வே.நி.சூர்யா கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

04.15 AM

இத்தனைக்கும் நான் வெறுமனே நடந்துதான் செல்கிறேன்
எனக்கு என்னவோ ஒரு சீசாவில் இருப்பது போலவே இருக்கிறது
அதுவும் ரொம்ப நேரமாக..
அடடே.. உண்மைதான் போல
இரண்டு பக்கமும் சாட்சாத் நானே அமர்ந்திருக்கிறேன்
இங்கே என் கால்களால் மண்ணை எம்பி அழுத்தி மேல்நோக்கிப் போகிறேன்
அந்தப் பக்கம் நான் கீழே வருகிறேன்
பரவாயில்லையே
இப்படியே நாம் விளையாடிக் கொண்டிருப்போம்
இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கிறது
சூரியன் தன் கதிர்களை அனுப்பி வைக்க..


கண்ணாடிக் குவளை

மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப
நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. ரகசியமாய்த் தவறி
விழாது என எண்ணுகின்றேன். சில்லுகள் தங்களைக் கணத்தில்
கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைந்த காட்சியைப்
பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் என் அடுத்த
எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை..

2 thoughts on “வே.நி.சூர்யா கவிதைகள்”

 1. கவிதைகள் இரண்டும் நன்றாக வந்துள்ளன.
  முதல் கவிதை மிகச்சிறப்பாக உள்ளது.

  இரண்டாவது கவிதை

  / விழுந்த சப்தம்
  உடைந்த காட்சிையைப்
  பொறுக்கிக்கொண்டு மறைகிறது/ இந்த அற்புத வரிகளைக் கொண்டிருந்தாலும் எதையோ தவற விடுவது போல் தோன்றுகிறது

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்