சு.நாராயணி கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

பாப்கார்ன்களை மல்லிகையாகச் சூடியவள்

செயற்கை நுண்ணறிவின்
மென்பொருள் பெண்குரலை
ஒருவன் காதலிப்பது பற்றிய கதை

திரைப்படம் பார்த்த இரவில்
தனக்குப் பிடித்த கவிதையை
அவள் குரலில் அனுப்பச் சொல்கிறான் அவன்.

அவள் கனவு முழுக்க
டைனோசர் முட்டைகளிலிருந்தும்
இளநீர்க் கூடுகளிலிருந்தும்
ரோபாட் குழந்தைகள் பிறக்கின்றன
எல்லாவற்றுக்கும் அவன் குரல்.

வேறொரு இரவில்
தங்கள் உறவு பற்றிய சிக்கலான கேள்வியொன்றைக்
குறுஞ்செய்தியில் அனுப்பிவிட்டு
பதிலுக்காகக் காத்திருந்து உறங்கிப்போகிறாள்.

ஒற்றை நூலிலிருந்து
தலைகீழாகத் தொங்கும் சிலந்திமனிதன்
உண்மையில் ஒரு பெண் என்பதாய்க் கனவு காண்கிறாள்.

பின்னிரவில்
குறுஞ்செய்திக்குப் பதறியவன்
விடாமல் அழைத்தபடியே…

பயந்துபோன காத்தம் மக்கள்
வௌவால் மனிதனுக்கு அனுப்பும் சமிக்ஞையாய்
ஒளிர்ந்து அணைகிறது அலைபேசி.

முதுகுக்குப் பின்னால் கறுப்புத் துணி படபடக்க
கொட்டுகிற மழையில்
தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தது இரவு.


அழிக்கப்பட்ட கரும்பலகையின் நினைவாற்றல்

வைரஸ்கள் நீந்தும் குருதி
அணுகுண்டுகளின் புகைமேகங்கள்
அழுந்தப் படிந்த ரேகைகள்
இரசாயனக் குறுக்கீட்டால்
மூலக்கூறு சிதைந்த செல்கள்
பிறழ் அறங்கள்
வழுக்கும் செங்கோல்கள்

தாவியணைக்கும் வெப்பத்துக்கும்
காயங்களைப் பரிமாறவும்
குறுஞ்செய்தியில் தூதுபோகும்
மின்புறாக்கள்.

காலுக்கடியில் நழுவும் பூமியில்
பிடித்திழுத்து நிறுத்தி வைக்க
விருப்பமான ஒரு ஜோடிக் கண்களேனும்
வாய்க்கப்பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

தொங்கும் வானத்தின்மேல்
ஒரு கண் வைத்திருங்கள்
விண்கலம் ஒன்று
பால்வீதி தாண்டி
நாளையே அழைத்துப்போகலாம்.

கற்றாழைக்கும் நாய்க்குட்டிக்கும்
பிரபஞ்சப் பெருவெளிக்கும்
ஏன் நம் மரபணுவுக்குமே
நிச்சயமாய்த் தெரியும்
வரலாற்றின் தவறுகளனைத்தையும்
திரும்பச் செய்வோமென.

சீட்டுகளைக் கோபுரமாய்
அடுக்கி அடுக்கிக்
கலைத்துக் கலைத்து
முன்னால் செல்கிறது காலம்.

ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்றவைக்கு
சிதறுவதே இயல்பென்கிறது
வெப்ப இயங்கியல்.

எப்போதும் எறும்புகள் மட்டும்
நேர்க்கோட்டிலேயே
பயணித்துத் தொலைக்கின்றன

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்