முன்னத்தி

முன்னத்தி

9 நிமிட வாசிப்பு

ண்களில் வியப்பு மின்ன நின்றுகொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் பொருட்படுத்தாது சூடான இறக்கைகளுக்குள் குஞ்சுகளை அடக்குவதைப்போல அவளைப் பரிபூரணமாக நெஞ்சில் புதைத்துக்கொண்டான்.

திரண்ட பந்தைப் போன்ற அவளது சுருள்கேசம் காசிபனின் தாடையை வருடியது. அவன் அந்தச் சுருள் பந்தில் முகம் புதைத்து தனது ஆன்மாவிற்குள் ஊடுபாவியிருக்கும் அவளது இளமைக்கால வாசனையுடன் பொருத்த முயன்றான்.

வீட்டு முற்றத்தின் ஈரப் புல்தரையில் பரவி நின்றிருந்த உறவினர்கள், நண்பர்களின் பெருங்கூட்டம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உறைந்திருந்தது. எல்லா வயதான பெண்களின் கன்னங்களிலும் சொல்லிவைத்தாற்போல் தோல் சுருக்கங்களை நிரப்பியபடி கண்ணீர் வழிந்திறங்கியது. சிலர் மங்கிய காட்சியை மீட்டெடுக்கக் கைக்குட்டைகளைத் துழாவினர்.

ஒரு முதியவரின் நடுங்கும் உதடுகள் “இருபத்தி மூன்று ஆண்டுகள்” என்பதைத் தன்னிச்சையாக முணுமுணுத்தது.

காசிபன் தான் அணைத்திருந்த கைகளில் ஒன்றை விடுவித்து விரல்களால் அவளது நாடி முனையைத் தேடிப் பற்றி அவளது முகத்தை உயர்த்தினான். சுருள் பந்தில் அவளது காதுகள் இருக்கும் பகுதிக்குக் குனிந்து கிசுகிசுத்தான்.

இரண்டு முறை சனிக்கிரகத்தைக் கடக்கும்போதும் உன் ஞாபகம் பிடுங்கித் தின்றது.

உதடுகளின் துடிப்பை அடக்கிக்கொண்டு புன்னகைத்தாள். மெல்ல எக்கி அவனது காதுக்குச் சென்றாள்.

52வது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டேன், இனி ஒப்பிடுவதற்குச் செவ்வாய்தான் சரியான கிரகம் கவிஞனே…

கண்களுக்கும் புருவத்திற்கும் நடுவே மெல்லிய கேலியைத் தோற்றுவித்தாள்.

இல்லை இனி பூமியுடன்தான் ஒப்பிடுவேன்.

கருத்த முகத்தில் ஒளியாய் உருளும் முதிர்ந்த கண்களைத் தீர்க்கமாய்ப் பார்த்தபடிக் கூறியவன் கருத்து தடித்த அவளது பளபளப்பான உதடுகள் மீது தனது உதடுகளை இறுக்கமாய்ப் பதித்தான்.

***

விண்ணோடி காசிபனின் வீட்டின் மேலே கலிடாஸ்கோப் பிம்பத்தின் வடிவில் நெகிழ்ந்து மிதந்து கொண்டிருந்த லிட்ரஜன் கோளங்கள் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன.

நாட்டின் தலைசிறந்த நுண்ணிசைக் கலைஞனான ஜாராவின் நுண்ணிசைத் தெறிப்புகள் வீட்டிலிருந்து கசிந்து கொண்டிந்தது.

விருந்திற்கு அனுமதிக்கப்படாத ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பார்வையாளர்களும் சாலையோரத்திலும் சாலையைத் தாண்டியிருந்த இயற்கைப் பூங்காவிலும் நிரம்பி இசைக்கேற்றபடி நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.

போக்குவரத்துக் காவல்துறையினர் அந்தப் பகுதி முழுவதும் வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி பறக்கும் வெறிபிடித்த ரசிகர்களை உடனடியாகக் கட்டுப்பாட்டு எந்திரங்களால் உறிஞ்சிப் பிடித்துப் பறக்கும் சக்தியை நீக்கி வாகனத்தைத் திருப்பியளித்தனர்.

வீட்டின் மேற்தளத்தோட்டத்தின் நடுவே நீர்புகையைக் கக்கிக் கொண்டிருந்த நீரூற்றின் பக்கவாட்டுத் திண்டில் நின்றபடி இசைத்துக் கொண்டிருந்தான் ஜாரா. Xutt7 நிறுவனம் சென்ற மாதம் மேம்படுத்தி வெளியிட்ட நுண்ணிசையாடையை அணிந்திருந்தான். அதில் வெவ்வேறு இசைக்கருவிகளின் மென்பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத பொத்தான்கள் உடல் முழுவதும் பரவியிருந்தது.

அவன் தான் வெளிப்படுத்த விரும்பும் இசைக்கேற்ப உடலசைவுகளைச் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் வெளிப்படுத்தும் இசைக்கும் அவனது உடலசைவிற்கும் எந்தவிதத் தொடர்பையும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.

அது நரம்பியல் நோய் பீடித்த ஒருவனின் குளிர் நடுக்கம் போல் தோன்றும். அந்த விநோதமான, வெடித்துச் சிரிக்கச் செய்யும் அசைவுகளின் வழியேதான் அவன் காலத்தில் நிலைத்திருக்கப் போகும் இசை உன்னதங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

முதல் நுண்ணொளிக் காலத்தின் துவக்கத்தில் புதிய நுண்னொளி தொழில் நுட்பத்தின் வீச்சில் கிளம்பிய புற்றீசல்களில் ஒன்றாய் வெளிப்பட்ட ஜாரா தனது பதினான்காம் வயதில் ரசிகர்களால் கண்டுகொள்ளப்பட்டான். நாற்பது வருடங்களுக்குப் பிறகு, இன்றும் இணையற்ற கலைஞனாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.

சூரியக்குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால் காசிபனிடம் செய்யப்பட்ட தொலைநேர்காணலில் இத்தனை வருடங்களாக இந்த விண்கல அறைக்குள் மனப்பிறழ்வுக்கு உள்ளாகாமல் உங்களைக் காப்பது எது என்று கேட்கப்பட்டதற்கு காசிபன் அளித்த பதில் “ஜாரா”.

அதில் மனம் நெகிழ்ந்து போயிருந்த ஜாரா காசிபனின் சாதனையைக் கௌரவப்படுத்த வேண்டி தாமாகவே முன்வந்து விருந்தில் இசை நிகழ்வை நடத்திக் கொண்டிருந்தான். காசிபனுக்குப் பிடித்த பாடல்களின் பட்டியல் ஒன்று அவனுக்குத் தரப்பட்டிருந்தது. இந்த இரவை அந்தப் பட்டியலால் அலங்கரித்துவிடும் முணைப்பில் உற்சாகத்துடன் துடித்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் விருந்தில் கூடியிருந்த விஞ்ஞானிகளில் வயதானவர்கள் சிலர் அந்த இசையை ரசிப்பதற்கான மனோநிலையில் இல்லாமலிருந்தனர். அவர்களுக்கு இப்போது காசிபனிடம் கேட்பதற்கு மூட்டை மூட்டையாகக் கபாலத்தைக் குடையும் கேள்விகள் இருந்தன. அவர்கள் “வெளியேற இயலாத இருப்பிடம்” என்ற தலைப்பில் அன்று காலை அரசுச் செய்திதாளில் பிரசுரிக்கப்பட்ட செய்திக் கட்டுரையைப் படித்திருந்தனர்.

கட்டுரையின் சுருக்கம் இப்படிச் சொன்னது.

நமது நுண்ணொளித் தலைமுறை சாத்தியப்படுத்திய அதிவேக விண்வெளிப் பயணத்தின் அடுத்த கட்ட சாதனையாகச் சூரியக்குடும்பத்தின் வெளியே பயணப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நமது சகக் சூரியக்குடும்பங்களைப் பற்றி நுண்ஆய்வு செய்வதும், பூமியைப் போன்று உயிர்கள் வாழும் கிரகங்களை மற்ற சூரியக்குடும்பங்களில் அடையாளம் காண்பதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அதனடிப்படையில் 2420 மார்ச் 15 ஆம்தேதி X9Y11 பெருங்கடலின் பெர்முடா முக்கோணத்தில் அமையப்பெற்றிருக்கும் மும்முனை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து SSS34F6 insight ஆய்வு வாகனம் அனுப்பப்பட்டது. தென்கிழக்கு 2A தேசத்தைச் சேர்ந்த விஞ்ஞானி காசிபன் தலைமையில் மத்தியக் கிழக்கு 11E தேச விஞ்ஞானி மீர்க்குலின் ராஷிஸ், மத்திய மேற்கு 2Fதேச விஞ்ஞானி சார்ல் காகன் மற்றும் வடக்கு விளிம்பு 2T தேச விஞ்ஞானி ரபர்ட்டோ ஷாயி ஆகிய நான்கு பேர்களைக் கொண்ட குழு அவ்வாய்வு வாகனத்தில் இடம்பெற்றிருந்தது.

புறப்பட்டுச் சரியாகப் பதினோரு வருடங்கள் நான்கு மாதங்களுக்குப் பிறகு நமது சூரியக்குடும்பத்தின் புறப்பகுதியை அடைந்த ஆய்வு வாகனம் அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் பூமியுடன் தொடர்பற்று இருந்தது. பிறகு அது திரும்பவும் பெரும் மாயத்தன்மையுடன் தொடர்புக்கு வந்தது. ஒரே திசையில் பயணித்து வலது அச்சில் வெளியேறிய ஆய்வு விண்கலம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் தோன்றியது ஆனால் இடது அச்சின் வழியே.

SSS34F6 ஆய்வு வாகனம் சூரியக்குடும்பத்தின் உள்ளே நுழையாமல் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குப் பயணப்படுவதாக வைத்துக்கொண்டால் அது குறைந்தது நாற்பது வருடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஒன்பது மாதங்களில் அது மறுபக்கத்தை அடைத்திருந்தது வானவியல் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது இந்த நுண்ணொளி யுகத்தின் அறிவுக்கு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என மும்முனை ஆய்வு மையத்தின் அன்றைய தலைமை விஞ்ஞானி கீ யூன் யு தெரிவித்தித்திருந்தார்.

கடந்த தசாப்தத்தில் அதைப் பற்றிய ஆய்வுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட இரண்டு ஆய்வு வாகனங்கள் நான்கு வருட இடைவெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அதில் கடந்த 2433 மார்ச்சில் அனுப்பப்பட்ட SSS35F20 Rib light ஆய்வு வாகனம் கடந்த மாதம் சூரியக்குடும்பத்தை விட்டு வெளியேறியது. சொல்லி வைத்தாற்போல் அதுவும் தொடர்பிலிருந்து நீங்கியது. இந்நிலையில் நேற்று SSS34F6 ஆய்வு வாகனம் பூமியை வந்தடைந்தது.

ஆறு வருடங்களுக்கு முன்னால் விண்வெளியில் இறப்பெய்திய மத்தியக் கிழக்கு 11Eதேச விஞ்ஞானி மீர்க்குலின் ராஷிஸின் பாதுகாக்கப்பட்ட உடலுடன் மீதமுள்ள மூன்று விஞ்ஞானிகளும் மும்முனை விண்வெளி ஆய்வு நிலையத்திற்குத் திரும்பினர்.

ஆய்வுக்குழுவின் தலைவர் விண்ணோடி காசிபன் செய்தியாளர்களிடம் பேசும்போது “பால்வெளியூடேயான நமது பயணத்தில் நாம் ஒரு மாயச் சுழற்சியில் சிக்கவைக்கப்பட்டுத் திரும்பியனுப்பட்டுள்ளோம். இது மானுட இனத்தின் பிரபஞ்ச ஆய்வில் ஒரு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாயச்சுழலை எதிர்கொண்டு வெல்ல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்தார். மேலும் “இப்போது நான் 200 பில்லியன் அஸ்ட்ரோ நாட்டிகல் மைல் பரப்பளவு கொண்ட ஒரு சிறைக்குள் இருப்பதாக உணர்கிறேன்” எனவும் தமது உணர்வை வெளிப்படுத்தினார்.

களைப்பின் சுவடே இல்லாத ஜாரா தனது ஒன்பதாவது பாடலைத் துவங்குவதற்காக வலது தொடை தசையைத் துடிக்கவிட்டான். முதற் கணினி காலக் கண்டுபிடிப்பான ஹாபி ட்ரம் மெல்ல அதிர்ந்து வேகமெடுக்கத் துவங்கியது.

மும்முனை ஆய்வு மையத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு முதியவர்களின் கூட்டம் காசிபனைச் சூழ்ந்திருந்தது. அவர்கள் முன்பு காசிபனுடன் பணியாற்றியவர்கள்.

சூரியக் குடும்பத்தின் புற வட்ட அச்சில் இரண்டு சூரியக் குடும்பங்களுக்கும் நடுவே கட்டுப்பாடற்று மிதந்து கொண்டுடிருந்த கோள்களைப் பற்றி மேலதிகமாக அறிந்துகொள்வதில் அவர்கள் ஆர்வமாயிருந்தனர். நிஜத்தில் அவைகள் இரண்டு சூரியக் குடும்பத்தாலும் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன என்பதைப் பற்றி அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் காசிபன். ஆனால் அவரது கவனம் முழுவதும் ஜாராவின் இசையின் மீதே இருந்தது.

ஜாரா தனது இறுதிப்பாடலுக்கான அறிவிப்பைச் செய்தவுடன் காந்தம் வைக்கப்பட்டதைப் போல் அனைவரும் அவனது மேடையை நோக்கி இழுக்கப்பட்டனர். மொத்தக் கூட்டமும் ஒற்றை ஆன்மாவாகச் சுருங்கி லயத்தில் கரைந்து கொண்டிருந்தபோது காசிபனின் மனம் மட்டும் இனம் காணமுடியாத ஒரு மெல்லிய பதைபதைப்பில் தவித்துக் கொண்டிருந்தது.

ஜாராவின் உதவியாளர்கள் இருவர் அவனது இருபுறமும் வந்து நின்று தயாராகக் கைகளை நீட்டிய அதே கணத்தில் தனது இசையாடையின் கழற்று பொத்தானை அழுத்த அந்த ஆடை கழன்று உதவியாளர்களின் கைகளுக்குள் சென்று அடங்கிக்கொண்டது. ஜாரா படிகளைத் தவிர்த்துவிட்டு மேடையிலிருந்து குதித்து இறங்கினான்.

நீட்டப்படும் கைகளுக்குத் தனது சூடான கைகளால் சிறு தடவல்கள் கொடுத்தபடியே காசிபனை நோக்கி நடந்து வந்தான். காசிபன் தனது மகிழ்ச்சியை ஜாராவுக்குத் தெரிவிப்பதற்காகச் சில சம்பிரதாய வார்த்தைகளைத் தெரிவு செய்து முடிக்கவும் ஜாரா கையை நீட்டுவதற்கும் சரியாக இருந்தது.

***

வீட்டின் ஒட்டு மொத்தத் தோற்றமும் உருமாறிய பிறகும் அவர்களது படுக்கையறை மட்டும் காசிபன் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இருந்தபடியே இருந்தது. அவள் அவ்வறையின் மிதியடியைக்கூட மாற்ற சம்மதிக்கவில்லை.

படுக்கையில் அமர்ந்திருந்த காசிபன் எதிர்சுவரில் பொருத்தப்பட்டிருந்த Evac ன் ஓவியத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டாம் கணினி காலத்தில் வரையப்பட்ட அவ்வோவியம் பின்னே வரப்போகும் நுண்ணொளிக் காலத்தை பற்றிய தீர்க்க தரிசனத்தைக் கொண்டிருந்ததுதான் காசிபனுக்கு அவ்வோவியம் பிடித்துப் போனதற்கான காரணம்.

அவள் குளியலறையிலிருந்து வெளிப்பட்டு ஈரப் பாதச்சுவடுகள் வைத்தபடி காசிபனுக்கருகில் வந்து நின்று அணைத்தாள். அவனது முகத்தின் ஒரு பக்கம் அவளது குளிர்ந்த கரங்களும் மறுபக்கம் குளிர்ந்த வயிறும் அணைத்தபோதும் கூடக் கண்கள் அந்த ஓவியத்திலேயே நிலைத்திருந்தது.

யாருடைய ஓவியம் இது?

எது?

இதோ இது…

அவள் அவனை விடுவித்துவிட்டுக் கேலியான புன்னகையுடன் கேட்டாள். “கருவரையில் நடந்ததை கூட ஞாபகம் வைத்திருப்பவன் நான் என்று பீற்றிக்கொள்ளும் நீயா இப்படி கேட்பது?, உனது “நடனமிடும் இருளின் துகள்” ஆராய்ச்சிக் கட்டுரைக்குக் கிடைத்த மொத்தப் பரிசுப் பணத்தையும் கொடுத்து இதை வாங்கினாயே ஞாபகம் இல்லையா? Evac னுடையது.

காசிபன் சற்று நடுங்கும் குரலில் சொன்னான். இது நகல், அசலான ஓவியம் திருடப்பட்டு இங்கு நகல் வைக்கப்பட்டிருக்கிறது.

வாய்ப்பே இல்லை, ஏறத்தாழக் கத்தியே விட்டாள், இதென்ன அப்பாவியான கணினிக் காலமா? நுண்ணொளிக்காலம், இங்கு எந்தத் திருட்டிற்கும் இடமில்லை, உங்களுக்குத் தெரியாததா?

காசிபனின் குரல் தளர்ந்து வெளிப்பட்டது, ஆம் திருட்டு போயிருக்க முடியாதுதான், ஆனால்…

குழம்பித் தவித்தபடி நெற்றியைச் சுரண்டினான்.

அவள் இரவு உடையைப் போர்த்திவிட்டு அவனது தலையை வருடியபடி, களைப்பாக இருக்கிறாய், சற்று ஓய்வெடு எல்லாம் சரியாகிவிடும். என்றாள்.

நள்ளிரவில் யாரோ உசுப்ப அவள் கண்விழித்தாள். காசிபன் முழுமையான அலுவல் உடையுடன் நின்றுகொண்டிருந்தான்.

என்னை ஆய்வுக் கழகத்தில் விடமுடியமா? உனது இழைப்படகை என்னால் சரியாக இயக்க முடியும் என்று தோன்றவில்லை. அவன் குரலில் அசாதாரணமான பதட்டம் இருந்தது.

இந்நேரத்திலா? அழைப்பு ஏதும் வந்ததா?

இல்லை ஆனால் எனக்கு உடனடியாகப் போக வேண்டும்.

உண்பதற்கு ஏதாவது எடுத்து வரவா?

வேண்டாம், உடையை மட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பேன்.

அபரிமீதமான அவசரத்தை அவனது உடல் மொழி வெளிப்படுத்தியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் காசிபனின் இல்லத்தின் மேல்தள நிறுத்தத்தில் இருந்து பனிமூட்டத்தை நுரைத்தபடி ஏய்த அம்பைப் போல் சீறிப் பறந்தது 05+C இழைப்படகு.

ஆய்வுக்கழகத்தின் இறங்கு தளத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு வந்திறங்கிய சார்ல் காகன் ஆய்வகத்திற்குள் செல்லாமல் காசிபன் வருவதற்காகக் காத்திருந்தார். காசிபனின் மனைவி அவனை இறக்கிவிட்டுச் சென்ற அடுத்த சில நிமிடங்களில் விண்ணோடி ரபர்ட்டோ ஷாயியும் வந்து சேர்ந்தார். காசிபன் அழைத்துதான் அவர்கள் இருவருமே வந்திருந்தனர். குளிர்ந்த அந்த இரவில் ஆய்வுக்கழகத்தினுள் நுழைந்த மூவரும் அடுத்த இருபத்திநான்கு நாட்களுக்கு அனைத்திலுமிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு தனித்து ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆய்வுக்கழகத்தில் இவர்களது பிரிவில் இருந்த மற்ற விண்ணோடிகளுடன்கூட எந்தக் கலந்துரையாடலும் நிகழ்த்தவில்லை.

விண்வெளிக்குத் தாங்கள் சென்றபோது உடன் கொண்டு சென்ற ஆராய்ச்சி தவிர்த்த சொந்தப் பொருட்களை ஆய்வுகழகத்தின் காப்பகத்திலிருந்து முதல் நாள் இரவே மூவரும் தருவித்துக்கொண்டார்கள். அவர்கள் மூவரது ஆய்வும் அந்தப் பொருட்களின் மீதே இருந்தது.

இருபத்து நான்காம் நாள் மாலை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் வேண்டி ஆய்வுக்கழகத் தலைவருக்கு ஓர் விண்ணப்பத்தை அனுப்பினார் காசிபன். இவர்களது மௌனத்தால் பொறுமை இழந்து கொண்டிருந்த தலைவர் மறுநாள் காலையே ஆலோசனைக் கூட்டம் என்பதாக அனைத்து உயர் மட்ட உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆய்வுக்கழகத்தின் முக்கிய ஆலோசனை அறையில் ஒருவர் தவறாமல் அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். அது மானுடக் குலங்களின் வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்வு என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

சம்பிரதாயமான அறிவிப்புகளுக்குப் பிறகு “SSS34F6வின் முதல் சமர்பிப்பு” என்பதாகப் பெயரிட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு “வீடு திரும்பலுக்கான முதல் உடன்படிக்கை” என்பதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என காசிபன் வேண்டுகோள் வைத்தபோது மொத்தக் குழுவின் கவனமும் விடைத்துக்கொண்டது.

வெகுநேரம் ஆர்வத்தைத் தூண்டி இறுதியாகத் தாம் சொல்ல வந்ததை அவிழ்க்கும் பேச்சு முறையை வழமையாகக் கையாளும் காசிபன் அன்று எந்தப் பீடிகையும் போடாமல் ஆரம்பித்த ஒன்றரை நிமிடங்களில் விஷயத்தை முழுமையாக அவிழ்த்துப் போட்டார்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒழுங்கான இடைவெளியுடன் முடிவற்ற எண்ணிக்கையில் சூரியக்குடும்பங்கள் இருக்கின்றன, ஒரு சூரியக்குடும்பத்தின் பூமியில் உள்ள ஒரு மரத்தின் இலை கீழே விழும்போது முடிவற்ற எண்ணிக்கை கொண்ட அத்தனை சூரியக் குடும்பத்தின் பூமிகளிலும் உள்ள அதே மரங்களிலிருந்தும் அதே இலைகள் கீழே விழுகிறது. இந்த விதியின் படி இந்த பூமியிலிருந்து SSS34F6 ஆய்வு வாகனம் அடுத்த சூரியக்குடும்பத்திற்குப் புறப்பட்டபோது, முடிவற்ற எண்ணிக்கை கொண்ட சூரியக்குடும்பங்களிள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு SSS34F6 ஆய்வு வாகனம் கிளம்புகிறது. அது அடுத்த சூரியக் குடும்பத்தின் பூமியை வந்தடையும்போது அதற்கு முந்தையை சூரியக்குடும்பத்தின் பூமியின் SSS34F6 ஆய்வு வாகனம் இந்தச் சூரியக்குடும்பத்தின் பூமியை வந்தடைந்திருக்கிறது. ஆய்வாதாரங்களுடன் கண்டறியப்பட்ட இந்த உண்மையின் படி நாங்கள் மூவரும் உங்களுக்கு அண்மை சூரியக்குடும்பத்திலிருந்து உங்களது சூரியக்குடும்பத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்கள் என்பதைத் தனக்கே உரிய கவித்துவமான மொழியில் சொல்லி முடித்தார் காசிபன்.

ஒட்டு மொத்த ஆய்வுக்கழகமும் திகைத்துப் போனது. ஆங்காங்கே எழுந்த முணுமுணுப்புகளுக்கு மத்தியில் ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றுவிட்ட ஆய்வுகழகத்தின் தலைவர் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு அறிவித்தார். “உங்கள் ஆதாரங்களை முன் வையுங்கள்”

ஆலோசனை மேசையின் நடுவில் திரை எழுந்து ஒளிர்ந்தது. ஆதாரங்களை முன் வைப்பதற்கு முன்பு சில மணித்துளிகள் தாம் வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச அனுமதி தரும்படி கேட்டுக்கொண்டார் காசிபன்.

அவர் பேசியது கலையைப் பற்றி. கலை எவ்வாறு மனித சமூகத்தின் ஒவ்வொரு முன்நகர்தலுக்கும் தோற்றுவாயாக இருந்தது என்பதைப் பற்றி. அதை நிரூபணம் செய்வதற்காக வெவ்வேறு காலகட்டங்களில் விசாரம் செய்யப்பட்டு நிறுவப்பட்ட கலை மீதான தத்துவக் கோட்பாடுகளைச் சுருக்கமாக எடுத்து வைத்து விளக்கினார் காசிபன்.

பிறகு கடந்த இருபத்தி நான்கு நாட்களாகச் சேகரித்த ஆதாரங்களைக் காட்சிக்கு வைத்தபடி விளக்கியது காசிபனின் குழு.

பிரபஞ்சத்தின் முடிவற்ற வலைத்தொடராக விளங்கும் சூரியக்குடும்பங்களில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் பிரிதொன்றின் பிரதியாகத்தான் நிகழ்கின்றன, ஒன்றைத் தவிர. அது மனிதச் சிந்தையில் நிகழும் கலைத்தெறிப்பு. அது இசையாகவே, ஓவியமாகவே, எழுத்தாகவோ, கட்டுமானமாகவோ, சொற்பொழிவாகவோ அல்லது ஒரு நுண்ணொளிக்குறிப்பு எழுதுவதாகக்கூட இருக்கலாம். அதில் நிகழும் ஒரு கலைத்தெறிப்பு மாயம் நிறைந்தது. இந்தப் பிரபஞ்ச விதிகளுக்குக் கட்டுப்படாதது. பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு சூரியக்குடும்பத்தில் இருக்கும் ஒரு மானுடனின் சிந்தையில் உதிக்கும் கலையின் தெறிப்பு ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் மானுடகுலங்களின் உயர்வுக்கும் காரணமாகிறது.

விளக்கியபடியே அவர்கள் தாங்கள் தங்களுடன் கொண்டு வந்த தகவல்களிலுருந்து இந்த பூமியின் தகவல்களை ஒப்புமைப்படுத்திய ஆவணங்களை முன்வைத்தனர். குறிப்பாக ஜாராவின் இசையை வைத்து அவர்களால் எளிமையாக விளக்க முடிந்தது. அவர்களது ஜாராவின் இசைக்குறிப்புகள் சிலவற்றில் நிகழாத மாயம் இங்கிருக்கும் ஜாராவின் இசைக்குறிப்புகளில் நிகழ்ந்திருந்தது.

அவ்வளவு குறுகிய காலத்தில் SSS34F6 ஆய்வு வாகனத்தின் வடிவமைப்பில் இருக்கும் நுண்ணிய வேறுபாட்டைக்கூட அவர்கள் கண்டறிந்து முன்வைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அன்றைய கூட்டம் நிறைவு நேரத்தை நெருங்கியபோது ஆய்வுக்கழகத் தலைவர் காசிபனின் குழுவிற்கு முறைப்படி வரவேற்பு தர, கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

காசிபன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வாலோசனைக் கூட்டத்தின் தலைப்பு “வீடு திரும்பலுக்கான முதல் உடன்படிக்கை” எனத் திருத்திக்கொள்கிறேன். ஆனால் நாம் அனைவருக்கும் தெரியும் நமது இன்றைய ஆட்சியாளர்கள் முன்பிருந்தவர்களைப்போல் விண்ணியலில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை, இதை வீணான பொருட்செலவாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே பின்னடைவில் இருக்கும் நமது ஆராய்ச்சிகள் உங்களது கண்டறிதலின் வழியே முழுவதும் நிறுத்தப்படுவதற்குச் சாத்தியம் இருக்கிறது.


நீங்கள் மூன்றுபேரும் உங்கள் குடும்பங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அரசு அத்தனை பெரும் பொருட் செலவை ஏற்கத் தயாராக இருக்காது. எனவே நீங்கள் மூவரும் இங்கேயே இருப்பதற்கான மனநிலையைத் தயார் செய்துகொள்ளுங்கள், அது மட்டுமல்ல நீங்கள் அங்கு சென்று சேரும் முன்பு உங்கள் ஆயுள் முடிவடைந்துவிடும் சாத்தியம் அதிகம். என்றபடி மூவரின் முகவோட்டங்களை வாசித்தார் ஆய்வுக் கழகத் தலைவர்.

இல்லை இப்போதுதான் நமக்கு இந்த ஆராய்ச்சிக்கான வலுவான காரணம் கிடைத்திருக்கிறது. காசிபன் சொன்னர், ஒவ்வோர் மானுட இனத்தின் கலைத்தெறிப்புகளையும் ஒன்று திரட்டுவதன் மூலம் ஒட்டு மொத்த மானுடக் குலங்களும் இப்போது செல்வதைவிடப் பன்மடங்கு வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.

காசிபன் ஏற்கனவே திட்டமிட்டபடி தனது இறுதி முன்வைப்பை ஒரு கவிதையாக மாற்றி முன்வைத்தார்.

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவற்ற எண்ணிக்கையிலான காசிபன்களில் ஏதோ ஒரு காசிபனின் கவிதையில் நிகழ்ந்த அந்த மாயம் அடுத்த ஒன்றரை மாதத்தில் அவர்கள் அனைவரையும் வீடு நோக்கிப் பயணப்பட வைத்தது.


புகைப்படம்: Clement

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்