நுண்வலை

11 நிமிட வாசிப்பு

மூன்று மாடி உயரம் கொண்ட சிறு குன்றின் மீது ஏறி இறங்கியதும் சமவெளி தெரிந்தது. நாணல் புதர்களையும் குத்துச்செடிகளையும் கடந்து காட்டை ஒட்டி சீனி மரத்தின் அடியில் நின்றிருந்த கேரவன் முன் போய் நின்றான்.

காடு நம்ப முடியாத வகையில் அடர்த்தியாய் இருந்தது. கண்ணுக்கு தெரிந்த சாயல், வாகை, திருவாத்தி, புளியன் மரங்களின் கிளைகளும் இலைகளும் சாயத்தில் முக்கியெடுத்தது போல் பச்சைப்பசேல் என்றிருந்தன.

கேரவன் கதவருகே நின்றிருந்த ரோபோ அவனை ஸ்கேன் செய்துவிட்டு “போகலாம்.” என்றது.

படியேறி உள்ளே நுழைந்தான்.

பத்தடி அகலம், இருபதடி நீளம் கொண்ட உள் கூடம்.

மேஜையின் இடப்புற இருக்கையில் அமர்ந்திருந்த நரி எழுந்து, “வருக நல்வரவு.” என்று வரவேற்றது.

நடுநாயகமாக அமர்ந்திருந்த ஓநாய் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “நான் ட்ரோன் ரோபோதான் வந்துவிட்டதென்று நினைத்தேன்.” என்றது.

“பாஸ் சாம்பல் நிற ஓநாய் இனத்தைச் சேர்ந்தவர் பெயர் வானகன். அவருடைய உதவியாளனாகிய நான் நரி இனத்தைச் சேர்ந்தவன் பெயர் நீலகன். நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் இருவரும்தான் உங்களுடன் கலந்துரையாடப் போகிறோம்.”

“நீலகா.போட்டியாளனே வந்துவிட்டான். நாம் ஆர்டர் செய்த உணவு இன்னும் வரவில்லையே. பசியில் வயிறு இரைகிறது.”

“ஆர்டர் போடும் போதே சொன்னேன். பச்சையாய் வாங்கி மிளகுத் தூளும் உப்பும் கலந்து உண்ணலாம் என்று, தாங்கள்தான் மட்டனில் மசாலா கலவை சேர்த்தால்தான் ருசி நன்றாக இருக்கும் என்றீர்கள். அதனால்தான் தாமதமாகிறது.”

“சரி தேயிலைக்கட்டி கலந்த தேனையாவது கொடு. அப்படியே கன்டஸ்டன்ட்டுக்கும் வேண்டுமா என்று கேள்.”

“விதிப்படி நாம் அவருக்கு உணவுப் பொருள் எதையும் இப்போது கொடுக்கக்கூடாது பாஸ்.”

“அப்படியா.நானும் படித்தேன். ஆனால் இந்த விதி எனக்கு ஞாபகம் இல்லை. மூளை நியூரான்களின் பதிவில் உள்ள பலவீனம் என்று எண்ணுகிறேன் வயதாகிக் கொண்டிருக்கிறதல்லவா.”

நீலகன் கொடுத்த கோப்பையை வாங்கியபடி அவன் பக்கம் திரும்பியது.

“உன் பெயர் வயதை மட்டும் சொல்லப்பா.”

“தமிழ்.இருபத்தியெட்டு.”

“மொழியையே பெயராக வைத்துக்கொள்வதும் ஓர் அழகுதான்.” என்றது நீலகன்.

வானகன் மின் புத்தகத்தைப் புரட்டி ஒரு பக்கத்தைக் கூர்ந்து விட்டு நிமிர்ந்தது.

“தமிழ் உனக்கு இந்தப் போட்டியின் அனைத்து விதிகளும் தெரியும் என்று குறிப்பு கூறுகிறது நேரடியாகக் கேள்விகளுக்குச் செல்லும் முன் சம்பிரதாயமாக நீலகன் ஒருமுறை நிகழ்ச்சிகளின் தொகுப்பை உனக்கு விளக்குவார்.”

“அதற்கு முன் உங்களிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டுமே.”

“நீலகா விதிப்படி அதற்கு அனுமதியுண்டா.”

“விதி எண் பதினேழின் கீழ் மூன்றின்படி போட்டியாளர் கூடத்திற்குள் வந்ததிலிருந்து கால்மணி நேரம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.புலன்கள் சீராகி சகஜ நிலை திரும்புவதற்காக விதிகளை மீறாவண்ணம் அவரிடம் உரையாடலாம் என்று இருக்கு பாஸ்.”

“அப்ப சரி. தமிழ் கேள்.”

“இந்தக் காடு ஹாலோகிராபியா இல்லை வர்ச்சுவல் ரியாலிட்டியா.”

“நீ சொல்லும் காலாவதியான கண்டுபிடிப்புகளைக் கடந்து மூன்று டெக்னாலஜிகள் வந்து அவைகளையும் தாண்டி காட்சிப்படுத்துதலின் பட்டைத் தீட்டப்பட்ட இறுதிவடிவம்தான் நீ பார்ப்பது.”

“அந்த டெக்னாலஜியின் பெயர் என்ன என்றுதான் கேட்டேன்.”

“நீலகா அதன் பெயர் என்ன.”

“ரொம்ப முக்கியம்.” என்று திரும்பி தலையில் அடித்துக்கொண்டது நீலகன்.

“கேட்டாயா தமிழ். இந்த டெக்னாலஜியின் பெயர் ரொம்ப முக்கியம்.”

“பாஸ் பாஸ் இந்த டெக்னாலஜியின் பெயரை நாம் அவருக்குச் சொல்லக்கூடாது. இது தேவையில்லாத கேள்வி என்ற அர்த்தத்தில் அப்படிச் சொன்னேன் குழப்பத்திற்கு மன்னிக்கவேண்டும்.”

“ஓ அப்படியா.”

“முட்டாள் முண்டம். வயதாகியும் ஓய்வு பெறாமல் கெஞ்சிக்கூத்தாடி பணி நீடிப்பு பெற்று இங்கு வந்து உட்கார்ந்து கழுத்தறுக்குதே கிழம்.” என்று முணுமுணுத்தது நீலகன்.

“நீலகா நீ ஏதாவது சொன்னாயா.”

“இல்லை பாஸ். நேற்று நடந்த குடும்ப தகராறில் மனைவியின் கைபட்டு முன் பல் ஒன்று உடைந்துவிட்டது அதனால் சிரித்தால்கூடப் பேசுவது போல் கேட்கிறது. மிஸ்டர் தமிழ் நீங்கள் வேறு கேள்வி இருந்தால் கேட்கலாம்.”

“எல்லா இடங்களிலும் ஏ.ஐ ரோபோக்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படுவதால் உங்களைப் போன்ற மிருகங்களுக்குப் பகுத்தறிவைப் புகுத்திப் பேச்சுப் பயிற்சி அளிக்கக்கூடாது என்று அரசு ஆணையிட்டதாகக் கேள்விப்பட்டேனே.”

“நாங்கள் பணிபுரியும் ஏஜென்சி, ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதனால் எங்களுக்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கிறது, தவிர எங்கள் தரப்பு பல்லுயிர்ப் பெருக்கத்தை எங்கள் சகோதர சகோதரிகள் கவனித்துக்கொள்கிறார்கள்.”

“இறுதியாக ஒரு கேள்வி. நீங்கள் இருவரும் என்னிடம் பேசும் தமிழ் புரிகிறது. ஆனால் எனக்குப் புரியாமல் நீங்கள் இருவரும் மட்டும் பேசிக்கொள்ளும் மொழியின் பெயர் என்ன.”

“இந்தத் திட்டத்திற்காக புரோகிராம் செய்யப்பட்ட புதுமொழி இது. மற்றபடி நாங்கள் செத்துப்போன மொழி எதையும் உயிர்ப்பிக்கவில்லை.”

“கால்மணி காலமாகிவிட்டது, நீலகா தம்பிக்கு நிகழ்ச்சித் தொகுப்பை விளக்கிக் கூறு.”

“இது 2090ஆம் வருடம். நூறு வருடங்களுக்கு முன்பு வரதட்சனை, பாதுகாப்பு போன்ற சமுக காரணங்களால் பெண் சிசுக்கள் சட்டவிரோதமாகக் கருவிலேயே கலைக்கப்பட்டன. கிராமங்களில் பிறந்த பெண் குழந்தைகள் கொல்லப்பட்டன. அதற்குக் கள்ளிப்பால் என்கிற கொடிய விஷம் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. நாளடைவில் உருவானால் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தாலோ, நம் கலப்பட உணவுகளின் தாக்கத்தாலோ பெண் சிசுக்கள் கருவாவது குறைந்துகொண்டே வந்தது. ஆசைப்பட்டாலும் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானது மானுட சமூகம். விளைவு ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பெரும் இடைவெளி விழுந்தது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதும் நிலை. அவர்களை முறைப்படுத்த அரசு கொண்டு வந்த திட்டம்தான் இது. திருமண வயதை எட்டிய பெண்ணுக்கு அவள் சமூகத்தைச் சேர்ந்த, படிப்பு, வசதி வாய்ப்பில் பொருத்தமாக இருக்கும் இளைஞர்களை அரசே தேர்வு செய்து பட்டியலைப் பெண்ணின் தந்தையிடம் வழங்கி விடும்.

அவர் அந்தப் பட்டியலை எங்களைப் போன்ற ஏஜென்சிகளிடம் கொடுத்து சிறந்த மாப்பிள்ளையைத் தேர்வு செய்து தரும்படி வேண்டுவார். நாங்கள் ஒரு கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு இது போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் இளைஞனை அவருக்கு மாப்பிள்ளை ஆக்குவோம். நீங்கள் அடைய காத்திருக்கும் பெண்ணின் பெயர் நாயகி, அனுப்பப்பட்ட காணொளியைக் கண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.”

“கண்டேன் இளநீர் பதமான தேங்காய் போல் இளமையுள்ள அழகி.”

“நல்ல உவமை.”

“நன்றி நாயகிக்காக அரசு பரிந்துரைத்தது எத்தனைப் பேர் அதில் இதுவரை போட்டியில் பங்கு பெற்றவர்கள் எத்தனைப் பேர் என்பதைக் கூற முடியுமா.”

“மன்னிக்க வேண்டும். அரசு பரிந்துரைத்தது மொத்தம் பதினாறு பேர் என்பதைத் தவிர மற்றதெல்லாம் ரகசியம்.”

“அந்த ரகசியமும் விதிக்குள் வருகிறதா.” என்று கேட்டது வானகன்.

“கூமுட்டை. படித்ததையெல்லாம் மறந்துவிட்டுப் பிராணனை வாங்குகிறதே.” என்று முணுமுணுத்த நீலகன், “ஆமா பாஸ்.” என்றது.

“சரி போட்டியை அறிவித்துவிடு.”

“உத்தரவு. மிஸ்டர் தமிழ் நாங்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டுப் பின்னால் தெரியும் காட்டிற்குள் நுழைந்து மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து வெளியே வந்தால் போதும் நீங்கள்தான் வெற்றியாளர். அந்தப்புறம் காத்திருக்கும் வாகனம் உங்களை நேராய் மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும்.”

“போட்டி மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதே.”

“காட்டிலுள்ள மாயக் குழிகளையும், இயந்திரப் பொறிகளையும், ஆட்கொல்லி மிருகங்களின் ரத்தக்கரை படிந்த வாய்களையும் கடந்துவிட்டால் சுலபம்தான், சுபம்தான்.”

“நான் கூறும் பதில்கள் சரியானவைதான் என்று யார் முடிவு செய்வார்கள்.”

“பதில்கள் சரியோ தவறோ அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நம்மை ஈஎம் அலைவரிசை மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஏ.ஐஹெச்.ஆர்-63 மாடல் ரோபோவிற்கு உங்கள் உரையாடல் திருப்தி தந்தால், அது நீங்கள் கடக்க இருக்கும் காட்டில் உள்ள அபாயத்தைக் குறைக்கும். அதிருப்தி என்றால் குழிகள், பொறிகள், மிருகங்களின் எண்ணிக்கை கூடும்.”

“நான் தயார்,” என்றான் தமிழ்.

“இறுதியாக ஒரு எச்சரிக்கை. உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், நுழையும் காடு தரும் குழப்பமான காட்சி அனுபவம், சிந்தையைக் குழப்பி ‘மெண்டல்’ ஆக்கி விடும் என்கிற அபாயத்தை மட்டும் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.”

“அறிவேன் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் பாடிய காணொளி கவிதையை நான் பார்த்திருக்கிறேன். சரி கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களா. நான் கேட்கட்டுமா.”

“நீங்களே கேளுங்கள்.” என்றது வானகன்.

“பா..பாஸ்..” என்று பல்லைக் கடித்த நீலகன், “தயவுசெய்து இன்னொரு கோப்பைத் தேன் அருந்தி பசி மயக்கத்தைப் போக்கிக்கொள்ளுங்கள். போட்டியாளன் நம்மைக் குழப்ப நினைக்கிறான். கேள்விகளை நீங்கள்தான் கேட்க வேண்டும்.”

“ஓ சரி. இருபத்தியெட்டாவது அகவையிலிருக்கும் இளம் மானிடா கேள். ஒரு ஊரில் எலி, பாம்பு, கீரி இவை மூன்றும் நண்பர்களாகயிருந்தனர் அவர்களுக்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்தது.”

“நாசமா போச்சு. பாஸ் அது நேற்று வந்த நிலவனிடம் கேட்ட கேள்வி. இவன் பெயர் தமிழ்.”

“அப்படியா.” என்றபடி தலையைத் தடவிய வானகன், “ஆங் ஞாபகம் வந்துவிட்டது. கடவுள், இறைவன், ஆண்டவன், என்பவர் யார் அல்லது என்ன.? இதுதான் தமிழுக்கான முதல் கேள்வி.”

“ஊஃப்.”என்று பெருமூச்சு விட்டபடி இருக்கையில் சாய்ந்தது நீலகன்.

“அண்டம் முழுவதும் படைத்துக் காப்பவர், அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் என்று கூறும் இந்து சமய இறைவனைப் பற்றிக் கேட்கிறீர்களா. கடவுள் ஒருவனே, அவனே அல்லாஹ் அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிற இஸ்லாமிய நம்பிக்கையைப் பற்றிக் கேட்கிறீர்களா. ஆண்டவரின் மகனாக அவதரித்த ஆண்டவராக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவ மதத்தின் ஆண்டவரைப் பற்றிக் கேட்கிறீர்களா அல்லது பௌத்தர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே உலகம் இயங்குகிறது என்கிற.”

“நீ… நீலகா என்ன இது.” என்றது வானகன் அதிர்ச்சியுடன். “மின் புத்தகத்தில் பதிய வைத்தால் ஹேக் செய்துவிடுவார்கள் என்று கேள்விகளை என் மூளையில் மட்டும் பதிவு செய்து வைத்திருந்தேன். பிறகு எப்படி இவன் துளி அவகாசம்கூட எடுத்துக்கொள்ளாமல் இப்படி பொரிந்து தள்ளுகிறான். நீ ஏதாவது…”

நீலகன் தடாலென்று வானகன் காலில் விழுந்தது.

“பாஸ், பிரபு, பெருந்தகையாளனே. சந்தேகப்படுவதற்கு ஒரு லாஜிக் வேண்டாமா. உங்கள் மூளையில் பதிந்துள்ள வினாக்களை நான் எப்படி அறிய முடியும். தவிர நான் நீங்கள் மிச்சம் வைக்கும் எலும்புகளைத் தின்று வளர்ந்தவன். உயிரிழக்கும் சூழல் வந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன்.”

“நன்று எழுந்திரு. தமிழ் நீ பதிலளிக்கும் வேகம் எங்களைப் பரவசத்திற்குள்ளாக்குகிறது. சமயம், மதம், சார்ந்த கடவுளைப் பற்றிச் சொல்லி சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம். மையமாக எதையாவது சொல் போதும். அடுத்தக் கேள்விக்குப் போய்விடலாம்.”

“கடவுள் ஆணோ, பெண்ணோ, நபும்சகனோ அல்லன், அவனைப் பார்க்க முடியாது. இருப்பவனுமல்லன், இல்லையுமல்லன். நாம் எப்படிப் பேணுகிறோமோ அப்படி உருவாகும், அதுவும் அல்லன் என்று குழப்பமான தெளிவுடன் இருக்கிறது ஆத்திகம். எல்லாம் இயற்கை என்ற ஒரு வரியோடு ஒதுங்கிக்கொண்டது நாத்திகம்.”

“அடுத்து.”

“கடவுளைத் தேடும் விஞ்ஞானிகளின் நிலைதான் பரிதாபம். பிரபஞ்சத்தின் உண்மையை முழுக்கப் புரிந்துகொண்டால் கடவுளைக் கண்டுபிடித்துவிடலாம் என்று ஒரு சாராரும், பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் ஒன்றுபடுத்தி விளக்கும் தத்துவம் ஒன்று உள்ளது. அதைக் கண்டுபிடித்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று ஒரு சாராரும் சொல்கிறார்கள். இன்னும் தாமஸ் கோல், ஸெர்மல் போண்டி ஆகிய இருவருடைய ஸ்திர நிலை தத்துவம், இயற்கையின் புத்தகம் கணித மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது ஆகவே எண்களில்தான் கடவுள் இருக்கிறார் என்கிற கலிலியோவின் கூற்று மேலும்.”

“போதும் போதும்.” என்ற வானகன்.

“ஒரு சோறு பதம் பாஸ்.” என்ற நீலகன், “முதல் கேள்வி-பதில் முற்று பெற்றதும் அருந்தத் தண்ணீர் தரலாம் என்கிறது விதி.” என்று நீர்க் குவளையை நீட்டியது.

தமிழ் வாங்கிக்கொண்டான்.

***

“பாஸ் ஆளு விவரமானவனா தெரியறான். அடுத்தக் கேள்வி அரசியல்னா. என்கிட்ட விடை தெரியாத நான்கு கேள்விகள் இருக்கு. முதல் கேள்வி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சினு சொல்றாங்களே அதனுடைய அர்த்தம் என்ன? இரண்டாவது கேள்வி மதசார்பின்மை என்பது.”

“ப்ளீஸ் ஸ்டாப். அரசியலைப் பற்றி நான் கேட்கப்போவதில்லை.”

“அப்ப சினிமாதானே சப்ஜெக்ட். முதல் கேள்வி ஒரு நடிகனுக்கு முதலமைச்சராக வேண்டும்ங்கிற ஆசை எப்பத் தோணும்.? இரண்டாவது கேள்வி வாரிசு நடிகர்களுக்கு.”

“சினிமாவும் இல்லை. என் அடுத்தக் கேள்வி தமிழ் என்ற திருநாமம் கொண்ட மானிடனே கேள். ஆத்மா என்பது என்ன? உடலுக்கும் ஆத்மாவுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது?”

திருதிருவென்று விழித்த நீலகன் வானகன் பக்கம் திரும்பியது.

“என்ன பாஸ் இது…”

“கேள்விகளை நம் மேலிடம்தான் முடிவு செய்கிறதென்பது உனக்குத் தெரியாதா.”

“இந்த நாயகி திட்டத்திற்கு செயல் அதிகாரியாக அந்தச் சாமியார் பொறுப்பேற்கும்போதே நான் நினைத்தேன். ஒரு கன்னிப் பெண்ணை மணம் புரிந்து இளமையைச் செலவுசெய்து இன்பத்தை வரவு வைக்கத் துடிக்கும் ஒரு கட்டிளம் காளையிடம் கேட்க வேண்டிய கேள்விகளா இவை.”

“பெரியோர்களை நிந்திக்காதே நீலகா.”

“பிறகு என்ன பாஸ். காதலியை சந்தோஷப்படுத்துவது எப்படி. கட்டிலில் வித்தை காட்டுவது எப்படி என்று கேட்க வேண்டிய இடத்தில் நான் கேட்ட கேள்விகளே அதிகம் இப்போது நீங்கள் கடவுள் யார், ஆத்மா எங்கே என்று கேட்டால் என்ன அர்த்தம்.”

“யின்-யாங் என்ற சீனத்துத் தத்துவம் பற்றி உனக்குத் தெரியாது. உலகின் ஆதார உண்மைகள் எதிர்மறைகளில் இருக்கிறது என்கிறார்கள். அப்படி காதல், காமம், உறவுகள் என்று லெளகீகம் சார்ந்து போகிறவனிடம் அதன் எதிர் எல்லைகளைப் பற்றித்தான் கேள்வி எழுப்ப முடியும் என்று அந்தச் சாமியார் சொன்னார்.”

“அப்படிப் பார்த்தால்கூடக் காதல் என்பது இருமனம் இணைவது, காமம் என்பது இரு உடல் இணைவது, இணைவின் எதிர் பதம் பிரிவு பிரிவைப் பற்றியல்லவா கேள்விகள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.”

“பிரிவைத் தொடர்ந்து உருவாவது சோகம்,சோகத்தைத் தொடர்ந்து விரக்தி விரக்தியைத் தொடர்ந்து வெறுப்பு, வெறுப்பைத் தொடர்ந்து ஏன் எதற்கு என்ற கேள்விகள். கேள்விகளைத் தொடர்ந்து சகலத்துக்கும் காரணம் யார் என்று தேடத் தோன்றும் அதன் விளைவாக எழும் கேள்விகள்தான் இவை.”

மீண்டும் திருதிருவென்று விழித்த நீலகன், “மன்னிக்க வேண்டும் பிரபு அடியேன் சிறியேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டேன்.”

“இரண்டாவது கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியுமா இல்லையா என்று கேள்.”

“மிஸ்டர் தமிழ் தங்கள் அமைதிக்கு என்ன பொருள்.”

தமிழ் தலையைக் கோதியபடி சொன்னான்.

“நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அமைதியாக இருந்தேன் பதில் சொல்ல நான் தயார்.”

“கேட்பது, வேறு வழி இல்லாததால் எங்கள் பாக்கியம்.” என்றது நீலகன்.

“விஞ்ஞானத்தின் பார்வையில் இது போன்ற கேள்விகளுக்குப் பொருளேதும் இல்லையென்பதால் நாம் இதற்கான பதிலைப் பிரஸ்னதானதிரயத்தில் ஒன்றான உபநிடத்திலிருந்து பெறலாம்.” என்றான் தமிழ்.

நீலகன் அலைபேசியை நோண்டி, “கூகுளை தட்டியதில் வந்த குறுக்கு கேள்வி. மற்ற இரண்டான பிரம்ம சூத்திரத்தையும், பகவத்கீதையும் நீங்கள் படிக்கவில்லையா.” என்றது

“சாமானியர்கள் சுலபமாகக் கற்று விளங்கிக்கொள்ள முடியாத வேதங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்ப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சியின் விளைவே உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை. உபநிடதங்களுக்கு முக்கியத்துவம் தருவதற்குக் காரணம் அது வேதங்களின் நேரடி வாரிசு போன்றது. மற்ற இரண்டும் உபநிடதங்களுக்குச் சொல்லப்பட்ட விளக்கத்தின் தொகுப்புதான்.”

“நீலகா இவனுக்கு நிறைய தெரிந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தம்பி தொடர்ந்து சொல். ஆனால் சுருக்கமாகச் சொல்.”

“ஆமாம் தமிழ் தம்பி. நம் உரையாடல் நாவல் நல்ல. சிறுகதை என்று நினைத்துக்கொண்டு சுருங்கவே சொல்.” என்றது நீலகன்.

“ஆத்மா குதிரை என்றால், நம் சரீரம் ஒரு ரதம் என்றால் ரதத்தில் பூட்டப்பட்டிருக்கும் குதிரையைப் போல் ஆத்மா சரீரத்தில் கட்டுப்பட்டுக் கிடக்கிறது போதுமா.” என்றான் தமிழ்.

“அதற்காக இப்படி ரத்தினமாய்ச் சுருக்கினால் எப்படி. சரியான முறையில் நெறியாள்கை செய்யவில்லை என்று கூறி எங்கள் பேட்டை கட் பண்ணிவிடுவார்கள் ஆகவே கொஞ்சம் விளக்கம் சொல்.”

“கேளுங்கள் நீங்கள் ஒரு பொருளைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளைக் காண்பது உங்களுடைய கண்ணல்ல. ஆத்மா உங்கள் கண்ணை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பொருளைப் பார்க்கிறது. நாக்கைப் பயன்படுத்தி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் நாக்கு பேசுவதாக அர்த்தமில்லை. ஆத்மா நாக்கின் மூலம் பேசுகிறது. அப்படியானால் மனம் அல்லது எண்ணத்தை ஆத்மா என்று கூறலாமா என்றால் அதுவும் ஆத்மா இல்லை. இவ்வாறு உடலினின்றும், இந்திரியங்களினின்றும் உடலின் செயல்களினின்றும் மனதினின்றும் வேறான பொருளே ஆத்மா.”

“அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?”

“அன்னமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம் போன்ற உறைகளால் மூடப்பட்டு, அவற்றுக்கு நடுவே இருந்து மர்மமான முறையில் உடலை இயக்கும் பேராற்றல்தான் ஆத்மா.”

“நன்று.” என்றது வானகன்.

“பாஸ் எனக்கு ஒரு மணி நேரம் ஓய்வு வேண்டும்.”

“ஏன் தலை சுற்றுகிறதா?”

“பூமியே சுற்றுகிறது.”

“அதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்றே.”

“பாஸ் இதைத்தான் டைமிங் என்று சொல்வார்கள்.”

“கிண்டல் செய்து நம் உரையாடலுக்கு நாத்திகவண்ணம் பூசாதே நீலகா.”

“இரண்டாவது கேள்வி முடிந்தவுடன் அந்தத் தேயிலைக்கட்டி கலந்த தேனை மூவரும் அருந்தலாம் என்கிறது விதி.” என்று கோப்பைகளை நிரப்பியது நீலகன்.

***

“கேளப்பா கேள் இருபத்தியெட்டு அகவை கொண்ட தமிழ் என்ற திருநாமம் தரித்த இனிய இளைஞனே கேள். உன் பதிலுக்காகக் காத்திருக்கும் மூன்றாவது கேள்வி இதுதான். ஞானம் என்பது என்ன? அதை எவ்விதம் அடைவது? என்ற வானகன் திரும்பி, “நீலகா அவன் தேனை அருந்தி முடிப்பதற்குள் சொல். நாளை வரும் மகிழன் என்பவன்தான் கடைசிப் போட்டியாளனா.”

“ஆமா பாஸ். பதினாறு பேரில் பத்து பேர் இந்த ரிஸ்க் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் ஹார்மோனை வளர்த்து ஆபரேஷன் செய்துகொண்ட ஆண்களையே மணந்து கொள்கிறோம் என்று ஜகா வாங்கிவிட்டார்கள். நான்கு பேர் நம் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டுக் காட்டுக்குள் போய் மூளை குழம்பிவிட்டார்கள். அதில் மூன்று பேர் குணம் அடைந்துவிட்டதாகவும் ஒருவன் மட்டும் “ஞேஞே.”என்று தலையில் அடித்துக்கொண்டு திரிவதாகவும் தகவல் வந்திருக்கிறது.”

கோப்பையை வைத்துவிட்டு வாயைத் துடைத்துக் கொண்ட தமிழ், “பதிலுக்குள் பயணிப்போமா.” என்றான்.

“போம்” என்றது நீலகன்.

“நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கர்மங்கள், மந்திரங்கள், கணிதம், ஜோதிடம், கால அளவு சாஸ்திரம், வியாகரணம், காவியம், யாப்பியல், அலங்காரம், பூத நூல்கள், ஆய்வு நூல்கள், வானசாஸ்திரம், நாட்டியம், சங்கீதம், இவற்றையெல்லாம் அறிந்தவனாக இருந்தாலும் அவனுக்கு ஆத்மா ஞானம் அடையாவிட்டால் எப்படி துக்கம் தீரும்?”

“எப்படித் தீரும்?”

“ஆத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி நாம் வீடுபேறு அடைவதற்கு உதவக்கூடியதுதான் ஞானம். அதுவே முக்தி பெறுவதற்கான வழியும்கூட. ஞானத்தைப் பெறுவதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. அவை சிரவணம், மனனம், நிதித்யாசனம்.”

“சிரவணம் என்றால்?”

“தகுந்த குருவின் உதவியுடன் வேதங்களை கற்கும் முறையே சிரவணம்.”

“மனனம்.”

“கற்றவற்றை நன்கு சிந்தித்து மனதிலிருத்திக்கொள்வதே.”

“நிதித்யாசனம்.”

“மனதில் நிறுத்திக் கொண்டவற்றை ஆதாரமாக வைத்துத் தியான நிலையைப் பின்பற்றுதல் தியான நிலை கைகூடப் பலவிதமான உபாசனைகள் உள்ளன அதில் ஒரு சாதனம். முண்டக.”

“நிறுத்து.” என்றது வானகன்.

“ஏன் என் கூற்றில் ஏதாவது பிழை கண்டீரா.” என்று கேட்டான் தமிழ்.

“பாஸ் அவன் நம்மை நக்கல் அடிப்பது போல் தோன்றுகிறது.”

“நம் உரையாடலை இத்தோடு நிறுத்திக்கொள்வோம். நீலகா இதில் உன் கருத்து என்ன?”

“தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலோ வேதாந்தம்.” என்றது நீலகன்.

“தமிழ் நீ கானகத்திற்குள் செல்ல நான் அனுமதி அளிக்கிறேன்.” என்றது வானகன்.

“ஆனால் பாஸ் எல்லா பதில்களும் அந்தரத்தில் தொங்குவது போல் தோன்றுகிறதே என்று ஹெச்.ஆர் 63 கேட்டால்.”

“மானுட சேதனைகள்தான் கடவுள், ஆத்மா, ஞானம் என்று லட்சோபலட்சம் பக்கங்கள் எழுதி குவித்திருக்கிறார்களே. நாம் அவற்றிற்கு லிங்க் கொடுத்துவிடுவோம்.”

“அவ்வளவு மெனக்கெடுவானேன். விஷ்ணுபுரத்தின் ஞானசபைக்கு லிங்க் கொடுத்தால் ஜோலி முடிஞ்சது.” என்றது நீலகன்.

“தவிர எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வதல்ல ஞானம். ஒரு விஷயத்தையாவது முழுமையாய்த் தெரிந்துகொள்வதே ஞானம்.”

“பாஸ்.” என்றது நீலகன் அதிர்ச்சியுடன்.

“என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.”

“அதுதானே பார்த்தேன்.”

தமிழ் எழுந்து வணங்கி நின்றான்.

“இல்லற வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டுத் துறவு வாழ்வை மேற்கொள்ள விரும்புவோர் செல்ல சரியான இடம் கானகம் என்பார்கள். ஆனால் கானகம் வழியாகச் சென்று இல்லறத்துணையை அடையப்போகும் உனக்கு என் வாழ்த்துகள்.” என்றது நீலகன்.

மேஜை மீது இருந்த மின்புத்தகம் ஒளிர்ந்தது. குறுந்தகவலைப் படித்த வானகன் சொன்னது.

“மகிழன் போட்டியிலிருந்து விலகி விட்டானாம்.”

“அப்படியென்றால் தமிழ் கானகத்திற்குள் செல்ல வேண்டியதில்லை.”

வெளியில் ஒரு மிதவை வாகனம் வந்து நிற்கும் ஒலி கேட்டது.

“வெற்றிவீரனே, உன் நாயகியிடம் உன்னை அழைத்துச் செல்ல வாகனம் வந்துவிட்டது சென்று வா.”

வாயிலுக்குச் சென்று தமிழை வழியனுப்பிவிட்டு ட்ரோன் ரோபோவுடன் திரும்பியது நீலகன்.

“பாஸ் நாம் ஆர்டர் செய்த உணவை ஒரு கழுகு தட்டிப் பறித்துச் சென்றுவிட்டதாம். ட்ரோன் ரோபோ வருத்தம் தெரிவிக்க வந்திருக்கிறது.”

பற்களை நறநறவென்று கடித்த வானகன், “நீலகா இவ்வளவு நேரம் கடவுள், ஆத்மா, ஞானம் பற்றியெல்லாம் கேட்டாயல்லவா. இப்போது நான் இதற்கு அளிக்கப்போகும் மோட்சத்தைப் பார்.” என்று கூறியவாறு ட்ரோன் ரோபோவின் மீது கொலைவெறியுடன் பாய்ந்தது வானகன்.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்