கலைப்படுத்தப்பட்ட ஒரு துயரம்

4 நிமிட வாசிப்பு

கோ. கமலக்கண்ணனின் வட்டப்பாதை சிறுகதை குறித்து சில…

‘சாய்ந்தும், வளைந்தும், களைந்தும் கிடக்கும் எதுவும் எனக்குள் எதுவும் துன்பத்தைத் தருகிறது’ என்ற ஒற்றை வரிதான் இந்த முழு கதைக்குமான மூலம் என்று நான் புரிந்துகொள்கிறேன்

‘வாசனையைப் போல இனிய துணை யாரும் இருந்துவிட முடியாது’ என்ற வரியின் மெல்லிய கோடு கமலக்கண்ணனின் மனநிலையை எனக்கு மேலும் எளிதாக்குகிறது.

‘படிமங்களாகவும், சொற்களாகவும் எழும் நினைவுகள் துரதிருஷ்டவசமானவை’ என்ற வரி ஆடும் அமுக்குணியாட்டத்தில் உள்ள வருத்தம் என்னையும் வருத்தமுறச் செய்கிறது.

‘வட்டம்தான் பதறுகிறவர்களுக்கு ஆறுதல்’ என கமலக்கண்ணன் தன்னைத் தணிவித்துக்கொள்வது போல என்னைத் தணிவித்துக் கொள்ளமுடியவில்லை.

‘வட்டப்பாதை’ கதையில் ஒருவன் நண்பர்களோடு சேர்ந்து புஹாரி உணவகம் சென்று உண்கிறான். பிறகு வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துகொள்வதற்கு ஒத்திகை செய்யலாமென நினைக்கிறான். அவனுக்குள் இரண்டு ஆண்டுகளாகவே தற்கொலை செய்யவேண்டும் என்ற மன உந்துதல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வாரம் கழித்து தற்கொலை செய்ய வேண்டுமென ஒரு நாளை முடிவு செய்கிறான். தற்கொலைக்கு ஒத்திகை பார்ப்பதற்காக அப்பொழுது தூக்கிலிடுவது போல் நினைத்துப் பார்க்கிறான்.

தூக்கிலிட்ட பிறகு கால்கள் காற்றில் ஆடுகிற ஆட்டத்தை லயத்திற்கேற்ப ஆடுவதாக நினைத்து ரசித்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு அருமையாக ஒரு துயரம் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்து அவனுக்கு ஒரு கனவு நீள்கிறது. அதில் வருகிறது ஒரு மலை. அதில் தலையை முட்டிச் சப்பையாகப் போகிறேன் என்று கனவிலும் ஒரு தற்கொலை, ஒரு துயரம், ஒரு பதற்றம், ஒரு பாதுகாப்பற்ற நிலை துரத்திக் கொண்டிருக்கிறது. நிலம் பிளக்கிறது; மண் பீய்ச்சியடிக்கிறது. உடனே விழிப்பு வருகிறது. அப்பொழுதும்கூட மரண ஒத்திகைக்கு மறந்துவிட்ட வருத்தமே அவனுக்குள் மேலிட்டு நிற்கிறது. இரண்டு ஆண்டுகள் உள்ளுக்குள் வைத்துப் பொட்டு வைத்து, பூ முடித்துச் சோடித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்ற விசயமல்லவா…

வெளியே யாரோ அழைப்பு மணியை அழுத்த பழகிய முகம் போல் ஓர் இளைஞன் வந்து நிற்கிறான். அவனைப் பார்க்க புஹாரி உணவகத்தில் உணவு பரிமாறிய இளைஞன் மாதிரியே தெரிந்தது. நீங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவது எனக்குத் தெரியும் என்று இளைஞன் கூறுவது போலக் கதவைத் திறந்தவனுக்குத் தோன்றுகிறது. எப்படியோ அதை அவன் தெரிந்துகொள்கிறான். தற்கொலையை நிறுத்துவதற்கு நான் வரவில்லை. இறக்கப் போகும் நீங்கள் நான் சொல்லுமிடத்தில் வந்து அமர வேண்டும். அவ்வாறு செய்தால் சில உயிர்களைக் காப்பாற்றலாம் என்கிறான். அவன் சொல்வதைக் கேட்டுத் தற்கொலை செய்ய ஒத்திகை பார்த்தவன் ஓரிடத்தில் வந்து அமர்கிறான். இங்கிருந்து கதை ஒரு வட்டப்பாதைக்கு வந்தடைகிறது. வட்டப்பாதை சுற்ற ஆரம்பிக்கிறது.

ஓடத்திலிருந்து இறங்கியவுடன் இளைஞன் சொன்ன ஒரு பெட்டியில் தற்கொலை செய்ய நினைத்தவன் ஏறி அமர்ந்துகொள்கிறான். அப்பெட்டி அப்படியே சுழல ஆரம்பிக்கிறது. சுழற்சியின் முடிவில் அவனுக்கு அவனுடைய இறந்த காலத்திற்குச் சென்றுவிட்டது போல் ஒரு கனவு அல்லது கனவு போன்ற எண்ணம் தோன்றுகிறது.

ஒரு கனவு. அந்தக் கனவு முடிகிறது. அது உண்மையிலேயே முடிந்து நனவிற்கு வந்ததும் நனவிலிருந்து ஒரு கனவு பிரிகிறது. இரண்டாவது வந்த இந்தக் கனவு சரியாக அவனுடைய திருமணத்தில் வந்து நிற்கிறது (இவன் ஏற்கனவே திருமணமானவன்). முதல் கனவைத் திருமணத்திற்குப் பின்னதான அழுத்தங்களின் வெளிப்பாடு என்று கொண்டால் இரண்டாவது வந்த நனவு மாதிரியான கனவினைத் திருமணத்திற்கு முன்னதான தவிப்புகளின் அழுத்தங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

கனவு முடிந்து இப்பொழுது நனவிற்கு வந்துவிடலாம். தன்னைச் சிதைத்துக்கொள்ள வேண்டும் என்பவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. தன்னை அழித்துக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டே வரும் தன் மீதும், தன்னைச் சாகவிடாமல் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் அவனுக்குக் கோபம் பொங்குகிறது. அதையும் வெளிக்காட்டக் கூடத் தைரியமில்லாத கோழை அவன். தன்னை அழித்துக்கொள்ளும் நேரத்தில் தன்னை அச்சு அசலாகக் கொண்டு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்க, தானே இன்னொரு முறை பிறந்ததாகவே அவனுக்கு தோன்றியது. தன்னை அழித்துக்கொள்ள இருந்த சூழலில், தான் இன்னொரு முறை பிறந்திருப்பதன் எரிச்சல் அவன் மண்டையைக் குடைய ஆரம்பித்தது. அவன் மீது அவன் கொண்ட கோபம் இப்பொழுது அவனுக்கு அவன் குழந்தை மீது திரும்புகிறது.

‘இது என்னை அவமானப்படுத்தும் அடையாளம்; என்னைக் கூனிக் குறுக வைக்கும் சின்னஞ் சிறிய சிறுமை’ என அரற்றிக்கொண்டு பிறந்த குழந்தையைக் கொல்வதற்குத் துணிகிறான். அப்பொழுது பார்த்துக் கையில் குழந்தையுடன் ஒருவன் வருகிறான். அவன் கையில் வைத்திருந்த குழந்தை தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தவனின் இறந்து போன முதல் குழந்தை மாதிரியே இருந்தது (அவனுக்கு ஏற்கனவே முதலில் ஒரு குழந்தை பிறந்து இறந்திருந்தது). இதுதான் உன்னுடைய முதல் குழந்தை என்கிறான் வந்தவன். இந்த முதல் குழந்தையை வைத்துக்கொண்டு இப்பொழுது பிறந்த அந்தக் குழந்தையைத் தா என வந்தவன் கேட்டான். பிறந்த குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டுத் தற்கொலை செய்யப் போனவன் முதல் குழந்தையை வாங்கிக்கொள்கிறான். இப்பொழுது அவனிடம் ஓர் ஆசுவாச மனநிலை. முதல் குழந்தையை வாங்கிக்கொண்டு மனைவி பார்க்கும் முன்னதாக வந்தவனை, பிறந்த குழந்தையோடு ஓரிடத்தில் ஏற்றிவிட்டான்.

முதலில் தற்கொலை செய்ய முனைந்தவன் ஏறிய அதே ஓடம்தான். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்கொலை செய்யப் போனவன்தான் இறந்து போன முதல் குழந்தையைக் கொண்டு வந்தவன். இறந்து போன முதல் குழந்தை திரும்பி வந்தது ஒரு கற்பிதம். இந்தக் கதையில் வரும் ஓடம், முதல் குழந்தை, வீட்டுக் கதவைத் தட்டிய இளைஞன், உணவு பரிமாறுகிற முதியவர் என எல்லாமே கற்பிதங்கள்தான். கற்பிதங்கள் எல்லாம் சேர்ந்து அப்படியே வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இந்த வட்டத்தின் சுழற்சியை, லயிப்பைக் கதையைப் படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

எப்பொழுதும் வட்டம் விசித்திரமானது. வட்டத்தில் எத்தனையாவது முறையாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாராலும் சொல்ல முடியாது. அயற்சி தந்தால் வட்டத்திலிருந்து வெளியே வந்து அமர்ந்துகொள்ளலாம். மீண்டும் வட்டத்திற்குள்ளே போகவே மனம் துடித்துக் கொண்டிருக்கும். சில நேரத்தில் சுற்றுவது வட்டமென்றுகூடத் தெரியாமல் போகும். அவ்வளவு கிறுகிறுக்கும்.

வட்டம் குழப்பக் கூடியதுதான். குழம்ப வைத்தால்தான் வட்டம். தற்கொலை செய்யப் போகிறவனின் கால மயக்கத்தை, குழந்தையிழப்பால் வந்த மனப் பிதற்றலை கமலக் கண்ணன் ‘வட்டப் பாதையில்’ நன்றாகவே காட்டியிருக்கிறார்; நன்றாகவே சுற்றியிருக்கிறார். கிறுகிறுப்பின் சொக்கு இன்னுமே இருக்கிறது.

நிறைய இடங்களில் கவிதைக்குரிய ‘டச்’ ஐ உணர முடிந்தது.செங்குத்து வசமோ அல்லது கிடை மட்டமோ எந்த வட்டமாக இருந்தாலும் பதை பதைப்போடு சேர்ந்த குறுகுறுப்பும் வரும். அந்தக் குறுகுறுப்பை ‘வட்டப்பாதை’யிலும் உணர முடிந்தது.

‘அந்நியப் பறவை தன் அகத்தில் சம்போகிப்பதை மறைத்துக் கொள்வதைப் போல நிச்சலனம் பூண்டிருந்தது குளம்’ என்பது போன்ற ஒரு வரி வாசகனுக்கு ஆரம்பத்திலேயே (கதையின்) கிட்டிவிட்டால், கதை எவ்வளவு தூரம் கூட்டிப் போனாலும் பின்னாடியே வந்து கொண்டிருப்பான்.

‘காலத்தை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து; அறிந்து கொண்டால் மனிதன் தன் அசவா மூளையைத் தீட்டியபடி தன்னை நோக்கிப் படையெடுத்து வந்து, அவனையும் காயப்படுத்திக் கொண்டு தன்னையும் காயப்படுத்திவிடக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு அதற்கு இருந்தது’ என்று காலம் பேசுவதாகக் கதையில் ஓரிடம் வருகிறது. இது மாதிரியான இடத்திலிருந்து எத்தனையோ கவிதைகள், கதைகள் கிளம்பிச் செல்லலாம். அத்தகைய ஆகப் பெரிய தகுதி அவ்விடத்திற்கிருக்கிறது.

‘ஒரு இலையை ஒளித்து வைத்துக்கொள்ளச் சரியான இடம் கானகம்’, ‘கயிறு ஓர் அற்புதமான கருவி’ ‘சேமிக்கவும் முடியாத செலவிடவும் முடியாத’ (காலத்தைப் பற்றிச் சொல்லும் போது), எந்தப் ‘புள்ளியிலும் விரைத்து நிற்காமல் வளைந்து கொண்டிருக்கும் காருண்யம்’ (வட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது), நான் துயரம் கொள்வது நினைவில் இருப்பவற்றிற்காகவா அல்லது மறதியில் அழிந்தவைக்காகவா என்பது போன்ற நுண்மையான இடங்களை அசைபோட்டுக் கொண்டே இருக்கிறேன்.

நல்லதொரு கதையை எழுதிய கோ.கமலக்கண்ணனுக்கு எனது வாழ்த்துகள்

நல்லதொரு கதையைத் தேர்ந்த ‘அரூ’ குழுவிற்கு எனது பாராட்டுகள்.


புகைப்படம்: PS Bharath

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்