அம்மா

5 நிமிட வாசிப்பு

1

நான் ஒரு நாளில் ஐந்து வார்த்தைகள் பேசினால் அது அபூர்வம். காரணம் என் ஆய்வு கூர்மைகொள்ள அந்த அளவிற்கு மோனம் தேவையாகிறது. சொற்களும், உச்சரிப்பும் முடிந்தவரையில் என் சாய்வைத் தீர்மானிக்காமல் இருக்க அல்லது குறைக்க இது தேவை. சொற்கள் கூடும் நாட்களில் என் கைக் கடிகாரம் அதைக் குறித்துக்கொண்டு, இரவு படுக்கும் முன்பு “சகாவே இன்று ஐந்திற்கு மேலான வார்த்தைகள்” என்று நினைவூட்டும்.

இல்லையென்றால் “தோழரே! மூன்று கூடிவிட்டதோ?” என்று கேட்கும்.

“இன்று வாயுதிர்த்த வார்த்தைகள் பதிமூன்று” எனச் சிரிக்கும்.

நான் இட்டிருக்கும் கட்டளை அதன் அறிவிப்புகள் ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு மிகாமல், உச்சரிப்பு சுத்தத்துடன் என்னைச் சிரிக்கவோ, சிந்திக்கவோ வைக்கும்படி அமைய வேண்டும். முதலில் தடுமாறினாலும், சரியாகத் தவறுகள் பல செய்து தன்னை மீண்டும் மீண்டும் திருத்திக்கொண்டு, திருத்தும் அதே சமயத்தில் தனக்குக் கற்பித்துக்கொண்டு தொண்ணூறு சதத் துல்லியத்துடன் வார்த்தைகளைக் கணக்கிட்டு இரவில் எனக்கு நினைவூட்டும். இதன் சிறப்பே ஒரு தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதல்ல, கவனமாகத் தவிர்ப்பதுதான். வெளியில் சொல்லாது, ஆனால் செயலில் கெட்டி. கற்பதும் அதைச் செயல்படுத்துவதும்தான் இறுதி நோக்கம், நோக்கத்தைத் தாண்டி அறிவதற்கு ஒன்றுமில்லை என்பது அதற்கு அடிப்படைப் பாடம்.

என் கைக்கடிகாரத்தின் பின்னுள்ள வன்பொருள் மற்றும் அதன் நிரலை வின்சென்ட் சில்வரின் அணி டூயூக்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய ஆண்டு 2032. அவர்களின் அணி அறிவிப்புகளைத் தெரிவிக்கத் தெரிவு செய்த மொழிகள் மூன்று: ஆங்கிலம், ஹீப்ரு மற்றும் தமிழ். ஹீப்ரு வின்ஸ் மற்றும் அவரின் இஸ்ரேலிய சக ஆராய்ச்சியாளர்களின் வலியுறுத்தலிலும், எங்கள் அணியால் தமிழில் மட்டுமே இதன் முறைமையைக் கச்சிதமாகச் சோதித்துப் பார்க்க முடியும் என்று அடம்பிடித்ததால் தமிழ் என்னுடைய தேர்விலும் உறுதியானது. மேலும் மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்டு, அதே பல்கலைக்கழகத்தில் இதன் மென்பொருள் அறிதல் முறைமையை நான் உருவாக்கினேன். இதற்கு இடையில் வின்ஸின் அணி தொடர்ந்து தங்கள் தரவுத்தளச் சொற்களையும் அதன் உச்சரிப்பு வேறுபாடுகளையும் மேம்படுத்திக்கொண்டே இருந்தனர்.

ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான், இந்த இருபது ஆண்டுகளில் என்னைவிட என்னை அதிகமாக அறிந்தது இந்தக் கடிகாரம் மட்டும்தான்.

2

ஜனவரி 1, 2025

வின்ஸிற்கு,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். என் நேர்முகத் தேர்வில் இவ்வாய்ப்பை அளித்தமைக்கு முக்கியக் காரணமாக பல்கலைக்கழகத்தின் தலைவர் ராபர்ட் மில்லர் குறிப்பிட்டது “பெய்ஸ்த் தேற்றத்தைக் கொண்டு உச்சரிப்பின் வழி மொழியின் சாத்தியப்பாடுகளை ஆராய்தல்” என்ற என்னுடைய கட்டுரையைத்தான். “தலைப்பே கவித்துமாக இருக்கிறது” என்றார். அதைப் பரிந்துரைத்த உங்களுக்கு நன்றிகள்! உங்களை நேரில் காண முடியவில்லை என்பது சிறுவருத்தம்தான்.

என் போக்கில் இலக்கில்லாமல் மொழியியலும் விஞ்ஞானமும் சந்திக்கும் புள்ளிகளின் முறைமை உருவாக்கத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கும் இது விவரிக்கமுடியா நல்வாய்ப்பு. அதே சமயத்தில் என்னுடன் சக ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளை ஒருங்கிணைத்து அதிலிருந்து மாதிரிகளையும், சோதனைக்கான வரைவு உருவாக்கும் பணியை எண்ணினால் திகில் கலந்த பொறுப்புணர்வு எழுகிறது.

டூயூக்ப் பல்கலைக்கழகத்தின் பகுதியாக என் ஆராய்ச்சி அமைவதில் மிக்க மகிழ்ச்சி. ஏப்ரலில் அங்கு வரலாமென்று முடிவு செய்திருக்கிறேன் (வசந்தகால கல்வியாண்டின் துவக்கத்தில்). கூடிய விரைவில் சந்திப்போம்!

இப்படிக்கு,
ஜெகன்

3

(தாமஸ் பெய்ஸ்ஸின் “தற்செயல் நிகழ்வுகளின் கோட்பாட்டாக்கத்தில் உள்ள சிக்கலை நோக்கிய தீர்வு” என்ற கட்டுரையை ராயல் சொசைட்டியின் தலைவராக இருந்த ஜான் கண்டனுக்கு ஏ.எம்.எப்.ஆர்.எஸ். அனுப்பி ரிச்சர்ட் பிரைஸ் எழுதிய கடிதம்)

நவம்பர் 10, 1763

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தலைவர் காண்டன் அவர்களுக்கு,

நான் இக்கடிதத்துடன் மறைந்த நம் நண்பர் தாமஸ் பெய்ஸ் எப்.ஆர்.எஸ். விட்டுச் சென்ற பக்கங்களில் கண்டெடுத்த கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கிறேன். என் கருத்தில் அது மிக முக்கியமானதாகப்படுகிறது அதனாலேயே கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதுமாகிறது. நம் அறிவைச் சீண்டிப் பார்க்கும் தத்துவார்த்தச் சோதனைகள் இதில் பயின்று வந்துள்ளதை நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம், மேலும் இதை ராயல் சொசைட்டியில் வாசிப்பது பலருக்குப் பயனுள்ளதாகும் என்று நீங்கள் நினைத்தால் அவ்வாறு செய்வதும் சரியானதாகவேபடுகிறது. தாமஸ் பெயஸ் இந்த புகழ்பெற்ற குழுமத்தின் அங்கத்தினராக இருந்தவர், இதன் உறுப்பினர்கள் பலரால் சிறந்த ஒரு கணிதவியலாளராக கருதப்பட்டவர் என்பதையும் நினைவில் கொள்க.

இந்தக் கட்டுரைக்கு எழுதப்பட்ட முன்னுரையில், முன்னறியாத ஒரு நிகழ்வு குறிப்பிட்ட புறச் சூழல்களில் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அது எத்தனை முறை நிகழ்ந்தது என்பதையும் எத்தனை முறை நிகழவில்லை என்பதையும் வைத்துக் கணக்கிட முடியலாம் என்ற யோசனையே இந்தச் சிக்கலை நோக்கித் தான் சிந்திக்கத் துவங்கிய காரணமாக பெய்ஸ் குறிப்பிடுகிறார். இதில் அவர் மேற்சொன்ன கேள்வியை எடுத்துக்கொண்டு மூன்று விதிகளுக்கு உட்பட்டு பத்து தீர்வுகள் இருக்கலாம் என்று சொல்கிறார். பத்திற்கும் பெய்ஸ் கொடுத்துள்ள கணிதச் சூத்திரங்கள் சரியாவேபடுகிறது, அவர் மறைந்த இந்த இரு ஆண்டுகளில் நான் சிலவற்றைச் சோதித்துப் பார்த்தேன் என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திற்கும் மேலாக இதன் ஆகச் சிறந்த அம்சமாக நான் நினைப்பது இவற்றின் செயல்முறைப் பயன்பாடு. எந்தத் தொடர்புள்ள அல்லது தொடர்பில்லாத இரு நிகழ்விற்கு இந்தத் தேற்றத்தை உபயோகித்துத் தோராயமான நிகழ்தகவை அடையலாம். உதாரணமாக, மக்கட்த் தொகை அதிகரிப்பும், உணவுப் பொருள் உற்பத்திக்கும் உள்ள தொடர்பை நம்மால் கணிக்க முடிந்தால் உலகில் பஞ்சம் என்பதேயே ஒழிக்க முடியும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

பெய்ஸ் நானும் ஒன்றாக இறையியல் பயின்றோம் என்பதைத் தாண்டி தன் உயிலில் எனக்காக விட்டுச் சென்ற அவரின் பக்கங்களை முறைப்படுத்தி சரியான கைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை பெய்ஸ்ஸிற்கான என் கடப்பாடாக நினைக்கிறன். உங்களின் மேலான கருத்திற்கும், அடுத்த கட்ட முன்னெடுப்பிருக்கும் காத்திருக்கிறேன். கர்த்தர் மாட்சிமை தங்கிய மன்னரையும், தங்களையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் சேவகன்,
ரிச்சர்ட் ப்ரைஸ்

4

நவம்பர் 10, 2024

மில்லருக்கு,

இந்த மின்னஞ்சலுடன் “பெய்ஸ்த் தேற்றத்தைக் கொண்டு உச்சரிப்பின் வழி மொழியின் சாத்தியப்பாடுகளை ஆராய்தல்” என்ற ஜெகன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையை இணைத்திருக்கிறேன். இதன் கலைச் சொற்கள் மற்றும் கணித சமன்பாடுகளைத் தாண்டி ஒரு சாதாரண ஆளுக்குப் புரியும்வகையில் எழுதுமாறு கேட்டறிந்தீர்கள். முயற்சி செய்கிறேன்.

ஜெகனின் ஆராய்ச்சியின் மையப் புள்ளி ஓசைகளின் தனித்துவம் மற்றும் அதன் பன்மைத்துவதில்(இங்கு உச்சரிப்பு என்பதைத் தாண்டி வெறும் ஓசைகள் என்று பொருள் கொள்க. அவரிடம் இது குறித்து விரிவாக நீங்கள் கேட்கலாம். பேசுவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம்). இரண்டும் இரு எல்லைகள், ஆனால் அவர் என்ன செய்திருக்கிறார் என்றால் ஓபன் எஐயில்(இணையதளம்) இருக்கும் டேரா பைட்டுகளான ஒலிக்கோவைகளை ஆராய்ந்து பில்லியன் கணக்கில் தனித்துவமான ஓசைகளைப்(பிராந்திய உச்சரிப்புகள் முதற்கொண்டு) பட்டியலிட்டிருக்கிறார். பின் பெய்ஸ் தேற்றத்தைக் கொண்டு அதற்குத் தொடர்பே இல்லாத காட்சிகளில் ஓசை இல்லாத ஒருவரின் வாயசைவைக் கொண்டே இணைக்க முடியும் என்று நிறுவுகிறார். இதன் பயன்பாடாக அவர் முன்வைப்பது இரண்டு:

  1. ரோபோக்களின் மொழியும், உச்சரிப்பும் மனிதனுக்கு நிகராக மாற்றுவது.
  2. அருகிவரும் மொழிகளின் பல்வேறு வட்டார மற்றும் பிராந்திய உச்சரிப்பு சாத்தியங்களை ஆவணப்படுத்துவது.

நான் நினைப்பது நம்முடைய ராணுவ ஆராய்ச்சிக்கு இது மிகவும் பயன்தரும் என்பதே, குறிப்பாக இவரின் ஆராய்ச்சி எண்பது சதத் துல்லியத்துடன் இருந்தாலே நம்முடைய கோப்புகளில் உள்ள காட்சிகள் புதிய அர்த்தங்களைத் தரலாம். அதனாலேயே இது முயன்று பார்க்க வேண்டிய சாத்தியம் என எனக்குப் படுகிறது. இதைவிட என்னால் எளிமையாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

நன்றிகள்,
வின்ஸ்

பி.கு: ஜெகன் தனிமை விரும்பி என்பதை நினைவில் கொள்க.

5

இன்று நான் ஆராய இருப்பது இரண்டாயிரத்துப் பதினெட்டில் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட காட்சிகளுக்கு என் தரவுத் தளத்தில் உள்ள ஒலிக் கோவைகளை இணைப்பது. என் கணினியைப் பல்கலைக்கழகத்தின் அதி-கணினியுடன் இணைத்து, என்னுடைய ‘ஆர்’ நிரலில் தொடர்பில்லா ஒரு பத்தாயிரம் ஒலிக் கோவைகளையும் குறிப்பிட்ட ரயில் நிலையக் காட்சிகளையும் பெய்ஸ்-ஜெகன் நெறியில் ஓட விட்டேன். இரைச்சலை மொத்தமாக என் காதில் கொட்டியது போலத் துவங்கி சிறிய இடைவெளி அல்லது மௌனம்.

அந்த வார்த்தை என்னிலிருந்து வெளிப்பட்டதிற்குப் பிறகே உணர்ந்தேன்.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்