இணை

17 நிமிட வாசிப்பு

“மகிழ்ச்சியான மனித வாழ்க்கையின் ரகசியமே இதில் இருக்கக்கூடும்,” என்றான் லென்.

“மனித வாழ்வு மட்டுமா? முதலில் இந்த அதிசய நிகழ்வைக் கண்டு பிடித்ததே அணுத் துகள்களில்தானே? உயிர்கள் உயிர் அற்றவை என்ற பாகுபாடு இல்லாமல், பிரபஞ்ச ரகசியமே இருக்கக் கூடும்,” என்றேன் நான்.

“ராம், இருக்கட்டும், மனிதர்களைப் பரிசோதனை செய்தால் போதும், யோசித்துப் பார், எல்லா உயிர்களின் வாழ்க்கை நோக்கமே சரியான துணையைத் தேடி. அதன் மூலமாக அடுத்த தலைமுறையை உருவாக்குவதுதானே. ஆனால் அதில் எவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள்! ஒவ்வொரு மனிதருக்கும் இயற்கையே உருவாக்கிய மிகச் சரியான துணையைக் கண்டுபிடிக்க முடியுமானால், வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்? அதன் வணிகச் சாத்தியங்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவு மகத்தானவை,” என்றான் ச்சக். சார்ல்ஸ் என்ற பெயரை உடைய அமெரிக்கன், கூப்பிடுவது ச்சக் என்று ஒரு அழுத்தமான ச் சுடன். எப்போதும் தனது பெரிய உருவத்தை நாற்காலியில் திணிப்பதனாலோ என்னவோ, பேசும்போது மூச்சு இறைக்கும்.

“நாம் கண்டுபிடிப்பதைப் பொறுப்பாகக் கையாள வேண்டும்,” என்றான் லென், கூடவே தனியாக எனக்கு மட்டும் அனுப்பிய செய்தியில். லென்னுடைய பெரிய மூக்கு பேசும்போது விரிந்து சுருங்குவது வேடிக்கையாக இருக்கும். தான் நாங்கள் ஹோலோ கான்ஃபரன்சில் முப்பரிமாணத்தில் எல்லோரையும் பார்த்துக்கொண்டே அவரவர் நாட்டிலிருந்தே பேசிக் கொண்டிருந்தோம்.

“இந்த அமெரிக்கர்களுக்கு எல்லாமே பணம், வணிகம்தான். நீயாவது எனக்கு ஆதரவாக இருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்” என்றான். எங்கள் குழுவில் லென் ஐரோப்பிய யூனியனின் பிரதி நிதி. லியனார்ட் என்ற பெயர், கூப்பிடுவது லென். க்வான்டம் இயற்பியல் விஞ்ஞானி. தீர ஆலோசிக்காமல் முடிவுக்கு வர மாட்டான். அவனுக்கும் அமெரிக்க ச்சக்குக்கும் எப்போதும் கருத்துச் சண்டை, அதில் நான்தான் மத்தியஸ்தம். எங்கள் குழுவில் ஜப்பானியப் பிரதிநிதி அகிரா ஸான். அவருக்கு நிறைய கருத்துக்கள் இருந்தாலும், யோசித்து ஆங்கிலத்தில் ஒரு முழு வாக்கியத்தைப் பேசுவதற்குள், நாங்கள் அடுத்த விவாதத்தில் இருப்போம். இறக்கை மடித்துத் தலையைச் சாய்த்து கண்மூடித் தூங்கும் கண்ணாடி அணிந்த வெண் கொக்கு போல எப்போதும் இருப்பார். அவர்தான் எனக்கு ஆதரவாகப் பேசினார்.

அகிரா சான், “மிருகங்கள்,மரம், செடி எல்லாம் இயற்கைதானே, பிரபஞ்ச விதிகள் அவற்றுக்கும் உண்டு அல்லவா? நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள், டோக்கியோவில் ஒரு நாய் தன்னுடைய எஜமானன் மேல் அவ்வளவு பாசமாக இருந்தது என்று, அந்த நாய்க்குச் சிலைகூட வைத்திருக்கிறோம், அந்த மாதிரி உறவு மனிதனுக்கும் நாய்களுக்கும் ஆயிரக்கணக்கான வருடங்களாக உண்டு. ஒரு வளர்ப்பு நாய்க்கு எது துணை என்று நம்முடைய ப்ராஜெக்டில் பார்க்கலாம். ஒருவேளை வளர்ப்புப் பிராணிகளுக்கு அதன் எஜமானன்கூடச் சரியான துணையாக இருக்கலாம், அதனாலேயே இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்,” என்று நீளமாகப் பேசி, களைப்பு தீரத் தண்ணீர் குடித்தார்.

“மிருகங்களின் எண்ணங்களைப் பதிவு செய்ய, கண்காணிக்கத் தடை எதுவும் இல்லையே?” என்றான் லென். “எங்கள் ஐரோப்பிய யூனியனின் தகவல் ரகசியச் சட்டங்கள் மிகக் கடுமையானவை. எழுபது வருடங்களுக்கு முன் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே, இணையம் வந்து தகவல் தொடர்பு முன்னேறி, எல்லாமே ஆன்லைன் என்று ஆக ஆரம்பித்தபோதே, முன்னெச்சரிக்கையாகத் தனி மனிதத் தகவல்களைப் பாதுகாக்க விரிவான சட்டங்களை இயற்றி இருக்கிறோம்.”

“எனக்குத் தெரிந்த வரை மிருக வதை தொடர்பாகத்தான் சட்டங்கள் இருக்கின்றன, அவைகளின் எண்ணங்களைப் பதிவு செய்து கண்காணிக்கத் தடை எதுவும் இல்லை,” என்றேன்.

அகிரா சான் உற்சாகமாகி, “அப்படியே ஒரு போன்ஸாய் மரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றுக்கும் உயிர் உண்டு என்று உங்களுடைய நாட்டில் டாக்டர் போஸ்தானே நிரூபித்தார்? எங்கள் பாரம்பரியத்தில் எப்போதுமே எல்லாவற்றையும் இயற்கையுடன் இணைத்துதான் பார்ப்போம்.”

ச்சக், கால விரயம், பண விரயம், இதெல்லாம் வேண்டாம் என்று எனக்குத் தனியாகச் செய்தி அனுப்பினான். ஆனால் லென் அதற்குள் “செய்யலாம், இந்த மாதிரி சர்வதேச முயற்சியில் முடியா விட்டால், வேறு எப்போது செய்ய முடியும்?” என்று சாதகமாகப் பேசினான்.

கூடவே, “மிருகங்களை எடுத்துக்கொள்வது குற்றம் இல்லை, ஆனால் நாம் எப்படி மனிதர்களைப் பரிசோதனை செய்வதை அரசாங்க அனுமதி இல்லாமல் செய்வது?” என்றான்.

ச்சக், “எங்கள் நாட்டில், இன்னும் நிறையச் செய்திருக்கிறோம். எல்லாமே ரகசியமானவை, இதற்காவே தனியான துறை உண்டு. நேரடியாக ப்ரெசிடென்ட் ஒப்புதல் கொடுத்த ப்ராஜெக்டுகள்,” என்றான் பருத்த கை விரல்களை அசைத்து.

லென், “ஐரோப்பிய யூனியனில் நாங்கள் அப்படி எதுவும் செய்வதில்லை, இந்தப் பரிசோதனைக்கே எப்படி ஒப்புதல் வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றான்.

அடுத்தது ஒவ்வொரு பங்கேற்கும் நாடு அல்லது பிராந்தியத்துக்கும் பிரதிநிதியாக நபர்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்தோம். மிக நீண்ட விவாதங்கள் நடந்தன. ச்சக் அமெரிக்காவின் பிரதிநிதியாக இரண்டு பேர் வேண்டும் என்று ஆரம்பித்தான். மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தால், இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படும். ஆனால் ஆராய்ச்சிக்கு எவ்வளவு பணம் பங்களிப்பு என்று பார்த்தால் அமெரிக்கா முதலில் வரும். விவாதம் செய்து அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகப் பிரதிநிதியைத் தேர்வு செய்ய முடிவு செய்தோம்.

ஆக அமெரிக்கவிலிருந்து யேல் பல்கலைக்கழகத்தில் படித்து பெரிய சட்ட நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கும் ஒரு பெண் வழக்கறிஞர், ஒரு ஹாலிவுட் நடிகன், ஜெர்மனியிலிருந்து ஃபார்முலா ஒன் பந்தயக் கார் ஓட்டுநர், ஃப்ரான்சிலிருந்து ஒரு ஓவியன், ஜப்பானிலிருந்து ஒரு வளர்ப்பு நாய், போன்சாய் மரம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. அடுத்தது இந்தியாவின் பங்கு முடிவு செய்ய வேண்டும்.

ச்சக், “இந்தியாவிலிருந்து யாராவது ஒரு குருவை சேர்த்துக்கொள்ளலாமா? நீங்கள்தான் யோகா, தியானம் என்று இந்தக் காலத்திலும் ஆன்மீகப் பாதைக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள்,” என்றான். மற்றவர்கள் பேசாமல் இருந்தார்கள்.

நான், “ச்சக், இன்னும் இந்தியா என்றால் மேற்கத்திய நாடுகள் யானை, பாம்பாட்டி என்றுதான் நினைக்கிறீர்கள். மிக வருத்தமாக இருக்கிறது. நாங்களும் பக்கத்து நட்சத்திரங்களுக்கு மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறோம், சந்திரனில் காலனி அமைத்திருக்கிறோம், உங்கள் நாட்டில் எல்லா தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தலைவர்கள் இந்தியர்கள், சிலிகான் பள்ளத்தாக்கில், ஸ்டார்ட்டப் நடத்தும் நிறுவனர்களில் பாதிக்குமேல் இந்தியர்கள், ஆனாலும் உங்களுக்கு இந்தியாவிலிருந்து தாடி சாமியார்தான் வேண்டும்,” என்றேன்.

ச்சக், “ராம், இல்லை, மன்னித்துவிடு, எங்களுக்கு உண்மையாகவே இந்தியாவிலிருந்து ஒரு குரு வேண்டும். அப்போதுதான் நம்முடைய ப்ராஜெக்ட் பன்முகத்தன்மையுடன் நிறைவாக இருக்கும். உங்கள் நாட்டில் யோகிகளுக்கு மந்திர சக்திகள் உண்டாமே, அவர்கள் எல்லாம் துறந்தவர்களாமே, அவர்களுக்குத் துணை யார், என்னதான் ஆகிறது பார்க்கலாம் என்ற ஆர்வம்தான்,” என்றான். லென்னும், அகிரா சானும் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்.

நான் கவனமாகச் சிந்தித்தேன். அவன் சொன்னது உண்மையா அல்லது மிகத் திறமையான கிண்டலா என்று.

ச்சக், “ராம், நீ சொன்னதும் சரியான வாதம்தான், சிலிகான் பள்ளத்தாக்கிலிருந்து கூடவே ஒரு இந்திய ஸ்டார்டப் நிறுவனரையும் சேர்த்துக்கொள்ளலாம்,” என்றான். இப்படித்தான் விட்டுக் கொடுத்து, திறமையாகப் பேசி ஒப்புக்கொள்ள வைத்துவிடுவான்.

லென்னும் அகிரா சானும் ஆமோதித்தார்கள்.

“சரி, உங்கள் விருப்பப்படியே ஆகட்டும், இந்திய குருவைத் தவிர, ஒரு நிறுவனரையும் சேர்த்துக்கொள்ளலாம்” என்று சன்னிவேலிலிருந்து இப்போது பில்லியன் டாலர் நிதி பெற்ற ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தைச் சொன்னேன். ச்சக் ஒத்துக்கொண்டான்.

“வேறு ஏதாவது நாடு இல்லை பிரதிநிதி வேண்டுமா?” என்றான் லென். அவன் எங்கே செல்கிறான் எனக்குப் புரிந்தது.

“தற்போதைய புவிசார் அரசியல் நிலைமையில் ரஷ்யாவோ, சைனாவோ சரிப்பட்டு வராது என்று எனக்குத் தோன்றுகிறது,” என்றேன்.

அதைத்தான் ச்சக் எதிர்பார்த்தான். மற்றவர்களை நேரடியாகக் கேட்காமல்

“அப்படியானால், நாம் எல்லோரும் இத்துடன் முடித்துக்கொள்ளலாமா? எல்லா நாடுகளும், எல்லா வகை மாதிரிகளும் ஆகிவிட்டன,” என்று முடித்தான்.

ஆக எங்களுடைய பரிசோதனைக்கு ஆறு மனிதர்களும், ஒரு நாயும், ஒரு போன்சாய் மரமும் முடிவாகின. ஒவ்வொருவருடைய ஒப்புதலும் வாங்குவதே கடினமாக இருந்தது. அமெரிக்கப் பெண் வழக்கறிஞர் மிகச் சிக்கலான ஒப்பந்தம் ஒன்று தயாரித்தார். அவருக்கு ஏதாவது ஆனால் எவ்வளவு மில்லியன் டாலர் என்று. இந்திய யோகி எளிதாக ஒத்துக்கொண்டார். “எண்ணங்களுடன் பரிசோதனையா, நானும் அதைத்தானே பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்,” என்று.

***

இப்படி ஒரு சர்வதேச ப்ராஜெக்ட் ஆரம்பித்ததே ஒரு மிகப் பெரிய விந்தை. தற்போது எல்லா நாடுகளிலும் அரசாங்கம் கவலைப்படுவது இதைப் பற்றிதான். நாடுகளுக்கிடையே பெரிதாகப் போர்கள் எதுவும் இல்லை. போர்கள் உயிர் சேதம், வீண் செலவு என்று மனிதக் குலத்துக்குப் பெரும்பாலும் புரிந்துவிட்டது. ராணுவச் செலவுகளை எல்லோரும் குறைத்துவிட்டார்கள். அப்படிப் போர் செய்தாலும், அவை சைபர் ஆயுதங்கள்தான். எல்லா நாடுகளிலும் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது. பஞ்சம், பட்டினி எல்லாம் இல்லை என்ற நிலை. பெரும்பாலான நாடுகளில் எல்லோருக்கும் அரசாங்கமே கல்வி, மருத்துவச் செலவு இலவசமாகக் கொடுத்தன. ஆனாலும் உலகம் முழுவதும் மக்கள் நிறைவாக, மகிழ்ச்சியாக இல்லை. சமூக நலத் தறைகளின் திட்டங்களில், பட்டியலில் முதலில் இருப்பது மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்பதுதான். அதனால் மேலும் பல நாடுகள் இந்தப் ப்ராஜெக்டில் சேர விருப்பம் தெரிவித்தன. அப்படி ஆரம்பித்த ப்ராஜெக்ட்தான் சர்வதேச அளவில் கூட்டாகச் செய்யலாம் என்று வளர்ந்தது. “ப்ராஜெக்ட் ஹாப்பி” என்று பெயரிட்டோம். நான் நாசாவில் விஞ்ஞானியாக இருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்தவன். என்னுடைய தொடர்புகளினால், நானும் இந்தப் ப்ராஜெக்டில் இணைந்தேன். ஐரோப்பாவும், ஜப்பானும் சேர்ந்தன.

ஆரம்ப நாட்களில் சர்வதேசக் குழுவுடன் வேலையே முன்னகரவில்லை. முதலில் எங்கே ஆரம்பிப்பது என்ன செய்வது என்று ஒவ்வொருவருக்கும் வேறு வேறு கருத்துகள் இருந்தன.

ச்சக், “எல்லோருக்கும் கல்வி, மருத்துவம் தவிர தானாகத் தொழில் நடத்த அரசாங்கம் முதல் பணத்தை வட்டி இல்லாமல் கொடுக்கலாம், ஒவ்வொருவரும் தொழில் அதிபராக ஆகி, தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உண்டாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்” என்றான்.

லென் அதை வலுவாக எதிர்த்தான்.

“மனிதர்களுக்குப் பணம் தவிர இன்னும் நிறைவான தேடல்கள் உள்ளன. எங்கள் ஐரோப்பிய வரலாற்றில் பொற்காலம் என்றால் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மறுமலர்ச்சிக் காலம்தான். இசை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, ஓவியக்கலை, இலக்கியம், எல்லாம் உச்சத்தை அடைந்தன. மக்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள் மறுபடியும் கலை இலக்கியம் எல்லாம் புதுப்பிக்கலாம்,” என்றான்.

“பிரபுக்கள் அப்படி இருந்திருக்கலாம், சாதாரண மனிதர்கள் உணவுக்கு வழி இல்லாமல்தானே புரட்சிகள் எழுந்தன,” என்றேன்.

“அப்படியானால் என்ன செய்யலாம்?” என்றார் அகிரா சான். இப்படிச் சில மாதங்கள் முன்னேற்றம் இல்லாமல் சிக்கி இருந்தோம்.

***

குழுவில் அடுத்த கேள்வி எங்கே பரிசோதனையைச் செய்வது என்று.

ச்சக், ” எங்கள் நாட்டில் நெவடா மாநிலத்தில் பாலை வனத்தில் இந்த மாதிரி பரிசோதனைகளைச் செய்ய தனி ஆய்வு ராணுவ தளங்கள், ஆய்வகங்கள் இருக்கின்றன, அங்கே யாருக்கும் தெரியாமல் பரிசோதனையைச் செய்ய முடியும்,” என்றான்.

லென், ” நம்முடைய பரிசோதனை மிக ரகசியமாகச் செய்ய வேண்டியது. ஏனென்றால் நாம் எழுபது வருடங்களுக்கு முன்பே, இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘டேடா ப்ரைவசி’ சட்டங்களை மீறப் போகிறோம். சில நாடுகளில் அரசாங்கமே பகிரங்கமாக மீறுவதாக ஊடகங்களில் செய்தி வந்தாலும் நாம் அப்படிச் எதுவும் செய்ய முடியாது,” என்றான்.

நான், ” ஒரு பெரும் நன்மை மனிதச் சமூகத்துக்கே கிடைக்கும் சாத்தியம் இருப்பதால், சில சட்டங்களைச் சற்று மீறினாலும் பாதகம் இல்லை,” என்றேன். ச்சக் முழுமையாக ஆமோதித்தான்.

லென் அரைகுறையாக, “பார்க்கலாம், இதற்கு எங்கள் அரசாங்கங்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள்,” என்றான்.

***

மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்யலாம் என்ற விவாதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் திருமணம் என்கிற சமூகப் பழக்கம் நின்று போய், தங்கள் வாழ்க்கைத் துணை என்று தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணுடனோ இல்லை ஆணுடனோ, ஒரினமாகவோ சேர்ந்து வாழ்கிறார்கள். துணையைத் தேர்ந்தெடுக்க நிறைய சிரமப்படுகிறார்கள். டேடிங் ஆப்கள் நிறைய இருந்தாலும், அவை சரியான துணையைக் கண்டுபிடிக்க அவ்வளவாக உதவி இல்லை. பெரும்பாலான ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கை வெற்றி அடையவில்லை. பலர் மனிதர்களுடன் சேர்ந்து வாழாமல் அன்புக்கு ஏதாவது வளர்ப்புப் பிராணியை வீட்டில் வைத்துக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்கள். காமத்துக்கு விலைமனிதர்கள், ரோபோ பொம்மைகள் விர்சுவல் ரியாலிடி என வேறு பல வழிகள் எப்போதும் இருக்கின்றன. கிழக்கு நாடுகளில் இன்னும் திருமணம் என்பது பாதி மக்களின் வழக்கமாக இருக்கிறது. வாழ்க்கைத்துணை என்று தேர்ந்தெடுத்தாலும், அவர்களால் துணையுடன் சில வருடங்கள்கூடச் சேர்ந்து வாழ முடிவதில்லை. உலக அளவில் துணைமுறிவுகள் எண்பது சதவிகிதம் இருக்கின்றன. மறுபடியும் சரியான துணையைத் தேடி மனிதர்கள் உழன்று, ஒரு புதிய துணையுடன் சேர்ந்து சில வருடங்கள் இருக்கிறார்கள்.

இதனால் மனிதச் சமூகத்துக்கே ஒரு நிம்மதியான வாழ்க்கை என்று இல்லாமல் ஆகிவிட்டது. மனிதர்களால் வேறு எந்தத் தொழிலையும் முழுக் கவனத்துடன் செய்ய முடியாமல் போகிறது. யாரைப் பார்த்தாலும் டேட்டிங் ஆப்பை வைத்துக்கொண்டு நாள் முழுவதும் பலருடன் தொடர்பு கொண்டு உறவுகள் உண்டாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எப்போதும் துணை தேடும் தாபம். ஒரு முறை அமெரிக்க ப்ரெசிடென்டே மிக முக்கியமான உலக தலைவர்கள் மாநாட்டில், தான் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் மறந்துபோய்த் தன்னுடைய மொபைல் ஃபோனில் ஒரு டேடிங்க் ஆப்பை நிரடிக் கோண்டிருந்ததை ஒரு பத்திரிகையாளன் படம் எடுத்து வெளியிட்டான். உலகம் முழுவதும் செய்திகளில் அது சில வாரங்களுக்கு ஓடியது. அந்தச் சம்பவம்தான் இந்தப் ப்ராஜெக்டுக்குக் காரணம் என்று அரசாங்க உள் வட்டங்களில் பேச்சு, ஆனால் ச்சக் ஒத்துக்கொள்ள மாட்டான். அவன் சொல்லும் கதை வேறு.

அமெரிக்காவில் ஒரு பாடல் காணொளி ஆல்பம் வெளியானது. அந்தப் பாடல் ஒவ்வொருவருக்கும் மிகச்சரியான துணையைக் கண்டுபிடித்து சேர்ந்து வாழ்ந்தால், வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்க முடியும் என்ற கருத்து கொண்டது. அந்தப் பாடலை எழுதி பாடிய அமெரிக்கப் பாடகி இருபத்தைந்தாவது முறையாகத் துணையை மாற்றியபோது வெளியிட்ட பாடல். அது வைரலாகப் பல மில்லியன் மக்கள் பார்த்து, பகிர்ந்து உலகம் முழுவதும் பரவியது. அதைக் கேட்டு, ஒரு சமூக விஞ்ஞானி இப்படி ஒரு ப்ராஜெக்ட் செய்யலாம் என்று சில நண்பர்களிடம் பேசினார். அவருடைய நண்பர்களில் ஒருவர் அவரை ஒரு செனேட்டரிடம் அழைத்துச் சென்று பேச வைக்க, அவரும் ஆர்வத்துடன், அமெரிக்க அரசாங்க உதவியைப் பெற்றுத் தருவதாகச் சொன்னார். அது சர்வதேச அளவில் விரிந்தது. அப்படியாகச் சரியான துணை தேடுவதை எங்களுடைய ப்ராஜெக்டின் குறிக்கோளாக எடுத்துக்கொண்டோம். ஆனால் எப்படிச் செய்வது என்று தெளிவான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

அடுத்த கூட்டத்தில் நான், “டெக்னாலஜி உதவக் கூடும். ச்சக் உங்கள் நாட்டில்தான் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தகவல்கள் திரட்டி வைத்திருக்கின்றன அல்லவா? அந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு, செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்கள் உருவாக்கிச் சரியான துணையைத் தேடலாம் அல்லவா?” என்றேன்.

ச்சக் துள்ளிக் குதித்தான், “அருமையான யோசனை, ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்களுக்கே தெரியாத அளவில் தகவல்கள் இருக்கின்றன. தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப முன்னேற்றங்களில் இந்த மாதிரி மிகச் சிக்கலான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்,” என்றான்.

லென் முழுதாக மறுத்தான், “என்ன உளறுகிறீர்கள்? தனி மனிதர்களைப் பற்றிய தகவல்களை உபயோகப்படுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது, மனித உரிமைக்கே எதிரானது. நாங்கள் ஒருபோதும் அப்படிப் பட்ட ப்ராஜெக்டில் பங்கு கொள்ள முடியாது.”

“இன்னொரு கோணத்தில் பார்த்தால், மனிதர்களுக்கு வாழ்க்கையில் எல்லாம் எளிதாகக் கிடைத்துவிடுவதால், ஒரு எதிர்பார்ப்பு இல்லை, அடைந்தால் மகிழ்ச்சி இல்லை, அதனால்தான் நிம்மதி இல்லை,” என்றேன்.

ச்சக், “ராம், மறுபடியும் குழப்புகிறாய். நாம் விவாதம் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டோம். ஒவ்வொருவருக்கும் சரியான வாழ்க்கைத்துணை கிடைப்பதில்லை என்றுதானே ஆரம்பித்தோம்? அதற்குத்தானே எல்லாத் தேடல்களும்? எப்படிச் சரியான வாழ்க்கைத்துணையைக் கண்டுபிடிப்பது என்ற பிரச்சனையைக் கவனிப்போம்,” என்றான்.

இப்படிப் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு லென் ஒரு மிகப் புதிய கருத்தை முன்வைத்தான்.

“நாம் துணை என்பதை விட்டு விட்டு, இணை என்ற கோணத்தில் பார்க்கலாமா? இணை என்பது இயற்கை நியதி. ஆனால் ஒவ்வொருவருக்கும் தனக்கு மிகச்சரியான இணையை எப்படிக் கண்டுபிடித்து வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்வது என்பதில்தான் சிரமம்.”

“நீ இணை என்று எதைச் சொல்கிறாய்?”

லென் ஒரு க்வான்டம் இயற்பியல் விஞ்ஞானி, அவன் “இயற்கையில் அணுத்துகள் அளவில் பார்த்தால்கூட இணைத் துகள்கள் உண்டு. ஒரு அணுவில் இருக்கும் எலெக்ட்ரானை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு எலெக்ட்ரானுக்கும் ஒரு இணை எலக்ட்ரான் உண்டு. சென்ற நூற்றாண்டில் க்வான்டம் இயற்பியல் அந்தப் புதிர்களை ஆராய்ந்தது. மிக ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை முதலில் கோட்பாடுகளாக ஆரம்பித்து, பரிசோதனைகளால் நிரூபித்திருக்கிறார்கள்.”

நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். இணைத்துகள் – நாங்கள் இயற்பியல் விஞ்ஞானிகளாக இல்லாமல் இருந்தாலும், ஏதோ மிக வசீகரமான கருத்தாக இருந்தது.

“துகள்களுக்கு இணை என்றால் என்ன? எப்படி இருக்கும்?”

லென் உற்சாகமாக விளக்கினான்.

“ஒரு எலக்ட்ரானை எடுத்துக்கொள்வோம். அதற்குச் சில குணங்கள் உண்டு. க்வான்டம் இயற்பியலில் நாங்கள் அவற்றை நான்காக அளப்போம். உதாரணமாக எலெக்ட்ரிக் சார்ஜ்- உங்க்களுக்கெல்லம் தெரியும், எல்க்ட்ரானுக்கு நெகடிவ் அதாவது எதிர்மறை சார்ஜ். ப்ரோட்டனுக்குப் பாசிடிவ் அதாவது நேர்மறை சார்ஜ். அதே மாதிரி, அந்த எலக்ட்ரான் அணுவில் எந்த முப்பரிமாண பிரதேசத்தில் இருக்கிறது என்று இன்னொரு அளவு. ஒவ்வொரு துகளுக்கும் சார்ஜ் மாதிரி இன்னும் மூன்று குணங்கள் உண்டு. இந்த நான்கில் என்னுடைய கருத்துப்படி மிக முக்கியமானது ஸ்பின் எனப்படும் சுழல்.”

“சுழலா? அப்படி என்றால்?”

“ஒவ்வொரு துகளுக்கும் ஒரு சுழற்சி உண்டு, கிரகங்கள் தன்னுடைய அச்சில் சுழல்வது போல. அந்த சுழற்சிக்கு திசையும் வேகமும் வேறு படும்.”

“சரி, சுழலுக்கும் நம்முடைய பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?”

“ஒரே அணுவுக்குள் பல துகள்கள் இருந்தாலும், அவை ஒரே இடத்தில் இருந்தாலும்கூட, அவற்றின் குவான்டம் எண்கள் மாறுபடும். முக்கியமாக சுழல் எண். சொல்லப் போனால், துகளுக்கு ஒரு அடையாளம் கொடுப்பதே சுழல்தான்.”

“அதற்கும் இணைக்கும் என்ன தொடர்பு?”

“பொறுமை, நிதானமாகக் கேளுங்கள். நான் சொல்லப் போவது அறிவியலில் இன்னும் விளக்கப் படாத, புரியாத புதிர்களில் ஒன்று.”

“நாங்கள் மேலே என்ன சொல்லப் போகிறான் என்று காத்திருந்தோம்.

“ஒவ்வொரு துகளுக்கும் ஒரு இணை இயற்கையிலேயே உண்டு.”

“இணை என்று எந்த விதத்தில் சொல்லுகிறாய்?”

“சென்ற நூற்றாண்டில் குவான்டம் அறிவியலில் ஆதி விஞ்ஞானிகள் பரிசோதனைகளில் சில விசித்திரமான நிகழ்வுகளைக் கண்டார்கள். அதாவது, ஒரு அணுத்துகளுக்கு ஏதாவது செய்தால், இன்னொரு துகளுக்கு எதிர் வினை உண்டாயிற்று. அந்தத் துகள்களை மின்காந்தப் புலங்களை வைத்துப் பிரித்து ஒன்றிலிருந்து இன்னொன்று தனித்து இருந்தாலும் அதிசயமான விளைவுகள் இருக்கின்றன. அவை இரண்டுக்கும் நடுவில் எப்படிப்பட்ட தகவல் தொடர்பு என்பது இன்னும் விளக்க முடியாத புதிர். அப்படி ஒரு தொடர்பு இருந்தாலும்கூட, அந்தத் தொடர்பு ஓளியின் வேகத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும், அது சாத்தியமில்லை. அதனால், இயற்கையே உருவாக்கிய இணை, இரண்டு துகள்களும் இயற்கையிலேயே ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட்டவைகள் – “என்டாங்கிள்டு” என்று கொள்ளுகிறோம்.”

“ஆச்சரியமாக இருக்கிறதே? இன்னும்கூட அறிவியலால் விடுவிக்காத புதிரா? இயற்கை போட்ட முடிச்சு என்றால், நாங்கள் கர்ம வினை என்று சொல்லுவதைப் போல இருக்கிறதே! ஆனால் அறிவியலால் விளக்க முடியவில்லையா?”

“விளக்க முடியாவிட்டால் என்ன, நம்முடைய சிக்கலுக்கு ச்சரியான தீர்வாக இருக்கிறது அல்லவா?”

நிறைய யோசித்த பிறகு ஒத்துக் கொண்டோம்.

ச்சக் ஆரம்பித்த துணையிலிருந்து இப்போது லென் சொல்லும் இணை என்ற கருத்துக்கு வந்திருந்தோம்.

“ஒரு துகளுக்கும் அதன் இணைத் துகளுக்கும் என்ன வேறுபாடு என்ன தொடர்பு? ஏதோ சுழல் என்று சொன்னாயே? மறுபடியும் விளக்க முடியுமா?”

லென் பொறுமையாக விளக்கினான். “எல்லா க்வான்டம் எண்களும் ஒன்றாக இருந்தாலும், துகள் சுழலும் திசை இணைக்கு நேர் எதிராக இருக்கும். அதாவது ஒன்று வலமாகச் சுற்றினால் இணை இடமாகச் சுற்றும்.”

“ஆச்சரியமாக இருக்கிறதே! இணை என்றால் இரண்டும் ஒன்றாகச் சுற்றும் இருக்கும் என்று நினைத்தேன்.”

“இல்லை, அதுதான் இயற்கையின் புதிர். எதிர்tஹ் துருவங்கள் ஈர்க்கும் என்பது போல என்று வைத்துக்கொள்ளலாம்.”

எப்படியோ இந்தக் கருத்து மனிதர்களுக்கும் பொருந்தும் என்று உள்ளுணர்வாகத் தோன்றியது. அடுத்தப் பிரச்சனை மனிதர்களுக்குச் சுழல் என்றால் என்ன, அதை எப்படி அணுகுவது என்று.

எனக்கு ஒரு விடை தோன்றியது. என்னுடைய வாதத்தைக் கவனமாக முன்வைத்தேன்.

“லென், நீ சொல்லுவதைப் பார்த்தால், ஒரு துகளுக்கு அடையாளம் கொடுப்பதே சுழல் அல்லவா?”

“ஆமாம், மற்ற எல்லா குணங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு இணைத் துகள்கள் சுழலில்தான் வேறுபடுகின்றன.”

“மனிதர்களுக்கு அடையாளம் கொடுப்பது எது?”

“ஒவ்வொருவருக்கும் டி என் ஏ தனிப்பட்டது, இது சென்ற நூற்றாண்டிலியே கண்டுபிடித்து விட்டோமே.”

“இரண்டு பேருக்கு ஒரே மாதிரி டி என் ஏ என்று வைத்துக்கொள்வோம், அதாவது ஒரே மாதிரி இரட்டையர்கள் மாதிரி.”

“நல்ல உதாரணம்,” என்று லென் பாராட்டினான்.

“அவர்களுக்குத்தான் யார் என்ற எண்ணம்தான் வேறாக இருக்கும்.”

என்னுடைய வழிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

“நான் என்ற எண்ணம்தான் மனிதனுக்கு அடையாளம் என்று சொல்லலாம் அல்லவா?”

” ஆமாம், ‘நான் சிந்திக்கிறேன், அதனால் நான்’ என்று பிரபலாமான தத்துவம் ஐரோப்பாவில் எழுந்ததுதானே.”

“இது நல்ல தத்துவமாக இருக்கிறதே, நம் வாழ்க்கையே நம் எண்ணங்களால்தானே அமைக்கப்படுகிறது.”

“எண்ணம்தான் சுழல் என்று வைத்துக்கொள்ளலாம், மேலே என்ன செய்யப் போகிறாம்,” என்றான் ச்சக். இப்படித்தான் ஒரு கேள்வியுடன் அவன் ஒத்துக்கொள்வான்.

என்னுடைய அடுத்த வாதத்தை இன்னும் மிகக் கவனமாக ஆரம்பித்தேன்.

“லென் நீ விளக்கியபடி, ஒரு துகளுக்குச் சுழற்சியில் ஏதாவது மாறினால், இணைத் துகளுக்கும் மாறும் அல்லவா?”

“ஆமாம்”

“ஓரு மனிதனுக்கு எண்ணங்கள் எதுவும் எழாமல் நிறுத்தினால் என்ன ஆகும்?”

“இணைக்கும் எண்ணங்கள் தானாக நின்று போகும்.”

“ஆகா” என்றான் ச்சக்.

லென் “உண்மைதான்” என்றான்.

அகிரா சான் இரண்டு கட்டை விரல்களையும் உயர்த்தினான்.

அறையில் எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சி.

“எண்ணங்களை எப்படி நிறுத்த முடியும்?”

ச்சக் அவனுடைய மடிக் கணிணியில் ஏதோ விரைவாகப் பார்த்தான்.

“அதிசக்தி உள்ள மின்காந்தப் புலத்தில் மனித மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும், மாற்ற முடியும். எம் ஆர் ஐ ஸ்கேன் என்று மூளையைப் படம் எடுக்கிறோம் அல்லவா? அதன் அடுத்த கட்டம், மின்காந்தப் புலங்களை வைத்து மூளைக்குள் ஊடுருவுவது. என்ணங்களை மாற்ற முடியும், நாங்கள் நிறைய பரிசோதனைகள் செய்திருக்கிறோம். என்ணங்களை நிறுத்த பரிசோதனை செய்திருக்கிறோமா என்று தெரியவில்லை. முடியும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது,” என்றான் ச்சக்.

“இது இயற்கைக்கு எதிரானது, மனித உரிமைக்குப் புறம்பானது, நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்,” என்றான் லென்.

ச்சக், “பொறுமை, முழுமையாகச் சிந்திப்போம், பங்கேற்பவர்கள் தாமாக ஒப்புதல் கொடுத்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை. ராம், நீ தொடர்ந்து சொல்,” என்றான்.

“அப்படி ஒருவருக்கு எண்ணங்களை நிறுத்தினால் இன்னொருவருக்கும் எண்ணங்கள் நின்று போகும், அப்படி யாருக்கு நின்று போகிறது என்று கண்டுபிடித்தால், சரியான இணையைக் கண்டுபிடிப்போம்.”

சற்று அமைதி நிலவியது.

“வாதம் மிக சுவாரசியமாக இருக்கிறது, ஆனால் கோட்பாடு அளவில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. சரி என்றே வைத்துக்கொள்வோம், அதை எப்படி நடைமுறையில் செய்ய முடியும்?”

ச்சக் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெல்லிய குரலில் சொன்னான், “முடியும், சாத்தியங்கள் இருக்கின்றன. நாங்கள் பல ஆண்டுகள் முன்பே மனிதர்களுடைய எண்ணங்களைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் பதிவு செய்யவும் ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாகக் கருவிகளும் செய்திருக்கிறோம்.”

லென் உரத்த குரலில் “எனக்கு முதலிலேயே சந்தேகம், இந்த மாதிரி செய்திருப்பீர்கள்.”

நான் அமைதிப்படுத்தினேன்.

“மேலே கேட்போம்.”

“உங்கள் நாட்டில் மட்டுமா, இல்லை உலகம் முழுவதும் எல்லொருடைய எண்ணங்களையும் கண்காணிக்கிறிர்களா?” குரல் கடுமையாக இருந்தது. அவனுடைய ஹோலோ உருவம் கோபத்தில் அதிர்ந்தது.

“நான் சற்று விளக்குகிறேன், நாங்கள் சாதித்திருப்பது எண்ணங்களைத் தொலைவிலிருந்தே பதிவு செய்யக் கூடிய தொழில் நுட்பம். நாங்கள் விண்வெளியில் ஏவியிருக்கும் 238 சாட்டலைட்கள், புவியைச் சுற்றி வந்து கொண்டு, வேண்டியபோது தேர்ந்தெடுக்கப்பட்டவருடைய எண்ணங்களைப் பதிவுசெய்யும். மறுபடியும் மறுபடியும் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குப் பிறகு நாங்கள் எங்கள் பாதுகாப்புக்காகச் செய்து கொண்டது. தீவிரவாதிகளின் தகவல் தொடர்பைக் கண்காணிப்பது போல, இது இன்னும் ஒருபடி மேலே.”

“நான் இதை முழுமையாகச் சரி என்று ஒத்துக்கொள்ள முடியாது, இருந்தாலும் இது எப்படி சாத்தியம்?”

“சாத்தியம்தான், ஒரு எண்ணம்கூட, அண்ட வெளியில் சலன அலைகளை உண்டாக்கும், அதை நாங்கள் க்வான்டம் கருவிகளைக் கொண்டு அளந்து, நமக்குப் புரியும்படி மொழிபெயர்க்கலாம்”

லென் முற்றிலும் மவுனமாக இருந்தான்.

” இது மனித உரிமை மீறல் இல்லையா?”

” இல்லை, பரிசோதனைக்காக மட்டுமே செய்தோம், அதை நாங்கள் மிகக் கவனமாக பயன்படுத்துகிறோம்.”

ச்சக், “லென், எவ்வளவு மகத்தான தருணத்தில் நாம் இருக்கிறோம், இந்தப் ப்ராஜெக்ட் வெற்றி அடைந்தால் மனிதக் குலத்துக்கே எவ்வளவு நன்மைகள், சற்று யோசி,” என்றான். லென் நெற்றியைத் தடவினான்.

நான், “சரி, ஒரு வாதத்துக்காக, அப்படிச் செய்ய முடியும் என்று வைத்துக்கொள்ளலாம், நமது ப்ராஜெக்டுக்கு உலகில் உள்ள எல்லா மனிதர்களின் என்ணங்களையும் ஓரே நேரத்தில் கண்காணிக்க வேண்டுமே, அது முடியுமா?” என்றேன்.

“முடியும், மிகுந்த சக்தி உள்ள க்வான்டம் கம்ப்யூட்டர்களைக் கொண்டு செய்துவிடலாம்,” என்றான் லென். சாதகமான முடிவுக்கு வந்துவிட்டான் போல இருந்தது.

“சரி, கண்காணிக்க முடியும் என்று வைத்துக்கொள்ளலாம், எண்ணங்களை எப்படி நிறுத்துவது?”

“அது பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை, இந்தப் ப்ராஜெக்டில் முயற்சி செய்து பார்க்கலாம் “

லென் “இயற்பியலில், பொருட்களின் வெப்ப நிலையைக் குறைத்துக்கொண்டே போனால், முழு பூஜ்ஜியம் அடையும் போது எல்லாச் சலனங்களும் அணு அளவில்கூட நின்று போய்விடும், அந்த மாதிரி ஏதாவது செய்து எல்லா எண்ணங்களையும் நிறுத்த முயற்சிக்கலாம்,” என்றான்.

***

இறுதியாக, எங்கள் பரிசோதனை ஸ்விட்சர்லாண்டில் செர்ன் ஆய்வகத்தில் செய்வதாகத் தீர்மானித்தோம். சென்ற நூற்றாண்டிலிருந்தே மனித இனத்தின் ஆகச் சிறந்த விஞ்சானிகள் அணுத்துகள் ஆரய்ச்சிகள் நடத்திய இடம். தரைக்கு அடியில் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் மற்ற அலைகள் துகள்கள் எதுவும் பாதிக்காத சூழலில், எங்கள் பரிசோதனையை நம்பிக்கையாக நடத்த முடியும் என்று முடிவு செய்தோம். ஸ்விட்சர்லாண்ட் நடு நிலையான நாடும்கூட.

நாங்கள் எல்லொரும் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டோம். எங்களுக்காக ஒரு செர்ன் வளாகத்தில் ஸ்விட்சர்லாண்ட்- ஃப்ரான்சு எல்லைக்கு அருகே ஒரு தனிக் கட்டிடமே ஒதுக்கி இருந்தார்கள். எங்களுடைய அலுவலக அறையில் நான்கு புறமும் கண்ணாடிச் சுவர்கள். வெளியே ஜெனிவா ஏரி விரிந்திருந்தது. ஆகாய நீலம் அதில் துல்லியமாகப் பிரதிபலித்தது தூரத்தில் ஆல்ப்ஸ் மலைகள் உச்சியில் பனித் தொப்பியுடன் இருந்தன. எங்கள் கட்டிடத்தைச் சுற்றி நிறைய மரங்கள். வெளியே எங்கு பார்த்தாலும் நீலமும் பச்சையும். பெரிய கோப்பைகளில் சூடான ஸ்விஸ் சாக்லேட் பானம். அந்தச் சூழல் எங்கள் எண்ணங்களை விரிவாக்கியது. எங்களுக்குக் கூட்டாக அமர்ந்து புதிய கருத்துக்களையும், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று விவாதிக்க உதவியாக இருந்தது. நாங்கள் பெரும்பாலான நேரத்தை அங்கேயே கழித்தோம். என்னதான் ஒருவரை ஒருவர் ஹோலோவில் பார்த்திருந்தாலும், நேரில் பார்ப்பது போல இல்லை. அகிரா சான் ஒரு வயதான கொக்கு போல எடை இல்லாமல் உடல் அசைத்து, வளைந்து, கைகளை மெதுவாக விரித்து மெல்லிய குரலில் பேசினார். லென் நான் நினைத்ததைவிட நல்ல உயரமாக இருந்தான். ச்சக் நேரில் இன்னும் பருமனாக இருந்தான். லென் ப்ராஜெக்ட் தவிர எதுவும் பேச மாட்டான். ச்சக் அவனுடைய துணைப் பெண்ணைப் பற்றி, அவனுக்குப் பிடித்த உணவு பற்றி, அரசியல் பற்றி என்று அருகில் உட்கார்ந்து கொண்டு, தோளில் தட்டி உற்சாகமாக நிறையப் பேசினான்.

ஒரு வழியாகப் பரிசோதனையில் பங்கேற்பவர்களின் ஒப்புதல் பெற்றோம். பரிசோதனைகளை ஆரம்பித்தோம். முதலில் மிருகங்களை வைத்து. ஒரு மாதத்துக்குள்ளேயே மின்காந்த அலைகளைச் சரியான அலைவரிசையில் சரியான சக்தியுடன் செலுத்தினால், எண்ணங்களை மட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் முழுமையாக நிறுத்த முடியவில்லை.

அதற்குள் ச்சக் அவர்களுடைய அரசாங்க உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, மற்ற நாட்டுத் தலைவர்கள், ப்ரெசிடென்ட், மற்ற பிரதமர்கள் அளவில் பேச்சுக்கள் நடந்தன. எங்கள் ப்ராஜெக்டை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தச் சொல்லி உத்தரவுகள் வந்தன. அதனால், படிப்படியாகச் செல்லாமல், எங்களுடைய இறுதிப் பரிசோதனைக்குத் தேர்வு செய்திருந்தவர்களை நேரடியாக ஈடுபடுத்தினோம்.

மின்காந்த அலைகளை வைத்து ஆறுபேர்கள், நாய் மற்றும் போன்சாய் மரத்தின் எண்ணங்களை மட்டுப்படுத்த முடிந்தது. சாடிலைட்களின் மூலம் அவற்றை கண்காணிக்கவும் முடிந்தது. ஆனால் இணைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இயற்கையாகவே எண்ண அலைகளில் மாறுபாடுகள் இருந்தன. எண்ணங்களை முழுமையாக நிறுத்தினால் ஒழிய கண்டுபிடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தோம்.

லென் புதிய கருத்துக்களை முன்வைத்தான். நாங்கள் பரிசோதனை செய்யும் அறையில் இருந்த ஒளியின் ஃபோட்டான் ஒளித் துகள்களால்தான் குறுக்கீடு ஆகிறது என்றான். இப்போது பரிசோதனை அறை கண்ணாடிச்சுவருக்குப் பின்னால் முழு ஒளியில் இருந்தது. அங்கிருந்து வேறு எந்த அலைகளும் துகள்களும் வர முடியாத அறைக்கு மாற்றினோம்.

இது பெரிய திருப்புமுனை என்று எனக்கு உள்ளுணர்வில் தோன்றியது. மறுநாள் முழு இருட்டில் வைத்துகொண்டு பரிசோதனையைத் தொடர்ந்தோம். பக்கத்து அறையில் நாங்கள் எல்லோரும்.

மின்காந்த அலை சக்தியைச் சிறிது சிறிதாக ஏற்றினோம். எண்ணங்கள் குறைந்துகொண்டே வந்தன. முன்பை விட நிறைய முன்னேற்றம். இன்னும் சிறிது காந்த அலை சக்தியை ஏற்றினால் எண்ணங்களை, முழுமையாக நிறுத்த முடியும் என்று முடிவு செய்தோம்.

லென் மெல்ல மின்காந்த அலை சக்தியை ஏற்றினான்.

“எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண்ணமற்ற நிலை அதிக பட்சம் சில வினாடிகளுக்கு மேல் நிலைத்திருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்குள் க்வான்டம் கம்ப்யூட்டர்களை முழுச் சக்தியில் ஓட்டி, இணையைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

நாங்கள் பரிசோதனை அறையின் அகச் சிவப்புக் கதிர் காமரா காட்டும் பரிசோதனை ஆட்கள், நாய், மரம் இவற்றின் வீடியோ படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தவிர, 238 சாட்டிலைட்டுகளும் எண்ணங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தன.

“இதோ இப்போது மின்காந்த அலைகள் முழுச் சக்தியையும் பிரயோகிக்கப் போகிறேன்.”

எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

பரிசோதனை அறையின் காமிரா காண்பித்த வீடியோவில் திடீரென்று ஒரு மிகப் பிரகாசமான ஒளிப்பிழம்பு தெரித்தது. அடுத்த கணம் மறைந்தது. அறைக்குள் இருந்த மனிதர்களும், நாயும், மரமும் எல்லாம் காணவில்லை. மாயமாகி இருந்தன.

நாங்கள் மவுனமாக திக்கித்து அமர்ந்திருந்தோம்.

***

பி.கு 1:

ஆய்வகத்திலிருந்த எல்லோரும் கூட்டமாக வந்துவிட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் என்ன பரிசோதனை செய்கிறோம் என்று தெரியாது.

“என்ன ஆயிற்று? நாங்கள் மிகப் பெரிய ஒரு ஒளிக் கற்றையைக் கண்டோம், கோடி மின்னல்கள் போல பிரகாசம், ஏதாவது வெடித்துவிட்டதா என்று வெளியில் ஓடி வந்தோம், ஆனால் வேறு ஒரு ஒலியும் இல்லை. இங்கிருந்துதான் அந்த ஒளி எழுந்தது.”

எங்களுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. அவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, எங்கள் குழு சோர்வுடன் அமர்ந்தோம்.

“க்வான்டம் கம்ப்யூட்டர்களிலிருந்து ஏதாவது தெரிய வந்ததா?”

ச்சக், “படிப்படியாக ஆறு பேருக்கும் எண்ணங்கள் குறைந்துகொண்டே வந்தன.”

“பிறகு?”

“தெரியவில்லை, திடீரென்று எல்லாத் தரவுகளும் நின்றுவிட்டன.”

“அப்படியானல், நாம் எண்ணங்க்களை முழுமையாக நிறுத்தி இருக்கிறோம்.”

“அவர்கள் என்ன ஆனார்கள்?”

இத்தனை நேரம் பேசாமல் இருந்த லென், “ஒரு சாத்தியம் உள்ளது,” என்றான் தயங்கியபடி.

“அவர்கள் எல்லோரும் இன்னொரு பிரபஞ்சத்துக்குப் போயிருக்கக் கூடும். அணுத்துகளுக்கு இணை இருப்பது போல, பிரபஞ்ச அளவிலும் இணை உண்டு என்பது ஃக்வான்டம் கோட்பாடு. இந்தப் பிரபஞ்சங்களுக்கு இடையில் ஒரு அண்ட வெளித் துவாரத்தின் வழியாகச் செல்ல முடியும். அதுதான் ஆகி இருக்க வேண்டும்.”

“அவர்களைத் திரும்ப வரவழைக்க முடியுமா? இப்போது நாம் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறோம்?”

லென் இரண்டு கைகளையும் விரித்தான். அகிரா சான் தலையில் கை வைத்து முகம் கவிழ்த்தார்.

ச்சக், “அவர்கள் இந்த பூமியிலிருந்து சுவர்க்கத்துக்குப் போய்விட்டார்கள்,” என்றான் விரக்தியாக.

பி.கு 2:

நான் தங்கி இருந்த அறைக்கு வந்து படுக்கையில் தூக்கம் வராமல் நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேனோ தெரியாது. திடுக்கிட்டு விழித்தேன். எல்லா சானல்களிலும் நேற்று இரவு எழுந்த ஒளிப் பிழம்பைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றி விவாதங்கள். வெளிக் கிரகத்தவர்கள் வந்து இறங்கினார்கள், சைனா புதிய ஆயுதப் பரிசோதனை செய்கிறது என்றெல்லாம்.

நான் என் அப்பாவை அழைத்தேன். இந்த மாதிரி குழப்பத்தில் இருக்கும்போது அவரிடம்தான் பேசுவேன்.

“டேய் ராம், என்ன ஆச்சு அங்க? நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஏதாவது வெடி விபத்தா? உயிர் சேதம் இல்லையே?” என்று நிறைய கேட்டார்.

இதுவரை எங்கள் ப்ராஜெக்ட் பற்றி வீட்டில் யாருக்கும் விவரம் சொல்லவில்லை. ஆனால் நேற்றைய நிகழ்வுக்குப் பிறகு என்னுடைய மனநிலையே வேறாக இருந்தது. முழுக் கதையையும் சொன்னேன். அப்பா ஆர்வத்துடன் கேட்டார். நான் இறுதியாக நாங்கள் மின்காந்த அலை அளவை உயர்த்தியதைச் சொன்னேன்.

“அட, பிறகு என்ன ஆச்சு?”

“தெரியவில்லை, எண்ணங்கள் குறைந்துகொண்டே வந்தன, திடீரென்று ஒரு ஒளிப் பிழம்பு, அவர்கள் எல்லோரும் மாயம்,” என்றேன்.

அப்பா சற்று மவுனமாக இருந்தார்.

“சென்ற நூற்றாண்டுல திருவண்ணாமலையில ரமண மகரிஷி என்று ஒரு யோகி இருந்தார், அவர் சித்தி அடைந்தபோது இப்படித்தான் பூமிக்கும் வானத்துக்கும் ஒரு பெரிய ஒளிப் பிழம்பு தெரிந்ததாம். என்னுடைய தாத்தா சென்னையிலிருந்து அதை பார்த்திருக்கிறார்.”

உடனேயே இணையத்தில் தேடினேன். அந்த ஒளியின் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.

“ஆனால் அவருடைய உடல் அங்கேயேதான் இருந்தது என்று சொல்லி இருக்கிறார்களே,” என்றேன்.

“நீ இன்னும் பதின்ம வயது பையனைப் போலக் குறுக்குக் கேள்வி கேட்கிறாய், பெரியவர்கள் சொன்னால் நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்.”

“சரி அப்பா என்றேன்” முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு.

“வடலூரில் ராமலிங்க வள்ளலார் என்று இன்னொரு யோகி இருந்தார். அவர் ‘அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே. நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்சோதி’ அப்படின்னு பாடி இருக்கிறார். அணுவுக்குள் இருப்பதும், அண்டத்தில் அளவு இல்லாத ஆனந்தம் தருவதும் அந்தப் பேரொளிதான். அவர் ஒரு அறைக்குள் சென்று தியானத்தில் அமர்ந்து, அப்படியே ஜோதியில் கரைந்துவிட்டராம். அந்த மாதிரி ஏதாவது ஆகி இருக்கக் கூடும்,” என்றார்.

நான் மேற்கொண்டு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

பி.கு 3:

எனக்கு லென் சொன்னது, ச்சக் சொன்னது, அப்பா சொன்னது எல்லாமே ஒன்றுதானோ என்று தோன்றியது.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

2 thoughts on “இணை”

  1. Comments on “Inai”

    Unbelievable imagination by the author. I loved the way it ended. Quantum science and spirituality. Superb Sri Krishnan

    Sriram T V

  2. Nice.. Careful switching between science , fictional imagination inspired by HINDU siddhis.

    I was reminded of warm holes as the channel between two prapancha. We have those history as well. One in tanjore Brihadhiswara temple and one in sankaran kovil. And of course many nayanmars ஜோதியில் ஐக்கியமானது அறிந்ததே.

    Also, when something can be faster than light then you are in the realm that is beyond space and time ( the fabric of 3 dimensional space + time as we know since Einstein).

    Faster need not be in movement but in vibrating frequency as well. Here and now..

    Good work. 👌

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்