ரவிசுப்பிரமணியன்

நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

42 நிமிட வாசிப்பு

“நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.”

கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், இசைக்கலைஞர் எனப் பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என இவரது ஒன்பது நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், டி. என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

ஆவணப்படங்கள், கவிதை, இசை போன்ற தனது பன்முகச் செயல்பாடுகளையொட்டி ரவிசுப்பிரமணியன் அரூ குழுவுடன் உரையாடியதிலிருந்து…

கவிஞனாக வேண்டுமென பாலகுமாரனிடம் சொன்ன உங்களுக்குத் திரைப்படங்களிலும் திரைமொழியிலும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

நல்ல கேள்வி. இப்படியான ஒரு கேள்வியை நான் என் நேர்காணல்களில் அதுவும் முதல் கேள்வியாக இதுவரை எதிர்கொண்டது இல்லை. நான் 1963இல் பிறந்தேன். அப்படியென்றால், நான் எழுபதுகளின் குழந்தை. அந்தக் காலத்தில், பிரதானமான பொழுதுபோக்கு திரைப்படம்தான். கொஞ்சம் மேடைப் பேச்சு, நாடகங்கள். அதெல்லாம்கூடக் குறைவுதான். கிட்டத்தட்ட என் நண்பர்கள் குழுவில் ஐம்பது விழுக்காட்டு பேருக்குத் திரைப்படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் பங்கு பெற வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எங்கள் பேச்சில் பெரும்பாலும் சினிமாதான் இருக்கும். அந்த ஊடகத்தின் தாக்கம் அது. எனக்கும் அது இருந்தது.

ஒரு படம் பார்ப்பது அல்லது பார்க்கப் போவது என்பதே எனக்கு ஒரு கொண்டாட்டம். அது ஒரு நிகழ்வு என்று வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் அனுமதியே கிடைக்காது. மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு தடவை அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டும். நீங்கள் வாங்குகிற மார்க்குக்கு இதெல்லாம் வேறா என்பார். எதை எப்போது சொல்லி அடிக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். நாம் அதற்கெல்லாம் அசரும் ஆளா என்ன. பத்தாவது வரை 30 மார்க்கைத் தாண்டியதில்லை என்பதுதான் நம் சரித்திரமே.

ரவிசுப்பிரமணியன்

இன்று சினிமாவுக்குப் போகலாம் என்று அனுமதி கிடைத்துவிட்டால் அந்த நாளே வேறு மாதிரி குதூகலமாக இருக்கும். எப்போது ஐந்து மணியாகும் என்று பரபரவென்று தவிப்போம். அப்பாவும் அம்மாவும் நிறைய பார்ப்பார்கள். எங்களுக்கு அனுமதி கிடைக்காது. கிடைத்தாலும் பெரும்பாலும் எங்களுக்கு விதித்தது, தேவரின் தெய்வம், ஆதிபராசக்தி, திருவிளையாடல், திருமால் பெருமை இந்த மாதிரி படங்கள்தான். ஆனால், எங்களுக்கு எம். ஜி. ஆர். சிவாஜி படங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அம்மா சினிமா பார்த்துவிட்டு வந்து, எங்கள் ஆத்தாவுக்கு — அதாவது அவர்கள் அம்மாவுக்கு — அப்படியே விலாவாரியாகக் கதையைச் சொல்கிறபோது கேட்டுக்கொள்வதுதான். அதைக் கேட்கும்போதே படம் மனத்தில் ஓடும், அப்படிச் சொல்வார்கள். என்ன இதில் நான்கைந்து இடைவேளை வரும். அதனால் பதற்றம் அதிகமாகிக்கொண்டே போகும். வில்லன் பற்றிச் சொல்லும்போது, “அய்யோ அம்மா, அவரு (அதாவது ஹீரோ) சாப்பாட்டுல கை வைக்கிறாரும்மா அந்தக் காளியாயில போற கம்னாட்டி எப்படித்தான் அங்க வந்தானோ அப்படி கரெக்ட்டா ‘ணங்’ன்னு வந்து நிக்கிறான்ம்மா. இவரு வுடுவாரா என்ன. எந்திரிச்சு குடுத்தாரு ஒன்னு. அப்பயும் அடங்குனானா அவன். இவரை அடிச்சிக் கீழ சாய்ச்சுபுட்டான்ம்மாங்கிறன்” அதுக்கு ஆத்தா உடனே பதில், “அய்யோ கடவுளே என்னம்மா இது, அப்பறம் என்னாச்சு?” அந்த ரீதியில் போகும் கதை. நாங்கள் எதுவும் பேச மாட்டோம். அப்படியே கண்ணை விரித்து ‘ஆ’வெனக் கேட்டுக்கொண்டே இருப்போம். எல்லா கேள்வியும் ஆத்தாதான் கேட்பார். அந்த மாதிரி சண்டைக் காட்சிகளை விவரித்த ஒரு பெண்குரலை அதற்குப்பிறகு நான் இதுவரை கேட்கவே இல்லை. வீட்டில் நான் மூத்த பையன். எனக்குக் கீழே இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகள். அவர்களுக்குப் பாடும் தாலாட்டெல்லாம், சினிமாவில் வரும் தாலாட்டாகத்தான் அம்மா பாடுவார்கள்.

நான் முதன்முதலில் மேடையில் என் கும்பகோணம் ‘டவுன் ஹய் ஸ்கூல்’ ராமானுஜம் ஹாலில் பாடிய பாட்டு, ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியார் பாட்டு. நான் பள்ளியில் முதலில் நடித்த நாடகம் ‘ராஜா ராணி’ என்கிற திரைப்படத்தில் வரும் ‘சாக்ரடீஸ்’ என்கிற ஓரங்க நாடகம். அதுவும் அதே பள்ளியின் தாசாரதி கலையரங்கத்தில் நடந்தது. கருணாநிதி அவர்கள் வசனம் எழுதியது. அதில் சாக்ரடீஸாக நான் 1978இல் நடித்தேன்.

ரவிசுப்பிரமணியன் 'சாக்ரடீஸ்' நாடகம்

ரேடியோவில் திரைப்படப் பாடல் கேட்பதுதான் எங்களுக்கு அப்போது ஒரே பொழுதுபோக்கு. அதிலும் சிலோன் ரேடியோதான் எங்களுக்குச் செல்லம். தவிர, பக்கத்தில் ஒரு மாரியம்மன் கோயில், அங்கே திருமணம், காதுகுத்து, சடங்கு, கோவில் விசேஷம் என்றால் எல்.பி ரெக்கார்டில் ஒலிச் சித்திரங்களைப் போட்டுவிடுவார்கள். மணிக்கணக்காகத் திருவிளையாடல், மனோகரா, பராசக்தி போன்ற பல திரைப்படங்களின் ரெக்கார்டைப் போடுவார்கள். அது முடிந்தால் சினிமா பாட்டை எக்கச்சக்கமாகப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். விரும்பியோ விரும்பாமலோ அது நம் காதில் விழுந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் அந்த வயதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.

கல்லூரிக்கு வந்த பிறகு, நான் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்தேன். சிங்கப்பூர் குமார் ஆர்கெஸ்ட்ரா என்று அப்போது தஞ்சை மாவட்டத்தில் பிரபலமாக இருந்த இசைக் குழுவில் பாட்டுக்கான இடைவேளையில், ராஜேந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், எம்.ஜி.ஆர், நம்பியார் போன்ற நடிகர்களின் குரல்கள், இசைக்கருவிகளை வாயால் இசைத்துக் காட்டுவது, பல பாடகர்களின் குரலில் நான்கு நான்கு வரியாகப் பாடிக் காட்டுவது எனப் போனது சில வருடங்கள். இதெல்லாம் சேர்ந்துதான் திரைப்படத்தில் நடிக்க வேண்டும், அதில் பங்கு பெற வேண்டும் என்கிற ஆசையை எனக்குக் கொடுத்தது.

என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, படப்பிடிப்பிற்குக் குற்றாலத்துக்கு வரச் சொல்லித் தந்தி கொடுத்திருந்தார்கள். வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை. நான் டைபாயிடு என்று சொல்லிப் போகமால் இருந்துவிட்டேன்.

அதுக்கு முன்னால் கல்லூரி நாடகங்களில் நடித்துப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் நானே எழுதி நடித்து இயக்கியிருக்கிறேன். ஒருமுறை காரைக்குடியில் தமிழ்நாடு அளவில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். திருநங்கையாக அதில் நடித்திருந்தேன். அப்போது திருநங்கை என்ற பெயரெல்லாம் கிடையாது. அந்த வேடத்தில் சிறப்பாக நடித்ததற்கு மாநில அளவில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அதை நடிகர் ராஜேஷ் கையால் வாங்கினேன். அதே நாடகத்துக்கு நடிகர் வினுசக்ரவர்த்தி கையாலும் பரிசு வாங்கினேன். சின்ன வயதிலேயே நாடகம், சினிமா ஆர்வம் வந்துவிட்டது என்றாலும் பாரதிராஜா பட வாய்ப்பு கிடைத்தபோது வீட்டில் மனைவியும் சித்தப்பாவும் கடுமையாக மறுத்தார்கள். வியாபாரம் இருக்கிறது, லாட்ஜ் இருக்கிறது, வயல் எல்லாம் இருக்கிறது, நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நானும் அப்படியே விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு, ராபர்ட் ராஜசேகரன் ஒரு படத்தை எடுக்க ஆரம்பித்தார். என்னுடைய நண்பர் விசாகன் கல்லூரியில் என் சீனியர். எங்கள் கல்லூரி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், அவர் ராஜசேகரிடம் உதவியாளராக இருந்தார். அவர் மூலமாக அந்தப் படத்தில் நடிக்க சென்னை வந்தபோது, அந்த அலுவலகம் போகும் வழியில், ஒரு பெரிய விபத்து நடந்தது. இடது காலில் கார் ஏறி இறங்கிவிட்டது. இனிமே கால் வராது, எடுக்க வேண்டும், அல்லது நடக்க முடியாது என்கிற மாதிரியான ஒரு சூழ்நிலை. எப்படியோ ஒரு வருடத்தில் எல்லாம் சரியாகி, இப்போது நன்றாக நடக்க முடிகிற மாதிரி இருக்கிறது.

அப்புறம் எடிட்டர் இயக்குநர் லெனினிடம் உதவியாளாராக மூன்று ஆண்டுகள் இருந்தேன். அவருடைய நாக் அவுட், குற்றவாளி போன்ற குறும்படங்களை அவரைச் சந்திப்பதற்கு முன்பே பார்த்திருந்தேன். அவருடன் இருந்தது ஒரு கொடுப்பினை. அவர் ஒரு லெஜண்ட். அவரும் நானும் ஒன்றாக அவர் வீட்டில் தமிழிசை படித்தோம். அவரே சமைத்துக் கொண்டு வந்து பரிமாறிச் சாப்பிடவெல்லாம் வைப்பார். அதெல்லாம் தனிக்கதை. இந்தப் பின்னணியில்தான் ஒரு படத்தை இயக்கும் ஆர்வம் பிற்பாடு வந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான்கு முறை வாய்ப்பு கிடைத்தது. எனக்காக சுபா இரட்டையர்கள் முதலில் திரைக்கதை எழுதிக் கொடுத்தார்கள். ஜெயமோகன் இரண்டு முறை திரைக்கதை எழுதிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு முறை எழுதிக் கொடுத்தார். கலாப்ரியாவும், வண்ணதாசனும் சேர்ந்து வண்ணநிலவனின் எஸ்தர் கதைக்கு வசனம் எழுதிக் கொடுத்தார்கள். இப்படி ஆறு பேருமாக நான்கு படத்திற்கு எழுதிக் கொடுத்தார்கள். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் இவர்கள் யாருமே என்னிடம் பணமே வாங்கிக்கொள்ளவில்லை. எல்லா படமும் ஆரம்பித்து நின்று போனது. கடைசியாக இந்த ‘டுலெட்’ திரைப்படத்தில் அதன் இயக்குநர் செழியன் மூலமாக, ஒரு சின்னக் கதாப்பாத்திரத்தில் நடிகனாக அறிமுகமானேன். இப்போது ‘அனல்காற்று’ என்கிற படத்துக்குப் பாடல் எழுதி இருக்கிறேன்.

ரவிசுப்பிரமணியன் பாரதிராஜா செழியன்
இயக்குநர் பாரதிராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் செழியனுடன் ரவிசுப்பிரமணியன்

இதற்கு முன்னால் சன் டிவியில் வந்த ‘பெண்’ என்கிற சீரியலுக்காக ஒரு டைட்டில் பாட்டு எழுதினேன். கிரண் என்கிற இசையமைப்பாளரின் இசையில் சுசித்ரா என்கிற பாடகி பாடி 25. 4. 2006 அன்று வடபழனி குமரன் காலனி ஸ்டுடியோவில் “மலையோர காட்டுக்குள்ள ஆடு மேக்கும் பொண்ணுங்க” என்ற தொடக்க வரிகளோடு என் கண்முன்னால் பதிவானது. ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை. அது வெளிவரும்போது என் பேர் தானாக வைரமுத்து என்று மாறியிருந்தது. இப்பவும் அதற்கான ஆதாரங்கள் என் கையில் இருக்கின்றன. அந்த விஷயத்தைப் பெரிதாக்காமல் இயக்குநரின் நட்பு அப்போது என்னைக் கட்டி போட்டது.

இப்போது ‘தாமரை’ என்ற ஒரு குறும்படத்தை இயக்கி முடித்திருக்கிறேன். ‘தாமரை நாச்சி’ என்ற தலைப்பில் என். ஸ்ரீராம் எழுதிய கதையின் இன்ஸ்பிரேஷனில் நான் எழுதிய கதை அது. சுமார் நாற்பது நிமிடம் ஓடக்கூடிய திரைப்படம். கதை, வசனம், இயக்கம், திரைக்கதை, எல்லாம் செய்திருக்கிறேன். அடுத்த மாதத்தில் அந்தப் படம் வெளியாகிவிடும்.

உங்களை முதன் முதலில் வியப்பில் ஆழ்த்திய ஆவணப்படத்தைப் பற்றிச் சொல்லுங்கள். எப்போது பார்த்தது, எம்மாதிரியான தாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்தியது?

காந்தியைப் பற்றிய ஆவணப்படத்தைத்தான் சொல்வேன். ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது ‘வார் ரீல்’ (war reel) போல் பள்ளியில் போட்டார்கள். காந்தி குடுகுடுவென துரித நடையில் போய்க்கொண்டிருப்பார். அவர் பேசுவது, அவருடைய குரல், எல்லாம் அசல் காந்தியின் காட்சிகள். தேசத்தந்தை என்று பாடத்தில் நிறைய படித்திருக்கிறோம். அந்த மனிதரைத் திரையில் பார்ப்பது அவ்வளவு பிரமிப்பாக, சந்தோஷமாக இருந்தது. சட்டை இல்லாமல் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, குச்சியை ஊன்றிக்கொண்டு, கிடுகிடுவெனப் போவது, வருவது, அவர் சிரிப்பு, பேச்சு எல்லாம் ஒருவித ஆச்சரியமாக இருந்தது. அது ஆவணப்படம் என்றால் என்னனவென்று தெரியாத வயது. அது ஒரு தொடக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். பள்ளியில் எஸ்கிமோக்கள், எவரெஸ்ட், மிருகங்கள், செடிகொடிகள், மரங்கள் பற்றிய படங்கள் எல்லாம் போட்டு காட்டினார்கள். ஆனால், அதுக்கெல்லாம் பிறகுகூட, தொடர்ச்சியாக ஆவணப்படம் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை, வாய்ப்புமில்லை. அப்போது பெரிய ஆர்வம் இருந்தது என்றும் சொல்ல முடியாது.


நாமும் ஓர் ஆவணப்படம் இயக்கிப் பார்க்கலாம் என உங்களுக்குத் தோன்றிய தருணம் எது? யார் உந்துதலாக இருந்தார்கள்?

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் விஜய் டிவியில் இயக்குநராக இருந்த என் நண்பர், ரபி பெர்னார்டின் அழைப்பின் பேரில், 1996இல் சென்னைக்கு வந்து, விஜய் டிவியில் வேலைக்குச் சேர்ந்தேன். வெவ்வேறு நிகழ்ச்சிகளை இயக்கினேன். அதில் சினிமா பாடல்களை ஒரு வரிசையில் அழகாகத் தொகுத்து விவரணைகளுடன் வெளியிடுவது, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் இதெல்லாம் எனக்கு மிகவும் உவப்பாக இருந்தன.

அப்போது என் வேலை நிமித்தமாக நிறைய ஆவணப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. செய்திகளுக்காகச் சின்னச் சின்ன ‘வாய்ஸ் ஓவர் ஸ்டோரீஸ்’ (voice-over stories) செய்வேன். அதுதான் என்னுடைய ஆவணப்பட வேலைகளுக்கான தொடக்கம் என்று சொல்லலாம். வெளிநாடுகளில் இருந்துவரும் செய்திக் காட்சிகளை வைத்து, ஆவணப்படம் செய்து கொடுக்கச் சொல்லி ரபி ஆரம்பித்து வைத்தார். பின்னர் இந்தியாவில் இருந்து வரும் செய்திக்காட்சிகளை வைத்து, சின்னச் சின்னதாக ‘ஸ்டோரீஸ்’ செய்ய ஆரம்பித்தேன். பிறகு கிடைக்கும் விஷயங்களை வைத்துச் செய்யும் வெறும் ‘குக்குடு நியூஸ் ஸ்டோரீஸ்’ என்பதைத் தாண்டி, நாமே படித்து, எழுதி, ஆராய்ச்சி செய்து, சில கண்டுபிடிப்புகளோடு, நமக்கான பார்வையுடன் என்று இயங்கி, ஆவணப்படம் என்கிற ஆழமான ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.

இந்த மனிதர்களின் நல்லதும் கெட்டதுமான அனுபவங்களிலிருந்து நான் கற்றதையே அவர்கள் வாழ்வின் பக்கங்கள் வழியே உங்களுக்கும் கைமாற்றித் தர விரும்புகிறேன்.

சுற்றுலாத்தலங்கள், வரலாறு, கலை, கல்வி, பண்பாடு, இசை, இலக்கியம், ஊர்கள், சின்னச் சின்னத் தகவல்களை அடிப்படையாக வைத்து, செய்திகளுக்குத் தகுந்தபடி, குறைந்தபட்சம் நாற்பது வினாடிகளில் இருந்து அதிகபட்சம் மூன்று நிமிடம் வரையில் ஒளிபரப்பாகிற மாதிரி தயாரித்துக்கொண்டே இருந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்ததால் வெவ்வேறு நோக்கத்திற்காக அந்த சேனலிலேயே கால் மணி நேரம், அரைமணி நேரம் என ஆவணப்படங்கள் செய்ய வாய்ப்பு அமைந்தது. அதை அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கும் விற்றார்கள். இம்மாதிரி படங்கள் எடுத்தபோது, எனக்கு வெவ்வேறு விதமாகப் படிக்க, வெவ்வேறு விதமாகக் காட்சிப்பூர்வமாக உள்வாங்க, எடிட்டிங் பற்றித் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள முடிந்தது. மிகவும் குறைவான நேரத்தில், அதிகபட்சமான விவரத்தை சுவாரஸ்யமாகச் சொல்வதுதான் மிகப்பெரிய சவால். அது நன்றாகப் பிடிபட்டதுக்கு இந்தத் தொலைக்காட்சிகளில் வேலை பார்த்த அனுபவம்தான் காரணம். விஜய் டிவி, ஜெயா டிவி இரண்டிலுமே என்னைச் சுதந்திரமாக இயங்கவிட்டார்கள். நான் எங்கே வேண்டுமானாலும் போகலாம், என்ன வசதி கேட்டாலும் தந்தார்கள், நானே போய்ப் படம் பிடிப்பேன். காரில் திரும்பும்போதே ஸ்கிரிப்ட் எழுதுவேன், நானே குரல் கொடுப்பேன், நானே எடிட் செய்வேன். சின்ன சின்ன இசைத் துணுக்குகளைச் சேர்ப்பேன். அது போல் ஆவணப்படங்கள் ஆயிரத்துக்கு மேல் செய்துள்ளேன். வெவ்வேறு தொலைக்காட்சிகளுக்காக ஒன்பது ஆண்டுகள் இப்படித் தொடர்ந்து இராப்பகலாகச் செய்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்து 9 ஆண்டுகள் வெவ்வேறு தொலைக்காட்சிகளுக்காக ஆவணப்படங்கள் இயக்கிய உங்களுக்கு, அங்கிருந்து வெளியான பின் தமிழ் ஆளுமைகள் பற்றி ஆவணப்படங்கள் இயக்க உந்துதலாக இருந்தது எது / யார்?

எப்போதும் எனக்கு மனிதர்கள் முக்கியம், அவர்களது பலத்தோடும் பலவீனங்களோடும். அவர்களால்தானே இயங்குகிறது இந்த உலகு. இந்த வாழ்வை, அதன் மேன்மையை, அதன் வரலாற்றை, வலியைச் சொல்வது அவர்கள் கடந்துவந்த பாதைகள்தானே. அவை பலவிதமான அதிர்வுகளை, கேள்விகளை, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி எவ்வளவு விதமான மாற்றங்களை நம்முள் உண்டு பண்ணிவிடுகின்றன. ஒவ்வொரு சிறந்த ஆளுமையின் வாழ்வுமே நமக்கு ஒரு பாடம். சில சமயம் அவர்கள் சொல்கிற ஒற்றை வரியேகூட நமது ஆயுள் முழுக்கக்கூட வரும்.

வலம்புரிஜான் அவர்கள் எனக்கு நல்ல நண்பர். சம்மந்தமில்லாத, காரணமற்ற, ஒரு சின்ன அவமானத்தில் நான் கூசி நின்றபோது ஜான் சொன்னார். “கவிஞரே நம்மை அவமானப்படுத்துகிறவர்கள் போன்று சிறந்த ஆசிரியர்களே கிடையாது. அவர்களே நம் க்ரியா ஊக்கிகள்.” ஒரு விஷயத்தை எப்படி அப்படியே ஆக்கப்பூர்வப் பார்வையோடு புரட்டிப் போட்டுவிட்டார் பாருங்கள். அதற்கு எவ்வளோ உதாரணங்கள் சொன்னார்.

எனது ஆசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள் அடிக்கடி சொல்வார், “உண்மையான அன்புக்குக் குறை தெரியாது.” இப்படி யார் யாரோ ஏற்றி வைத்த ஒளியில் தானே நம் வாழ்வு இல்லையா. அதனால் தனிப்பட்ட ஒருவரோ இருவரோ மட்டும் எனக்கு உந்துதல் இல்லை. எவ்வளவோ மனிதர்கள் உந்துதலாக இருந்திருக்கிறார்கள். அப்படி உந்துதல் தந்தவர்கள் பெரிய ஆளுமையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டணை அனுபவித்துத் திரும்பிய செல்லதுரை என்பவரும் எனக்கு நண்பராக இருந்தார். எனது லாட்ஜில் என் அலுவலக அறையின் சாவிகளில் ஒன்று, என் ஆசிரியர் மது. ச. விமலானந்தத்திடமும், இன்னொன்று செல்லதுரையிடமும் இருந்தது. எண்பதுகளின் இறுதியிலும்கூட ஜாதியின் பிடி இறுகிதான் இருந்தது. “ஒரு தலித், அதுவும் கொலைகாரனோடு இப்படி பழகுறியே உன்னையே அவன் ஒரு நாள் கொன்னுட்டு போகப்போறான்,” என்றெல்லாம் உறவினர்கள் சொன்னார்கள். அவர் சிறையிலிருந்தவாறே இளங்கலை அரசியல் படித்துத் தேர்ச்சி பெற்றவர். இப்போது அவர் இல்லை. அவரிடம் இருந்தும் நான் கற்றிருக்கிறேன். இந்த மனிதர்களின் நல்லதும் கெட்டதுமான அனுபவங்களிலிருந்து நான் கற்றதையே அவர்கள் வாழ்வின் பக்கங்கள் வழியே உங்களுக்கும் கைமாற்றித் தர விரும்புகிறேன்.

சில சமயம் அவர்கள் சொல்கிற ஒற்றை வரியேகூட நமது ஆயுள் முழுக்கக்கூட வரும்.

கலைஞர்களை ஆவணப்படுத்த நினைத்தது இதனால்தான். பிரபலங்களை, பணக்காரர்களை, அரசியல்வாதிகளை இப்படி எதனால் யாரால் லாபம் கிடைக்குமோ அவர்களைப் பற்றியெல்லாம் எடுத்துவிடுவார்கள். இவர்களைப் பற்றி எடுப்பது மிகவும் குறைவு. ஒரு கலைஞன் தன்னளவில் தானே ஒரு ஆவணம். கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, தனது கற்பனையில் எதிர்காலத்தை, அவன் ஆவணமாக்கி அவனது படைப்புகளின் வழியாக உங்களுக்குத் தருகிறான். ஆத்மார்த்தமான கலைஞர்கள் எதைப் பற்றியும் லெளகீகமாக யோசிக்காமல், அர்ப்பணிப்பாக, உண்மையாக இயங்குகிறார்கள். அந்த இயக்கத்துக்கு அவன் வாழ்வில் என்ன பெரிதாகக் கிடைத்துவிடப்போகிறது? அடிப்படை விஷயங்களுக்கான பல அல்லாட்டங்களோடு எவ்வளவோ மன அவசங்களோடு அவன் யாருக்காக இயங்குகிறான் சொல்லுங்கள். இந்த மொழிக்காக, இந்தப் பண்பாட்டுக்காக, இந்தச் சமூகத்துக்காக, இந்தக் கலைக்காகத்தானே. அப்படி அவர்களெல்லாம் கண்ணுக்குக்கூடத் தெரியாமல் உண்மையாக இயங்கியதால்தானே இந்த உலகம் இன்னும் முழுக்க பைத்தியக்கார விடுதியாக ஆகாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட அவனது வாழ்வும் முக்கியம் இல்லையா. அது ஒரு பண்பாட்டுக் கலாச்சார மொழி சார்ந்த பதிவு இல்லையா. அவன் வாழ்வு தெரியும்போது, அந்த படைப்புகளின் வெவ்வேறு அர்த்த அடுக்குகள் இன்னும் உங்களுக்கு துலக்கமாகத் தெரியும். இன்னும் அந்த படைப்புகளை அர்த்த விஸ்தீரணங்களோடு நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும். பிறகு நமக்கு அமைவது, வாய்ப்பது என்று ஒன்று உள்ளது. அதை எத்தனையோ காரணிகள் தீர்மானிக்கின்றன. அதனால் நான் யாரைப் பற்றியும் படம் எடுக்கத் தயாராகத்தான் உள்ளேன், ஹிட்லரைப் பற்றிக்கூட. அது வழியாக நாம் என்ன சொல்கிறோம் என்பதுதானே முக்கியம். என்ன அதற்கெல்லாம் நமக்கு நல்ல தயாரிப்பாளர் அமைய வேண்டும்.

இதுவரை இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், தி.ந.ராமசந்திரன், திருலோக சீதாராம் ஆகியோரின் ஆவணப்படங்களை இயக்கியுள்ளீர்கள். இந்த முயற்சிகளுக்கு எவ்வாறான வரவேற்பு கிடைத்துள்ளது? நிறைவாக உள்ளதா?

எனக்கு நிறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது என்று சொல்ல முடியாது. ஜெயகாந்தன் படத்துக்கு மட்டும் ஒரு பெரிய வரவேற்பு கிடைத்தது. இளையராஜா தயாரிப்பு மற்றும் ஜெயகாந்தன் என்கிற ஆளுமை, அந்தப் படத்தை வெளியிட்டது அப்துல்கலாம் இப்படிப் பல காரணங்கள். அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் (Library of Congress) அந்தப் படம் இருக்கிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் கல்வித்திட்டத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஐம்பது கல்லூரிகளுக்கு மேலே நானே அந்தப் படத்தைத் திரையிட்டுப் பேசியிருக்கிறேன். என்னுடைய மற்ற படங்களுக்கு அப்படி பரந்துபட்ட வரவேற்பு கிடைத்தது என்று சொல்ல முடியாது.

ஆவணப்படப்பிடிப்பின்போது ரவிசுப்பிரமணியனும் எழுத்தாளர் ஜெயகாந்தனும்
எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் ரவிசுப்பிரமணியன்

மா. அரங்கநாதன் படம் வெளிவந்த நேரத்திலும் ஒரு பெரிய வீச்சு இல்லை. பழம் பெரும் இயக்குநர் ருத்ரைய்யா, “சலசலவென்ற மெல்லிய நீரோடை போல நகரும் எளிய அரிய ஆவணப்படம். அதை அதன் நுண் கருத்துகளோடு உணர வேண்டும்,” என்று குறிப்பிட்டார். அப்போது திடீரென்று பார்த்தார்கள். மா. அரங்கநாதன் அவர்களின் மகன் இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன். ஒரு நீதிபதியின் அப்பா என்பதால் அவர் அப்பாவைப் பற்றிய புத்தகங்கள் உடனுக்குடன் விற்பனையாகிறது. அத்துடன் ஆவணப்படமும் பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. ஆனால், இதெல்லாம் இப்போதுதான் நடக்கிறது.

என்னுடைய ஆவணப்படங்களை நான் யூடியூப்பில் போட்டது இல்லை. யூடியூப்பில் யார் யாரோ விதவிதமாகப் போட்டிருந்தார்கள். சென்ற ஆண்டுதான் என் தம்பி வேலவன், என் பேரில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, என் ஆவணப்படங்கள் எல்லாவற்றையும் போட்டிருக்கிறான். ஜெயகாந்தன் படத்துக்குப் பிறகு திருலோக சீதாராம் படத்துக்கு ஒரு சின்ன கவனிப்பு கிடைத்தது. அவர் பாரதியின் பாடலைப் பாடிப் பாடிப் பரப்பியவர். பாரதியார் வரலாற்றுடன் இணைந்திருக்கிறார். அதுவும் ஒரு காரணம்.

(ரவிசுப்ரமணியனின் யூடியூப் சேனல்: https://www.youtube.com/channel/UCe3DLNE_9dGzuV10-6WsIeA)

பொதுவாக இந்த மாதிரி ஆவணப்படங்களுக்கு வரவேற்பு என்றால் வெறும் ஐந்து விழுக்காடுதான், அதுவும் இலக்கியம் தெரிந்தவர்களிடம் இருந்துதான். தெரியாதவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இலக்கியம் தெரிந்தவர்களிடம் இருந்தே இந்த ஐந்து விழுக்காடு வரவேற்பு என்பதுதான் யதார்த்தம்.

எது எப்படி இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் நாம் செய்த வேலை சரியாக இருக்கிறதா, செப்பமாகச் செய்திருக்கிறோமா என்றுதான் பார்ப்பேன். எனக்கு நிறைவு இல்லையென்றால் வெளியிட மாட்டேன். அதனால் வரும்போதே எனக்கு நிறைவாகத்தான் வரும்.

உங்களது சில ஆவணப்படங்களில் பேசுபவரின் கைகளை close-upஇல் காட்டுவதுண்டு. இது பேசுபவரின் உயிர்த்துடிப்பைப் பார்வையாளர்களுக்குத் திறம்படக் கடத்துகிறது. இம்மாதிரி செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

மிகவும் நுட்பமாகக் கவனித்துக் கேட்கிறீர்கள். அது திட்டமிட்டு வரவில்லை. நேர்காணலை எடிட் பண்ணும்போது, ஒரு இன்சர்ட் (Insert) போடும்படி இருக்கும். அதற்காக எடுக்க ஆரம்பித்தது. ஆவணப்படம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டால் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தொழில்முறை நடிகர்களோ, பேச்சாளர்களோ அல்ல. எடிட் செய்யும்போது சட்டென்று ஒரு ‘விஷுவல் ஜெர்க்’ வரும். அப்படி வராமல் இருப்பதற்காக க்ளோஸப்பில் பல விஷயங்கள் எடுப்பேன். பேசும்போது, அவர்கள் முகத்தில் இருந்து கைக்கு வருவேன். முகத்தில் இருந்து பின்னால் இருக்கும் காலண்டருக்குப் போவேன். மேஜையில் இருக்கும் ஏதாவது பொருட்களுக்குப் போவேன். அப்படித்தான் கைகளை எடுக்க ஆரம்பித்தேன்.பேசும்போது கைகளையும் கவனியுங்கள் அதுவும் முக்கியம் என்று உளவியல் நிபுணரும் என் நண்பருமான சுரேந்திரபாபு சொன்னார். ஒரு மனுஷன் உண்மையைச் சொல்லும்போது, கைகள் சரியாகச் செயல்படும். இல்லையென்றால் கைகளிலேயே ஒரு சிறிய படபடப்பு தெரியும். ஒருவகையில் குரலுக்கும் கைக்கும் மூளைக்கும் ஒத்திசைவு இருக்கிறது. வாழ்ந்துகெட்டவன் சொத்தை விற்கும் பத்திரத்தில் கையெழுத்து போடும்போதோ, கோபத்தில் கைநீட்டி ஒருத்தனைத் திட்டும்போதோ கை நடுங்கும் பார்த்திருக்கிறீர்களா என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அது முக்கியம் எனத் தோன்ற, கைகள் ஆடுவது, தட்டுவது எனக் கைகளை நிறைய எடுக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தன் படத்தில் அவர் கைகளே ஒரு கதாபாத்திரமாக இருக்கும். அதை நீங்கள் கவனித்துச் சொல்கிறீர்கள், சந்தோஷம்.

ஒரு கலைஞன் தன்னளவில் தானே ஒரு ஆவணம்.

ஆவணப்படத்திற்குத் தேர்வு செய்யும் ஆளுமையின் பரவலாக அறியப்படாத ஒரு கோணத்தைக் காட்ட நினைப்பவர் நீங்கள். அது ஏன்?

ஆவணப்படத்திற்குத் தேர்வுசெய்யும் ஆளுமையைப் பற்றி அறியப்படாத கோணத்தைக் காட்ட நினைப்பதுதானே, ஆவணப்படம் நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு சுதந்திரம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஒன்றும் வணிக சினிமா இல்லையே. நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம், எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கு. எங்கே வேண்டுமானாலும் தொடங்கலாம், எங்கே வேண்டுமானாலும் முடிக்கலாம். ஆனால், அதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். மீற வேண்டும் என்பதற்காக அத்துமீறலைச் செய்யக்கூடாது. சட்டை போடாமல் உட்காரவைத்து எடுக்கலாம். தலை சீவாமல் எடுக்கலாம். மேக்கப் போடாமல் எடுக்கலாம். சவரம் செய்து கொண்டிருக்கும்போதும் எடுக்கலாம். எல்லாவற்றிற்குமான சாத்தியமும் ஆவணப்படத்தில் இருக்கிறது. வழக்கத்திற்கு மாறான கோணத்திலிருந்து மட்டுமில்லை, காரணத்துடன் அதிக நேரமும்கூட அவர்களைக் காண்பிக்கலாம். எவ்வளவோ வித்தைகளை இங்குச் செய்யலாம்.

அப்படித்தான் ஒரு காட்டப்படாத கோணத்தை, கருணாநிதி அவர்கள் ஆவணப்படத்தில் செய்தோம். ஒரு மூக்குக் கண்ணாடியில் இருந்து வரிசையாகக் காகிதத்தில் உள்ள எழுத்துகள் தெரிந்துகொண்டே நகரும், பிறகு அதிலிருந்து சற்றே தள்ளி வந்தால், முரசொலி என்கிற வார்த்தை தெரியும். அதன் பிறகு கேமிரா நகர்ந்து எதிர்த்தரப்பிலிருந்து வரும், அதுவரை கருணாநிதிதான் அதை படித்துக்கொண்டு இருப்பதாகக் காட்சி விரியும். அந்த மூக்குக் கண்ணாடிக் கோணத்தில் அழகான கவிதையாக, ஒளிப்பதிவாளர் செழியன் பதிவு செய்திருப்பார். அது ஒரு புதுவிதமான உத்தியாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் இன்னும் வெளி வரவில்லை. அதனால், இதைக் குறித்து உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அனைவரும் காண்பிக்கும் அதே கோணத்தில் நாமும் காண்பித்தால் அதில் என்ன இருக்கிறது? அவர் கூட்டங்களில் பேசுகிறபோதுகூட நாங்கள், பெரும்பாலும் அவர் பின்னால் இருந்தேதான் எடுத்திருக்கிறோம். முன் பக்கம் கொஞ்சமாகத்தான் எடுத்தோம். அதைத்தான் நீங்கள் அதிகமாகத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்களே. அந்தக் கோணம் நமக்கு எதற்கு. நாங்கள் பின்னாலிருந்து அவர் கையை, அவர் குரல் ஒலிப்பதை, அவர் பேசுவதை, அதற்கான எதிரொலி என்ன, அவர் எங்கு மெளனத்தை உருவாக்குகிறார் என்று கவனித்துப் பார்த்து எடுத்தோம். அவர் அங்கே இருப்பார், ஆனால் தெரியமாட்டார். சில சமயம் மிகக்குறைவான ஒளியில் பூடகமாகக் காண்பித்திருப்போம். சில் அவுட்டில் (silhouette) காண்பித்திருப்போம். அது போதும் என்று தோன்றியது. அவர் இருப்பை உணர்த்தினால் போதாதா என்ன? அவரையே அவ்வளவு வெளிச்சத்தில் காண்பித்துக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? திரையில் எவ்வளவோ பார்த்த பின்னும் அவரையே காண்பிக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது? அவர் இல்லாமல் அவர் இருப்பை வேறு எவ்வளவோ விஷயங்களின் வழியாக எப்படி எல்லாமோ உணர்த்தலாமே. அதற்கான ஞானம் நமக்கு இருப்பதுதான் முக்கியம்.

ஓர் ஆளுமையை முழுதாக உள்வாங்கி அவரின் அறியப்படாத பக்கத்தை அடைவது வரையிலான அந்தப் பயணம் பற்றி ஓர் உதாரணத்துடன் விளக்கிச் சொல்லுங்கள்.

திருலோக சீதாராம் பற்றிய ஆவணப்படம் எடுக்கும்போது, அவருடைய மகன் லோகமணி எட்டு புகைப்படங்களைக் கொடுத்தார். அவரைப் பற்றிய செய்தித்தாள் துணுக்குகளோ, ஒலிநாடா குறிப்புகளோ, எதுவுமே இல்லை. எனக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரியாது. ‘கந்தர்வ கானம்’ என்கிற அவருடைய கவிதைத் தொகுப்பைப் படித்திருந்தேன். ‘இலக்கியப் படகு’ என்கிற அவருடைய கட்டுரைத் தொகுப்பையும் படித்திருந்தேன். அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தது எல்லாம் இவ்வளவுதான்.

அந்தப் புத்தகங்களும் எனக்கு எப்படி படிக்க கிடைத்தது என்றால், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணிக்குத்  திருலோகம் நண்பர். அவர் பதிப்பகத்திற்கு நான் செல்லும்போது, மாசிலாமணி – திருலோக சீதாராமைப் பற்றிச் சொல்வார். அவர் அங்கு வந்து தங்குவார் என்றும், மேலும் அவர், எம்.வி. வெங்கட்ராம் மற்றும் கரிச்சான்குஞ்சு போன்றோருக்கு நல்ல நண்பர். அவர் எப்படிப் பேசுவார், பாடுவார் போன்ற தகவல்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். அதன் தொடர்ச்சியாக, அந்த இரண்டு புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து, நீங்கள் ஒரு கவிஞர், இவற்றை எல்லாம் படிக்க வேண்டும் என்றார். ‘கந்தர்வ கானம்’ ஒரு நல்ல கவிதைத் தொகுதி. அதற்குப் பிறகு ‘இலக்கியப் படகு’ என்கிற அவருடைய கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன்.

பத்தாண்டுகள் கழித்து, அவர் மொழிபெயர்த்த ஹெர்மன் ஹெஸ்ஸேவின் ‘சித்தார்த்தா’வைத் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. அதையும் படித்தேன். அது தமிழிலேதான் எழுதப்பட்டுருக்கிறதோ என்று எண்ணும் அளவிற்கு, ஓர் அற்புதமான மொழிபெயர்ப்பாக இருந்தது.

யார் இவர்? ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு செய்துள்ளார், மறுபக்கம் கவி்தை, கட்டுரை எழுதுகிறார், மேலும் ‘சிவாஜி’ என்றொரு பத்திரிக்கை நடத்தியிருக்கிறார், என எனக்குள் அவரைக் குறித்து ஒரு சின்ன ஆச்சரியம் எழுந்தது. அவர் பாரதியார்க் கவிதைகளைப் பாடிப் பரப்பியவர் என்பதுகூட அன்று எனக்குத் தெரியாது. பிற்பாடு வெகு காலம் கழித்தே அந்த வரலாறு எல்லாம் சிறிது சிறிதாக எனக்குத் தெரிய வந்தது. ஜெயகாந்தனின் ஆவணப்படம் எடுக்கிறபோது அவர் திருலோக சீதாராமைப் பற்றிச் சிறிது சொன்னார், திருலோகம் அவரை ‘தினங்குடி மஸ்த்தான்’ என்று கூப்பிடுவதாக.

அவரைப்பற்றி எனக்கு விலாவாரியாகச் சொன்னது திரு. டி.என்.ராமச்சந்திரன்தான். திருலோக சீதாராம், டி.என்.ஆருக்கு குரு. டி.என்.ஆர் பற்றிய ஆவணப்படம் (டாக்குமென்ட்ரி) எடுக்கும்போது, அவர் திருலோகம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் அப்படி எழுதுவார், இப்படிப் பேசுவார், அவருக்கு அப்படிக் கோபம் வரும், அவருடைய மொழிபெயர்ப்பின் சிறப்பு, பாரதியார் மேலான அவரின் பற்று, எவ்வாறு பாரதியார் கவிதைகளை ஆதி முதல் அந்தமாக மனப்பாடம் செய்தார், பாரதியார் கவிதைகளில் பின்னாட்களில் வந்த பாட பேதங்களை, எப்படித் தன் ஞானத்தால் கண்டுணர்ந்து சரி செய்தார் போன்றவற்றை எல்லாம் சொல்வார்.

எனக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்த உடனே, அவரைக் குறித்து, என்ன மாதிரியான மனிதர் இவர், என்ன மாதிரியான வாழ்க்கை பயணம் என்ற ஆர்வம் வந்தது. அதனால் அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் அதை யார் முன்னெடுப்பார், யாரைப் போய்க் கேட்பது என்று தயக்கம் இருந்தது. பிறகு, யாராவது நம்மைக் கேட்டால் செய்வோம் என்று அந்த முயற்சியை விட்டுவிட்டேன்.

ஆவணப்படம் என்று எடுத்தால், அதில் முதலீடு செய்கிற பணம் திரும்பவும் வராது. லாபம் வரவேண்டாம் ஆனால் போட்ட பணத்தைக்கூட எடுக்க இயலாது எனும்போது யாரையாவது போய்க் கேட்கவும் தயக்கமாக இருந்தது. திரு.டி. என். ராமச்சந்திரன் அவர்களுடைய ஆவணப்படம் முடிந்ததும், ஒரு வருடம் கழித்து, திடீரென்று, துபாயில் ஒரு வங்கியில் மேலாளராக இருந்த, திருலோக சீதாராமின் இரண்டாவது மகன் திரு. லோகமணி, தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். பிறகு நேரிலும் வந்தார்.

“எனது தந்தையாருக்கு நூற்றாண்டு வருகிறது. அதைக் குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்க வேண்டும்,” என்று சொன்னார்.

“போட்ட பணம் திரும்பி வராது, அது மட்டுமில்லாமல் லட்சக்கணக்கில் பணம் செலவாகும், படம் எடுப்பதற்கும் நாட்களாகும். உங்களிடம் அவரைப் பற்றிய தகவல்களும் இல்லை. திரு. டி.என்.ஆர் சொல்வதுதான் தகவல்கள் என்று சொல்கிறீர்கள். சற்று கால அவகாசம் கொடுங்கள்,” என்று சொன்னேன்.

ஒன்பது மாதங்கள் திரு. டி.என்.ஆர் உதவியுடன், ஆய்வுகள் செய்தேன். அவரைக் குறித்த தகவல்கள், ஆதாரங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் அனைத்தும் புதையல் போல் கிடைத்தன. அதன் பிறகுதான் ஆவணப்படத்திற்குள் வந்தோம்.

சில தீற்றலான செய்திகளை, தகவல்களை வைத்துக்கொண்டு, அதற்குள் ஆழமாக உள் செல்லும்போது, சில கண்டடைதல்கள், நுண்பார்வைகள், வாழ்வியலின் சாராம்சம் முழுவதுமாகக் கிடைக்கிறது. ஆவணப்படங்களில் சில கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும். சும்மாவேனும் விபரங்களைச் சொல்வதற்கு எதற்கு ஆவணப்படம். அவற்றை எழுதிச் செய்தித்தாள்களில் வெளியிட்டுவிடலாம். வெறும் வார்த்தைகளில் ஒலிவடிவில், வானொலியில் சொல்லிவிட்டுப் போய்விடலாம்.

நாம் வாழ்ந்த பூமியில்தான் இப்படி ஒரு ஜீவன் திரிந்திருக்கிறது, தவித்திருக்கிறது, இவ்வளவு காரியங்கள் செய்து, இந்தப் பாடுபட்டுருக்கிறது என்பதை எங்கேயாவது மனதைத் தைக்கிற மாதிரி, பார்ப்பவர்களுக்குக் கடத்திவிட முடியாதா என்று பார்ப்பேன்.

ஆவணப்படங்களில் காட்சியின் வாயிலாகக் கொடுக்கும்போது, அது சில உணர்வுகளை மீட்ட வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக சில சேர்மானங்களை அத்துடன் தயார் செய்து சேர்க்க வேண்டும். அதற்காக, சிலவற்றிற்குள் சென்று சிலவற்றைக் கண்டுபிடித்து, அதை எப்படிக் காட்சிப்பூர்வமாகச் சொல்வது என்று உள்வாங்கிக்கொண்டுதான் படம் எடுக்க வருவேன். அப்போது நாம் சாதாரணமாக உள்வாங்கியிருந்த ஓர் ஆளுமை, ஆவணப்படம் எடுத்து முடித்த பிறகு எவ்வளவு பெரிய ஆளுமையாக விஸ்வரூபமாக நமக்குத் தெரிகிறார் என்பதை நாம் உணர முடியும். அதை நானே தரிசித்தும் இருக்கிறேன்.

நீங்கள் ஒரு நேர்காணலில் சொன்னது, “ஆவணப்படம் ஒரு கோட்டோவியம் போலத்தான்.” இது சரியான உவமை. ஏனெனில் ஆவணப்படம் வெறும் தகவல்களின் நிரலாக இல்லாமல் அந்த ஆளுமையின் ஆன்மாவை, சாரத்தை நமக்குக் காட்ட வேண்டும். உங்கள் ஆவணப்படங்களில் இது சாத்தியமாகியிருக்கிறது. நீங்கள் இதற்கு எடுத்துக்கொள்ளும் முனைப்பு பற்றிச் சொல்லுங்கள்.

ஆவணப்படம் என்பது ஒரு ‘ப்ரோபைல் ஸ்கெட்ச்’தான். எண்பது வயது வரை வாழ்ந்திருக்கும் ஒருவரைப் பற்றி, அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் சொல்ல முடியாது. சில விஷயங்களை லேசாக, அப்படி ஒரு கோடி காட்டிவிட்டுத்தான் போக முடியும். முதன்மைக் குவியம் (prime focus) எது என்று முதலில் நாம் பார்க்க வேண்டும். அது ஏன் முதன்மையாக நமக்குத் தோன்றியது என்று பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும்படியாக, குறைந்த நேரத்தில் சுவாரசியமாகவும், காட்சிப்பூர்வமாகவும், கருத்துப்பூர்வமாகவும் சொல்ல வேண்டும். இதைப் போன்ற விஷயங்கள்தான் முன்முனைப்பு. நாம் சிலவற்றைச் சொல்லி, பலர் அவரைத் தேடிப் போய் அடைய வைக்க வேண்டும். அதுதான், ஆவணப்படத்தின் வேலை என்று நினைக்கிறேன். அப்போதுதான், நீங்கள் அந்த வாழ்வை, அனுபவத்தை உங்களோடு பொருத்திப் பார்த்து வேறொன்றைச் சிந்திப்பீர்கள். நீங்கள் இருக்கும் ஸ்திதியிலிருந்து சற்றேனும் நகரந்து யோசிக்க முனைவீர்கள். ஒரு ஆளுமையைப் பற்றிய ஆவணப்படம் அதைச் செய்தால் போதும்.

உங்கள் கேள்வியில் சரியான வார்த்தையைப் போட்டிருக்கிறீர்கள். அந்த ஆளுமையினுடைய ஆன்மாவை ‘அவர்களின் வாழ்வின் சாரத்தை’ என்று. ஆமாம் மிகச் சரி! அதைப் பிடிக்கத்தான் போராடுவேன். படத்தில் அந்த மெல்லிய ரேகை இழையோடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நாம் வாழ்ந்த பூமியில்தான் இப்படி ஒரு ஜீவன் திரிந்திருக்கிறது, தவித்திருக்கிறது, இவ்வளவு காரியங்கள் செய்து, இந்தப் பாடுபட்டுருக்கிறது என்பதை எங்கேயாவது மனதைத் தைக்கிற மாதிரி, பார்ப்பவர்களுக்குக் கடத்திவிட முடியாதா என்று பார்ப்பேன்.

அதற்கு அவர்களின் குரல், அவர்களின் செயல்பாடுகளின் மௌனக் காட்சித்துணுக்குகள், அவர்களைப் பற்றி வெளியில் தெரியாத அபூர்வமான விஷயங்களைச் சிலரைப் பேசச் சொல்வது, மேலும் அவர்களது பங்களிப்பு சம்பந்தமான ஆவணங்கள், சிற்சில ஓவியங்கள், கொஞ்சம் இசை, நடனம், இயற்கைக்காட்சிகள், மிருகங்கள் இப்படி என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் சேர்த்து அதை ஒரு சரியான கலவையில் சொல்ல முயற்சி செய்து பார்ப்பேன். இப்படியெல்லாம் செய்தும் அனைத்து நேரங்களிலும் அது வெற்றி அடையும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், பல படங்களில் அவை எனக்குச் சித்தித்தது ஒரு பாக்கியம்தான். உண்மையான அர்ப்பணிப்புக்கு என்று ஒரு ஆசீர்வாதம் உண்டு, இல்லையா!

எழுத்தாளர் அசோகமித்திரனுடன் ரவிசுப்பிரமணியன்
எழுத்தாளர் அசோகமித்திரனுடன் ரவிசுப்பிரமணியன்

காட்சிகளைப் பதிவு செய்யும்போது பலவிதமான சுற்றுப்புற ஒலிகளில் இருந்து, காட்சிக்கு மெருகேற்றும் சிலவற்றை நீங்கள் தேர்வு செய்யும் முறையை விளக்கிச் சொல்ல முடியுமா?

அப்படி எல்லாம் திட்டமிட்டுச் செய்ய முடியாது. இயற்கையில் என்ன ஒலிகள் வருகின்றனவோ, நாம் அதைச் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதைக் கொஞ்சம் கூட்டிக் குறைத்துப் பயன்படுத்தலாம். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். என் ஆரம்ப காலப் படங்களில் அப்படி நடக்கவில்லை. அப்போது எனக்கு அதைப் பற்றிய புரிதல் இல்லை. அதை ஒத்துக்கொள்ள வேண்டும். முதலில், நான் அந்தப் பிண்ணனி ஒலிகள் அனைத்தையும் அழித்து வீணாக்கிவிட்டேன். பிறகுதான் கொஞ்சம் உஷாராகி வேலை செய்ய ஆரம்பித்தேன். அது மிகச் சரியாகவும் அமைந்தது. பின்னணி ஒலிகளும் ஒரு ஆவணம்தான். உதாரணத்திற்கு, ஒரு நேர்காணல் எடுக்கும்போது “காபி குடிக்கலையா, இன்னும்?” என்று ஒரு குரல் வந்தால் அந்தப் பெண்ணின் குரலும் அங்கு, ஒரு ஆவணம்தான். அந்த மனிதருடன் பேசுவதற்கு அங்கு ஒரு மனுஷி இருக்கிறாள். சரியான நேரத்தில் அவள்தான் அவரின் விருப்பத்தைக் கேட்டு நிறைவேற்றுகிறாள் என்று புரியும். இன்னுமொரு விஷயம் என்னவெனில், “இந்த வீட்டில் இருக்கதுங்க, எங்க நம்மளை கவனிக்குதுங்க, அனாதை மாதிரி கிடக்கேன்,” என்று அவர் அப்போதுதான் புகார் சொல்லிருப்பார். இப்பொழுது அந்த ஒரு குரல் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்.

அது அந்த நேர்காணலில் இடையூறாக இருந்தாலும் பரவாயில்லை அல்லவா? இப்படி பல பரிமாணங்கள் இருக்கின்றன. அதைக் கத்தரிக்கச் சொல்லக் கூடாது. அது அப்படி ஒரு தொந்தரவு இல்லை. அந்த வீட்டில் ஒரு நாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது அதிகமாகச் சத்தம் போடுகிறது. அதையும் நான் எடுக்க வேண்டும். எடிட் செய்யும்போது நான் அந்தச் சத்தத்தை இன்னும் கொஞ்சம் குறைக்கலாம். அதற்காக நாயின் சத்தத்தை நான் மொத்தமாக நீக்கிவிடக் கூடாது. அந்த வீட்டில் ஒரு வளர்ப்பு நாய் இருக்கிறது என்பதும் அதனுடன் அந்த வீட்டு மனிதர்களின் உறவும் ஒரு ஆவணம்தான்.

ஓவியர். ஆர். பி. பாஸ்கரன் பற்றிய ஆவணப்படம் எடுக்கும்போது, அவர் வீட்டின் ‘டாபர்மேன்’ ஓடி வந்தது, கட்டிப்போட்டால் கத்துகிறது. அதனால், அப்படியேதான் எடுத்தேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நேர்காணல் எடுத்தபோது, அவர் வீட்டில் இருந்த நாய் ‘டக்’ என்று வந்து அவர் மடியில் உட்கார்ந்தது. அவர் அதனிடம், “போ! அப்பறம் வரலாம்,” என்று சொன்னார். “இல்ல சார், அப்படியே அது பாட்டுக்கு இருக்கட்டும்,” என்று சொல்லித்தான் எடுத்தேன். அப்போது அந்த உரையாடலின் வண்ணமே மாறிவிட்டது. இதெல்லாம் திட்டமிட்டு எடுக்க முடியாது. படியில், அவர் இறங்கி வருவார். அவருக்கும் முன்னே அந்த நாய் ஓடிவரும், அது ஒரு ஆவணம் இல்லையா? அவர் புறப்படும்போது கத்திக்கொண்டு இருக்கும், வழியனுப்புவது போல. அந்த ஒலி வெறும் கத்தலா என்ன? இன்னொரு வகையில் இயற்கை ஒலிகள் எப்போதும் ஆவணப்படத்திற்கான நம்பகத்தன்மையைக் கூட்டிக் கொடுக்கும்.

ஒரு பழைய எம்.ஜி.ஆர் படம், ‘எங்கள் தங்கம்’ என்று நினைக்கிறேன். அவரை ஒரு சவப்பெட்டியில அடைத்துக்கொண்டு போவார்கள். அந்தப் பயணத்தில் ‘டடக் டடக்’ என்று ஒரு சத்தம் வரும், அதை வைத்து அவரை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்று அனுமானித்து, அந்த இடத்தை அவர் கண்டுபிடிப்பார். ‘ப்ரியா’ படத்தில் ஸ்ரீதேவி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க ரஜினி அதே போன்ற உத்தியைக் கையாள்வார். அதைப் போல் ஒலிகள் என்னனென்ன மாதிரியாக உங்களுக்கு உதவி செய்யும் என்று உங்களால் யூகிக்க முடியாது. அதுவும் ஆவணப்படத்தின் ஒரு பகுதி. முக்கியமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு சாலையில் போகும் ஒருவன், “ங்கொத்தா டேய்,” என்று பேசினால், அதுவும் அங்கு வேண்டும். அதை நீக்கிவிடக்கூடாது. “ஐயோ!” என்ன கெட்ட வார்த்தை பேசுகிறானே என்று அதை விட்டுவிட முடியாது. அங்கு அவன் என்ன பேசினானோ, அப்படியேதான் இருக்க வேண்டும். ஒரு மாட்டு வண்டி போவது, ஆட்டோ போவது, ரயில்வே டிராக்கின் சத்தம், வீட்டில் சமையல் செய்யும் குக்கர் சத்தம் ஆகிய அனைத்துமே முக்கியம்தான். அந்த இடம் எங்கே இருக்கிறது, ஊரின் ஒதுக்குப்புறத்திலா? மெயின் ரோட்டிலா? போன்றவற்றைக் காண்பிக்க அந்த ஒலிகள் மிகவும் முக்கியம். பக்கத்தில் மாதா கோவில் மணி அடித்துக் கொண்டிருந்தால், அதுவும் ஒரு விஷயம்தான். இதையெல்லாம் திரைக்கதையில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொல்லவும் முடியாது.

அதே போல, ஆவணப்படங்களில் இசைக்கான இடத்தையும் ஒரு இயக்குநர்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆவணப்படங்களில் இசையும் ஒரு நல்ல கதாப்பாத்திரமாகச் செயல்படுகிறது. ஆனால், ஆவணப்படம் எடுக்கின்ற 90% பேருக்கு இசை பற்றிய புலனுணர்வு இருப்பதில்லை. அது சரியாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டால், அந்தப் படத்தை வேறுவிதமாகப் பரிமளிக்க வைக்க முடியும். என்னுடைய பெரும்பாலான படங்களில் அதை நான் செய்திருக்கிறேன். ஜெயகாந்தனின் ஆவணப்படமெடுக்கும்போது, அதன் தயாரிப்பாளர் இளையராஜாதான் இசையமைப்பாளர் என்று சொன்னதால், அவருக்கு உண்டான இடைவெளியைப் படத்தில் வைத்துக்கொண்டே வந்தேன். சரியான இடைவெளிகள் ஆங்காங்கே இருந்ததால்தான், எந்த இடத்தில் என்ன வேண்டும் என்பதை அவரிடம் கலந்தாலோசிக்க முடிந்தது.

ஜெயகாந்தனின் ஆவணப்படத்திற்காக இளையராஜா ஒரு குயிலின் குரலைச் சேர்த்தது குறித்து நீங்கள் அவருடன் உரையாடியதைப் பகிர முடியுமா?

அந்தப் படம் எடுக்கும்போது வலிவலம். ஆர். எஸ். வெங்கட்ராமன் என்கிற பாடகரை, கரஹரப்பிரியா, சஹானா, கெளரிமனோகரி, ஆரபி ராகங்களில் சில பாடல்களை ஜே. கே. முன்பு பாட வைத்தேன். மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து ஜே.கே. கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று ஒரு குயிலின் சத்தம் மரத்தின் மேலிருந்து அந்தப் பாட்டின் மேல் படிந்தது. அதை அப்படியே பதிவு செய்திருந்தோம். ஆனால், ஒலித் தொகுப்பின்போது ஒலித் தொகுப்புக் கலைஞர்கள் எங்கெல்லாம் குயில் சத்தம் அந்தப் பாட்டிற்கு இடைஞ்சலாக இருந்ததோ, அங்கெல்லாம் அந்தக் குயில் சத்தத்தை நீக்கிவிட்டு, அவர் பாடிக் கொண்டிருக்கும்போது இடையில் வரும் சின்ன இடைவெளிகளில், அந்தக் குயில் கூவிக்கொண்டு போவது போல் செய்துவிட்டார்கள். அந்தப் பாடலின் அசல் ஒலியை அடிப்படையாக வைத்து, இதைச் செய்திருந்தார்கள். “அண்ணே, அங்கே என்ன இருக்கிறதோ அதை அப்படியே வைக்கச் சொல்லுங்கள், அந்தக் குயிலுக்குத் தெரியுமா. கீழே யாரோ பாடிக்கொண்டு இருக்கிறார்கள், நாம் குறுக்கே கத்தக் கூடாதென்று. அப்படி அதை மாற்றினால், அதனுடைய ஒரிஜினாலிட்டி போயிடும்ண்ணே. அவங்க சினிமாவுக்கு பண்ற மாதிரி பண்ணிட்டாங்கண்ணே,” என்று சொன்னேன். அது ஒரு விவாதமாக நடந்தது. அவரிடம் நாம் சொல்ல முடியுமா? அவர் பெரிய மேதை, அதே சமயம் எக்ஸன்ட்ரிக் (eccentric). ஆனால், அவர் கடைசியில் எனது கருத்தை ஏற்றுக்கொண்டு அப்படியே விட்டதற்காக அவருக்கு, இப்போது மறுபடியும் ஒரு சலாம்! இங்கு ஜே.கே. ஆவணப்படத்தின் யூடியூப் லிங்கைக் கொடுத்திருக்கிறேன்.

இந்த லிங்கில் 17:36 இலிருந்து, 18:42 வரை வெங்கட்ராமன் ஆரபி ராகத்தைப் பாடிக் கொண்டிருக்கும்போது இடையில் வருகிற அந்தக் குயிலின் சத்தத்தை இப்போதும் நீங்கள் அப்படியே கேட்கலாம்.

மா. அரங்கநாதன் அவர்களின் மூக்குக்கண்ணாடியில் தெரியும் மரங்களின் பிம்பம், ஜெயகாந்தனின் மூக்குக்கண்ணாடியின் வழியாக நகரும் ஒளிக்கீற்றுகள் போன்ற பல கவித்துவமான காட்சிகள் உங்கள் ஆவணப்படங்களில் ஆங்காங்கே பொதிந்துள்ளன. திட்டமிட்டு எடுக்கப்பட்டவை தவிர, எதேச்சையாக நிகழ்ந்த கவித்துவமான காட்சிகள் ஏதேனும் உண்டா?

இருக்கிறதே, அப்படியும் நிகழும். சில சமயங்களில் ஸ்பாட்டில் அப்படி டக்கென்று உங்களுக்குத் தோன்றும். நீங்கள் ஸ்பாண்டேனியஸாக இருக்க வேண்டும், உங்கள் மூளை அலர்ட்டாக இருக்க வேண்டும்.

மா.அரங்கநாதன் ஆனந்தவிஹாரில் போய் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சை நேரில் கேட்டதைப் பற்றி அவருடைய ஆவணப்படத்தில் இப்படிச் சொல்கிறார். “அவர் பேசறதுக்கு முன்னாடி ஒரு காக்கா வந்துது, அது கத்திட்டே இருந்தது. அந்தக் காக்கா கத்தி முடிக்கிற வரைக்கும் அவர் வெயிட் பண்ணார். கத்திட்டுப் பறந்து போயிடுச்சு. அது பறந்து போன பிறகுதான் அவர் பேச ஆரம்பிச்சார். அவ்ளோதான் விஷயம்,” என்று பூடகமாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

பிறகு, அரங்கநாதன் ஆவணப்படத்திற்காகச் சில காட்சித்துணுக்குகள் எடுக்க அவரைக் கடற்கரைக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறேன். கடைசிக் காட்சி, கடற்கரையில் உட்கார்ந்து கடலலையை அவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஒரு காக்கா அப்படியும் இப்படியுமாகத் தத்தி தத்தி அவரிடம் வருகிறது. அவரும் அதைப் பார்க்கிறார். கேமிரா தூரத்தில் இருக்கிறது. கேமராமேனிடம், “யோவ், எடுய்யா எடுய்யா. காக்கா வருதுய்யா, அது ரொம்ப முக்கியமான விஷயம்,” என்று மெதுவாகச் சொன்னால், அவனுக்கு என் மனதில் உள்ள விஷயம் புரியவில்லை. “அவர் கடலைப் பார்க்கிறத எடுத்துக்கிட்டு இருக்கேன். என்ன முக்கியமான விஷயம்ன்னு சொல்றிங்க?” என்று அவன் கேட்க, “டேய் அடிச்சிருவேன். நான் சொல்றதை நீ எடுரா!” என்று அந்த வடகரா மோகன்தாஸ் என்கிற கேமராமேனிடம் கத்துகிறேன். அவன் திரும்பவும் முழிக்க “யேய் அங்க போயி காக்காவோட சேர்த்து முதல்ல கம்போஸ் பண்ணி எடுறா, அப்பறம் எல்லா விவர மயிரும் உனக்கு நான் சொல்றேன்!” என்று மறுபடியும் கத்துகிறேன். வந்த வரைக்கும், கையில் அள்ளிய வரைக்கும், கிடைத்தவரைக்கும், முடிந்தவரைக்கும் கொஞ்சம் எடுத்துக்கொண்டோம். பின்னர் அந்தக் காக்கா அவரருகில் போய்விட்டு அப்படியே பறந்து போய்விட்டது. அந்தப் படத்தில் நீங்கள் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். (9:15 – 9:36)

அந்தக் காகம் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? அது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொன்ன காகமா, இல்லை வேறு காகமா? அந்தக் காகம் இந்தப் படம் முடியப் போகிறது என்று அரங்கநாதனுக்கு வாழ்த்துச் சொல்ல வந்ததா? இல்லை, அரங்கநாதனின் மூதாதையரா? இல்லை, ஞானக்கூத்தன் கவிதையில் வந்த மழைநாள் திவசக் காகமா? எது அந்தக் காகம்? அது பூடகம்தான். இப்படி எவ்வளவோ அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம். இப்படி எந்தத் திட்டமிடலும் இல்லாமல்தான் சில காட்சிகள் நமக்கு ஒரு அருள் போல வசப்படும். அதை எடுக்கிற ஞானம், திறமை நமக்கு வேண்டும். இதெல்லாம் நமக்கு இலக்கிய வாசிப்பில்தான் கிடைக்கிறது. ஒரு விஷயத்தைப் பார்க்கிற பார்வை, அதை எப்படி உள்வாங்குகிறீர்கள், எப்படி மனதில் இருத்திக்கொள்கிறீர்கள், எப்படி வெளிப்படுத்துகிறீர்கள், உங்களின் கற்பனைத் திறன், போன்ற அனைத்திற்கும் இலக்கிய வாசிப்பே ஆதாரமாக இருக்கிறது.

ஜெயகாந்தன் ஆவணப்படத்தில் வந்த குயிலுக்கும் இந்தக் காகத்திற்கும் நிச்சயம், ஏதோவொரு தொடர்பு இருக்கிறது.

இன்னொரு சம்பவம் சொல்கிறேன். ஜெயகாந்தன் ஆவணப்படம் எடுக்கும்போது, அவரை ஒரு பெரிய, அகலமான காரில் அழைத்துச் சென்றோம். அப்போது, நான் பின் வரிசையில் உட்கார்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தேன். அப்போது பக்கத்தில் ஒளிப்பதிவாளர் செழியன் படம் பிடித்துக் கொண்டிருந்தான். என் கண்கள் ஒரு பக்கம் ஒன்றைப் பார்க்கிறது. உடனே நான் பக்கத்தில இருந்த செழியனிடம், “செழியன் காரில் இடதுபக்கம் இருக்கிற பக்கக் கண்ணாடியில் ஜெயகாந்தன் கம்பீரமாகத் தெரிகிறார். கேள்விக்கான பதிலை அந்தக் கண்ணாடி வழியாகப் போடுவோம், அதைப் பிடி,” என்று சொன்னேன். உடனே அதை அவன் படம் பிடித்தான். அது ஒரு முக்கியமான காட்சியாக இருந்தது. இது மாலை நான்கு மணி வாக்கில் நடந்தது. பிறகு, இரவு நாங்கள் திரும்பி வரும்போது, அவர் சாலையின்புறம் திரும்பினார், பின்னால் இருந்து கேமிரா வழியாக பார்க்கும்போது வெவ்வேறு தெருவிளக்குகள், விளம்பரப் பலகைகளில் உள்ள விளக்குகள், கடைகளின் விளக்குகள் என்று விதவிதமான விளக்கு வெளிச்சங்களில் ஜெயகாந்தன் கடந்து போவதுப் போல் படம் பிடித்து, பின்னணியை மங்கலாக்கி, அப்படியே டிஜிட்டலாக ஒரு நவீன ஓவியம் போல் செழியன் செய்துவிட்டான். இது அவனுடைய ஸ்பான்டேனிட்டிக்கான (spontaneity) ஒரு சான்று.

நான் ஒரு சின்னக் கோடுதான் காண்பித்தேன், அவன் ஒரு பெரிய வித்தையைச் செய்து காட்டிவிட்டான். உங்களின் எண்ணவோட்டத்திற்கு நிகராக ஒளிப்பதிவாளரும் வேலை செய்ய வேண்டும். செழியனும் ஒரு இயக்குநராக இருந்ததால் அது நடந்தது. இப்படிச் சில நேரங்களில், மிகவும் கவித்துவமான காட்சிகள் தானாக அமைந்துவிடுவதுண்டு. சில நேரங்களில் அப்படி முயற்சி செய்தாலும் சரியாக வர வாய்ப்பில்லை. கவித்துவமான காட்சிகள் திட்டமிட்டு எடுக்கப்படுவதும் உண்டு. இப்படி எதேச்சையாக நிகழ்வதும் உண்டு.

திருலோக சீதாராமின் ஆவணப்படத்தில் பாரதிதாசன் கவிதைக்கு ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் அனிமேஷன் காட்சிகளும், பாரதியார் வசன கவிதைக்கு லக்‌ஷ்மி ராமசாமியின் நாட்டியமும் சேர்த்தது அருமை. இவ்விரு கலைஞர்களுடன் சேர்ந்து இந்தப் பாடல்கள் உருவான விதத்தைப் பற்றி…

பாரதிதாசன் பாடலை அந்த ஆவணப்படத்தில் சேர்த்ததற்கு முக்கியமான காரணம், பாரதியாரைப் போல பாரதிதாசன் மேலும் திருலோக சீதாராமுக்கு ஒரு பெரிய ப்ரீதியும், பக்தியும் இருந்திருக்கிறது. பாரதிதாசன் பாடல்களும் அவருக்கு அவ்வளவு மனப்பாடம். அந்த ஆவணப்படத்திலேயே பேச்சாளர் சத்தியசீலன் சொல்வது போல், “என்னுடைய கவிதைகளை என்னைவிட இவ்வளவு அழகாகச் சொல்றியேப்பா!” என்று பாரதிதாசனாலேயே பாராட்டப்பட்ட ஒரு கவிஞர். அவருடன் சண்டை போடும் அளவிற்கு அவருடனான நட்பு இருந்துள்ளது. அதனால் பாரதிதாசன் பாடல்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படிச் சேர்க்க நினைக்கும்போது, வித்தியாசமான ஒரு பாட்டைத் தேர்வு செய்தேன். அது ஒரு அம்மா பிள்ளைக்குக் கதை சொல்வது போன்ற ஒரு பாட்டு. அதில் தமிழ்ப் பண்பாடு, அம்மா பிள்ளைப் பாசம், தமிழ் மன்னர்கள் என்று சில அடுக்குகள் இருந்தன. அதே நேரத்தில் அதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு அரிதான பாட்டாகவும் அது இருந்தது.

‘சங்கே முழங்கு’ மாதிரியான ஒரு முழக்கப் பாட்டாகவும் இல்லாமல், அதே நேரத்தில் ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து’ மாதிரி நிரம்பவும் மென்சோகமான பாடலாகவும் இல்லாமல், நடுவாந்தரமாக இருக்கிற அவருடைய ஒரு பாடலை எடுத்து ஒரு முயற்சி செய்தேன். பாக்ஸ் ஆபீஸ் ஹிட், வெற்றி, தோல்வி எல்லாம் ஆவணப்படங்களில் கிடையாது. அதனால், அந்தப் பாட்டைத் தேர்வு செய்து இசையமைத்தோம். என் நண்பர் திவாகர் சுப்ரமணியம்தான் இசையமைப்பாளர்.

மருது எனக்கு 25 வருடத்திற்கும் மேல் பழக்கம். அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது, முதலில் பாடல்வரிகளைத் தரச் சொன்னார். அந்தப் பாட்டின் கருத்திற்குத் தகுந்த மாதிரி காட்சிகளை முதலில் வரைந்தார். சிலவற்றை அவர் முன்பே செய்து வைத்திருந்தார். சிலதைப் புதிதாகச் செய்தார். இசையமைத்ததும், அந்த இசைக்குள் அதை அழகாக, அதற்குத் தகுந்த மாதிரி வரிசைப்படுத்தி, எடிட் செய்து கொடுத்துவிட்டார். அவர் யானைக் கூட்டத்தையே கட்டி மேய்த்து, பெரிய வேலைகள் பார்ப்பவர். இதெல்லாம் அவருக்கு ஒரு சின்ன வேலை.

மருது ஒரு பன்முகக் கலைஞர். அவருக்கு இசையைப் பற்றிய அடிப்படைப் புரிதல் உண்டு. அவர் ஒரு ஓவியர் மட்டுமல்ல, அவருக்குச் சிற்பம் தெரியும். நல்ல கவிதையைக் கண்டுகொள்ளத் தெரியும். திரைப்படம் தெரியும். திரைப்படத்துறையில் அவர் ஒரு கலை இயக்குநர். அவர் ஒரு எழுத்தாளர், நன்றாக எழுதுவார். நல்ல பேச்சாளர். அவர் ஸட்ராங் கம்யூனிக்கேட்டர் (strong communicator). மருதுவிடம் நாம் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும், அதை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்தும்போது, நாம் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு அருமையாக வெளிப்படுத்துவார். அவரது பிரமாதமான கோட்டோவியங்களின் மேலும் சித்திரங்களின் மேலும், இன்றும், எனக்கு ஒருவிதமான மயக்கம் உண்டு.

ஆதிமூலம், மருது, சந்தானராஜ், கு.ராஜவேலு இவர்களின் கோடுகள் மீது எனக்கு தீராக் காதல் உண்டு. அதனால், ஜெயகாந்தன் படத்தில் ஆதிமூலம் வரைந்த நூற்றுக்கணக்கான ஓவியங்களைப் பயன்படுத்தினேன்.

மருதுவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான், நான் தொலைக்காட்சியில் இருந்து வெளியே வந்து, முதலில் எடுத்த இந்திரா பார்த்தசாரதியின் படத்தில், கலை இயக்குநராக பயன்படுத்திக் கொண்டேன். அதில் அவர் இந்திரா பார்த்தசாரதியை ஒரு படமாக வரையத் தொடங்குவதுதான் ஆவணப்படத்தின் தொடக்கமே. ஒவ்வொரு கட்டமாக அந்த ஓவியம் உருவாகி, அந்தப் படம் வரைந்து முடியும்போது, அந்த ஆவணப்படமும் முடியும். என்னுடன், மருது வேலை செய்திருப்பதால், மறுபடியும் திருலோக சீதாராம் படத்திலேயும் அவருடன் வேலை செய்வதில், எனக்கு எந்தச் சிரமும் இல்லை. அவருடன் வேலை செய்யும் ஒவ்வொரு முறையும் புது விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஒரு அனுபவமாகத்தான் இருந்துள்ளது. அவர் ஒரு கடல், அவரிடம் பேசும்போது, சில விஷயங்களுக்கான கண் திறப்பு எனக்கு நடந்திருக்கிறது. ஒரு மூத்த அண்ணனாக என்னிடம், “இப்படி பண்ணு, அப்படி பண்ணிப் பாருன்னு,” உரிமையோடு சொல்லக்கூடியவர். ஆதிமூலம், மருது இவர்கள் இரண்டுபேரிடம் பழக முடிந்ததும் அவர்களின் படைப்புகளை என் படைப்புகளோடு இணைத்துக் கொள்ள முடிந்ததும், எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். 

‘பாம்புப் பிடாரன் குழலூதுகிறான்’ என்கிற பாரதியாருடைய வசனக் கவிதைக்கு லட்சுமி ராமசாமி நடனம் ஆடினார். அதுவும் பாரதியின் முக்கியமான வசனக் கவிதை. அதுவும் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத கவிதைதான்.

நான் இசை படித்தேன், நாட்டியமும் சில ஆண்டுகள் படித்தேன். அதனால் பெரும்பாலும் இசை மற்றும் நாட்டியம் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். என் கவிதைகளுக்கு லட்சுமி ராமசாமியே நாரதகான சபாவில் நடனம் ஆடியிருக்கிறார். அப்படித்தான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதற்காக அதையெல்லாம் ஆவணப்படத்தில் அளவுக்கு மீறிச் செய்ய மாட்டேன். எனக்கு நாட்டியம் தெரிந்திருந்தாலும் திருலோக சீதாராம் படத்தில்தான் முதன்முதலாக நாட்டியத்தைச் சேர்த்தேன். அந்தப் படத்திற்கான கரு எதைக் கேட்கிறதோ, அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அவர் மரபார்ந்த உடைகளில் வந்திருப்பாரே தவிர, அதுவும் மிகவும் மரபார்ந்த ஒரு நாட்டியம் என்று சொல்லமுடியாது. மரபார்ந்த நாட்டியமாகவும் இல்லாமல், ஒரு நவீன நடனமாகவும் இல்லாமல், இடைப்பட்ட நடனமாக இருக்கட்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் ஒரு பெரிய நடனக் கலைஞர். சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யை. அவர் சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு நடனம் ஆடியவர். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நாட்டியத் துறையில் இருப்பவர். எந்தத் தயக்கமும் இல்லாமல், கேட்டதும் செய்துகொடுத்தார். இந்த விஷயத்தைச் சொன்ன உடனே, அவர் மிகவும் உற்சாகமாக, “அப்படியா! இதுவரை வசனக் கவிதைக்கு நான் நடனமாடியதே இல்லை, இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செய்கிறேன்,” என்றபடி செய்துகொடுத்தார். அதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால், நாம் இரண்டு வரிக்கு ஆடி காட்டச் சொன்னால், அவர் நான்கைந்து விதமாக நடனம் ஆடிக் காட்டுவார். பிறகு படம்பிடிக்கப் போனால், அங்கு வேறு புதுவிதமாக ஆடுவார். அவர் அப்படியான ஒரு பெரிய கற்பனைத் திறன் கொண்ட நடனமணி. வந்தது வராமல் பாடுவது போல, வந்தது வராமல் ஆடுபவர்.

திவாகர் சுப்ரமணியன் இசையமைப்பும் அற்புதமாகச் செய்திருப்பார். அந்த பாட்டை மிகப் பிரமாதமான ஒரு மெட்டிற்குள் கையமர்த்தியிருப்பார்.

ஒரு விஷயத்தில் கொஞ்ச காலம் ஈடுபட்டுச் செயல்படும்போது நமக்குள் அது ஊடுருவி சிற்சில மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இது நமக்குக் காலம் கழித்தே புலப்படலாம். அது போல நீங்கள் இதுவரை இயக்கிய ஆவணப்பட ஆளுமைகளின் வாழ்க்கையும், பார்வையும், சிந்தனையும் உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நீங்கள் பிற்காலத்தில் உணர்ந்ததுண்டா?

ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதை நிறைய உணர்ந்திருக்கிறேன். நாம் அதை ஒரு வேலையாகச் செய்தால் அது நடக்காது. உள்ளும் புறமுமாக மனம் தோய நாம் அதில் கரையும்போது அது தானாக நடக்கும். நிறைய விஷயங்கள் சொல்லவேண்டும். சுருக்கமாக இரண்டு பேர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இரண்டு வரிகளில் சொல்லப் பார்க்கிறேன்.

துறவிக்கு வேந்தன் துறும்பு – ஜெயகாந்தன்

பிறர் படைப்புகளையும் நீ உயர்த்து – திருலோக சீதாரம்.

அடுத்து நீங்கள் ஆவணப்படம் இயக்க விரும்பும் எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு ஒரு நேர்காணலில் ஜெயமோகன் என்று சொன்னீர்கள். ஏன்?

இந்திய அளவில், ஏன் இன்னும் சொல்லப்போனால் உலக அளவில் தமிழில் எழுதுகிற ஒரு மிக முக்கியமான ஆளுமை ஜெயமோகன்.

ஒரு எழுத்தாளன் வாழும்போது என்ன செய்தான் என்று யாருக்கும் தெரியாது. ஆக்கப்பூர்வமாகப் பார்ப்பதை விட்டுவிட்டு, அற்ப அரசியல், தனிப்பட்ட பொறாமை, காழ்ப்புடன் விமர்சனம் செய்துகொண்டே இருந்தால் அந்தக் கண்களுக்கு எந்த நல்லதுமே சரியான கோணத்தில் தெரியாது.

அவர் ஒரு எழுத்து ராட்சஷன். அதற்காக அவர் செய்திருக்கும் வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிகமாகவும், அதே சமயம் தரமாகவும் அவர் எழுதிக் குவித்த பக்கங்கள் அவர் யார் என்று சொல்லும். என்னால் அந்த வெண்முரசையே இன்னும் படித்து முடிக்க முடியவில்லை. வரலாறு, கலை, நாவல், சிறுகதை, காப்பியம், தொன்மம், அரசியல் இப்படி விதவிதமாக அவர் எழுதியிருக்கிறார். அவரது படைப்புகள் ஆங்கிலத்திற்குப் போகும்போது தெரியும், அதன் சர்வதேச வீச்சு என்னவென்று. என்ன நமக்கு இதல்லாம் ஒழுங்காக எடுத்துச்செய்ய ஆள் இல்லை. இங்கே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்பவர்களுக்குப் பதில் சொல்வதிலேயே பாதி ஜீவன் போய்விடுகிறது.

ஒரு எழுத்தாளனாக அவர் வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதே, அது வேற லெவல்! அவர் வாழ்கிற அந்தக் கலை வாழ்வும் மிக முக்கியமானது. எதற்காக அவர் விஷ்ணுபுரம் விருதெல்லாம் கொடுக்க வேண்டும்? வருகிற பணத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கலாமே? பல எழுத்தாளர்களும் அதைத்தான் செய்கிறார்கள். அவரவர்க்குத் தேவையான பணம் வந்துவிடுகிறது. போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இவர் சும்மா இல்லை. தனக்கு தன் எழுத்தால், புகழால் வருகிற பணத்தால், எழுத்தில் முனைப்பாக இயங்குகிற பலரையும் கௌரவிக்க நினைக்கிறார். படிப்பதற்கு, எழுதுவதற்கு ஒரு பட்டாளத்தை உருவாக்க நினைக்கிறார். பட்டறைகள் நடத்துகிறார். இளைய தலைமுறையின் மேல் நம்பிக்கை வைத்து அவர்களைச் சரியாக வழி நடத்துகிறார். என்ன ஆச்சர்யம் என்றால் அவர்களும் ராணுவ வீரர்கள் மாதிரி அவர் சொல்வதைக் கேட்டு அமைதியாக அவருடன் இருக்கிறார்கள். அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

“அவன் ரொம்ப பெரிய ஆளாக வருவான் ரவி” என்று 2007இல் ஜெயகாந்தன் ஆவணப்படத்தின்போது சொன்னது பதிவில் இருக்கிறது. அதுதான் இன்றைக்கு நடக்கிறது. அதை நான் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வாய்ப்பு அமைந்தால் என் வாழ்க்கையில் அதை மிகவும் முக்கியமானதாகக் கருதுவேன். அவருடைய எழுத்தைப் பற்றியும், விஷ்ணுபுர விருதைப் பற்றியும் மட்டும் சொல்லாமல், தனிப்பட்ட மனிதர்கள் மீதும், மற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் கரிசனம், ஒரு விஷயத்தில் ஈடுபடுகின்ற உண்மையான அர்ப்பணிப்பு, பூரணத்துவம் இவையெல்லாம்தான் என்னை ஈர்க்கின்றன. மற்றொரு காரணத்தையும் நான் சொல்ல வேண்டும் அல்லவா? அவர் என்னுடைய தங்கையின் கணவர். அருண்மொழி என் அத்தையின் வழியில் என் சித்தப்பாவின் மகள். ஜெயமோகன் எங்கள் வீட்டு மாப்பிள்ளை, அதுவும்தான்.

கவிதை, இசை, நாட்டியம், ஓவியம், சினிமா எனப் பல கலைகளில் உங்களுக்குள்ள ஞானம் எப்படி ஒன்றையொன்று மெருகேற்றுகிறது?

பல கலைகளில் எனக்கு ஞானம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. கவிதையில் கொஞ்சம், கதை கட்டுரைகளில் கொஞ்சம் இருக்கிறது. அதுவும் விகிதாச்சாரத்தில் மிகவும் குறைவு. இசையைப் பொருத்தளவில் ஏதோ ஒரு மெட்டு அமைக்கும் கூறு என்னிடம் இருக்கிறது. இல்லாவிட்டால் 90 கவிதைகளை மெட்டமைத்திருப்பேனா? ஆனால், நான் என்னைப் பாடகர் என்று சொல்லிக் கொள்ளமாட்டேன். ஓவியத்தைப் பொருத்தவரையில் மரபார்ந்த ஓவியம் பற்றியும் நவீன ஓவியங்களைப் பற்றியும் ஒரு புரிதல் இருக்கிறது. நாட்டியம் படித்ததால் அதில் ஒரு சின்னப் பரிச்சயம் இருக்கிறது. இவ்வளவுதான். ஆனால், இசை, கவிதை, உரைநடை, ஓவியம், நாட்டியம், நடிப்பு இப்படி எல்லாமே எனக்கு ஆவணப்படம் எடுப்பதற்கும், திரைப்படம் எடுப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கின்றன. ‘கண்டதைக் கற்று பண்டிதனாகிவிட்டேன்’ என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு ஒரு கலைஞன் பல கலைகளின் சங்கமமாக இருந்தால்தான் பிரதானமான கலையில் அவன் பரிமளிக்க முடியும். ஒன்றை மட்டுமே தெரிந்தவனாக இருந்தால், அந்த ஃபியூஷனில் கிடைக்கின்ற புதுவித வார்ப்போ, வண்ணமோ, பதமோ, நாதமோ அவனிடமிருந்து கிடைக்காது. தன்னில் இருக்கும் கலை ஒன்றில் மேம்பட்டு முன்னேறி வேறொன்றாக மாற வேண்டும். வேறொன்றாக மாறுவதற்கு இவையெல்லாம் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் ஒரு புதுவித மலர்ச்சி உருவாகும்.

“கண்டதைக் கற்று பண்டிதனாகிவிட்டேன்” என்று சொன்னீர்கள். ஓவியம் இசை தொடர்பான ரசனையை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

நம் மேல் அக்கறைகொண்ட ஆசிரியர்களும் நண்பர்களும்தான் நம்மை அப்படி வளர்தெடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். எனக்கு தேனுகா என்ற ஓர் அற்புதமான நண்பர் இருந்தார். அவர் கலை இலக்கிய விமர்சகர். அவரின் மூலமாகத்தான் ஓவியங்களை எப்படி ரசிப்பது என்று நான் புரிந்துகொண்டேன். ஆண்டுக் கணக்கில் அவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசியிருக்கிறோம்.

இசை என் இரண்டாவது அம்மா (அப்பாவின் நேசிகை) தொடங்கி வைத்ததுதான். சின்ன வயதில் கருத்து உறைநிலைப் பருவத்தில் அவர் வீட்டில் அவர் பாடி நான் கேட்ட அந்த கர்னாடக இசைப் பாடல்கள், அங்கு கேட்ட எல்.பி. ரெக்கார்டுகள்தான் பின்னாளில் என்னை இசைக்குள் சேர்த்திருக்கிறது. தேனுகாவுக்கும் இசை தெரியும் என்பதால் அவரிடமிருந்து பெற்றதும் நிறைய. இப்படிப் பாதையெல்லாம் எனக்கு வழிசொன்னவர்கள் அனேகம் பேர். அவற்றையெல்லாம் சேர்த்துதான் நாம் அடுத்தடுத்த தலைமுறைக்குப் பயணவழி சொல்கிறோம். கூகுள் மேப்பில் தேடிப் போகிறவர்களுக்கு, நேர்க் குரலில் பயண வழியைச் சொல்வதும் நீர்மோரோ பானகமோ தந்து மெல்ல அவர்கள் தலையை வருடி நான் ஆற்றுப்படுத்துவதும் கிடைத்துவிடாது இல்லையா. ஆனால், இந்தத் தலைமுறையின் ஆர்கானிக் நேசம் அதையெல்லாம் மறுபடி மீட்டுடெடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

கவிஞர் வண்ணதாசனுடன் ரவிசுப்பிரமணியன்
கவிஞர் வண்ணதாசனுடன் ரவிசுப்பிரமணியன்

ஓவியக் கலைஞர் ஆர்.பி.பாஸ்கரன், ஓவியம்-இசைக் கலைஞர் எஸ்.ராஜம், எழுத்தாளர்கள் வண்ணதாசன், கலாப்ரியா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் ஆகியோரின் ஆவணப்படங்கள் நிதி போதாமையால் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தீர்கள். இந்நிலை மாற என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

பல குடும்பங்களில் கல்யாணத்திற்காக லட்சக்கணக்கில், இன்னும் சொல்லப் போனால், கோடிக்கணக்கில்கூட, செலவு செய்கிறார்கள். இப்போது இந்த கோவிட் வந்ததினால், அப்படி எல்லாம் செலவு செய்ய முடியவில்லையே என்று வேறு பாவம் கவலைப்படுகிறார்கள். கல்யாணத்திற்கு மட்டுமில்லை, இன்னும் என்னென்னவோ விஷயங்களுக்கு அனாவசியமாக ஆடம்பரச் செலவுகள் செய்கிறார்கள். ஆனால் அந்தக் குடும்பத்திலயே இருக்கிற ஒரு உண்மையான கலைஞனைப் பற்றியோ, ஒரு எழுத்தாளனைப் பற்றியோ, ஒரு சமூகச் சேவகனைப் பற்றியோ, சுற்றுச்சூழல் போராளியைப் பற்றியோ, விசில் ப்ளோயரைப் பற்றியோ, வரலாற்று ஆய்வாவாளரைப் பற்றியோ, தமிழறிஞரைப் பற்றியோ வெளி உலகிற்கு சரியாகச் சொல்ல வேண்டுமென்று அந்தக் குடும்பத்திற்கோ, அவர்களின் உறவினர்களுக்கோ, அவர்களுடைய நெருங்கிய, வசதியுள்ள நண்பர்களுக்கோ எந்தப்  பிரக்ஞையும் கிடையாது. அவர்கள்தான் இதை முன்னெடுக்க முடியும்.

அட! நீங்கள் பிரபல சினிமாக் கலைஞர்களையே எடுத்துக்கொள்ளுங்கள், இங்கு சிவாஜிக்கோ, எம்ஜிஆருக்கோ, எம். ஆர். ராதாவுக்கோகூட ஒரு நல்ல ஆவணப்படம் இதுவரை கிடையாது. அவ்வளவு வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவர்கள் நாம். இல்லாவிட்டால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு காண்ட்ராக்ட்டில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக, பல நூறு வருஷங்களான ஃபிரஸ்கோ ஓவியங்களை போய் எந்த அறிவும் இல்லாமல் சுரண்டி அழிப்பார்களா? செய்தவன் பெயரே இல்லாத அபூர்வ சிலைகளில் போய் இவர்களின் பெயரை, இவர்களுக்குப் பிடித்தவரின் பெயரை எல்லாம் பொன்னெழுத்துகளில் பொறித்து வைப்பார்களா? இதுதான், நம் முன்தோன்றிய மூத்தக் குடியின் நிலைமை. ‘தமிழ்!தமிழ்!’ என்று சொல்லிக்கொண்டு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறதே, கீழடி மேலே எம்பி வருவதற்கு!

நான் இசையில் ஈடுபாடு உள்ளவன். இசையை நான் குறை சொல்லவில்லை, சொல்லவும் மாட்டேன். நாரதகான சபா, மியூசிக் அகாடமி என்று மெட்ராஸில் நூறு சபாக்கள் இருக்கின்றன. இங்கு நடக்கிற கச்சேரிக்கெல்லாம் நீ, நான் என்று எத்தனையோ வங்கிகள், நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நிதி தருகிறார்கள், அத்தனை கச்சேரிகள் நடக்கின்றன. ஏன் இந்தக் கலையை ஆவணப்படமாக்க வேண்டும் என்று நினைப்பதில்லை? விளையாட்டில் எப்படி கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துகிறோமோ, அதே மாதிரியான விஷயம்தான் இதுவும். அதனால், ஆவணப்படத்திற்குத் தயாரிப்பாளர்கள் வருவது, பெரும்பாலும் இங்கே சாத்தியமில்லாமல்தான் இருக்கிறது.

பெரிய நிறுவனங்கள், லாபத்தை எதிர்பார்க்காத நிறுவனங்கள் Corporate Social Responsibility (CRS) Fund மூலமோ, இல்லை வருமான வரியைத் தவிர்ப்பதற்காக, ஒரு பகுதியைச் செலவு செய்ய நினைக்கும் நிறுவனங்களோ, சமூகத்திற்காக, கலை, கலாச்சாரம் பண்பாட்டிற்காகச் சேவை செய்ய நினைக்கும் நிறுவனங்களோ இதில் வரலாம். அப்படி ஒரு சாத்தியம் இருக்கிறது.

லாபம் பார்த்த, திரைத்துறை சார்ந்த தயாரிப்பாளரோ, பொது நிறுவனம், தனியார் நிறுவனங்களைச் சார்ந்த தயாரிப்பாளரோ வரவில்லை என்றால், வேறு யார் வருவார்கள்? நாம்தான் தயாரிப்பாளராக முடியும். நாம் என்றால், அந்தக் கலைஞனின் குடும்பத்தினரோ அல்லது நெருங்கிய நட்பு வட்டத்திலோ, பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறவர்களோ, பண வசதியும் இது சார்ந்த உண்மையான கரிசனமும் உள்ளவர்களோ, ஆர்வமுள்ளவர்களோதான் இதைச் செய்ய முடியும். பொருளாதாரத்தில் மேம்பட்ட யாரும் இதைச் செய்வதில்லை. பொருளாதாரத்தில் மேம்படாத எங்களை மாதிரி ஆட்கள்தான் இந்தப் பித்தில் எப்பாடுபட்டாவது இதைச் செய்கிறோம்.

அடுத்தது கிரவுட் ஃபண்டிங் (Crowd Funding)! ஆவணப்படத்திற்கு, அதுவும் தமிழில்! யார் தருவார்? ஆவணப்படங்களை யூடியூபில் இலவசமாகப் போட்டாலே பார்க்க இப்போது இருக்கிற தலைமுறைக்குப் பொறுமை இல்லை. அவனுக்கு எல்லாமே வேகம்தான். ஃபாஸ்ட் இசை, ஃபாஸ்ட் ஃபுட், ஃபாஸ்ட் கலாச்சாரம். எதற்கு இந்த ‘அவுதி’ என்றே தெரியவில்லை! சமூக வலைத்தளங்களிலும் 15 வினாடிகளுக்கு மேல் எதையுமே அவன் கவனிப்பதில்லை. அதை உள்வாங்குவதும் அரைகுறை. இந்த உலகமயமாக்கலில் மார்கெட்டிங்கை மட்டும்தான் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திறமை இருக்கிறதோ, இல்லையோ தரமாக எதையும் செய்ய முடிகிறதோ, இல்லையோ ஒவ்வொரு தனி மனிதனுமே தன்னை மார்கெட் பண்ணியே தீர வேண்டும் என்கிற அளவிற்கு வெறியாகியிருக்கிறான். உலகளாவிய சந்தைகளைத் திறந்துவிட்ட பிறகு, கலாச்சாரமாவது ஒன்றாவது. அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி என்றால் என்ன? எதற்கு அது? அதற்கு என்ன இப்போது? என்பான். அவனுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது, அவன் காலுக்கு அடியில் இருக்கிற பூமி நழுவுகிற வரைக்கும் அவன் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. அவனுக்குச் சுற்றுச்சூழலைப் பற்றியோ, கலையைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, பண்பாட்டைப் பற்றியோ, வரலாற்றைப் பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. ஆனால், இப்போது தெரியாது, பிற்காலம் அவனுக்கு வலிக்க வலிக்கச் சொல்லிக் கொடுக்கும்.

தமிழகத்தில் ஆவணப்படக் கலைஞர்களுக்கு நிதி தவிர, மிகப்பெரும் தடையாக இருப்பது எது?

முதலில் படப்பிடிப்பிற்கு அனுமதியே கிடைக்காது. பெரிய நிறுவனங்களுக்கு உடனே அனுமதி கொடுப்பார்கள். ஆனால் நாம் ஒரு ஆவணப்படம் எடுக்கிறோம் என்றால், “அட யாருங்க, இதல்லாம் பார்ப்பாங்க?” என்று நம்மிடமே கேட்பார்கள். அதெல்லாம் தெரிந்துதான், நாமே நமக்கு சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டு வருகிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது.

படப்பிடிப்பு உபகரணங்களான புகைப்படக் கருவி போன்றவற்றை வாடகைக்கு வாங்கப் போனால், “ஆவணப்படமோ, குறும்படமோ, சினிமாவோ, எதுவாக இருந்தாலும் வாடகை ஒன்றுதான். நாங்கள் சேவை எல்லாம் பண்ண முடியாது!” என்பார்கள். அவர்களும் பல லட்சம் முதலீடு செய்துதான் வாங்கி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், ஒரு குரல்வளக் கலைஞராகட்டும், படத்தொகுப்பு ஸ்டுடியோவாகட்டும், இசைக்கலைஞராகட்டும் நமக்குத் தேவையானபடி கிடைக்காது. நமக்கு இலவசமாக உதவுகிறோம் என்று சொல்கிறவர்கள் திறமைசாலியாக இருக்க மாட்டார்கள். தேர்ந்த கலைஞர்கள் காசு, பணத்தில் குறியாக இருப்பார்கள். அவர்கள் கேட்கிற பணத்தை நம்மால் கொடுக்க முடியாது. நிதி தவிர, இந்த மாதிரி தொழில்நுட்ப உதவியுமே மிகுந்த கஷ்டம்தான்.

இவ்வளவு ஏன்? இதுவரை என்னுடைய ஆவணப்படத்திற்கு உதவியாளராக வருகிறேன் என்று சொல்லி, ஒருவர்கூட வந்தது கிடையாது. ஒரே ஒருத்தர் மட்டும்தான் கேட்டார், குமரன் என்ற ஒரு நண்பர். அவரும் எனது எந்த ஆவணப்படத்திலும் வேலை செய்யவில்லை. ஆனால் இப்போது நான் எடுத்து முடித்த குறும்படத்தில்தான் வந்து சேர்ந்தார். அதிலும் அவருக்கு கமர்ஷியல் பட வாய்ப்பு வந்துவிட்டதெனப் பாதியில் போய்விட்டார். நானும் அவருக்கு வாழ்த்து சொல்லி நல்லபடியாக அனுப்பி வைத்தேன். முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் வருமானம் கிடையாது. நிறைய உழைக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும், நிறைய வேலை செய்ய வேண்டும். ஆனால், பெரிய வருமானம் இருக்காது, புகழ் இருக்காது. அப்புறம் எதற்கு இந்த வேலை என்று நினைக்கிறார்கள். அவரவருக்கு வாழ்க்கை சூழலும் இருக்கிறதில்லையா.

ஒரு முக்கியமான ஆவணப்பட இயக்குநராக இங்கு நான் அறியப்பட்டு இருக்கிறேன். ஆனாலும் ஆவணப்படத்துக்காகத் தன்னெழுச்சியாக வரும் ஒரு உதவியாளர் கிடைப்பதுகூட இங்கு சிரமமாக இருக்கிறது என்றால் பாருங்களேன்! என்ன செய்ய முடியும். இதைப் போல் எவ்வளவோ தடைகள்!

ஆவணப்படங்களுக்கென்றே பல சினிமா விழாக்களும் நடப்பதுண்டு. நீங்கள் விரும்பிச் சென்று பார்த்த ஏதாவதொரு சினிமா விழா அனுபவத்தைப் பகிருங்களேன்.

இதுவரை தமிழ்நாட்டில் நடந்த சில ஆவணப்பட விழாக்களுக்குப் போயிருக்கிறேன். கேரளாவுக்கு ஒரு முறை சென்றுள்ளேன். இதைத் தவிர வெளிநாடுகளில் போய்ப் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பணவசதி கிடையாது.

ஆர். பி. அமுதன், அதை ஒரு இயக்கமாக எடுத்துச் செய்கிறார். என்னுடைய குறும்படங்கள், ஆவணப்படங்கள் அங்கு வெளியிடும்போது என்னைக் கூப்பிடுவார். என்னுடைய படங்கள் வராதபோதுகூட, ஆவணப்படங்களைப் பற்றிப் பேசுவதற்குக் கூப்பிடுவார். நானும் போய்ப் பேசுவேன். விழா அனுபவத்தைச் சொல்ல போனால், அது ஒரு தனி கட்டுரை மாதிரி ஆகும்.

இன்றைக்கு ஒரு கலைஞன் பல கலைகளின் சங்கமமாக இருந்தால்தான் பிரதானமான கலையில் அவன் பரிமளிக்க முடியும்.

தமிழ் ஆவணப்பட இயக்குநர்களில் உங்களை ஈர்த்த கலைஞர்கள் யார்?

தமிழில் சொர்ணவேல், ஆர். ஆர். சீனிவாசன், ஆர். வி. ரமணி, அமுதன், அம்ஷன்குமார், லீனா மணிமேகலை இப்படி சிலர் இருக்கிறார்கள். ஒரு சில படங்கள் மட்டுமே எடுத்த செழியன், செந்தமிழன், சாரோன், தி. சு. பாண்டியராஜன், இப்படி சிலர். பாதியில் இதை விட்டுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிக்க ஆள் கிடைப்பதில்லை. ஏதோ நாங்கள் ஒரு சிலர்தான் ஒரு தவம் போல இதிலேயே லயித்துக் கிடக்கிறோம்.

லயித்துக் கிடக்கும் என் போன்றோருக்கும் பல சவால்கள். நான் விஜய், ஜெயா டிவியில் இருந்தபோது கிட்டத்தட்ட ஆயிரம் படங்கள் பண்ணியிருந்தாலும் அதெல்லாம் என் பெயரில் வந்ததில்லை. தயாரிப்பு விஜய் டிவி, தயாரிப்பு ஜெயா டிவி என்றுதான் வரும். அப்புறம் செய்திகளில் வரும் ஆவணப்படங்களுக்கு ஒருவர் பெயரும் இருக்காது. தயாரிப்பு செய்திப் பிரிவு என்று வரும். ஆனால், அவர்கள் கொடுத்த சான்றிதழ்கள் எல்லாம் இருக்கின்றன. அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது? படத்தில் நம் பெயர் வந்தால்தானே நாம் அதற்கு உரிமை எடுத்துக்கொள்ள முடியும். அதனால், தொலைக்காட்சி தவிர்த்து, சராசரியாக நான்கு வருடத்துக்கு ஒரு படம் என்று எடுத்திருக்கிறேன். 2000இல் நான் முழு நேர டிவி வேலை எல்லாம் விட்டுவிட்டு இந்த ஆவணப்படத் தயாரிப்புக்கு, ஃபிலிம் மேக்கிங்க்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு தொலைக்காட்சி சேனல்களுக்கு சின்னச் சின்னதாகச் செய்தேன். இப்போது வரைக்கும் 22 வருஷம் ஆகியிருக்கிறது. இதில் என் பெயருடன் வெளிவந்த படங்கள் என்றால் இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், டி. என். ஆர்., திருலோக சீதாராம். திருலோகம் கவிதையை அடிப்படையாக வைத்து ஒரு ஒடிசி நாட்டியத்தை இயக்கியிருக்கிறேன். அது தனி. இந்தக் கணக்குப்படி பார்த்தால் நான்கு வருடத்துக்கு ஒரு படம் வெளிவந்திருக்கிறது. அவ்வளவுதான். அதுவும் ஆளுமைகள் பற்றி மட்டுமே எடுக்க முடிந்திருக்கிறது. வெளிவராததெல்லாம் வேறு கணக்கு. இசை, சுற்றுச்சூழல், நாட்டியம் பற்றியெல்லாம் எவ்வளவோ எடுக்கமுடியும். ஆனால் யார் அதுக்கெல்லாம் நிதி தருவார்கள்?

மா. அரங்கநாதன் படமெல்லாம் செய்தது போல் நானே செய்யலாம்தான். நானும் வாழ வேண்டும் அல்லவா? ஏற்கனவே கலை மேல் உள்ள ஆர்வத்தில் கோடிக்கணக்கில் பணத்தை விட்டுவிட்டுத்தான் கும்பகோணத்தில் இருந்து இங்கே வந்தேன். இப்போது நித்திய வாழ்வே ஒரு சவாலாக இருக்கிறது.

நீங்கள் கவிஞனாக உருவாகிவந்த இளமைக்காலம் பற்றி…

உருவாகி வந்த என்று ஒரு சரியான வார்த்தையைச் சொல்லிக்கேட்கிறீர்கள் சபாஷ். நன்றி. ஏனெனில் எந்தக் கவிஞனையும் படைப்பாளியையும் உருவாக்க முடியாது. அவன் தன் போக்கில் தானாக வளரும் ஒரு செடி. அதை நட்டு வைத்து வளர்த்தால் பட்டுப் போய்விடும்.

ரவிசுப்பிரமணியன்

என் உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ப. செளந்தர்ராஜன்தான் என் கலைவாழ்வின் தொடக்கப்புள்ளி. அவரால்தான் நான் பாட, பேச, நடிக்கத் துவங்கினேன். அவர்தான் எல்லாவற்றையும் துவக்கி வைத்தார். கலை சார்ந்த என் விஷயங்கள் எல்லாமே பதின் பருவத்துக்குள்ளேயே துவங்கியது. +2 படிக்கும்போது அந்த வயதுக்குரிய இயல்போடு ஒரு கவிதை எழுதி அவரிடம் காண்பித்தேன். எல்லாவற்றையும் ஊக்கப்படுத்தி, கொண்டாடி மேலே வா என்று சொன்ன அந்த மனிதர் கவிதையைப் படித்ததும், “போடா உருப்டான், கவிதையாடா இது. கழுத கழுத!” என்று சொல்லிவிட்டார். பிறகு நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன். அதன் பிறகு வாசிப்பு மட்டுமே போதும் என்றிருந்தேன். அதுவும் இந்தப் பாடலாசிரியர்களையே பெரிய கவிஞர்களாக நினைத்துப் (கண்ணதாசன் போன்ற ஒரு சில விதி விலக்குகளை விடுங்கள்) படித்துக்கொண்டு கிடந்த காலம் அது.

கல்லூரிக்கு வந்த பிறகு இரண்டாம் ஆண்டு என் ஆசிரியர் ஞானசேகரன் கல்லூரி ஆண்டு மலருக்கு ஒரு கவிதை கேட்டார். அதற்கு ஆசிரியர் பொறுப்பும் ஏற்கச் சொன்னார். எனக்கு வராது என்று சொல்லிவிட்டேன். “என்னப்பா நீ நடிக்கிற, பாடுற, ஆடுற, என்.சி.சி, என்.எஸ்.எஸ், போட்கிளப்ல்லலாம் இருக்க, இது வராதா? எழுதிப் பாரு,” என்று சொன்னார். அவர் சொல்வது சரிதானே, அது என்ன நமக்கு வராதா என்ன என்று நினைத்தேன். எழுதிக்கொடுத்துவிட்டேன். 1982 கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி ஆண்டு மலரில், என் முதல் கவிதை பிரசுரமானது. அதைக் கவிதை என்று சொல்லமுடியாது. செளந்தர்ராஜன் சார் சொன்னமாதிரிதான் இருந்தது. ஏதாவது உங்களைத் தைக்க வேண்டும், ஏதாவது ஒரு வலியை ஆழமாக நீங்கள் உணர வேண்டும், உள்வாங்க வேண்டும் இல்லையா. அது அந்தக் கவிதை வழி நடக்கவில்லை. பிறகு சில வருடம் கழித்து அது நடந்தது.

சொன்னால் நம்புவீர்களா தெரியாது. ஆனால் அதுதான் உண்மை. என் அம்மா என்றால் எனக்கு பயம், அவர்கள் மறையும்வரை. சின்ன வயதில் இருந்தே அப்படி சித்திரவதை செய்திருக்கிறார்கள். ஒரு நாவலே எழுதலாம். அப்பாவும் கடுமையாகத் தண்டிப்பார், அடிப்பார். ஆனால் அதில் ஒரு பாச ரேகை இழையோடும். அம்மா அப்படி ஒரு வன்மமாக இருப்பார்கள். அதற்கு நான் காரணம் இல்லை. அப்பாவின் அங்கீகரிக்கப்படாத மனைவியாக இல்லாத, இன்னொரு மனைவிதான் தான் என்பதுவே அவர்களின் மூர்க்கமான கோபத்துக்கு அடிப்படைக் காரணம். என் மீது பாசங்கொண்ட அவர்களை நான் அம்மா என்று கூப்பிட்டு அவர்கள் வீட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தது ஒரு முக்கியமான காரணம். அது அப்படியே அம்மாவுக்கு என்வரையில் மனச் சிக்கலாக ஆகி அப்படி மாறிவிட்டார்கள். இது எனக்கு மட்டும்தான் நடந்தது. மற்ற நான்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் நல்ல அம்மாதான். அவர்கள் படிப்பு அவர்கள் அனுபவம், அவர்கள் உலகைப் பார்த்த விதம் அப்படி. அது ஒன்றும் தவறில்லை. அதைச் சரியான மனப்பாங்கில் உணரும் காலம் என்று ஒன்று இருக்கிறதல்லவா. அந்த உணர்வை மெல்ல பெற்ற அந்தக் காலகட்டத்தில் எனக்குள் கவிதை வந்தது. அது ஒரு மனப்பிறழ்வையே உண்டாக்கியிருக்க வேண்டிய விஷயம். இரண்டு வருடம் அப்படியும் இருந்து குளிகைகளால் மீண்டேன். நீங்கள் எதையோ ஒன்றை அடைய, எதையோ ஒன்றை இழக்க வேண்டும் என்பதுதானே விதி. ஒருவேளை பெற்ற தாயிடம் எனக்குக் கிடைக்காத அன்புதான், என்னை எல்லோரிடமும் நெகிழ்வாக இருக்க வைத்துள்ளதோ என்னவோ. அந்த வலிகளை நான் பின்னாட்களில் கவிதைகளாக எழுதினேன். அதற்கு முன் ஒரே ஒரு கவிதை அந்த மெல்லிய வலியில் எழுதினேன். அது அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருந்த என் இரண்டாவது கவிதைப் புத்தகமான ‘காத்திருப்பு’ கவிதைத் தொகுதியில் “நான் உனக்குப் பாடுகிறேன், நீ பாடா தாலாட்டு” என்று நாட்டுபுறப் பாடல் வடிவில் எழுதப்பட்ட கவிதையாக உள்ளது. ஒரு வகையில் நான் எழுதிய எல்லா வலிகளுக்கும் அதுதான் ஆதார ஸ்ருதி. அந்த அன்பின் நிராகரிப்பே காரணம் என்று இப்போது தோன்றுகிறது.

முறையாக முதல் கவிதை என்று நீங்கள் கேட்டால், என் ஆசிரியர் ஞானசேகரனின் ஆசிரியர் இராம. குருநாதன் அவர்கள் மேற்பார்வையில் என் நண்பர் தென்னிலவன் பொறுப்பாசிரியராக இருந்த, சுட்டி பத்திரிக்கையில் 1986இல் வந்த ‘நேற்றும் இன்றும்’ என்கிற கவிதைதான். அதற்குப் பிறகு எழுதிய கவிதைகள் 1990இல் ‘ஒப்பனை முகங்கள்’ என்ற பேரில் முதல் புத்தகமாக வந்தது பாலகுமாரன் முன்னுரையோடு. இப்போது ஏழாவது தொகுப்பு தயாராகிக் கையில் உள்ளது.

எந்தக் கவிஞனையும் படைப்பாளியையும் உருவாக்க முடியாது. அவன் தன் போக்கில் தானாக வளரும் ஒரு செடி.

உங்கள் கவிதைகளில் உள்ள ஒலி நயத்திற்கு உங்களின் இசைப் பரிச்சயம் எந்த அளவிற்கு உதவுகிறது?

அது தானாக உள் இழையாக அமைந்துவிடுகிறது சில கவிதைகளில். ஒலி நயத்தை யோசனை செய்துகொண்டு நாம் கவிதை எழுத முடியாது. இது மரபுக் கவிதையோ, திரைப்பாடலோ இல்லை. இதற்கு இலக்கண நிர்பந்தங்களோ, சூழலுக்கு எழுத வேண்டிய தேவைகளோ இல்லை. ஆற்றொழுக்காக வருகிற சிந்தனை எழுச்சி நவீன கவிதை. என்ன நமக்குள் இசை ஓடிக்கொண்டு இருப்பதால் ஒலி தானாக வந்து சில கவிதைகளில் அமர்ந்துகொள்கிறது. இசை நம் கவிதைக்குக் கொடுக்கும் ஒரு நல் நல்கை அது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.

மரபுக் கவிதைத் தொகுதிகளில் உங்கள் மனதிற்கு மிக நெருக்கமானது எது? ஏன்?

கம்பராமாயணம். அதைப் படிக்காதவரை கவிஞரே இல்லை என்று நாம் சொல்லிவிடலாம். அது நமக்குக் கிடைத்த பெருநிதியம். நம் கவிப் பாட்டனின் சொத்து அல்லவா அது. அந்த காலத்தில் எங்கள் அசிரியர்கள் அந்த பாடல்களை எல்லாம் விருப்பம் வரும்படி உணர சொல்லிக் கொடுத்தபோது அந்த கவிதைகள் தந்த சந்தோஷத்துக்கும் ஆச்சர்யத்துக்கும் அளவே இல்லை. நாம் இப்போது அதைப் பேசப் புகுந்தால் நேரம் காணாது.

இப்போது இருக்கிற கவிஞர்களில் மரபுக் கவிதைகள் என்று கேட்டால் நான் கவிஞர் சிற்பியின் மரபுக்கவிதைகளைச் சொல்வேன். அது மிகவும் பிடித்துப்போய் அவரது மூன்று மரபுக் கவிதைகளுக்கு மெட்டமைத்துள்ளேன். அதற்குப் பிறகு மரபின் மைந்தன் முத்தையாவின் மரபுக் கவிதைகள். முத்தையா அந்தக் கவிதைகளைச் சொல்லி நாம் கேட்கவேண்டும். அந்த மொழிப் பிரவாகமும் ஓசை நயமும் நம்மை எங்கோ ஒரு அலாதி உலகில் கொண்டு போய் நிறுத்தும். அது ஒரு அனுபவம்.

மனதில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பைச் சரியான வார்த்தைகள் வராததால் கவிதையாக எழுத முடியாமல் போன அனுபவங்கள் உண்டா? அதுமாதிரியான கையறு நிலையை எவ்வாறு கடப்பீர்கள்?

இருக்கும் தானே. அது எல்லா கவிஞர்களுக்கும் இருக்கும் அல்லவா. அந்த உள்ளடக்கங்களை நான் உரைநடையில் கடந்துவிடுவேன். கட்டுரை, கதைகளில் மட்டுமில்லாமல் சிலசமயம் அவை எனக்கு மெட்டமைப்பிலும் வசப்பட்டுவிடும்.

உங்கள் காதல் கவிதைகளில் வரும் ஜானு யார்… என்று நாங்கள் கேட்கமாட்டோம்! உங்கள் மனதில் உருக்கொண்ட காதலின் ஒரு பெயராக அது இருக்கலாம். ஜானு உருவான கதையையும் அவருடன் காதலில் விழுந்த கதையையும் சொல்லுங்களேன்.

எதிர்பால் ஈர்ப்பு நிறைந்த அந்தப் பருவங்களில் எழுதியதை, நம்மை விரும்பியவர்களுக்காக எழுதியதை, நண்பர்களுக்காக இரவல் உணர்வுகளை உள் வாங்கி எழுதியதை விட்டுவிட்டுப் பார்த்தால் – வெஃகல் நம்மை நேருக்கு நேர் தாக்கும்போதுதான், கவிதையில் அதன் உக்கிரத்தை நாம் உணர முடியும். நங்கூரமாக அந்த அன்பு நமக்குள் இறங்கிய பிறகு, ஐயோ! என்ன என்ன விதமாகப் பாடாகப்படுத்தி எடுக்கும். உண்மையான அன்பு அப்படித்தான் அடிபட்டு அடிபட்டு வதியழியும். அது தொண்டையில் மாட்டிய உவா முள். ஆயுள் பரியந்தம் அது உள்ளேயும் போகாது. வெளியேயும் வராது. சன்னமாக உங்களைக் குத்திக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அந்த வலி உங்களுக்குப் பழக்கமாகி இத்துடன்தான்டா நம் வாழ்வு என்று ஏற்றுக்கொண்டுவிடும். ஒரு வகையில் அன்பு என்பது என்ன. விரும்பிய ஜீவன் முன் கரம் கூப்பும் சரணாகதி. நிபந்தனை இன்றி விட்டுத்தருதல். மன்னித்தல். மறுபடி மறுபடி மன்னித்தல். இதெல்லாம் வசனமாகக் கேட்க நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு நாம் அடைகிற வலி அசாதாரணமானது. சந்தோஷமே இல்லையா இருக்காதா என்று கேட்டால், இருக்கும் அது எப்படி இல்லாமல் இருக்கும். அது க்ஷண நேரத்து மின்னல் போல் வந்து போகும். அந்த க்ஷண நேரத்து மின்னலுக்குத்தானே இவ்வளவும்.

லாக்டவுனை ஜானு எவ்வாறு எதிர்கொண்டார்? 🙂

ராட்சஷி. அவளுக்கு என்ன. நித்ய சூலாயுத சம்ஹாரிக்கு விடுமுறை உண்டா என்ன. லாக்டவுன் எல்லாம் அவளுக்கு ஏது. நாம் இருக்கும்போது அவள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ள விடமாட்டோமே. நாம் எதற்கு இருக்கிறோம். எந்த ஒன்றிலும் திருப்தியும் மகிழ்வும் கொள்ளாத அவளால் எல்லா விதமாகவும் வதைபடத்தானே நாம் இருக்கிறோம்.

எத்துயர் வரினும் வாழ்வைக் கடக்க சில சின்ன சின்ன அற்புதங்கள் காத்திருக்கின்றன உங்கள் கவிதைகளில்… இது எப்படி உங்களுக்குச் சாத்தியப்படுகிறது?

நம்பிக்கையால்தான். எல்லா துயரும் போகும் என்று நம்பி நம்பி எப்போதோ கிடைக்கிற ஒரே ஒரு சின்ன அரிசி மிட்டாயில், ஒரு தேன் மிட்டாயில், அந்த ருசியில், சில துயர்களை மறக்க யத்தனிக்கிறோம். தூங்கும் குழந்தையின் சிரிப்பு போல எப்படியோ ஒரு புன்னகை பூத்துவிடுகிறது இல்லையா. அதுதான் அப்படி நிகழ்த்துகிறது என்று நினைக்கிறேன். எந்த அனாதரவான பெருங்கடலிலும் ஏதோ ஒரு மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டேதான் அவ்வளவு தூரம் நீந்தி நீந்தி வருகிறோம். அந்தப் பயணத்தில் நாம் கண்டு அனுபவித்ததைக் காட்சிக்குத் தருகிறோம். சில சமயம் வாசகர்கள் நேரில் மனப்பாடமாக நம் கவிதைகளைச் சொல்லிக் கேட்கும்போது ஐயோ! இது போதும்! என்று இருக்கும். அதுவும் இந்தத் தலைமுறையில் இருந்து அப்படிக் குரல்கள் கேட்டால் எப்படி இருக்கும் பாருங்கள்.

ரவிசுப்பிரமணியன்

கல்லூரிகளில் வருகைதரு பேராசிரியர் நீங்கள். இளைஞர்களின் கலை – இலக்கிய ரசனையில் நீங்கள் கவனித்த நம்பிக்கையூட்டும் விஷயம் எது?

இந்தக் கொரோனாவால் வகுப்பே எடுக்க முடியவில்லை. நல்ல ரசனையும் தெரிந்துகொள்ள ஆர்வமும் உள்ள சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும்போது மாணவர்கள் தனியே வந்து அறையில் பேசுவார்கள். அவர்களது தாகத்தை அப்போது தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களை அவர்களுக்கே கண்டுபிடித்துக் கொடுத்து, சரியான வழி காட்ட நல்லாசிரியர்கள் இல்லை. அவர்களுக்கு வருவாய்க்கான ஒரு வேலை இது. ஓரிருவர் தவிர மற்றவர்களுக்கெல்லாம் இதற்கு நேரமில்லை. அவர்களுக்கு வேறு வேறு வேலைகள் இருக்கின்றன. ஏதோ சடங்கில் நாத்திப்பட்டம், மாமன் பட்டம் என்று செய்வது போல் வருடாந்திரக் கல்விச் சடங்குகளைத் தாளில் எழுதிப் பதிவு செய்து சமர்ப்பிக்க, கடனே என்று ஏதோ செய்கிறார்கள். சரியான அர்பணிப்பான ஆசிரியர்கள் இன்றி, எதிர்காலத் தலைமுறை ஒருநாளும் வளம் பெறாது.

இதையும் சொன்னால் நம்ப மாட்டீர்கள். அப்படி நம்பிக்கையூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. கவிதையும் இசையும் என்று ஒரு வகுப்பு. ஒரு மணி நேரம் பேசி, பாடி, கவிதைகள் சொல்லி நடத்திவிட்டு அமர்ந்தேன்.

“ஐயா சொன்னதைக் கேட்டு இப்ப நான் ஒரு முயற்சி பண்ணிருக்கேன். அவர் தந்த உத்வேகம்தான் இது. எதும் தப்பா இருந்தா மன்னிச்சுகங்கய்யா,” என்று சொல்லி என்னைக் கும்பிட்டுவிட்டு, என் சுயவிவரக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து, ஒரு சின்னக் கவிதை எழுதி, அந்த வகுப்பு முடிந்ததும் எனக்கு முன் பாடினார் ஒரு எம்.ஏ. படித்துக்கொண்டிருக்கும் மாணவர். எனக்கோ ஆச்சரியம் தாளமுடியவில்லை. என்னைப் பற்றிப் பாடியது விஷயமில்லை. எவ்வளவு திறமைகள் எங்கெங்கோ இருக்கின்றன பாருங்கள். சொற்ப நேரத்தில் எவ்வளவு செய்ய முடிகிறது அவர்களால். இன்றைக்கும் அந்தத் திறமைகள் உள்ள பிள்ளைகள் நம்மிடம் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட மேலாகவும். ஏனெனில் நமக்குக் கிடைக்காத அறிவுச் செல்வம் எல்லாம் துல்லியமாக அவர்களுக்கு விரல் நுனியில் கிடைக்கின்றன. அவர் பாடி முடித்ததும் அவரை அணைத்துக்கொண்டு கேட்டேன்.

“தம்பி உங்களுக்கு இசை தெரியுமா?”

“இல்லங்கய்யா.”

“அப்ப எப்படி இந்தோளத்துல பாடினிங்க?”

“ஐயா எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாதய்யா.”

முந்தைய பதில்களில் நான் சொன்ன அவநம்பிக்கைக்கு நேர் எதிரான ஒரு விஷயம் இது. இது மாதிரி நிறைய பேர் பற்பல துறைகளில் வர வேண்டுமென்றுதானே நாம் விரும்புறோம். அதுதான், அந்த ஏமாற்றம் தான் நம்மைப் புலம்ப வைக்கிறது.

சங்கக் கவிதைகள் மற்றும் நவீன கவிதைகளுக்கு இசை அமைத்துப் பாடல்களாக்கியுள்ளீர்கள். இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

சங்கப்பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் எல்லோர்க்கும் புரியும் வகையில் இந்தப் பாடல்களைப் பாட முடியுமா என்ற எண்ணம் பலருக்கும் இருந்திருக்கிறது. கேட்பவர்களுக்கு இலக்கியத்தின் மீதான வாஞ்சை கொஞ்சம் இருந்தால் போதும். அதில் சிறு இசை இனிமையைக் கலந்து தமிழ் ருசியோடு சேர்த்துத் தரும்போது பலவிதமாகப் பரிமளித்துவிடுகிறது. இசைக்கு மயங்காத மனம் யாவும் மயங்கும். நடந்ததெல்லாம் நல்வினைதான். அதனால்தான் அவற்றை பதிவும் செய்ய உதவி கிடைத்து மின்னணுத் தளங்களில் உள்ளிடவும் முடிகிறது.

நவீன கவிதைகளுக்கு மெட்டமைத்தது என்பது தனி காரியம். சுஜாதா விஜயராகவன் என்கிற எழுத்தாளர் மூலம் 1997 மற்றும் 2002இல் ஏற்கனவே சில முயற்சிகள் நடந்தன. அவை நாட்டியத்தில் பயன்படுத்துவதற்காகக் கர்நாடக இசைக் கலைஞர்களால் மெட்டமைக்கப்பட்டது. நவீன கவிதைகளுக்கு இசை என்பதை, அதுவும் ஒரு கவிஞனாக, மெட்டு கட்டுபவனாக நாம்தான் தமிழில் முதலில் செய்துள்ளோம்.

2007இல் முதன் முதலில் நகுலன் கவிதைக்கு மெட்டமைத்தேன். அதன் பிறகு இளையராஜா எனது மூன்று கவிதைகளுக்கு மெட்டமைத்தார். இப்போது என். டி. ராஜ்குமார் புதுவிதமாக மெட்டமைத்துப் பாடுகிறார். பொதுவாக, கவிதையைப் பாடும்போது அது வேறுவிதமான அனுபவத்தைக் கொடுத்துவிடும். தன் கவிதையை மெட்டமைக்கக் கூடாது “இழுக்குடைய பாட்டு இசைக்கு நன்று சாலும்” என்று நிர்தாட்சண்யமாக பேசிய ஞானக்கூத்தனே நான் மெட்டமைத்த அவரது ஒரு கவிதையைக் கேட்ட பிறகு, அதைப் பாராட்டி ஒரு அற்புதமான கடிதத்தைக் கைப்பட எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை ‘பேசும் புதிய சக்தி’ இதழில் அவரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையோடு சென்ற ஆண்டு வெளியிட்டிருக்கிறேன்.

இந்திய இசை வடிவங்கள் தவிர்த்து உங்களுக்கு பிடித்தமான இசை வடிவங்கள் (genre) மற்றும் இசைக் கலைஞர்கள் பற்றி சொல்ல முடியுமா?

கென்னிஜி, யானி இவர்கள் இசைக் கோர்வைகளைக் கேட்டிருக்கிறேன். மயங்கியிருக்கிறேன். மற்றபடி எனக்கு யாரையும் தெரியாது. கேட்டதும் இல்லை. பரிச்சியமும் இல்லை.

ஒரு சின்ன rapidfire round! சில ஆளுமைகளின் பெயர்களைச் சொல்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் கற்று கொண்ட விஷயம் அல்லது உங்களின் வாழ்க்கை பார்வையை எவ்வாறு வடிவமைத்தார்கள் என்று சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல முடியுமா?

பாலகுமாரன் – அர்பணிப்பான ஈடுபாடு.

எம்.வி.வெங்கட்ராம் – துயரங்களிலிருந்தும் எப்படித் துளிர்ப்பது.

கரிச்சான் குஞ்சு – வாழ்வே ஒரு விளையாட்டுதான்.

நகுலன் – தனிமையின் ஸ்ருதியிலும் கானம் வரும்.

தி. ஜானகிராமன் – அன்பின் விதவிதமான பரிமாணங்கள்.

மா. அரங்கநாதன் – இடிவிழுந்தாலும் அமைதியாய்க் கடந்து செல். அது நடந்துவிட்டது.

வண்ணதாசன் – எல்லோர்க்கும் தர எதையாவது வைத்திரு.

மீரா – பிறர்க்காகவும் வாழ்.

தேனுகா – கலைகளின் வழி வாழ்வை நேசி.

ஜானு – இன்னும் நீ எவ்வளவு தாங்குவாய் என்று பார்க்கிறேன். (பாவி பாவி)

கலை எந்த விதத்தில் உங்கள் வாழ்க்கைப் பார்வையை வடிவமைத்தது? கலையால் நீங்கள் பெற்றது என்ன?

சலபதி ராவ் இசையில் ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் கண்ணதாசன் எழுதி ஏ. எம். ராஜா, பி. சுசீலா பாடிய “கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்” என்ற பாகேஸ்வரி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடலையே இதற்கு நான் பதிலாய்ச் சொல்வேன், கேட்டுப்பாருங்கள்.

கலையின் வழியேதான் நாம் பல மேன்மைகளை அடைகிறோம். உதாரணத்துக்கு ஒரு விஷயம் நமக்கு எதிராக இருந்தால், அதை உருவாக்கிய எதிராளிக்கும் ஒரு கோணம் இருக்கும். அங்கே நின்று அவனாகவும் நாம் பார்க்க வேண்டுமென்பதை இந்தக் கலை அனுபவம்தான் எனக்குச் சொல்லித் தந்தது. என் நியாயம் எனக்கு. அவனுக்கு வேறு நியாயம் இருக்கக்கூடும் அல்லவா. அதை நாம் ஏற்கிறோம், மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால், அப்படிப் பார்க்க நமக்கு ஒரு பார்வை வேண்டுமே. இதைப் போல் எவ்வளவோ விஷயங்களைக் கலைகள்தான் எனக்குத் தந்தன.

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும். அவமானத்தை, அழுகையை, கேவலை, இழப்பை, நோயை, வலியை, ஒரு மருத்துவனைப் போல, கலையால் சரி செய்துவிட முடிகிறதென்றால் அதைவிட நமக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். சுநாதமாய் இசைக்கப்படுகிற ஒரு தேஷ் ராகத்தை ஓர்மையாக மனம் குவித்து அரைமணி நேரம் கேட்டால் போதும் எனக்கு. அது மேலே சொன்ன எல்லா வலிகளையும் ஒத்தி எடுத்து, துடைத்து வெளியில் போட்டுவிடும். நம்மை நமக்கே புதுப்பித்துத் தந்துவிடும். இதைவிடவும் கலை வேறு என்ன செய்யமுடியும் சொல்லுங்கள். இன்றைய சூழலில் சொன்னால், கலை அந்தராத்மாவின் சானிடைஸர்.


நேர்காணலின் தட்டச்சில் உதவிய நண்பர் வினுதாவுக்கு நன்றி.

பின்னிணைப்பு

இதழ் 14 பிற படைப்புகள்

20 thoughts on “நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்”

 1. ஆவண படங்கள் பற்றிய தற்போதைய நிலை பற்றி, எடுக்க வேண்டிய முறை பற்றி… அழகாக சொல்லி உள்ளார்… 70 களில் படம் பார்த்துவிட்டு … அவர் அம்மாவிடம் கதையை விவரிக்கும் அந்த நிகழ்வை… அப்படியே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்.. அந்த காலத்து கற்பனை உணர்வை… இந்த காலத்தில் எளிதாக கிடைக்கும் இந்த நவீன டிஜிட்டல் கருவிகள்… மொத்த மாக உருவி எடுத்து செல்கின்றன.. என்பதை உணர முடிகிறது. அருமை நன்றி

  1. வணக்கம் கிருஷ்ணமூர்த்தி சார். நாம் இழந்த எவ்வளவோ விஷயங்களில் இதுவும் ஒன்றில்லையா சார். நன்றி சார்.

  1. அப்படில்லாம் இல்லை அருள். இயற்கை இதற்காக இப்படி சமைத்து தயார் செய்திருக்கிறது போலும் அவ்வளவு தான்.

 2. தன்னுடைய கவிதையை வைரமுத்து விற்கு டைட்டிலாக கொடுத்தது உங்களின் அடக்கத்திற்கு எல்லையே இல்லை என்பதை காட்டுகிறது… இதுபோன்ற பல டைடில்கள் நீங்கள் நிறைய கலைஞர்களுக்கு கொடுத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்… தங்களின் அனுபவங்களும் சாதனைகளும் பார்க்கும் போது இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு எளிய நேர்மையான நபர் என்று என்ன தோன்றுகிறது

  1. வணக்கம் மகேந்திரன்.
   சிலது கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்பட்டு விடுகிறது. அதிகாரத்தால், திமிரால், பணத்தால் இப்படி பலவைகளால். அதில் இதும் ஒன்று. அன்பின் மிகுதியால் நீங்கள் எதேதோ சொல்கிறீர்கள் நன்றி மகேந்திரன்.

 3. மிகச் சில மாதங்களுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இவரைப் பற்றி மிக உயர்வாகச் சொல்லி அறிமுகப்படுத்திய நண்பர் திரு ரவிசுப்பிரமணியன் அவர்கள். தொலைபேசியில் பேசிய பொழுதே மற்றவர்களை மதிப்பதில் முன்னுதாரணமாக திகழ்பவர் என அறிய முடிந்தது. நேர்காணலில் தனது விரிவான அனுபவப் பகிா்வுகளை அழகாக எடுத்துரைத்துள்ளார்.

  “பல மனிதர்களின் நல்லதும் கெட்டதுமான அனுபவங்களிலிருந்து நான் கற்றதையே அவர்கள் வாழ்வின் பக்கங்கள் வழியே உங்களுக்கும் கை மாற்றித் தர விரும்புகிறேன்”..”குறைவான நேரத்தில், அதிகபட்சமான விவரத்தை சுவாரஸ்யமாகச் சொல்வதுதான் மிகப் பெரிய சவால்”.. ஆவணப் படங்கள் மூலம் பலரை படமாக்கியதை ரத்தினச் சுருக்கமாகச் சொன்ன இந்த இரண்டே வரிகளில் மொத்த அனுபவத்தின் சாரமும் அடங்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. 1963ல் பிறந்தவர் நான் 1961 ஆக சமகாலத்திய நண்பரின் வானொலி, திரைப்பாடல்கள், திரைப்படங்களின் ரசனைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

  இந்த நேர்காணலின் வாயிலாக அவரின் யு டியூப் சேனலின் இணைப்பு அறிந்தது மிக்க மகிழ்ச்சி. அதில் திருவாளர் மா.அரங்கநாதன் குறித்த நேர்காணல் பார்த்தேன். மிக அற்புதமாக வந்திருக்கிறது.

  என் இரண்டாவது மகள் வீடியோ எடிட்டிங் என்பதில் இயல்பாக ஆர்வம் ஏற்பட்டு, கற்றுக் கொடுக்கும் காணொலிகள் மற்றும் அவளாக மேற்கொண்ட செயல்களின் அனுபவங்களினால் கற்றதை செயலாக்குவதை அருகிலிருந்து பார்த்து ரசித்திருப்பதால் (வெறும் ஒன் பிளஸ் கைபேசி புகைப்படக் கருவி மற்றும் தரமான மைக் ஒன்றின் மூலம் அவள் பாடும் பாடல் ஒலியைத் தனி டிராக்காகவும், அதற்கான காட்சிகளை தனி டிராக்காகவும் பதிந்து கொண்டு) (தற்போது ஆப்பிள் மேக் புக் கணிணிலியே இதற்கான செயலி கிடைக்கிறது) கடந்த ஓரிரு வருடங்களில் பார்த்ததால், காட்சியமைப்புகள் துல்லியமாக கவித்துவமாக வருவதை ரசிக்க முடிகிறது. அந்த வகையில் திரு ரவி அவர்களின் காட்சிகள் படப்பிடிப்பு, அவற்றை எடிட்டிங் செய்த விதங்கள் மிக அற்புதமாக இருக்கிறது.

  நேர்காணலில் ஏராளமான விபரங்களைச் சொல்லியுள்ளார். நேர்காணல் மேற்கொண்டவரும் அவரைப் பற்றி நன்கு அறிந்து நுணுக்கமான கேள்விகளை முன் வைத்துள்ளார். வாழ்த்துக்கள்

  1. வணக்கம் சம்பத்.
   நான் எளியன். அன்பினால் சொல்லப்பட்ட உங்கள் தகுதியுரைகளுக்கு தக்கவனாய் என்னை இனி ஆக்கிக்கொள்கிறேன்.

   ஆவணப்படங்கள் குறித்த உங்கள் அபிப்ராயங்களுக்கு
   என் வந்தனங்கள்.

   உங்கள் மகள் எடுத்த வீடியோக்களைப் பார்த்தேன். மகிழ்ச்சி.
   குறைந்த பட்ச வசதிகளை வைத்துக்கொண்டு நன்றாக எடுத்துள்ளார். அவருக்கு என் வாழத்துக்கள் சம்பத்.

 4. வாழ்த்துகள்.
  இவரைப் பற்றி ஒரு குறும்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
  மற்றவர்கள் கவிதை எழுதுவார்கள்.
  இவர் பேச்சே கவிதையாக உள்ளது.
  சிந்தனையில் தெளிவு.
  கருத்தில் நேர்மை.
  தொழிலில் தீவிரம்.
  குணத்தில் அடக்கம்.

  இவர் என் நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  இதன் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  மரு. த.ரா. சுரேஷ்.

  1. உங்கள் அருங்குணமே எல்லோரையும் கொண்டாடுவதுதானே சுரேஷ். எவ்வளவு பெரிய படிப்பை படித்த மருத்துவராக இருந்தும் எத்தனையோ சேவைகளை செய்த பின்னும் உங்களிடம் காணும் அந்த எளிமையும் மென்மையும் அமரிக்கையும் வணங்கத்தக்கது. நானும் உங்கள் நண்பன் என்பதில்
   உவகைகொள்கிறேன். நன்றி சுரேஷ்.

 5. நீண்ட நாட்களுக்குப்பிறகு உண்மையான ஒரு நேர்காணலை பார்த்த உணர்வு
  ரவியின் கவிதைகள் என் ரசனையிலிருந்து
  மாறுபட்டவை என்றாலும் இந்த நிஜமான மனிதனின் உணர்வுகளை படித்துப்பத்திரப்படுத்த நினைப்பேன்

  1. நன்றி ஜெயந்தா.
   96லிருந்து உங்கள் மாறா அன்பை அப்படித்தான் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

 6. இந்த நேர்காணல் ஒரு முக்கியமான ஆவணம். ரவி சுப்ரமணியனைப் பற்றிய ஆவணப்படத்தை யார் எடுக்கப் போகிறார்களோ?

  1. உங்கள் அபிப்ராயங்களுக்கு என் வந்தனங்கள் பாஸ்கர் எஸ் அய்யர்.
   நாம் எடுக்க வேண்டியவர்கள் தானே நிறைய இருக்கிறார்கள்.
   நன்றியும் அன்பும் பாஸ்கர்.

 7. ஒரு கல் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு அழகிய சிலையாக (கவிஞராக) ஆக்கிக்கொண்ட சுயசரிதை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை இதுவே கவிஞர்
  ரவிசுப்ரமனியன். “எல்லாம் செயல் கூடும்”
  வாழ்த்துக்கள்
  அன்புடன் வேலப்பன்.

  1. அண்ணா வணக்கம்.
   ஆயிரம் சமூக சேவைகளை தன்னலம் கருதாது, வெளியில் தெரியாது செய்யும் நீங்கள்
   எப்போது கவியானீர்கள். நல்லோர் வாக்கு பலிக்கும். நன்றி அண்ணா நன்றி.

 8. இலக்கிய கவிதை உலகில் நான் பெரிதும் மதிப்பவர்களில் ஒருவரான திரு. ரவிசுப்பிரமணியன் அவர்களுடனான நேர்காணல் அரூ மின்னிதழில் மிகச் சிறப்பாக வந்திருப்பது நிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த நிறைவுக்கு முதல் காரணமாக அமைந்தது இந்த நேர்காணல் அவரை பற்றிய ஒரு முழுமையை எனக்குக் கொடுத்திருக்கிறது என்பதே. மிகச் சிறப்பான பல கேள்விகள் வெவ்வேறு கோணங்களிலிருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவரை பற்றிய ஒரு ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை அவரே தன் நேர்காணலில் கொடுத்துள்ளார் என்றே தோன்றியது. அவர், ஆவணப்படம் என்ற கலையைப் பற்றிப் பேசும்போதும், அந்த ஆளுமைகளைப் பற்றிப் பேசும்போதும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு திடமான பார்வையை முன்வைக்கிறார். “இந்த வாழ்வை, அதன் மேன்மையை, அதன் வரலாற்றை, வலியைச் சொல்வது அவர்கள் கடந்துவந்த பாதைகள்தானே.” என்று அவர் பிற ஆளுமைகளைச் சொல்லும்போது அவர் கடந்து வந்த பாதைகளையும் சேர்த்து நான் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று தெரிகிறது. ஒரு இலக்கிய ஆளுமையைப் பற்றிய ஆவணப்படம் கொடுக்கும் விளைவை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இந்த நேர்காணலில். அவருடைய “தாமரை” குறும்படம் பார்க்க மிக ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

  1. அன்பு வெங்கட்.
   ஒரு சிறந்த எழுத்தாளாரான நீங்கள், சக எழுத்தாளர்களை எப்படியெல்லாம் பலபட சொல்லி உயர்த்துகிறீர்கள். உங்கள் மனசு அப்படி. என்னால் ஏற்பட்ட ஒத்துழைக்காத தொந்தரவுகளை பொருட்படுத்தாது செப்பம் செய்து திருத்தமாக வெளியிட்டுள்ள அரூ குழுவினரின் அயராத உழைப்புக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். தாமரை வந்ததும் உங்கள் பார்வைக்கு வந்துவிடுவாள். அதற்குத்தான் அவளும் காத்திருக்கிறாள். நன்றி வெங்கட்.

 9. ஆவணப்பட இயக்குனரின்…… அருமையான ஆவணம்…. 🙏

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்