நீலத்தழல்

நீலத்தழல்

15 நிமிட வாசிப்பு

The discriminant of a quadratic formula determines the nature of solutions of a quadratic equation என்று கரும்பலகையில் எழுதிவிட்டுச் சட்டென்று வகுப்பை நோக்கித் திரும்பினான் பிரசாத். கடைசி வரிசையில் இருந்த ஒரு பையன் தெரு நாயைப் போல ஒலி எழுப்பி இவனது கவனத்தைக் கவர்ந்திருந்தான். இந்தக் கருமம் பிடித்த தீவில் இவன் எங்கே நாயைக் கண்டான். ஒருவேளை தொலைக்காட்சியில் ஏதாவது பாலிவுட் திரைப்படத்தில் பார்த்திருக்கக் கூடும். வகுப்பைச் சுற்றிக் கண்களை மெல்ல ஓட்டினான். முன் வரிசையில் இருந்த மூன்று பெண்களும் தங்கள் நோட்டுப்புத்தகங்களில் அவன் கரும்பலகையில் கொடுத்திருந்த விளக்கத்தை எழுதி முடித்துவிட்டு அதன் கீழே மனித மண்டையோடு படங்களை மிகுந்த பொறுப்புணர்வோடு வரையத் துவங்கியிருந்தனர். அவன் எழுத வேண்டியது டிஸ்கிரிமினண்டா அல்லது டிடர்மினண்டா என்ற ஐயம் திடீரென்று அவனுக்குத் தோன்றியது. இரண்டாவது வரிசையில் ஒரு பையன், இருபடிச் சமன்பாட்டின் தீர்வுகளின் தன்மை குறித்து வகுப்பு மேற்கொள்ள வேண்டிய ஆய்வு பற்றிய துளிக்கவலையுமின்றி மேசை மேல் தலை வைத்து சுகமாக உறங்கிப் போயிருந்தான். மூன்றாவது வரிசையில் ஷஹீது இல்லாதிருந்ததைக் கண்டபோது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருமுறை ஓர் ஊதா நிற ஷார்ப்பி எனக்குத்தான் சொந்தம் என்று இரு மாணவியருக்கிடையில் நடந்த வாய்ச்சண்டையை இவன் மத்தியஸ்தம் செய்ய முனைந்து கொண்டிருந்தபோது, அந்தப் பயல் ஷஹீது ஜன்னல் வழியே குதித்து வெளியே ஓடிவிட்டான். அப்புறம் அவன் வீட்டுக்குத் தகவல் அனுப்பித் தீவு முழுக்கத் தேடி அவனைக் கண்டுபிடித்தபோது அவன் படகுஜெட்டியில் ஒரு மீன்பிடிப் படகுக்குள் பதுங்கிப் புகை பிடித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருவனைச் சமாளிக்க அவன் வீடு, அந்தப் பள்ளி, ஏன் மொத்தத் தீவுமே திணறிக் கொண்டிருந்தது. அவனுக்குத்தான் பிரசாத் எட்டாவது, ஒன்பதாவது, அப்புறம் இந்த ஆண்டு பத்தாவதுக்கும் கணிதம் பயிற்றுவிக்க வேண்டியிருந்தது. தன் மேசை மீதிருந்த பாடப்புத்தகத்தைப் புரட்டி, தான் அளித்த சொல் சரிதானென்பதைச் சரி பார்த்துக் கொண்டான். பின் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தான். வகுப்பு முடிய இன்னும் இருபது நிமிடங்களிருந்தன. வகுப்பில் அன்றிருந்த பதினேழு மாணவர்களையும் (மூன்று பேர் அன்று வகுப்புக்கு வரவில்லை​) தான் கொடுத்துள்ள கணக்குகளைப் புரிந்துகொண்டு போடவைக்கப் பிரயத்தனம் மேற்கொள்ளும் வலி மிகுந்த இருபது நிமிடங்கள். காலையில் குடித்த யே -யே காபிக்கும், அவனது காலையுணவுக்கும் இடையில் அவன் வெறும் வயிற்றில் நிரம்பிக் கிடக்கும் நிமிடங்கள்.

வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்தபோது பள்ளி முதல்வர் இப்ராஹிம் எதிரில் வந்தார். முதல் வகுப்பு முடியும் தருவாயில் வகுப்புகளைச் சுற்றி வந்து கண்காணிப்பது அவர் வழக்கம். இவனைப் பார்த்து சந்து கொண்ட முன்பற்கள் தெரியப் புன்னகைத்தார். “பிரசாத், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். என் அலுவலகத்துல வந்து என்னைச் சந்திக்க முடியுமா?”

போச்சு, என் காலைச் சாப்பாடு இதோடு போச்சு, என்று நினைத்துக் கொண்டான் பிரசாத். “கண்டிப்பா, சார். இப்பவேவா?”

“ஆமாம், வாங்களேன் எங்கூடவே நடந்து போயிடலாம்,” என்று நடந்தார். பிரசாத் பாடப்புத்தகத்தையும், சாக்குக் கட்டிகள் மற்றும் அழிப்பானையும் ஒருகையால் இறுகப் பிடித்தபடி அவரைப் பின்தொடர்ந்தான். பள்ளிவாயிலுக்கு வெளியே வெயில் பட்டு மின்னிக்கொண்டிருந்த இளம்நீலக்கடல் அலைத்துச் சுருண்டு கரையைத் தழுவித் தழுவி விலகியபடியிருக்க, ஆரஞ்சு நிறத் தென்னங்குலைகளை ஏந்திப்பிடித்தபடி தென்னை மரங்கள் கரையோரம் மென்காற்றுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தன.

தன் அலுவலகத்தில் இப்ராஹிம் பெரிய, பளபளப்பான மேல்தளம் கொண்ட மேஹோகனி மேசைக்குப் பின்னால் அமர்ந்து, அதன் மேலிருந்த சிறிய பிளாஸ்டிக் பூந்தொட்டிக்கு ரூம் ஃபிரஷனரைச் சொறிந்தார். ரோஜாக்களின் அடர்ந்த வாசனையை நுகர்ந்தான் பிரசாத். ஒருவேளை தன் வியர்வை நாற்றத்தைச் சகிக்க முடியாமல்தான் அவர் அப்படிச் செய்கிறாரோ என்ற ஐயம் பிரசாத்துக்கு உண்டாயிற்று. மேசைக்கு முன்னிருந்த இருக்கையின் நுனியில், முதுகுத்தண்டை நேராக வைத்து உட்கார்ந்து கொண்டான்.

இப்ராஹிம் மேசை மேல் அவர் பக்கம் கிடந்த ஒரு தாளை முன்னால் நகர்த்தினார். பிரசாத் தலை குனிந்து அதை உற்றுப் பார்த்தான். அது ஏதோ மாணவருடைய நோட்டுப்புத்தகத்தின் ஒரு பக்கத்தை ஒளி நகலெடுத்திருந்தது. டிக் குறியீடுகள் அந்த நோட்டுப்புத்தகம் ஆசிரியரால் ஏற்கனவே திருத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின.

“இன்னிக்கு ஒரு பேரன்ட் இந்த நோட்டைத் தூக்கிட்டு என்கிட்ட வந்திருந்தாங்க. பிரசாத், பாருங்க, உங்களுக்கு இதில ஏதாவது தப்பு தெரியுதா?”

பிரசாத் தாளைக் கையிலெடுத்து வாசித்தான். எண்களின் ஏறுவரிசை, இறங்கு வரிசை அடிப்படையிலான கணக்குள் அதில் இருந்தன. எட்டாம் வகுப்புக் கணக்கு. ஆசிரியர் எல்லாக் கணக்குகளும் சரி என்று டிக் போட்டிருந்தார். இவனுக்கும் எந்தக் கணக்கையும் மாணவர் தவறாகப் போட்டிருந்தது போலத் தெரியவில்லை. தலை நிமிர்ந்து முதல்வரைப் பார்த்தான். ஒன்றும் சொல்லவில்லை.

“ஏறுவரிசைக்கு டிஸ்ஸெண்டிங்னும், இறங்கு வரிசைக்கு அசெண்டிங்க்னும் தலைப்பு கொடுத்திருக்கு,” என்றார்.

பிரசாத் மீண்டும் சரிபார்த்தான். அப்படித்தான் கொடுத்திருந்தது. “ஒருவேளை இந்த மாணவர் தவறா எழுதியிருப்பாரோ?”

“நான் அந்த வகுப்பிலிருக்கிற எல்லா நோட்டுப் புத்தகங்களையும் வாங்கிப் பார்த்து விட்டேன். எல்லாவற்றிலும் அப்படித்தான் போட்டிருக்கு.”

“சார், நான் எங்க டிபார்ட்மெண்டில இன்னிக்கு இது பத்திக் கேட்டுடறேன், சார்,” என்றான். பிரசாத் கணிதத் துறையின் தலைவன். அவன் இந்த வேலையில் சேர்ந்து மூன்றாவது ஆண்டு முன்னிருந்த தலைவர் பணி விலகியதால், அடுத்து அதிக அனுபவம் வாய்ந்த (மாலத்தீவுகளில் மூன்று ஆண்டுகள் ஆசிரியப் பணி என்பதே பெரிய அனுபவம் தான்​) பிரசாத் தலைவராக்கப்பட்டான்.

“தேவையில்லை, பிரசாத். இந்த நோட்டு உங்க வகுப்பில இருந்து எடுத்ததுதான். நீங்கதான் இப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கீங்க.”

பிரசாத் அமைதியாக இருந்தான்.

“இங்க பாருங்க, பிரசாத், மாலத்தீவுகள் உங்க ஊர் மாதிரி கிடையாது. பெற்றோர்கள் ஆசிரியர் மீது புகார் கொடுத்தால் அதன் மீது நான் நடவடிக்கை எடுத்தே ஆகணும். இந்த இடத்தில நடந்துருக்கற தவறு உங்க கணித அறிவில இருக்கற குறையினால இல்ல, மொழியைக் கையாளுவதில் உங்களுக்குள்ள சிரமத்தினாலன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஒருவேளை நீங்க உங்க மொழியிலயே கணிதத்தைக் கற்றிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் நான் பெற்றோர்களிடம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது.”

“இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கறேன், சார்,” என்றான்.

முதல்வர் மீண்டும் பல் தெரியப் புன்னகைத்தார். நான்தான் உன்னைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் என்று குறிப்பதைப் போலிருந்தது அந்தப் புன்னகை.

ஆசிரியர்களுடைய ஊழியர் அறையில் இவன் வழக்கமாக அமரும் மேசைக்கு எதிரில் வருண் அமர்ந்து தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தான். “வாப்பா, ஏன் இவ்வளவு நேரம்? உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன். பசி வயித்தைக் கொடையுது,” என்றான்.

பிரசாத் கையிலிருந்த பொருட்களை மேசை மீது எறிந்தான். “எனக்கு வயிறு எரியுது. பசியினால இல்ல. ஒரே டார்ச்சர்ப்பா இந்த வேல. கிளாஸ்குள்ள போனா பசங்க உயிர எடுக்கறானுங்க. வெளிய வந்தா பிரின்ஸ்பாலும், சூபர்வைசரும் சிண்ட புடிச்சிட்டு ஆட்டறானுங்க.” வருணிடம் பிரச்னையைச் சுருக்கமாகச் சொன்னான்.

“இதுக்கே மனசைத் தளர விட்டுட்டா எப்படி? நாலு காசு சேர்த்தத்தான இங்கே வந்துருக்கோம். அப்புறம் அதில இருக்கற சவால்களையும் சந்திக்கத்தான் வேணும்.”

“முடியிலப்பா. விட்டுத் தொலைச்சுட்டுப் போயிரலாம்னு தோணுது.”

“இங்கே பாரு. இந்தப் பயலை பயோலூமினிசன்ஸ விளக்கமா எழுதுடான்னா கடல் தண்ணிக்குள்ள திமிங்கலம் போட்ட விட்டைதான் மேல வந்து மினுங்குதுன்னு எழுதறான். நான் எங்க போயி அழுவ?”

“நீ வேற சும்மாயிருப்பா!”

“அப்படியில்லை, பிரசாத். ஏதோ வந்துட்டோம். அப்படியே சமாளிச்சிட்டுப் போயிட்டே இருக்கணும். இருக்கறத விட்டுட்டா அப்புறம் போனா வருமா?”

“சாப்பிடப் போகலாமா? எனக்கும் பசிக்குது இப்ப.”

ஊழியர் அறைக்கு வெளியே வந்து பள்ளி வளாகத்தில் நடந்தார்கள். “நீ ஏன் வர்ற பிரச்சினையை மட்டும் பார்க்கிறே? வந்து மூணுவருஷம் ஆன ஆளு மாதிரியா பேசறே?” என்றான் வருண்.

“ஒருவேளை மூணுவருஷம் ஆனதினாலகூட அப்படி யோசிக்கலாமில்லையா?”

“சரி, காசு சம்பாதிச்சதில்லாம வேற என்ன செஞ்சிருக்கோம் இங்கே? திருட்டுத்தனமா டவுன்லோட் பண்ணித் தமிழ் சினிமா பாக்கறோம். வாரம் ரெண்டு நாள் கிரிக்கெட் விளையாடறோம். டாடா ஸ்கை ஆண்டெனாவைத் திருப்பித் திருப்பி க்ராக் விழுற இமேஜஸோட அழுவாச்சி சீரியலும், கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆனா, ஒரு தீவுக்குண்டான வாழ்க்கையை என்னிக்காவது வாழ்ந்து பார்க்க முயற்சி பண்ணியிருக்கோமா?”

“என்ன தோணில ஏறி மீன் பிடிக்கப் போலாங்கிறயா?”

“ஏன் பண்ணக்கூடாதா? வாதூன்னு ஒரு ஐலண்ட்ல பயோலூமினிசன்ஸ் அடிக்கடி வருமாம். உலகம் பூரா இருந்து அதைப் பார்க்க வர்றாங்க. வருஷா வருஷம் மாலே போயிதான் இந்தியாவுக்கு ஃப்ளைட் எடுக்கறோம். அங்கிருந்து போட்ல வாதூவுக்கு ஒரு மணி நேரத்துல போயிடலாம். என்னிக்காவது போய்ப் பார்க்கணும்னு நெனச்சிருக்கோமா? நாம் வாழ்ற இடத்தில நாம சேகரிக்கற அனுபவங்கள் முக்கியமில்லையா?”

பள்ளி வாயிலைக் கடப்பதற்கு முன்னால் ஒன்பது சி பிரிவில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை வாசுகி கடும் சிரமப்பட்டு அடக்க முயற்சிப்பதைப் பார்த்தார்கள். அவள் இவர்களைப் பார்த்த பார்வையில் துயரமும், அயர்ச்சியும் இருந்தன. பிரசாத்துக்கு தாரிணியின் நினைவு வந்தது. அவள் இன்னேரம் அவளது பள்ளி கேண்டீனில் உண்டு கொண்டிருக்கக் கூடும்.

“நான் ஒரு நாள் வாதூவுக்குப் போவேன்,” என்றான் வருண்.

பிரசாத் சிரித்தான். “திமிங்கிலம் போடற விட்டையைப் பார்க்கறதுக்கா?”

பள்ளிக்கு எதிர்ப்புறத்தில் சாலையைக் கடந்து, இடதுபுறத்திலிருந்த சந்துக்குள் திரும்பி ஜல்லிக்கற்கள் நிரம்பிய மணற்பாதையில் நடந்து, பவழப்பாறைகளால் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்த முதல் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வாஅலைக்குமஸ்ஸலாம்! வாங்க, உங்களுக்கு எடுத்து வச்சதல்லாம் ஆறிப்போயிடுச்சு. சூடு பண்ணி எடுத்துட்டு வாறேன்.” புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள் ஷஹீதின் அம்மா. எட்டு குழந்தைகளுக்குத் தாய். கணவனுக்கு ரிசார்ட்டில் பணி. ஆசிரியர்களுக்குக் காலையுணவு தயாரித்துக் கொடுப்பதில் அவளுக்கு ஒரு சிறு பக்க வருமானம் வந்து கொண்டிருந்தது.

“பாஜ்ஜவெரி ஹெந்துனெ! ஹாலு கிஹினே!” என்றான் வருண் அவளைப் பார்த்து.

ஷஹீதின் அம்மா சிரித்தாள். “வர ரங்கலு வெ! திவேஹி நல்லாப் பேசுறீங்களே! கோச்ச கான் பேணுமி?”

“என்ன சாப்பிடுறீங்கன்னு கேக்குறாங்க,” என்றான் வருண் பிரசாத்திடம். முகத்தில் பெருமிதம்.

ஆஸ்பெட்டாஸ் கூரையமைந்த தாழ்வாரத்தில் மைக்கா ஷீட் போட்டிருந்த பெரிய மேசைக்கெதிரில் அமர்ந்து, மைதா ரொட்டிக்குள் மசூனியை வைத்துச் சுருட்டி வாய்க்குள் திணித்து அவசர அவசரமாக மென்றார்கள். வேகவைத்த முட்டையின் ஓட்டை மேசை மேல் தட்டி உரித்துக்கொண்டே பிரசாத் கேட்டான். “ஷஹீது இன்னிக்குப் பள்ளிக்கு வரலையே?”

“உள்ளேதான் இருக்கான். பள்ளிக்குப் போகமாட்டேன் என்கிறான். ஒவ்வொரு மாசமும் அவனைக் கண்டிச்சிப் பள்ளிக்கு அனுப்பறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடுது. அவன் தம்பி, தங்கைகளெல்லாம் அப்படியா இருக்காங்க? மீன்பிடிக்கற தொழிலுக்கு எதுக்குப் படிப்புன்னு கேட்கறான்.”

ஷஹீது அடுக்களைக்குள்ளிருந்து சட்டையில்லாமல் வெளியே வந்தான். இவர்களைப் பார்த்து ஒரு இளிப்பு இளித்தான். அவனது விலா எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. புறங்கையில் பூனைரோமங்கள் தங்க நிறத்தில் மினுங்கின.

“பிரசாத் சார், நீங்களாவது அவனுக்கு புத்தி சொல்லுங்க.”

அவனது தாயின் முன்னிலையில் அவனுக்குப் புத்தி சொன்னால், வகுப்புக்குள் யார் அவனிடம் மல்லுக்கட்டுவது என்று நினைத்துக்கொண்டான் பிரசாத்.

“மீன் பிடிக்கத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டான் வருண்.

“ஓ! எங்க மாமாவோட வெள்ளி, சனி வாரத்துல ரெண்டு நாள் போயிட்டிருக்கேனே!”

“அப்படியா! ஷஹீது, நாங்களும் மீன் பிடிக்க உங்ககூட வர முடியுமா?” என்றான் வருண். இதில் என்னை ஏன் சேர்க்கிறாய் என்று பிரசாத் பார்த்தான். இது என்ன மாதிரியான அறிவுரை என்பதுபோல ஷஹீதின் அம்மா பார்த்தாள்.

“சார், அவனை ஒழுங்காப் படின்னு புத்தி சொல்லுவீங்கன்னு பார்த்தா, அவன் எந்தத் தொழிலுக்குப் போயிடக்கூடாதுன்னு நான் பயப்படுறேனோ அது பத்தியே கேள்வி கேக்குறீங்களே!”

“சரி, பாடத்துலருந்து ஒரு கேள்வி கேக்குறேன். ஷஹீது, உனக்குக் கடல்ன்னா ரொம்பப் பிடிக்குமா?”

ஷஹீது புருவங்களை உயர்த்தி, தலையைச் சற்றே மேலே தூக்கிக் காட்டினான். ஆமாம் என்று அர்த்தம். பணியில் சேர்ந்த புதிதில் மாணவர்களின் இந்தச் சைகை புரியாது பிரசாத் அல்லற்பட்டிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட கருத்தை விளக்கிவிட்டு, புரிகிறதா என்று கேட்டால், பலர் புருவங்களை உயர்த்தி, கழுத்தைத் தூக்குவார்கள். தன் கேள்விதான் அவர்களுக்குப் புரியவில்லையோ என்று நினைத்துக்கொண்டு, திரும்பத் திரும்பப் புரிகிறதா என்று கேட்டிருக்கிறான், அவர்கள் புருவமுயர்த்துவதை நிறுத்திவிட்டு வாய்விட்டுச் சிரிக்கும் வரை.

“சரி, என்னோட மரைன் பயாலஜி சப்ஜெக்ட்ல இருந்து இருந்து ஒரு கேள்வி. பயோலூமினிசன்ஸ் என்றால் என்ன? உனக்குத்தான் கடல் பத்தி நிறையத் தெரியுமே. எங்கே சொல்லு பார்ப்போம்.”

“பயோலூஸ்மினிசன்ஸ்?”

“பயோலூஸ்மோஷன் இல்லை,” என்றபடி பிரசாத் பக்கம் திரும்பிச் சிரித்தான் வருண். மீண்டும் ஷஹீது பக்கம் திரும்பி, “சொல்லு, அப்படின்னா என்ன?”

ஷஹீது உதட்டைப் பிதுக்கித் தோள்களைக் குலுக்கினான்.

வருண் அவனையே சில நொடிகள் பார்த்தான். பிரசாத் சிரிப்பைப் புன்னகையாக மாற்றி, தலைகுனிந்து வேகவைத்த முட்டையில் கவனம் செலுத்தினான்.

“சரி நான் சொல்றேன். பயோலூமினிசன்ஸ் என்பது கடலுக்குள் நிகழும் ஒருவித வேதிவினை. இதனால கடற்பரப்பில் நீல ஒளி வீசும். பார்க்கப் பரவசமாக இருக்கும். இதற்குக் குளிர் ஒளி என்று பெயர். லூசிஃபெரின், லூசிஃபெரஸ் என்கிற என்சைம்கள் சில வகையான மீன்கள், ஜெல்லிகள், பாக்டீரியாக்கள் இவற்றிலிருந்து வெளிவருவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. தன்னுடைய இணையைத் தேட, உணவு தேட, எதிராளியிடமிருந்து தப்பிக்க என்பது போன்ற காரணங்களுக்காக அவ்வுயிரினங்கள் இந்த வேதிப்பொருட்களை வெளிவிடுகின்றன. இதை எழுதினா கேம்பிரிட்ஜ் ஐஜிசிஎஸி தேர்வில் உனக்கு முழு மதிப்பெண் கிடைக்கும். வாதுத் தீவு இதற்குப் புகழ்பெற்றது. உலகெங்கும் இருந்து அதைக் காண மக்கள் வர்றாங்க.”

“நீ ஒரு தடவை அதைப் போய்ப் பார்க்கணும்,” என்றான் பிரசாத்.

“ஆமாம். ஆனா இப்போ நாம ஷஹீதோட மீன் பிடிக்கக் கடலுக்குள்ள போகலாம்.”

“சார், அதெல்லாம் ரொம்பக் கஷ்டம். அதிகாலையில ரெண்டு மணிக்கெல்லாம் தயாராயிடணும். ரீஃப் தாண்டி நடுக்கடலுக்குள்ள போனாதான் டூனாவைப் பிடிக்க முடியும். குளிர் கடுமையா இருக்கும். செல்ஃபோன் வேலை செய்யாது.”

“இந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில நாங்க ரெண்டுபேரும் உங்ககூட தோணில வர்றோம்,” என்றான் வருண். பிரசாத் முடியாது என்னும் வகையில் கையசைத்து மறுத்தான்.

“நீ சும்மாருப்பா! போவோம். எதுவும் செஞ்சு பார்த்தாத்தானே தெரியும்?”

“எனக்கிருக்கிற பிரச்சினையில நான் செய்யக்கூடிய ஒரே விஷயம் ராஜினாமாதான்,” என்றான் பிரசாத். இந்த ஆண்டு முழுவதும் அவனை அழுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகள் மீண்டும் அவன் தலைக்குள் புழுக்களைப் போல நெளிய ஆரம்பித்துவிட்டன. வகுப்பில் மாணவர்களின் அடாவடி. அவன் போன்று இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வரும் ஆசிரியர்களை அவர்கள் படுத்தும் பாடு. பள்ளி முடிந்ததும் பள்ளி முதல்வர் தலைமையில் தினமும் நடைபெறும் கூட்டங்களின் சித்திரவதை. அவர் கருத்துப்படி வெளியிலிருந்து வருகிற எந்த ஆசிரியருமே மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறை பற்றிய முழு அறியாமையில்தான் இருக்கிறார்கள். இது உங்கள் நாடு அல்ல. அங்கு போல் இங்கு நீங்கள் மாணவர்களை அடக்கி ஆள முடியாது. அவர்கள் நிலைக்கு இறங்கி அவர்களுக்குப் பாடங்களைப் புரியவைக்க வேண்டும் என்பார். இவர்கள் தீவின் மக்கள். நூறு சதம் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வாழும் மக்கள். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து அவர்களுடன் பழக வேண்டும். அவர்களை அதிர்ந்து பேசக்கூடாது. மதம் குறித்து அவர்களுடன் உரையாடக் கூடாது. (புதிதாக வரும் எந்த ஆசிரியரிடமும் மாணவர்கள் கேட்கும் முதல் கேள்வியே மதம் குறித்ததாகத்தான் இருக்கும்). எத்தனை கட்டுப்பாடுகள்? மேலும், என்ன இருக்கிறது இந்த ஊரில்? வெறும் மண்ணும், வெறுங்காலில் நடந்தால் பாதம் கிழித்துவிடும் பவழப்பாறைகள் பீடித்த கடற்கரைகளும், பகல் முழுக்கத் தலையைப் பிளக்கும், உடலை எரிக்கும் வெயிலும், உடலை அவிக்கும் புழுக்கமும்தான். நாம் வாங்குகிற சம்பளத்திற்கு இங்குள்ள ரிசார்ட்டுகளுக்குப் போய் அனுபவிக்க முடியுமா? போனாலும்தான் வெள்ளைத்தோல் தவிர வேறு யாரையும் உள்ளே விடுவானா?

எத்தனை விஷயங்களை விட்டு, விட்டு இங்கு வரவேண்டி இருந்திருக்கிறது? நண்பர்கள், உறவுகள், உணவு, சினிமா, கிரிக்கெட், அரசியல், தீபாவளி, பொங்கல், காளியம்மன் கோயில் மாசித் திருவிழா. எல்லாம் காசு சேர்க்கவும், கடனடைக்கவும்தானே. இங்கு வரும் முன் அங்கு சொற்ப ஊதியத்தில்தானே வேலை பார்த்தோம்? செத்தா போய்விட்டோம்?

“நாலுமாசம் முன்னாடி மீன்பிடிக்க மூணுபேர், ஒரு பொக்குராவுல கடலுக்குள்ள போனவங்க திரும்பவே இல்ல. பாடி கூட இன்னும் கிடைக்கல,” என்றான் ஷஹீது.

வீட்டில் தாரிணி பிரசாத் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். தலைவலிக்குதா என்று கேட்டாள். பிரசாத் முகம் சுண்டியபடியே அமர்ந்திருந்தான். மவுஸை உருட்டியபடி மடிக்கணினியின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று அவளை நோக்கித் திரும்பி “இந்த வேலையை விட்டுட்டுப் போயிடலாமா, தாரிணி?” என்றான்.

“இன்னும் பதினேழு லட்சம் பாக்கியிருக்கு வீடு கட்டின கடன்ல, ஞாபகமிருக்கில்ல?”

“ஸ்கூல்ல ஒரே டார்ச்சர்ம்மா. பசங்க படுத்துறானுங்க. இங்க நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு அடிக்கடி கேள்வி வருது.”

“இந்த மாதிரி தத்துவக்கேள்விகளெல்லாம் கடன் வாங்கறதுக்கு முன்னாடி வந்திருந்தா சட்டுன்னு ஒரு முடிவெடுக்க எளிதா இருந்திருக்கும்.”

“என்னதான் பண்ணச் சொல்ற? மண்டையே வெடிச்சிரும்போல இருக்கு.”

“பிரசாத், கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டு மூணு மாசம் பொறுத்துக்கோ. அப்புறம் நவம்பர்ல லீவுக்கு இந்தியா போய்ட்டு வந்தோம்னா பேட்டரி சார்ஜ் ஆயிடும்.”

“திரும்பி வந்தும் இதே குப்பையைத்தானே கொட்டணும். போயிடலாம், தாரிணி. போயி ஏதாவது சிபிஎஸ்இ ஸ்கூல்ல சேர்ந்து நிதானமா கடனைக் கட்டுவோம்.”

“இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு?”

பிரசாத்தின் செல்பேசியில் வருண் அழைத்தான். “நான் அந்தப் பையனோட மாமாகிட்ட பேசிட்டேன். நாளன்னைக்கு ரெண்டுமணிக்கு ஜெட்டிக்கு வந்துரு. ரெண்டேகாலுக்குத் தோணி கெளம்பிரும்,” என்றான்.

“நீ மட்டும் போயிட்டு வா,” என்றான் பிரசாத்.

“நீயும்தான் போயிட்டு வாயேன். ஒரு அட்வென்சர் டிரிப்,” என்றாள் தாரிணி.

“ஸ்கூல்ல நடக்கற அட்வென்சர் போதாதாக்கும்.”

அவனிடமிருந்து செல்பேசியை வாங்கி, “அண்ணா, அவர் வருவார். நாளைக்கு ராத்திரியே உங்க ரூமுக்கு அனுப்பி வைக்கறேன்,” என்றாள். பிரசாத் அவளை முறைத்தான்.

வருணின் அறையில் இருவரும் வியாழன் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து, குளித்துத் தயாரானார்கள். ஜெட்டிக்கு ஒன்றரை மணிக்கே போய்விட்டார்கள். எங்கும் இருட்டு அப்பியிருந்தது. வானில் மங்கலாகத் தொங்கிக் கொண்டிருந்த வளரும் குமிழ்மதியின் ஒளியில் நாலைந்து தோணிகள் தளும்பும் கடல் நீர்மேல் அசைந்து கொண்டிருந்தன. கடல் காற்று விசுவிசுவென்று ஆடைக்குள் புகுந்து சிலிர்ப்பேற்றியது. தோள்பைகளில் வருண் தயாரித்திருந்த டூனா சாண்ட்விச்சுகளும், ஃப்ளாஸ்கில் தேநீரும், தண்ணீர் பாட்டில்களும் வைத்திருந்தனர். நடுக்கடலில் வயிறு கலக்கினால் என்ன செய்வது என்று பிரசாத்துக்குக் கவலையாக இருந்தது. மீன் வெட்டும் சிமெண்ட் பாளம் ஒன்றின் மீது இருவரும் அமர்ந்து தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தபோது ஷஹீதும், அவரது மாமாவும் வந்து சேர்ந்தார்கள். இருவரும் பல மீட்டர் நீளம் கொண்ட தூண்டில் கயிற்றைத் தோளில் சுற்றியிருந்தனர். நிற்க வைத்தால் இரண்டாள் உயரம் வரும் தூண்டில் கம்புகள் இருவர் கையிலும். இவர்களருகில் வந்ததும் ஷஹீதின் மாமா உள்ளங்கை நிறைய சீவல் கொட்டி அதன் மேல் சுபாரியைத் தூவினார். உங்களுக்கும் வேணுமா என்பது போலக் கை நீட்டிக் கேட்டார். இருவரும் தலையசைத்து வேண்டாமென்றதும் வாய்க்குள் திணித்துக்கொண்டார்.

“வலை எதுவும் இல்லையா?” என்றான் பிரசாத்.

“வலை தேவையில்லை. நமக்கு வேணுங்கறததானே பிடிக்கப்போறோம்? டூனாவை மட்டும்தான் பிடிப்போம். சின்ன அளவு மீனெல்லாம் விட்டிருவோம். வலை போட்டா எல்லாமே வருமே,” என்றான் ஷஹீது.

“இந்த ஒத்தைத் தூண்டில வச்சுகிட்டு இவங்க எத்தனை மீன்களைப் பிடிக்கப்போறாங்க?” என்று வருணிடம் தமிழில் கேட்டான் பிரசாத்.

அவர்கள் ஏறிய தோணி நாலுபேருக்குக் கொஞ்சம் இடுக்காகத்தான் இருந்தது. அதன் சிறிய மோட்டார் எழுப்பிய மெல்லிய விர்ர் ஒலியுடன் முப்பது நிமிடங்கள் கடலுக்குள் சென்று விட்டார்கள். ஷஹீதின் மாமா தோணியைத் திருப்பும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு கடலுக்கும், வானத்துக்கும் மத்தியில் வெறித்துப் பார்த்தபடி சீவல் மென்று கொண்டிருந்தார். ஷஹீது ஒரு பாலிதீன் பையைத் திறந்து அதனுள்ளிருந்த சிறிய மீன்களை இரண்டிரண்டாக அறுத்துக் கொண்டிருந்தான். அவன் சுட்டிக்காட்டிய மிதவை ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு பிரசாத்தும், வருணும் எதுவும் பேசாமல், குளிருக்கு இறுக்கி அமர்ந்து கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தபடி இருந்தார்கள். பிரசாத் பாண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பாலிதீன் பைக்குள் சுற்றி வைத்திருந்த தன் செல்பேசியை எடுத்து அலைவரிசை கிடைக்கிறதா என்று சோதித்தான். சுத்தமாக இல்லை. குற்றலைகளில் தோணி தளும்பித் தளும்பி ஏறி இறங்கி முன்னோக்கி விரைந்து கொண்டிருந்தது.

ஷஹீதின் மாமா சட்டென்று தோணியின் வேகத்தைக் குறைத்தார். ஷஹீது மீன் துண்டுகள் நிறைந்த பையை அவர்களை நோக்கி நீட்டினான். அவர்கள் புரியாமல் பார்த்தார்கள். “இதை எடுத்து கடலுக்குள்ள பரவலா வீசுங்க,” என்றான். இருவரும் இருகையாலும் மீன்களை அள்ளிக் கடலுக்குள் வீசி எறிந்தார்கள். தோணி மேலும் வேகம் குறைந்தது, ஏறக்குறை நின்று விட்டதென்றே சொல்லுமளவுக்கு. மாமாவும், மருமகனும் தூண்டில்களை எடுத்துக்கொண்டு தோணியின் ஒரு முனைக்குப் போனார்கள். ஷஹீது சைகை செய்து அவர்களோடு இணைந்து கொள்ளும்படிக் கோரினான். பிரசாத்தும், வருணும் அவர்களோடு இணைந்ததும் அவர்கள் தூண்டில்களை கடலுக்குள் வீசினார்கள்.

பிரசாத்துக்கு இந்த மீன்பிடித்தலை எப்படிப் புரிந்து கொள்வதென்றே ஒரு கணம் புரியவில்லை. தூண்டிலைக் கடலுக்குள் வீசிய மறுகணமே வெளியே இழுத்து விட்டார்கள். அவர்களது தூண்டில் முனையில் ஒரு பெரிய அளவு டூனா மீன் சிக்கியிருந்தது. தூண்டிலைத் தோளுக்குப் பின்னால் வீசி உதறியதும் மீன் கழன்று தோணியின் பரப்பில் விழுந்து துடித்தது. பிறகு உடனடியாகத் தூண்டில் கடலுக்குள் வீசப்பட்டது. உடனே வெளியே இழுத்தால் அடுத்த மீன். வெற்றுத் தூண்டிலுக்கே மீன் சிக்கிக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் தூண்டில் கடலுக்குள் போய் வந்து கொண்டிருந்தது. பத்தே நிமிடங்களில் தோணியின் பரப்பில் அறுபதுக்கும் மேற்பட்ட டூனாக்கள் துள்ளித்துடித்துக் கொண்டிருந்தன. வருண் விரிந்த விழிகளுடன் அவற்றின் அறாத இயக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பிரசாத்தின் தோளில் கைவைத்து, உற்சாகமாகக் குலுக்கினான். ஷஹீதும், அவன் மாமாவும் ஓய்வு எடுப்பதற்காக மீன்பிடிப்பதை நிறுத்திய மாதிரித் தெரிந்தது. மாமா உடனே சீவல் போட்டுக் கொண்டார். ஷஹீது குத்தவைத்து அமர்ந்து, துடிக்கும் மீன்களைக் கையில் எடுத்து பரிசோதித்துக் கொண்டிருந்தான். வருண் அவனருகில் குனிந்து அமர்ந்து, “நெறைய யெல்லோஃபின் மாட்டிருக்கில்ல,” என்றான். ஷஹீது வாயில் விரல் வைத்து அவனை அமைதியாயிருக்கும்படிச் சைகை செய்து விட்டு கடலுக்குள் பார்க்கும்படிக் கைகாட்டினான்.

பிரசாத்தும் வருணுக்குப் பக்கத்தில் அமர்ந்து கடலுக்குள் உற்று நோக்கினான். முதலில் இருட்டில் ஒன்றும் புலப்படவில்லை. பின் மெல்லிய நிலவொளியின் துணையுடன் உற்றுப்பார்த்தபோது, ஒரு முப்பதடி தொலைவில் சில பெரும் மீன்களின் மேற்பகுதி மட்டும் மங்கலாகத் தெரிந்தது. ஒரு பத்துப் பதினைந்து மீன்கள் இருக்கும். எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. செத்துப் போய்விட்டனவா?

“ஃபியாலா,” என்றார் ஷஹீதின் மாமா.

“டால்ஃபின்கள். தூங்குதுங்க,” என்றான் ஷஹீது.

அடுத்த சுற்று இரையை வீசிவிட்டு மீன்பிடிப்பதற்காக ஆயத்தமானபோது தோணி தள்ளாடியது. ஷஹீதும், அவன் மாமாவும் பரபரப்பாகச் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். திடீரென்று, “கீழே உட்காருங்க,” என்று கத்திக் கொண்டே ஷஹீது தோணியின் மீது படுத்தான். மற்ற மூவரும் அவசரமாக உட்கார்ந்து கொண்டார்கள். தோணி பலமாகக் குலுங்கியது. “என்ன ஆயிட்டிருக்குது?” என்று பிரசாத் வருணைப் பார்த்துக் கலவர முகத்தோடு கேட்டான். கேட்ட மறுகணமே அவர்களுக்கு அடியிலிருந்து ஏதோ ஒரு பெரும் இருப்பு தோணியை வலுவாக உரசிச் செல்வதைப் போல் உணர்ந்தார்கள். கீழிருந்து ஒரு பேரலை பொங்கி எழுந்தது. தோணி காற்றில் மேலெழும்பியது. நால்வரும் கடலுக்குள் வீசப்பட்டார்கள். பிடிபட்ட மீன்களோடும், இன்னபிற பொருட்களோடும் தோணி அப்படியே பக்கவாட்டில் கவிழ்ந்தது. அதனுள்ளிருந்த நாலைந்து பெட்டிகள் மட்டும் நீர்மட்டத்தின் மீது மிதந்தன. நாலு பேரும் நாலு திசைகளில் மிதந்து கொண்டிருந்தார்கள். ஷஹீதின் மாமா, “ஃபெமுனு! ஃபெமுனு!” என்று கத்தினார். ஏதோ ஒரு ராட்சத அளவு மீன் அவர்களைக் கடந்து சென்றிருக்கிறது என்று பிரசாத் புரிந்து கொண்டான். நெஞ்சளவு நீரில் மிதந்தது மார்பை அடைத்தது. பரபரப்பாக பாக்கெட்டுக்குள் கைவிட்டு செல்பேசியைத் தேடினான். அது அங்கேயே பத்திரமாக இருந்தது. வெளியே எடுத்து, மேலும் அது நீரில் நனைந்து பழுதாகி விடாதபடி உயர்த்திப் பிடித்து, அலைவரிசை இருக்கிறதா என்று பார்த்தான். சுத்தமாக இல்லை. இருந்தாலும் தாரிணியை அழைத்தான். பலனில்லை. செல்பேசியை உயர்த்திப் பிடித்தபடியே வைத்துக் கொண்டான்.

“இந்தப் படகைக் கவிழ்த்தது எது?” என்று கத்திக் கேட்டான்.

“தெரியலை. சுறாவா இருக்கும்னு மாமா சொல்லறார்,” ஐந்தடி தொலைவில் இருந்து ஷஹீது கத்தினான். பிரசாத் வருண் இருக்கும் திசையில் நோக்கினான். அவன் கண்கள் மூடியபடி மிதந்து கொண்டிருந்தான். ஒருவேளை மயங்கிருப்பானோ?

“அப்படியே மிதந்திட்டிருப்போம். விடிஞ்சும் நாம திரும்பலேன்னா நம்மளைத் தேடிப் படகு வரும்,” என்றான் ஷஹீத். அதுவரையில் இங்கேயே மிதந்து கொண்டிருப்போமா, அல்லது இந்தப் படகைக் கவிழ்த்து விட்டுப் போன சுறா இதே இடத்துக்குத் திரும்பாது என்று என்ன நிச்சயம் என்றெல்லாம் பிரசாத் உள்ளத்தில் ஐயங்கள் எழுந்தன. அவர்கள் பிடித்த மீன்களில் பல அவர்களைச் சுற்றிதான் செத்து மிதந்து கொண்டிருந்தன. அவனது ஐயங்களை அவன் வெளியே சொல்ல விரும்பவில்லை. கைகளை உயர்த்தி செல்பேசியை உயர்வாக, உறுதியோடு பிடித்துக் கொண்டான். வேறு யாரும் அப்படிச் செய்த மாதிரி தெரியவில்லை. அலைவரிசை கிடைத்த மறுகணம் அவன் தாரிணியை அழைப்பான். அவள் மூலமாக அவர்களுக்கு உதவி வரும்.

படகு இப்போது முழுமையாக மூழ்கி விட்டது. அவர்கள் அந்த இடத்திலேயே சில நிமிடங்கள்தான் மிதந்து கொண்டிருந்தனர். காற்று ஒரே திசையிலடித்து அவர்களைத் தள்ளிக்கொண்டே சென்றது. நால்வருக்கிடையிலுமுள்ள இடைவெளியும் அதிகரித்தபடியே வந்தது. இருட்டு இன்னமும் விலக ஆரம்பிக்கவில்லை. செல்பேசியை உயர்த்திப் பிடித்தபடி இருந்ததில் பிரசாத்துக்குக் கைவலி கடுகடுவென்றிருந்தது. ஒருமுறை அதில் நேரம் பார்த்தான். மூன்று இருபது ஆகியிருந்தது. தூரத்தில், குறைந்தது நூறடி தொலைவில் படகில் இருந்து சிதறிய பெட்டிகள் மிதந்து கொண்டிருந்தன. எல்லாரும் ஒருவருக்கொருவர் அதீத இடைவெளியில் பலவீனமாக மிதந்து கொண்டிருந்தனர். பிரசாத் அவனையும் மீறிக் கண்கள் சொக்கிக்கொண்டு வந்து, தலை ஒரு பக்கம் தொங்கி, சட்டென்று துயிலுக்குள் நழுவிவிட்டான்.

பளிச்சென்ற ஒளி மூடிய கண்களுக்குள் ஊடுருவ, திடுக்கிட்டு விழித்தான். தொங்கிய தலையை நிமிர்த்த மனமில்லாமல் கண்களுக்கு நேர் எதிரே திரையிட்டு நின்ற கடல் நீரைக் கண்டான். அவனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்தன திப்பி திப்பியாய் நீலநிற வட்டங்கள். படகுக்குள்ளிருந்த ஏதோ எண்ணெய் கசிந்து நிலவொளியில் மின்னிக் கொண்டிருக்கிறதா? மெல்ல நகர்ந்தபடியிருந்த அவற்றை உற்றுப்பார்த்தபோது நீருக்கு அடிப்பரப்பில் அவை உற்பத்தி ஆகிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. காற்று சுத்தமாக நின்றிருந்தது. மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தபோது அவனது மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. அவர்களைச் சுற்றிலும் நீல ஒளி வெள்ளம். கடல் பரப்புக்கு மேல் நீல நெருப்பை வாரி இறைத்தது போல. குற்றலைகள் எல்லாம் நீலப் பரப்பு கொண்டு மினுங்கிக் கொண்டிருந்தன. அவர்களைச் சுற்றிலும் இருநூறு அடி சுற்றளவிற்காவது அந்த ஒளிரும் நீல வண்ண ஜமக்காளம் போர்த்தப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெரும் பரப்பு சில வினாடிகளுக்கு ஒரு முறை அணைந்து ஒளிர்ந்தது, ஒளிரும் நுரையீரல் ஒன்று விரிந்து சுருங்கி சுவாசிப்பதைப் போல. கடலுக்குள் தலைவிட்டுப் பார்த்தால் என்ன என்று பிரசாத்துக்குத் தோன்றியது. மூச்சை நன்கு இழுத்துக் கொண்டு நீருக்குள் தலையை அமிழ்த்தினான். கண்ணெட்டும் தூரம் வரை ஒளிரும் ஜெல்லி மீன்கள் சுருங்கிச் சுருங்கி விரிந்தபடி, மெல்ல அங்குமிங்கும் நகர்ந்தவண்ணம் இருந்தன. அவற்றிலிருந்துதான் அந்த நீல ஒளி உமிழப்பட்டுக் கொண்டிருந்தது. அவற்றைப் பார்க்க இயல்வதே அவற்றின் ஒளியில்தான் என்பதைப் புரிந்துகொண்டான். மேலும் சில மீன்கள் பெரிய மீசையுடன் நீந்திக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்தும் நீல ஒளி வந்து கொண்டிருந்தது. சிலவற்றிலிருந்து பச்சை நிறத்திலும். தலையை இங்குமங்கும் திருப்பி எல்லாவற்றையும் கண்களுக்குள் நிறைத்துக்கொள்பவன் போலப் பார்த்தான். திடீரென்று தங்கத் துகள்கள் போல ஒளிப்பைகள் வெடித்துச் சிதறுவதைப் பார்த்தான். ஏதோ அவனுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கிக்கொண்ட கனவுலகில் நுழைந்ததைப் போலிருந்தது. இன்னும் பிரயத்தனப்பட்டு உற்றுப் பார்த்தபோது திமிங்கிலம் ஒன்று கடலுக்குள் நீந்திக் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது. இல்லை, அது இரண்டு கால்கள் கொண்ட மனித உருவம். ஷஹீதுதான் தன் மிதவை ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டுக் கடலுக்குள் நீந்திக் கொண்டிருந்தான். மிதந்து கொண்டிருந்த மற்ற இருவரின் கால்களும் தென்படுகின்றனவா என்று முயற்சிக்க முற்படும் முன் அவனது நுரையீரல்கள் மூச்செடுக்க வேண்டித் திணறின. திமிறிக்கொண்டு வெளியே வந்தான். அவனுக்கு எதிரில் ஒரு நாலைந்து டால்ஃபின்கள் மின்னும் நீலஒளியை உடலெங்கும் பூசிக்கொண்டு நீந்திப்போயின. நீலத்திரையைக் கிழித்து நீருக்குள் பாய்ந்து, பின் வெளிவந்து கடற்பரப்பின் மேலாகப் பாய்ந்தன. கனவு இன்னும் அற்றுவிடவில்லை. இவன் எழுப்பிய நீரொலி கேட்டுத் தொலைவிலிருந்து இவன் பக்கம் திரும்பிய வருண், “ஊஹூய்!” என்று கத்தினான். “திமிங்கிலம் போட்ட விட்டை!” என்றான்.

பிரசாத் சிரித்தான். இடது கையால் முகத்தில் ஒழுகும் நீரை வழித்துக்கொண்டு, உதடுகளைச் சுற்றி நாக்கைச் சுழற்றிக் கடல் நீரின் கரிப்பைச் சுவைத்தான். கடற்காற்றை சுவாசித்து நுரையீரலை நிரப்பிக்கொண்டான். அப்போது அவனது வலக்கரத்தில் உயர்த்திப் பிடித்திருந்த செல்பேசி அதிர்ந்து, ஒலித்தது.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்