கோ.கமலக்கண்ணன்

நேர்காணல்: கமலக்கண்ணன் – மொழிபெயர்ப்பு நூல்கள்

9 நிமிட வாசிப்பு

திருச்சிராப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்ட கோ.கமலக்கண்ணன் சிறுகதை, குறுநாவல் மற்றும் கட்டுரைகள் எழுதிவரும் இளம் எழுத்தாளர். தற்போது மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். 2021இல் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘ஷோஷா’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவ்வாண்டு இவரின் மொழிப்பெயர்ப்பில் ‘அபத்தமானவனின் கனவு’, ‘மீள்வருகை’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்புகளும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ – ஜூலியட்’ நாடகமும் நீகாஸ் கசந்த்சாகீஸின் ‘சோர்பா என்ற கிரேக்கன்’ நாவலும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகி உள்ளன. தமிழினி பிரசுரங்களான இந்த ஐந்து மொழிபெயர்ப்பு நூல்களை முன்வைத்து கமலக்கண்ணனுடன் அரூ குழு உரையாடியதிலிருந்து…

மொழிபெயர்க்கும் எண்ணம் முதன் முதலில் உங்களுக்கு எப்போது தோன்றியது?

2020 புத்தகக் கண்காட்சியின்போது தமிழினி இணைய இதழாசிரியர் கோகுல் பிராசத் அவர்களுடனான உரையாடலின்போது மொழிபெயர்ப்பு நூல்களின் தரம் அருகிவருவது குறித்தும் பேச நேர்ந்தது. பேசிக்கொண்டே இருப்பதைவிட நாமே செய்யலாமே என்ற எண்ணம் உண்டானதும் அப்போதுதான். அது நான் எழுதப்போகிற புனைவுக்கான பயிற்சியாக எனக்கு அமையுமே என்ற சுயநலம் எனக்கு உத்வேகமளித்தது. பல்வேறு நாவல்களைப் பற்றிச் சிந்தித்தபிறகு சிங்கரின் ஷோஷாவை மொழிபெயர்க்க முடிவு செய்தேன். ஜனவரி 2020இல் தொடங்கிய ஷோஷா மொழிபெயர்ப்பின் முதல் வரைவு ஏப்ரல் 2020இல் முடிந்தது. அதன் பிறகு தொடர்ந்து மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறேன்.

மொழிபெயர்ப்பிற்கான படைப்புகளை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

தமிழ் வாசகப் பரப்புக்கு இதுவரை வந்து சேராத மேதைகளை மொழிபெயர்ப்பின் வாயிலாகக் கொண்டுவருவதே முக்கியமானது என்று நினைக்கிறேன். இன்றைய கணினி தட்டச்சு முறையினாலும் என்னுள் இருக்கும் மொழிச்சரளத்தினாலும் என்னால் மிக வேகமாக மொழிபெயர்க்க முடிகிறது. ஆயினும் என் வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் உலகின் பல்வேறு மேதைகளையும் – நான் உட்பட ஒரு சிலர் மட்டுமே – மொழிபெயர்த்துத் தமிழுக்குக் கொண்டு வர இயலாது என்பதுதான் தற்போதைய எதார்த்தம். கல்வி கரையில அன்றோ! வாசிப்பு மாபெரும் இயக்கமாக மாறிப் பன்மடங்கு பெருகும் வருங்காலத்தில் மொழிபெயர்ப்பும் பெருகி உச்சம்கொள்ளும் என்று கருதுகிறேன். இவ்விரண்டினோடு எழுத்தையும் சேர்த்து ஒன்றுக்கொன்று ஆற்றல் அளிப்பவை என்றும் கருதுகிறேன். வாழ்வில் தனியனது ஆற்றலையும் நிலையாமையையும் கருதி மிகச்சிறந்த படைப்புகளை மட்டுமே மொழிபெயர்க்கத் தேர்வு செய்யவேண்டும் என்ற கொள்கையைப் பின்னர் உருவாக்கிக்கொண்டேன். நான் மொழிபெயர்க்கத் தொடங்கியபோது படைப்புகளைத் தேர்வு செய்வதில் இருந்ததைவிட இப்போது கறார்த்தன்மை மிகுந்திருக்கிறது. மிகச்சிறந்த படைப்புகளை மட்டுமே இனி மொழிபெயர்க்கத் தேர்வு செய்வேன். மொழியில் காத்திரம், விதப்பு முறையில் தனித்தன்மை, கவித்தும் என்று ஏதேனும் ஒரு கூறு உச்சத்தில் இருக்க வேண்டும்.

தமிழில் இருக்கக்கூடிய குறுகிய எழுத்து முறைமைகளாலும் வகைமைகளாலும் சலிப்புறும்போது இயல்பாகவே பிற மொழிப் படைப்பாளிகள் மீது நம் வாசிப்பு கவனம் குவியும். தமிழின் பல்வேறு சாதனைகளையும் தாண்டி ஒரு மொழியின் இலக்கியத்தை மட்டுமே வாசித்துக்கொண்டிருப்பது நிச்சயம் சலிப்பூட்டுவது என்பது என் கருத்து. எனவே பிறமொழி படைப்பாளிகளை வாசித்ததில் உண்டான அறிதலையும் உவகையையும் எண்ணியெண்ணி நாம் மகிழ்வதுண்டு. அத்தகைய படைப்புகளையும் மொழிபெயர்ப்புக்குரிய தேர்வாகக் கொள்கிறேன். ஆழ்படிமங்களை உருவாக்கிய செவ்வியல் படைப்புகளையும் மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறேன். ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் நாவல்களைத் தேர்வு செய்வதில்லை. அது கோரும் உழைப்புக்கும் வாசக எண்ணிக்கைக்கும் பொருத்தம் இருப்பதில்லை. முன்பு சொன்னதைப் போல வாசிப்பும் மொழிபெயர்ப்புக்கான முக்கியத்துவமும் பெருகும்போது 2666 போன்ற நெடும்படைப்புகளை மொழிபெயர்க்கும் சூழல் வரலாம்.

இந்தப் பணிக்கு உங்களை எப்படி தயார் செய்துகொண்டீர்கள்?

இயல்பாகவே என் மனம் சிற்றிதழ் சூழலில் இருந்து உண்டான உரைநடை மொழிக்கு நெருக்கமானதல்ல. பள்ளிப் படிப்பில் இருந்தே பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஈடுபாட்டுடன் இருந்ததால் சொற்களின் சந்தம் என்னை எப்போதும் கற்கவும் மகிழவும் வைத்திருக்கிறது. அந்த வகையான மொழி என்னுள் எப்போதும் அணியமாக இருக்கிறது. அப்படிச் சேகரமாகி, இருபதாண்டுகளாகக் கூர்மையடைந்த ஒரு மனக்கூறுதான் நான் மொழிபெயர்ப்பு செய்ய உதவியிருக்கிறது எனில் மிகையன்று. பதினைந்தாண்டுக் காலமாகத் தொடரும் நவீன இலக்கிய வாசிப்பு அந்த மனமொழியை நிதானமடையச் செய்திருக்கிறது. எனவே பொதுவாகத் தனிப்பட்ட முறையில் மொழிபெயர்ப்பாளனாகிறேன் என்று என்னை நான் அணியம் செய்துகொள்ளவில்லை. சரியாகச் சொன்னால் எனக்கு மொழிபெயர்ப்பாளனாக வேண்டும் என்ற உத்வேகம் அல்லது அடையாளக் கனவு இருந்ததே இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளன் ஆகிவிட்டேன் என்பதே எனது பிரக்ஞை அதற்கு அணியமாக இருந்துள்ளது என்பதைத்தான் குறிக்கிறது.

தமிழின் முன்னோடி மொழிபெயர்ப்பாளர்களில் உங்களை மிகவும் ஈர்த்தவர் யார்? அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட குறிப்பிடத் தகுந்த விஷயங்களைப் பகிருங்கள்.

தமிழின் அனைத்து மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து ஆங்காங்கே கற்க பல செய்திகள் உள்ளன. குறைந்தது சொற்களின் தேர்வு பல நேரங்களில் வியக்க வைக்கிறது. சிலரது மொழிபெயர்ப்புகளில் சரளமும் கரடுமுரடற்ற சொற்றொடர் அமைப்பும் பயின்று வரும். சிலரது மொழிபெயர்ப்புக் கதைகளில் வரும் சொற்களில் நுண்ணிய தேர்வுகள் இருக்கும். இப்படிப் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து பல்வேறு பெறுமதிகள் நம்மை வந்து சேரும். அது ஒரு நீண்ட பட்டியல். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் யூமா வாசுகி மொழிபெயர்த்த பல்வேறு சிறார் கதைகள் எனக்குப் பிடித்தமானவை. என் மகன் கவினெழிலுக்கு வாசித்துக் காட்டும்போது அது கிளர்த்தும் சொற்களின் நினைவுகள் எனக்கும் ஒருவகையான கல்வி. அவனும் அதன் வழியே பல சொற்களைக் கற்றிருக்கிறான்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இவை யாவும் தெள்ளுத் தமிழுக்கும் அதைச் சரியாக எழுத வேண்டும் என்ற பொறுப்புக்கும் நம்மை இட்டுச் செல்லும் பாதைகளேயன்றி வேறில்லை. என்னுடைய மொழிபெயர்ப்பு நேரடியாக இவர்களுடைய பாதிப்புகளால் உருவானவை அல்ல. அது என்னுள் இருந்து வரும் தனித்துவமான மொழியை நான் அறிந்துகொள்ள நிகழ்த்திவரும் சோதனை என்பதே பொருத்தமாக இருக்கும்.

என் மொழிபெயர்ப்பு முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவமாக இருக்கும். நான் நேரடியாக இங்கு புழங்கும் சிற்றிதழ் சொற்களின் வாசகனாக வளர்ந்தவனல்ல. என் சொற்தேர்வு சிலருக்குப் பொருத்தமற்றதாகவும் சிலருக்கு உயிரோட்டமானதாகவும் தெரிவதற்கு அதுவே காரணம். என் மொழிபெயர்ப்பு வருங்காலத்தில் பலரையும் ஈர்க்கும் என்பதிலும் எனக்கு இருவேறு கருத்துகள் இல்லை.

தற்போதைய தமிழ் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கான வரவேற்பும் தேவையும் வாசகர்களிடம் எந்த அளவிற்கு இருக்கிறது?

தேவை நிறையவே இருக்கிறது. வரவேற்பு போதிய அளவு இல்லை. நிச்சயம் அதற்கு வாசகர்களைப் பொறுப்பேற்க வைக்க முடியாது. மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும் பதிப்பகத்தார் சிலரும் அசிரத்தையாகச் செய்யும் பணிகள் வாசகர்களின் இளகிய பூ மனத்தைப் பதம் பார்த்த கதைகள் நிறைய உண்டு. உங்களுக்கே அத்தகைய பட்டறிதல்கள் நிறைய இருக்கும்.

மீள்வருகை - கோ.கமலக்கண்ணன்

மொழிபெயர்ப்பதில் சவாலான அம்சமாக எதைக் கருதுகிறீர்கள்?

தமிழுக்கு நேர்மையாக நடந்துகொள்வதா அல்லது மூல மொழிக்கு நேர்மையாக நடந்துகொள்வதா என்ற கேள்வியே முதல்நிலையில் எழும். நான் தமிழுக்கு நேர்மையாக நடந்துகொள்வதாகவே முடிவெடுத்தேன். பெரும்பாலான மொழியின் இலக்கியங்கள் நமக்கு ஆங்கிலத்தின் வாயிலாகவே வந்தடையும் நிலையில் மூல மொழியின் அருஞ்சொற்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பொருளற்றது; தேவையற்றது. உதாரணமாக மூலமொழியில் சில குழுவுக்குறிகள் வரக்கூடும். அது ஆங்கிலத்தின் வாயிலாக நம்மை வந்தடையும்போது ஆங்கிலத்திற்கு உகந்த மரபுத்தொடரையோ குழுவுக்குறியையோதான் மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். அதை நான் தமிழுக்கு உகந்ததாக மாற்றுகிறேன். அப்படியே பொருளைக் கடத்துவதைவிட அப்படியே உணர்வுகளைக் கடத்துவதே முக்கியம் என்பதே நான் சொல்ல வந்ததன் ஒரு வரி விளக்கம்.

அடுத்ததாக எழுத்தாளரின் விதப்பு தொனி. அதைச் சரியாகப் பற்றுவதற்கு நிறைய சிரத்தை தேவை. ஏறத்தாழ ஒரு நல்ல நடிகன் தன்னை இழந்து கதாபாத்திரமாக முற்றிலும் மாறுவதைப்போலக் கற்பனையின் துல்லியத்தின் வாயிலாக மூலமொழியின் எழுத்தாளராகவே மாறி அவரது எழுத்துநடையின் தனித்துவத்தை அடைய முயல்வது. இது இரண்டாம் நிலை அறைகூவல். இதைச் செய்தும் தொடர்ந்து செய்ய முயன்றும் வருகிறேன். இதில் மொழியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடியே தன்னை இழக்கும் பகுதிதான் மிகக் கடினமானது.

ஒரு மொழியின் மரபுத்தொடர்களைத் தமிழுக்கு மாற்றுவதை எவ்வாறு கையாள்கிறீர்கள்?

மரபுத்தொடர்கள், குழுவுக்குறிகள், பழமொழிகள் அனைத்தும் ஒரு பண்பாட்டின் உள்ளார்ந்த கூறு. அது ஓர் உணர்வைக் கடத்தும். அதை நேரடியாக மொழிபெயர்த்து வேறொரு மொழியில் வாசித்தால் நிச்சயம் மூலப்பொருள் சிதையும். எனவே அத்தகைய இடங்களில் மொழியைச் சொல்லுக்குச் சொல் மாற்றாமல் மொழிபெயர்க்கப்படும் மொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் செவ்வியல் இலக்கியங்களையும் பழமொழிகளையும் நன்கு புழக்கத்தில் உள்ள மேற்கோள்களையும் பயன்படுத்த முனையலாம்.

சோர்பா என்ற கிரேக்கன் - கோ.கமலக்கண்ணன்

சோர்பா என்ற கிரேக்கன் நாவலில் ஒரு காட்சி வருகிறது. மடாலயத்தில் இருக்கும் முதிய மதகுரு ஒருவருடன் இரவில் சோர்பாவும் அவரது முதலாளியும் சேர்ந்து உரையாடுகிறார்கள். தனது வாழ்நாள் சாதனைகளை அவர்கள் இருவரிடமும் மதகுரு ஆர்வம் விழிகளில் மின்ன பகிர்ந்துகொள்கிறார். அவரை சோர்பா நையாண்டி செய்கிறார். அக்காட்சியில் புனிதக் கன்னியை விளிக்கும் பல்வேறு விளித்தொடர்களைத் தான் சேகரித்து வைத்திருப்பதாகச் சொல்லி அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிடத் தொடங்குகிறார். அவற்றைச் சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்ப்பதைவிட அவர் ஒப்புவிக்கும்போது எழும் ஒலியும் ஒட்டுமொத்த உணர்வும் முக்கியமானது. நான் அதை மொழிபெயர்த்ததைக் கீழே தருகிறேன்.

‘நான் முதியவன்’ என்றார். ‘என்னால் வேறென்ன செய்ய இயலும்? கன்னி மரியாளை அலங்கரிக்கும் அத்தனை பட்டப்பெயர்களையும் பட்டியலிடுகிறேன். அவ்விதமாக இந்த உலகின் சழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பிக்கொள்கிறேன்.’

அவர் தலையணையில் தன் முழங்கையை அழுத்திச் சாய்ந்து, விழிகளை மூடிக்கொண்டு உறக்கத்தில் உளறுபவர் போல ஒப்புவிக்கத் தொடங்கினார்: ‘மட்காத மலரே, பூதலத்தின் பலனே, கொடியே, நீரூற்றே, அற்புதங்களின் ஆதிமூலமே, சுவனத்திற்கு ஏணியே, பாவிகளின் பாலமே, திசையிழந்தோரின் கலங்கரை விளக்கமே, ஓய்வின் மடியே, சொர்க்கத்தின் சாவியே, நித்திய ஒளியே, மின்னல் விளக்கே, தீத்தூணே, வெல்லற்கரிய தெய்வமே, அசைவற்ற கோபுரமே, எதிரி புகவியலாத அரணே, ஆற்றுப்பாடே, மகிழ்ச்சியே, குருடனுக்குப் பாதைகாட்டும் கழியே, அநாதைகளின் அன்னையே, மேசையே, உணவே, சமாதானமே, அழகே, பரிமளமே, மலர்க்கொத்தே, பாற்தேனே…’

நேரடியாகப் பார்த்தால் சிலப்பதிகாரச் செய்யுளைப் போலத் தோன்றுகிறது. ஆங்கில மூலத்தை நீங்கள் ஒப்பிடுகையில் பொருள் சிதைவோ உணர்ச்சி சிதைவோ இருக்காது என்பதை உணர்வீர்கள்.

மொழிபெயர்க்கும்போது புதிய சொற்களோ சொற்சேர்க்கைகளோ உருவாக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறதா?

நிச்சயம் அத்தகைய தேவைகள் ஏற்படும். மூலமொழியில் இருக்கும் சொற்றொடரைத் தமிழில் இனிமையாக மாற்ற தொகைநிலைத் தொடர்களைப் பயன்படுத்துவது பலனளிக்கும். சில நேரங்களில் உரையாடல்களின் போது துல்லியமான பொருளைவிட உரையாடலின் சுவை நகையா மருவலா வியப்பா என்று புரிந்துகொண்டு தக்க சொற்சேர்க்கையைப் பயன்படுத்த நேரிடும்.

நான் சுருள்தாள், கம்யூனிச களித்தோழி, ஒளிர்சாளரம் என்றும் சில சொற்சேர்க்கைகளைத் தேவைக்கேற்ப உருவாக்கியதுண்டு. உரையாடல்களில் வரும் சொற்களுக்குப் பொருத்தமாகத் தமிழில் சொல் இல்லாதபோது அந்த உணர்வுக்கு அருகில் வரும் வண்ணம் இலக்கணப்பிழைகளைப் பொருட்படுத்தாமலும் அதைச் செய்வதுண்டு.

மேற்சொன்ன ‘கம்யூனிச களித்தோழி’ என்பது ‘Communist Darling’ என்ற சொல்லின் மொழியாக்கம். நேரடியாகப் பார்த்தால் இதில் மாற்றுக் கருத்துகள் தோன்றலாம். ஆனால் ஓர் உரையாடலில் இது பரிகசிப்புத் தொனியில் வருவதால் மோனையுடன் சேர்த்து எழுதும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டேன். ஒளிர் சாளரம் என்ற இடத்தில் ஒளி புகும் சாளரம் என்பதே சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும். ஆயினும் ஒளிர்சாளரம் என்ற வினைத்தொகையே மிகக் கச்சிதமாக ஒலிக்கும் என்பதால் அதைத் தேர்ந்தெடுத்தேன். சுருள்தாள் என்பதும் வினைத்தொகைதான்.

அபத்தமானவனின் கனவு என்ற சிறுகதையில் இருளைக் காட்சிப்படுத்தும்போது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த சொற்றொடரை அப்படியே பயன்படுத்தாமல் ‘வன்னிருட்டு’ என்ற பண்புத்தொகையைப் பயன்படுத்தியிருந்தேன். அந்தச் சொல் தன்னை மிகவும் அசைத்துவிட்டதாக கவிஞர் கார்த்திக் நேத்தா குறிப்பிட்டார்.

ஷோஷா நாவல் இத்திய மொழியிலும் (Yiddish) சோர்பா நாவல் கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டவை. இவற்றுக்கு ஒன்றுக்கும் மேலான ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. உங்கள் மொழிபெயர்ப்புக்குச் சரியான ஆங்கில மூலத்தை எவ்வாறு தேர்வுசெய்தீர்கள்?

ஐசக் பாஷவிஸ் சிங்கர் தன் சிந்தனை மொழியான இத்தியத்திலேயே எழுதி வந்திருக்கிறார் என்றபோதும் தன் ஒவ்வொரு நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின்போதும் அருகே அமர்ந்து தன் புனைவு எண்ணங்களை விவரித்தும் பிழைகளைக் களைந்தும் வெளியீட்டுக்கு உதவுவது சிங்கரின் வழக்கம். அவர் ஒப்புதலுடன் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பைத்தான் நான் ஷோஷா மொழிபெயர்ப்பின்போது தேர்வு செய்தேன். கசந்த்சாகீஸை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் முதன்மையானவர் பீட்டர் பெய்ன் (Peter Bien). நான் வேறு மொழிபெயர்ப்புகளைப் பற்றி ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. மைக்கேல் கேகயானிஸ் இயக்கிய திரைப்படமும் பீட்டர் பெய்னுடைய மொழியாக்கமும் போதுமானதாக இருந்தன.

நீகாஸ் கசந்த்சாகீஸ் மற்றும் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் நாவல்களை மொழிபெயர்த்த பின்னர் அவர்கள் எழுத்தின் தனிதன்மையாக நீங்கள் உணரும் அம்சம்?

சிங்கர் இருளின் திடத்தையெல்லாம் பின்புலத்தில் தள்ளிவிடும் ஒரு ஒளித்துளியை, ஒரு புன்னகையை, ஒரு தீபத்தை ஏற்றி வைக்கக்கூடியவர். போருக்கிடையில் உறங்க அனுமதிக்கும் இரவு போன்ற ஒரு அன்பை நோக்கமாகக் கொண்டவர். இரண்டாம் உலகப்போரின் கூரிய விலங்குபற்கள் தன்னை நோக்கி வரும்போதும் அதிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிட்டியபோதும் தன் மனத்தில் குரலுக்குச் செவி சாய்ப்பவனாகத்தான் அவரது நாயகன் இருக்கிறான். அவர் தன் ஹசீதிய யூதக் குடும்ப வழக்கத்தில் இருந்து பெற்ற தொன்மங்களையும் வாழ்க்கை முறையையும் கருவிகளாகப் பயன்படுத்தி, தன் மனத்தை அகழ்ந்து அகழ்ந்து அதிலிருந்து பல காதல்களையும் மானுடத்தின் மீதான நம்பிக்கை துளிர்க்கும் நிகழ்வுகளையும் புனைவாக்கியபடி இருக்கிறார். அன்பான தாத்தாவாகக் கதை சொல்லியபடியே நம் கால்களை வந்து கட்டிக்கொள்ளும் குழந்தையின் தொடுகையை உணர்த்தக்கூடியவர்.

கசந்த்சாகீஸ் ஒரு தேர்ந்த பகடியாளி. அவர் பல்வேறு தத்துவத் தளங்களில் தன் வாழ்க்கை முழுவதும் பயணம் மேற்கொண்டவர். இறைவன், மதம், பாலுணர்வு, ஆண் பெண் வேறுபாடுகள் என அனைத்தையும் கொண்டாட்டத்தின் விழிகள் வழியாக விமர்சித்தவர். அவர் தனி மனிதனின் விடுதலையை மானுட விடுதலையைவிடப் பெரிது என்று வாதிடுபவர். ஒருவனுக்குத் தடை என்பதே இருக்கக்கூடாது என்பதில் இருந்துதான் வாழ்வின் முதல் அடியே தொடங்குகிறது என்பதே அவரை வாசித்து அணுகி மொழிபெயர்த்து அறிந்தது.

ஒரு நாவலை மொழிபெயர்க்க அதை வாசிப்பதைத் தவிர, வேறு என்னென்ன தயாரிப்புகள் செய்வீர்கள்? அந்த எழுத்தாளரின் பிற படைப்புகளோ, நேர்காணல்களோ, அக்காலகட்ட வரலாறு அல்லது இலக்கியத்தைக் குறித்தோ வாசிப்பது அவசியமா?

ஒரு நாவலைச் சுற்றியுள்ள வரலாற்று, பண்பாட்டு பின்புலங்களில் தெளிவடைவதற்காக சில துணை நூல்களை வாசிப்பது அவசியம் என்றே கருதுகிறேன். சோர்பா என்ற கிரேக்கன் நூல் மொழிபெயர்ப்பின்போது தாந்தேவை வாசித்தேன். கிரீட் நகரம் இந்நாவலில் ஒரு முக்கிய அங்கம். எனவே கிரீட் நகரின் தோற்றம், அமைவிடம், காலநிலை பற்றிய தரவுகளை இணையத்தில் வாசித்தேன். அதைப் போலவே ஷோஷா நாவலை மொழிபெயர்க்கும்போது இத்தியம் பற்றியும் ஹசிதிய யூதர்களைப் பற்றியும் பழைய ஏற்பாட்டையும் விரிவாக வாசித்தேன். இவை அனைத்தும் நேரடியாக மொழிபெயர்ப்பில் பயன்பட்டதா என்பது கேள்வியல்ல. இவை அனைத்தையும் அறிந்த மனத்தினின்று எழும் அகமொழியே முழுமையை நோக்கிய மொழிபெயர்ப்பை உருவாக்கும் என்பது திண்ணம்.

மொழிபெயர்ப்பு நூலின் உருவாக்கத்தில் எடிட்டிங்கும் செம்மைப்படுத்தலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நூல்களின் எடிட்டிங் எவ்வாறு நடந்தது?

மொழிபெயர்ப்புப் பணியில் மிக முக்கியமான பட்டறிதல் செம்மையாக்கல் பகுதியில்தான் நிகழ்ந்தது. இயல்பாகவே முதல் நூல் என்பதால் எழும் சந்தேகங்களும் தடுமாற்றங்களும் நிகழ்ந்தனவே ஒழிய மொழி குறித்த தடுமாற்றங்களென ஏதும் இல்லை. தமிழினி வசந்தகுமார் அவர்கள் பல்லாண்டுகளாக இலக்கியப் பிரதிகளைச் செம்மையாக்கியும் தரமான இலக்கியப் படைப்புகளை நூல்களாக்கியும் வந்துள்ளார். தமிழுக்கு அவரது பணி அரிதானது. மிகச் சிறப்பானது. அவர் ஷோஷா நாவலின் முதல் வரைவைத் திருத்தி அளித்தபோது ஒரு புறம் என் பிழைகளை எண்ணி வெட்கியும் மறுபுறம் என் கற்றலை எண்ணி மகிழ்ந்தும் இருந்தேன். ரோமியோ ஜூலியட் நாடகத்தை மொழிபெயர்த்தபோது பதினைந்தே நாட்களில் அதை முடிக்க முடிந்தது. அதற்கான ஊக்கத்தை ஷோஷா மொழிபெயர்ப்பின் செம்மையாக்கல் மூலமாகவே அடைந்தேன். தற்போது சோர்பா என்ற கிரேக்கன் வெளியாகி உள்ளது. அதில் எனக்குப் பிழைகளும் தடுமாற்றங்களும் அநேகமாக இல்லை. மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு பிரதியாக சோர்பா என்ற கிரேக்கன் திகழும் என்பதிலும் அதற்கு செம்மையாக்கம் பற்றிய கல்வியே எனக்குக் கணிசமாக உதவியது என்பதிலும் எனக்கு இருவேறு கருத்துகள் இல்லை.

ஒரு படைப்பாளியாக மொழிபெயர்ப்பு செய்வது எந்த அளவிற்கு உங்கள் எழுத்திற்கு உதவியுள்ளது?

நிச்சயம் உதவுகிறது. மொழிபெயர்ப்பு அக மொழியின் பிசிறுகளைச் சரிசெய்கிறது. பல குழப்பங்களுக்கான விடைகளைத் தேட நம்மைத் தூண்டுகிறது. அவ்வாறு மொழிபெயர்ப்புப் பணி ஒரு பொறுப்பாகவும் ஒரு பயிற்சியாகவும் ஒரே நேரத்தில் இருந்தது எனில் மிகையன்று. ஒரு புனைவுக்காக நிலத்தை உழுது அணியம் செய்தாயிற்று என்ற தன்னம்பிக்கையையும் மொழிபெயர்ப்பே எனக்கு அளித்தது. முன்பிருந்ததைவிட என்னால் தங்கு தடையின்றியும் ஐயங்களின்றியும் ஒரு புனைவை இன்று என்னால் எழுத முடியும். அரூவிற்காக ‘அந்நியர்கள்’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு அதை எழுத எனக்கு ஒருவார காலம் ஆகியிருக்கும். இப்போது இரண்டு நாட்களில் – சரியாகச் சொன்னால் இரு மூன்று மணி நேர அமர்வுகளில் – எழுதி முடிக்க முடிந்தது. படைப்பு மொழியின் வேகம் அதிகரிக்கும்போதே பிரக்ஞையின் கூர்மையும் அதிகரிக்கும். ஆகவே நிச்சயம் படைப்பு மொழிக்கு மொழிபெயர்ப்பு உதவியிருக்கிறது.

மொழிபெயர்ப்பு செய்த பின்னர் மொழி மீதான காதல் அதிகரித்துள்ளதா?

காதல் – மொழி. உருவகித்துப் பார்க்க மிகச்சரியான இணை. இரண்டும் காலம் செல்லச் செல்ல நம்முள் இனித்துப் பரவித் தீவிரம்கொள்ளும் ஒயின். மொழிபெயர்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் பிழையின்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மொழிமீதான காதல் மிகப்பெரிய அளவுக்குப் பெருகி இருக்கிறது. இப்போது மொழிபெயர்ப்பின் ஊடற்காலம். சற்றே மொழிபெயர்ப்பைக் குறைத்துக்கொண்டு புனைவு எழுதலாம் என்று திட்டமிருக்கிறது.


இதழ் 13 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்