ஒரு சுகானுபவம். முதன்முதலில் துணையெழுத்தை வாசித்தவுடன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினேன். உடனே ஒரு போஸ்ட் கார்ட்டில் பதில் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு சொல்லும் இன்றும் நினைவில் உள்ளது. அது அப்போது எனக்களித்த ஊக்கத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அதைத் தொடர்ந்து அவருக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். உடனே பதில் போடுவார்கள். எனக்கு மட்டுமல்ல, நல்ல வாசகர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் ஜெயமோகன் பதில் அளிப்பது அனைவரும் அறிந்ததே.

அது ஒரு நம்பிக்கையையும் நிமிர்வையும் வாசகனுக்கு அளிக்கிறது. என் காலத்தின் முதன்மையான எழுத்தாளர்களிடம் நான் ஓர் அறிவார்ந்த உரையாடலில் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அது அளிக்கிறது. நாம் சென்று கொண்டிருக்கும் வழி சரியானதுதான் என்ற தெளிவையும் அளிக்கிறது. ஏனெனில், எழுத்தாளருக்கு எழுதும்போது வாசகன் தன் ஒரு துண்டு அகத்தை அளிக்கிறான். அவரும் பதிலுக்கு தன் அகத்தின் ஒரு துண்டை அளிக்கிறார். இந்த பரஸ்பர கருத்துப் பரிமாற்றம் வாசகனின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுகிறது. இதை நான் அனுபவித்திருப்பதால் என்னால் உறுதியாகவே சொல்ல முடியும்.

அவர்களிடம் பதில் பெற்றபின்னர், சம்பந்தப்பட்ட படைப்பும் உலகமும் புதிய கோணத்தில் புதிய வெளிச்சத்தில் தென்படும். அது நம்மை இலக்கியத்துக்குள் இன்னும் ஆழ்ந்து செல்லும் விசைகளை உருவாக்கியளிக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணன் - ஜெயமோகன் - கணேஷ் பாபு
எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகனுடன் கணேஷ் பாபு

எழுத்தாளருக்கும் வாசகருக்குமான நேரடித் தொடர்பும் உரையாடல்களும் அவசியம் எனக் கருதுகிறீர்களா?

ஆம். மிகவும் அவசியம். எழுத்து மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையின் முன்னோடிகளைச் சந்தித்து அவர்களிடம் உரையாடும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லூழ்தான். அதில் ஐயமில்லை. எஸ்.ரா, கோணங்கி, ஜெயமோகன் போன்றவர்கள் எல்லாம் தம் முன்னோடிகளைத் தேடித்தேடிச் சென்று கற்றுக்கொண்டவர்களே. இப்போது இணையம், செல்பேசி போன்றவைகள் இருப்பதால் எழுத்தாளர்- வாசகர் தூரத்தை அது பெருமளவு குறைத்திருக்கிறது. நேரடித் தொடர்பும் உரையாடலும் எழுத்தாளனின் ஆளுமையை நாம் அறிந்துகொள்வதற்கு மிகவும் உதவி செய்பவை. ஒரு மணி நேரம் ஒரு எழுத்தாளரிடம் பேசுவது என்பது அவரது உலகத்தை மிக எளிதாகப் புரிந்துகொள்வதற்கான நல்வாய்ப்பென்றே கருதுகிறேன். எழுத்தாளரிடம் இருந்து வரும் ஒரு கடிதமே ஒரு வாசகனுக்குப் பல தெளிவை அளிக்கும்போது, அவரிடம் நேரடியாகப் பேசும்போது அது பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால், இதற்கு இரு தரப்பும் தயாராக இருக்க வேண்டும். கூச்சத்தினால் நாம் நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாகாது. அதனால் இழப்பு வாசகனுக்குத்தான்.

உங்களின் எதிர்கால எழுத்துத் திட்டங்கள் என்ன?

அடுத்த சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வர வேண்டும். “சின்னமனூர்” என்ற நாவலை எழுத வேண்டும். இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய ருஷ்ய செவ்வியல் நாவல்களைக் குறித்து விரிவான கட்டுரைகளை எழுதி ஒரு தொகுப்பு கொண்டு வர வேண்டும். அந்தக் கனவை அரூவில் தொடர் எழுதுவதன் வாயிலாகச் செயல்படுத்திக்கொண்டு வருகிறேன். இந்தத் தொகுப்பு வெளிவந்தால் சிங்கப்பூரில் வெளியான மிகச்சிறந்த உலக இலக்கியக் கட்டுரை நூலாக இருக்கும்.


இதழ் 13 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்