வே.நி.சூர்யா கவிதை: ஓவியம் பானு

ஹோட்டல் சுதந்திரம்

< 1 நிமிட வாசிப்பு

ஒளிரும் உணவு விடுதி. சுற்றிலும் கோடை மழையின் விளம்பர அறிவிப்பு.
கையில் ஒரு புத்தகம்.
தலைப்பு: காற்று, மணல், நட்சத்திரங்கள்.
அங்கே நெடுநேரமாகப் பாலைவனத்தில் நிற்கிறார் ஒரு விமானி.
இங்கேயும் ஒருவர் உண்டு.
இருக்கையிலமர்ந்து, அதுவும் எந்த வானிலை அறிக்கைகளிலும்
வராத ஒரு ரகசியப் புயலினூடே,
தன்னை ஓட்டிச்செல்ல முயன்றபடி.
சிலர் கைகோர்த்தவாறு உள்நுழைகிறார்கள், சிலர் அத்துணை
இடைவெளிவிட்டு வெளிநடக்கிறார்கள்.
அதாவது தலைவிதியின் சுமாரான நாடகம்.
அவரா? அவர்தான் பிறப்பதற்கு முன்பிருந்து தன்னந்தனியே சாப்பிடுபவர்.
இவளைத் தெரியாதா உனக்கு?
இவள்தான் தனக்குத்தானே ஊட்டிவிட்டுக்கொள்பவள்.
ஒருவரும் கேட்கவில்லை “சரி. நீ யார்?” என்று.
நாடகத்தை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பிக்கிறேன்.
மழைக்குப் பிறகான கந்தல் அமைதியில்
தவம்புரியும் தெருவிளக்குகள். அவற்றின் முன்பு
அரங்கேறும் மழைப்பூச்சிகளின் நடனம். தூரத்திலே
கைவிரித்துவிட்ட தென்னைமரங்கள்.
புகைப்படத்திற்குக் குடும்பத்துடன் நிற்கும் இருள் மலைகள்.
ஒரு நட்சத்திரம் கூட மினுங்கவில்லை எனக்காக.
ஆயினும் நான் உணர்ந்தேன்:
உனது அருகாமையை
காற்றில் பறந்துவிடாதிருக்க உடைகளின் மேல் மாட்டப்பட்ட கொக்கிகள் போலே
என் மீதிருக்கும் ராத்திரி வானத்தை.


புகைப்படம்: பானு

இதழ் 14 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்