செம்புலப்பெயல்

செம்புலப்பெயல்

4 நிமிட வாசிப்பு

பால்வெளி ஒவ்வொன்றாக அலைந்து, கோடியிலிருக்கும் அந்தக் கசங்கிய வானத்தைத் தேடுவதற்குள் ஜாராவிற்குக் கால் கடுத்துவிட்டது. முன்பெல்லாம் எத்தனை கோள்களைச் சுற்றினாலும் அப்படி வலிக்காது. அறுபது வயதிற்கு மேல் மனித உடல் ஒரு மர்மக்காடு. மனித மனம் எந்த வயதில் மர்ம வேட்கையை ஏற்கிறது என்று சொல்வதற்கில்லை. ஓரிரவில் ஓளி கொள்ளலாம். ஒவ்வோர் இரவிலும் இருள் சூடலாம். அலைந்தலைந்து இருளுக்கும் ஒளிக்குமிடையிலான கைவிடப்பட்ட தொடுவானம் ஒன்றில் கூடலாம்.

இப்படித் தேடி அலைவதற்குப் பதில் பூமியில் இருந்திருக்கலாம் என்று சிலர் கூறலாம். வானத்தை அறுவடை செய்யாமல் பூமியில் வாழலாம்தான். இருந்தென்ன செய்வது என்று பூட்டிய ஜன்னலைக் கொத்தித் திறக்கும் குருவி போல் கேட்டாகிவிட்டது. எவருக்கோ, யாருக்குச் சலிப்பு தட்டக் கூடாதோ, அந்த அவருக்குச் சலித்துவிட்டது. வானலைகள் சலிக்காமல் தேங்கி நின்று பெருகி நிலவை இழுத்துக்கொண்டிருந்தன.

தூசு போல் விண்மீன் ஒட்டிக் கொண்டிருக்கும் இருண்ட வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு சேவி நின்று கொண்டிருந்தாள். அடிக்கடி இடையில் கை வைப்பதும், அங்கியிலிருந்து நினைவுக் கருவியில் எதையோ செலுத்துவதுமாக விரல்கள் படபடத்துக்கொண்டு இருந்தன.

ஜாராவின் பார்வையை உணர்ந்து தன் கருப்பு வெள்ளைக் கூந்தலை நீவியபடி,”ஆமா, பூமியிலேருந்து இங்க வந்தவதான். அங்க வெண்தலை இளமைக்கானதல்ல. என்றாள் சேவி.

“உங்கள பாத்தா அப்படித் தெரியல… இரவு நேரப் பால்வீதி மாதிரி கூந்தல் அழகுன்னு ஒரு ” ஜாரா முடிக்கவில்லை.

“எங்க வானத்தைக் கண்டுபிடிக்க நேரமாச்சா?” சேவி இயல்பாகக் கேட்டாள்.

தோள் குலுக்கிக்கொண்டான், “இல்லை, தடங்காட்டியில வழி சரியாத்தானே கொடுத்திருந்தீங்க. அப்றம் இப்போலாம் பழைய வானம் வாங்குறது அதிகமாகிட்டதால விண்கலப் போக்குவரத்தும் சரியாருக்கு” என்றான்.

சேவியின் இதழ் கோடியது. “பழைய வானம், பொறம்போக்கு வானம், மீன்செய்வானம், கோளிலிவானம். வானத்துக்குக் கோடு கிழிச்சாச்சு. ஒரு காலத்துல இதெல்லாம் வெறும் வெளி. இத பூமிலேருந்து மட்டும் பார்த்து வாழ்ந்தவங்க நாங்க. வானமே எல்லைன்னு நெனச்சிட்டிருந்தோம்.”

சலிப்புடன் ஜாரா, “ஒஹ்?” என்றான். ‘பூமிக்குடிகள்’ என்று எண்ணிக்கொண்டான்.

“வெளி மொத்தத்தையும் அளந்து கூறு போட்டுத் துண்டு வானமாக்கிப் பூமியில ஒவ்வொருத்தனுக்கும் வித்ததெல்லாம் பிறகு. முன்னல்லாம்…”

இடைமறித்து ஜாரா “வானத்த நாட்டுடமையாக்குனது உங்களுக்கு பிடிக்கலைல? எதுக்கு இங்க இருக்கீங்க? அப்டியே பூமிக்குக் குதிச்சிட வேண்டியதுதானே?” என்றான்.

நெற்றி புடைத்துக் கன்னம் சிவக்க காது மடல் துடிக்க நின்றிருந்த ஜாராவை சேவி புழு போல் பார்க்கவில்லை. இருந்தாலும் அவன் அப்படி இலேசாக நெளிந்தது போல் இருந்தது.

“நாங்க பூமியில் அடிமைப்பட்டதால இங்க வந்தவங்க. இங்கயும் கதை அதுதான்னா இரவுப்பால்வீதி வழியா நடந்தே போவோம்”

சேவி பின்னலைப் பின்னிட்டுக்கொண்டாள். ஜாராவின் விழி மாறியிருந்தது,

“இங்க பேதம் இல்லை, ஆனா விதிகள் இருக்கு. அதனாலதான இன்னிக்கிப் பூமிக்கும் வானத்துக்கும் சண்டை வராமல் இருக்கு? அதனாலதானே வானவருங்க அடிச்சுபிடிச்சுக்காம அவங்கவங்க வானத்தை மட்டும் பார்த்துட்டு மகிழ்ச்சியா இருக்க முடியுது?” என்றான்.

“எது மகிழ்ச்சி? வானத்துக்கும் பூமிக்கும் பூட்டு போடறதா?” சேவியின் நெஞ்சுக்கூடு அலை போல எழுந்தமைந்தது.

“எல்லாருக்குமே சொந்தமானது யாருக்குமே சொந்தமில்லை. யாரும் மீனை வெதைக்க முடியாது, அறுத்து வேற கிரகங்களுக்கு விக்க முடியாது. வர்த்தகம் மாறலியே? பூமியில ஒரு மீன் விக்கிற காசுல வானத்துல ஒரு குடும்பம் பறந்துகிட்டுச் சாப்பிடலாம். நீயும் வானத்தைத்தான வித்துகிட்டுருக்க? வானவங்களை மட்டும் சொல்றே? கீழே எல்லாம் நல்லா வாழுதோ? மலைய யாரு உருக்கினது? வானத்தைப் பாக்குற ஒரு மரம் கெடயாது. நம்ம இங்க குடி வந்தப்பவே அவங்க வேர் விளைச்சல்ல இறங்க்கிட்டாங்க. தொடுவானப் புள்ளியில சுவர் எழுப்பினாங்க”

சேவி நெஞ்சில் கை வைத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

“நீ படிச்சவன்னு நினைச்சேன். வேர் விளைச்சல்னு ஓண்ணு கிடையாது, சும்மா இட்ட பெயர்தான்னு கூடவா தெரிஞ்சிக்கலை? மழை இல்லை. சூரியன் இல்லன்னா செடியெல்லாம் மண்ணுல புதையாம என்ன பண்ணும்? கடல் வானத்தோட சேராம எங்க முடியும்? பரவாயில்லை, வர்த்தகப் பாதைகளுக்குத் தடை இல்லாத வரை மக்கள் எப்படி வேணாம் சாவட்டும்.”

“வெத்து சப்பக்கட்டெல்லாம் நேத்து எழுந்தவங்கிட்ட செல்லுபடியாகலாம். பூமிக்கழிவுகள் சூரியனை மறைச்சது மறந்திடுச்சா? பூமி மக்கள் வானத்துக்கெதிரா ஒரு அரசியலும் பண்ணல? ஒரு சட்டமும் போடல?”

“பூமி மக்கள் பூமிக்கெதிராவே நீ சொல்ற எல்லாத்தையும் பண்ணிட்டாங்க.”

ஜாரா வெற்றுப் பார்வை பார்த்தான். அது அவன் சொல்ல எண்ணிய வரி.

“தெரிஞ்சுமா அவங்களுக்கும் வானமும் மழையும் வேணுங்கற?

“ஆமாம்”

“ஏன்?”

“இந்தப் பிரிவினை பொய்.”

“எது பொய்? அப்படியே இருக்கட்டும்.சேர்ந்தா மட்டும்? அந்தச் சிக்கல்கள்? அந்த வலி? அந்தக் கண்ணீர்?” தன் குரலை வேறொரு கோளிலிருந்தென ஜாரா கேட்டான்.

சேவி ஒன்றும் கூறவில்லை. வலி மட்டும்தான் நிஜம். சலிக்காதது. அதை வாழ்நாளெல்லாம் சுமந்தலையலாம். ஒரு நாள் அந்த பாரம் தேவைப்படாமலாகும், அன்று வலிக்காது. அன்று வாழ்க்கை துலக்கமாகும். ஏன் என்ற கேள்விக்கு ஒரு மலர் பதிலாகும். அல்லது ஓர் அலைகூடப் பதிலாகலா. அங்குக் கண்ணீரில்லை.

“வானமில்லாம பூமிக்கொரு கனவில்லை.” சேவியின் குரல் சன்னமாக ஒலித்தது.

“பூமி வானத்தோட வேர்.” என்றான் ஜாரா.

“அதெல்லாம் பாகப்பிரிவினைக்கு முன்னால், இல்லையா?” என்றாள் சேவி இடையில் கைவைத்து.

“செம்மண்ணுல கலந்த நீரைப் பிரிக்க முடியாது, இல்லையா? ஜாராவின் கண்கள் சிரித்துக்கொண்டிருந்தன.

“ஆனா பிரிச்சிட்டீங்களே?”

“திரும்பவுமா? அது…” ஜாரா சேவியின் கண்களிலிருந்த ஏளனத்தைப் பார்த்துவிட்டான். “நீ…ங்க யாரு?”வானத்தைப் பார்த்து என்ன எழுதிட்டிருந்தீங்க?”

“வானம் சொன்னதை எழுதி வச்சேன்.”

சேவி புருவத்தைச் சுருக்கித் தோள் குலுக்கிக்கொண்டாள்.

“நீ வானமகளா? கடலன்னையா?”

“பூமியின் முன்னாள் அடிமை.”

சேவியின் கண்கள் தெளிந்திருந்தது. ஜாரா ஓரடி பின்னால் வைத்தான்.

“நானும் பூமியிலிருந்து வந்தவன்தான். உன்ன மாதிரிதான். வெறும் அடிமை.”

“நீயா? அடிமைத்தனம் தெரிஞ்சு ஏத்துக்கப்பட்றதில்லை. பலன் கருதி கணக்கா போடுற வேஷத்துக்குப் பேர் துரோகம்.”

“தப்புதான். அடிமை மாதிரி. நான் வேணும்னு கூர் போடல. வானவருங்கதான் வந்து கேட்டாங்க.” துண்டு துண்டாகச் சொற்கள் வந்தது, தூரத்து மொட்டை மாடிகளிலிருந்து குழந்தைகள் விண்மீன்களைக் காணாது கேவி அழும் குரல்கள் ஏனோ அவன் காதில் விழுவது போலிருந்தது. அவள் கேட்காத கேள்விகளுக்குப் பதில் தன்னிடமிருந்து விழுகிறது என்று ஜாரா எண்ணிக்கொண்டான்.

“அப்ப மலைய உருக்குனது, கடல் சுவர் கட்டுனது, கீழிருந்த கழிவுகளை அனுப்பச் சொன்னது நீ இல்லை. இப்ப இந்தக் கசங்குன பட்ட பழைய வானத்துலேருந்து விண்மீன மொட்டையடிக்கப்போறதும் நீ இல்ல. அச்சோ.” சேவியின் வாய் “ஓ” வடிவத்தில் நின்றுவிட்ட து போல் இருந்தது. அந்த ‘ஓ’ ஓட்டைக்குளிலிருந்து மீள முடியாதென்று தோன்றியது.

“அது….பாகப்பிரிவினைக்கு…முன்னாடி.”

சேவி அங்கியிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டிருந்தாள். நினைவுக்கருவிதானே அது? உடைந்த விண்மீன் துண்டு ஒன்று எரிகல்லின் வேகத்தில் தன் கழுத்தருகில் வருவதை ஜாரா கண்டுகொண்டான்.

விடியலின் செம்மை சேவியின் முகத்தை அறைந்துகொண்டிருந்தது. கார்மேகங்கள் புயலில் கூடடடையும் குருவிகள் போலப் பின்னால் சென்று கொண்டிருந்தன.


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்