எம்.கே.குமார் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

வானவில்லின் மடிப்புக்குள் நினைவுகளோடு உருளுகிறேன்
நினைவுப்புதைகுழி அழுத்தும் மணலில்
தூவித் தெறிக்கிறது ஒற்றைக்காம்பு
எழுந்து நிமிர்ந்து பார்த்தவள்
கட்டைவிரலால் எத்துகிறாள்
இன்னும் கொஞ்சம் சிறுமணலைக் கண்களின்மீது
சூறைக்காற்றில் சுழலும் அவள் சிலந்திவலைக் கூந்தலைத் துழாவுகிறேன்
இந்திரிய மணம் பெற்று எழுச்சியுறுகிறாள் அவள்
புதைகுழியில் கண்கள் பார்க்க என்னை நோக்கி ஓடி வருகிறாள்
எட்டிப் பிடித்தாள் காற்றின் கிளையை
பறந்தோடிய அவள் கீழாடையைப் பிடித்துகொண்டு எழும்ப முயன்றேன்
எட்டி என் தலையை உதைத்தவளின்
இடுப்பு கரிய மிருகம் கண்ணைச் சிமிட்டுகிறது
அதன் ஒரு முனையில் கயிறு இறுக்க
மறுமுனையில் நான் இறுக..

மறையும் வானவில்லில்
நினைவுப் புதைகுழி உமிழ்கிறது இருகுமிழிகளை..


343m/s

என் காதலறி என் காதலியே..
அகம் இழுத்து மெய்யழித்து
ஏந்துவாய் என் செப்புவாய்
முத்துச்சிப்பிவாய்
உயிர் திறக்கும் நுதலொற்றி உயிர் கேட்கும் இதழொற்றி
இச்சவம் கேட்கும் முச்சுவையை காதல் அச்சுவையை
உன் அகவாய் தரும் இகவாய்
மன நெகிழ்வாய் செப்புவாய் செப்புவாய் என் காதலியே..

போதும்…

என்னைவிட்டுப் போகிறாயா
இனிமேல் நாம் சந்திக்க மாட்டோமா
நினைவிலுறும் பழஞ்சொல்லைக் கேட்க வேண்டாமா
இதுதான் உன் கடைசி வார்த்தையா
கண்களை மூடிக்கொள்கிறேன்
காதுகளைச் சாத்திக்கொள்கிறேன்
உயிரை இங்கே நிறுத்திக்கொள்கிறேன்
இனி இது ஓடாது தேடாது உணராது
காட்டு என் கடைசிச்சொல்லை..
இது நான் இது அவன் இது எவனோ..
காற்றில் பரவி நிற்கும் சொற்களை அறி!
காலமற்று கர்வமற்று
உனக்கானது உனக்கு… எடுத்துக்காட்டுக என் இறுதிச்சொல்லை…

ஹே ராம்
தேவனே என்னை ஏன் கைவிட்டீர்
அஸ்வத்தாம ஹத
உன் தர்மங்களையும் பாபங்களையும் எண்ணாது
அவைகளை விட்டுவிட்டு
கலங்காது என்னைச் சரணடை!

நகரும் காற்றைத் துழாவுகிறேன்
எந்தச் சொல் என் சொல்?
எங்கே நீ.. உன் சொல் எங்கே
காற்றில் தவழ்ந்து விழுகிறது இந்தச் சொல்
காலம் கடந்து அலையும் இன்னுமொரு அலைவரிசையில்!

1 thought on “எம்.கே.குமார் கவிதைகள்”

  1. இதில் நம் படைப்புகளை வெளியிட என்ன செய்ய வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்