அந்தரத்தில் நிற்கும் வீடு

14 நிமிட வாசிப்பு

“பூன்லே” சாலையோரத்தில் விக்ரமாதித்யன் நடக்கத் துவங்கியபோது அந்தி சரிந்து பாதையெங்கும் இருள், ஊற்றாகப் பெருகிக்கொண்டிருந்தது. கடந்து சென்ற வாகனங்களில் இருந்து வியப்பூரிய விழிகள் விக்ரமாதித்யனை நொடிநேரம் மொய்த்து மறைந்தன. கரும்பாறையென தன் தோளில் வீற்றிருந்த வேதாளத்தின் எடை அவன் முதுகுத்தண்டினை அழுத்திக்கொண்டே இருந்தது. சிங்கப்பூரின் வெப்பத்தைச் சுமந்து வந்து அவன் மேல் இறைத்துவிட்டுப் போனது காற்று. மனதும் உடலும் புழுங்கிப் போன விக்ரமாதித்யனுக்கு வேதாளத்தின் எடையைக் காட்டிலும் அவர்கள் இருவருக்கும் இடையில் விரிந்து நின்ற மௌனத்தின் எடை, கூடியதாகத் தெரிந்தது. கடந்த சில வருடங்களாக, விக்ரமாதித்யன் யுக யுகாந்திரங்களாகத் தான் பார்த்திராத சோர்வுக்கு ஆளாகியிருந்தான்.

எதற்காக இப்படி ஒரு வேதாளத்தைக் காலாகாலத்துக்கும் தோளில் சுமந்து கொண்டலைகிறோம்? இதனால் என்ன பயன் உண்டாகிவிடப் போகிறது? வேதாளத்தை அதன் போக்கில் விட்டு விட்டால்தான் என்ன? இந்த ஈனப் பிறவியை எங்காவது கடலில் கடாசிவிட்டு எல்லோரையும் போல ஏன் நானும் எனக்கென ஒரு வீடு, வேலை, குடும்பம், என்று வாழக்கூடாது? இந்த ஜனநாயக உலகத்தில் நான் மட்டும் ஏன் மன்னன் என்ற மறைந்த பெருமையுடன் ஒரு வேதாளத்தைத் தூக்கிக்கொண்டு காலங்களைக் கடந்து சென்றுகொண்டே இருக்கிறேன்? முடிவின்றி நுரைத்துப் பொங்கும் கடலலைகள் கரையை அறைவதுபோல் பொங்கும் கேள்விகள் விக்ரமாதித்யனின் அகமெங்கும் அறைந்து கொண்டிருந்தன.

இருளின் பருவடிவமாய் விக்ரமாதித்யனின் தோளில் அமர்ந்திருந்த வேதாளத்தின் கரிய முகத்தில் புன்னகை பளபளத்தது. அறிவேன் விக்ரமா! கடல் அலைகளின் முடிவற்ற நுரைகளாய் உன் மனதில் கேள்விகள் தோன்றி மறைவதை நான் அறிவேன். என்னைச் சுமந்துகொண்டு பல யுகங்களைக் கடந்துவிட்டாய். பூமியின் சுழற்சியில் கல்பாந்த காலமாய் என்னை உன் உடலின் ஓர் உறுப்பென ஆக்கிக்கொண்டு கோடானுகோடி பகலிரவுகளையும், நிலக்காட்சிகளையும், பருவ மாற்றங்களையும் பார்த்துவிட்டாய். நான் சொன்ன கதைகளுக்கெல்லாம் உன் ஆற்றலின் பெரும்பகுதியைச் செலவழித்து விடைகள் பகன்றாய். தன்னுடைய ஆற்றலையெல்லாம் திரட்டிக் கரையில் கொட்டும் கடலலைகளைப் போல, நானும் என்னுடைய சக்தியனைத்தையும் சேர்த்துப் புனைந்த கதைகளையெல்லாம் உன்முன் கொட்டியாயிற்று. தற்கால நதிகளின் நீர்போல உன் இளமை வேகமாய் மறைந்து கொண்டிருக்கிறது. என்னையும் என் கதைகளையும் காலாதீதற்கும் சுமந்து, உன்னையே நீ வதைத்துக்கொண்டது போதும் விக்ரமா. அரூபக் கடலாய் வீசும் காற்றின் பெருவல்லமையின்முன் கற்பூரத்தின் ஆயுள் சில நொடிகளே. புரிந்துகொள். நீயே உனக்கு மூட்டிக்கொண்ட இந்தச் சிதையில் இருந்து வெளிவந்து நொடிதோறும் புதிதாய்ப் பூக்கும் இந்தப் பொன்னுலகைத் தரிசி. கூர்தீட்டிய உன் புலன்களால் இந்த உலகைப் புசி. முருங்கை மரமே தன் உலகென வாழும் இந்த வேதாளத்தை இறக்கி வைத்து உனக்கான வாழ்வின் பொருளுணர்.

இருளே சடையாய் விரிந்த வேதாளத்தின் நீலமணிக் கண்களில் வான்நட்சத்திரம் ஒன்று தன் ஒளியுதிர்த்தது போல வெளிச்சம் மின்னியது. நிலத்தைக் கிழித்துக் கோடு வரையும் கூர் ஏராய், வேதாளத்தின் நல்லுரை விக்ரமாதித்யனின் மனத்தைக் கிழிக்கத் துவங்கியது. இருள் பரவிய அடர்காட்டில் வைகறை வெளிச்சம் புகுந்தது போல் அவன் மனதில் வேதாளத்தின் சொற்கள் ஒளியேற்றின. தன்னுடைய சொற்கள் அவனில் நிகழ்த்தும் மாற்றங்களை அவதானித்த வேதாளம், இந்த நற்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்றென்றைக்குமாக அவனிடமிருந்து தப்பிவிட எண்ணியது.

விக்ரமா! இதுவரை நாம் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டங்கள் போதும். நாம் சந்தித்த முதல் இரவிற்கும் இன்றைய இரவிற்கும் நடுவே எண்ணற்ற சூரிய சந்திரர்கள் தோன்றி மறைந்துவிட்டார்கள். இதோ வானில் வெண்தட்டாய் விரிந்திருக்கும் இன்றைய சந்திரன்தான் நாம் இருவரும் சேர்ந்து காணும் இறுதிச் சந்திரனாய் இருக்க வேண்டும். நான் முடிவு செய்துவிட்டேன் விக்ரமா. இன்று நான் உனக்குச் சொல்லும் கதையே இறுதிக் கதை. இந்தக் கதையின் முடிவில் நான் கேட்கும் கேள்விக்குச் சரியான விடையிறுத்தால், என்றென்றைக்குமாக நான் உன்னிடம் இருந்து பிரிந்து எனக்கான பேயுலகில் கலந்து மறைவேன். காய்ந்த நிலத்தில் விழுந்த நீர்த்துளி போல. தவறான விடையளித்தால் வான் நட்சத்திரங்களுக்குப் போட்டியாய் உன் தலை சுக்குநூறாய்ச் சிதறி நிலத்தில் விழும்.

நீண்ட யோசனைக்குப் பின், காலம் தனக்குத் தந்த இந்த வாய்பைப் பயன்படுத்திக்கொண்டு வேதாளத்திடம் இருந்து தப்ப நினைத்தான் விக்ரமாதித்யன். வேதாளத்தின் இந்த நிபந்தனையை ஏற்ற விக்ரமாதித்யன், சாலையைக் கடந்தவாறு கதை கேட்க ஆயத்தமானான். இறுதிக் கதையை சொல்லத் துவங்கிய பொழுது, வேதாளத்தின் கண்களில், பாதசாரிகளுக்கான போக்குவரத்துச் சின்னமான பச்சை மனிதன் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தான்.

*******

“ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம், நம்ம கனவு வீட்டுக்கு!” அடிவயிற்றிலிருந்து மெல்லிய குரலெழுப்பி ராகம் போட்டுக்கொண்டே, கட்டிலில் கிடந்த ரேணுவின் இடையைத் தன்பக்கம் திருப்பி சந்தோஷத்தில் மூச்சை இழுத்து அவள் கழுத்தில் ஊதினான் வாசு.

ரேணுவுக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவள் அதை வெளிக்காட்டக் கொள்ளவில்லை.

“கனவு வீட்டுக்கு வந்துட்டோம். ஆனா, இதுக்கு கொடுத்த விலைதான் ஜாஸ்தி” என்றாள்.

“எல்லா வீட்டுக்கும் விலை அதிகம்தான். அதிலும், “புக்கிட் பாத்தோக்” பக்கம் வீடுகள் பெரும்பாலும் புதுசா இருக்கும். அதனாலதான் இந்த விலை. ஆபிசுக்கும் பக்கம், கடைகளும் பக்கம். எம்.ஆர்.டீ ஸ்டேஷன் நடக்குற தூரம். இந்த வசதியெல்லாம் கிடைக்கணும்னா விலை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்”.

“இந்த ஆயுசுல இன்னும் எத்தனை வீடு வாங்கபோறோம்? வாங்குற ஒரு வீட்ட வசதியா வாங்கலாமே”! சொல்லிவிட்டு வாசு தன் முகத்திற்கு நேராகச் சுழன்று அறையின் வெளிச்சத்தைக் கத்தரித்துக் கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்து மல்லாந்து புரண்டான்.

“வீட்டு புரோக்கர் தோத்துடுவான் உங்ககிட்ட” என்ற ரேணுவைப் பார்த்துப் புன்னகைத்தான். கருநூல் போல அவள் கன்னத்தில் ஒட்டிக் கிடந்த ஒற்றை முடியை விலக்கிவிட்டுக் கொண்டே…”விலையை விடும்மா! எந்தப் பொருள்தான் இந்த ஊருலே விலை கம்மியா கிடைக்குது?” என்றவன் மீண்டும் தன் பிம்பத்தைப் பிரதிபலிக்கும் மின்விசிறியில் பார்வையைப் பதித்தான்.

சிறியதொரு மௌனத்திற்குப் பின், கண்களில் ஒளி மின்ன, “ஆனாலும், நமக்கே நமக்கான ஒரு வீட்டுக்கு வந்து, முதல் நாள் நிம்மதியா தூங்குற சுகம் இருக்கே. அதுக்கு முன்னாடி மத்த கஷ்டமெல்லாம் பெருசா தோணாது. கொறஞ்ச விலைக்கு வீடு வாங்கணும்னா, நூறு வருசத்துக்கு முன்னாடி பிறந்து வீடு வாங்கியிருக்கணும்”,என்றான்.

“அப்பவும் இப்படித்தான் விலை அதிகம்னு புலம்பிட்டு இருப்போம்” என்றாள் ரேணு.

இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பொலி கேட்ட சுவர்ப்பல்லி ஒன்று வேகமாய் ஊர்ந்து சென்று ஒரு மூலையில் முடங்கியது.

இரவின் குளிர்ந்த அமைதியில் வாசு விழித்துக்கொண்டான். ரேணு நித்திரையின் கருப்பையினுள் பத்திரமாக இருந்தாள். சுவர்க்கடிகாரம் இரண்டு மணியைக் காட்டியது. பின்னிரவில் விழித்துக் கொள்ளும்போதெல்லாம் தன் அகம் கூர்மையடைவதை அவன் உணர்ந்திருக்கிறான். பின்னிரவின் பிசின் போன்ற அடர்ந்த மௌனம் தன் கண்ணாடித் திரையில் வாசுவின் கடந்த காலத்தின் இருண்ட சம்பவங்களை அடுக்கிக் காட்டிக்கொண்டே இருந்தது.

சம்பவங்கள்… தன் வாழ்வில் மறுபடி நேரக்கூடாத சம்பவங்கள். ஒன்றா? இரண்டா? அவமானத்தின் பாதுகையை அணிந்துகொண்டே நடை பயின்ற நாட்கள். குறிப்பாக, ஒற்றை அறையில் வாடகைக்கு இருந்தபோது காண நேர்ந்த அவமானங்கள். தாங்கள் குடியிருக்கும் வீட்டில் ஒற்றை அறையை மட்டும் வாடகைக்கு அளித்து பணம் பார்க்கும் நபர்களிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்பட்ட நாட்கள். நன்றாகத்தான் ஆரம்பிக்கும். நாட்கள் செல்ல செல்ல ஓர் அகதி முகாம் போல அறை மாறிவிடும். வீட்டுக்காரர்கள் சொல்லும் நேரத்தில்தான் சமைக்க வேண்டும். அவர்கள் சொன்ன நேரத்திற்குள் வீடு வந்து சேர வேண்டும், அசைவம் சமைக்கக் கூடாது. சமையலறைக்கு எதிரே இருக்கும் குளியலறைக்கு வீட்டுக்காரனின் மனைவி சமைக்கும்போது, குளிக்கச் செல்லக் கூடாது. அறைக்குள் இருந்தாலும் சத்தமாகக் கைபேசியில் பேசக்கூடாது. வீட்டுக்காரனின் குழந்தைகள்கூட நம்மைக் கண்டால் பார்க்கக் கூடாதவர்களைப் பார்ப்பது போல விலகிச் செல்லப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. சுற்றியிருக்கும் காற்றில்கூடக் கைவிலங்குகள் தொங்கிக் கொண்டிருப்பது போன்றதொரு பிரமை இருந்துகொண்டே இருக்கும்.

எவ்வளவு நீண்டதாக இருந்தாலும், எங்கோ ஓர் இடத்தில் பாதை முடியத்தான் வேண்டும். ஒருவழியாக, ஒற்றை அறைகளில் இருந்து விடுதலையாகி, மணம் செய்து, வாடகை வீடுகளில் ஆயுளின் சில வருடங்களைச் செலவு செய்து, இறுதியில் சொந்த வீட்டுக்கும் வந்தாகிவிட்டது. சிங்கப்பூர் வந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் ஒரு வீடு வாங்கக் கொடுத்து வைத்திருக்கிறது. ஊரிலிருந்து தனக்குப் பிறகு இங்குக் குடியேறிய நண்பர்கள் எல்லாம் புது வீடு, வாகனம் என்று வசதியைப் பெருக்கிக்கொண்ட போதிலும் தன்னுடைய சூழல் இப்போதுதான் இந்த வீடு வாங்க அனுமதித்திருக்கிறது என்று நினைக்கையில் ஒரு கணம், கனத்த வருத்தம் ஒன்று அவன் மனத்தை அழுத்தியது. இதுவும்கூட ஊரில் இருந்த சில நிலங்களைக் கைமாற்றிவிட்டு, சிங்கப்பூரில் இருந்த சில வங்கிகள் துணைக்கு வர, வாங்கிய வீடுதான். இனிவரும் மாதங்கள் யாவும் வாங்கிய கடனுக்கான வட்டிகளைக் கொடு கொடு என்று சட்டைப் பொத்தான்களைக் கழற்றும். ஆனாலும், அவன் மனதின் ஓரத்தில், இருளில் தெரியும் மெல்லிய ஒளிக்கீற்றாய் ஒரு சிறிய நிம்மதி ஏற்பட்டது. பாலைவனத்தைப் படைத்த இயற்கைதான் அதைக் கடந்து செல்ல ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

பாலைவனத்தை நினைத்தபோதுதான் அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. சமையலறைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றான். விளக்கைப் போட்டபோதுதான் கவனித்தான், திசைக்கொன்றாக ‘டைல்ஸ்’ தரையில் மயங்கியிருந்த கரப்பான் பூச்சிகள் யாவும் சிதறியோடின. கால்களுக்குக் கீழே ஊர்ந்து கொண்டிருந்த கரப்பான் பூச்சிகளைக் கண்டு தீ மிதிப்பவன் போல் நுனிக்கால்களால் ஓடி சமையலறையின் மறுகோடியில் இருந்த வாஷிங் மெஷினில் போய் மோதினான். திகைப்பூறிய கண்களால் அப்போதுதான் கவனித்தான்.

சமையலறை முழுதும் நட்சத்திரங்கள் போல எண்ணித்தீர்க்க முடியாத கரப்பான்பூச்சிகள். குப்பைக் கூடைக்கு அருகிலும் அதனுள்ளும் கரப்பான் பூச்சிகள். வெங்காயமும், பூண்டும் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையின் மேல் ஈக்கள் போல் மொய்த்திருக்கும் கரப்பான்கள். அவைகளுக்கே உரிய உலகம் போல ஸ்டவ்வின் மேலும் பாத்திரங்களின் மேலும் ஓடிக்கொண்டும், சீனி பாட்டிலின் மீதும், உப்பு பாட்டிலின் மீதும் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு கரப்பான் பூச்சி காபித்தூள் பாட்டிலின் மேல் ஆர்வமாய் மொய்த்தபடி தனக்கான காபிக்காகக் காத்துக் கொண்டிருந்தது. மற்றொரு கரப்பான் பூச்சி அவன் கண் இமையருகே பறந்துபோய் சாமிப் படங்களுக்கு அருகில் வைத்திருந்த எண்ணெய்த் திரி பூட்டிய மண் அகலில் அமர்ந்தது.

வாசுவுக்கு, ஒரு நிமிடம் தன் கனவு வீடு கரப்பான்பூச்சிகளின் கால்களுக்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. சுவரின் மேல் சிந்திய எண்ணெயாய் அவன் கனவுகள் யாவும் தரை நோக்கி வழிந்து கொண்டிருந்தன. விம்மியதிரும் இதயம் அவன் தொண்டையில் மோத ஓடிச் சென்று படுக்கையில் விழுந்தான்.

விடிந்ததும் முதல் வேலையாக ரேணுவை அம்மிக்கல்லை அசைப்பது போல விசையுடன் அசைத்து எழுப்பினான் வாசு. திகைத்து விழித்தவள், தன் கணவனை அதற்கு முன் அப்படிப் பார்த்தேயிராதலால், “என்னங்க? யாருக்காவது ஏதாவது ஆகிப்போச்சா? ஊரில இருந்து ஏதாச்சும் போன் வந்ததா?” என்று கேட்டுக்கொண்டே எழுந்தாள்.

“இங்க வந்து பாரு…இங்க வந்து பாரு”? என்று அனத்திக்கொண்டே அவளைச் சமையலறைக்குக் கூட்டிப் போனான் வாசு.

சமையலறை பளிங்கு சுத்தமாக இருந்தது. எந்தப் பூச்சிகளும் இல்லாமல். முக்கியமாகக் கரப்பான் பூச்சிகள் இல்லாமல். சமையலறை அவனைப் பார்த்துச் சப்தமெழுப்பாமல் சிரிப்பது போலிருந்தது. என்ன விதமான காட்சி இது என்று வியந்தவன், ரேணுவின் முகத்தைப் பார்த்தான்.

“என்னங்க? என்னாச்சு? அவசரமா என்ன ஏன் இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்க?”

“இல்லம்மா? சொன்னா நம்ப மாட்ட? நேத்து ராத்திரி கிச்சன் முழுக்க கரப்பான் பூச்சிகளா இருந்துச்சு…. காலையிலே பாத்தா ஒரு கரப்பான் பூச்சியும் இல்லையே? ஆச்சர்யமா இருக்கு ரேணு”?

சலித்துத் திரும்பியவள், “வீடான வீட்ல கரப்பான் பூச்சி இல்லாம இருக்குமா? இதுக்கு போய் ஏன் இப்படி அலட்டிகிறீங்க?”

அடர்தூக்கத்தில் இருந்தவளை எழுப்பிய கணவனைத் திரிபுரம் எரிப்பது போல் முறைத்தவளைக் கண்டு, “இல்ல ரேணு? ராத்திரி கிச்சன்ல கரப்பான் பூச்சிகள் நடமாட்டமாத்தான் இருந்தது. ஒண்ணில்ல ரெண்டில்ல, கிச்சன் பூராவும் கரப்பான் பூச்சிகளா இருந்தது. ஸ்டவ்வில, பாத்திரத்துல.. எல்லாம் கரப்பான் பூச்சிகள். எனக்குப் பயமா இருக்கு ரேணு..” என்று அழுவதுபோல் சொன்னான்.

“கனவேதும் கண்டீங்களா? ஒண்ணு ரெண்டு கரப்பான் பூச்சிகள் இருந்தாலும் இருக்கும்? கிச்சன் பூராவும் எப்படி கரப்பான் பூச்சி இருக்கும்? காலங்காத்தால எழுப்பி கிச்சனுக்கு கூட்டிக்கிட்டு வரும்போது, கட்டுன புருஷன் நமக்காக பெட்காபி எதுவும் போட்டு வச்சிருப்பாரோன்னு, மனசுல ஒரு நப்பாச இருந்துச்சு. ம்ஹும். உங்கள திருத்தவே முடியாது. எட்டு மணிக்கு என்ன எழுப்பி விடுங்க. ஹாலிடே தானே உங்களுக்கு?” சலிப்புடன் சொல்லிவிட்டு, பஸ்ஸைத் தவறவிட்டவன் அதன் பின்னால் துரத்தி ஓடுவதுபோல் அவசரமாக பெட்டுக்கு ஓடி, விட்ட தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தாள் அவன் மனைவி.

குழப்பத்தில் தவித்துப் போனவன் ஒன்றும் புரியாமல் சாமிப் படங்கள் வைக்கப்பட்டிருந்த மேடையைப் பார்த்தான். அங்கே! அவனை நோக்கி அஞ்சேல்! என்றபடி குறுநகை தவழும் முகத்தோடு அருள் பாலித்தனர், விரல் நீளமுள்ள அன்னப்பூரணியும் பத்து மலை முருகனும்.

***

அன்று இரவும் பயத்தோடுதான் உறங்கப்போனான் வாசு. உறங்குவதற்கு முன் அடிக்கடி ரேணுவிடம் வசைகள் பெற்று கிச்சன் பக்கம் போய் வந்து கொண்டிருந்தான். அன்றிரவு கண்மூடும் வரை அவன் கண்களுக்கு எந்தக் கரப்பான்பூச்சியும் தென்படவில்லை. ஒருவேளை தான் நேற்றிரவு கண்டது கனவுதானோ என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. யோசித்துக் கொண்டே இருந்தவனை உறக்கம் எலியை விழுங்கும் சாரைப் பாம்பைப் போல விழுங்கிக்கொண்டது.

இம்முறை அவனை எழுப்பியது அவன் மனைவி. உடலெல்லாம் விதிர்விதிர்க்க, அச்சம் மனித வடிவெடுத்தது போல, உடையெல்லாம் ஈரமூறி நின்றிருந்தாள் ரேணு.

“என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே?” என்று உறக்கத்தில் குழறியவனை எழுப்பி சமையலறைக்குக் கூட்டிப் போனாள் ரேணு.

அங்கே அவன் கண்டது முந்தைய நாளைவிடவும் மோசமான காட்சி. சுவர் முழுதும் கரப்பான் பூச்சிகள். அதுவரை அவர்கள் சுவரில் வரிசையாக ஊறும் எறும்புகளைத்தான் கண்டிருக்கிறார்கள். முதன்முறையாக கரப்பான் பூச்சிகள் வரிசை கட்டி சுவரில் ஊர்ந்து செல்வது அதிசயமாக இருந்தது. பாத்திரங்கள் கொட்டிக் கிடந்த ஸின்க்கில் கரப்பான் பூச்சிகளும் கொட்டிக் கிடந்தன. சமையலறையின் அடுக்குகளில் எந்த அடுக்கைத் திறந்தாலும் கரப்பான்பூச்சிகளின் தரிசனம் கிடைத்தது.

ஸ்டவ்வுக்கு கீழிருக்கும் டிராயர்களில் எந்த டிராயரைத் திறந்தாலும் வாடிவாசல் திறந்ததும் வெளிவரும் முரட்டுக் காளைகளைப் போல சீறிக்கொண்டு வெளிவந்தன கரப்பான்பூச்சிகள். விதவிதமான கரப்பான் பூச்சிகள். சிறியவை, பெரியவை, சிறியதாய் இருந்தாலும் பெரிய மீசை கொண்டவை. பெரியதாய் இருந்தாலும் சிறிய மீசை கொண்டவை, வெண்ணிறக் கரப்பான் பூச்சிகள். அவர்கள் கண்களின் முன் கரப்பான் பூச்சிகள் வேய்ந்த ஒரு சிறிய உலகமே தென்பட்டது.

பட்டுப்பூச்சிகளுக்கென்றே “சென்டோஸா”வில் ஒரு நிரந்தரக் கண்காட்சி இருக்கிறது. அதுபோல, அவர்கள் வீட்டின் சமையலறை கரப்பான் பூச்சிகளின் கண்காட்சியறை போலிருந்தது. சில கரப்பான் பூச்சிகள் அவர்களைப் பார்த்ததும், வெட்கித்து வெடுக்கென மறைந்தன. சில கரப்பான்களோ சாலையில் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் எருமைகளைப் போல அசைந்து கொடுக்காமல் இருந்தன.

வாசுவும் ரேணுவும் வியர்வையில் நனைந்திருந்தார்கள். இருவருமே ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனப்பதுமைகளாக மாறிவிட்ட போதிலும் ஒருவரின் இதயத்துடிப்பு மற்றவருக்குத் தெளிவாகக் கேட்டது.

***

“இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லடா வாசு. கரப்பான் பூச்சிகள் இல்லாத வீடும் ஒரு வீடா? இல்ல அப்படி ஒரு வீடு இந்த உலகத்துல எங்கியாவது இருக்குதா? கரப்பான் பூச்சிகள் இருந்தா வீட்ல லட்சுமி வரும்னு ஊர்ல சொல்வாங்க தெரியுமா? அதிர்ஷ்டம் கொழிக்கும் தெரியுமா?” காபியைச் சப்தமெழ உறிஞ்சிக் குடித்தவாறே கேட்டான், லட்சுமணன்.

வாசுவும் ரேணுவும் அவனைப் புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தனர். “உனக்கென்னடா தெரியும்? ஒரு பூச்சி ரெண்டு பூச்சி இருந்தா பரவாயில்ல. ஒரு கூட்டமே இருக்குது. ராத்திரியானா போதும். கட்சி மாநாடுக்கு கூடுற மனுசக்கூட்டத்த விடவும் அதிகமா கரப்பான் பூச்சி கூட்டம் கூடுது. சமாளிக்க முடியலடா லட்சுமணா”!.

லட்சுமணன் காபி கோப்பையை தன் முன்னிருந்த டீபாயில் வைத்துவிட்டு, “காபி அற்புதமா இருக்குமா ரேணு. அப்படியே இன்னொரு காபியும் போட்டுக் குடேன்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டான். ரேணு புன்னகை ஒன்றை முகத்தில் வரவழைத்து அடுத்த காபி போடுவதற்கு சமையலறைக்குள் போனாள்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வாசுவிடம், “அப்போ… காதல் மாதிரி, மாநாடும் உயிர்கள் எல்லாத்துக்கும் பொதுவானதா மாறிக்கிட்டுருக்கு போல!” என்றான் லட்சுமணன்.

“டேய்! நான் சீரியஸா பேசிக்கிட்டிருகேன்”, சீறினான் வாசு.

“சரி சரி. நானும் சீரியஸாவே கேக்குறேன். இவ்வளவு கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள்ள வர்றதுக்கு என்ன காரணம்”? என்று கேட்டான் லட்சுமணன்.

எனக்கும் ஆரம்பத்துல எதுவும் புரியல. ரொம்ப நாளைக்கப்புறந்தான் புரிஞ்சது. இந்த புளோக்கின் குப்பையெல்லாம் சேகரிக்கும் குப்பை அறைக்கு மேலே என்னோட வீடு இருக்குறதுதான் காரணம். இந்த வீட்டுக்கு நேர்கீழே குப்பையறை இருக்குது. இந்த புளோக்கின் எல்லா வீடுகள்ல இருந்தும் கொட்டுற குப்பையெல்லாம் அந்த குப்பை அறையில்தான் வந்து சேருது.

அதனாலதான் இவ்வளவு கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள்ள வருது. இரண்டாம் மாடியில இருக்குறதால இந்த பூச்சிகள் தொல்லை இன்னும் அதிகம். மேல் மாடி வீடுகளில் இந்த பிரச்சனை இல்ல”.

வாசு சொல்லி முடித்தவுடன்தான் லட்சுமணனுக்குப் பொறி தட்டியது. “அட ஆமாண்டா! அதனால்தான் இந்த வீடு பார்க்க நம்மோடு வந்த மத்த மூணு குடும்பங்களும் இந்த வீடு வேணாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க போல. நாமதான் மாட்டிகிட்டோம்”.

“சரி விடு! விதவிதமா கரப்பான் பூச்சி மருந்துகள் கடைகள்ல கிடைக்குது. வாங்கி தெளிச்சு விடு. கரப்பான் பூச்சி மேலேயே தெளிக்கலாம். ஒரு நிமிஷத்துக்குள்ள செத்துப் போயிடும்”.

“எல்லாம் முயற்சி பண்ணி பாத்தாச்சு. ஆனா, ஒண்ணும் முடியலை. இருக்க இருக்க, கரப்பான் பூச்சிகள் அதிகமாகிட்டுத்தான் இருக்கு”. வாசுவின் குரலில் ஏமாற்றம்.

“சரி, வேறு என்ன செய்றதுன்னு யோசிப்போம்”. இரண்டாவது கோப்பை காபியையும் குடித்துவிட்டுப் போனான் லட்சுமணன்.

****

நாட்களின் நீண்ட ஊர்வலத்தில் கரப்பான் பூச்சிகளின் அட்டகாசம் பெருகிக்கொண்டே இருந்தது. வாசுவும் ரேணுவும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இணையத்தில் சொல்லியவற்றையெல்லாம் முயன்று பார்த்தார்கள். சில நாட்கள் அவைகளின் கொட்டம் அடங்கியிருக்கும். ஆனால், மீண்டும் பல மடங்கு உக்கிரத்துடன் அவை சமையறையை நிறைக்கும்.

ஒருநாள் அரிசி ஜாடியைத் திறந்தபோது அதனுள் சில கரப்பான்பூச்சிகள் இருக்கக்கண்டு அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள் ரேணு. அதிகாலை அலாரம் அடித்து எழுப்பிய கடிகாரத்தை அணைக்க கை நீட்டியபோது கடிகாரத்தின் மேலேயே காலத்தை வென்று நின்று கொண்டிருந்தன இரண்டு கரப்பான்கள். அலறிக்கொண்டே எழுந்தான் வாசு. சமையலறையில் மட்டுமே இருந்த கரப்பான் பூச்சிகள் படுக்கை அறையையும் ஆக்ரமிக்கத் துவங்கியபோதுதான் வாசு நிஜமாகவே இந்த வீட்டுக்கு வந்ததற்கு வருந்தினான். வருந்த மட்டுமே செய்த அவன் சில மாதங்களில் இந்த வீட்டை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்ற முடிவு எடுப்பதற்கு காரணமாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன.

முதல் சம்பவம்:

ஒரு நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள் வாசுவும் ரேணுவும். அன்று அந்த நண்பனின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள். விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீடு முழுக்க நண்பர்கள். நண்பர்கள் முகங்கள் யாவும் குழந்தைகளைப் போல சிரிப்பு தவழ்ந்து ஓடிக் கொண்டிருந்தது. ஹாலின் நடுவே வட்ட வடிவிலான பெரிய பிறந்தநாள் கேக் வெட்டப்படுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் மௌனமாக அந்தக் கேக்கின் மேலே ஒளிர்ந்து கொண்டிருந்தது. கேக்கின் அருகில் பிறந்தநாள் காணும் குழந்தை அமர்த்திவைக்கப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் அந்தக் குழந்தையைச் சுற்றி நின்றுகொண்டு அதனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். குழந்தை ஒன்றும் புரியாமல் வாயை மட்டும் அசைத்தது. நொடிக்கொருதரம் அதன் பார்வை கேக்கின் மேல் பட்டு மீண்டது.

லட்சுமணனின் மனைவி தன்னுடைய கைப்பையைத் திறந்து ஒரு சின்ன சாக்லேட்டைக் குழந்தைக்குக் கொடுத்தாள். அதைப் பார்த்த ரேணுவும் தன் பங்கிற்குக் கைப்பையைத் திறந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தாள். திடீரென்று அவள் கைப்பையினுள் இருந்து ஒரு பெரிய கரப்பான் பூச்சி பறந்து வந்து குழந்தையின் கன்னத்தில் நொடிநேரம் நின்று பின் மீண்டும் பறந்தது. பயத்தில் அலறிய குழந்தை நிலை தடுமாறி தன் முன்னிருந்த பிறந்த நாள் கேக்கின் மீது விழுந்தது. சிறிய ஹாலில் நிறைய பெண்கள் இருந்ததால் அவர்களும் தங்களை நோக்கி வந்த கரப்பானைக் கண்டு விலகி நெளிந்தனர். நொடி நேரத்தில் சீட்டுக் கட்டு சரிவது போல பிறந்த நாள் கேக்கும் மேஜையோடு சரிந்து தரையில் வழிந்தது. மெழுகுவர்த்தியின் தீத்துளி அருகிலிருந்த ஒரு பெண்ணின் பட்டுப்புடவை ஜரிகை மீது படர்ந்து மேலேறியது. குழந்தையின் அலறலும், பெண்களின் கூச்சலும் சேர்ந்து அந்த ஹாலே ஒரு போர்க்களம் போலானது.

எல்லாக் குழப்பங்களும் தீர்வதற்கு, மேலும் அரைமணி நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர், இந்தக் களேபரங்களுக்கெல்லாம் காரணம் ரேணுவின் கைப்பைக்குள் இருந்த கரப்பான் பூச்சிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று அடைந்த அவமானத்தை ரேணு தன் வாழ்நாளில் பின் எப்போதும் மறக்கவேயில்லை. சபை நடுவே கணவன் மனைவி இருவரும் நிற்கவே கூசினார்கள். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டனர். பிறந்தநாள் கொண்டாடிய குழந்தையின் தாய்கூட ஒருவாறு அவர்களை மன்னித்துவிட்டாள். ஆனால், பட்டுப்புடவை ஜரிகை பொசுங்கிய பெண் மட்டும் கடைசி வரை ரேணுவை முறைத்துக்கொண்டேதான் இருந்தாள்.

இரண்டாவது சம்பவம்:

பின்னொரு நாள் ஒரு திங்கட்கிழமை காலையில்,வாசு அலுவலகத்திற்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். வேகமாக, தன்னுடைய ஷூவை எடுத்தவன் அதைத் தரையில் தட்டாமல் எடுத்து அணிந்துகொண்டான். பஸ் ஸ்டாப் செல்லும் வழியில் அவன் வலது கால் பாதம் குறுகுறுத்தது. பின் அவன் வலது கால் விரல்கள் குறுகுறுத்தன. ஏதோ ஒன்று அவன் விரல்களுக்கிடையே மாட்டிக்கொண்டு தத்தளித்தது. அவனாலும் ஒழுங்காக நடக்க முடியவில்லை. உடனே கண்டுகொண்டான், தன் கால் விரல்களுக்கிடையே ஒரு கரப்பான் பூச்சிதான் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று. ஆனாலும், அவனால் நிற்க முடியவில்லை. அலுவலகத்திற்கு நேரத்திற்குச் செல்ல வேண்டும். வேக வேகமாக அவன் பஸ் ஸ்டாப்பை அடைந்ததும், தன் ஷுவைக் கழட்டினான். அதற்குள் ஒன்றுமில்லை. திகைத்துப் போனவன், தன் சாக்ஸைக் கழட்டியபோது துண்டு துண்டாய்ப் போன கரப்பான் பூச்சி ஒன்று தரையில் விழுந்தது. அவனுக்குச் சட்டென்று வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. சுற்றியிருந்தவர்கள் பார்த்த பார்வையின் அனல் வெகு நாட்களாய் அவனைப் பொசுக்கிக் கொண்டேயிருந்தது.

****

வாங்கியவுடன் வீட்டை விற்பது என்பது மிகவும் அபாயகரமானது என்பதை வாசு சில நாட்களில் அறிந்துகொண்டான். வீட்டைப் பற்றி தெரிந்த எவரும் வாங்குவதற்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் கேட்கும் விலை முப்பது வருடத்திற்கு முந்தைய விலை. வாங்கிய வீட்டை விற்கவும் முடியாமல், வைத்துக்கொள்ளவும் முடியாமல் சிரமப்படும் வாசுவின் துயர் தீர்க்க வானுலகத் தேவதைகள் எவரும் வராததால், அவன் அந்த வீட்டிலேயே தொடர்ந்து கஷ்டப்படும் முடிவை எடுத்தான்.

வெகு நாட்கள் கழித்து ஒரு பின்னிரவில் மீண்டும் விழிக்க நேர்த்த வாசு, பின் மீண்டும் தூங்கிக்கொள்ளவே இல்லை. சமையலறைக்குச் சென்றான். கரப்பான் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்த தண்ணீர் ஜாடியை நெருங்கி கரப்பான் பூச்சிகளைத் தட்டிவிட்டான். அவை கீழே விழுந்து அவன் பாதங்களின் மேல் ஏறின. மீண்டும் கால்களை உதறிக் கொண்டான். தண்ணீருக்குள் கரப்பான் பூச்சிகள் எதுவும் மிதக்காமல் இருந்தது சந்தோசமளித்தது. தண்ணீர் குடித்தபின் மீண்டும் பெட்ரூமிற்கு வந்து மனைவிக்கு அருகில் படுத்துக்கொண்டான்.

உறக்கம் வராமல் படுத்தே இருப்பது எவ்வளவு பெரிய தண்டனை என்பதை அவன் உணரத் துவங்கிப் பல இரவுகள் கழிந்துவிட்டன. அப்படியே உறக்கம் வந்தாலும், தன் வீடு, கரப்பான் பூச்சிகளின் கால்களுக்குக் கீழே அந்தரத்தில் நிற்பது போன்ற கனவுகள் அடிக்கடி வருகின்றன. சில இரவுகளில், கரப்பான் பூச்சிகள் சுனாமி அலைகளாய் உருக்கொண்டு தன் வீட்டுக் கதவுகளை உடைத்தெறிந்து வீட்டின் உத்தரத்தை நிறைப்பது போன்ற கனவுகள்.

அறையின் மங்கிய வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருந்த வாசுவிற்குள் திடீரென்று ஒரு கேள்வி எழுந்தது. பக்கத்தில் அலுப்புடன் படுத்திருக்கும் கர்ப்பிணி மனைவி ரேணுவும் தன்னைப் போல கரப்பான் பூச்சிகளோடு வாழப் பழகிக்கொண்டு விட்டாள். நாளை தன் மகனோ, மகளோ எப்படி இந்தக் கரப்பான்பூச்சிகளைச் சகித்துக் கொள்ளப் போகிறார்கள். அவர்கள் கேட்டாள் என்ன சொல்வது? என்று நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு விடிகாலையில் ஒரு விடை கிடைத்தது. அப்படி ஒரு கேள்வியைத் தன் குழந்தை கேட்டால், கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதன்பின் எல்லா இரவுகளிலும் அவன் நன்கு தூங்கினான்.

*******

வேதாளம் கதை சொல்லி முடிக்கையில் பின்னிரவு கழிந்து வைகறை துலங்கிக் கொண்டிருந்தது. விக்ரமாதித்யன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். வாகனங்களற்ற சாலை ஈரப் பளபளப்போடு வானைப் பார்த்து விரிந்திருந்தது. மெல்லிருள் மட்டும் சாலையில் பயணித்தபடி இருந்தது. குளிர்ந்த அமைதியையும் ஈரக் காற்றையும் கிழித்து வேதாளம் செருமியது.

“விக்ரமா! என்னுடைய இறுதி வினா இது. இந்தக் கதையில் கரப்பான் பூச்சிகளால் ஒரு குடும்பம் சந்திக்கும் அவதிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. என்னுடைய வினா,கரப்பான் பூச்சிகள் இல்லாத வீட்டை வாசு தன்னுடைய குழந்தைகளுக்கு அளிக்க இயலுமா? சீக்கிரம் விடை சொல்”.

கேள்வியின் சிக்கலை உணர்ந்த விக்ரமாதித்யன், தன்னுடைய இயல்பான புத்திசாலித்தனத்தால் பதிலையும் சிக்கல் தன்மை நிரம்பியதாய் அமைக்க எண்ணினான். நொடிநேரச் சிந்தனைக்குப் பின் தன்னுடைய பதிலைச் சொல்லத் துவங்கினான், “வேதாளமே! இது போன்ற கேள்விகளுக்கு எப்போதும் ஒற்றைப்படியான பதில் அளிக்கவியலாது. கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகை எப்படி உருவாக்க முடியாதோ அதுபோல அவைகள் இல்லாத வீட்டையும் உருவாக்க முடியாது. வீடு என்பது உலகின் சுருங்கிய வடிவம். இந்த உலகில் மனிதர்கள் எப்படிப் பலவிதமான ஜீவராசிகளோடு தாங்களும் இணக்கமாக வாழ்கிறார்களோ அதுபோல வாசுவின் வீட்டிலும் அவர்கள் இந்தப் பூச்சிகளோடு இணக்கமாக வாழத்தான் வேண்டும். வாசுவின் துரதிர்ஷ்டம் கரப்பான் பூச்சிகள், அளவுக்கு அதிகமாக அவன் வீட்டில் இருந்ததுதான். அவனுடைய அதிர்ஷ்டம் அவைகள் விஷத்தன்மையில்லாத பூச்சிகள். விஷத்தன்மையுள்ள பூச்சிகளாக இருந்தால்தான் அவனுடைய நிலைமை சிக்கலாகியிருக்கும்”.

“மனிதர்கள் விலங்குகளும் பூச்சிகளும் வாழ்ந்த காட்டை அழித்துதான் நகரையும் வீடுகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். தங்களுக்கு உரிய காட்டை அழித்து நகரத்தை உருவாக்கிய மனிதர்களிடம் விலங்குகளும் பூச்சிகளும் எப்படி எந்தப் புகாருமற்று வாழ்கிறதோ, அதுபோல மனிதனும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.

வாசு செய்ய வேண்டியதெல்லாம் கரப்பான்பூச்சிகளோடு எப்படி இணக்கமாக இருக்க வேண்டும் என்று தன் குழந்தைகளுக்குக் கற்பிப்பதுதான். ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் இல்லாத வீடு என்று எதுவும் இந்த உலகத்தில் இல்லை. இந்தப் பூச்சிகளை ஒழித்துக் கட்டுவதைக் காட்டிலும், அவைகளை நண்பர்களாக்கிக் கொண்டு தன் மனதிலுள்ள துவேஷத்தைக் கொல்வதுதான் வாசு செய்ய வேண்டியது. இதுவே எனது பதில்”.

சொல்லிவிட்டு விக்ரமாதித்யன் வேதாளத்தைப் பார்த்தான். வேதாளம் அதுவரை தான் சந்திக்காத இக்கட்டில் இருந்தது. அந்தப் பதில் சரியா தவறா என்று அதனால் முடிவெடுக்க முடியவில்லை. நெடுநேரம் யோசித்தும் வேதாளத்திற்கு அந்தப் பதிலில் சந்தேகம் இருக்கத்தான் செய்தது. சந்தேகத்தின் பலனை விக்ரமாதித்யனுக்கு அளித்து விட முடிவு செய்தது வேதாளம்.

“விக்ரமா! நீ சொன்ன பதிலில் எனக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றாலும், அது தவறான பதில் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், உண்மையின் ஒரு துளி உன் பதிலில் நிறைந்திருக்கக் காண்கிறேன். நீ செல்லலாம்…” என்று அவனுக்கு தன்னிடம் இருந்து விடுதலை அளித்தது வேதாளம். மறுநொடியே விக்ரமாதித்யன் ஓடத் துவங்கினான். சில நொடிகளில் தூரத்தில் ஒரு புள்ளியாய்த் தெரிந்து வேதாளத்தின் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் மறைந்தான் அவன்.

வேதாளம் சந்தோஷமாகச் சாலையோரம் இருந்த மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது. அரைத்தூக்கத்தில் இருந்த வேதாளத்தின் கண்களுக்கு நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சிகள் தென்பட்டன. அதிர்ச்சியடைந்த வேதாளம் கண்களைக் கசக்கி மீண்டும் உற்றுப் பார்த்தது. நல்லவேளை, அவை யாவும் மரத்தின் இலைகள். நிம்மதியுடன் கிளையில் சாய்ந்து படுத்த வேதாளத்தின் கண்கள் உறங்குவதற்கு முன் கிளையினூடாக கபில நிறத்தில் சிறிய துண்டுகளாகத் தெரிந்த வானத்தை வெகு நேரம் வெறித்துப் பார்த்தபடி இருந்தன.


புகைப்படம்: விஸ்வநாதன்

1 thought on “அந்தரத்தில் நிற்கும் வீடு”

  1. ‘அந்தரத்தில் நிற்கும் வீடு’ வழியாக வேதாளத்திடமிருந்து விக்கிரமாதித்தியனுக்கு விடுதலை கிடைத்ததில் மகிழ்ச்சி. பழமையும் புதுமையும் கலந்த நவீனப் படைப்பு. இக்கதையை வாசிக்கும் போது கனேஷ் பாபுவின் ‘ஒரு பிடி கடுகு’ கதை சாயுங்கால நிழல்போல் கண்முன் நீண்டு விரிந்து… அவருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்