மாடுகளும் ராக்கர்ஸும்

28 நிமிட வாசிப்பு

ண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்டு கிடந்த நிலத்தில், சூரியனின் வெக்கையினைத் தாங்கமுடியாமல் ஆங்காங்கு பிளந்து செதில் செதிலாக நின்றுகொண்டிருந்தது பூமி. வறண்ட பூமியின் செந்நிறத்திற்கு எதிராக இரையைக் கவ்வியவாறு காகம் ஒன்று இறந்து கிடந்தது. ஒளி முழுவதையும் காகத்தின் மேல் குவித்த சூரியன் அதன் முழு ஈரத்தையும் உறிந்துவிட்டு மேகத்தின் பின்னால் மறைந்துகொண்டது.

வறண்ட நிலத்தின் ஒற்றை மரத்தில் தோல்கள் முழுவதும் வறண்டு, தாகத்திற்காக ஏங்கும் உதடுடன் உட்கார்ந்து இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தான் பகத் என்கிற பக்தவசலம். இலைகள் எல்லாம் உதிர்க்கப்பட்டு நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அவனின் தேவை இரண்டுதான் ஒன்று காகத்தின் ரத்தம் அல்லது தன் துரோகியின் ரத்தம். ஆனால் இதற்கு நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்பது ஆட்டத்தின் விதி.

மரத்திலிருந்து இறங்குவதா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தவன் எதிரே கானல் நீர் அலையடித்துக்கொண்டிருந்தது. கானல் நீரினின் பின்னால் யாரோ நிற்பது போல் தோன்ற கண்களைத் துடைத்துவிட்டுப் பார்த்தான். கானல் நீரின் மெல்லிய அலைதலில் மாடு ஒன்று தெரியத் தொடங்கியது. மாட்டின் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் தோலினால் சுற்றப்பட்ட பொம்மையாக அது நின்றுகொண்டிருக்க அதன் அருகே ஒருவரும் இல்லை. அண்ணாந்து வானத்தைப் பார்த்தவன் எதிரே சூரியன் ஜோதியாய் ஒளிர்ந்துகொண்டு இருந்தது.

***

ய்யாவுடன் மாட்டுச் சந்தைகளுக்குச் சென்று வந்ததன் விளைவாக, அவரின் அறிவு நுட்பத்துடன் தன் நுட்பத்தையும் சேர்த்துக்கொண்டவன், மாட்டின் கால் குழம்பின் அளவையும், அவற்றின் மூத்திர வாடையையும் வைத்தே மாட்டின் ரகம், வயது, வளர்ச்சி என எல்லாவற்றையும் சொல்லிவிடும் அளவுக்குத் திறமைகளை வளர்த்துக்கொண்டான். கன்று ஈனுதலின் சிக்கலான விவகாரத்திற்கு ஆலோசனை சொல்லுவதும், பிரசவத்தின்போது தலை புரண்ட கன்றுக்குட்டியின் காலில் கயிறு சுருக்கிடுவதற்கும் சுற்றி இருக்கும் ஊர்களில் இவன் அளவுக்குத் திறமை படைத்தவன் யாரும் இல்லை. மாடு வாங்குவதற்கு வியாபாரிகளால் தேடப்படும் முக்கிய ஆளாக மாறியதோடு, அவர்களோடு சேர்ந்து சந்தையின் நுணுக்கங்களைக் கற்றவன் விரைவில் தனக்கெனச் சந்தையில் ஓர் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டான். கைமேல் மூடிய துண்டுக்குள் நடைபெறும் எந்த வியாபாரமும் அவனிடம் நடைபெற்றதேயில்லை. சந்தைக்கு வரும் வியாபாரிகளின் தோற்றங்களை வைத்தே மாட்டுக்கான விலையை நிர்ணயிப்பான். தன்னிடம் வரும் வியாபாரி ஏழையாக இருந்து குடும்பக் கஷ்டத்திற்காக மாடுகேட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டால் மாட்டை இலவசமாகக் கொடுத்துவிடுவான். அவனிடம் வாங்கும் மாடுகள் செல்லும் இடங்களில் எல்லாம் தங்களைப் பெருக்கிக்கொண்டே இருக்கும் என்பதால் சந்தையின் ஆதர்ச நபராக மாறியதோடு, தனக்கெனச் சிறு மாட்டுக்கூட்டதையும் வைத்துக்கொண்டான். அந்த மாடுகளைக் கவனிப்பதற்காக, சந்தையில் குவியும் சாணிகளைச் சுத்தப்படுத்தும் மருதுவையும் உடன் சேர்த்துக்கொண்டான்.

காலை மாலை பால் கறப்பது, சொசைட்டில் ஊற்றுவது, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, தொழுவத்தில் அடைப்பது, சாணியை அள்ளுவது, வைக்கோல் பிரித்துப் போடுவது, மாட்டுக்கான தீவனங்களைச் சரியான விகிதத்தில் கலந்துகொடுப்பது என எல்லா வேலைகளையும் கச்சிதமாக மருது முடித்து விடுவதால் பகத்திற்கு மாடுகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வாங்குவது விற்பதில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டான்.

வருமானத்திற்குப் பால்மாடு போக, வம்பு சண்டைக்கு என்று சில நாட்டுமாடுகளையும் வளர்த்தார்கள். அதன் பொறுப்பையும் கவனித்துக்கொண்ட மருது அதற்குத் தேவையான நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சிகளோடு, பருத்தி, புண்ணாக்கு, உளுந்தம் பொட்டு, துவரம் தூசி, பாதாம், பிஸ்தா ஆகிய உணவுக்கலவைகளைத் தினுமும் ஊட்டிவிடுவான். மாடுபிடி நடைபெறப்போவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இளைஞர்கள் சிலரைத் தயார் செய்து மாடுகளுக்கான பயிற்சியையும் கொடுத்து, திருவிழா அன்று வாடிவாசலில் காளையை இறக்கினார்கள் என்றால் அங்கிருக்கும் மொத்தக் கூட்டமும் ஒதுங்கி நின்றுகொள்ளும். இதுவரைக்கும் இவர்கள் மாடு வெல்லப்படவில்லை என்பதும் வரலாறு…

மாடு, வாழ்க்கை என்று சென்றுகொண்டிருந்த இவர்கள் இருவரின் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான் முகுந்தன். எங்கிருந்து வந்தான்? எப்படி வந்தான்? என ஊருக்குள் யாருக்கும் எதுவும் தெரியாது. தலையெல்லாம் சடை சடையாக முடியை வைத்துக்கொண்டு, தன் உள்ளங்கையில் இருக்கும் சிறுகருவியை மரத்தின் கீழே வைத்துவிட்டு அதனிடம் எதையோ பேசிக்கொண்டே இருப்பான். அந்த வழியில் செல்லும் யாரேனும் என்ன செய்கிறான் என்று கேட்டால், “வேற்றுக்கிரகவாசிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன், அவங்க சீக்கிரமே இங்க வந்துருவாங்க. எல்லாம் பாத்து பத்திரமா இருந்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கருவியுடன் பேச ஆரம்பித்துவிடுவான். அவன் சொல்வதைக் கேட்பவர்கள் “பைத்தியம்” என்று தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டு செல்வார்கள். அந்தக் கருவியுடன் பல இடங்களுக்குச் செல்வதும், அதனுடன் பேசுவதும் என ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் அவனுக்குத் தங்கள் வீட்டில் மிச்சம் வைக்கும் சாப்பாட்டைக் கொடுப்பார்கள். தங்கள் வீட்டின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவதற்கும் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்வார்கள். அவனை அருகில் உட்காரவைத்து வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய கதைகளைச் சொல்லுமாறு கேட்பதும், அவனும் ஆர்வமாகக் கேட்கிறார்கள் என்பதற்காகக் கதைகளைச் சொல்வதும் தினசரி நடைபெறும் நாடகம். அவன் சொல்லும் வரை ஆர்வமாகக் கேட்பவர்கள், அவன் அங்கிருந்து சென்றதும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இது எதுவும் தெரியாமல் கருவி, வேற்றுக்கிரகவாசி, ஊர்சுற்றுதல் என வாழ்ந்துகொண்டிருந்த அவனிடம் பகத் அக்கறை எடுத்துக்கொண்டான். தான் இருக்கும் இடங்களில் எப்போதெல்லாம் கண்ணில்படுகிறானோ அப்போதெல்லாம் அவனை அழைத்துக்கொண்டு போய்ச் சாப்பாடு, டீ எனக் கவனித்து அனுப்பிவைப்பான். நன்றாகச் சாப்பிட்டு முடித்தவன் “பயப்படாத அண்ணன். வேற்றுக்கிரகவாசி வந்தா உன்ன மட்டும் நான் காப்பாத்திறேன்” என்று சொல்ல அதற்குச் சிரித்துக்கொண்டு தலையாட்டுவான். அவனை ஊரில் எல்லாம் பைத்தியம் என்று சொல்ல, அதை ரசிக்காத பகத் அவனுக்கு முகுந்தன் என்ற பெயரையும் வைத்தான். அதன்பிறகு முகுந்தன் என்றால் மட்டுமே திரும்பினான் என்பதால் எல்லோரும் அந்தப் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். பகத்தைப் பார்க்காத சில நாட்கள் முகுந்தன் அவனைத் தேடி வீட்டுக்குச் சென்றால், மருது அவனைத் துரத்திவிடுவான். ஒரு நாள் சந்தைகளுக்குள் தன் உடைகிழிந்து தொங்குவதுகூடத் தெரியாமல் அலைந்துகொண்டிருந்த அவனைப் பார்த்த பகத், உடனே அவனைப் பஜாருக்குள் அழைத்துச் சென்று உடை, சோப்பு, துண்டு எல்லாம் வாங்கிக்கொடுத்து, சடை சடையாகத் தொங்கிக்கொண்டிருந்த முடியையும் திருத்தி அழைத்து வந்தான். ஊரே அவன் அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. மருது மட்டும் “ஏண்ணே இதெல்லாம் அவனுக்குச் செய்ற?” என்று கேட்க, “இல்லடா அவனும் நம்மள மாதிரி மனுஷந்தான. நம்ம முன்னாடி ஒருத்தன் அப்படி அலையுறத எப்படிடா பாத்துக்கிட்டு இருக்கமுடியும். வாயில்லா ஜீவனயே நாம இப்படிப் பாத்துக்கிடுறோம். அவன் வாய் உள்ள ஜீவன்டா” என்றான்.

***

சூரியன் நடுவானில் வர, சுற்றிமுற்றுப் பார்த்தவன் மரத்திலிருந்து இறங்கி மாட்டை நோக்கி ஓடத்தொடங்கினான். தூரத்தில் இருக்கும்போது மாடு அருகே இருப்பது போலவும், ஓட ஓட தூரத்தில் இருப்பது போலவும் தோன்ற ஆரம்பித்தது. மாட்டை நெருங்கிவிட்டோம் என்று தோன்றிய நொடியில் சூரியன் தன் கோணத்தைச் சிறிது மாற்றிக்கொள்ள, எங்கிருந்தோ பறவை ஒன்று அவன் தலைக்குமேல் விருட்டெனப் பறந்தது. பதறியவனாக மண்ணில் விழ, உடல் முழுவதும் மண் ஒட்டியது. மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டே எழுந்தவன் பறவையைப் பார்க்க, அது உலோகங்களினால் செய்யப்பட்ட பறவை என்பதும், ஆட்களின் நடமாட்டங்களை வேவு பார்ப்பதற்காக அவர்களால் அனுப்பப்பட்டதும் புரிய வர, ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான். கடந்து சென்ற பறவை மீண்டும் அவனை நோக்கி வந்தது. பறவையின் கேமராவிற்குள் தான் விழும் நொடியில் நிச்சயம் கொல்லப்படுவோம் என்பது தெரிந்ததும் அமைதியாகவிட்டான். பயம் இல்லா அவனின் முகத்தினைத் தன் கணக்கீட்டுக்குள் அளவெடுத்துவிட்டு, அவனின் காலடியில் வந்து இறங்கியது. மாட்டையும் அவனையும் ஒரு முறை பார்த்துவிட்டு, தன் காதில் மாட்டியிருக்கும் கருவியின் மூலம், “target captured” என்று கூவ, அவர்களின் மேல் பம்பரத்தினைக் கவிழ்த்து வைத்தாற்போல் பறக்கும் தட்டு வட்டமிட தொடங்கியது. தன் இறுதிநொடிகள் நெருங்கிவிட்டதை உணர்ந்தவன் மாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கீழே நின்றுகொண்டிருந்த உலோகப்பறவை “target moving” என்று மீண்டும் கூவ, பறக்கும்தட்டு அவன் அருகே வந்து இறங்கியது.

***

மாட்டைப்பிடித்துக்கொண்டு பகத் நடந்துவர எதிரே தன் கருவியைக் கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தான் முகுந்தன். மாடு தன் அருகில் வந்ததும், கருவியைப் பாக்கெட்டில் வைத்தவனாக நேரே பகத்திடம் சென்றவன், “அந்த மாட்டை எனக்குத் தர்றீங்களா?” என்று கேட்டான். இதுவரை அவன் இப்படி வாய் திறந்து தன்னிடம் எதுவும் கேட்டதில்லை என்பதால், மாட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அதன்பிறகு ஊர்சுற்றுவதற்குத் தன்னுடைய கருவியுடன் மாட்டையும் சேர்த்துக்கொண்டான்.

பகத்தின் மதிப்பு நகரம், மாநகரம், மாவட்டம் எனக் கூடிக்கொண்டே செல்ல, வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் அவனைத் தேடி ஆள் வர ஆரம்பித்தார்கள். தினம், வாரம் என வீட்டுக்கு வந்தவன், இப்போது வீட்டுக்கு வர இரண்டு மாதங்கள் வரை ஆகிறது. அவனும் திரும்பி வரும் நேரங்களில் எல்லாம் மாடுகளைக் கைகளில் பிடித்துவர, தொழுவத்தின் எல்லையை விரிவாக்க வேண்டியிருந்தது. மாடுகளின் பெருக்கத்தினால் பொங்கி வரும் பாலினை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பால்பண்ணையைத் தொடங்கினான் மருது. பால்பண்ணைக்குத் தேவைப்படும் அதிகமான பால்களைப் பெற்றுக்கொள்வதற்கான சொசைட்டிகளைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் உருவாக்கினான். மாடுகளுக்கான தீவனம், இன்சூரன்ஸ், மருத்துவ வசதி என சலுகைகளை வழங்கி உறுப்பினர்களைப் பெருக்கிக்கொண்டான். முகுந்தனிடம் கொடுத்த ஒரு மாடுதான் தங்களுக்கு இவ்வளவு வளர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்று பகத்தும், மருதுவும் நம்ப ஆரம்பித்தார்கள்.

அதே நேரத்தில் முகுந்தன் மாட்டைப் பிடித்துச் சென்ற ஊர்களிலெல்லாம் மழைக் கொட்டோ கொட்டு என்று தீர்த்துக்கொட்ட, சுற்றி இருக்கும் வயல்கள் எல்லாம் மூன்று பருவங்களிலும் பயிர்களைப் பார்க்கத்தொடங்கியது. நெல், சோளம், உளுந்து, எலுமிச்சை, தென்னை, நிலக்கடலை, பருத்தி, வாழை என பயிர்கள் எல்லாம் விளைந்து குவிய, சேர்த்து வைப்பதற்கு இடம் இல்லாமல் ஊருக்கென நான்கு கிட்டங்கிகள் புதிதாகக் கட்ட தீர்மானம் மேற்கொண்டார்கள். சாப்பிடுவதற்கான நேரம்கூட இல்லாமல் விவசாயிகள் எல்லாம் நிலத்தை உழவு அடிப்பது, விதை விதைப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது எனச் சுழன்றுகொண்டே இருந்தார்கள். எல்லோர் பைகளிலும் பணம் புரள ஆரம்பித்தது. வீட்டில் இருக்கும் பெண்கள் கழுத்திலும், கைகளிலும் நகைகள் பூத்துக்குலுங்கத் தொடங்கின. விவசாய வேலை முடிந்த நேரம் போக, மிச்சம் இருக்கும் நேரத்தை யோசிப்பதற்கென்று வேறு கவலைகள் ஏதும் இல்லை என்பவர்களாக ஊரில் கட்டப்பட்டிருந்த மடத்தினில் உட்கார்ந்து ஆடுபுலி, சீட்டுக்கட்டு, தாயம் என விளையாட தொடங்கினார்கள். பெண்கள் வீட்டின் உரல்களிலும், அம்மிகளிலும் உலக்கையால் இடித்துக்கொண்டே இருந்தார்கள். தங்களின் இந்த அதிர்ஷ்டத்திற்கெல்லாம் காரணம் முகுந்தன்தான் என்று நம்ப ஆரம்பித்தவர்கள் அவனைத் தங்கள் வீட்டில் சாப்பிட அழைக்க, அதைக்கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருப்பான். ஒரு வாய் தண்ணீராவது குடித்துக்கொண்டு செல்லுமாறு கெஞ்சுவார்கள். அவன் சிரித்துக்கொண்டு சென்றுவிடுவான்.

***

முழுவதும் இரும்பினால் செய்யப்பட்ட கூண்டு ஒன்றினில் பகத் அடைக்கப்பட்டிருந்தான். பந்து வடிவத்தில் இருந்த அந்தக் கூண்டிற்குள் அவன் அருகே உடலில் வளைவு என்பதே இல்லாதவர்களாக, முழுவதும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட, எரிந்துபோன உருவத்தைக் கொண்டவர்களாக இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். பகத் அமைதியாக யோசித்துக்கொண்டிருக்க, கூண்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. எதிரே நிமிர்ந்து பார்க்க, அவர்கள் உருவத்தை ஒத்த மாதிரியே ஒருவன் பகத்தை நோக்கி வந்தான். நின்றுகொண்டிருந்த இருவரும் கூண்டைவிட்டு வெளியேற, பகத்தைப் பார்த்துச் சிரித்தவன், “இன்றைய காலைப்பொழுதில் எங்களின் எல்லா ரோந்து வாகனப் புகைப்படங்களிலும் சிக்காமல் அலைந்துகொண்டிருந்திருக்கிறாய். நல்ல வேளை உன்னைப் பற்றிய தகவல்களைச் சரியான நேரத்தில் எங்கள் தளபதி கொடுத்து உதவினார். உன்னைப் பற்றிய விவரங்களை எல்லாம் பகுப்பாய்வு செய்ததில் உன்னுடைய பலவீனம் மாடு என்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஹாலோகிராமில் ஒரு மாட்டை உருவாக்க எங்களுடைய ஆராய்ச்சிக் குழுவிடம் சொன்னோம். அவர்களும் அதைக் கச்சிதமாக உருவாக்கிவிட, நிஜமாடு என்று நம்பி எங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டாய்.”

“நிஜத்தைக் காட்ட விரும்பாதவன்தானே அந்தத் துரோகி. அவனின் வேலையாட்களும் அவனைப் போலவேதான் இருப்பீர்கள்.”

“எங்கள் தலைவரை இழிந்து பேசுவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நீங்கள் இப்போது உயிருடன் இருப்பதற்குக் காரணம் அவர்தான் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.”.

“மகத்தான வாழ்வினை நெருப்பில் எறிந்தவனிடம் உயிர்ப்பிச்சை வாங்கி நான் வாழ்வதாக இருந்தால் அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என் உயிரின் கடைசி மூச்சும் அவனின் உயிரை எடுப்பதற்காகத்தான் முயற்சி செய்யும்.”

“வீண்பேச்சு பேச வேண்டாம். தலைவரின் கருணைக்கும் ஓர் அளவு இருக்கும்”.

“அதற்கான எந்த வாய்ப்புகளும் நிச்சயமாக அவனிடம் இருக்காது என்பது எனக்குத் தெரியும். அவனிடம் சென்று சொல்லுங்கள் எங்கள் இருவரில் ஒருவரின் மரணம் நிச்சயம் என்பதை. மரணத்தின் முன் கேட்க வேண்டிய கேள்விகளுடன் நான் அலைந்துகொண்டிருக்கிறேன் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்…

“அவரைக் கேள்வி கேட்பதற்கான நேரம் இன்னும் உங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் அவரே உங்களை அழைத்துக் கேட்பார்.”

“இல்லை, நான் அவனைச் சந்தித்தே ஆகவேண்டும்.”

“இங்கே அதிகாரங்களுக்குப் பதிலளிக்கப்படாது. வேண்டுதல்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.”

எங்கிருந்தோ ஈசல் உருவத்தில் வந்த உலோகப்பறவை அவர் காதருகே முணுமுணுக்க அவசரமாகக் கிளம்பினார். இரு பாதுகாவலர்களும் கூண்டுக்குள் வந்தார்கள்.

***

“இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால். ஊர் திருவிழா நடத்திறது சம்பந்தமா, மக்கள் எல்லாரும் கூடி தீர்மானம் எடுக்கிறதுக்காக, ஊர்மந்தையில இருக்கிற ஆலமரத்துக்குக் கீழ, எல்லாரும் கூடணும்னு பஞ்சாயத்து சார்ப்பா உத்தரவு போட்ருக்காங்க சாமியோவ்” என்று தண்டோரா அடித்துச் சொல்லிக்கொண்டே நடந்தான் கறுப்பன். மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டின் வாசலில் நின்று அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்கிருந்தோ மாட்டுடன் ஓடிவந்த முகுந்தன் ‘வந்துட்டாங்க, வந்துட்டாங்க’ என்று கத்திக்கொண்டே தெரு முழுவதும் சுற்றி வந்தான். யார் வந்தார்கள்? எங்கு வந்தார்கள்? என மக்கள் எல்லோரும் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு தூரமாகப் பார்த்தார்கள். அப்படி யாரும் வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. “பைத்தியம்” என்று சொல்லி எல்லோரும் சிரித்தார்கள். அப்போது ஈசல் போன்ற ஒன்று மட்டும் முகுந்தன் தலைக்கு மேல் வந்து நின்றது. அது முழுவதும் இரும்பினால் செய்யப்பட்ட ஒன்றாக இருக்க மக்கள் எல்லோரும் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இதனைத்தான் அவன் சொல்கிறான் என நினைத்த மக்கள் “இதுதான் அவன் சொல்ற வேற்றுக்கிரகவாசி போல” என்று சொல்லி சிரிக்க, இவர்களை எல்லாம் பார்த்துவிட்டு அந்தப் பறவை வந்த வழியே திரும்பிச் சென்றது. அந்த பறவையைப் பார்த்து நின்ற கறுப்பன் மீண்டும் தண்டோராவை அடிக்கத் தொடங்கினான். முகுந்தன் கையில் மாட்டுடன் மக்களைப் பார்த்துக்கொண்டு நின்றான். கறுப்பனின் சத்தத்தைத் தாண்டி மக்கள் காதுகளுக்கு புதுச் சத்தம் ஒன்று கேட்கத் தொடங்க, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். வானத்தில் வெறும் கரும்புள்ளியாய் தோன்றிய அவை அருகில் வரும்போது மாபெரும் கூட்டமாக மாறியது. அது சற்றுநேரத்திற்கு முன்பு வந்து சென்ற ஈசல் உலோகப்பறவைகளின் கூட்டம் எனத் தெரிந்ததும் மக்கள் எல்லோரும் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை மூடினார்கள். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் புகுந்த அவைகள், வீட்டில் இருந்த எல்லாரையும் தொந்தரவு செய்ய, பதறியவர்களாக வீட்டைத் திறந்து ஓடத் தொடங்கினார்கள். எநதத் திசைக்குத் திரும்பினாலும் அவைகள் அரண்போல் ஊரைச்சுற்றி நின்றுகொண்டிருக்க, மந்தையில் எல்லோரும் ஒன்று கூட ஆரம்பித்தார்கள் ஆனால் முகுந்தனைச் சுற்றி மட்டும் அவை பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டன. அவனைக் கவனித்த மக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பயந்து போய் நிற்க, வானிலிருந்து பேரோசை ஒன்று கேட்கத் தொடங்கியது. எல்லோரும் மேலே பார்க்கத் தொடங்க, பம்பரத்தினைக் கவித்துவைத்தாற்போல் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்ட பறக்கும் வாகனம் ஒன்று தரையில் இறங்கியது. மக்கள் எல்லோரும் பயந்து பின்னால் நகர, அதன் கதவுகள் திறக்கப்பட்டது. ஏழு அடி உயரத்தில் தீ ஊற்றி எரித்தது போல் ஓர் உருவம் உள்ளிருந்து இறங்கிவர, அதன் கூடவே ஐம்பதுக்கும் அதிகமான உருவங்களும் இறங்கிவந்தார்கள். மக்கள் பார்க்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்துச் சிரித்த அந்த உருவம், “வணக்கம் மக்களே. நாங்கள் ராக்கர்ஸ். பூமியிலிருந்து ஐம்பத்தெட்டாயிரம் ஒளி ஆண்டுகள் தாண்டி இருக்கிறது எங்களுடைய கிரகம். கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கானப் பயணத்தைத் தொடங்கினோம். ஏறக்குறைய எங்களுடைய நட்சத்திரத்தின் வெளிவட்டப் பாதைக்கு வரும்போது, எங்கிருந்தோ ஒரு சமிக்ஞை எங்களை நோக்கி வந்துகொண்டே இருந்தது. அதனை எங்களின் ஆராய்ச்சிக்குழுவிடம் தெரிவித்தபோது, அது பூமியிலிருந்து வருகிறது என்பதையும், ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும் தெரிவித்தார்கள். நாங்களும் அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டோம். அன்று கிளம்பிய எங்கள் பயணம் இங்கு வந்து சேருவதற்குப் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எங்களிடம் சமிக்ஞை மூலம் தொடர்புகொண்ட மிஸ்டர். முகுந்தனுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு. இந்தப் பூமியில் எங்களின் பாதுகாவலனாகவும், ராக்கர்ஸினை வழிநடத்துவதற்கான தலைவராகவும் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்று கூறக் கூட்டத்தின் நடுவிலிருந்து மாட்டுடன் முன்னே வந்தான் முகுந்தன். அவனைச் சுற்றி ஈசல் உலோகப்பறவைகள் வட்டமிட்டது. அவன் முகத்தில் பைத்தியத்திற்கான எந்தவித முகபாவனைகளும் இல்லாமல், மக்களைப் பார்த்துச் சிரித்தான். முதன்முறையாக மக்களுக்கு அவன்மேல் பயம் உண்டாகியது. பேசிக்கொண்டிருந்தவன் தொடர்ச்சியாக, “எனவே இனிமேல் அவரின் சொல்லை நாங்கள் கேட்பதும், எங்களின் சொல்லை நீங்கள் கேட்பதும் என முடிவு எடுத்துள்ளோம். இதை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். கலைந்துசெல்லலாம்” என்று சொல்ல மக்கள் எல்லோரும் பயந்துகொண்டு தங்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புக ஆரம்பித்தார்கள்.

மறுநாளே ஊரைச் சுற்றிக் கண்ணாடியிழையால் செய்யப்பட்ட கண்காணிப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. வெளிஉலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்களின் பயோமெட்ரிக் தகவல்கள்கள் கணினியில் ஏற்றப்பட்டன. எல்லோருடைய வீட்டின் முன்னாலும் கண்காணிப்பு உலோகப்பறவை நிறுத்திவைக்கப்பட்டது. அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பதிவதற்கான டிஜிட்டல் மினிட் புக் வாசலில் நிறுவப்பட்டன. மாடுகள் வாங்குவதும் விற்பதும் தடை செய்யப்பட்டது. விளைநிலங்களின் பயிர்கள் ராக்கர்ஸ் அளந்து கொண்டது போக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கான ரேஷன் முறைகள் அமல்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கான விசேஷ அட்டைகள் கொடுக்கப்பட்டன. தண்ணீரின் பயன்பாடுகள் குறிக்கப்பட்டன. பாதைகளின் பயன்பாடுகள் பிரிக்கப்பட்டன. முகுந்தன் சென்று வருவதற்கான உலோகப்பறவை வாகனத்தை உருவாக்கினார்கள். அவனுடைய மாட்டைப் பார்த்துக்கொள்வதற்கெனச் சிலரையும் நியமித்தார்கள். அவன் தங்குவதற்கு இரும்பினாலான கூண்டும் அதனைச் சுற்றிப் பாதுகாப்பு வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ராக்கர்ஸ்களின் உயரத்திற்கும், உடலுக்கும் செங்கல், மணலினால் கட்டப்படும் வீடுகள் சரியாக இருக்காது என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என முகுந்தன் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை ராக்கர்ஸ்கள் அமைத்தார்கள். பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு, “ஊரை ஒட்டியிருக்கும் மலையினைக் குடைந்து அவர்களுக்கான வீடுகளை அதில் கட்டிவிடலாம். அதற்குத் தேவையான உழைப்புக்கு ஊர்மக்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று ஆலோசனையைத் தெரிவித்தான் முகுந்தன். மக்களிடம் அது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட, அதை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் போராட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். முகுந்தனின் ஆலோசனை பேரில் ஈசல் உலோகப்பறவையை வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் இறந்தார்கள். உயிருக்குப் பயந்தவர்களாக மக்கள் மலையை உடைப்பதற்காக ஒத்துக்கொண்டார்கள். அதே நேரத்தில் எல்லாரும் வேலைக்குச் சென்றால், மாடுகள், விவசாய நிலங்களைப் பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை எனக் கிராமத்தினர் முகுந்தனிடம் கோரிக்கை வைக்க, அதை ராக்கர்ஸ்கள் பார்த்துக்கொள்வார்கள் என நம்பிக்கை அளித்தான்.

கிராமத்தினர் மலையை உடைக்கும் வேலைக்குச் செல்ல, ராக்கர்ஸ் மாடு மேய்ப்பதற்கும், விவசாய வேலைக்கும் சென்றனர். ராக்கர்ஸ்க்கு மாடுகளைக் கவனிப்பதைவிட அவைகளின் மேல் உட்கார்ந்து பயணம் செல்வது பிடித்துப்போக, அதையே தங்கள் வாகனமாக மாற்றிக்கொண்டார்கள். அவைகளுக்கு உணவு கொடுப்பதையோ, தண்ணீர் கொடுப்பதையோ மறந்தவர்கள் நாள் முழுவதும் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு வயல்வெளிகளில் சுற்றிவருவதும், தேவைப்படும் நேரங்களில் மாட்டின் பாலை கறந்து குடிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள். மாடுகளின் உடல் எடை குறைந்து, மடிகளில் பாலுக்குப் பதிலாக ரத்தம் வரத் தொடங்க, அதற்குக் காரணம் மக்கள்தான் என முடிவு செய்த ராக்கர்ஸ், கொடுக்கப்படும் ரேஷன் முறையில் ஒருவேளை உணவைக் குறைத்துக்கொண்டார்கள். நாட்கள் ஆக, ஆக மாடுகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிலத்தில் விழுந்து இறக்க ஆரம்பித்தன. அவற்றின் கறியை ருசித்து உண்ட ராக்கர்ஸ்கள் மாடுகள் இறப்பதற்காக சந்தோசப்படத் தொடங்கினார்கள். மாடு சாகும் என்ற நிலை வந்தவுடன் அதை அவர்களே கொலையும் செய்தார்கள். இறந்த மாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற எலும்புகளிலிருந்து தங்கள் தேவைக்கான அலங்காரப் பொருட்களை உருவாக்கியவர்கள், அதன் தலைகளைத் தங்கள் வீட்டில் நினைவுச்சின்னங்களாக மாட்டிக்கொண்டார்கள். மாடுகளின் எலும்புகளினால் செய்யப்பட்ட நுண்ணிய வேலைப்பாடுடைய கிரீடம் ஒன்றை முகுந்தனுக்குச் சூட்டி, அதற்கு ஒரு திருவிழா எடுப்பதற்கான தீர்மானத்தையும் மேற்கொண்டார்கள். மக்கள் எல்லோரும் அதில் கலந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் மரணம் என்ற சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. உயிருக்குப் பயந்தவர்களாக அந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள், முகுந்தன் தலையில் வைக்கப்பட்ட கிரீடத்தைக் கண்டதும் தங்கள் வாழ்க்கையின் இழப்புகளை நினைத்து அழத் தொடங்கினார்கள்.

பயிர் வளர்ச்சிக்காக ராக்கர்ஸ்கள் நிறுத்தப்பட்டார்கள். நிலத்தை உழுவது, விதை விதைப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என எல்லாவேலைகளையும் ஒழுங்காகச் செய்து வந்த ராக்கர்ஸ்களின் ஒருவன் பயிரின் வளர்ச்சியின் வீர்யத்தைச் சோதிப்பதற்காகப் பிஞ்சுப் பயிரினைb பறித்துச் சாப்பிட்டான். அதன் ருசி தன் கிரகத்தில் சாப்பிட எல்லாவற்றையும் தோற்கடிக்கக்கூடியதாக இருக்க, மூன்று வேளையும் அதையே உணவாக மாற்றிக்கொண்டான். அவனின் செய்கையைத் தொடர்ச்சியாகக் கவனித்த மற்ற ராக்கர்ஸ்களும் அவன்போல் செய்யத் தொடங்க, பயிர்கள் பிஞ்சுப் பருவதிலேயே தன்னுடைய விளைச்சலை நிறுத்திக்கொண்டன. கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெறும் புற்களால் சூழப்பட்டதாக நிலம் நின்றுகொண்டிருந்தது. நிலத்தினைப் பார்த்த மக்கள் இனிமேலும் தங்கள் பொறுமையைத் தாங்கமுடியாதவர்களாக, ராக்கர்ஸ்கள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரதம் என ஒன்று கூடித் தீர்மானம் போட்டார்கள். சிலநாட்களில் அவர்கள் திரும்பி விடுவார்கள் என எதனையும் கண்டுகொள்ளாமல் இருந்த முகுந்தன் உண்ணாவிரத்தில் சிலபேர் இறக்கத் தொடங்கியதும் நிலைமையின் விபரீதத்தை உணரத்தொடங்கினான். “உண்ணாநோன்பிருப்பவர்கள் இரண்டாம் நாளே கொல்லப்படுவார்கள். அதிலும் அவர்கள் சாவு, கொலையின் எந்த வரைமுறைக்குள்ளும் வராத கொடூரமாக இருக்கும்” என மறுநாள் செய்தி அனுப்ப, அதிலும் சிலபேர் அப்படி என்ன செய்துவிடுவான் என்று நினைத்தவர்களாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்கள். வயிறுதான் பசிக்குக் காரணம் என்பதால் உடலில் சிறு காயங்கள் கூட இல்லாத அளவுக்கு, வயிற்றை அறுத்து குடல் தொங்கிய அந்த உடல்களை மக்கள் கூடும் இடங்களில் காட்சிப்பொருளாக நிறுத்திவைத்தான். அதன் பிறகு அங்கு எந்தவித உண்ணாவிரதமும் ஏற்படாமல் வேலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

***

ராக்கர்ஸ் மொத்த கிராமத்தையும் சூழ்ந்துகொள்ள, வெளிமாநிலங்களுக்கு மாடுவாங்குவதற்காகச் சென்ற பகத் மூன்று மாதங்களுக்குப் பிறகு கையில் மாடுகளுடன் திரும்பி வந்தான். ஊரின் எல்லைகள் அடைக்கப்பட்டு, கண்ணாடியிழையால் ஆன சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஊருக்கு வேறு பாதைகள் இருக்கிறதா எனத் தேடத்தொடங்கினான். சென்ற பாதைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டிருக்க, என்ன நடந்துகொண்டிருக்கிறது ஊருக்குள் என்ற குழப்பத்துடன் சுற்றி யாரேனும் கண்ணுக்குத் தெரிகிறார்களாக எனப் பார்க்கத் தொடங்கினான். வெறுமையின் எல்லை கண்ணுக்கு எட்டும் துரம் வரை விரிந்திருக்க, யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் மாடுகளைத் தூரத்திலிருந்த இலை எல்லாம் உதிர்ந்த மரத்தில் கட்டிவிட்டு, துண்டை விரித்தவனாகக் கீழே படுத்து உறங்க ஆரம்பித்தான். சூரியன் மறைந்து, நிலவும் தோன்ற, கண்முழித்தவன் எதிரே சுற்றிலும் வெறும் தரைமட்டுமே தெரிந்தது. தரையில் மாடுகள் போட்ட சாணிகள் குவிந்திருக்க, மாடுகள் ஒன்றைக்கூடக் காணவில்லை. பதறியவனாக எழுந்தவன் சுற்றிமுற்றிலும் தேட, பூச்சிகள் அவனைச் சுற்றி ரீங்காரமிடத்தொடங்கின. மாடுகளை எல்லாத் திசைகளிலும் தேடத் தொடங்கினான் ஆனால் அவைகள் அங்கு இருந்ததற்கான எந்தத் தடயங்களும் இல்லை. சுற்றி ஓடியதில் முழுவதும் வியர்த்தவனாக மூச்சினை மேலும் கீழும் விட்டுக்கொண்டிருந்தவனுக்கு அழுகியதன் மணம் ஒன்று வரத் தொடங்கியது. கண்முன்னால் பொருள் ஒன்று தரை அதிரும்படி விழ, பதறியவனாகப் பின்னால் விலகிச் சென்றான். அழுகியதின் மணம் கூடத்தொடங்க, உடலைக் கட்டுப்படுத்த முடியாதவனாக வாந்தி எடுக்கத் தொடங்கினான். வயிற்றின் எச்சங்கள் எல்லாம் வாயிலிருந்து வழிந்து முடிய, கீழே விழுந்தவனை அழுகலின் மணம் மீண்டும் துரத்தியது. அந்தப் பொருள் என்னவென்று பார்ப்பதற்குள் மீண்டும் மற்றொரு ஒரு பொருள் அதன் மீழு விழுந்தது. அங்கிருந்து எழுந்து ஓடத்தொடங்கியவன் கால்தடுமாறி கீழே விழுந்தான். பொருட்கள் இப்போது மழைபோல் பொழியத்தொடங்க அவை மாபெரும் மூட்டைக்குவியல்களாக மாறத்தொடங்கியது. அழுகல் மட்டுமே தன்னைச்சுற்றி நிறைந்திருக்க, சுவாசம் முழுவதும் அது தன்னை நிரப்பிக்கொண்டது. அதைத் தாங்கமுடியாதவனாக மூக்கை பூமியை நோக்கி அழுத்தினான். நிலத்தில் நான்கு திசைகளிலும் சுற்றிச் சுற்றி வரத்தொடங்கியவன் வாயிலிருந்து எச்சில் வடியத் தொடங்கியது. அழுகலின் மணம் உயிரின் கடைசி அணுக்களுக்குள்ளும் நுழைய, உயிரே பிழைக்கவேண்டாம் என்பவனாகக் கண்கள் சொருக, மூச்சையும் நிறுத்திக்கொண்டான்.

நிலா நடுவானில் இருக்க, “பகத்து பகத்து” என்றொரு குரல் அழைப்பதுபோல் இருக்க, கண்முழித்துப் பார்த்தான். முழுவதும் நெருப்பினில் சூழப்பட்டவனாக எரிந்துகொண்டிருந்த மனிதன் ஒருவன் அவன் எதிரே அமர்ந்திருக்க, பதறி எழுந்து கால்கள் தளரும்வரை ஓடத் தொடங்கினான. கால்கள் ஓட்டத்தை நிறுத்த, திரும்பிப் பார்த்தவன் கண்முன்னால் நெருப்பு மலை ஒன்று கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. மனித உடல் எரியும் வாசனை மூக்கினைத் துளைக்க எரிந்துகொண்டிருப்பது மனித உடல்கள் என்பதும் அவனுக்குப் புரியத்தொடங்கியது. என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? யார் இந்த உடல்கள்? எனப் பலகேள்விகளுடன் நின்றுகொண்டிருக்க, அவன் அருகே உட்கார்ந்து எரிந்தகொண்டிருந்த மனித உருவம் அவனை நோக்கிவரத் தொடங்கியது. கால்கள் அவனறியாமல் மண்ணை நோக்கி சரிய, அருகில் வந்த உருவம் “பகத்து, நாந்தான் கறுப்பன். வெள்ளந்தி மனிதனிடம் விஷம் ஏறினால் என்ன நடக்கும் என்பதற்கான எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துவிட்டேன். அந்நியர்கள் எப்போதும் அழிவையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை எங்கள் தாத்தன், அப்பன் பாடல்களில் உணராதவன் காலத்தின் சாட்சியாக அதை நேரில் உணர்ந்துவிட்டேன். சென்று வருகிறேன் பகத். இனிமேல் நமக்கு விடிவென்பதே இல்லை. மேலும் கேள் என்றவனாக ராக்கர்ஸின் வருகை, சட்ட திட்டம், முகுந்தனின் தலைமை என எல்லாவற்றையும் விளக்கியவன், உள்ளே சென்றுவருவதற்கான வழிமுறைகளையும் விளக்கினான். இரவு எரிந்து முடித்த உடல்களைப் புதைத்து மூடுவதற்கான வாகனம் ஒன்று அதிகாலையில் வரும். அந்த நேரத்தில் மட்டும் கதவுகள் திறக்கப்படும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள் ஆனால் உள்ளே செல்லாமல் இருப்பதே உனக்கு நல்லது.” என்று சொல்லிக்கொண்டே இறுதி மூச்சையும் நிறுத்திக்கொண்டான்.

தான் உயிர்வாழ்வதற்கான காரணங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் குடலுடன் சேர்ந்து கழுவப்பட்டுவிட்டது என்பவனாக நெருப்பில் தன்னைச் சமர்பித்துக்கொள்ளச் சென்றவனின் தலைக்குள் துரோகத்தின் பாதைகள் பல வழிகளைக் காட்ட “கூடாது. இங்கே எரிந்த நெருப்பிற்கு சாட்சி ஒருவன் வேண்டும்” என்று தனக்குள் கூறிக்கொண்டவன் அந்த நெருப்பின் அத்தனை வெப்பத்தையும் உடலில் ஏந்திக்கொண்டான். அதிகாலை ராக்கர்ஸின் வாகனத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கியவன் கதவு திறக்கப்பட்டு அதன் ஒளி எங்கும் பரவ, பாம்பு நுழைவதற்குப் பல்லி அளவு இடம் போதும் என்பவனாகத் தரையில் ஊர்ந்து உள்ளே சென்றான். வாகனத்தின் தூரத்திலிருந்து தனித்து வந்துவிட்டோம் என்று தெரிந்ததும் ஓடும் திசை, செல்லும் பாதை, தங்குவதற்கான இடம், அடுத்து செய்யவேண்டிய திட்டம், இதன் பிறகான நாட்கள் எப்படி இருக்கப்போகிறது, அவனை எப்படிக் கண்டுபிடிப்பது எனப் பல எண்ணங்களைத் தலையில் சுமந்தவனாக ஓடிக்கொண்டே இருந்தான். கதவுகள் அடைக்கப்பட்டும் ஒளி எங்கும் பரவப் பதறியவனாக இலை உதிர்ந்த மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான்.

அதிகாலை விடியலில் தன் கிராமத்தைப் பார்த்தவன் கிராமம் முழுவதும் துடைத்தழிக்கப்பட்டு, தான் நேற்று வாங்கி வந்த மாடுகளில் ராக்கர்ஸ்கள் ஊர்வலம் போவதைப் பார்த்தான். மரத்திலிருந்து காத்திருக்கத் தொடங்கியவன் மேல் சூரியன் முழு வெப்பத்தையும் செலுத்த கண்களின் பார்வை குறைவது போல் தோன்றியது. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று அவன் அருகே அமரத் தொடங்கியது. காகத்தின் கண்களைப் பார்க்கத் தொடங்கியவனின் உருவத்தைத் தன் கண்களுக்குள் ஏந்திக்கொண்டது காகம். மரத்தில் புழு ஒன்று ஊறத்தொடங்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த காகம் அந்தப் புழுவைக் கொத்தி எடுத்துக்கொண்டு வானத்தை நோக்கிப் பறந்தது. முதன்முதலாக பசியின் குரலை வயிற்றிலிருந்து கேட்கத்தொடங்கினான். சுற்றி வரும் காகத்தைப் பிடித்து தின்றுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குச் சென்றான். தனக்கு ஏன் இப்படி எண்ணங்கள் தோன்றுகிறது? எல்லாவற்றுக்கும் காரணம் தன் பசி அமர்த்திய ஒருவன் என்பது தோன்ற, எரிந்த நெருப்பின் ஞாபகம் மேலேறத் தொடங்கியதும் மீண்டும் வயிற்றிலிருந்த மிச்சத்தையும் வெளித்தள்ளத் தொடங்கினான். பசியின் குரல் சத்தம் மீண்டும் அதிகமாகக் கண்முன்னால் சுற்றிய காகம் தரையில் விழுந்தது. என்ன நடந்தது என்று புரிவதற்குள் வானத்தைப் பார்த்தவன் எதிரே ராக்கர்ஸின் குட்டி வாகனம் ஒன்று பறந்து சென்றது. காகத்தின் மேல் மொத்த வெப்பத்தையும் குவித்த சூரியன் மேகத்தின் பின்னால் மறைந்துகொண்டது.

***

கத்தின் சிறைச்சாலைக் கதவு திறக்கப்பட, காவலுக்கு நின்ற இருவரும் வெளியே கிளம்பினார்கள். எருமையின் உடலைப் போல் உருவம் கொண்ட ஒருவன் முன்னால் வந்து நிற்க, அது யார் எனப் புரிபடுவதற்க்கு சில நிமிடங்கள் ஆனது பகத்துக்கு. அந்த உருவம் யார் எனப் புரிந்ததும் தன் உடலின் மொத்த ஆவேசத்தையும் திரட்டி, “துரோகி, துரோகி” என்று அடிக்க ஆரம்பித்தான். அவனின் அடியை வாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்த முகுந்தன் பகத்தைப் பார்த்து, “ஏன் இந்த ஆவேசம். சிறிது நேரம் அமைதியாகு. நாம் பேசலாம்” என்றான். பகத்துக்கோ தன் கோபம் முழுவதையும் காட்டிவிடவேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்க, அடித்துக்கொண்டே இருந்தான். தன் பொறுமையின் எல்லையை இழந்த முகுந்தன் தன் கையால் அவனைத் தள்ளிவிட, இரும்புக்கூண்டினில் மோதித் தரையில் விழுந்தான். அதன் பிறகு அவனால் ஓர் அங்குலம்கூட நகரமுடியவில்லை. எழுவதற்கு எவ்வளவோ உடல் முயற்சி செய்தும் அது நகர மறுத்துக்கொண்டே இருந்தது. அதைக் காண சகிக்காதவனாய் முகுந்தன் அருகில் சென்று தூக்கச்செல்ல, கையைத் தட்டிவிட்டவனாய், “துரோகி, துரோகி. என்னைத் தொடாதே. நெருப்பினில் எங்கள் உயிர்களையும் நம்பிக்கையையும் சேர்த்துப் பொசுக்கி மண்ணை மூடித் துடைத்தழிக்க விரும்பிய துரோகி” என்றான். சிரித்துக்கொண்டே அருகே உட்கார்ந்த முகுந்தன், “சிறிது நேரம் நான் சொல்வதை நன்றாகக் கேள். துரோகிகளுடன் நாம் வாழவேண்டிய காலம் இது. யார் எப்போது எங்கிருந்து வருவார் என்ற எந்த உத்திரவாதமும் இல்லாதது நம் வாழ்க்கை. துரோகத்தின் சுவடுகளைக் கண்டவன் மட்டுமே வாழ்க்கையின் மாபெரும் பெரும்பரிசைப் பெறுகிறான். புரிந்துகொள். மீண்டும் சொல்கிறேன் நம்மைச் சுற்றி துரோகிகள் மட்டுமே வாழ்கிறார்கள். மண், மக்கள் என்று அரற்றுகிறாயே, இவர்கள் எல்லாம் யாரென்று நான் உனக்குச் சொல்லட்டுமா? நாய்கூட மோந்து பார்த்துவிட்டு உண்ணாமல் செல்லும் சாப்பாட்டைப் பாசத்துடன் சாப்பிடக் கொடுத்தவர்கள். மலத்தினை அள்ளி அள்ளி வீசும்போது தாகம் எடுத்தால், தண்ணீரை வேலை முடித்துப் பெற்றுக்கொள் என்று சொல்லுவார்கள். அந்தத் தண்ணீர் கொண்டு வரும் பாத்திரம் அவர்களின் காலைக்கடன்களை முடிப்பதற்காகச் செடிகளிடையே தூக்கிச்செல்வது. நான் இந்தக் கைகளினால் அள்ளி வீசிய மலத்தின் வாசனை இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. வயிற்றுவலியிலும், வாயினில் குமட்டலுமாக எத்தனை நாட்களைத் தூக்கமில்லாமல் கழித்திருக்கிறேன் என்று தெரியுமா? அதைக்கூட மன்னித்துவிடக் கூடியதற்கான மனம் எனக்கிருந்தது. ஆனால் அதிர்ஷ்டம் என்னால் வந்தது என்று நினைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஒவ்வொன்றும் உள்ளிருக்கும் பீங்கான் எடுக்கப்படாமல் ரத்தம் கசிந்துகொண்டிருப்பது போல் இப்போதுவரை கசிந்துகொண்டே இருக்கிறது. அதனைப் புடுங்குவதற்கான வழிகளும் எனக்குத் தெரியவில்லை. வீட்டின் முதல் உணவை எனக்காகச் சமைப்பதும், யார் வீட்டில் சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குள் அடித்துக்கொள்வதும், நான் சாப்பிடுவதற்காக வெள்ளி, தங்கம் என்று சாப்பாட்டுத் தட்டுகளை வாங்கிக் குவித்ததையும் நீ பார்த்திருக்கவேண்டும். எனக்காக வைக்கும் சாப்பாட்டில் நெய் அள்ளி ஊற்றப்படுவதும், நான் எட்டிப்பார்க்கும் வீடுகளில் பால்கள் எனக்காகக் கொதிக்க வைக்கப்படுவதும் என இவர்களின் போலி அன்பினால் நான் தினம் தினம் அழுகிக்கொண்டிருந்தேன். இவர்கள் கூடவே வாழவேண்டாம் என்று முடிவெடுத்து ஊரைவிட்டுக் கிளம்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். ஆனால் உன்னிடம் சொல்லாமல் போனால் எங்கு சென்றாலும் என்னால் நிம்மதியாக வாழமுடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். உனக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில்தான் பத்து வருடங்களுக்கு முன்பாக நான் தொடர்புகொண்ட ராக்கர்ஸ்கள் இங்கு வந்ததும், அவர்களை வைத்து என்னுடைய பழிவாங்குதற்கான எல்லாச் சாத்தியங்களையும் நிகழ்த்திக்கொண்டேன். இந்த வாழ்க்கையில் மனதார நான் உணவு அருந்தியிருக்கிறேன் என்றால் அது உன்னுடன் சேர்ந்து சாப்பிட்ட நேரங்களில் மட்டுமே. அதில் மட்டும்தான் எந்தவித பேதங்களையும் நான் காணவில்லை. அதன்பிறகு உன்னை எதிர்ப்பார்க்காத நாளில்லை. நீ வந்தால் இவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிடலாம் என முடிவு செய்தவனாக நீண்ட நாட்கள் காத்திருக்கத் தொடங்கினேன். ஆனால் நீ இங்கு வந்து சேர்வதற்குள் கொடூரங்களின் எல்லா ருசிகளையும் ருசித்து முடித்துவிட்டேன். என்னால் பின்திரும்பவே முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டேன். இவர்கள் எக்கேடு கெட்டுச் செத்தாலும் பரவாயில்லை, உன்னை மட்டுமாவது காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தவனாகத்தான் உன்னுடைய எல்லாத் தகவல்களையும் ராக்கர்ஸின் தகவல்தளத்திலிருந்து மறைத்துவிட்டேன். கண்காணிப்புப் பறவையின் பார்வைக்குள் பல தடவை நீ பதிவு செய்யப்பட்டுவிட்டதும், ஒவ்வொரு முறையும் அதை நீக்குவதே எனக்குப் பெரிய வேலையாகிப் போனது. உன்னைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கான சாத்தியங்கள் எல்லாம் இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில்தான் உன்னை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் இல்லை இல்லை கண்டுபிடிக்க வைத்துவிட்டான். உன்னைப் பற்றிய தகவல்களை எல்லாம் அவர்களுக்குத் தெரிவித்தவன் அவன்தான். உன் அலைச்சலின் அத்தனை சுகங்களையும் அனுபவித்தவன் அவன் மட்டும்தான். மாடு, மாடு என்று நீ ஊர் சுற்றிக்கொண்டிருக்க, அவனோ இங்கே மாடுகளின் ரத்தத்தினால் தன்னைப் பெருக்கிக்கொண்டிருந்தான். உனக்குக் காட்டியக் கணக்குகளுக்குப் பின்னால் அவனுடைய கணக்குகள் எல்லாம் பாலில் தண்ணீராய்க் கலந்தது. அடிமாடுகளை விற்கும் கணக்குகளில் எல்லாம், மாட்டின் தோலாய் மாறியது. வாங்கும் தீவனங்களில் தனக்கான தீவனக் கணக்கையும் எழுதிக்கொண்டான். பால்களில் ரசாயனத்தைக் கலந்து பாக்கெட் பாலாக விற்க ஆரம்பித்தான். நீ உழைக்கும் ஒவ்வொரு காசுக்குப் பின்னாலும் அவன் தன்னை இருமடங்காக்கிக்கொண்டான். இப்போது தெரிகிறதா அவன் யார் என்று?

“மருது”. யாருக்கும் கேட்காத அளவில் மெதுவாகச் சொன்னான் பகத்.

ஆம் அவனேதான். இப்போது அவனுக்கு இங்கிருக்கும் பதவி தெரியுமா? தளபதி. அவனைக் கொல்வதற்கான என்னுடைய அதிகாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ராக்கர்ஸ்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டான். இப்போது ஊரில் செல்வச் செழிப்புடன் இருப்பவனும் அவன்தான். துரோகம் என்பது இரு பிளேடுகளின் இடையிலும், கழுமரத்தின் கூர்முனையிலும் நிறுத்துப்படும் மனிதனின் உடல் போன்றது. நல்லவர்கள் மட்டுமே எப்போதும் அதற்குப் பலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காலங்கள் மாறும், காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அதற்குள் தன்னை நிறுத்திக்கொள்வதே இன்றைய இயல்பு. அதுதான் மருது. இப்போது உன் முன்னால் இரு முடிவுகள் இருக்கின்றன. ஒன்று என்னுடன் சேர்ந்து வந்துவிடு. நான் ராக்கர்ஸ்களுடன் பேசி என்னுடன் இருப்பதற்கான எல்லாவற்றையும் செய்துவிடுகிறேன். இல்லையென்றால் உனக்கு இருப்பது மரணம் மட்டுமே. இவ்வளவு நாள் வரை உன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவனும் நான்தான். தயவுசெய்து புரிந்துகொள்” என்று அவனை மீண்டும் தூக்கிவிட முயற்சி செய்ய, அவனைத் தள்ளிவிட்டவனாக மீண்டும் தரையில் விழுந்தான் பகத். பகத் எழு முயற்சி செய்தாலும் அவனின் உடல் நகர மறுக்க, அந்த வேதனையினைப் பார்க்கமுடியாதவனாக “யோசித்து வை நாளை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் முகுந்தன்.

மறுநாள் காலை கூண்டிலிருந்து இருவர் புடைசூழ வெளியே தூக்கிவரப்பட்டான். முகுந்தனின் அருகில் அவனை வைத்துக்கொள்வதாகத் திட்டம். காலைச்சூரியனின் ஒளி பூமியில் முழுவதும் வீசிக்கொண்டிருக்க, தன் மேல் நிழல்படுவதை உணர ஆரம்பித்தான். மேலே பார்க்க உலோகப்பறவை வாகனம் ஒன்று றெக்கையை அடித்துக்கொண்டே அவன் கண்முன்னால் இறங்கியது. அதில் அவனை ஏற்றுமாறு வாகன ஓட்டி கூற, இருவரும் அவனைத் தூக்கி உட்கார வைத்தார்கள். பறவை முகுந்தனின் இருப்பிடத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. சூரியன் தன் கோபத்தை எல்லாம் பூமியில் குவித்துக்கொண்டிருக்க, மேலே உட்கார்ந்துகொண்டு தான் பிறந்து, வளர்ந்து, வாழ்வோடு ஒன்றாகிய தன்னுடைய கிராமத்தை பார்த்துக்கொண்டே வந்தான். சிறுவயதில் ஓடி விளையாடிய கண்மாய் வெறும் நிலமாய்க் காட்சி தந்தது. செந்நிற பூமியில் சூரியனின் வெப்ப அலை தகதகத்துக்கொண்டிருக்க, ஆங்காங்கு கருநிறத்தில் மரங்கள் தோன்றத் தொடங்கியது. இவ்வளவு மரம் இங்கிருக்கிறதா? என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவை நகர ஆரம்பித்தன. பதறியவனாக அவற்றை உற்றுநோக்க ஆரம்பித்தவன் அவை மரங்கள் இல்லை தன் கிராம மக்கள் என்பதும் தெரியவர வாகனத்தை அவர்களை நோக்கிச் செலுத்துமாறு கூறினான். “தலைவரின் கட்டளை இல்லாமல் தங்களால் நிறுத்த முடியாது” எனச் சொல்ல, “கீழே நீங்கள் இறக்கவில்லை என்றால் உங்கள் தலைவரால்கூட என்னை வாழ்க்கையிலும் பார்க்கமுடியாது என்று சொல்லிவிடுங்கள். இப்போதே நான் இதிலிருந்து குதித்து என் உயிரை மாய்த்துவிடுவேன்” எனச் சொல்ல உலோகப்பறவை கீழே இறங்கியது. கண்முன்னே கருநிறத்தில் குச்சிகளை ஒட்டு வைத்தாற்போல் துரத்தில் உருவம் ஒன்று நடந்து வந்தது. அருகே வருவதற்காகக் காத்திருந்தான். அந்த உருவம் வர வர அவன் கண்களுக்கு அது யார் என்று புலப்படத் தொடங்கியது. மாடுகளுக்குக் கொம்பு சீவும் செல்லையா. அந்த உருவம் அருகே வந்ததும் “செல்லையா என்னையத் தெரியுதா?” என்று கேட்டான். பகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர் “மாடு என்னைக்கு இங்க வரும். நானும் கொம்பு சீவ தேடி அலையுறேன். பக்தவசத்தல எங்கயாவது பாத்தனா சீக்கிரம் அவன மாடப் புடிச்சிக்கிட்டு வரச்சொல்லு. கத்திய வேற சாண புடிக்கணும். ஆளுங்க வேற கிடைக்கமாட்டங்கிறாங்க” என்று சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். துக்கத்தைத் தாங்காதவனாய் “செல்லையா செல்லையா” என்று கத்திக்கொண்டே இருக்க, அதைக் கண்டுகொள்ளாதவனாய் நடந்துகொண்டிருந்தார் செல்லையா. கண்கள் சுற்ற, கால்கள் பின்ன வாகனத்திலேயே மயங்கி விழுந்தான் பகத்.

கண்விழித்தவன் எதிரே முகுந்தன் நின்றுகொண்டிருக்க, ஆத்திரம் தாளமுடியாதவனாய் முகுந்தனை அடிக்க ஆரம்பித்தான். முகுந்தன் பின்னால் நகர்ந்துகொண்டே இருக்க, முழு ஆற்றலும் இழுந்தவனாய் பகத் தரையில் விழுந்தான். முகுந்தன் அருகே வந்து பார்க்க, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தான். பதறியவனாக மருத்துவரை உடனே வரச் சொல்லுமாறு கட்டளையிட்டான். மருத்துவர் பரிசோதித்துவிட்டு “மூச்சை விடக்கூடாதென்ற வைராக்கியம் அவனிடம் இருக்கிறது. காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கான வழிகளை நோக்குங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பின் கண்விழித்தவன் “சாப்பிடமாட்டேன்” என அடம்பிடிக்க, முகுந்தனுக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. பதறியவனாக உள்ளே வந்தவன் “இப்போது சாப்பிடப்போகிறாயா இல்லையா?” என்று மிரட்ட, “கண்முன்னால் ஒரு வாழ்க்கை அழிவதைப் பார்ப்பதற்கு நான் விதிக்கப்பட்டிருக்கிறேன். இனிமேல் உயிர்வாழ்வதற்கான எந்தப் பிடிமானமும் என்னிடமில்லை. தயவுசெய்து என்னை என் விருப்பம்போல் சாகவிடு இல்லையெனில் உங்களில் ஒருவனை வைத்து என் உயிரைப் பறித்துவிடு” என்று அவன் காலில் விழப்போனான். அதைத் தடுத்தவனாக அவன் காலில் விழுந்த முகுந்தன், “இந்த வாழ்க்கையின் எல்லா அழிவுகளையும் தீர்மானிக்க எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் உன் அழிவைத் தவிர” என்றவனாக அழுதுகொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

பகத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வர, உடல் பேப்பரின் எடையைப் போல் ஆனது. அவனைப் பார்த்துக்கொள்வதற்கென ராக்கர்ஸை வேலைக்கு வைத்தவன், அதில் திருப்தி கொள்ளாதவனாய் அவனே அருகில் உட்கார்ந்து கவனித்துக்கொள்ள ஆரம்பித்தான். தன் உடல்மேல் அவனின் கைபடும் நொடியில் எல்லாம் அதனை உதாசீனப்படுத்திக்கொண்டே இருந்தான் பகத். அந்த வேதனையைத் தாங்கமுடியாதவனாய் ஏன் தனக்கு இந்த வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது? இன்னும் நான் வாழ்க்கையில் காணவேண்டியது என்ன இருக்கிறது? போதும் இதற்கு மேல் முடியாது என்று யோசித்தவன், அறையின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தான். பகத்தினை எப்படிக் காப்பாற்றப்போகிறோம்? அவனின் தேவை என்ன? எதுவும் தெரியாமல் வேதனையில் புழுங்க ஆரம்பித்தான். பகத் தன் வாழ்க்கையில் வந்த பிறகு, ராக்கர்ஸ் நடத்திய எந்தக் கூட்டங்களிலும் அவன் கலந்துகொள்ளவில்லை.

அதே நேரத்தில் கிராமத்தைச் சுற்றிலும் மரணச் செய்திகள் வந்துகொண்டே இருக்க, அதைத் தீர்ப்பதற்கு முகுந்தன் இல்லாத காரணத்தால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, “முகுந்தனுக்குப் பதிலாக நான் சென்று பேசிவரட்டுமா என்று கேட்டான் மருது. “தலைவர் பேசினால் என்ன? தளபதி பேசினால் என்ன? தங்களுக்குப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்தவர்களாக மருதைத் தற்காலிகமாக நியமித்தார்கள். மக்களின் இறப்பிற்கான காரணங்களைக் கேட்டவன் இறந்தவர்களுக்கான தானியங்களை உயிரோடு இருப்பவர்களுக்குச் சமபங்காகப் பிரித்துக் கொடுத்துவிடுங்கள் என்று ராக்கர்ஸ்களிடம் கட்டளையிட்டான். கூடுதல் உணவினால் மக்களின் தேகங்கள் பொலிவுபெறுவதைக் கவனித்தவன் ராக்கர்ஸிடம் சென்று “வாழ்ந்து முடித்தவர்களால் அவர்களுக்கோ, நமக்கோ பயன் இருக்கப்போவதில்லை அதனால் அவர்கள் இறந்துவிடும் பட்சத்தில் அவர்களின் உணவுகளை மக்களுக்குக் கூடுதலாகக் கொடுக்கும் பட்சத்தில் நமக்குத் தேவையான எல்லா வேலைகளையும் அவர்களிடமிருந்து எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூற, அவனின் ஆலோசனையைக் கேட்டவர்கள் “சிறந்த எண்ணம்” என்று பாராட்டியதோடு, மக்களிடம் அவனே பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறிவிட்டார்கள். மக்களை அழைத்து தன்னுடைய திட்டத்தை எல்லாம் தெரிவித்தவன் “நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இரும்பு வீடுகளை இன்னும் வேகமாகக் கட்டி முடியுங்கள். உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் சேர்த்து நான் கவனித்துக்கொள்கிறேன்” என்று பேசிமுடிக்க, மக்கள் எல்லோரும் “நிச்சயம் கட்டித்தருகிறோம்” என்று உறுதிமொழி எடுத்தார்கள்.

பாதி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மீதமிருக்கும் உயிருக்காகப் பல இடங்களுக்கு ஓடி ஒளிய ஆரம்பித்த முதியவர்களை, ராக்கர்ஸ்களும் அவர்களின் உலோகப்பறவைகளும் கவனித்துக்கொள்ள, அழித்தொழிப்பு இனிதே நடந்தேறி முடிந்தது. இப்போது பசி என்பதை மறந்தவர்களாக மக்கள் ஆனார்கள். இந்தத் தகவல்கள் எதுவும் முகுந்தனுக்குக் கிடைக்காமல் இருப்பதற்கான எல்லா வழிகளையும் ராக்கர்ஸ்களுடன் ஏற்படுத்திக்கொண்டான். இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு ராக்கர்ஸும் முகுந்தனிடம் ஆலோசனை கேட்பதை நிறுத்திக்கொண்டார்கள்.

பகத்தின் உடல்நிலை ஏறக்குறைய முடிவை நெருங்கிக்கொண்டிருக்க, எலும்புகளைச் சுற்றிக் கட்டிய பொட்டலமாய் அவன் உடல் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது. அவனின் மரணம் தன் வாழ்வினை அசைத்துவிடும் என்று அஞ்சியவனாக அவன் அருகில் சென்றவன், “உனக்கு வேண்டியதைச் சொல், என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் நான் நிறைவேற்றித் தருகிறேன். தயவுசெய்து உண்ணாவிரதத்தை மட்டும் முடித்துக்கொள், என்று கெஞ்ச, “உடல் அழிந்து போனவனுக்கு அதை மீட்டெடுப்பதற்கான எந்த உரிமைகளும் இல்லை. எனக்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் மருதுவை இங்கு அழைத்துவரவேண்டும்” என்று கோரிக்கையை வைத்தான். அதைக் கேட்டுக் கோபப்பட்டவனாய், “எதிரிகள் சொல்வதற்கு எப்போதும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் துரோகிகளுக்கு ஒருபோதும் அந்தக் காரணங்கள் இருப்பதில்லை. என்னால் அவனை அழைத்துவர முடியாது” என்று கத்தினான். “என் வாழ்க்கையின் கடைசி மூச்சிற்கு நீ மரியாதை கொடுக்கிறாய் என்றால் அவனை அழைத்து வா” என்றவுடன் மறுபேச்சு எதுவும் பேசாமல் மருது அழைத்துவரப்பட்டான். உள்ளே வந்தவன் வழக்கம்போல் தலைவருக்குச் செலுத்தப்படும் மரியாதையை முகுந்தனுக்குச் செலுத்திவிட்டு பகத் அருகே வந்து நின்றான். கண் இமையை மூட மறந்தவனாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான் பகத். அந்தப் பார்வையை எதிர்கொள்ளமுடியாதவனாய் தரையை நோக்கிக் கண்களைத் தாழ்த்திக்கொண்டான் மருது. இருவரின் அமைதியைச் சகிக்க முடியாதவனாக முகுந்தன் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடியில் “மருது” என்று மெதுவாக அழைத்தான் பகத். மருது பகத்தை நிமிர்ந்து பார்த்தான். “இந்த உலகம் தோன்றியதிலிருந்து யாராலும் பதில் சொல்லமுடியாத கேள்வி ஒன்று இருக்கிறது. உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். மருது தெரியாது என்று தலையசைக்க, “எல்லா வாழ்க்கையிலும் நிச்சயம் அதை எதிர்கொள்ளாமல் இருக்கப்போவதில்லை. எல்லோரையும் அசைத்துவிடும் கேள்வி. உன்னைப் பார்த்தும் அதைத்தான் கேட்கிறேன். ஏன்? இவையெல்லாம் ஏன்? எதற்காக?” என்று கேட்க, மருது பதில் எதுவும் சொல்லாமல் பகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். மருதுவைப் பார்த்து புன்னகைத்தவன் தன் இறுதி மூச்சையும் நிறுத்திக்கொண்டான்.

பகத்தின் இறப்பு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆங்காங்கு அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஈசல் உலோகப்பறவை மூலம் போஸ்டர் கிராமம் முழுவதும் பறக்கவிடப்பட்டது. மக்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பகத்தின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முகுந்தன் ராக்கர்ஸ்களிடம் வைத்தான். அவர்கள் மருதுவிடம் கேட்க, மருதும் அவன் சொல்வது போல் செய்யச் சொன்னான். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற ஆரம்பித்தது. ராக்கர்ஸ்களின் வழிகாட்டுதலின்படி, மக்களின் உதவியுடன் பிரம்மாண்ட பிரமிடு வடிவில் கல்லறை கட்டப்பட்டது. துணியால் சுற்றப்பட்டும், பலவித மருந்துகளை அதன் மேல் தடவியும், உடல் பாதுகாப்பாக இருப்பதற்கான எல்லா வசதிகளுடன் உள்ளே வைத்து அடக்கம் செய்யப்பட்டது. பிரமிடின் இறுதிக் கல்லை வைப்பதற்கு முன்னால் முகுந்தனை அழைத்து வந்தார்கள். இந்தக் கல்லுடன் தன் வாழ்வின் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தவனாக அந்த கல்லைத் தொட்டுக் கும்பிட கல்லறை மூடப்பட்டது.

கல்லறையை மூடிவிட்டு வந்து இரவில் தூங்க ஆரம்பித்தவன், தூக்கம் வராதவனாய் அங்குமிங்கும் புரள ஆரம்பித்தான். பின்பு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவன் தன் வாழ்வில் இனிமேல் தூக்கம் என்ற ஒன்றே இருக்கப்போவதில்லை என்பதையும் உணர்ந்துகொண்டான். பகத் மட்டும் திரும்பி வந்துவிட்டால் தன் வாழ்வில் எல்லாம் மாறிவிடும் என்று இருந்தவனுக்கு, அவன் வருகை எல்லாவற்றையும் கலைத்துவிட்டுச் சென்றுவிட்டது. வாழ்வின் அஸ்திவாரங்கள் கலைக்கப்பட்டு, இருப்பின் எல்லா அர்த்தங்களும் அழிக்கப்பட்டுவிட்டது. இதன் பிறகான நாட்களை எப்படிக் கழிக்கப்போகிறோம் என்பது மட்டும்தான் அவன் முன் இருந்த மாபெரும் கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதிலாக அமைந்தது வெறுமை. வெறுமை அவனைச் சுற்றி தன் நிழலை விதைத்துக்கொண்டே இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த முடியாதவனாகத் தன்னைத்தானே வெறுக்க ஆரம்பித்தான். வெறுமை ஏற்படும் நாட்களில் எங்காவது ஓடிவிடலாம் என்று பல இடங்களுக்குச் சென்றான். கடைசியில் அவன் வெறுமையைப் போக்கும் இடமாக அமைந்தது பகத்தை மூடிவைத்த கல்லறை மட்டுமே. தன் வெறுமையின் பாய்ச்சலைப் போக்கிக்கொள்ளத் தினமும் அங்குச் செல்பவன், பல மணிநேரங்கள் அங்கு உட்கார்ந்து தியானம் செய்யத்தொடங்கினான். மனம் சிறிது அமைதிகொள்ளத் தொடங்கியது.

முகுந்தனின் நடவடிக்கைகளைக் கவனிக்கச் சொன்ன மருதுவிடம் அவன் தியானம் செய்யும் செய்தி வந்து சேர மறுநாள் மக்களையும், ராக்கர்ஸையும் மைதானத்தில்கூடச் சொன்னான். தங்களைக் கூடச்சொன்னால் நிச்சயம் நல்ல செய்தி இருக்கும் என்பவர்களாக மக்கள் எல்லோரும்கூட ஆரம்பிக்க, “மக்களே நம்மை வழிநடத்துவதற்குத் தலைவன், தளபதி என்ற சக்திகளைக் காட்டிலும், ஒரு தெய்வீகசக்தி தேவைப்படுகிறது. அப்படி தெய்வீகசக்தியை தேடாத மனிதன் என ஒருவன் இந்த ஒரு பூமியில் இருக்கப்போவதில்லை. சிலருக்கு குரு என்ற பெயரிலும், சிலருக்கு தெய்வம் என்ற பெயரிலும். அதைப் போல் நமக்கும் ஒரு தெய்வீகசக்தி தேவைப்படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்க, எல்லோரும் ஒருமித்த குரலாக “ஆம்” என்று சொன்னார்கள். “தெய்வீகசக்தியைத் தேடித்தேடி மகான்களும் ஞானிகளும் எங்கெல்லாமோ அலைகிறார்கள். ஆனால் தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டால் போதும் எல்லாம் நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் எல்லாம் தெய்வங்களாக மாறுகிறார்கள் என்பது முன்னோர்கள் வாக்கு. அப்படி ஒரு சாமி நம்மிடையே இருக்கிறது. அதுவேறு யாரும் இல்ல. மாடுகளால் நம் வாழ்க்கையை வளப்படுத்தியவர். அய்யா பகத்சாமி” என்று சொல்ல, மக்கள் எல்லோரும் “பகத்தையா” என்று வானை நோக்கி தொழுதார்கள். மீண்டும் தொடர்ந்தவனாக “எனவே இன்று முதல் நம்மை வழிநடத்தும் சாமியாகப் பகத்சாமியை வணங்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. அதற்குப் பூஜை செய்வதற்கு ராக்கர்ஸ்களில் ஒருவரும், மக்களில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எல்லாத் தொடக்கமும் ஏதோ ஒரு பலியில் இருந்து தொடங்குகிறது என்பதால் நாமும் ஒரு பலியிலிருந்து தொடங்கலாம்” என்றான். மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “குழப்பம் வேண்டாம். அது நிச்சயமாக மனிதப் பலி அல்ல, விலங்குப் பலி”. மக்கள் மீண்டும் குழம்பியவர்களாக அவனைப் பார்க்க, “பகத்தினால் முகுந்தனுக்குக் கொடுக்கப்பட்ட மாடு இன்னமும் அவனிடம்தான் இருக்கிறது. அதனைப் பலிகொடுத்து நாம் பகத்சாமியை கும்பிட தொடங்கலாம்” என்று சொல்லிமுடிக்க, மக்கள் எல்லோரும் கூச்சலிட்டவர்களாகக் கைத்தட்டினார்கள். அங்கிருந்து கூட்டம் ஒன்று மருதுவைத் தங்களது தோளில் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போனார்கள். இந்தச் செய்தி கண்காணிப்புப் பறவை மூலம் முகுந்தனுக்குத் தெரியவர, அவன் தன்னைத் தலைமறைவாக்கிக்கொண்டான்.

ராக்கர்ஸ்களின் வீடுகள், மக்களின் வீடுகள், அவர்கள் வேலை செய்யும் இடம், கிராமத்தில் மறைந்துகொள்வதற்கான இடங்கள் என எங்குத் தேடியும் முகுந்தனை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ராக்கர்ஸ்களின் அத்தனை தொழில்நுட்ப அறிவும் தோற்றுவிட அடுத்து என்ன செய்யலாம் என்று எல்லோரும் ஒன்று கூடி மருதிடம் ஆலோசனை கேட்டார்கள். “எல்லா ஒப்பந்தங்களும் சில ரூபாய் நோட்டுகளில் தொடங்குவதுபோல முதலில் நாம் சிறிதாக பகத்சாமிக்கு ஒரு பூஜையைப் போட்டுவிட்டு பின்பு தேட ஆரம்பிக்கலாம்” என்ற யோசனையைத் தெரிவித்தான். அவனின் திட்டம் எல்லோருக்கும் பிடித்திருக்க, பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பூஜையினை முன்னின்று நடத்துபவனாக மருது நிற்க, மக்களில் ஒருவனும், ராக்கர்ஸில் ஒருவனும் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். பூஜையின் மந்திரங்களும், உச்சாடனங்களும்கூட மக்களும் ராக்கர்ஸ்ம் பக்திப் பரவசத்தில் திளைக்க ஆரம்பித்தார்கள். பக்தியின் மயக்கத்தில் பகத்சாமியைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் கீழே தண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது. பதறியவர்களாக எல்லோரும் எழுந்து நிற்க, அவர்களைப் பார்த்த மருது “பயப்படவேண்டாம் பொறுமை” என்று சொல்லியவன் அந்தத் தண்ணீரை எடுத்து மோந்துப் பார்த்தான். அது தண்ணீர் இல்லை மாட்டின் மூத்திரம் என்பதும், அது பகத்தின் உடல் வைத்திருக்கும் அறைக்குள் இருந்து வருகிறது என்பதும் புரிந்தவனாக மக்களைப் பார்த்து, “பகத்சாமி நம்மிடம் எதோ சொல்ல வருகிறார். நான் மட்டும் உள்ளே சென்று கேட்டுவருகிறேன். நான் அப்படித் திரும்பவில்லை என்றாலும், என்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக இந்த வழிபாட்டைத் தொடர்ந்து நடத்தவேண்டும்” என்று கூறியவனாக உள்ளே சென்றான். மக்கள் எல்லோரும் மருது திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள்.

பகத்தின் துணி சுற்றிய உடல் அருகே மாடு நின்றுகொண்டிருக்க, அதன் கயிறைப் பிடித்தவாறு தூங்கிக்கொண்டிந்தான் முகுந்தன். அவற்றைப் பார்த்து சந்தோசமானான் மருது. பகத் உடலைக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தவன் மக்களைப் பார்த்து, “பகத்சாமி நம்முடைய பூஜைக்கு விடை கொடுத்துவிட்டார். அவரே முகுந்தனையும் அவன் மாட்டையும் எங்கும் செல்லவிடாமல் நமக்காக அவர் அருகிலேயே பிடித்துவைத்திருக்கிறார்” என்று சொல்ல மக்களும் “பகத்தையா” என்று கத்தினார்கள். அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னவன், உள்ளே சென்று மாட்டை இழுத்துவந்தான். மாடு கூடவே அமைதியாக முகுந்தன் நடந்து வந்தான். மக்கள், ராக்கர்ஸ், மருது மூவரின் பேச்சுவார்த்தை முடிவில் மாட்டைப் பலிகொடுப்பதற்கான தேதிகள் பேசிமுடிக்கப்பட்டது. அடுத்தக் கேள்வியாக முகுந்தனை என்ன செய்யலாம்? என்பது முன்னால் நிற்க, “ராக்கர்ஸை இந்தப் பூமியில் அழைத்துவந்து நமக்கு ஒரு புதிய நட்புபாலத்தை உருவாக்கிக்கொடுத்தவர் நம் தலைவர். மாடு வளர்ப்பது நம்முடைய உயிர்போன்றது அதுபோல்தான் நம் தலைவருக்கும் என்பதைப் புரிந்தவர்களாக அவரை நாம் மன்னித்துவிடலாம் ஆனால் அவர் செய்த செயல் நம் எல்லோருக்கும் எதிரானது என்பதால் நாம் பலிகொடுக்கும் நாளில் சிந்தும் ரத்தத்தைத் துடைக்கும் வேலையை அவருக்குக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்க, “இப்படி ஒரு சிறப்பான தீர்ப்பை நாங்கள் எப்படி எதிர்ப்போம்” என்று மகிழ்ந்தவர்களாக அங்கிருந்து மக்கள் கிளம்பினார்கள். முகுந்தன் அதுவரை எங்கும் ஓடிவிடக்கூடாது என்பதற்காகச் சிறப்புக்காவல்படையை அமைத்துவிட்டு மருது அங்கிருந்து கிளம்பினான்.

பூஜைகள் காலையிலிருந்து தொடங்கப்பட்டு மக்களும், ராக்கர்ஸ்களும் மகிழ்ச்சியில் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மாட்டை அலங்காரப்படுத்துவதற்கென ஆட்கள் அழைத்துவரப்பட்டார்கள். மாட்டைக் குளிக்கவைத்து, அதன் மேல் ராக்கர்ஸ்களால் செய்யப்பட்ட கல்மாலை ஒன்றை அணிவித்தார்கள். உடலில் பலவித வடிவங்களை ஈசல் உலோகப்பறவை மூலம் வரைந்தார்கள். இருவரின் பூசாரிகளும் சொல்லவேண்டிய மந்திரங்களைச் சொல்லிமுடித்துவிட்டு, அலங்கரிக்கப்பட்ட மாட்டைக் கொண்டுவந்து பகத்சாமி கோயிலின் முன்னால் நிறுத்தினார்கள். முகுந்தனை அழைத்து வந்து மாட்டின் அருகே நிறுத்தினார்கள். மாட்டை வெட்டுவதற்கான ராக்கர்ஸால் செய்யப்பட்ட விசேஷ தானியங்கிக் கத்தி மாட்டின் மேலே நிறுவப்பட்டன. அந்தக் கத்தி பேச்சொலியின் மூலம் இயக்கப்படும் என்பதால் பூசாரிகளை வந்து கட்டளையிடச் சொன்னார்கள். ஆனால் அவர்களோ “நம்மை வழிநடத்தும் தளபதி மருதுதான் அதைச் சொல்லவேண்டும்,” என்று கேட்டுக்கொள்ள, மக்கள் எல்லோரும் அதை ஆமோதித்தவர்களாக, தூரத்தில் நின்றுகொண்டிருந்தவனைத் தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு வந்து கத்தியின் முன்னால் நிறுத்தினார்கள். இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான் முகுந்தன். கீழே இறங்கியவன் எல்லோருக்கும் நன்றியைச் சொல்லிவிட்டு தானியங்கு கத்திக்கான குறிச்சொல்லை சொன்னதும் வெட்டவேண்டிய இடம், வேகம், வீச்சு என எதிலும் குறைவைக்காததாக அத்தனை துல்லியத்துடன் மாட்டை வெட்டியது அந்தக் கருவி. எல்லோர் முகங்களிலும் மாட்டின் ரத்தம் தெறிக்க, உணர்ச்சி வசப்பட்டவர்களாக “பகத்தையா” என்று மீண்டும் கூச்சலிட்டார்கள். மாட்டின் தலை பகத் உடல் இருக்கும் அறைக்குள் உருண்டோடியது. ரத்தத்தால் குளிக்கப்பட்டவனாக முகுந்தன் நின்றுகொண்டிருந்தான். கீழே விழுந்து கிடந்த மாட்டின் காம்பினை உற்றுப்பார்த்தான். அதிலிருந்து பால் சுரந்து ரத்ததுடன் கலந்து ஓடிக்கொண்டிருந்தது. மக்களும், ராக்கர்ஸுர்களும் கறியைப் பங்குபோட்டுக்கொள்வதற்காக மாட்டை இழுத்துக்கொண்டு சென்றார்கள். இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் தன் ரத்தங்களைத் தரையில் கோடுகளாக பதித்துக்கொண்டே சென்றது அதன் உடல். மாடு சென்றதுக்குப் பின்னால் ஒரு கூட்டம் முகுந்தனை தூக்கி தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டாடிக்கொண்டே செல்ல, அவர்களின் பின்னால் மொத்தக்கூட்டமும் கிளம்ச்பி சென்றது. கடைசியாக கிளம்பிய பூசாரிகள் இரும்பினால் ஆன பாத்திரத்தை முகுந்தன் அருகில் வைத்துவிட்டு, ரத்தத்தைத் தேய்த்து அள்ளுவதற்கான துணியையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். முகுந்தன் மட்டும் தனியாக நிற்க வைக்கப்பட்டிருந்தான். தன் வாழ்க்கையின் எல்லாச் சரடுகளும் அறுக்கப்பட்டுவிட்டன என்ற நிதர்சனத்தை உணர்ந்தவன் ரத்தத்தைத் துடைக்கும் வேலையை ஆரம்பித்தான். துடைக்கத் துடைக்க அந்த ரத்தம் கை, கால் எனப் பரவி உடல் முழுவதும் மேலேறிக்கொண்டே வந்தது. அது தன்னை முழுவதும் மூடிவிடுவதுபோல் தோன்ற, அதைத் தாங்கமுடியாதவனாய்த் துணியைக் கீழே போட்டுவிட்டுச் சிறிது நேரம் அமர்ந்தான். அவனின் கண்ணீர்த்துளிகள் ரத்ததுடன் ரத்தமாய்க் கலந்து ஓடியது. அழுது முடித்துவிட்டுக் கண்ணீரைத்துடைத்தவன் மீண்டும் தரையைத் துடைக்கத் தொடங்கினான். வாசலிலிருந்து துடைத்து பகத் உடல் இருக்கும் அறைக்குள் சென்றவன் உருண்ட தலையை எங்கே என்று தேட, அவன் கண்களுக்குள் சிக்காமல் எங்கோ மறைந்துவிட்டது. தேடுவதில் பயனில்லை என்பவனாக மீண்டும் துடைக்க ஆரம்பித்தவனுக்கு யோசனையின் சிறு கீற்று விழ, பகத்தின் உடல் இருக்கும் மூலையைப் பார்த்தான். பகத்தின் தலை அருகே மாட்டின் தலை கிடக்க, அது தன் நாக்கால் பகத்தின் முகத்தை நக்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்தவனாகக் கீழே விழ, அருகே இருந்த பாத்திரத்தில் வழித்துப்போட்ட ரத்தம் முழுவதும் மேலே கொட்டியது. உடல் முழுவதும் ரத்தச்சேறினில் ஊறியவனாக எழுந்தவன் மீண்டும் நக்கிக்கொண்டிருக்கும் மாட்டின் தலையைப் பார்க்க, இப்போது அதன் நெற்றியை பகத்தின் வலது கை தடவிவிட்டுக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்தவன் “பகத்து பகத்து” என்று அலறிக்கொண்டு அங்கிருந்து ஓடத் தொடங்கினான். செல்லும் வழியில் நின்ற மக்களும், ராக்கர்ஸும் இவனின் தோற்றத்தைப் பார்த்து பதறி அடித்துக்கொண்டு விலகினார்கள். அவர்களை எல்லாம் தாண்டி கால்களின் கட்டளைக்கு மட்டும் பணிந்தவனாக ஓடிக்கொண்டே இருந்தான். திசை, தூரம், இடம், காலம் எல்லாம் மறந்தவனாக ஓடிக்கொண்டே இருந்தவன், நிலத்தின் பிளவுகளுக்கிடைய கால் மாட்டிக்கொள்ளத் தரையில் கீழே விழந்தான். அவன் அருகே இலை எல்லாம் உதிர்ந்த மரம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இறுதி மூச்சுக்கும் அவனுக்குமான போர் தொடங்க உடல் இடைவெளி விட்டுவிட்டு அதிரத் தொடங்கியது. சூரியன் முழு வெப்பத்தையும் அவன் மேல் செலுத்த, எந்தவித சலனமும் இல்லாமல் பூமி அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் சுவாசத்துடன் சேர்ந்து அதிர்வையும் உடல் நிறுத்திக்கொண்டது. மண்ணைக் கிளறிக்கொண்டு மேலேறிய புழுவின் முன்னால் மலை ஒன்று சாய்ந்துகிடக்க, சுற்றிமுற்றியும் பார்த்த அது, தன் கண்முன்னால் கிடக்கும் மலையின் மேல் ஏறத்தொடங்கியது.

காலைச் சூரியனின் கிரகணங்கள் கிராமத்தைத் தொட, முகுந்தன் நடுக்காட்டில் செத்துக்கிடக்கிறான் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அதனைக் கண்டுகொள்ளாதவர்களாக மக்களும் ராக்கர்ஸ்ம் மந்தையில் கூட, அவர்கள் எதிரே மருது நின்றுகொண்டிருந்தான். முதல்நாள் சாப்பிட்ட மாட்டின் கறி எல்லோர் முகத்திலும் பூரிப்பை நிறைத்திருந்தது. முன்னால் நின்றுகொண்டிருந்த மருது, “மக்களே உங்களின் வேலைப் பழுவைக் குறைப்பதற்காக, ராக்கர்ஸ்களும் இன்று முதல் சிறு சிறு உதவிகளை உங்களுடன் சேர்ந்து செய்வார்கள் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். இனிமேல் நம் வாழ்வில் வசந்தகாலம்தான். இவற்றை எல்லாம் நமக்கு ஏற்படுத்திக்கொடுத்த பகத்சாமியை வணங்குவோம்,” என்று சொல்ல, மக்களும் ராக்கர்ஸ்ம் பகத்சாமி கல்லறை இருக்கும் திசையைப் பார்த்து, “பகத்தைய்யா நீங்க நல்லா இருக்கணும். எங்கள நல்லபடியா இருந்து நீங்கதான் பாத்துக்கணும்,” என்று வேண்டிக்கொண்டவர்களாக அவரவர் வேலைக்குக் கிளம்பினார்கள்.

முகுந்தனின் உடல் பலநாட்கள் அங்கேயே கிடந்தது. சூரியன் தினமும் தனக்குத் தேவையான ஈரத்தை அவன் உடலிருந்து உறிந்துகொள்ள, காய்ந்த உடலில் தோல் எறும்புகளால் அரிக்கப்பட்டு, சதைகள் பூச்சிகளாலும் பறவைகளாலும் உட்கொள்ளப்பட்டு எலும்பு மட்டும் மீதமாய்ப் பூமியில் நின்றுகொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த காகம் ஒன்று அந்த எலும்பின் மேலே அமர்ந்து, எலும்பின் இடையில் ஆங்காங்கு மறைந்திருந்த சதைத்துணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திச் சாப்பிடத் தொடங்கியது. தன் பசி முழுவதும் அடங்கியதும் எங்குச் செல்லலாம் எனச் சுற்றிமுற்றிலும் பார்க்கத் தொடங்க, தூரத்தில் பிரமிடு வடிவத்தில் கட்டிடம் ஒன்று தெரிந்ததும் அதைநோக்கிப் பறந்தது. பிரமிடின் வாசலில் இறங்கிய காகத்தின் எதிரே ஹாலோகிராமால் உருவாக்கப்பட்ட மாட்டின் உருவம் ஒன்று சுவரில் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த மாட்டின் மேல் இரண்டு அடி தூரத்தில் “பகத்சாமி திருக்கோவில்” என்ற பெரிதாக எழுத்துகள் ஆக்கிரமித்திருக்க, அதன் கீழே மெல்லிய எழுத்தில், “தலைவர் மருது என்கிற மருதுபாண்டியன்” என்று எழுதப்பட்டுத் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அவற்றைப் பார்த்த காகம் மெதுவாக நடந்து பிரமிடின் உள்ளே நடந்து செல்லத் தொடங்கியது. உள்ளே செல்ல செல்லப் பலவித வடிவங்களில் பாதைகள் விரிவாக்கப்பட்டு அதன் கடைசி எல்லையாகக் குட்டி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் உள்ளே காகம் உற்றுப்பார்க்க, மாட்டுத்தலையும், மனித உடலும் கொண்ட ஓர் உருவம் பாடம் செய்யப்பட்டு நின்ற நிலையில் இருந்தது. அதன் கழுத்தைச் சுற்றி இரும்பினால் ஆன பலவடிவங்களில் மாலைகள் தொங்கிக்கொண்டிருக்க, காகம் எந்த விச அசைவும் இல்லாமல் அந்தச் சிலையை மட்டும் உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தது.


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்