வான் நகும்

5 நிமிட வாசிப்பு

துள்ளி எழுந்தமர்ந்தேன். மன நல ஆலோசகர் ஒருவர் வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் எதிரில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு முறை கடுங்குளிர் உறக்கத்திலிருந்து மீளும் பொழுதும் இந்தச் சடங்கு நடந்தேற வேண்டும் என்பது சட்டம். தீராத துக்கத்தில் அழும் குரலொன்று பக்கத்து அறையிலிருந்து வந்தது. சரிதான், ஆஷ்வெல் எழுந்துவிட்டான்.

என்னிடம் சொல்லிக்கொண்டு ஆலோசகர் விரைந்தார். வெளிர் நீலக் காலுறைகளும் கருஞ்செருப்புகளும் எனக்காகக் காத்திருந்தன. இந்த முறை என் விண்ணப்பப் படிவங்களைக் கூர்ந்து படித்திருக்கிறார்கள். சென்ற முறை அந்திச் சிவப்பில் செருப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதே நிறத்தில் அப்பா ஈருந்து ஒன்று வைத்திருந்தார்.

கொஞ்சம் வேகத்தைக் கூட்டி வகுப்பை நோக்கி நடந்தேன். தோரணங்களில் யானைகள் பிளிறிக்கொண்டும், மயில்கள் ஆடிக்கொண்டும், தாஜ்மஹால்கள் மிதந்து கொண்டும் இருந்தன.

“இந்திய வாரம்” என்றாள் கிவூ. வெளிப்படையாகத் தெரியும் ஒன்றை நுட்பமான அவதானமாக விற்பவள். தலையை ஆட்டினேன். சென்ற வாரம் மக்தீரா கௌர் இறந்திருந்தாள். அம்மா இருந்தால் என்னை மோசமான ஓம்புயிரி என்று கிண்டலடித்திருப்பாள். மகி எங்கிற மக்தீராதான் இந்த உலகத்தின் கடைசி இந்தியப்பெண் என்று அவளுக்குத் தெரியாது.

வகுப்பு வாசலில் இருந்த கியொஸ்க் திரையில் ஏசு கிறிஸ்து போல ஒருவரின் உருவம் வந்து போனது. மூன்று நாட்களில் வாடிப்போகும் மலர்களைப் பற்றி அவருடைய கவிதை ஒன்றின் மொழியாக்கம் சுருள் சுருளாக மின்னிக் கொண்டிருந்த்து. தொடுதிரையைச் சொடுக்கினேன், இந்திய மொழி வகுப்புகள் பதிவேட்டில் என் பெயர் சேர்ந்துவிட்டது. இயல்பாக உதடுகள் குவிந்து சீட்டியொலி என்னுள்ளிருந்து புறப்பட்டது. கிவூ என்னை ஒரு நோயாளியைப் பார்ப்பது போல் பார்த்தாள். ஆஷ்வெல்லும் மேகனும் ஒருவரையொருவர் நோட்டம் விட்டுக்கொண்டனர். நெடு நாள் தோழர்களின் அல்லது புதிய காதலர்களின் சங்கேத மொழி அது, அவர்கள் மட்டும்தான் வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து வைத்துள்ளார்கள் என்று அவர்கள் மனப்பூர்வமாக நம்புவதன் அடையாளம். நல்லவேளை மணி அடித்தது.

மகியின் தந்தைகளின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். அணுக்கத் தோழர்கள், உறவினர்களின் எண்ணங்களையும் ஒத்திசைவுடன் பார்க்கலாம். அதற்காக வகுப்பை நிறுத்துவானேன்? மிஸ்.ஜாய் பயந்துவிட்டார். முக்கோணவியல் பாடத்தில் கவனம் செலுத்தச் சொல்லி இளைத்தே விட்டார். நான் முழுக்கவனத்துடன் முனைந்தேன். பூஜ்ஜியம் என்று வந்துவிட்டது, அதுதான் சரியான விடை. அதிகப்படியான கவனத்தைக் கோரிவிட்டு இறுதியில் சூனியம் என்று எந்தவித முன்னறிவிப்புமின்றி வருவதை என்னால் ஜீரணிக்க முடியாது. ஒன்றோ, முடிவிலியோ வரலாம் என்று தோன்றும். இன்றைக்குப் பூஜ்ஜியம்கூடப் பிடித்திருந்தது. ஒன்றின் பூரணமும் முடிவிலியின் எல்லையின்மையும் சாவுக்குத் தொலைவிலிருப்பது போல் தோன்றியது

ஆனால் அதையும் செய்யாமல் சிலர் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தார்கள். முக்கோணவியல் என்ன பெருங்குற்றம் இழைத்தது?

மகியின் புனிதமான இதயத்தை உணராதவர்கள் பாதுகாப்பு அறையிலிருந்து என்ன லாபம் என்று மேகன் சத்தமாகவே முழங்கினாள். மாசடைந்த உலகுக்குள் புது உயிர்களைப் பெறுவதிலும், இரசனையற்ற பணக்காரர்களிடம் கலை வளர்ப்பதற்கு நிதி திரட்டுவதிலும் என்ன லாபமோ அதேதான் என்றெண்ணிச் சிரித்துக்கொண்டேன். சொல்லிவிடலாமா? புவியியல் ஆசிரியர் மிஸ்டர்.கபோலா வாசலில் தோன்றிவிட்டார். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.

நுண்ணியிர்கள், பூஞ்சைகளின் வீச்சைப் படங்களின் மூலமாக விளக்கிக் கொண்டிருந்தார். குமட்டிக்கொண்டே பிரமித்துப்போனேன். மனநல ஆலோசகரைச் சந்திக்க வேண்டி மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

“துயரத்தை அறிவுப்பூர்வமாகவும் கடந்து செல்லப் பாருங்கள். உணர்ச்சிகளுக்கு மட்டும்தான் இசைவேன் என்று அடம் பிடிக்கக்கூடாது” என்றார். “நுட்பமாக விஷயத்தைப் புரிந்துகொண்டால் பேரழிவிலிருந்து மீண்டு வர புதிய வழிகள் திறக்கும். ஒரு நாள் வானத்தைக்கூடப் பார்க்கலாம், சொல்வதற்கில்லை.”

“ஆஹ்ஹ்ஹ்” என்ற இறைச்சல் வகுப்பை நிறைத்தது. மிஸ்டர்.கபோலா வானத்தைப் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியும்.

“அறிவியல் வகுப்பிற்கு வழி மாறி வந்துவிட்டீர்களா?” என்று ஒருவன் கேட்டே விட்டான்.

“எல்லாமே புவியியல். ஆனால், புவியியல் என்பது முதலில் அறிவியல்” என்றார் விரலைச் சொடுக்கியபடி. “சரி நெகிழிப்பூஞ்சைகள் முதலில் எங்கிருந்து எப்பொழுது பரவ ஆரம்பித்தது? சொல்லுங்கள் பார்க்கலாம்”

பதில் தெரியும் எனக்கு. பெற்றொரைக் காவு வாங்கிய பூஞ்சை அது. நுண்ணியும் பூஞ்சையும் சேர்ந்தியங்கும் விநோதமான உயிர்க்கொல்லி. எதற்கு வாயைத் திறந்து வம்பை விலைக்கு வாங்கி என்று மிஸ்டர்.கபோலாவின் கண்களைச் சந்தித்துக்கொள்ளவில்லை.

“லிசா?” மிஸ்டர்.கபோலா சுட்டினார்.

“ஜனவரி 3020. ஈரானில் தொடங்கியிருக்கலாம், அவர்கள் அறிவிக்கவில்லை. அங்கிருந்து சீனா, வட கிழக்கு இந்தியா வழியாக தென் இந்தியா. இந்தியப் பெருங்கடல் தொட்டு வணிகம் செய்யுமிடம் எல்லாம் தனிச்சையாக நெகிழிப்பூஞ்சைகள் இறக்குமதியாகின.”

மிஸ்டர்.கபோலாவின் முகத்தில் ஆச்சரியமும் பெருமையும் மாறி மாறித் தோன்றியது. பொருட்படுத்த வேண்டியவளில்லை என்று அனுமானித்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வான்கூவர் வரை வந்த வழிப் பயணத்தை நான் விவரிக்கும் பொழுதுகூட என்னை யாரும் பார்க்கவில்லை. அதாவது, அவர்கள் யாருக்கும் என்னைத் தெரியாது.

அந்தத் தோற்றம் எனக்கு நானே உருவாக்கிக்கொண்டது, கடும் மனப்பழக்கத்தைக் கோரியது. சிரித்தால் சிரிப்பேன், அதுவும் என்னை நோக்கித்தான் சிரிக்கிறார்களா என்று உறுதி செய்துகொண்டு. பேசினால் மறுமொழி கூறுவேன். ஆனால் ஒரே நபருடன் தொடர்ந்து அருகமர்ந்து உரையாட வேண்டிய சூழல அமையாமல் பார்த்துக்கொள்வேன். நேரத்தைப் பரிமாறுவது ஒரு துளி இதயத்தைப் பரிமாறுவது போல் என்று கேள்வி. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும், சொந்தக் கதைகளைத் துருவி அறிந்துகொள்ள எத்தனிக்கும் பேரைக் கையாளும் வழி, அவர்களைத் தாண்டிச் செல்வது என்று எனக்குத் தெரியும்.

அதற்காக நான் தனிமரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். மனிதரின் நம்பிக்கையும் வேண்டும், நீண்ட இடைவெளியும் வேண்டும். காற்றில் பின்னப்பட்ட இரும்புத்திரைப் போல. புது ஊரில் நாடற்றவனைப் போல. உற்சாகம் கலந்த எச்சரிக்கையுணர்வு நிலை. அதுவும் ஒரு விதமான அறிவியல் என்று மிஸ்டர்.கபோலா ஒத்துக்கொள்ளக் கூடும்.

இப்போதைக்கு அவர் உலக வரைபடத்தை எங்கள் தொடுதிரை சாதனத்திற்கு அனுப்பிப் பூஞ்சைகளின் பட்டியலைக் கொடுத்து அது பரவத் தொடங்கிய நாடுகளின் பெயர்களைக் குறிக்கச் சொன்னார். வகுப்பில் முதல் ஆளாக நான் முடித்துத் திரையை அணைத்ததை மிஸ்டர்.கபோலா பார்க்கத் தவறவில்லை.

ஆஷ்வெல், மேகன் மற்றும் கிவூவும் பரபரப்பாகப் படியிலிருந்து இறங்கி வந்தார்கள். “மிஸ்டர்.கபோலா என்ன இருந்தாலும் இப்படியா விவஸ்தை இல்லாமல் பாடம் எடுப்பார்? மிருக இனம்” மேகன் மறுபடியும் சீண்டினாள்.

“இந்திய மொழிகள் வகுப்பிற்குச் செல்ல வேண்டும்” என்று நான் முணுமுணுத்தேன்.

“உனக்கு மகியை அவ்வளவு நெருக்கமாகத் தெரியாது என்று எனக்குத் தெரியும். அதற்காக மிஸ்டர்.கபோலாவைப் போல ஜடமாகிவிடாதே. அணுக்கமானவர்களின் இறப்பின் வலியை உணராமல் போய்விடுவாய்.”

“அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளுடைய பெற்றோர் பூஞ்சைக்குப் பலியானவர்கள்” ஆஷ்வெல் உளறிக் கொட்டுவான் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன். அண்டை வீட்டிலிருப்பவர்கள் நம்மை நன்கறிந்தவர்கள், எதையுமே மறைக்க முடியாது.

கிவூ எதையோ சொல்ல வாய் திறந்தாள், கையைக்காட்டி நிறுத்தினேன்.

“எனக்கு நிஜமாகவே தெரியாது” என்றாள் மேகன் கண்கள் தளும்ப.

“எனக்குப் பேசிப் பழக்கமில்லை” என்று கூறி ஆஷ்வெல்லை முறைத்தேன். இன்னும் ஒரு வாரத்திற்குப் பள்ளியின் சமூக வலைத்தளங்களில் என் தலை உருளும் என்று அவனுக்குத் தெரியும். தேவையில்லாத விளம்பரம்.

“ஏன், உன்னை யாராவது புரிந்துகொண்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறாயா?” கியூவின் கேள்வி மனதைத் துளைத்தது.

எப்படி இந்த இடத்தை விட்டு நகர்வது என்பதைத் தவிர வேறெதுவும் மனதில் ஓடவில்லை. ஆனால் முடியாதென்று தெரியும். வெளியுலகத்தில் எதற்கும் உத்தரவாதம் இல்லை. தெரிந்தும்தானே இவ்வளவு பாதுகாப்பு வளையங்களையும் மீறி மகி கதவைத் திறந்து ஒடினாள். அதற்கு விலை, அவள் உயிர், எஞ்சியுள்ளவருக்குத் தூய்மைப்படுத்தல் சடங்கு, கடுங்குளிர் பேருறக்கம். உடலைப் பதப்படுத்துவது போல், மனதைப் பதப்படுத்துவதற்குக் கருவிகள் இல்லை என்பது அப்பொழுதுதான் எனக்கு உதித்தது.

“இன்றைய பாடம் கடுமையாக இருந்ததா?” பேச்சை மாற்றும் கிவூவின் குரல் ஆற்றுவெள்ளத்தைத் தாண்டி என் காதில் விழுந்தது. அவள் குரலில் தேர்ந்த மனநல ஆலோசகரின் கரிசனம் தெரிந்தது. பதில் சொல்லவில்லை என்றால் நீருற்றாத உள்ளகச் செடிகளைப் போல் அவள் முகம் சுணங்கிவிடும் என்று தோன்றியது. அந்த எண்ணம் திடீரென்று கலக்கத்தை ஏற்படுத்தியது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

“அது…பெற்றோர்…அதை…” சொற்கள் ஏன் வாக்கியமாகவில்லை என்று தெரியவில்லை.

“தப்பி ஓடாமல், நீந்திக் கடக்க முயல்கிறாய், அல்லவா? துயரத்தின் நாடகத்தன்மையை எப்படிக் கடப்பாய், அது கொண்டாட்டத்தைவிடக் கருணையற்றதுதானே?” அவள் விடுவதாக இல்லை.

“உன்னைப் போல் எனக்குப் பேசத் தெரியாது” என்னுடைய மௌனத்தை என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. “தீர்ப்பளிக்காமல் இருக்க முடியுமே? எல்லாருக்கும் உவப்பான மன்றாட்டத்தை என்னிடமிருந்து எதிர்பாராதவரையில் என்னால் இயங்க முடியும் என்று நினைக்கிறேன்.”

“பெருவலியின் தீவை அமிழ்ந்து கடப்பவர்களுக்கு வானம் காத்திருக்கிறது என்று என் தந்தை கூறுவார். புரிகிறதா?” என்றாள். அவள் விழிகளில் சொல்லுக்கடங்காத பெருநிலம் விரிந்திருந்து.

ஆஷ்வெல்லும் மேகனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை. தூரத்தில் சிறகு விரித்துக் காற்றைக் கிழித்துச் செல்லும் பறவையின் ஒலி கேட்பது போல் இருந்தது. கிவூ திரும்பி நடக்கத் தொடங்கியிருந்தாள்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்